நாடகத் தமிழ்/அத்தியாயம் 1


என் தாய்தந்தையர்
பம்மல். விஜயரங்க முதலியார்
பம்மல். மாணிக்கவேலு அம்மாள்
ஞாபகார்த்தமாக அச்சிடப்பட்டது

நாடகத்தமிழ்

முதல் அத்தியாயம்

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என நமது தாய் பாஷையாகிய தமிழானது, மூவகையாய் நமது முன்னோரால் பிரிக்கப்பட்டது யாவரும் அறிந்த விஷயமே. ஆயினும் சற்றேறக் குறைய நாற்பது வருடங்களுக்கு முன், நாடகத்தமிழ் என்று ஒரு பிரிவு இருந்ததோ என்றே சந்தேகிக்கும்படியான கூணதிசைக்கு நமது தாய் மொழியாகிய தமிழ்மொழி வந்துவிட்டது. அச்சமயத்தில் நாடகத் தமிழைப்பற்றி எழுதப்புகுவான் ஒருவன், இவ்வாண்டு தேசத்தில் சர்ப்பங்களைப்பற்றி எழுதப்புகுவான் ஒருவன் 'இத்தேசத் தில் சர்ப்பங்கள் இல்லை' என்று எழுதி முடித்ததைபோல், தமிழ் பாஷையில் நாம் அறிந்தவரை நாடகமே இல்லை, என்று ஒருவாறு எழுதி முடித்திருக்கலாம். இக்கஷ்ட திசைக்குத் தேனினும் இனியதெனும் நம் தமிழ் மொழி வந்ததற்கு முக்கிய காரணம் நமது பழமையான நாடகத் தமிழ் நூல்களே, ஆதரிப்பாரும் அன்புடன் கற்பாருமின்றி இறந்துபட்டதேயாகும். புராதனமான நாடக நூல்கள் பெரும்பாலும் அழிந்து போயினமையாலும், எஞ்சிநின்ற சில, அந்நூலுடையோரால், அவற்றின் அருமை தெரியாமையாலோ அல்லது வேறெக் காரணத்தினாலோ, வெளிக்குக் கொணரப்படாது மறைக்கப்பட்டமையாலும், சமஸ்கிருதம் முதலிய இதர பாஷாபிமானிகள் தமிழில் நாடகம் என்பதில்லை என்று குறைகூற இடங்கொடுத்தது. தற்காலத்தில் சில வருடங்களாக, பூர்வத்தில் பூமியின்கண் புதைக்கப்பட்ட பெரும் நிதிகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தி உலகிற்கு உபயோகப்படும்படிச் செய்பவர்களைப் போல், நமது தமிழகத்தில் ஆங்காங்கு மறைந்து மங்கிக் கிடந்த அரிய பெரிய தமிழ் நூல்களே, தம்முடைய உடல் பொருள்  ஆவியெனும் மூன்றையும் தமிழுக்கு அர்ப்பணம் செய்தது போல் உழைத்துவந்த பாஷாபிமானியும், மஹா வித்வானுமான, மஹாம ஹோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்களைப் போன்ற கல்விச் சிரோன்மணிகள் வெளிப்படுத்தி வந்தமையால் அக்குறை நீங்கலாயிற்று என்று உறுதியாய்க் கூறலாம்.

நாமறிந்தவற்றுள் நாடகத் தமிழைப்பற்றிக் கூறியுள்ள நூல்களுள் அகத்தியம் என்பதையே முற்பட்டதாகக் கொள்ளல் வேண்டும். இந்நூல் கடல் கொண்ட தென்மதுரையிலிருந்த தலைச்சங்கத்துப் புலவருள் ஒருவராகிய அகத்தியர் என்பாரால் செய்யப்பட்டதாம். இது இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கணத்தையும் அறிவிப்பதாகிய ஓர் பெரிய இலக்கண நூல். இது உரையாசிரியருட் சிறந்தோராகிய நச்சினார்க்கினியர் என்பவர் காலத்திலேயே இறந்துவிட்டதாக அறிகிறோம். பழைய உரைநூல்களில் அகத்தியத்திலுள்ள சில சூத்திரங்கள் மேற்கோளாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன. முதற்சங்கம் இடைச்சங்கமென இரண்டு சங்கங்கள் இருந்தனவோ இல்லேயோ, எங்ஙனமிருந்தும் அகத்தியமானது நாடகத்தமிழைப் பற்றி வரைந்துள்ள ஒரு மிகவும் பழைய நூல் என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை.

தொல்காப்பியர் காலத்தில் தமிழ் நாடகங்கள் இருந்தன வென்பதற்குப் பொருளதிகாரம், அகத்திணையியல் 53 வது சூத்திரத்தில் 'நாடக வழக்கினு முலகியல் வழக்கினும்" என்று கூறியிருப்பதே போதுமான அத்தாட்சியாகும். அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரப்பாயிர உரையில், நாடகத் தமிழ் நூல்களாகிய 'பரதம், அகத்தியம், முதலாவுள்ள தொன்னூல்களும் இறந்தன.” என்று கூறியுள்ளார். ஆகவே அகத்தியத்தைப்போன்ற பழமையான நாடகவிலக்கணம் கூறும் நூல் பரதம் என்று ஒன்று முற்காலத்தில் இருந்ததாக நாம் அறிகிருேம். பெயரை நோக்குமிடத்து, அகத்தியர் செய்த நூலுக்கு எப்படி அகத்தியம் என்று பெயர் வந்ததோ, அப்படியே பரதர் என்பார் செய்த நூலுக்கு பரதம் என்கிற பெயர் வந்திருக்கலாமெனத் தோற்றுகிறது, பரத சாஸ்திரம் என்கிற நாடக சம்பந்தமான ஒரு சம்ஸ்கிரத நூல் பரதர் என்பவரால் செய்யப்பட்டது ஒன்றுளது. இதை நோக்குமிடத்து, எங்ஙனம் அகத்தியர், சம்ஸ்கிருதம் தமிழ் என்னும் இரண்டு பாஷைகளிலும், வல்லுனராயிருந்து அவ்விரண்டு பாஷைகளிலும் நூல்களை இயற்றினாரோ, அங்ஙனமே பரதர் என்பவர் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் நாடக நூல்களைச் செய்திருக்கலாம் என்று கருத இடங்கொடுக்கிறது. தற்காலத்திலும் கூத்தின் ஒருவகையாகிய  நாட்டியத்திற்குத் தென் தேசத்தில் பரத நாட்டியம் என்று பெயர் வழங்குதல் இச்சந்தர்ப்பத்தில் கவனிக்கத்தக்கது.

அன்றியும் புராதன கிரந்தங்களாகிய மாபுராணம், பூதபுராணம், என்னும் நூல்களிலும் கூத்தைப்பற்றிய இலட்சணங்கள் கூறியிருப்பதாக அறிகிறோம். இவ்விரண்டு நூல்களும் அகத்தியத்தைப் போலவே முன்பே இறந்துவிட்டன. இவற்றிற்கு முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்னும் பழைய நாடகத்தமிழ் நூல்கள் இருந்தனவாக அறிகிறோம். இவைகளைப்பற்றி அடியாருக்கு நல்லார் எழுதும் பொழுது இவற்றினுள் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது, முதல், நடு, இறுதி காணாமையின் அவையும். இறந்தன போலும்” என்று அறிவிக்கின்றார். மேற்கூறியவற்றுள் செயிற்றியம் என்பது செயிற்றியனார் என்பார் ஒருவரால் செய்யப்பட்ட நூல் என்று நாம் அறிய இடமுண்டு. அப்படியே சயந்தம் என்னும் நூலும் சயந்தன் என்பவரால் எழுதப்பட்டது என்று ஊகிக்கலாம் என்று எண்ணுகிறேன். செயிற்றியம் சூத்திரமாக செய்யப்பட்டது என அறிகிறோம்.

மேற்கூறியவைகள் நீங்கலாக, உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்தில் பொன்றாது நின்ற நாடகத் தமிழ் நூல்கள் புரதசேனாதிபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என இரண்டாம் இவற்றுள் முன்னதன் ஆசிரியர் ஆதிவாயிலார் என்பார்; இது வெண்பாவாற் சேய்யப்பட்ட நூல்; பின்னது, மதிவாணனர் என்பவரால் சூத்திரப் பாவாலும் வெண்பாவாலும் செய்யப்பட்ட நூல்; இவையிரண்டும் அடியார்க்கு நல்லார் உரை எழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட நூல்கள் மதிவாணர் நாடகத்தமிழ் நூலானது கடைச்சங்கக் காலத்து பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணானர் செய்த முதல் நூல்களிலுள்ள வசைக் கூத்திற்கு, மறுதலையாகச் செய்யப்பட்ட புகழ்க் கூத்திலக்கண நூல் என்றும் அறிகிறோம். இவ்விரண்டு நாடக நூல்களும் தற்காலம் காணப்படாமையால், அடியார்க்கு நல்லார் காலத்திற்குப் பிறகு நம்முடைய துர்அதிர்ஷ்டத்தால் இறந்து போயின என்று எண்ணவேண்டியிருக்கிறது.

கூத்தநூல் என்னும் ஒரு நூலைப்பற்றி அடியாருக்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார், இதுதான் மதிவாணர் செய்த நாடகத் தமிழ் நூல் என்று காலஞ்சென்ற தமிழ் வித்வான் ஆ.சிங்காரவேலு முதலியார் அவர்கள் எண்ணுகின்றார். காலஞ்சென்ற திருமணம் செல்வகேசவராய முதலியார் அவர்கள் இது வேறு நூல், என்று கூறியுள்ளார். இவ்விரண்டில் ஒன்றை நிச்சயமாகக் கூறுவதற்கு  தமக்குப் போதுமான அத்தாட்சியில்லை. இது கடைச் சங்கத்திய நூல் என்று அறிகிறோம். இவையன்றி 'நூல்' என்னும் நாடகத் தமிழ்நூல் ஒன்று முற்காலத்தில் இருந்ததெனக் காலஞ்சென்ற வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் 'தமிழ்மொழியின் வரலாறு’ என்னும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார், சற்றேறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இருந்த தமிழ்மொழிக்குப் பூர்வக் கிரந்தமாகிய தொல்காப்பியமானது இயற்றமிழின் இலக்கணத்தைப் பற்றியே கூறும் நூலாகையால் நாடகத் தமிழைப் பற்றி அது ஒன்றும் கூறவில்லை. ஆயினும் கடகண்டு எனும் ஒரு பழைய நாடக நூலிருந்ததாகத் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் குறிக்கப்பட்டிருக்கிறது. இனி மேற் சொன்ன நாடகத் தமிழ் நூல்களில் நாடகங்களைப் பற்றி நமது முன்னோர்கள் என்ன உரைத்திருக்கின்றனர் என்று ஆராய்வோம். அப்படிச் செய்யப் புகுமுன், நமது முன்னோர் எல்லாவித ஆடல்களுக்கும் 'கூத்து’ என்பதைப் பொதுப் பெயராகவும், 'கதையைத் தழுவிவரும் நாடகம்' என்பதை அதனால் ஒரு பிரிவின் பெயராகவும், ஆண்டிருப்பதை தாம் கவனிக்கவேண்டும். அன்றியும் மேற்சொன்ன நாடக நூல்களெல்லாம், நாடக இலக்கண நூல்களே யொழிய ஒன்ருவது நாடக இலக்கிய நூல் அன்று என்பது இங்கு கவனிக்கற்பாலது. நாடக காப்பியம் என்று சொல்லப்பட்ட சிலப்பதிகாரத்தின் சிறப்புப்பாயிரத்தில் மாதவியைப் பற்றிக் கூறுமிடத்து 'நாடக மேத்தும் நாடகக் கணிகை' யென கூறப்பட்டிருக்கிறது; இதற்கு உரையாசிரியர் 'நாடகத்தை ஆடிச் சிறப்பிக்கும் கணிகை” என்று பொருள் கூறியுள்ளார். அரங்கேற்று காதையின் முதலில் இரு வகைக் கூத்து' என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார். இதற்கு அரும்பத உரையாசிரியர், 'தேசி, மார்க்கம் என இவை,’ என்று பொருள் கூறியிருக்கிறார். இதற்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதுங்கால் இருவகைக் கூத்தாவன-வசைக்கூத்து, புகழ்க் கூத்து; வேத்தியல் பொதுவியல் வரிக்கூத்து; வரிச்சாந்திக்கூத்து; சாந்திக்கூத்து வினோதக்கூத்து; ஆரியம் தமிழ்; இயல்புக்கூத்து தேசிக் கூத்து; எனப் பலவகைய இவை விரிந்த நூல்களிற் காண்க: எனக்கூறி, அதன்மேல் இருவகைக் கூத்தாவன-சாந்தியும் வினோதமும்" என வரைந்துள்ளார். மொத்தத்தில் ஆராயுங்கால், பூர்வகாலத்தில், பொருளதிகாரம் அகப்பொருள் புறப்பொருள், என்று இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டதுபோல், கூத்தானது, அகக்கூத்து புறக்கூத்து என்னும் இரண்டு பெரும் பிரிவினையுடைய தென்றும், மற்றவைகள் இதனுட் பிறந்த பாகுபாடுகள் என்றும் ஒருவாறு ஊகிக்க இடமுண்டு.

