நல்ல தோழிதான்/தர்ம சங்கடம்



தர்ம சங்கடம்



ர்மசங்கடமான நிலைமை என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி நாவலாசிரியர் சுந்தரமூர்த்திக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் மனம் அமைதியை இழந்து தவித்தது.

அன்று அவருக்கு ஒரு முக்கியமான நாள் பல நாட்களாகவே அவர் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த விசேஷ தினம், அவருடைய எதிர்பார்ப்பை விட மிக அதிகமான எதிர்பார்த்தலுடன் அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் அந்த நாளின் வருகைக்காகக் காத்திருந்தார்கள் என்பதை அவர் அறிவார்.

திருநகர் தமிழ் மன்றம் தனது இரண்டாவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தது. சகஜமான நிகழ்ச்சிகளோடு வித்தியாசமாகவும் விசேஷமாகவும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று திருநகர் இலக்கிய ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள் . நாவலாசிரியர் சுந்தரமூர்த்தி பக்கத்து கிராமத்தில் இருக்கிறார். அவருடைய நாவல் ஒன்று புதுசாக வெளி வந்திருக்கிறது. அந்த நாவலின் அறிமுக விழாவாகவும், நாவலாசிரியரை பாராட்டி கவுரவிக்கும் விழா ஆகவும் நமது மன்ற ஆண்டு விழாவை நடத்தலாம். நமக்கும் பெருமை. நாவலாசிரியருக்கும் பெருமையாக இருக்கும். மன்ற விழாவில் புதுமை சேர்த்ததாகவும் அமையும்.”

இப்படி மன்றத்தின் துணைத்தலைவர் சதானந்தம் சொல்லவும், மற்ற அனைவரும் ஆரவாரமாக  அக்கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆசிரியரிடம் அறிவித்து அவருடைய சம்மதத்தைப் பெறுவதற்காக உடனடியாகவே மூன்று பேர் சுந்தரமூர்த்தி வசித்த கிராமத்துக்குப் பயணமானார்கள்.

ஆசிரியர் வீட்டில்தான் இருந்தார். அவர்களை அன்போடு வரவேற்றார். வந்தவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, திருநகர் தமிழ் மன்றம் பற்றியும், அதன் ஆண்டு விழா குறித்தும் விரிவாகச் சொன்னார்கள். தங்கள் விருப்பத்தையும் தெரிவித்தார்கள். சுந்தரமூர்த்தியின் புதிய நாவலை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இதர நாவல்கள் பற்றியும், அவருடைய சிறுகதைகள் பற்றியும் ரசித்துப் பேசினார்கள், பல இலக்கிய விஷயங்கள் குறித்து அவரது கருத்துக்களைக் கேட்டார்கள். பலப்பல புத்தகங்கள் பற்றி தங்களுடைய எண்ணங்களை வெளிப்படையாகப் பேசினார்கள்.

இதெல்லாம் சுந்தரமூர்த்திக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. மன்றம் என்றும், சங்கம் என்றும், இலக்கிய வட்டம் என்றும் கூறிக் கொண்டு அவ்வப் போது அவரைக் காண வருகிறவர்களில் பெரும்பாலோர் இலக்கிய ரசனை அதிகம் இல்லாதவர்களாகவே இருந்தார்கள். புதிய புத்தகங்களை அறிந்து கொள்ளாதவர்களாகவும், தாங்கள் படித்த புத்தகங்கள் பற்றி சொந்தமாக அபிப்ராயம் கொள்ளவும் அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லவும் சக்தி அற்றவர்களாகவுமே மிகப் பலர் இருந்தார்கள். இவர்களோ முற்றிலும் மாறுபட்டவர்கள் நல்ல ரசனையும் இலக்கிய ஈடுபாடும் பெற்றிருப்பவர்கள். அது அவர்களுடைய பேச்சில் நன்கு புலனாயிற்று.

