நல்ல தோழிதான்/தேவகியின் மனப் பண்பு!

தேவகியின் மனப் பண்பு!



" என் ராஜா” என்று குயில்போல் கூவினாள் தேவகி.

இப்படிக் கூவுகிற போதே அவள் மயில் போல் ஆடி அசைந்தாள் என்று தனியாகக் குறிப்பிட வேண்டியது அவசியம் இல்லைதான். கொஞ்சிக் குழைந்து நெருங்கி வரும் இளம் பெண் சிலை மாதிரியா நின்று கொண்டிருப்பாள். அதிலும், தேவகி ஆடல், பாடல், நடிப்புக் கலைகள் பலவும் கை வந்த பெண் ஆயிற்றே!

அவளுடைய 'ராஜா' ஏதோ எழுதிக் கொண்டிருந் தான். அவன் பெயரும் ராஜா என்றே இருக்கட்டுமே! அதில் என்ன கஷ்டம், அல்லது நஷ்டம்!

முகத்தை திருப்பாமலே அவன், "என் மான் குட்டிக்கு இப்ப என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

"ராஜா, ராஜா, ராஜா" என்று உணர்ச்சி தளும்பும் தேன் குரலை இழைய விட்டாள் அவள். 'உகுங்' என மணிச் சிரிப்பு தெறிக்க வைத்து, அவன் அருகில் ஒடித வளையல்கள் கலகலக்க தனது கரங்களை அவன் ఉు தவழச் செய்தாள். அவன்மீது துவண்டாள்". அவனுக்கு அவள் செயல் கசக்கவில்லை. என்றாலும், "ஐய, என்ன இது தேவகி" என்று சொல்லி வைத்தான், "ஜோரா முன்னேறிக் கொண்டிருந்த கவிதை ஒட்டத்தைத் தடுத்து விட்டாயே!" என்று முணங்கினான்.

தேவகி சிரித்தாள். அவள் விரல்கள் அவன் முகத்தை நிமிர்த்தின. "இனிய கவிதையாக நானே வந்துவிட்ட பிறகு, வறண்ட சொல் ஓட்டம் பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றாள். நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடிப்பதற்காக நீண்ட நீண்ட வசனங்களை மனப்பாடம் செய்து பேசிப் பழக்கப் பட்டவள்தானே அவள் அதனால் அன்றாட வாழ்விலும் தேவகியின் பேச்சில் நாடகத்தனம் கலந்து காணப்படாமல் போவதில்லை.

நாடகங்களிலும் படங்களிலும் அவளுக்குரிய பாடல்களை-சில சமயம் வசனங்களையும்.எழுதிக் கொடுப்பவன் ராஜா. அவனுக்கு அவளும், அவளுக்கும் அவனும் காந்தமாயினர். அவர்களது கூட்டுக் களிப்பினிலே இன்பக் கவிதை நிறைந்து திகழ்ந்தது.

தேவகி மிகுந்த புகழ்பெற்ற நடிகை அல்ல, மிகப் பலரின் கண்களை கூசச் செய்கிற நட்சத்திர அந்தஸ்தை அவள் பெற்றிரா விட்டாலும், அவள் பெயருக்கு ஒரு வசீகரத்தை ஏற்படுத்தும் அளவுக்கு போதுமான புகழ் அவளுக்கு இருந்தது. அவளிடம் பணம் தாராளமாக புரண்டு கொண்டிருந்தது. அவளுக்கு என்று அழகான சிறு கார் ஒன்றும் இருந்தது. சொந்த வீடு கட்டுவது பற்றி திட்டமிட்டு வந்தாள் அவள்.

இவ்வளவு வாழ்க்கை வசதிகளும், மேலும் வளர்ச்சிக்கு உரிய வழிவகைகளும் பெற்றிருந்த தேவகி,  கவிஞர் என்று சொல்லித் திரிந்த ராஜாவை சுற்றி வளையமிட்டு மயங்கிக் கிடந்தது கலை உலகத்தினருக்கு அதிசயமாகத்தான் தோன்றியது.

ராஜா பணக்காரன் அல்ல. புகழ் மிகப் பெற்றவனும் இல்லை. ஏதோ சுமாராக பணம் வந்து கொண்டிருந்தது அவனுக்கு. எப்படியோ வாழ முயன்ற அப்பாவி அவன். ஆனால் ஆள் அழகாக இருந்தான்.