இனி மேற் குறிக்கப்பட்ட பல விதமான கூத்துக்களே எடுத்துக் கொண்டு, அவைகள் ஒவ்வொன்றைப்பற்றியும் நமது பூர்வீக ஆசிரியர்கள் கூறியதை ஆராய்வதால் அறிவதைக் கருதுவோம்.

அகக்கூத்து என்பது நாயக நாயகி பாவமாய் சிற்றின்பத்தைப் பொருளாக உடைய கூத்து எனவும் புறக்கூத்து என்பது அகத்திலடங்கிய பொருளைத் தவிர, மற்ற விஷயங்களைப்பற்றிய கூத்து எனவும் கூறலாம். அன்றியும் புறக்கூத்து முக்கியமாக வெற்றி அல்லது வீரம் பொருளாக உடையதென அறிகிறோம். அன்றியும் அகக்கூத்து முக்குண சம்பந்தமான நடிப்பு எனவும் கூறப்பட்டிருக்கிறது. இதை அகநாடகம் என்பாறுமுளர்.

அகக்கூத்திற்குரிய உருவுகள் கந்தமுதலாகப் பிரபந்தவுருவீறாக, இருபத்தெட்டென சிலப்பதிகாரத்தின் அரும்பத உரையாசிரியர் கூறியுள்ளார். கந்தம் என்பது அடிவரையுறையுடையதாய், ஒரு தாளத்தாற் புணர்ப்பதாம். பிரபந்தமென்பது அடிவரையறையின்றி பல தாளத்தாற் புணர்ப்பதாம். அகக்கூத்தானது தேசி, மார்க்கம் என நமது முன்னேரால் பிரிக்கப்பட்டது எனவும் அறிகிறோம்.

புறக்கூத்து அல்லது புறநாடகங்களுக்குரிய உருவாவன, "தேவபாணி முதலாகஅரங்கொழி செய்யுள் ஈறாகவுள்ள செந்துறை விகற்பங்களெல்லாம்" என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.

சாந்திக்கூத்து, இது அகத்தியரால் வகுக்கப்பட்ட பாகுபாடுகளில் ஒன்றாகும். இதற்கு உரையாசிரியர் 'நாயகன் சாந்தமாயாடிய கூத்து சாந்திக் கூத்தெனப்படும்' என்றார். இது முற்காலத்தில் நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டதென்றறிகிறோம். அவை சொக்கக் கூத்து, மெய்க்கூத்து, அவிநயக்கூத்து, நாடகக்கூத்து.

சொக்கக்கூத்து, சுத்த நிருத்தம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, அது பாடலுடன் கலவாமலும், அவிநயத்தை தழுவாமலும், யாதேனும் ஒரு கதையைப் பற்றியதாயில்லாமலும், இருத்தல் வேண்டும். இது நூற்றெட்டு கரணமுடைத்து என்று கூறப்பட்டிருக்கிறது.  மெய்க்கூத்தாவது மெய்த் தொழிற்கூத்தாம் ; இது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். இவை அகச்சுவை பற்றியதாதலின் அகமார்க்கம், என்றறையப்படும். அகச்சுவை, ராஜசம், தாமதம், சாத்துவிகம் என மூவகைத்து எனக் கூறப்பட்டிருக்கிறது. இப்பிரிவுகளின் பெயர்களை ஆராயுமிடத்து அவை வழங்கும் நிலங்களைப் பொறுத்ததாயிருக்கக் கூடுமெனத் தோன்றுகிறது. வடுகு என்பது வடக்குப் பிரதேசத்திலும், சிங்களம் என்பது சிங்களத் தீவிலும் பெரும்பாலும் அக்காலத்தில் வழங்கிவந்த வகையினைக் குறிப்பதாயிருக்கலாம்.

அவிநயக் கூத்தாவது கதையினத் தழுவியதாயிராது, பாடும் பாட்டிற்கு ஒத்தட்டி கைகாட்டி வல்லபஞ் செய்யும் கூத்து, எனக் கூறப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும் இப்படிப்பட்டக் கூத்திற்கு அபிநயம் பிடித்தல் என்னும் பெயர் சாதாரண வழக்கில் இருப்பது கவனிக்கத்தக்கது.

நாடகக்கூத்து-கதை தழுவிவரும் கூத்தெனக் கூறப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் நாடகம் என்னும் சொல் இதனையே குறிப்பதாகும். கூத்து என்கிற முற்காலத்தில் பல்வேறு ஆடல்களைக் குறித்த பொதுச் சொல்லானது, தற்காலத்தில் நாடகக் கூத்தினைப் பெரும்பாலும் குறிப்பதாயது கவனிக்கற்பாலது.

இச்சாந்திக் கூத்தாடுவார்க்கு "கண்ணுளர்" என்று ஒரு பெயரிருந்ததாக, சிலப்பதிகாரம் இந்திரவிழஆரெடுத்த கதையால் தெரியவருகிறது. கண்ணுள் என்பதற்கு கூத்து என்று திவகரத்தில் அர்த்தம் கூறப்பட்டிருக்கிறது. அன்றியும் அடியார்க்கு நல்லார்

"வாசிகை வைத்து, மணித் தோடணியணிந்து,
மூசிய சுண்ணம் முகத்தெழுதி;-தேசுடரே
யேந்து சுடர்வாள் பிடித்திட், டீசனுக்கும் காளிக்கும்
சாந்திக் கூத்தாடத் தகும்'

என்கிற வெண்பா ஒன்றை, மேற்கோளாகக் கூறியுள்ளார். இவ்வெண்பாவினால் சாந்திக்கூத்தானது முற்காலத்தில் எவ்வாறு ஆடப்பட்டதென ஒருவாறு அறிகிறோம் ; இக்கூத்தாடுவோர் கையில் வாள்பிடித்தாடுவர் என்பதையும், "மூசிய சுண்ணம் முகத்தெழுதி" என்பதனால், அக்காலத்திலும் நாடகமாடுவோர் முகத்தில் வர்ணம் பூசிக்கொள்கிற வழக்கமுண்டென்பதையும் கவனிக்க. மேலும் ஈசனுக்கும் காளிக்கும் சாந்திக் கூத்தாடத் தகு” மென்பதனால், உற்பாதங்கள் நேரிடுங்காலை, அவை தம்மைப் பீடியா வண்ணம், அவ்வுற்பாதங்கள் தெய்வங்களின் கோபத்தினாலுண்டாயின வெனக்கருதி. அவைகளைச் சாந்தி செய்ய அத்தெய்வங்களைக் குறித்து சாந்திக் கூத்தானது ஆடப்பட்டது என்பதையும் அறிகிறோம். தற்காலத்திலும் கிராம தேவதைகளின் கோயில்களில் உற்சவங்கள் நடக்கும்பொழுது, தெருக்கூத்து என்று சொல்லப்பட்ட நாடகங்கள் நடிக்கப்படுவது இங்கு கவனிக்கத்தக்கது. அன்றியும் மழை முதலியன இல்லாத காலத்து, மழை பெய்யவேண்டி ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய நாட்டு பழமையான ஜனங்கள் கூத்தாடுவதுபோல், நம்முடைய நாட்டிலும் முற்காலத்தில் ஓர் விதமான கூத்தாடப்பட்டதென நாம் அறிவதற்கிடமுண்டு.

விநோதக் கூத்தென்பதைப்பற்றி இனி நாம் அறிந்ததைக் கருதுவோம். வினோதக் கூத்தென்பது மொத்தத்தில் வினோதத்தின் பொருட்டு ஆடப்படும் கூத்தெனப் பொருள்படும். இது முக்கியமாக குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை, என அறுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது; இதனோடு வசைக்கூத்து யென்பதைக் கூட்டி, ஏழு பிரிவுடைத்து என்பாரும் உளர். அன்றியும் வெறியாட்டு என்பதைச் சேர்த்து ஏழு பிரிவுடைத்து என்பாருமுளர். இனி இவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி அறிந்ததைக் கருதுவோம்.

