நல்ல தோழிதான்/அவள் ஒரு தனிப்பிறவி

அவள் ஒரு தனிப்பிறவி



நாவலாசிரியர் கனவுப் பிரியன் தாலில் வந்த ஒரு கடிதத்தைப் படித்துப் படித்துப் பரவசமுற்றார். ஒரு பெண் எழுதிய கடிதம் அது.

புகழ்பெற்ற நாவலாசிரியரான அவருக்கு எத்தனையோ பேர் எழுதுவது வழக்கம்தான். பெண்களும் எழுதியிருக்கிறார்கள். அவருடைய படைப்புகளை புகழ்ந்து பாராட்டுவார்கள். சிலர் குறை கூறுவார்கள். ஒரு நாவலின் அந்தப் பாத்திரம் இப்படி நடந்து கொள்ளாமல் இன்ன மாதிரி நடந்து கொண்டிருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று சில பேர் ஆலோசனைகள் கூறுவார்கள்.

அன்று வந்த கடிதம் வித்தியாசமானது. அதை எழுதியவள் பெயரே வித்தியாசமானதாகத்தான் இருந்தது. சிநேகவல்லி.

"ஆகா, என்ன அழகான பெயர்! இனிமையான பெயர்! புதுமையான பெயர்!" என்று அவர் மனம், சுவை நிறைந்த மிட்டாயை ரசிக்கிற நாக்கு போல், அதை சுவைத்து இன்புற்றது.

ஆரம்பம் வழக்கம் போல்தான் இருந்தது. உங்கள் நாவல்களை ரசித்து மகிழ்ந்தவள் நான் என்று தொடங்கி, அவருடைய நாவல்களின் பெயர்களை அடுக்கி, கதைமாந்தரின் தன்மைகளை வியந்து பாராட்டியிருந்தாள்.

"நீங்கள் என்ன நினைப்பீர்களோ, ஏது கருதுவீர்களோ என்றுதான் இதுவரை எழுதவில்லை. எழுதாமல் இருந்தால் பித்துப் பிடித்துவிடும் என்று தோன்றவே எழுதுகிறேன். நீங்கள் கற்பனை ஞாயிறு. உங்கள் பொன் ஒளிக் கதிர் இந்த எளிய தும்பைப் பூ மீது படாதா என்று ஏங்குகிறேன். உங்கள் விசால இதயத்தின் குளுமையான அன்புப் பனித்துளி என்மேல் படியாதா என்று அண்ணாந்து நிற்கும் அபலைப் புல் நான்" என்று எழுதியிருந்தாள் அந்தப் பெண்.

நாவலாசிரியர் கனவுப் பிரியன், தனது வழக்கத்துக்கு மாறாக, உடனடியாக பதில் எழுதி அனுப்பினார். சிநேகவல்லி என்ற பெயரைப் புகழ்ந்து பாராட்டி மகிழத் தவறவில்லை.

அவள் பண்பு இப்படி அமையும் என முன்பே அறிந்தவர்கள் போல அவருடைய பெற்றோர்கள், அவளுக்குப் பொருத்தமாக சிநேகவல்லி என்று பெயரிட்டிருந்ததை வியந்து பாராட்டினார், மூன்றாவது கடிதத்தில்,

நட்புடன் குழைந்து, பிரியத்தைக் குழைத்து, அன்பாகக் கடிதங்கள் எழுதும் இனிய பெயருள்ள பெண்ணுக்குக் கடிதங்கள்கூடவா எழுதக் கூடாது என்று அவர் மனம் பேசியது. ஆகவே, கணவுப் பிரியன் கடிதங்களில் விளையாடினார். தமாஷ் பண்ணினார். சீண்டினார். சிரிக்க வைத்தார். அவருக்கு சிநேகாமீது காதல் ஏற்பட்டு விட்டதாகவே தோன்றியது.