இந்த கடைசி தகுதிதான் தேவகியை வசீகரித்த காந்த சக்தியாக உதவியது. வெறும் ராஜாவாக-அல்லது அவன் சொல்லிக் கொண்டது போல கவி. ஏ. ராஜா என்று-அலைந்த அவனுக்கு கார் சவாரி, காதல் அனுபவம், செலவுக்கு பணம் மற்றும் வாழ்க்கை வசதிகள் எல்லாம் திடீரென்று வந்து சேரவும், அவன் உண்மையிலேயே ராஜா மாதிரி பொழுது போக்க முடித்தது. -

'அவனுக்கு வந்த அதிர்ஷ்டம்’ என்றும் 'யோகம்' பாக்கியசாலி-கொடுத்து வைச்சவன்' என்றும் பலரும் பலவாறு பேசி பெருமூச்செறியும்படியாக அவனுடைய வாழ்க்கை மாறி விட்டது. பிறர் அபிப்பிராயங்கள் பற்றி என்றுமே அவன் கவலைப்பட்டதில்லை.

தேவகியும் அப்படித்தான்.

ஆகவே அவள் அவனை தனது ராஜாவாக ஏற்றுக் கொள்ளத் துணிந்தது போலவே, அவன் அவளை தன் ராணியாக வரித்துக் கொண்டான்.

நாம் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு வாழலாம். எப்போ திருமணம் வைத்துக் கொள்ளலாம்? நம்ம கல்யாண விழாவை சீக்கிரமே நடத்தி விடலாமே, என்று அவள் அடிக்கடி கூறி வந்தாள்.

தன் வாழ்வில் திடீரென வந்த வசந்தத்தை நிலையானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை கவி ஏ.ராஜாவுக்கும் இல்லாமல் இல்லை. எனினும், எப்பொழுதும் அவள் கையையே எதிர் பார்த்து காத்துக் கிடக்கும் கணவன் அந்தஸ்து அவனுக்கு மகிழ்வூட்டும் கவர்ச்சியாகத் தோன்றவில்லை. பொருள்,புகழ், மதிப்பு முதலிய நிலைகளில் அவளைவிட உயர்ந்த படியை எட்டிப்பிடிக்க முடியாமல் போனாலும் கூட அவளுக்கு சமமான அந்தஸ்தைத் தேடியாக வேண்டும் என்று துடித்தது அவன் உள்ளம்.

தன்னுடைய திறமையும், உழைப்பும், பெரும் புகழைப் பெற்றே ஆகவேண்டும்.பெற்றே தீரும் எனும் உறுதியோடு, நம்பிக்கையோடு, ஆர்வத்தோடு உழைத்தான். “புகழ் வந்த பிறகு பணம் தானாக வரும். அல்லது வராமலே போனாலும் கவலை இல்லை!” என்று அவன் எண்ணுவது வழக்கம்.

தனது எண்ணத்தை அவன் தன் ராணியிடம் சொல்லத் தயங்கியதுமில்லை.

அவன் எழுதிக் கொண்டே இருந்தான். என்னென்னவோ முயற்சிகள் செய்தான். அவளும் அவன் மனசை மாற்ற தன்னாலான வரை முயன்று கொண்டுதான் இருந்தாள்.

அன்றும் அதேதான் நடந்தது.

எழுத்துக்கு தடை போட்டபடி எதிரே வந்து நின்ற இன்பத்தை ஏறெடுத்துப் பார்த்தான் கவிராஜா. மோகன முறுவல் பூத்தான்.

காலமெல்லாம் வீணாகுதே!” என்று இழுத்தாள் அவள்.

'இல்லை. பொழுதை பொன்னாக மாற்றும் ரசவாத வித்தையில் ஈடுபட்டிருக்கிறேன். என முணகினான் அவன்,

 கவிக்கும் பொன்னுக்கும் ஒத்துவராது ராஜா, பொழுதை பூவாக, நிலவாக, அமுதமாக, இனிமையாய். சுவையாய், சொர்க்கமாய், ரசமானதாக, ரம்மியமானதாக மாற்றுவோம்,” என அடுக்கினாள் அலங்காரி.

முடிவிலே பேச்சு அவர்களின் தீராப் பிரச்னையைத் தொட்டது.

தேவகி, நீ ஏன் சும்மா கல்யாணம் கல்யாணம் என்று தொண தொணக்கிறே? நான் உன்னை விட்டுப் போய் விடுவேன் என்ற பயமா? என்று ராஜா தமாசாகக் கேட்டான்.

