நல்ல தோழிதான்/காதல் செய்த காஞ்சனா

காதல் செய்த காஞ்சனா



“டீ வசந்தா”

“என்னடி, காஞ்சனா?”

“ரொம்ப போர் ஆக இல்லே?”

“ஆமாண்டி!”

“வரவர எல்லாமே போர் ஆக இருக்குடீ!”

“ஒரே...!”

இவளுக்கு ‘ஒரே போர்’ என்று சொல்லக்கூட முடியாத அளவுக்கு அலுப்பு. ஆகவே ஒரே என்று மட்டும் அழுத்தமாகத் தெரிவித்தாள்.

‘இதுக்கு என்னடி வசந்தா செய்யலாம்?’

‘எனக்கு என்னடி தெரியும்?’

“பிகு பண்ணாதேடி, நீதான் பெரிய ஐடியா மன்னி ஆச்சே!””

‘மன்னன்’ என்பதற்குப் பெண்பால் மன்னிதான் என்று இப்போது எத்தனையோ பேர் அடித்துப் பேசுகிறார்கள். அதனால் காஞ்சனா இப்படி ‘நற்சான்று’ வழங்கியதில் தவறு எதுவும் இருக்கமுடியாது அல்லவா?

‘எனக்கு ஒரு ஐடியா தோணுது...’

“உன் மனசுதான் ஐடியாக்களின் களஞ்சியம் ஆச்சே, அங்கே ஒரே ஒரு ஐடியாதானா இருக்கும்? சரி, சொல்லு?”

“நீ எரிஞ்சு விழப் படாது.”

“நான் ஏன்டி எரிஞ்சி விழப் போறேன்?”

“அப்போ, காதல் பண்ணிப்பாரு!”

“ஏய் வசந்தா, என்னடி நீ...”

“பார்த்தியா பார்த்தியா, இதோ கோபம் வந்து கொண்டே இருக்கே உனக்கு”

“நான் ஒண்னும் கோபிக்கலே, நீதான் கேலி பண்றே!”

“விளையாட்டு இல்லேடி காஞ்சனா, நான் மெய்யாலுமே சொல்றேன்–வாழ்க்கை ஒரே போர் ஆயிட்டுது இல்லே? அதிலே குளுகுளு இனிமையும், ஜிலுஜிலு மகிழ்ச்சியும் வந்து சேரனுமின்னா. காதல் செய்ய வேண்டியதுதான்.”

“இது சரியான யோசனைதானா, வசந்தா?”

“இதிலே என்ன தப்பு? ‘காதல் செய்வீர் உலகத் தீரே’ன்னு ஒரு பொயட் யோசனை-இல்லை, புத்திமதி கூறியிருக்கிறான். வெறும் பொயட் கூட இல்லை, மகாப் பெயட். ஐ மீன், மகாகவி!”

“அப்போ காதல் பண்ணலாம்கிறே?”

“ஆமாம், காதல் செய்து பார்ப்போம்!” என்று பாட்டாக இழுத்தாள் வசந்தா.

‘சரி, யாரை லவ் பண்ணலாம்?’

“இனி நாம் கவலைப்பட வேண்டிய பிரச்னை அது தான்!” என்றாள் காஞ்சனாவின் தோழி.

காஞ்சனாவுக்கு வயசு பதின்மூன்று நடந்து கொண்டிருந்தது. அவள் தோழி வசந்தாவுக்குப் பதின் மூன்று முடிந்து சில மாதங்கள் ஆகியிருந்தன.

பெண்ணின் வளர்ச்சிப் பருவத்தில் இது ஒரு ‘இன்ட்ரஸ்டிங்’கான கட்டம். அப்போது அவள் சிறுமியாகவும் இருப்பதில்லை; பெரியவளாகவும் ஆகிவிடுவதில்லை. அவள் உள்ளத்தில் பலவிதமான குறுகுறுப்புக்கள்; எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு; மனசில், தனக்கு எல்லாம் தெரியும். தான் பெரியவள் என்ற நினைப்பு; செயல்களில் சிறு பிள்ளைத்தனம்; மற்றவர்கள் தன்னைச் சிறுபிள்ளையாகவே இன்னும் கருதுகிறார்களே என்ற ஆதங்கம் அதனால், தனது பெரிய மனுஷித்தனத்தை நிரூபிப்பதற்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இப்படிப் பல உணர்ச்சிக் குழப்பங்களாலும் அலைக் கழிக்கப்படும் ‘இரண்டும் கெட்டான்’ நிலையில் அவள் ஊசலிடுகிறாள்.

