நவகாளி யாத்திரை/கண்டேன் காந்தியை!
அப்புறம் எப்படியோ தட்டுத் தடுமாறி ஸ்ரீநகர் கிராமத்தை அடைவதற்குள் மணி மூன்றாகிவிட்டது. காந்திஜியின் ஆசிரமம் ஒரு தென்னந் தோப்புக்குள் இருந்தது. குளுமையான அந்தத் தோப்புக்குள் பிரவேசித்தபோது என் பசி தாகமெல்லாம் பறந்து போய்விட்டன. என்னை அறியாமல் என்னிடம் ஒரு வித பக்தி உணர்ச்சி தோன்றியது. ஏதோ தெய்வீக சக்தி வாய்ந்த ஆலயம் ஒன்றின் கர்ப்பக் கிருகத்துக்குள் பிரவேசிப்பதைப் போன்ற புனித உணர்ச்சி உண்டாயிற்று. அங்கே காணப்பட்ட ஒரு சிறு செங்கல் வீட்டுக்குள்தான் மகாத்மா இருக்கிறார் என்று
ஆகா! காந்தி மகாத்மாவைக் கண்ட மாத்திரத்திலேயே என்னுடைய பிரயாண அலுப்பெல்லாம் சூரியனைக் கண்ட பனி போல் அடியோடு மறைந்தன.
மகாத்மாஜியின் தரிசனம் கிட்டியதே என் பாக்கியம் என்று பூரிப்படைந்தவனாய் அந்த இடத்துக்கு அருகாமையிலேயே அமைந்திருந்த நிருபர்கள் முகாமுக்குச் சென்றேன்.
பத்திரிகை நிருபர்களுக்காக மகாத்மாஜியின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடிசையை ஒதுக்கி விட்டிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் வங்கப் போலீஸார் தங்கியிருந்தார்கள். மற்றொரு குடிசையில், வங்காள யூனிவர்ஸிடி புரொபலர் திரு. நிர்மல் குமார் போஸ் சுறுசுறுப்பாகத் தமது அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். நிர்மல்குமார் போஸ்தான் அப்போது மகாத்மாஜியின் ஆபீஸ் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அத்துடன் மகாத்மாஜியின் பிரார்த்தனைப் பிரசங்கங்களை வங்காளியில் மொழி பெயர்த்துக் கூறுவதும் அவருடைய அன்றாட முக்கிய ஜோலிகளில் ஒன்றாகும். மற்றபடி மகாத்மாஜியின் சுற்று வேலைகளைக் கவனிப்பதற்கும், அவருக்கு வேண்டிய பணிவிடைகள் புரிவதற்கும் அவருடைய பேத்தி மதுகாந்தி அவருடனேயே தங்கியிருக்கிறார். எனவே, மகாத்மாஜியோடுகூடத் தவிர்க்க முடியாத ஒரு சில குறிப்பிட்டி நபர்கள் மட்டுமே யாத்திரை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பத்திரிகை நிருபர்கள் முகாமில் சுமார் ஆறு ஏழு பேர் இருந்தார்கள். எல்லோரும் வங்காளியும், ஹிந்தியும் கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையே தமிழ் தெரிந்த நிருபர் ஒருவரும் இருந்தார். அந்த இடத்தில் தமிழ் பேசத் தெரிந்தவரைக் கண்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்தான் அமெரிக்கப் பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்பும் யூ. பி. நிருபர் என்று அருகிலிருந்தவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். மேற்படி யு. பி. நிருபரை அணுகிப் பெயர் என்னவென்று விசாரித்தேன். மாணிக்கவாசகம் என்று பதில் இறுத்தார். நண்பர் மாணிக்கவாசகத்தின் மூலம் மகாத்மாஜி யாத்திரை சம்பந்தமான பல விவரங்களையும், நவகாளி ஜில்லாவிலே நடந்த கோர சம்பவங்களைப்பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதற்குள் மணி நாலே முக்கால் ஆகிவிட்டது. "இன்னும் கால் மணி நேரத்தில் மகாத்மா பிரார்த்தனைக்குக் கிளம்பிவிடுவார்; நாமும் அவருடன் செல்லத் தயாராக இருக்க வேண்டும்" என்று எச்சரித்தார் மாணிக்கவாசகம்.