நீ பயப்படாமல் இருந்தால் சரிதான்!” என்று கோணல் பார்வை பார்த்து குறும்பாக பேசினாள் தேவகி,

அவன் தன் எண்ணத்தை மறைத்து வாய் நிறைந்த சிரிப்பைக் காட்டினான். பிறகு சொன்னான்: இன்னும் சிறிது காலம்தான். அதுக்கு பிறகு ஐயாவை பாரேன், கவி ஏ. ராஜா மகாகவி ஏ. ராஜாவாக உயர்ந்திருப்பார். எனது 'மின்னல் மகள்' காவியம் எங்கும் சிறப்புற்று விளங்கும். அப்புறம் சான்சுகள் என்னை தேடி வரும், அது நாடகமாக அரங்கேறப் போகிறது. உடனடியாக படம் ஆகும். பிறகு படத்துக்கு மேல் படங்கள்- ஏகப் பட்ட சான்சுகள்! பாடல்கள்! மகாகவி ஏ. ராஜா... கதை, வசனம், பாடல். மகாகவி ஏ. ராஜா! ஆகா! ஆகா.... புகழ்! பணம்! அந்தஸ்து! உயர்! ஆகா, அடி ராணி, என் ராணிக் கண்ணு! தேவகிக் குட்டி...”

"மகாகவி'யின் கற்பனைக்கும் கைகளுக்குமிடையே கிடந்து. குரங்கு கைப் பூமாலை போல் திணறினாள் தேவகி. அவளுக்கு 'ஆனந்த மென் சொல்வேனே!" என்ற உள்ளக் குதூகலம்தான் ஏற்பட்டிருக்கும்.

 கவி ஏ. ராஜாவின் கனவுகள் வெறும் பகற் கனவுகளாகப் புகைந்து போகவில்லை. அவன் தனது உள்ளம், உணர்வு, உழைப்பு மூன்றையும் ஈடுபடுத்தி உருவாக்கிய 'மின்னல் மகள்' காவிய நாடகம் வெற்றிகரமாக அரங்கேறியது. புத்தகமாக வெளி வந்தது. விரைவில் திரைப்படமாயிற்று. அது எங்கும் உரிய பொருள் ஆகிவிட்டது. கவி. ஏ. ராஜாவின் பெயர் மீது ஒரு தகத்தகாயம் படரக் காலம் துணை செய்தது.

புகழ் போதை கவியை கிறக்கி, அவனை செயலற்றவனாக மாற்றி விடவில்லை. வெற்றி பெற்று தந்த உற்சாக மிடுக்கோடு அவன் பூலோக சுந்தரி எனும் காவியத்தை அற்புதமாக உருவாக்குவதில் முனைந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே கலை உலகப் பண மனிதர்கள் அவனை நாடி வந்தார்கள். அவன் உறுதியாய் தெரிவித்தது போல, நாளுக்கு நாள் அவனுடைய பணம், புகழ், அந்தஸ்து நிலைமை உயர்ந்து கொண்டே இருந்தது.

கவி ஏ. ராஜா, தேவகியிடம் தங்கள் கல்யாணம் பற்றி உற்சாகமாகப் பேசலானான். விரைவிலேயே மன விழாவை மிகச் சிறப்பாக நடத்தி விடலாம் என்று திட்டம் தீட்டி வர்ணித்தான். தேவகி குதுகலித்துக் கும்மாளமிட்டுக் கூத்தாடுவாள் என்று அவன் நம்பினான்.

ஆனால், அவன் எதிர்நோக்கிய விதத்தில் இல்லாது போயிற்று, தேவகி தந்த எதிரொலி. அவள் முன் போல் அதில் ஆர்வம் காட்டவில்லை.

‘எல்லாம் சரியாகி விடும்' என்று நம்பிய கவி தனது லட்சிய வேட்டையில் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருந்தான். பணம் நிறைய வரவும், தனக்கென ஒரு  காரும், பங்களாவும் வாங்கினான். அவனாகவே கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாள் குறித்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு தேவகியை சந்திக்கப் போனான்.

அவன் கனவிலும் கருதியிராத அவனுடைய மகா கவித்தனம் கற்பனை கூட செய்ய முடியாத வரவேற்பு அவனுக்காக காத்திருந்தது தேவகி வீட்டில்.

'‘’அம்மா வீட்டில் இல்லை. நீங்க யாரு?" என்று கேட்டு, அவனை வாசலிலேயே தடுத்து நிறுத்தினான் புதிய காவலாள் ஒருவன்.

கவியின் முகத்தில் ஓங்கி அறைந்தது மாதிரி இருந்தது அச்செயல். அவனுக்கு கோபம் கொதித்து இந்தது. ‘’ஹெஹ், நான் யாரா? இந்த வீட்டிலே என்னிடமே அப்படிக் கேட்க ஒரு ஆளா? ஹெ ஹ..:‘’ என்று உறுமினான் அவன்.