இந்த நிலையின் சரியான பிரதிநிதிகள் காஞ்சனாவும் அவள் சிநேகிதியும். பள்ளியில் படித்துக்கொண்டுதான் இருந்தார்கள். பள்ளிக்கூடப் பாடங்களைப் படிப்பதில் செலுத்துகிற அக்கறையைவிட அதிகமான சிரத்தையை சினிமாப் பாடங்களைப் பார்ப்பதிலும், மனசுக்குப் பிடித்த சில நடிகர், நடிகைகளைப் புகழ்ந்து பேசுவதிலும் காட்டினார்கள். இனிய கதைகளையும், மனோகரமான புத்தகங்களையும் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். எனவே, அன்றாட வாழ்வின் ‘போரடிப்பு’க்கு மாற்றுக் காண அவர்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றி கொண்டதில் அதிசயப்படுவதற்கு எதுவும் இல்லைதான்.

மறுநாள் “அதோ பாரடி, காஞ்சனா அங்கே” என்று வசந்தா சுட்டிக் காட்டினாள்.

“என்னடி, என்ன?” என்று பரபரத்தாள் மற்றவள்.

"பக்கத்து வீட்டுப் பருவ மச்சான். பார்வையிலே படம் புடிச்சான்!” என்று அதற்குரிய நீட்டல் நிறுத்தல்களோடு பாட்டிழுத்தாள் வசந்தா.

அவள் காட்டிய வீட்டின் வராந்தாவில் ஓர் இளைஞன் பொழுது போகாமல் முழித்துக் கொண்டிருந்தான். கலர் பார்வையில் பட்டது என்றால் அவன் கண்களில் மின்னல் தெறிக்கும். பளிச்சென்ற வர்ணத்தில் பாவாடை-தாவணி அணிந்து வந்த சின்னச் சிட்டுக்கள் அவன் கவனத்தைக் கவர்ந்தன–பார்த்தான்.

அவன் பார்த்ததை வசந்தா கவனித்துவிட்டாள். எனவேதான் பாடினாள்.

“டீ, அவர் உன்னைத்தாண்டி பார்க்கிறார்” என்றாள் காஞ்சனா.

“இல்லைடி, உன்னைத்தான்” என்று மறுப்புரை டகார்னு தெறித்தது. வசந்தாவின் வாயிலிருந்து.

“இல்லை, உன்னைத்தான்!” என்ற சொற்களை வைத்துக் கொண்டு இரண்டு பேரும் ‘டக் ஆஃப் வார். பண்ணினார்கள். அதில் அவர்களுக்கு ஓர் உற்சாகம்’ போரடிப்புக்கு ஏதோ கொஞ்சம் மாற்று!

“அவர் காதில் விழப்போகிறதடி, வசந்தா!” என்று முணமுணத்தாள் காஞ்சனா.

“விழுந்தால் எனக்கென்ன, நானா அவரை லவ் பண்ணப் போறேன்?” என்று சிநேகிதி சீண்டினாள்.

“நான் ஒண்ணும்...” என்று இழுத்த காஞ்சனாவுக்கு வெட்கம் மேலிடவே, பேச்சுக்குப் போட்டாள் ‘ஸ்டன் பிரேக்’.

அவள் விழி வண்டுகள் வட்டமிட்ட திசையை நோக்கி, அங்கிருந்தவன் பார்த்ததையும் கவனித்து விட்டு, வசந்தா குறும்பாகச் சிரித்தாள். “பார்வையிலே ஒரு சுகம், உன் பார்வை தந்த சுகம்” என்று இசைத்தாள்.

“என்னடி நீ?” என்று காஞ்சனா கத்தியதற்கு, தோழியின் பதில் இடக்காக நீண்டது, “பார்த்தால் போதுமா? பேசிப் பழக வேண்டாமா?” என்று பாட்டிழுப்பாக.