குரவை என்பது பொதுவாகக் கைகோத்தாடல் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிங்கள நிகண்டில் இதை ஓரை என்று கூறப்பட்டிருக்கிறது. அன்றியும் இதற்கு தழுவணரி என்றும் பெயருண்டு. (குறுந்தொகை). அடியார்க்கு நல்லார் குரவைக் கூத்தைப்பற்றி எழுதும்பொழுது "காமமும் வென்றியும் பொருளாக, குரவைச் செய்யுள் பாட்டாக, எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின் மரேனும் கைபிணைத் தாடுவது" என்று வரைந்துள்ளார். அன்றியும் இதை வரிக்கூத்தின் ஓர் உறுப்பாகக் கூறியுள்ளார். இதனால் குரவைக் கூத்தின் பொருள், காதல் அல்லது வெற்றியாக இருக்க வேண்டுமென்றும், இக்கூத்தானது பலர் கூடி வட்டமாக நின்று ஆடியது என்பதையும் அறிகிறோம். சிலப்பதிகாரத்தின் கதாநாயகியாகிய கண்ணகியை, வேங்கை நிழற்கண் கண்டதற்கு, உற்பாத சாந்தியாக முருகவேளை நோக்கி குறத்தியர் இக்குரவைக் கூத்தாடியதாகக் கூறப்பட்டிருப்பதால், குறத்திகள் இக்குரவைக் கூத்தாடும் வழக்க முண்டென்றும், இது உற்பாத சாந்தியாக ஆடும் வழக்கமும் உண்டென அறிகிறோம். இங்ஙனமே, குடத்துப்பால் உறையாமை முதலிய துர்ச்சகுனங்களைக் கண்டு, ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடினதாகக் கூறப்பட்டிருப்பதால், ஆய்ச்சியரும் இக்குரவைக் கூத்தாடும் வழக்கம் உண்டென்றறிகிறோம். இஃதன்றியும் இந்திரவிழ வூரெடுத்த காதையில், மறக்குலப் பெண்டிர் குரவைக் கூத்தாடியதாக அறிகிறோம். குரவைக்கூத்தில் தலைவனது வரவை வேண்டிப்பாடும் பாட்டிற்கு கொண்டுநிலை என்று பெயராம். முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை’யென இரண்டு வகை கூறப்பட்டிருக்கின்றன. குரவைக் கூத்தின் இடையே பாடும் பாட்டிற்கு பாட்டுமடை என்று பெயராம்,

கலிநடம் என்பது கழாய்க் கூத்தாம். இது மூங்கிற் கம்பத்தை பூமியில் நிறுத்தி அதன்மீது நின்றாடும் கூத்தாகும். தற்காலத்தும் தொம்பரவர் எனும் ஜாதியார் இவ்வாறு ஆடுதல் கவனிக்கற்பாலது. கழை-மூங்கில், கழைக் கூத்தாடுவோர்க்கு வேழம்பர் என்கிற ஒரு பெயர் உண்டென அறிகிறோம். இதற்கு கம்பக்கூத்து என்றும் மற்றொரு பெயர் உண்டு. இதை ஆரியக்கூத்து என்பாருமுளர்.

குடக்கூத்து என்பது குடத்தை தலைமீது சுமந்து ஆடுங்கூத்தாகும். இது சிலப்பதிகாரத்துள், ஆடல் பதினென்று என்று வகுத்தவகையில், அப்பதினென்றில் ஒன்றாம். கடலாடு காதையில் வாணன் பேரூர், மறுகிடை நடைத்து, நீணிலமளந் தோன் ஆடிய குடமும் ’’ என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்; இதற்கு அடியார்க்கு நல்லார் 'காமன்மகன் அதிருத்தனத், தன்மகள் உழைகாரணமாக, வாணன் சிறைவைத்தலின், அவனுடைய சோவென்னும் நகரவீதியிற் சென்று, நிலங்கடந்த நீணிற வண்ணன் குடம் கொண்டாடிய குடக் கூத்தும் என்று உரை எழுதியுள்ளார். இவ்வாடலில் மண்ணாலும் பஞ்ச லோகங்களிலும் ஆக்கப்பட்ட குடங்களை உபயோகித்தனர் என்பதையும் அறிகிகிறோம், தற்காலத்தும் இவ்விதமான ஆடல், ஆடி மாதத்தில் கிராம தேவதைகளின் உற்சவகாலத்தில், பூசாரிகள் தங்கள் தலைமீது குடம் (கரகம்) வைத்து ஆடுகிற வழக்கம் இருப்பதைக் காண்க.

கரணக் கூத்து என்பதற்கு அடியார்க்கு நல்லார் படிந்த வாடல் என்று வியாக்கியானம் செய்திருக்கிறார். இது ஒரு வகையான கூத்து விகற்பம் என்பது தவிர, இதற்குமேல் ஒன்றும் தெரியவில்லை. நோக்கு :-இதைப்பற்றி பாரமும், நுண்மையும் மாயமு முதலாயினவற்றை உடையது;" என்று அடியார்க்கு நல்லார் கூறியிருப்பது தவிர மற்ருென்றும் அறிகிலோம்.

தோற்பாவைக் கூத்து :- இது தோலாற் பாவைசெய்து ஆட்டுவிப்பதாம். இக்காலத்தும் சில கிராமாந்தரங்களில் இது நிகழ்வதைக் காணலாம். ஒரு வெள்ளைத்திரையை முன்னிட்டு, அதன்பின் ஒரு விளக்கினைவைத்து, இடையில் அவைகளின் நிழல் திரையிற் படும் படியாக, தோலினுற் சமைத்த பாவைகளைக் கயிறு கொண்டோ அல்லது கையினாற்பிடித்தோ, ஆட்டிக்காட்டும் வழக்கமுண்டு. மாணிக்கவாசக சுவாமிகள் உலகுய்யும்படி திருவாய் மலர்ந்தருளிய ஆநந்தமாலையில் சீலமின்றி, நோன்பின்றிச் செறிவேயின்றி யறிவின்றி, தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனே' என்று பாடியிருப்பது, இத்தோற்பாவைக் கூத்து அவர்காலத்தில் சாதாரணமாக நடைபெற்றது என்பதை அறிவிக்கின்றது. இதற்கு "நிழலாட்டம்' என்று மற்றொரு பெயர் உண்டு ; 'நிழலாட்டப்பாவை’ என்பதைக் காண்க. இதனின்றும் உற்பத்தியானது பொம்மைக்கூத்தென்று நாம் ஒருவாறு ஊகித்தறிவதற்கு இடங்கொடுக்கிறது. இது, எடுத்துக்கொண்ட நாடக பாத்திரங்களுக் கேற்றபடி, பொம்மைகளை மரத்தினாற்செய்து, ஆடையாபரணங்களே அணிவித்து, ஒரு சிறு அரங்கம் அமைத்து, அதற்குப்பின்னல் பொம்மைகளே ஆட்டுவிப்பவன் நின்று, கயிறுகளினால் இப்பொம்மைகளைப் பிடித்து, கதைக்குத் தகுந்தபடி அவைகளே ஆட்டுவிப்பதாம். அரங்கத்திற்குப் பின்புறம் கறுப்புத்திரை சாதாரணமாக இட்டுருப்பதால் பொம்மைகளை ஆட்டுவிக்கும் கறுப்புக்கயிறுகள் எதிரில் நின்று பார்ப்பவர்களுக்கு, சாதாரணமாகத் தெரியாது. இப்பொம்மைக் கூத்தானது நமது தேசத்தில் மிகவும் பழமையான காலமுதல் உண்டென்பதற்குப் போதுமான அத்தாட்சி தெய்வப் புலமை திருவள்ளுவநாயனர் தமிழ் உலகம் உய்தற்பொருட்டு இயற்றிய திருக்குறளில் இருக்கின்றது. அந்நூலில் 102 ஆவது அத்தியாயம் 10 வது குறள்

"நானகத்தில்லாரியக்க மரப்பாவை
நாணுலுயிர்மருட்டி யற்று' என்பதாம்.

இதனால் அவர் காலத்திலேயே மரத்தினாற் சமைத்த பாவைகளைக் கயிறுகொண்டு ஆட்டுவிக்கும் வழக்கம் உண்டென அறிகிறோம். இவர் காலம் இற்றைக்கு சற்றேறக்குறைய 1800 வருஷங்களுக்கு முன்பானதால், இப்பொம்மைக்கூத்து மிகவும் புராதனமானது என்பதற்குச் சந்தேகமில்லையென்று கொள்ளலாம். சமஸ்கிருத நாடகங்களில் நாடகங்களை நடத்தும் ஆசிரியனுக்கு சூத்திரதாரன் என்கிறபெயர் அமைந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. பொம்மைகளை சூத்திரங்களைக்கொண்டு எப்படி இயங்கும்படிச் செய்கிறானோ அங்ஙனமே நாடகபாத்திரங்களை ஆட்டி வைப்பவன் என்கிற பொருள் தெற்றெனவே விளங்கும். இக்கூத்திற்கு பதுமையாட்டம் என்று மற்றொரு பெயர் உண்டு. பொம்மைகளை ஆட்டுவிப்போனுக்கு எந்திரி என்று பெயர் முற்காலத்தில் 'தோற்பாவைக்கூத்தும் தொல்லே மரப்பாவை யியக்கமும்' என்று சீவக சிந்தாமணியிற் கூறியிருக்கின்றதைக் காண்க. சில வருஷங்களுக்குமுன் இப்பொம்மைக் கூத்து வழக்கத்திலிருந்தது; தோற்பாவைக் கூத்தைப்போல் இதுவும் வரவர நமது நாட்டினின்றும் மறைந்துகொண்டு வருகிறது. அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த திருவெண்காட்டடிகள் என்று பெயர் பெற்ற பட்டினத்துப் பிள்ளையார் காலத்தில் இப்பொம்மலாட்டம் இருந்ததென்பதற்கு அவர் பாடிய அடியிற்கண்ட பாட்டே சான்றாகும்.

"நாட்டமென்றே இரு சற்குருபாதத்தை நம்பு, பொம்ம
லாட்டமென்றேயிரு பொல்லா வுடலயடர்ந்த சந்தைக்
கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்க வீழ்நீ
ரோட்டமென்றேயிரு நெஞ்சே யுனக்குபதேசமிதே'

என்று திருவெண்காட்டடிகள் திருவாய் மலர்ந்திருக்கின்றனர். ஆரியப் பாவை என்பது பாவைக்கூத்து வகையிலொன்றாம்.

வசைக் கூத்து :- இது விதுடக் கூத்தாம். நகைத்திறச் சுவையினையுடையது. வசை என்பது வேத்தியல் பொதுவியல் என்று இருவகைப்படுமெனக் கூறப்பட்டிருக்கிறது. இது புகழ்க் கூத்துக்கு எதிரிடையானது. கடைச்சங்கத்துப் பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனர் செய்த முதல் நூல்களில் வசைக் கூத்தும் உண்டென்றறிகிறோம். இது சமஸ்கிரதத்தில் பிரஹசனம் என்னும் நாடகப் பிரிவினுக்கு ஒப்பாகும். வசைக் கூத்தைப்பற்றி பலவகை யுருவமும் பழித்துக் காட்டவல்லவனாதல், வசையெனப்படுமே: என்று பூர்வ நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.

வெறியாட்டு:-தெய்வமேறி ஆடுகின்ற கூத்தாகும். இது தற்காலத்தில் ஆவேசம் வந்து ஆடுகிறது என்று வழங்கப்படுகிறது. முக்கியமாக கிராமதேவதைகளின் கோயில்களில் பூசாரிகள் இந்த வெறியாட்டு ஆடுவதை நாளைக்கும் காணலாம்.