எனவே, அவர்கள் நடத்தி வருகிற தமிழ் மன்றம் என்ற அமைப்பின்மீது சுந்தரமூர்த்திக்கு நல்லெண்ணம் ஏற்பட்டது. அவர்கள் மத்தியில் தனது  எண்ணங்களை எடுத்துச் சொல்வது பயனுள்ள காரியமாகவே இருக்கும் என்று அவர் கருதினார். ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை திகழ்த்தக் கட்டாயம் வருவதாக இசைவு தெரிவித்தார்.

அதன்பிறகு முறைப்படி செயல்கள் தொடர்ந்தன. மன்றத் தலைவர் வேண்டுதல் விடுத்தது; அவர் சம்மதம் தெரிவித்து எழுதியது அழைப்பும் நிகழ்ச்சி நிரலும் அச்சிட்டு அனைவருக்கும் அனுப்பியதோடு அவருக்கும் சில பிரதிகள் அனுப்பியது எல்லாம்தான். மன்றத்தைச் சேர்ந்தவர்களும் மற்றும் பலரும் ஆண்டு விழா நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

அந்த நன்னாள் அன்றைக்குத்தான்.

தற்காக சுந்தரமூர்த்தி திருநகர் போகவேண்டும். அவர் வசித்த கிராமத்துக்கும் நகருக்கும் எட்டு மைல் தூரம் இருந்தது. போய் வருவது, முன்னைக் காலத்தைப் போல, பெரும் பிரச்னை இல்லை, அடிக்கடி 'டவுன்பஸ்' போய் வந்து கொண்டிருந்தது.

சீக்கிரமே வந்து விடும்படி ரசிக நண்பர்கள் கேட்டிருந்தார்கள். நிகழ்ச்சிகள் மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். எனினும் நாவலாசிரியர் சுந்தரமூர்த்தி நான்கு மணிக்கே வந்து சேர்வது நல்லது என்று அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அவரை கவுரவிக்கும் முறையில் ஒரு சிற்றுண்டி விருந்தும் ஏற்பாடு செய்யலாம் என்பது அவர்கள் நினைப்பு.

இரண்டு மணி பஸ்ஸில் போகலாம் என்று அவர் திட்டமிட்டிருந்தார். மூன்று மணிக்குக் கிளம்பினால் கூடப் போதும்தான். ஆனால், சீக்கிரமே போனால், டவுனில் அங்கே இங்கே நின்று, அதையும் இதையும் பார்த்துப் பொழுது போக்குவதற்கு வசதியாக இருக்கும்.  சுந்தரமூர்த்திக்குப் பிடித்த விஷயங்களில் இப்படிப் பொழுது போக்குவதும் ஒன்று ஆகும்.

அவ்விதம் திருநகர் செல்வதற்கு சிரமமோ தடங்கலோ எதுவும் இராது என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால் அவர் எதிர்பாராத தடங்கல் ஒன்று வந்து சேர்ந்தது.

தனியராக வாழ்ந்த சுந்தரமூர்த்தியின் சாப்பாட்டுத் தேவைகளை கவனித்துப் பூர்த்தி செய்யவும் வீட்டு அலுவல்களைச் செய்து முடிக்கவும் பெரிய அம்மா ஒருத்தி வீட்டோடு இருந்தாள். பார்வதி ஆச்சி என்ற அந்த அம்மாளின் மகள் தனது எட்டு வயது மகனுடன் முந்தியதினம் வந்து சேர்ந்தாள். ஆச்சியும் மகளும் இன்னொரு ஊரிலிருந்த உறவினர் வீட்டுக்கு, அங்கே நிகழ்ந்திருந்த இழவு விசாரிப்பதற்காகப் புறப்பட்டார்கள். துக்க வீட்டுக்கு சின்னப் பையனையும் கூட்டிப் போக அவர்கள் விரும்பவில்லை. போகவர அதிகப்படியான செலவு வீண் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருந்தது. அதனால் பையனை வீட்டோடு விட்டுச் செல்லத் தீர்மானித்தார்கள். காலை வேளைக்கும் ராத்திரிக்கும் போதுமான அளவு இட்டிலி, மத்தியானத்துக்குச் சாப்பாடு எல்லாம் தயாரித்து வைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