“எனக்குக் கெட்ட கோபம் வரும்டி, வசந்தா!” என்று கோபக் குரல் காட்டிய காஞ்சனா, அவள் பின்னலைப் பற்றி இழுக்கக் கை நீட்டினாள்.

அவள் பிடியில் சிக்காமல் துள்ளி ஓட, இவள் துரத்த, ஜாலி விளையாட்டாகத் திரும்பியது அவர்கள் போக்கு.

பார்த்துக் கொண்டிருந்தவன் ரசனைக்கு நல்ல விருந்து.

அவனுக்கு இருபத்தைந்துக்கு மேல் முப்பதுக்குள் எந்த வயசும் இருக்கலாம். ‘நவயுகடிசைன்: நாகரிக மாடல்.’ எங்கோ ஓர் ஆபீசில் ஏதோ ஒரு வேலை. உடம்பிலே பிடிக்காத வேலை மட்டுமல்ல, ஓய்வாகப் பொழுது போக்க நிறையவே நேரம் இருந்தது என்பதும் அதில் முக்கிய பாயிண்ட். எப்படியாவது இனிமையாகப் பொழுது போக வேண்டும்-இது தவிர வேறு முக்கிய நோக்கம் எதுவும் அவனுக்கு வாழ்க்கையில் இருந்ததாகத் தெரியவில்லை.

அவன் அந்தப் பெண்களை முதலில் சும்மா பார்த்தான். அவ்விருவரும் தன்னைப் பார்ப்பதும், என்னவோ சொல்லிச் சிரிப்பதும், மீண்டும் பார்ப்பது மாக இருப்பதைக் கவனித்ததும் ‘அவங்க நம்மைப் பத்தித்தான் பேசிக்கிறாங்க’ என்று அவன் மனம் உறுதி கூறியது அவர்களது கண்கள் பேசிய ரகசியம் அவன் மனசைக் கிளுகிளுக்க வைத்தது.

“பெண் எப்போது பெரியவள் ஆகிறாள்?” என்றொரு கேள்விக்கு, ‘அவள் உள்ளத்து ரகசியங்களை அவளுடைய கண்கள் பேசக் கற்றுக் கொள்கிறபோது’ என்று ஒரு புத்திசாலி பதில் கூறியிருந்தான். அது கரெக்ட்! இந்தப் பெண்களும் பெரிய ஆளுகதான்! என்று அவன் மனக்குறளி பேசியது. ‘சரி, நமக்கென்ன? நாமும் பார்த்து வைப்போமே! சேதாரம் இல்லாத பொழுதுபோக்கு ஹார்ம் லெஸ் பாஸ் டைம்!’ என்று அவன் மனம் வழி வகுத்துக் கொடுத்தது.

காஞ்சனா கண்ணாடி முன் நின்றபோது வசந்தா வந்து சேர்ந்தாள், சும்மா வரவில்லை “விஷயம் தெரியுமாடி உனக்கு?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள்.

முன்பெல்லாம் காஞ்சனா அரைமணி நேரம் முக ஒப்பனைக்காக ஒதுக்கினாள் என்றால், இப்போது சில தினங்களாக முக்கால் மணி நேரம் கண்ணாடி முன் போக்கினாள். பவுடரைப் பூசிப் பூசி அழித்தும், கண் மையைத் தீட்டியும் நீட்டியும், நெற்றிப் பொட்டை விதம் விதமாக வைத்தும் திருத்தியும், பல்வேறு கோணங்களில் ‘போஸ்’ கொடுத்துப் பொழுது போக்கினாள். நான் அவளைப்போல இருக்கேனா? இல்லை, இவளைப்போல இருக்கேனா? அந்த ஸ்டார் மாதிரி தோற்றம் இருக்குன்னு சில பேரு சொல்றாங்களே, அது நிசமா?’ என்று கண்ணாடியை அடிக்கடி கேட்டுக் கொண்டாள். எவளோ ஓர் அழகியின் கண்ணாடி அன்பாகப் பதில் சொல்லும் என்று அவள் கதையில் படித்திருந்தாள். என்ன செய்வது? அவள் அழகைப் படித்துக் காட்டிய கண்ணாடி ‘மக்குப் பிளாஸ்திரி’யாக இருந்தது.