இச்சந்தர்ப்பத்தில் இந்த "எழுவகைக் கூத்தும் இழிகுலத் தோரை ஆடவகுத்தனன் அகத்தியன் தானே' என்று பூர்வாசி ரியர்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இதனால் இந்த எழு வகைப்பட்ட வினோதக் கூத்தானது, உயர்குலத்தோரின் வினோதத்திற்காக இழிகுலத்தோரால் சாதாரணமாக ஆடப்பட்டதென அறிகிறோம். இவைகள் இழிகுலத்தோராட வகுத்ததையுற்று நோக்குங்கால், உயர்குலத்தோர்க்கு இதர கூத்துகள் வகுக்கப்பட்டன என்பது தோற்றுகிறது. இச்சந்தர்ப்பத்தில் கலித்தொகையில் முதுபார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங்கூத்து" (கருங் கூத்து= இழிந்த நாடகம்) என்று கூறப்பட்டிருக்கிறது கவனிக்கத் தக்கது,

மேற்கூறிய பிரிவுகள் அன்றி, சிலப்பதிகாரத்துள் இளங்கோவடிகள் உபயோகித்திருக்கிற பல்வகைக்கூத்து’ என்னும் சொற்றொடருக்கு உரையெழுதுங்கால் அடியார்க்கு நல்லார்-பல்வகைக் கூத்தாவன-வென்றிக்கூத்து, வசைக் கூத்து, வினோதக்கூத்து முதலியன” என்று கூறியுள்ளார். இவற்றுள் வசைக்கூத்தைப் பற்றியும், வினோதக்கூத்தைப்பற்றியும் மேலே கருதினோம், எஞ்சி நின்றது வென்றிக் கூத்தாம்.

வென்றிக் கூத்து:-பகையரசரைத் தோற்கடித்து வெற்றி கொண்ட காலேயில், ஆடப்பட்ட கூத்தெனப் பொருள்படும். 'மாற்றான் ஒழுக்கமும், மன்னனுயர்ச்சியும் மேற்படக் கூறும் வென்றிக்கூத்தே' என்று கூறப்பட்டிருக்கிறது. இக்கூத்து வேற்றரசர்களே வென்ற வெற்றிக்களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று, போர்த் தலைவரோடு கைபிணைத்து ஆடப்பட்டதென்றும் அறிகிறோம். அடியார்க்கு நல்லார் இவ்வென்றிக்கூத்தைப் பற்றிக் கூறுங்காலை கொடித் தேர்வேந்தரும் குறுநிலமன்னரு முதலாக உடையோர், பகைவென்றிருந்தவிடத்து, வினோதம் கானும் கூத்தென்பதாம்' என்று உரைத்துள்ளார். அன்றியும் வென்றிக் கூத்தும் வசைக்கூத்தும் தாள இயல்புடையன என்றறிகிறோம்.

துணங்கைக்கூத்து :- என்றும் மற்றோர் வகைக்கூத்து கூறப்பட்டிருக்கிறது. முடக்கிய இருகை பழிப்புடையொற்றி துடக்கிய நடையது துணங்கையாகும்' என்று இதற்கு வியாக்கியானம் கூறப்பட்டிருக்கிறது ; இதற்கு சிங்கி யென்று வேறொரு பெயர் உண்டென அறிகிறோம். மேற்குறித்த வகைகள் அன்றி ஆரியக்கூத்து என்னும் ஓர் வகைக் கூத்தும் குறிக்கப்பட்டிருக்கிறது. இது கம்பங்களைக் கையில் பிடித்து கயிறுகளின் மீது நின்றாடும் கூத்தாகும். இது கூழைக் கூத்தின் ஒரு பகுதி போலும் ; இது முற்காலத்தில் ஆரியர் என்னும் ஜாதியார் ஆடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

சிலப்பதிகாரத்திலிருந்து சாக்கைக் கூத்து என்று ஒரு வகைக் கூத்து முற்காலத்தில் இருந்ததாக அறிகிறோம். சாக்கைக் கூத்து என்பதற்கு சாக்கையன் ஆடுங்கூத்து என்று பொருள் செய்யப்பட்டிருக்கிறது. சாக்கையன் என்பான் கோயில்களிலும் அரண்மனைகளிலும் முற்காலத்தில் பாடியாடும் ஒரு ஜாதியைச் சார்ந்தவன் என அறிகிறோம். 'கூத்தச் சாக்கையன் ஆடலின்’ எனச் சிலப்பதிகாரத்துள் வரைந்திருப்பதைக் காண்க. தற்காலத்திலும் கோயில் களில் பூஜாகாலங்களில் தேவதாசிகள் ஆடும் ஆடல் ஒருவகைத் துண்டு. ஆகவே சாக்கைக் கூத்தென்பது அதுபோன்றதாயிருக்கலாம் என ஊகிக்கலாம். அதற்கு மேல் நிச்சயமாகச் சொல்ல காரணங்களில்லை.

இனி முன்னர் கூத்துகளை வேத்தியல் பொதுவியல் என இரு வகைத்து எனக் கூறியதற்கு வேத்தியல் என்றால் வேந்தன்முன் ஆடும் கூத்தெனவும், பொதுவியல் என்றால் சாதாரண ஜனங்கள் முன் ஆடுங்கூத்தெனவும் பொருள் கொள்வர் சிலர் ; வேத்தியல் என்றது அகக்கூத்தினையும் பொதுவியல் என்பது புறக்கூத்தினையும் குறிப்பதாகும் என்பார் சிலர்.

மேற்கூறிய வகைகளன்றி கானகக்கூத்து என்றும் ஒர் வகைக் கூத்து முற்காலத்தில் இருந்ததாக அறிகிறோம். தொல்காப்பியம் பொருளதிகார உரையில் 'கானகக் கூத்தும் கழைக் கூத்தும் ஆடு பவராகச் சாதிவரையறையிலராதலின்’ என்று கூறப்பட்டிருப்பதைக் காண்க.

இன்னும் வாசாப்பு என்று ஒர்வகைக் கூத்து மத்திமகாலத்தில் இருந்ததாகத் தெரிய வருகிறது; யாழ்ப்பாணத்து அகராதியில் வாசாப்பு-ஒர்வகைக் கூத்து, என்று கூறப்பட்டிருக்கிறது. நான் குடியிருக்கும் வீட்டின் அருகாமையில் ஓர் இடத்துக்கு வாசாப்பு மேடு என்று பெயர் உண்டு. இதைப்பற்றி விசாரித்ததில் இவ்விடத்தில் அநேக வருஷங்களுக்கு முன்பாக கூத்தாடுவது வழக்கமெனத் தெரியலானேன். புதுச்சேரிக் கடுத்த ஒரு கிராமத்தில் சில வருஷங்களுக்கு முன்பாகத் தமிழில் கூத்து நடப்பதாயும் அதற்கு வாசாப்பு என்கிற பெயர் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இப் பதத்தைப்பற்றி, தமிழ் வித்வானும் நூலாசிரியருமான எனது நண்பர் கா. நமசிவாய முதலியார் இது வாசகப்பா என்னும் பதத்தின் மருவாகும் என எண்ணுகிறார், சாரங்கதர வாசகப்பா' என்னும் ஒரு நாடகத்தைப் பற்றித் தான் கேள்விப்பட்டதாக எனக்குத் தெரிவித்திருக்கிறார். ஆயினும் அந்நூல் எனக்குக் கிடைக்கவில்லை. மேற்சொன்னவைகளன்றி, பழைய நூல்களில் கொலச்சாரி, சந்திக் கூத்து, சீழ்க்கைக் கூத்து, துடிக் கூத்து, குணலை, குணாலயம், குழமணிதுரம், கூட்டை, குனிப்பு என்பவைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் : கொலச்சாரி வேட்டுவமகள் கொற்றவை யுருவைக்கொண்டு ஆடும் கூத்தாம் ; சந்திக் கூத்தென்பது திரு விழாவில் கோயிலின் முன் பெண்பாலர் ஆடுங்கூத்தாம் ; சீழ்க்கைக் கூத்தென்பது சீழ்க்கை எழுப்பி ஆடுங் கூத்தாம் ; (தற்காலமும் ஆதிதிராவிடர்கள் சவங்களைக் கொண்டு போகும் போது சீழ்க்கை அடித்துக் கொண்டும் கூத்தாடிக் கொண்டும் போகிற வழக்கம் உண்டு.) துடிக்கூத்து என்பது, முருகக் கடவுள் சப்த மாதருடன் துடிகொட்டியாடிய கூத்தாம் : குணலை என்பது ஆரவாரத்துடன் நடிக்கும் கூத்தாம் ; குணாலயம் என்பது ஒருவகை மகிழ்ச்சிக் கூத்தாம் ; குழமணி தூரம் என்பது வென்றவர் தம்மீது இரங்குமாறு தோற்றவர் பாடிக் கொண்டு ஆடும் ஓர்வகைக் கூத்தசம் : கூட்டை என்பது ஓர் வகைக் கூத்து என்பது தவிர வேறொன்றும் தெரியவில்லை. குனிப்பு என்பது ஒர்வகைக் கூத்து என்று பிங்கள நிகண்டில்கூறப்பட்டிருக்கிறது; இதைப்பற்றியும் வேறொன்றும் தெரியவில்லை.

இனி, மேற்கூறிய கூத்துகளின் இலக்கணங்களைப் பற்றி பூர்வ ஆசிரியர்கள் கூறியதைக் கருதுவோம். கூற்றின் இலக்கணங்கள் அறுவகை நிலையும், ஐவகைப்பாதமும், ஈரெண்வகைய அங்கக் கிரியையும் வருத்தனே நான்கும் நிருத்தக்கை முப்பதும்'’ எனக் கூறி, இவை விரிப்பிற் பெருகும் என முடித்துளார் அடியார்க்கு நல்லார். மேற்கண்டவை இன்ன இன்ன என்று சுத்தாந்தப் பிரகாச மென்னும் பழய தமிழ் பரத நூலில் விரித்துக் கூறியுளது, அடியிற் கண்டவாறு.

அறுவகை நிலை-வைணவம், சமநிலை, வைசாகம், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம்.

ஐவகைப் பாதம்-சமநிலை, உற்கடிதம், சஞ்சாரம், காஞ்சிதம், குஞ்சிதம். அங்கக்கிரியை பதினாறு-சரிகை, புரிகை, சமகலி, திரிகை, ஊர்த்துவகலிகை, பிருட்டகம், அர்த்தபிருட்டகம், சுவத்திகம், உல்லோலம், குர்த்தனம், வேட்டனம், உபவேட்டனம், தானபதப் பிராயவிருத்தம், உக்ஷேபணம், அவக்ஷேபணம், நிகுஞ்சம்.

வருத்தனை நான்கு :- அபவேட்டிதம், உபவேட்டிதம், வியாவர்த்திதம், பராவர்த்திதம்,

கிருத்தக்கை முப்பது:-'சதுரச்சிரம், உத்துவீதம், தலமுகம், சுவத்திகம், விப்பிரகீர்னம், அருத்தரேசிதம், அராள கடகாமுகம், ஆவித்துவத்திரம், சூசிமுகம், இரேசிதம், உத்தான வஞ்சிதம், பல்லவம், நிதம்பம், கசதத்தம், இலதை, கரிக்கை பக்கவஞ்சிதம் பக்கப் பிரதியோகம், கருட்டக்கம், தண்டபக்கம், ஊர்த்துவமண்டலி, முட்டிகச் சுவத்திகம், நளினி,பதுமகோசம், அலுபதுமம், உற்பணம், பக்கமண்டலி, உரோமண்டலி, உரப்பார்சுவார்த்தமண்டலி, இலளிதை, வலிதை ; இதைத்தசன் சம்ஸ்கிருத பரத சாஸ்திரத்தில் : 'ஹஸ்தம்' என்று கூறப்பட்டிருக்கிறது. இன்னின்ன ஹஸ்தத்திற்கு இன்னின்ன பொருள் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி அறிய விரும்புவோர் அப் பரதசாஸ்திரத்தில் கண்டு கொள்க.

