நவகாளி யாத்திரை/பிரயாணத் திட்டம்

பிரயாணத் திட்டம்

காந்தி மகாத்மாவோடு நவகாளி ஜில்லாவில் பிரயாணம் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை எல்லாம் முடித்துக் கொண்டு மறுநாள் ரயில் ஏறிக் கல்கத்தா நகரத்தை அடைந்தேன்.

கல்கத்தாவில் தென்னிந்தியப் பிரமுகரான திரு. சாரியார் வீட்டில் தங்கி, அங்கிருந்து நவகாளி மார்க்கத்தைக் கண்டுபிடித்து, காந்திஜி தங்கியுள்ள கிராமத்துக்குச் செல்லும் வழி முதலிய விவரங்களை அறிவதற்குள் இரண்டு தினங்கள் கழித்துவிட்டன. இதற்குள் மகாத்மாவின் முதல் யாத்திரைத் திட்டம் தொடங்கப் போகிறதென்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. மேற்படி இரண்டாம் யாத்திரையின் திட்டப்படி காந்தி மகான் முதலாவதாக ஸ்ரீநகர் என்னும் கிராமத்துக்கு விஜயம் செய்வார் என்றும் கண்டிருந்தது.

ஸ்ரீநகர் கிராமத்தை அடைவது எப்படி என்று திரு. சாரியார் அவர்களை விசாரித்தேன். நண்பர் சாரியார் தம்முடைய கைகளை அகல விரித்துவிட்டு, ”எனக்குத் தெரியாதே!” என்றார். அப்போது என் முகத்தில் தோன்றிய பலவித பாவங்களை அவர் கவனித்திருக்க வேண்டும். சிறிது நேரத்துக்கெல்லாம் என் நிலைமையைக் கண்டு இரக்கப்பட்டவராய், "கவலைப்படாதீர்; பக்கத்து வீட்டில் ஒரு வங்காளி நண்பர் இருக்கிறார். அவருக்குச் சொந்த ஊர் நவகாளி ஜில்லாதான். அவர் அடிக்கடி அங்கே போய் வந்து கொண்டுமிருக்கிறார். அவரை விசாரித்தால் எல்லா விவரங்களும் தெரிந்துவிடும்" என்று தைரியமூட்டி, அந்த வங்காளி நண்பரிடம் என்னை அழைத்துப் போனார்.

எங்களைக் கண்டதும் அந்த வங்காளி நண்பர், 'ஆஷன்-போஷன்' என்று வங்காளியில் பேசினார். 'வாருங்கள்-உட்காருங்கள்' என்பதற்குத்தான் வங்காள மொழியில் ஆஷன்-போஷன் என்று சொல்லுவார்கள் என்று திரு. சாரியார் எனக்கு விளக்கம் கூறினார்.

பிறகு, "இவர் மதராஸி, நவகாளியில் காந்திஜியைப் பார்க்கச் செல்கிறார். இந்தப் பக்கத்துக்குப் புதியவர். தங்களிடம் நவகாளிக்குப் போகும் வழியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு போக வந்திருக்கிறார்" என்று அந்த வங்காளி நண்பருக்கு திரு. சாரியார் என்னை அறிமுகப்படுத்தினார்.

மகாத்மாஜி பேரைச் சொன்னதும் அந்த வங்காளிக்காரர் என்னைச் சற்று அதிசயத்துடன் பார்த்துவிட்டு வழி சொல்லலானார்.

"கல்கத்தாவிலிருந்து கோலந்தோவுக்கு ரயில் ஏறிப் போகவேண்டும். கோலந்தோவில் தயாராக நிற்கும் நீராவிப் படகில் ஏறி மக்னா, பத்மா என்ற இரு நதிகளையும் கடந்து சாந்த்பூருக்குச் செல்ல வேண்டும். சாந்த்பூரை அடைந்ததும் சிட்டகாங் எக்ஸ்பிரஸில் ஏறினால் லாக்ஸாம் என்ற ஜங்ஷன் வரும். அங்கிருந்து நவகாளி எக்ஸ்பிரஸ் கிளம்பும்; அதில் ஏறிக்கொண்டு ஸோணாய் முரி ஸ்டேஷனில் போய் இறங்கினீர்களானால் அப்புறம்..."

"அப்புறம் என்ன?... அப்புறமாவது மகாத்மா ஜியைப் பார்த்துவிடலாம் அல்லவா?" என்று குறுக்கிட்டுக் கேட்டேன்.

"அதுதானே இல்லை; ஸோணாய்முரிக்குப் போய் அங்கே யாரையாவது விசாரித்தீர்களானால் மகாத்மாஜி இருக்கும் இடத்துக்கு வழி சொல்லுவார்கள்" என்று கதையை முடித்தார் வங்காளிக்காரர்.

'அட, ஈசுவரா!' என்று பெருமூச்சு விட்டேன் நான்.

கல்கத்தாவிலிருந்து நான் மகாத்மா இருக்குமிடத்தை அடைவதற்குள் ஒருவேளை அவருடைய இரண்டாவது பிரயாணத் திட்டமும் முடிந்துவிடுமோ என்று சந்தேகம் வந்துவிட்டது.

திரு. சாரியார் என்னை, "என்ன? கிளம்புவதற்குத் தயாரா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

"ஓ, தயார் மெட்ராஸ் எக்ஸ்பிரஸ் எப்போது புறப்படுகிறது?" என்று கேட்டேன்.

ஆமாம்; வங்காளி நண்பர் வழி சொன்ன பிறகு என்னுடைய மனோநிலை ஊருக்குத் திரும்பிவிடும் நோக்கத்தில்தான் இருந்தது. ஆனாலும், முன்வைத்த காலைப் பின்வைப்பது அழகல்ல என்ற திட சங்கல்பத்துடன் நவகாளியை அடைந்தே தீருவது என்று தீர்மானம் செய்துகொண்டேன்.

எனவே, நவகாளி யாத்திரைக்காக நானும் என்னுடைய இரண்டாவது பிரயாணத் திட்டத்தைப் போட்டுக் கொண்டு மறுநாள் விடியற்காலம் புறப்படுவதற்குச் சித்தமானேன்.