மகாகவி மண்ணின் மைந்தன் ரசமான பேர்வழி, மண்ணின் மைந்தன் என்பது எப்படி அவரே அவருக்கு வைத்துக் கொண்ட பெயரோ, அதே மாதிரித்தான் 'மகாகவி' என்ற பட்டத்தையும் அவராகவே அவருக்கு சூட்டிக்கொண்டார்.

ஏன் அப்படிச் செய்யக் கூடாது? அவரவருக்கு விருப்பமான பட்டங்களை அவரவரே சூடிக்கொள்கிற காலமாகத்தானே இருக்கிறது. இது! இப்படி அவர் வாதாடினார். புது உலகம், புரட்சி, சமூகசீர்திருத்தம், புதுமைப் பெண், புதியமனிதன், புது வாழ்வு என்றெல்லாம் புதுக்கவிதைகளை முழக்கிக் கொண்டிருந்த அவர் காதல் கவிதைகளையும் நிறையவே எழுதி வந்தார்.

அவருக்கும் சிநேகவல்லி கடிதம் எழுதியிருந்தாள். அவரும் அவளுக்கு ரசம் நிறைந்த கவிதைக் கடிதங்கள் எழுதி வந்தார். எழுதுவதுடன் நில்லாது, மற்றவர்களிடம் சொல்லியும் மகிழ்ந்தார்.

ஒரு கருத்தரங்கத்தில் மண்ணின் மைந்தன், கனவுப் பிரியனை சந்திக்க நேர்ந்தது. பேச்சோடு பேச்சாகக் காதல் விஷயமும் தலைகாட்டியது. கவிஞர் சிநேகவல்லிக்கு தான் எழுதும் காதல் கடிதக் கவிதைகளை மிகுந்த ஈடுபாட்டோடு எடுத்துச் சொன்னார்.

"யாரு, சிநேகவல்லியா?" என்று பதறினார் கனவுப் பிரியன்.

"ஏன், அவளை உங்களுக்குத் தெரியுமா?" என்று சகஜமாக விசாரித்தார் 'மண்'.

"எனக்கும் அவள் கடிதங்கள் எழுதுகிறாள் என்றார், கனவு".

"ஆகவே நீங்களும் அவளுக்கு எழுதுகிறீர்கள் காதல் கடிதங்கள்! அப்படித்தானே? ஹெஹ்!" என்று மூன்றாவது குரல் வெடித்தது அங்கே.

மர்மக்கதை மன்னன் இந்திரநாத் புன்முறுவல் பூத்தபடி அருகில் வந்து நின்றார்.

மற்ற இருவரும் அவரை ஒரு தினுசாகப் பார்த்தார்கள்.

மர்மம் சிரித்தது. "சிநேகவல்லி என்ற பெயர் கேட்டது. அருகில் வந்தேன். அதுக்கு முந்திய பேச்சை பும் கேட்டேன்..."

"சிநேகவல்லி என்ற பெயர் உம்மை காந்தமாகக் கவர்வானேன்? என்று கேட்டார் கவிஞர்.

"அத்தப் பெயருள்ள ஒருத்தி எனக்கும் கடிதங்கள் எழுதுகிறாள். நானும் பதில் எழுதுகிறேன். அதில் காதலும் கலந்திருக்கும்" என்றார் இந்திரநாத்.

"ஆங், அப்படியா?" என்று அதிசயப்பட்டார் நாவலாசிரியர்.

மூன்று பெரிய புள்ளிகள் சேர்ந்து நிற்கிறார்களே என்று நாலாவது நபராக வந்து நின்றார் எழுத்தாளர் ஏ.ஏ.ஏ.

ஏரியூர் ஏகநாத ஏகாம்பரம் என்பது அவர் பெயர். முதல் மூன்று எழுத்துக்களை மட்டுமே அவர் உபயோகித்து வந்தார். மற்றவர்கள் கிண்டலாக 'ஏ. ஏ. ஏ' என்று அழைக்கவும் அது உதவியது.

"ஐயா, நீர் பெரிய எழுத்தாளராச்சுதே. உமக்கு காதல் கடிதங்கள் வருமே? வந்திருக்குதா?" என்று மர்மம் துப்புத்துலக்க முற்பட்டார்.