இருந்தாலும் பரவாயில்லை, அவளுக்குப் பரிசு அந்த இளைஞன் கண்களில் மின்னிடும் புத்தொளியில் கிடைத்துவிடும். அதற்காக அவள், அவன் வராந்தாவில் இருக்கும் சமயங்களில், வேலை எதுவும் இல்லாத போதும் வேலைகள் இருப்பதுபோல் அப்படியும் இப்படியும் நடப்பதையும் குதித்து ஓடுவதையும் மேற் கொண்டாள். அவள் மனம் இன்பச் சிறகுகள் கட்டிப் பறந்தன.

அவள் உற்சாகத்துக்கு ஊக்கம் ஊட்டுவதில் வசந்தா ஆர்வம் காட்டினாள். அவள் வீடு கொஞ்சம் தள்ளியிருந்தது. தோழிக்காகத் தான் தகவல்கள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவள் சொன்னாள்.

இப்போதும் அப்படி ஒரு சேதியோடுதான் அவள் வந்திருந்தாள்.

“என்னது, சொல்லேன்?”

“அவர் பேர் என்ன தெரியுமா, காஞ்சனா?”

“நான் என்ன கண்டேன்?”

“சந்தர். ஆமாம், சந்....தர்”

“உனக்கு எப்படித் தெரிஞ்சது?”

“அந்த வீட்டிலே ஒரு பெரியம்மா இருக்காங்க, அவங்களை ஃபிரண்ட் பிடிச்சேன்...”

“நீ அந்த வீட்டுக்குப் போனியா?”

“ஆமா, போனா என்ன?”

“ஒண்னுமில்லே” என்று இழுத்த காஞ்சனாவின் குரலில் கொஞ்சம் பொறாமை கலந்திருந்தது. அதை உணரும் திறம் தோழிக்கு இல்லை.

“சந்தர் அருமையா இல்லே?” என்று மிட்டாயை இனிமையாகச் சுவைப்பதுபோல் ரசித்துப் பேசினாள் வசந்தா.

“ஊம்”

“அல்லியை மலர வைக்கும் சந்திரன்; உன் முகம் மலர வைக்கும் சந்தர் நோக்கு, இல்லையாடி?”

“போதும், நிறுத்து உன் வசனத்தை!” என்று தடை விதித்தாள் காஞ்சனா. எனினும் வசந்தா சந்தரைப் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். தினந்தோறும் சந்திக்கும் ஒவ்வொரு தடவையும் அவனைப் பற்றிச் சொல்வதும், சிநேகிதியைக் கேலி செய்வதும் அவளுக்குப் பிடித்த விளையாட்டு ஆகிவிட்டது. “இனி அடுத்த கட்டம் என்ன? பிளான் ஏதேனும் வச்சிரிக்கியா?” என்று சீண்டி விட்டு, “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்; நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்!” என்று பாட்டிழுப்பாள்.

அப்போதெல்லாம் காஞ்சனா வெட்கமுற்றுக் குழம்பி, “சரிதான், போடி!” என்று முணகுவாள்.

ஒரு நாள் வசந்தா ஒரு பத்திரிகை கொண்டு வந்தாள்.

“ஏதுடி இது?” என்று காஞ்சனா ஆவலோடு கேட்கவும், அவள் பதில் சொல்வதில் ரொம்பவும் பிகு பண்ணிவிட்டு, “சந்தர் வீட்டில் வாங்கி வந்தேன்” என்றாள்.

"அவர் கையிலிருந்தா வாங்கினே?”

“ஊகுங், அந்த அம்மாகிட்டே கேட்டு வாங்கினேன்!” என்றாள். அந்த வீட்டில் நிறைய புத்தகங்களும், பத்திரிகைகளும் இருப்பதுபற்றிச் சொன்னாள் “நீயும் என்னோடு வாயேன்டி. அந்த அம்மா நல்லவங்க, அதோடு அவரையும்...உம்... உம்.... உன் லவரையும் பார்த்த மாதிரி இருக்கும்” என்றாள்.