"பையன் இங்கேயே இருப்பான். உங்களுக்கு தொந்தரவு எதுவும் தரமாட்டான். வெளியே போய் விளையாடிவிட்டு, பசிக்கிற நேரத்துக்கு வந்து சாப்பாடு கேட்டான், காலை இட்டிலி நாங்களே கொடுத்துவிட்டுப் போயிடுவோம். மத்தியானம் சாப்பாடு கொடுங்க, ராத்திரி நாங்க வருவதுக்கு முன்னெப் பின்னே ஆகும். ராத்திரியும் அவனுக்கு இட்டிலி கொடுங்க. அவனை வேறே எங்கேயும் விட்டுட்டுப் போக முடியலே. கூட்டிக்கிட்டுப் போகவும் வசதிப்படலே. தயவு செய்து அவனை கொஞ்சம்  கவனிச்சுக்கிடுங்க. நாங்க எந்த ராத்திரியானாலும் வந்திடுவோம்’ என்று ஆச்சியும் மகளும் திரும்பத் திரும்பச் சொல்லிவிடடுப் போனார்கள்.

வீட்டோடு இருந்து உழைத்து, தனது தேவைகளைக் கவனித்துப் பணிவிடை புரியும் பெரிய அம்மாவின் இந்தச் சின்னக் கோரிக்கையை, தட்டிக்கழித்து, என்னாலே முடியாது என்று அடித்துச் சொல்வதற்கு சுந்தரமூர்த்திக்கு மனம் வரவில்லை.

அவர்கள் போய்விட்டார்கள். அதிலிருந்து சுந்தரமூர்த்தியின் மன உளைச்சலும் ஆரம்பமாயிற்று.

திருநகர் தமிழ்மன்றம் ஆண்டு விழாவுக்குப் போவதா, வேண்டாமா என்று மனம் அரிக்கலாயிற்று. பையனுக்கு மத்தியான உணவு கொடுத்துவிட்டு, மூன்று மணி பஸ்சுக்குப் புறப்பட்டுப் போனால் சரிப்படுமா? அங்கே நிகழ்ச்சி முடிவதற்கு 9 அல்லது 9-30 ஆகிவிடலாம். அதுக்கு மேலேயும் நேரம் பிடிக்கலாம். கடைசி பஸ் இரவு 10 மணிக்கு. அதைப் பிடித்தால் வீடு திரும்ப 11 மணி ஆகிவிடும். அங்கே நண்பர்களுடன் பொழுது கழிந்து, ராத்திரி பஸ் கிடைக்காமல் போனால், ஊருக்குத் திரும்பமுடியாது. பையன் பசியோடு இருக்க நேரிடும். அவனுடைய அம்மாவும் ஆச்சியும் எந்த ராத்தியும் வீடு வந்து சேர்ந்து விடுவோம்’ என்று சொல்லிப் போயிருந்தாலும், அப்படி அவர்கள் திரும்பி விடுவார்கள் என்பது நிச்சயமில்லை. அநேகமாக மறுநாள் காலையில் பத்துமணி சுமாருக்குத்தான் வருவார்கள். பையன் ராத்திரி தனியாக எங்கே தங்குவான்? எங்கு படுத்துத் துங்குவான்? இப்படிப் பல குழப்பங்கள் அவர் மனசை அலைக்கழித்தன.