'ஹே!' என்று விசித்திர ஒலி எழுப்பினார் ஏ.ஏ.ஏ. "எனக்கு யாரு அப்படி எல்லாம் எழுதப் போறா! சர்குலேசன் அதிகம் உள்ள பத்திரிகைகளில் அடிக்கடி எழுதுகிற உங்களைப் போன்ற ஸ்டார் எழுத்தாளர்களுக்கு நிறையக் கடிதங்கள் வரும். சிறு பத்திரிகைகளில் சுழன்று கொண்டிருக்கிற எனக்காவது காதலாவது கடிதமாவது பெண்ணாவது எழுதுறதாவது!" என்று இழுத்தார் அவர்.

"சரியான அறுவை" என்று மண்ணின் மைந்தன் முணுமுணுத்தார்.

"அவர் எழுத்தும் அப்படித்தான் இருக்கும்!" என்றார் மர்மக் கதை மன்னன்.

அங்கே புதிதாக வந்த பத்திரிகைத் துணை ஆசிரியர் சாந்தப்பன், 'இங்கே என்ன மாநாடு?' என்றார் இடக்காக.

காதல் மாநாடு’ என்று மகாகவி பதில் சொன்னார்.

"காதலி தென்படலையே?" இது சாந்தப்பன்.

'அதுக்குத்தான் சிநேகவல்லியை தேடுகிறோம்' என்று மர்மக்கதை அறிவித்தார்.

"சிநேகமா! அவள் இங்கே எங்கே வந்தாள்?" என்று கேட்டார் சாந்தப்பன்.

"ஏது உங்களுக்கும் அவளுக்கும் உறவு நெருக்கமோ?" மகாகவி.

"இல்லே இல்லே. சும்மா கடிதத் தொடர்பு" அவ்வளவுதான்.

"உங்களுக்கும் அவள் எழுதுகிறாளா?" என்று அதிர்ந்து போனார் நாவலாசிரியர்.

'"ஊம்ங்...யார் யாருக்கெல்லாமோ எழுதுறாள்னு கேள்விப்பட்டேன். ஏன் அப்படிச் செய்கிறாள்னுதான் புரியலே. என்றார், சாந்தப்பன்.

மர்மக்கதை மன்னன் குரல் கொடுத்தார்; "அதை நாம் கண்டுபிடித்தே தீரனும்."

'அதுக்கு ஒரு வழி செய்வோம்' என்றார் மகாகவி.

என்ன, என்ன என்று அவர் முகத்தை நோக்கி னார்கள், மற்றவர்கள்.

"எனது கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. நீங்கள்தான் அதை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், முதல் பிரதி பெற்று கவுரவிப்பவராக வரவேண்டும் என்று அவளுக்கு எழுதிக் கேட்கிறேன். பெரிய ஒட்டல் ஒன்றைக் குறிப்பிட்டு தேதி, நேரம் எல்லாம் தெரிவித்து எழுதலாம். அவள் வருவாள். அப்போ பிடித்துக் கொள்ள லாம்” என்று கவிஞர் திட்டம் தீட்டினார்.

மற்றவர்களும் 'நல்ல ஐடியா!' எனப் பாராட்டினார்கள்.

அவ்விதமே கவிஞர் சிநேகவல்லிக்கு எழுதினார். அவளும் இசைவு தெரிவித்துக் கடிதம் எழுதினாள். குறிப்பிட்ட நாளில் கனவுப் பிரியன், மண்ணின் மைந்தன், மர்மக்கதை மன்னன், துணை ஆசிரியர் சாந்தப்பன், நால்வரும் பிரபல ஒட்டலில் காத்திருந்தார்கள் ஆவலோடு. காலம்தான் ஓடியது. சிநேகவல்லி வரவேயில்லை,

எல்லோருக்கும் ஏமாற்றம்தான்.