இது போன்ற கெண்டைகள் காஞ்சனாவின் உள்ளத்தில் ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கிய போதிலும், வெளிக்குச் சீறிப்பாய்வதை வழக்கமாக்கிக் கொண்டாள். இப்போது அப்படித்தான் நடந்தது. “போடி, நீ பெரிய இது நீயே அவரோடு பேசு, பழகு, போ, நான் ஒண்ணும் யாரையும் இது பண்ணலே!” என்று சிடுசிடுத்தாள்.

“காஞ்சனா, நான் சொல்றதைக் கேளு. நீ லவ் லெட்டர் எழுது. அதை இந்தப் பத்திரிகைக்குள் வச்சு அவரிடம் கொடுத்துவிடலாம். காதல் வளர்க்கும் வழியிலே இதுவும் ஒண்னுதானே?”

“நான் உன்னிடம் யோசனை கேட்கலியே!”

“இருந்தாலும், இவ்விஷயத்தில் நீ தலைவி, நான் தோழியில்லையா? தோழி தலைவிக்கு ஆற்றும் உதவி யாதெனின், தலைவி தன் காதல் வெற்றி பெறச் செயல். இது திருவள்ளுவர் எழுதி வைக்க மறந்துவிட்ட குறள்’ அதனாலே’

“இப்படிச் செய்யனும்!” என்று தோழியின் தலையில் ‘ணங்’கென்று ஒரு குட்டு வைத்தாள் காஞ்சனா. அவள் பதிலடி கொடுக்கப் பாய்வதற்குள் இவள் பறந்தோடிப் போனாள்!

இந்த விளையாட்டு, அல்லது நாடகம், அல்லது வீரியஸ் நட வடிக்கை எது வென்று காஞ்சனாவினால் திச்சயமாகத் தீர்மானிக்க முடியாத ஒன்று அவளுக்கு ரசிக்கத்தக்கதாகவும், சுவை மிக்கதாகவுமே இருந்தது.

அவளும் வசந்தாவும் அந்த வீட்டுக்கு முன்னால் போகிற சமையங்களில், அவள் கள்ளத்தனமாகப் பார்வையை வீசுவாள். தோழி சந்தர் பக்கம் பார்த்து விட்டு இவளை நோக்கி குறும்புத்தனமாகச் சிரிக்கையில் இவள் முகம் சிவப்பேறிவிடும்.

அவள் மட்டும் தனியாக நடக்கையில் சற்றுத் தைரியமாக அவன் முகத்தைப் பார்ப்பாள். அவன் புன்முறுவல் பூப்பதுபோல் தோன்றும். உடனே அவள் குழப்பமுற்றுத் தலை கவிழ்ந்து நடப்பாள். பிறகு. அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பான் என்ற உள்ளக் குறுகுறுப்புடன் தலைநிமிராமலே திரும்பிச் செல்வாள்.

சங்கோஜியான இந்தப் பெண்ணின் போக்குகளைச் சந்தர் ரசிக்கத் தவறவில்லை, கலகலப்பாகத் திரியும் வசந்தாவின் துணிச்சலை அவன் வெகுவாக வரவேற்றாள்.

ஒரு நாள் மாலை நேரம். காஞ்சனா சிரத்தையோடு 'மேக்கப்' செய்து கொண்டு, ஜம்மென்று அழகை எடுத்துக் காட்டும் 'டிரஸ்' அணிந்து, அவன் அந்த இடத்தில் இருப்பான் என்ற நிச்சயமான நம்பிக்கை மனசில் உற்சாகத்தையும் உவகையும் எழுப்பிவிட, "வசந்தா வீட்டுக்குப் போயிட்டு வறேன்மா" என்று "ஸ்டை"லாக வந்தாள்.

சந்தர் வழக்கமான இடத்தில் இருந்தான். ஆனால், அவள் எதிர்பாராத ஒன்றும் அவளுக்காக அங்கே காத் திருந்தது.

அவன் அருகே வசந்தாவும் நின்றாள், சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டு, அவனைத் தொடுவதுபோல் அவள் ஒட்டி நின்றும், அவன் பேச்சைக் கேட்டுச் சிரித்தபடி விலகியும்...