மேற்கூறிய இலட்சணங்கள் ஒவ்வொன்றும் இன்னது இன்னது என்று இவ்விடம் கூறப் புகிற்பெருகுமாதலால், அவைகளைப்பற்றி ஆராய விரும்புவோர் சுத்தானந்த பிரகாசநூலில் கண்டு கொள்ளும்படி விடுத்தேன். ஆயினும் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு, அதாவது மேற்கூறிய பகுதிகளெல்லாம் பெரும்பாலும் சம்ஸ்கிருதமொழிகளாலும், சம்ஸ்கிருத சொற்றொடர்களாலும், கூறப்பட்டுள்ளன என்பதேயாம்,

மேலும் கூத்துகளின் விலக்குறுப்புகள் பதினான்கு வகைப்படுமென அறிகிறோம். அவை ; பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதமாம்.

இவற்றுள் பொருள் என்பது நான்கு வகைத்தாம் ; அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம். இதையே சம்ஸ்கிருதத்தில் தர்மார்த்தகாம மோட்சம் என்று கூறப்பட்டிருக்கிறதைக் காண்க. இவை நாடகத்திற் பிரிந்தும் கூடியும் வருங்கால் பெயர் வேறுபடும்' எனக் கூறியுள்ளார் அடியார்க்கு நல்லார். அங்ஙனம் வருங்கால். நாடகம், பிரகரணப் பிரகரணம், அங்கம் எனப் பெயர் பெறும் என்று மதிவாணனார் நூலினின்றும் அறிகிறோம். இந்நான்கு வகைப்பட்ட பொருள்களைப்பற்றிக் கூறும்பொழுது, செயிற்றியனார், 'அறம் பொருள் இன்பம்' அரசர் ஜாதியெனவும், 'அறம் பொருள்' வணிகர் ஜாதியெனவும்,'அறம்' சூத்திர ஜாதியெனவும் வகுத்துள்ளார். அதனின்றும் 'அறம் பொருள் இன்பம் வீடு நான்கும் சேர்த்து வரும் பொழுது பிராம்மண ஜாதியென்பது அவர் கருத்தென்று ஊகிப்பதற்கு இடங்கொடுக்கிறது.

யோனி:-என்பது நான்கு வகைத்தாகும். அவை-உள்ளோன் தலைவனாக உள்ளதோர் பொருண் மேற்செய்தலும், இல்லோன் தலைவனாக உள்ளதோர் பொருண்மேற்செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற்செய்தலும், இல்லோன் தலைவனாக இல்லாதோர் பொருண்மேற்செய்தலும்' என்று அடியார்க்கு நல்லார் வரைந்துள்ளார்.

விருத்தி: நான்கு வகைத்து அவை (1) சாத்துவதி-அறம் பொருளாகவும், தெய்வ மானிடர் தலைவராகவும் வருகிறது. (2) ஆரபடி- பொருள் பொருளாகவும், வீரராகிய மானிடர் தலைவராகவும் வருவது. (3) கைசிகி :-காமம் பொருளாகவும். காமுகராகிய மக்கள் தலைவராகவும் வருவது. (4) பாரதி-கூத்தன் தலைவனாக, நடன் நடி பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது.

சக்தி ஐந்து வகைத்தாம் :-முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு துய்த்தல் என இந்த ஐந்து சந்தியும் நாட்டியக்கட்டுரை எனக் கூறியுள்ளார் அடியார்க்கு நல்லார்.

சுவை ஒன்பதாம் :-வீரச்சுவை, பயச்சுவை, இழிப்புச்சுவை, அற்புதச்சுவை, இன்பச்சுவை, அவலச்சுவை, நகைச்சுவை, நடுவு நிலைச்சுவை, உருத்திரச்சுவை. இது சம்ஸ்கிருதத்தில் ரசம் என்பதற்கொப்பாகும். நவரசங்களென சம்ஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வொவ்வொரு சுவைக்கும் (உருத்திரச் சுவைக்குத் தவிர) தக்க அவிநயம் இன்னதெனக் கூறியிருப்பதை அடியார்க்கு நல்லார் உரையில் கண்டு கொள்க. சுவைகளைப்பற்றிக் கூறுங்காலை அடியார்க்கு நல்லார் அச்சுவைகளில் எண்ணம் வந்தால் தோற்றுமுடம்பில், உடம்பின் மிகத் தோற்றும் முகத்து, முகத்தின் மிகத் தோற்றும் கண்ணில், கண்ணின் மிகத் தோற்றும் கண்ணிற் கடையகத்து' என்று மிகவும் பொருள்பட அழகாய்க் கூறியது கவனிக்கற்பாலது. சாதி :-என்பதைப்பற்றி அடியார்க்கு நல்லார் எழுதியது நம்முடைய துரதிர்ஷ்டத்தால் கிடைக்கவில்லை. இதற்கு உரை எழுதுங்கால் நமது நல்லாசிரியராகிய மஹாமஹோபாத்யாய சுவாமிநாத ஐயர் அவர்கள், இது நாடகம், பிரகரணம், பாணம், பிரஹசனம், டிமம், வியாயோகம், சமவாகாரம் வீதி, அங்கம், ஈகாமிருகமென பத்து’ என வரைந்துள்ளார்.

குறிப்பென்பது :-சுவையின் கண் தோற்றுவது.

சத்துவமாவது-அக்குறிப்பின்கண் நிகழ்கின்ற நிகழ்ச்சி.

அவிநயம்:-என்பது கதைதழுவாதே பாட்டுகளின் பொருள் தோற்றக் கைகாட்டுவதாம். இதற்கும் நாடகம் என்பதற்கும் வித்தியாசமென்னயெனின் நாடகம் என்பது கதை தழுவிவரும் கூத்தாம்.

இது இருபத்து நான்கு வகைத்தெனக்கூறி, வெகுண்டோன், ஐயமுற்றோன், சோம்பினோன், களித்தோன், உவந்தோன், அழுக்காறுடையோன், இன்பமுற்றோன், தெய்வமுற்றோன், ஞஞ்சையுற்றோன் உடன்பட்டோன், உறங்கினோன், துயிலுணர்ந்தோன், செத்தோன், மழைபெய்யப்பட்டோன், வெயிற்றலைப்பட்டோன், நாணமுற்றோன், வருத்தமுற்றோன், கண்ணுேவுற்றோன், தலைநோவுற்றோன். அழற்றிறம்பட்டோன், சீதமுற்றோன், வெப்பமுற்றோன், நஞ்சுண்டோன், இவர்களுடைய அவிநயம் இத்தன்மைத்தெனக் கூறியுள்ளார் : அடியார்க்கு நல்லார் உரையில் இவைகளின் விவரங்களைக் கண்டு கொள்க.

ஆடல்நிகழுமிடத்து அவிநயம் நிகழாமலும்
அவிநயநிகழுங்கால் ஆடல் நிகழாமலும்
களையவேண்டுமென்று அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார்.

சொல் என்பது மூவகைத்து:-உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல்.

உட்சொல் என்பது நெஞ்சொடு கூறல், இதைத்தான் ஆங்கிலேய பாஷையில் solioquy என்பர். சம்ஸ்கிருதத்தில் ஜனாந்திகம் என்பர்.

புறச்சொல் என்பது கேட்போர்க்குரைத்தலாம்.

ஆகாயச் சொல் என்பதற்கு “தானே கூறல்' என உரை எழுதப்பட்டிருக்கிறது. இது சம்ஸ்கிருதத்தில் அசரீரி வாக்கென்பதற்கு நேராகும்.

வரி என்பது எட்டுவகையாகும் :-கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள் வரி என இவ்வரி யென்பதனைப் பல்வரிக் கூத்தென்பாருமுள, என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். வரியெனப்படுவது வகுக்குங்காலப் பிறந்ததிலனும், சிறந்த தொழிலும் அறியக்கூறி 'ஆற்றுழி வழங்கல்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

சேதம் :-ஆரியம் தமிழென இருவகைப்பட்டது. 'ஆரியம் தமிழெனும் இரண்டிலும், ஆதிக்கதையை அவற்றிற் கொப்பச் சேதித்திடுவது சேதமெனப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இளங்கோவடிகள் பல்வகைக் கூத்தும் என்று கூறியபின்னர் 'பதினோராடல்’ என்று கூறியுள்ளார். அவை இன்னவை என்று இனி ஆராய்வோம். இதற்கு அடியார்க்கு நல்லார் உரையில் 'கடைய மயிராணி, மரக்கால் விந்தை கந்தன் குடை துடிமாலல் லியமல்கும்பஞ் சுடர்விழியாற், பட்டமதன்பேடு திருப்பாவையரன் பாண்டரங்கங், கொட்டியிவை காண்ப தினோர் கூத்து” என்று கூறப்பட்டிருக்கிறது. இவை தெய்வ விருத்தியாம். இவற்றை இரண்டு கூறாகப் பிரித்துள்ளனர்; அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்ட ரங்கம், மல் ஆகிய அறுவகையை ஒரு கூறாகவும், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை என்னும் ஐந்தை ஒரு கூறாகவும்; இவைகள் அசுரரைக் கொல்ல அமரர் ஆடின என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாடல்களைப் பற்றிக் கீழ்க்குறித்த விஷயங்களையும் அறிகிறோம் :-

அல்லியம் -மாயவன் (மஹாவிஷ்ணு) ஆடியது- ஆறு உறுப்பு கொண்டது.

கொட்டி -கொடுவிடையோன் (சிவபெருமான்) ஆடியது- நான்கு உறுப்பு கொண்டது.

குடை -அறுமுகத்தோன் (முருகன்) ஆடியது- நான்கு உறுப்பு கொண்டது.

குடம் -குன்றெடுத்தோன் (கிருஷ்ணன்) ஆடியது- ஐந்து உறுப்பு கொண்டது.

பாண்டரங்கம் -முக்கண்ணன் (சிவபெருமான்) ஆடியது- ஆறு உறுப்பு கொண்டது.

மல் -நெடியவன் (மகாவிஷ்ணு) ஆடியது- ஐந்து உறுப்பு கொண்டது.

இடி -வேல் முருகன் (சுப்பிரமணியர்) ஆடினது- ஐந்து உறுப்பு கொண்டது.

கடையம் -அயிராணி (இந்திரன் மனைவி) ஆடியது- ஆறு உறுப்பு கொண்டது. பேடு -காமன் (மன்மதன்) ஆடியது- ஆறு உறுப்பு கொண்டது. மரக்கால் -மாயவள் (இலச்சுமி) ஆடியது- நான்கு உறுப்பு கொண்டது. பாவை-திருமகள் (இலட்சுமி) ஆடியது- இரண்டு உறுப்புடைத்து.

கடையம்-புற நாடகங்கள் பதினொன்றில் இஃது இறுதிக் கூத்தானமையின் இப்பெயர் பெற்றதென்பர், (உ. வே. சாமிநாதையர்).

மணிமேகலை.