நாவலாசிரியர் கனவுப் பிரியன் அவளைக் காணலாம் என எதிர்பார்த்துக் காத்திருந்ததையும், அடைந்த ரமத்த்தையும் விவரித்து அவளுக்குக் கடிதம் எழுதத் தவறவில்லை.

மண்ணின் மைந்தன் உண்மையை அறிந்தே தீர்வது என்ற முடிவுடன் சிரமங்களை பாராட்டாது, சிநேகவல்வியின் ஊருக்கே போய் விட்டார்.

அவரது திடீர் வருகை அவளுக்கு திகைப்பு அளித்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, சந்தோஷம் காட்டி வரவேற்றாள்.

அவள் தோற்றம் கவிஞரை திடுக்கிட வைத்தது. நிஜ சிநேகவல்லி அவர்களுடைய கற்பனையை பொய்யாக்கும் விதத்தில் இருந்தாள். அவர்கள் அனைவரும் குளு குளு இளம் பெண் ஒருத்தியைத்தான் நினைத்திருந்தார்கள்.

'இவள் கிழவி மாதிரி அல்லவா இருக்கிறாள்!' வயசு முப்பது முப்பத்திரண்டுதான் இருக்கும். அதுக்குள் முதுமை பெற்று, வாட்டத்தோடு காணப்படுகிறாளே" என்று கவிஞர் மனம் விமர்சித்தது.

அவள் அவருக்குத் தேநீர் உபசாரம் செய்தாள். கவிதை நூல் வெளியீட்டு விழா இனிது நடந்ததா என்று விசாரித்தாள். தான் வர இயலாது போனது பற்றி ஏதேதோ சொன்னாள். தனக்கு ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறாரா என்று ஆவலுடன் கேட்டாள்.

மண்ணின் மைந்தன் சாரமற்ற பதில்கள் சொன்னார். சாதுர்யமாக, அவள் எழுதும் கடிதங்களுக்குப் பேச்சைத் திருப்பினார்.

"எனக்கு மட்டும்தான் நீங்கள் ஆசையோடு எழுதிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். நாவலாசிரியர் கனவுப் பிரியனும் அப்படித்தான் நம்பியிருந்தார். மர்மக் கதை மன்னனும், துணை ஆசிரியர் சாந்தப்பனும் உங்கள் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்பது பிறகு தான் தெரிந்தது. இதெல்லாம் என்ன? இன்னும் எத்தனை பேருக்கு கடிதங்கள் எழுதி மயக்கி காதல் கடிதங்கள் பெற்று வருகிறீர்கள்?"

கவிஞர் சாதாரணக் குரலில்தான் பேசினார். ஆயினும் அதில் குத்தல் மறைந்திருந்தது. வறட்டுத் தனம் கலந்திருந்தது. அவர் எழுதிய கடிதங்களில் நிறைந்திருந்த பிரியமும் நேசமும் அன்பும் தென்படவேயில்லை.

சிநேகவல்லியின் கறுத்து வதங்கிய முகம் மேலும் வாட்டமுற்றது. கலகலப்பாக பேசக்கூடிய இளம் பெண் ஒருத்தியை சந்திக்க நினைத்து வந்த கவிஞர், கண் கலங்கிக் குறுகுறுவென உட்கார்ந்திருக்கும் 'பேரிளம் பெண்'ணைப் பரிதாபத்துடன் பார்க்க வேண்டியிருந்தது.

"இப்படிப் பலருக்கும், பெயர் பெற்ற அநேகருக்கு, ஆசையாக எழுதி, சமயம் பார்த்து அன்பளிப்புகள், பணம், பொருள் என்று தட்டிப் பறிக்கலாம் என்பது உங்கள் உள்நோக்கமாக இருந்திருக்குமோ?" என்று கேட்டார், கவிஞர்.

"ஐயோ, அவ்வளவு மட்டமாக என்னை நினைக்க வேண்டாம்" என்றாள் அவள். அழத் தொடங்கி விட்டாள்.