"டான்ஸ் ஆடுகிறானா, டான்ஸ்?" என்று கனன்றது காஞ்சனாவின் உள்ளம். "மானம் கெட்டவ, வெட்கம் இல்லாம இளிச்சுக்கிட்டு. என்னமா நிக்கறா பாரேன், அவனை இடிக்கிற மாதிரி... அவனும் தேன் குடிச்ச குரங்கு மாதிரி இந்தத் தேவாங்கு மூஞ்சியையே பார்த்துக்கிட்டு, பல்லைப் பல்லைக் காட்டிக்கிட்டு... ஐயே, சகிக்கலே!"

அவள் மனம் குமைந்து குமுறியது.

திரும்பி வீட்டுக்கே போய்விடலாமா என்று நினைத் தாள். 'எது எக்கேடு கெட்டால் நமக்கென்ன, நாம் பர்ட்டுக்கு நேரே போவோம்’ என்று துணிந்து நடந் தாள். அந்தப் பக்கம் பார்க்கப்படாது' என்று தீர்மானம் கொண்டு வந்த மனசினாலேயே அதைக் கடைப்பிடிக்க இயலவில்லை. 'இப்ப என்ன செய்றாங்க, பாரேன்!' என்று தூண்டியது.

"அதோ, உன் ஃபிரண்டு வந்துட்டா!" என்று அவன் வசந்தாவிடம் சொன்னது காஞ்சனாவின் காதிலும் விழுந்தது.

திரும்பிப் பார்த்த வசந்தா சிரித்தாள். "காஞ்சனா, இங்கே வாயேன்!" என்று கூப்பிட்டாள்.

காஞ்சனா ஒன்றும் பேசாமல் விடுவிடென நடந்தாள்.

"காஞ்ச், நில்லுடீ. நில்வேன், ஒரு சமாச்சாரம்" என்று கூறியபடி, ஒரு துள்ளுத் துள்ளி ஓடிவந்தாள் தோழி.

"அவனுக்குத் தன் அழகையும் அலங்காரத்தையும் காட்றா, வெட்கங் கெட்டவ!" என்று, தன்னை மறந்து சிநேகிதியை மனசில் பழித்துக் கொண்டே காஞ்சனா நடந்தாள்.

ஓடி வந்து அவளைப் பிடித்து நிறுத்திய வசந்தா, "டியே, என்னடி இது? கூப்பிடக் கூப்பிட நீ பாட்டுக்குப் போறியே?" என்றாள்.

"நீ நடத்தற லவ் சீனை வேடிக்கை நிற்கணம் கிறியா?".

பொறாமையும் கோபமும் காஞ்சனாவின் பேச்சில் வெடித்தன.

வசந்தாதிகைப்புடன் அவள் முகத்தைப் பார்த்தாள். "என்ன.. நீ...வந்து..."திணறினாள்.

...தெரியும்டீ, திருடி! இப்போல்ல புரியுது!" என்று கத்தினாள் காஞ்சனா.

"என்ன, என்ன புரியுது?"

நீ உன்... உன்... காதலை மறைக்கிறதுக்காக அடிக்கடி என்னைக் கிண்டல் பண்ணி வந்திருக்கிறதே! அவரைப் பத்திப் பேசறது உனக்கு இனிப்பாயிருந்திருக்கு. அதனாலே எனக்காகப் பரிந்து பேசற மாதிரி வாய் ஓயாது அவர் புரவோலம் பாடியிருக்கிறே! அவர் வீட்டிலே அம்மா இருக்கிறா, கிழவி இருக்கிறான்னு சொல்லி என்னை ஏமாத்தி, நீ அடிக்கடி அவரைச் சந்திச்சு இனிச்சிப் பேசிக்கிட்டு வந்திருக்கிறே..!"

வசந்தாவுக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. "ஆமாம்டி ஆமாம்; அப்படித்தான். அது என் இஷ்டம். உனக்கென்ன அதைப் பத்தி?’ என்று முறைத்தாள்.

"நீ எப்படிப் போனா எனக்கென்னடி? ரொம்ப நல்லவ மாதிரி நடிச்சுக்கிட்டு என்னைக் கேலி பண்ணினியே, அதுக்காகத்தான்..." "இப்ப என்னடி செய்யனுங்கிறே?"

சிங்காரச் சிட்டுக்களாய்த் திரிந்த இரு பெண்களும் "உர்-உர்" ரென்று ஒன்றை ஒன்று முறைத்து, மேலே பாய்ந்து ஒன்றையொன்று பிறாண்டத் தயாராகிவிட்ட பூனைகள் மாதிரி தோன்றினார்கள்.