மேற்கூறிய ஆடல்களைப் பற்றி நாம் அறிந்ததை இனி கருதுவோம்.அல்லியம் முதல், மல்வரையுள்ள ஆறு கூத்துகளும்,நின்றாடும் தெய்வக் கூத்து எனக் கூறப்பட்டிருக்கிறது,

அல்லியம் :- இது 'அஞ்சனவண்ணன் ஆடிய ஆடல் பத்துள், கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கோட்டை ஒசித்தற்கு நின்றாடிய’’ ஆடலாம். அல்லியம் என்பதன அலிப்பேடென்பாருமுளர் என்று அடியார்க்கு நல்லார் கூறியிருக்கின்றார்.

புறநானூற்றில் அல்லிப்பாவை'’ என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு “அல்லியக் கூத்தில் ஆட்டும் பிரதிமை” என்று பொருள் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இக்கூத்து பாவைகளைக் கொண்டும் ஆடப்பட்டது போலும்.

கொட்டி. இதற்குக் கொடுகொட்டி யென்றும் பெயர். கொடுங்கொட்டி, கொடுகொட்டியென விகாரமாயிற்றென்பர் நச்சினார்க்கினியர். அடியார்க்கு நல்லார் இதைப்பற்றி உரை எழுதுங்கால், தேவர் புரமெரிய வேண்டுதலால், வடவையெரியைத் தலையிலே யுடைய பெரிய வம்பு ஏவல் கேட்டவளவிலே அப்புரத்தில் அவுணர் வெந்து விழுந்த வெண்பலிக்குவையாகிய பாரதி அரங்கத்திலே உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று பாணி தூக்குச்சீரெனும் தாளங்களைச் செலுத்த, தேவர் யாவரினு முயர்ந்த இறைவன், சயானந்தத்தாற் கை கொட்டி நின்று ஆடிய கொடு கெட்டி யென்னு மாடல்' என்று வரைந்துள்ளார். திரிபுரம் தீமடுத் தெரியக்கண்டு இரங்காது கை கொட்டி நின்று ஆடுதலில் கொடுமையுடைத்ததால் நோக்கி கொடுகெட்டி யெனும் பெயர் வந்ததெனக் கூறியுள்ளார். இக் கொடுகெட்டி என்பது தற்காலத்தில் வழக்கில் இல்லாது பொன்றிய போதிலும் ஏழாம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்ததென திருஞான சம்பந்த சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்தினால் அறிகிறோம். ஆளுடைய பிள்ளையார் திருவெண்காட்டுத் திருப்பதிகத்தில்

'கொள்ளைக் குழைக்காதிற் குண்டைப்பூதங்
கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல'

எனப் பாடியிருப்பதைக் காண்க. இதற்குக் கொட்டிச்சேதம் என்று மற்றொரு பெயர் உண்டு. இக் கொடுகொட்டியைப் பற்றி சிலப்பதிகாரத்தில் நடுகற்காதையில் (564 பக்கம்.)

திரு நிலைச்சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்
செங்கணா யிரந்திருக் குறிப்பருளவுஞ்
செஞ்சடை சென்றுதிசை முகமலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை யொலியாது மென்முலையசையாது
வார்குழை யாடாது மணிக்கழல் அவிழா
துமையவள் ஒருதிறனாக வோங்கிய
இமையவனாடிய கொட்டிச் சேதம்'

என்று இக் கூத்தையாடும் விதத்தை விவரமாய் வர்ணித்திருக்கிறது.

குடை:- அவுணர்தாம் போர் செய்தற்கு எடுத்த படைக்கலங்களைப் போரிற்கு ஆற்றாது போகட்டு, வருத்தமுற்ற வளவிலே முருகன் தன் குடையை முன்னே சாய்த்து அதுவே ஒருமுகவெழினியாக நின்றாடியது குடைக்கூத்து' எனக் கூறப்பட்டிருக்கிறது.

குடம் :- காமன் மகன் அநிருத்தனை தன் மகள் உழைகாரணமாக வாணன் சிறைவைத்தலின், அவனுடைய சோ வென்னும் நகர வீதியிற் சென்று நிலங்கடந்த நீனிறவண்ணன் குடங்கொண்டாடியது” குடக் கூத்தெனக் கூறப்பட்டிருக்கிறது.

பாண்டரங்கம் :- வானோராகிய தேரில், நான்மறைக் கடும்பரி பூட்டி, நெடும்புறமறைத்து, வார்துகின் முடித்து கூர்முட்பிடித்து தேர்முனின்ற திசைமுகன் காணும்படி பாரதிவடிவாய இறைவன் (சிவபெருமான்) வெண்ணிற்றை அணிந்தாடியது' எனக் கூறப்பட்டிருக்கிறது.

மல் :- வாணனாகிய அவுணனை வேறற்கு மல்லணாய்ச் சேர்ந்தாரிற் சென்று அறை கூவி உடற்கரித்தெழுந்து அவனைச் சேர்ந்த வளவிலே, சடங்காகப் பிடித்து உயிர்போக நெரித்துத் தொலைத்தது' எனக் கூறப்பட்டிருக்கிறது. துடி :- கரியகடல் நடுவுநின்ற சூரனது வேற்றுருவாகிய, வஞ்சத்தை யறிந்து அவன் போரைக் கடந்த முருகன் அக்கடனடுவண், திரையே அரங்கமாக நின்று துடி கொட்டியாடியது துடிக்கூத்தென'க் கூறப்பட்டிருக்கிறது.

கடையம் :- வாணனுடைய பெரிய நகரின் வடக்குவாயிற் கண் உளதாகிய வயலிடத்தே நின்று அயிராணி என்னும் மடந்தை ஆடியது கடையமென்னு மாடல்' எனவும், கடையம் என்பது கடைசிக் கூத்தெனவும் கூறப்பட்டிருக்கிறது. அன்றியும் கடைசியர் வடிவுகொண்டு அயிராணி ஆடியதால் கடையம் எனப்பட்டது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பேடு :- பேடிக் கோலத்துடன் மன்மதன் ஆடிய ஆடலாம். "ஆண்மைத் தன்மையற்றிருந்த பெண்மைக் கோலத்தோடு காமனாடிய பேடென்னு மாடல்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது தனது மகன் அநிருத்தனைச் சிறைமீட்கக் காமன் சோ நகரத் தாடியது. இதனுறுப்புக்களை மணிமேகலையில்

“சுரியற்ருடி மருள்படு பூங்குழற்
பவளச் செவ்வாய் தவளவொண்ணகை
யொள்ளரி நெடுங்கண், வெள்ளிவெண் டோட்டுக்
கருங்கொடிப்புருவத்து மருங்குவளே பிறைநுதற்
காந்தளஞ் செங்கை யேந்திளவனமுலை
யகன்ற வல்குலந் நுண்மருங்கு
லிகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணில மளந்தோன் மகன்முன் னாடிய
பேடிக் கோலத்துப்பேடு காண்குநரும்"

எனக் கூறப்பட்டிருக்கிறது காண்க.

இந்த வேடத்திற்கு இன்னின்ன அணி ஆடை முதலிய உபயோகிக்க வேண்டுமென்று இதனால் அறிகிறோம். வட்டுடை-முழந்தாளளவாக உடுக்கும் உடை. சிலப்பதிகாரத்தில் இப்பேடியின் வர்ணனை அடியில் வருமாறு காண்க.

</poem> "சுருளிடுதாடி மருள்படு பூங்குழ லரிபரந் தொழிகிய செழுங்கயல் நெடுங்கண் வரிவெண்டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச் சூடகவரிவளே யாடமைப் பணத்தோள் வளரிள வனமுலை தளரியன் மின்னிடைப் பாடகச் சீரடி யாரியப் பேடி" </poem>

மரக்கால் :- காலிலே மரத்தைக் கட்டி வாளை யெடுத்து நின்றாடுங் கூத்தென உரையாசிரியர் இதற்கு அர்த்தம் செய்துள்ளார். அடியார்க்கு நல்லார் மரக்கான் மேனின்று வாட்கூத்தை யாடுவதாம் என உரை எழுதியுள்ளார்.

'காயும் சினத்தையுடைய அவுனர் வஞ்சத்தாற் செய்யும் கொடுந் தொழிலைப் பொருளாய் மாயோள (துர்க்கை)ல் ஆடப்பட்டது' என்றும் அவுனர் உண்மைப் போரான் வேறலாற்றாது வஞ்சத்தான் வேறல் கருதிப் பாம்பு தேள் முதலிய வாய்ப் புகுதலே யுணர்ந்து அவள் (மாயவள்) அவற்றை உழக்கிக் களைதற்கு மரக்கால் கொண்டு ஆடுதலின் மரக்காலாட'லாயிற்று எனவும் கூறப்பட்டிருக்கிறது. மரக்காலைக் கவிழ்த்து அதன்மீது நின்று ஆடும் ஆடல் போலும், மரக்காலுடன் ஆடிய துர்க்கைக்கு அம்பணத்தி என்ற பெயருண்டென அறிகிறோம். தற்காலத்தில் ஆடல் புரியும் மாதர் தட்டின் மீது நின்று ஆடும் ஆட்டம் இங்கு கவனிக்கத்தக்கது.

பாவை :- "அவுனர் வெவ்வியபோர் செய்தற்குச் சமைந்த போர்க் கோலத்தோடு மோகித்து விழும்படி, கொல்லிப் பாவை வடிவாய்ச் செய்யோளாகிய திருமகளால் ஆடப்பட்ட ஆடல்' எனக் கூறப்பட்டிருக்கிறது. மேற்கூறிய ஆடல்களுள், பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம், மூன்றும் சிவனாடல் எனக் கூறப்பட்டிருக்கிறது.

இப்பதினேராடல்களுள் ஒன்றாவது தற்கால வழக்கில் இருப்பதாகக் காணவில்லை.

கூத்துகளை அகக்கூத்து, புறக்கூத்து என்று பிரிக்குமிடத்து அகக்கூத்திற்கு கந்தமுதலாகப் பிரபந்த மீறாக இருபத்தெட்டு உருக்களும், புறக்கூத்திற்கு தேவபாணி முதல் அரங்கொழிச் செய்யுள் ஈறாக உள்ள செந்துறை விகற்பங்களும் உண்டென அறிகிறோம். இவைகள் இன்னின்னவென இதர நூல்களிற் கண்டு கொள்க.

அகக் கூத்தாடுங்கால் தேசிக்குரிய கால்கள் 24 வகையென்றும், வடுகிற்குரிய கால்கள் 14 என்றும் கூறப்பட்டிருக்கிறது.

புறக் கூத்திற்குரிய ஆடல்கள் பெருநடை, சாரியை, பிரமரி முதலாயினவென்றும் கூறப்பட்டிருக்கிறது.

பிண்டியும் பிணையலும் அகக்கூத்திற் குரியவையென்றும், எழிற்கையும் தொழிற்கையும் புறக்கூத்திற்குரிய கையென்றும் சொல்லப்பட்டிருக்கிறது,

பிண்டி என்பது ஒற்றைக் கை-இது முப்பத்துமூன்று வகைத் தாம் என்று அடியார்க்கு நல்லாரும், இருப்பது நான்கு வகையென உரையாசிரியரும் கூறியுள்ளார், பிணையல் என்பது இரட்டைக் கை-இது பதினைந்து வகைத்தாம் என அடியார்க்கு நல்லாரும், பதின்மூன்று வகையென உரையாசிரியரும் கூறியுள்ளார்.

எழிற்கை என்பது அழகு பெறக் காட்டுங் கையாம்.