இப்போது கவிஞர்பாடு சங்கடமாகிவிட்டது. அவளை எப்படி தேற்றுவது, அவள் அழுகையை எப்படி நிறுத்துவது என்று புரியாமல் தவித்தார்.

சிநேகவல்லி தானே தன்னைத் தேற்றிக் கொண்டு, மெதுமெதுவாகத் தன் கதையை சொன்னாள். வாழ்வின் சோகம்தான். அவளுக்கு கல்யாணமாகவில்லை. சமூகக் கொடுமைகள்தான் காரணம். அவள் எவ்வளவோ ஆசைப்பட்டாள்: கனவுகள் வளர்த்தாள்: இன்பமயமான எதிர்காலம் சித்திக்கும் என்று எதிர் பார்த்தாள். நிகழ்காலம் சுட்டெரிக்கும் கோடையாக நீண்டு கொண்டிருந்தது. ஏமாற்றம் அவளைக் கருக்கியது. பைத்தியக்காரத்தனமாக - விளையாட்டுப் - போக்கில்- அவள் இதில் ஈடுபட்டாள். தனக்கும் காதல் கடிதங்கள் வர வேண்டும், தன் மீது பிரியம் வைத்து இனிக்கும் கடிதங்கள் எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள் என்ற நிறைவு வேண்டும் என அவள் மனம் ஆசைப்பட்டது. அப்படிப்பட்ட கடிதங்கள் எழுதக்கூடும் என எண்ணித்தான் நாவலாசிரியருக்கும், கவிஞருக்கும், மற்றவர்களுக்கும் அவள் எழுதினாள். இதில் அவள் ஏமாறவில்லை. அவர்கள் சுவை மிகுந்த, இன்பரசம் தோய்ந்த கடிதங்களை அவளுக்கு அனுப்பினார்கள்.

"காதல் கடிதங்கள் சேகரிப்பது எனக்கு மகிழ்ச்சி தரும் பொழுது போக்கு. வேறே என்ன சந்தோஷம் இருக்கு என் வாழ்க்கையில்?" என்றாள் அவள். பெருமூச்செறிந்தாள். பரிதாபகரமாகச் சிரித்தாள்.

இது ஒரு சைக்கலாஜிக்கல் கேஸ்- உளப்பரி சோதனைக்குரிய நபர் என்று கவிஞர் கருதினார்.

"அது சரி, இப்படி அஞ்சாறு பேருக்கு ஆசைமூட்டி கடிதங்கள் எழுதிரீைர்களே. அது வளர்ந்து முற்றி சந்திப்பு, கல்யாணம் அப்படி இப்படி என்று வந்துவிட்டால்? உங்கள் காதலர்கள் உங்களை முற்றுகையிட்டால்? அப்ப எப்படிச் சமாளிப்பீர்கள்?" என்று கேட்டார்.

சிநேகவல்லி விரக்தியாகச் சிரித்தாள். "காதலை யார் சார் அப்படி சீரியசா எடுத்துக் கொள்கிறார்கள்! ஏதோ நிகழ் காலத்திலே ஜாலியாகப் பொழுது போக்க வாய்ப்பு கிடைத்தால் சரிதான் என்றுதானே பலரும் நினைக்கிறார்கள்!" என்றாள்.

"இல்லே. நிலைமை முற்றிவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்..."

"அதெல்லாம் ஒன்றும் முற்றாது சார். இப்ப நீங் களும்தான் எனக்கு ஆசையாகக் கடிதம் எழுதினிர்கள், என்னைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டது உண்டா? அப்படியே எண்ணம் இருந்தாலும் என்னை நேரில் பார்த்த பிறகும் அது நீடித்திருக்குமா? நெஞ்சிலே கை வைத்துச் சொல்லுங்கள்?’ என்று சவால் விடுவது போல் பேசினாள் அவள்.

கவிஞர் மண்ணின் மைந்தன் அசட்டுச் சிரிப்புடன் பேசாமல் இருந்தாரே தவிர, அவளுக்கு நேரடியாக பதில் சொல்ல இயலவில்லை.