சந்தருக்கு இது மிகவும் ஜோரான திருப்பமாகத் தென்பட்டது. ஏகப்பட்ட மகிழ்ச்சி அவனுக்கு.

"வெட்கம் கெட்ட சிறுக்கி!" என்று ஏசினாள் காஞ்சனா.

"ஓகோ, அவ்வளவுக்கு ஆயிட்டுதா?" என்று கூவி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் வசந்தா.

"என் கை என்ன, புளியங்கா பறிக்கவா போயிருக்கு?" என்று சொல்லி, 'பளார், பளா'ரென இரண்டு அறைகள் கொடுத்தாள் காஞ்சனா. "வேஷம் உன்னுடன் தெருவில் நின்று பேசுவதே வெட்கக்கேடு!" என்று கூச்சலிட்டபடி வந்த வழியே திரும்பினாள் காஞ்சனா.

வசந்தா மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டு, நாய், பேய் என்று மனசில் திட்டியவாறு, தன் வீட்டுக் குப் போனாள்.

"இந்தச் சிடுமூஞ்சியோடு இனி யாரு பேசப் போறா? ஷேமாம் ஷேம்! செங் குரங்கு!"

அவள் மனசுக்குத் திருப்தி ஏற்படவேயில்லை.

மறு நாள் காஞ்சனாவின் மனம் ஆனந்தத்தினால் கூத்தாடுவதற்கு வகை செய்த சேதி ஒன்று அவள் காதில் விழுந்தது. அவளுடைய அம்மாவும், இன்னொரு பெரியவளும் ஊர்க்கதை நாட்டுக் கதை எல்லாம், பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சோடு பேச்சாக இதுவும் ஒலித்தது. "சங்கதி தெரியுமா, அக்கா? அந்த மூணாம் வீட்டிலே ஒரு பிள்ளையாண்டான் இருப்பானே, எப்ப பார்த்தாலும் வராந்தாவிலே உட்கார்ந்து, வழியோடு யாரு போறா, யாரு வாறான்னு முழிச்சுக்கிட்டிருப்பானே அந்த ஆந்தைப் பையன் அடுத்த தெருவிலே இருக்கிற ஒருத்தியைக் கூட்டிக்கிட்டு எங்கேயோ போயிட்டானாம். அவனும், அவன் கூட ஆபீசிலே வேலை பார்க்கிற பொன்னும்தான் அப்படிப் போயிருக்காம், ரெண்டு பேருக்கும் என்னவோ சொல் நாளே, இப்ப எங்கே பார்த்தாலும் அதாத்தானே இருக்கு- காதலா?. ஆங் காதல், அது ஏற்பட்டு வளர்ந்து வந்ததாம். பொண்ணு வீட்டிலே கண்டிச்சாங்களாம். அதனாலே ரெண்டு பேரும் ஒத்துப் பேசி எங்கேயோ போயிட்டாங்க... பரவாயில்லே, ரெண்டு பேரும் சம்பாதிக்கி நாங்க கல்யாணம் செய்துக்கிட்டு குடும்பம் நடத்துவாங்க!"

காஞ்சனாவின் உள்ளத்திலே ஊற்றெடுத்துப் பெருகிய உற்சாகம் பல நூறு மணிகளின் 'ஙணஙண'ப்பு களாய்ச் சிதறி வெடித்தது. சிரிப்பின் வடிவிலே.

"வேணும், இந்த வசந்தாக் குரங்குக்கு நல்லா வேனும். இப்போ அவ மூஞ்சியைப் பார்க்கணுமே?" என்று அவள் மனம் பேசியது.

இந்த உற்சாக வெள்ளம் அவளுடைய ஏமாற்றத்தையும் தோல்வியையும் இருந்த இடம் தெரியாமல் அடித்துச் சென்றுவிட்டது. தான் 'ஷேம்' போட்டதையும், அவளுடைய 'சண்டைக்காரி என்பதையும் மறந்து விட்டு, தோழியைக் கண்டு களிக்கும் ஆவல் உந்த, வசந்தாவின் வீடு நோக்கி நடந்தாள் காஞ்சனா!