தன்னை நம்பி, பொறுப்பாக ஒப்படைத்துச் சென்றுள்ள சிறுவனை வெளியே நிறுத்திவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு தன் பாட்டுக்கு திருநகர் போவது என்பது அவருக்குக் கஷ்டமான காரியமாகப்பட்டது. அதேசமயம்---

அங்கே திருநகரில் அநேகம் பேர் அவரை எதிர் பார்த்து ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் அளிப்பதா? வருவேன்---நிச்சயமாக வருவேன் என்று நேரிலும், கடிதம் மூலமும் உறுதி அளித்துவிட்டு இப்போது போகாமல் இருப்பது சரியான செயல் ஆகுமா? இப்படியும் அவர் மனசில் ஒரு குரல் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

நாலு மணிக்குப் போய், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிலைமையை சொல்லி சீக்கிரமே புறப்பட்டு வர முயலலாமே? இதுவும் அதே மனக் குரல்தான்.

எண்ணுவது எளிது. அப்படி நடக்கும் என்று சொல்வதற்கில்லை; அங்கே போனால் நேரம் ஆகி விடத்தான் செய்யும்; ராத்திரியே ஊர் திரும்ப முடியாமலே ஆகிவிடலாம் என்ற நினைப்பும் எழுந்து நின்றது.

-நானும் இல்லாமல், அவனோட பாட்டியும் அம்மாவும் இல்லாமல், ராத்திரி நேரத்தில் பையன் என்ன செய்வான்? பகல் வேளையிலாவது தெருப் பையன்களோடு சேர்ந்து குதித்துக் கும்மாளமிட்டு தன்னை மறந்திருப்பான். தான் தனியாக விடப்பட்டிருப்பதை அப்பிஞ்சு மனம் உணராமல் இருக்கக்கூடும். ராத்திரியில் தனிமை அவனை அச்சுறுத்தும் அல்லவா? பசி வேளைக்கு உணவு கிடைக்காமல் போனால் அவன் மேலும் அதிகமாக வேதனைப்படுவானே!...

பிறர் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் அக்கறை காட்டும் ஆசிரியர் சின்னப் பையனைப் பற்றி அதிகமாகவே கவலைப்பட்டார்.

எதிர்பார்த்துக் காத்திருக்கும் இலக்கிய ரசிகர்களைப் பற்றிய எண்ணமும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய 

ஏமாற்றம் பற்றிய நினைப்பும் அவர் மனசை சங்கடப் படுத்தாமல் இல்லை.

என்ன செய்வது?... என்னதான் செய்வது? குழம்பித் தவித்தார் நாவலாசிரியர்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

பையன் வந்து மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, மீண்டும் தெருவுக்கு ஓடிப் போனான்.

இப்ப வீட்டை பூட்டிக் கொண்டு, பஸ்சுக்குப் புறப்படலாமா?.... இரவு ஒன்பது மணிக்குள் திரும்பிவிட முயலலாம்....

-வர முடியாமல் போனால்? ராத்திரி திருநகரிலேயே தங்கும்படி ஆகிவிட்டால்? பையன் நிலைமை என்ன?

அவர் மனம் சங்கடப்பட்டுக் கொண்டேயிருந்தது.

மணி மூன்றும் ஆயிற்று. அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

இலக்கிய ரசிகர்கள் விவரம் தெரிந்தவர்கள். நாவல் அறிமுகமும் என்னைப் பாராட்டிப் பேசுகிற காரியமும் நான் இல்லாமலே நடைபெற முடியும். நன்றாகவே நடந்துவிடும். ஆனால் என்னை நம்பி எனது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கிற சின்னப் பையன், ஆச்சியும் அம்மாவும் இல்லாத போது, நானும் இல்லாமல் போய்விட்டால் திண்டாடிப் போவான். வயிற்றுக்கு உணவும், படுத்துத் தூங்கப் பாதுகாப்பான இடமும் இன்றித் தவிப்பான் பாவம்!

நாவலாசிரியர் சுந்தரமூர்த்தி திருநகர் தமிழ் மன்றம் ஆண்டு விழா திகழ்ச்சிக்குப் போகாமலே இருந்து விட்டார். தனது நிலைமையை விளக்கி இலக்கிய நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவதில் ஈடுபட்டார்.

★'தாமரை'-ஜனவரி 1986