தொழிற்கை :- என்பது தொழில் பெறக் காட்டுங் கையாம்.

இவைகளைப்பற்றி இன்னும் விரிவாய் அறிய விரும்புவோர் அடியார்க்கு நல்லார் உரையிலும், சுத்தானந்தப் பிரகாசமென்னும் நூலினுள்ளும் கண்டு கொள்க. இவைகளன்றி பொருட்கை என்பது ஒன்றும் கூறப்பட்டிருக்கிறது. இது பொருளுறக் காட்டுங் கையாகும்; அதாவது கவியின் பொருளை விவரித்துக் காட்டும் கையென அறிவோம். 'புறக் கூத்தினிடத்து பிண்டியென்பது பொருட்கையையும் பிணையல் என்பது தொழிற்கையையும் குறிப்பதாகும்.’’ எனவும் கூறியுள்ளார்.

அன்றியும் கூத்து நிகழுங்கால் தாளத்தோடு கூடிய பாட்டும் உடைத்தாயிருப்பது என்பது தெரிகிறது, இவற்றில் அகக்கூத்திற்குரிய தாளங்கள் இன்னின்ன வெனவும் கூறப்பட்டிருக்கிறது.

ஆகவே பூர்வ காலத்தில், தற்காலத்திலிருப்பது போல கூத்து நடக்குங்கால், வாய்ப்பாட்டும், இன்னிசைக் கருவிகளின் வாத்தியமும், தாளமும் உண்டென அறிகிறோம்.

கூத்து நிகழுங்கால் கூத்துப் பிரிவுகளுக்கமைந்த வாக்கியங்களும் உண்டென அறிகிறோம்.

முற்காலத்தில் கூத்து நிகழுங்கால் அது எப்பொழுதும் பாட்டுடனும் அவிநயத்துடனும் கூடியே நிகழ்ந்தது. தற்காலத்தில் உண்டாயிருக்கப்பட்ட கேவலம் வசன நாடகங்கள் அக்காலத்தில் கிடையா. நாடகத் தமிழானது இசைத் தமிழுடன் கூடியே யிருத்தது பூர்வ காலத்தில், தற்காலத்தில் நாடகங்கள் நடக்குங்கால் இசைக் கருவிகளுடனும் வாய்ப்பாட்டுடனுமே சேர்ந்து பெரும்பாலும் நடத்தப்படுகின்றன. ஆதிகாலத்தில் அங்ஙனமே கூத்தானது இசைக்கருவிகளுடனும் வாய்ப்பாட்டுடனும் நிகழ்ந்ததென வறிகிறோம். ஆயினும், இக்காலத்தில் மேல்நாட்டாரிடமிருந்து இத்தேசத்திற்கு வந்த ஹார்மோனியம், பிடில் முதலிய இசைக் கருவிகள் அக்காலத்திற் கிடையா. பெரும்பாலும் தமிழ் நாட்டிற்கே உரிய யாழும் குழலும் இசைக் கருவிகளாக உபயோகிக்கப்பட்டன. வாய்ப்பாட்டென்பதை நமது முன்னோர் மிடற்றுப் பாட்டு எனக் கூறியுள்ளார். அன்றியும் பாடுங்கால் கால நிர்ணயத்தைக் குறிக்கும் பொருட்டு மத்தளம் என்னும் தண்ணுமைக் கருவி உபயோகிக்கப்பட்டதென வறிகிறோம். முழவுகளின் வகைகளைப் பற்றி சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் உரையில் விரித்துரைத்திருப்பதைக் கண்டு கொள்க.

இனி நாடகமேடை என்று வழங்கும் ஆடரங்கைப் பற்றி நமது முன்னோர் கூறியுள்ளதைப்பற்றிக் கருதுவோம். இதற்கு முற்காலத்தில் தலைக்கோற்றானம் என்கிற பெயர் உண்டு. இப்பெயர் வந்ததற்குக் காரணம், பின் விவரித்துக் கூறப்போகிற தலைக்கோல் வைக்கப்பட்ட இடமாதலால்.

முதலில் சிற்ப நூலாசிரியர்கள் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை நாடக மேடை செய்ததற்கு நிலக்குற்றங்கள் நீங்கினயிடத்திலே நிலம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இன்னின்ன நிலங்கள் இதற்குத் தகாதன இன்னின்ன நிலங்கள் தக்கனவென்பதை மேற்கூறிய நூல்களில் விவரமாய்க் கண்டு கொள்க, அன்றியும் கூத்துமேடையானது ஊரின் மத்தியில் இருக்கவேண்டுமென்றும், தேரோடும் வீதிகளுக்கு எதிர்முகமாக இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இங்ஙனம் கூறியதால் நாடக மேடையானது ஊரிலுள்ள ஜனங்களெல்லாம் வந்து சேர்வதற்கு சவுகர்யமாயிருக்க வேண்டுமென்றும், பெரிய வீதிகளிற் போகும் ஜனங்களுடைய மனத்தைக் கவரும்படியான ஸ்தானத்தில் இருக்கவேண்டும் என்றும் நமது பூர்வீகர்கள் கருதினர்களெனக் கண்டறிகிறோம். உதயணன் கதையாகிய பெருங்கதையில் வத்தல காண்டத்தில் விரிசிகை வரவு குறித்த பாகத்தில் 'கூத்தாடிடமும் கொழுஞ்சுதைக்குன்றமும்” என்று குறிப்பித்திருப்பது கவனிக்கற்பாலது. அன்றியும் அவ்வரிய நூலில் உஞ்சைக் காண்டத்தில் விழாக் கொண்டது எனும் பிரிவில் வாயிற் கூத்தும் சேரிப்பாடலுங், கோயி நாடகக் குழுக்களும்” என்று கூறப்பட்டிருப்பதும் காண்க. நாடக சாலையானது இன்னின்ன இடங்களில் இருக்கக்கூடாது எனவும் கூறப்பட்டிருக்கிறது; அவை தெய்வத்தானம், அறவோர் பள்ளி, செருப்புகுமிடம், சேரி, யானைகளிருக்குமிடம், குதிரைச்சாலை, பாம்புப் புற்று நிறைந்த இடம் முதலியனவாம்.

"ஆடலும் பாடலும் கொட்டும் பாணியும்
நாடியபாங்கு சமைக்குங் காலத்
தேவர் குழாமுஞ் செபித்தபள்ளியும்
புள்ளின் சேக்கையும், புற்று நீங்கிப்
போர்க்களியானைப் புரை சாராது
மாவிற்பந்தியொடு மயங்கல் செய்யாது
செருப்புகுமிடமுஞ் சேரியு நீங்கி...”

என்று ஒரு பழைய நூலில் கூறப்பட்டிருப்பது காண்க. அரண்மனையைச் சார்ந்த நாடகவரங்கிற்குக் கூத்துப்பள்ளி என்ற பெயராம். கோயிலிலுள்ள கூத்தாடிடத்திற்குக் கூத்தம்பலம்’ எனப் பெயராம்.

பிறகு அந்நிலத்தை அளப்பதற்கு வேண்டிய கோல் இப்படிச் சமைத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளார். எங்ஙனம் எனின்-புண்ணிய மலைச்சாரல்களில் உயர வளர்ந்த மூங்கிலில் கணுவுக்கும் கணுவுக்கும் ஒரு ஜாண் இடையாக உள்ளதாய் உத்தமன் கைவிரல் இருபத்து நான்கு கொண்டதாயுள்ள கோலை நறுக்கி, கொள்ளல் வேண்டும் என்றார் பூர்வ ஆசிரியர். இதனால் அணு எட்டுக் கொண்டது இம்மி. இம்மி எட்டுக்கொண்டது எற்று, எற்று எட்டுக் கொண்டது. தெல்லு, நெல்லு எட்டுக்கொண்டது உத்தம புருஷ்னுடைய பெருவிரல் அளவெனவும் கூறியுள்ளார். இப்படி நறுக்கப்பட்ட கோலால், ஆடரங்கம் ஏழு கோல் அகலமும், எட்டுக் கோல் நிகளமும், ஒருகோல் குறட்டுயரமுடைத்தாயிருக்க வேண்டும் எனக் குறித்துள்ளார்.

இங்ஙனம் அமைத்த கூத்துமேடையின் மீது தூணங்கள் நாட்டப்பெற்றன. அத்தூணங்களுக்கு மேல் உத்தரப் பலகையானது பரப்பப்பட்டது, அன்றியும் அரங்கின்மேல் அகலத்துக்கிடப்பட்ட பலகையும் உளது. இவ்வுத்தரப் பலகைக்கும் அரங்கினிடத்து அகலுத்துக்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோல் உயர முடைத்தாயிருந்தது. இங்ஙனம் நிர்மிக்கப்பட்ட அரங்கமானது, உள்ளே புகவும் வெளியே போகவும் இரண்டு வாயில்கள் உடைத்தாயிருந்தது, நாடகமாடும் தலைமையிடத்திற்கு நாயகப்பத்தி என்று பெயராம். இந்நாடக அரங்கத்திற் கெதிராக, மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும், அவர்களைச் சூழ்ந்து சாதாரண ஜனங்கள் இருக்கும்படியான ஸ்தலமும் ஏற்படுத்தப்பட்டது. இவையன்றியும் கரந்து போக்கிடனும் கூத்தாடுபவர்கள் தங்குதற்குரிய பகுதியும் அரங்கத்தின் பக்கங்களிலிருந்தன. பிற்கூறிய இடத்துக்கு 'கண்ணுளர் குடிஞைப் பள்ளி' என்று பெயரிருந்தது. இவ்விடம் கூத்தாடுபவர்கள் வேஷம் தரிப்பதற்கும், கூத்தாடாத சமயத்தில் தங்கியிருப்பதற்கும் அமைத்த இடமாகும். சம்ஸ்கிரதத்தில் இதற்கு தேபத்தியம் என்று பெயராகும். ஆங்கிலேய பாஷையில் இதை 'கிரீன்ரூம்’ என்பார்.

அரங்கத்தின் மேல் நிலத்தில் நால்வகை வருணத்தார்க்குரிய அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்னும் பூதரையும் எழுதி யாவரும் புகழ்ந்து வணங்க வைக்கப்பட்டிருந்தது. அந் நால்வகை வருண பூதர்கள் வச்சிரதேகன், வச்சிர தந்தன், வருணன், இரத்த கேஸ்வரன் ஆம், சில பூர்வாசாரியர்கள் இவ்விடம் நந்தியென்னும் தெய்வமுமமைக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் சுத்தன் நந்தப்பிரகாசமென்னும் நூலில் மேற்கூறியவைகளுடன் 'கோவும், யானேயும், குரங்கும், பிச்சனும். பாவையும் பாங்குடைப் புருஷா மிருகமும்' எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும் காலையில் எழுந்தவுடன் யானை, குரங்கு, பிச்சன் முதலியவைகளைக் காணல் நல்லது என்று கருதப்படுவது கவனிக்கத்தக்கது: இவைகளெல்லாம் திருஷ்டி பரிஹாரமாகவும் நற்சகுனங்களாகவும் அமைக்கப்பட்டனபோலும், நாடக சாலைக்கு களரி என்றும் பெயர். களரி கூட்டுதல், களரி கட்டுதல் என்பதைக் காண்க.