‘’யாரப்பா அது, வழி தவறி வந்து விட்ட நடிக சிகாமணி?'’ என்று கிண்டலாகக் கேள்வி எறிந்தபடி தேவகி வெளியே வந்தாள். வாசல்படி ஒரத்தில் ஒய்யாரமாக நின்று, அலட்சியமாக அவனைப் பார்த்தாள். ஓ, மகாகவியா? பேஷ்! ஜீவசத்து அளவுக்கு அதிகமாகி விட்டதோ?’' என்று நையாண்டியாக சொல் வீசினாள்.

"மகாகவியை பேட்டி காண இந்த நடிகைக்கு இன்று நேரமில்லை. சென்று வருக கவிஞரே!” என்று சொல்லி, முற்றுப்புள்ளி போல் களுக்கென ஒரு சிரிப்பு சிந்தினாள். மின்னல் மகள் என நடந்து மறைந்தாள் தேவகி.

ராஜாவுக்கு உலகமே தலைகீழாக சுழல்வது போலிருந்தது. தன் தலையைக் கையினால் பற்றிக் கொண்டு  தள்ளாடும் நடையோடு திரும்பினான். வந்த வழியே போனான்.

இந்த அனுபவத்தை அவன் மறக்கவே இல்லை. எப்படி மறக்க முடியும்? தேவகியின் மாறுதலை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவளை. அவள் பண்பை. மனநிலையை. எத்தகைய பெரும் பிசகு என்பதை நினைக்கும்பொழுது கவிக்கு மன வேதனை எழுவது உண்டு.

தேவகி, மாதவன் எனும் அழகன் ஒருவனை தனது ராஜாவாக ஏற்றுக் கொண்டிருக்கிறாள் என்ற செய்தி கலை உலகில் வேகமாக பரவியது. அவன் சாதாரண நடிகன்; சுமாரான புகழும், பண வருவாயும் உடையவன். எனினும் ஆள் அழகாக இருப்பான் எனும் உண்மைகளை அறிந்தவர்கள் மாதவனின் அதிர்ஷ்டம் என்றார்கள். ராஜா. ஐயோ பாவம்!' என அனுதாபம் உதிக்காதவர் எவருமில்லை என்றே சொல்ல வேண்டும்.

கவி ஏ. ராஜா யோசித்தான். யோசித்துக் கொண்டே இருந்தான், அவனுடைய சிந்தனை மண்டலத்தில் குழப்பம் கவிந்திருத்தது. அது மாறிப் புரண்டு மின்னொளி தெறித்தது. அவனுக்கு தெளிவு ஏற்பட்டது. ஆமாம், சந்தேகமே இல்லை என்று திடமாகக் கூறியது அவனது மனக்குறளி.

தேவகி தன்னைவிட அந்தஸ்தில், புகழில், ஆற்றலில் குறைந்திருப்பவனைத்தான் அவாவுகிறாள். தனது தயவில் வாழ்வதாக அவன் நம்ப வேண்டும். அப்பதான் தனது இஷ்டம்போல் தன் கணவனை ஆட்டி வைக்க முடியும் என்பது அவள் எண்னம் என்று தெரிகிறது. தேவகியின் கணவன் எனும் தகுதியில் பிரகாசிக்கக் கூடிய ஒருவனே அவளுக்கு  வேண்டும். அவளுடைய புகழை மங்க வைக்கும் அந்தஸ்து பெற்றுவிடுகிற சுயம்பிரகாசி- அவளுக்கு அடங்கி நடக்க விரும்பாது தன் போக்கில் செயல்புரிகிற ஒருவனின் மனைவி என்ற கவுரவத்தை அவள் விரும்ப வில்லை. தேவகி ஆசைப்பட்டு தேடுவது உண்மையான ராஜாவை அல்ல; அழகான ஒரு கூஜாவைத்தான்! இப்படி அறிவுறுத்தியது அவன் சிந்தனை.

“ஆகா! தேவகியின் இந்த மனோபாவம் இதுவரை எனக்குப் புரியாமல் போய் விட்டதே! என்ற வருத்தம் அவனுக்கு ஏற்படத்தான் செய்தது. இருந்தாலும் ஒரு ஆனந்தத் துடிப்பு அதை அமுக்கியது.

இந்த அனுபவ ஒளியை எனது பூலோக சுந்தரி காவியத்தில் பதிவு செய்து விடலாம்!” என்ற மகிழ்ச்சியே அது.