மேலும் பூர்வகாலத்தில் கூத்தானது எப்பொழுதும் இராக் காலங்களிலேயே நிகழ்ந்தமையால் அரங்கத்தின்மீது விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன, அன்றியும் தூண்களின் நிழல் நாயர்பத்தியின் கண்ணும் அவையின் கண்ணும் படாதபடி பெரிய நிலை விளக்குகளாயிருந்தன என அறிகிறோம். கூத்துக்காண்போர் இருக்கைக்கு அம்பலம் என்று பெயர்.

பூர்வகாலத்தில் கூத்தாடுமரங்கத்தில் மூவகைத் திரைகள் கட்டப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது. இத்திரைகளுக்கு எழினி என்ற பெயராகும். அம்மூவகை யெழினிகள், ஒருமுகவெழினி, பொருமுகவெழினி, கரந்துவரல் எழினியாம், இடத்துரணிலையிடத்தெ உருவு திரையாக ஒருமுகவெழினியும், இரண்டு வலத்தூனிடத்தும் உருவு திரையாக பொருமுகவெழினியும், மேற்கட்டுத் திரையாகக் கரந்துவரலெழினியும் கட்டப்பட்டிருந்தன. ஒருமுக வெழினியென்பது ஒரு பக்கம் தள்ளக்கூடிய திரையாகும்; இதற்கு ஓடு படம் என்றும் பெயருண்டு. பொருமுகவெழினி என்பது இடையில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு பக்கமும் தள்ளக்கூடிய திரையாகும்; கரந்துவரல் எழினி என்பது மேலே கட்டப்பட்டு கீழ் இறங்கிவரவும் மேலே மறைந்து செல்லக்கூடியதுமான திரையாகும்; இதற்கு எந்திரவெழினியென்றும் பெயர்; அதாவது சூத்திரத்தால் எழவும் விழவும் கூடிய திரையாம். மேற்கட்டுத் திரையாய் நிற்பது ஆகாய சாரிகளாய்த் தோன்றுவார்க்கெனக் கொள்க; என்று அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். ஆகவே பூர்வகாலத்தில் நாடகங்களில் ஆகாயசாரிகளைக் குறிப்பதற்காகப் பிரத்யேகமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததென அறிகிறோம். கரந்துவரலெழினி கோலமறைந்து வருமிடத்தில் இடப்படுவதென, டாக்டர் மஹா மஹோபாத்யாயர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் கூறியிருக்கிறார், அன்றியும் ஆதிகாலத்தில் கண்டத்திரை என்றும் ஒன்றுண்டு. அது பல்வர்ணத் திரையாகும். திரையை மேலே ஏற்றுங் கயிறுக்கு சூட்சக் கயிறு என்று பெயராம். நாடகவரங்கிலிடும் திரைக்கு சவணிக்கை' என்றும் பெயர் உண்டு. பெருங்கதையில் சுருக்குக் கஞ்சிகை என்று ஒர் வகைத்திரை கூறப்பட்டிருக்கிறது. இது வேண்டிய போது சுருக்கிக்கொள்ளும் திரையாம்.

மேலும் அரங்கமானது சித்திர விதானமுடைத் தாயிருந்ததெனத் தெரிகிறோம். அன்றியும் பலவித வர்ணங்களுடைய முத்து மாலைகளால் அரங்கமானது மிகவும் அழகாய் அலங்கரிக்கப்பட்டது. மேலும் அரங்கத்தில் இன்னின்னார்க்கு இவ்வளவு இவ்வளவு இடம் உண்டெனக் குறிக்கப்பிட்டிருக்கிறது. என்ன? 'ஆடிட முக்கோல், ஆட்டுவோர்க்கொருகோல், பாடுநர்க்கொருகோல், குயிலுவர் நிலையிட மொருகோல்” என நூலிற் கூறின முறை காண்க.

கூத்து நிகழ்வதற்கு ஆரம்பத்தில் அரங்கத்தின் முன்பாகத்தில் தலைக்கோல் ஒன்றைத் தாபித்தல் பூர்வீக வழக்கமென அறிகிறோம். அத்தலைக்கோல் யாதெனில், பெரும்புகழ்படைத்த அரசர்கள் யுத்தத்தில் வெல்லப்பட்டுப் புறங்கொடுத்தக்கால், அவர்களிடமிருந்து பரிக்கப்பட்ட வெண்கொற்றக் குடைக்காம்பாம்; இது வேத்தியலுக் கமைந்ததாம். பொதுவியலுக்கு அமைந்தது மாற்றார் புனத்து வெட்டிக் கொண்டுவந்த மலையின் மூங்கிலாம். இது கண்கள்தோறும் நவமணிகளாற்கட்டி, இடை நிலங்களை பொற்றகட்டால் அலங்கரித்து, அரசன் கோயிலில் காப்பமைத்து இருத்தி இதை இந்திரன் மகன் ஜயந்தனாக எண்ணி, மந்திரவிதியாலே பூசித்துவைக்கப்பட்டதாம். இத்தகையத் தலைக்கோலை கூத்து நிகழ்வதன் முன்னர், புண்ணிய நதிகளின் நீரை பொற்குடத்திலே முகந்துவந்து நீராட்டி, புஷ்ப மாலைகள் முதலியவன சூட்டி, ஆடலாசிரியன் முதலானோர் அரங்கத்தின் கண்ணை இதனை வைப்பது பூர்வீக வழக்கம். இதனை அங்ஙனம் அரங்கத்தில் வைக்குமுன், நல்ல நாளாகப் பார்த்து, அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையின் கையில் இதைக் கொடுத்து, பல வாத்தியங்கள் முழங்க, அரசன், ஆமாத்தியர், புரோகிதர், சேனாபதி முதலியோர் சூழ்ந்து வர, வீதியின் கண் நின்ற தேரினை பிரதட்சிணம் செய்து தேர்மிசை நின்ற கவியின் கையில் இதனைக் கொடுத்து, ஊர்வலமாக வந்து அரங்கத்தில் புகுந்து இதனை அரங்கத்தின் எதிர்முகமாக வைத்தல் அக்காலத்திய வழக்கம் நாடகக் கணிகை தலைக்கோல் கொள்ளுஞான்று புண்ணிய தீர்த்தங்களின் நீரைப் பொற்குடத்திலே எடுத்துக்கொண்டு வந்து இத்தலைக்கோலே அபிஷேகம் பண்ணுவது வழக்கமாம். வேத்தியலில் வென்றிக் கூத்துக்கு இது மிகவும் பொருந்தியதாக இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இனிகூத்து நிகழுங்கால் முற்காலத்திருந்த சில வழக்கங்களைப் பற்றி ஆராய்வோம். நாடகக்கணிகை ஆடரங்கமேறுங்கால் வலக்கால் முன்வைத்து ஏறுகிற வழக்கொன்றுண்டென அறிகிறோம், இப்பொழுதும் தெய்வ பக்தியுள்ள புதிதாய் நாடக மேடையின் மீது ஏறும் நாடக பாத்திரங்கள் வலக்கால் முன்வைத்தேறுகின்றனர் என்பதை நான் அறிவேன். இது லட்சுமீகரம் என்று சொல்லுவார்கள். இப்படி வலக்கால் வைத்து அரங்கமேறிய நாடகமாது பொருமுகவெழினிக்கு நிலையிடனாக உள்ள வலப்பக்கத் தூணிடத்தே சேர்தலும் பூர்வ வழக்கமாம். அன்றியும் ஒவ்வொரு நடனும் அரங்கத்தில் முதலில் தோன்றும்போது ஒரு பாட்டைப்பாடும் வழக்கம் முற்காலத்திலுண்டு. இதற்கு 'தோற்றக்கவி அல்லது தோற்றத்தரு’ என்று பெயர். தரு என்றால் நாடகப்பாட்டைக் குறிப்பதாம்.

தோரிய மடந்தையர் (தோரியம்= கூத்து) என்னும் ஆடி முதிர்ந்தார் இடதுபக்கம் உள்ள ஒருமுகவெழினிடம் சேர்ந்திருத்தல் வழக்கமெனவும் அறிகிறோம், கூத்தாடுவதில் தேர்ந்த அரிவை யொருத்தி, வயதுசென்றமையால் அங்ஙனம் ஆட தேகசக்தி குன்றினவளாய், ஆடுதற்குச் சக்திவாய்ந்த இளையாள் ஒருத்தி அங்ஙனம் ஆட, அதைக் கண்ணுற்று ஆடுங்கால் குற்றம் ஏதேனும் நிகழ்ந்ததேல், அதனேக் கூறி அகற்றுதற்கும், குற்றமின்றி ஆடுங்கால் அதைக் கூறிப்புகழ்ந்து உற்சாகப்படுத்துவதற்கும், அரங்கத்தின் ஒருபுறமாக நிற்பது வழக்கம்போலும். தற்காலத்தும் வயது முதிர்ந்த நாடகமாடுவதிற்றேர்ந்தவர்கள் பக்கத்திரையின் பக்கத்திலிருந்து வயதுடை நாடக பாத்திரங்களை உற்சாகப்படுத்துகிற வழக்கமுண்டென்பது இங்கு கவனிக்கத்தக்கது: வாரம் பாடும் தோரியமடந்தை" என்பதற்கு வாரம் பாட்டினைப்பாடும் தோரிய மடந்தை' யெனக்கூறி, ஆடி முதிர்ந்த பின்பு, பாடன் மகளாய் ஆடன் மகளின் காலுக்கு ஒத்தளத்துப் பாடுங்கால் இடத்துரண் சேர்ந்தியலுமவள்', என்று உரை எழுதியிருக்கிறார்,

அன்றியும் கூத்து நிகழுங்கால், ஆடுவார்க்கு இடமும், பாடுவார்க்கு இடமும், ஆட்டிவைக்கும் ஆசிரியர்களுக்கு இடமும் இசைக் கருவியாளருக்கு இடமும் பிரத்யேகமாகக் குறிப்பிட்டிருக்கிறது. தற்காலத்திலிருப்பது போலவே முற்காலத்திலும் நாடக ஆரம்பத்தின் முன் தெய்வ வணக்கமான பாடல்கள் பாடப்பட்டனவென அறிகிறோம். இதற்கு அரங்கபூசை என்றும் பெயர். அப் பாடல்கள் நன்மையுண்டாவும் தீமை நீங்கவும் பாடப்பட்டன. இப் பாட்டுகள் தேவர்களைத் துதித்தலால் தேவபாணி எனும் பெயர் கொண்டன. நாடகத் தமிழில் தேவபாணியானது பெருந்தேவபாணியென்றும் சிறு தேவபாணியென்றும் இருவகைத்தாயிருந்தது. பெருந்தேவபாணி பல தேவரைத் துதிப்பதாம்; சிறு தேவபாணி வருணப்பூதரைத் துதிப்பதாம். பல தேவர் வெள்ளிய வளயலைப் போன்ற நிறத்தையுடைய வெள்ளைமூர்த்தி என்று கூறப்பட்டிருக்கிறது, அன்றியும் மாயோற்பானி என்பதும் ஒரு வகைத்தாம். இது முற்கூறிய பதினோராடற்கும் முகநிலையாகிய தேவபாணியாம். பெரும் தேவபாணியும் சிறு தேவபாணியும் மூவடி முக்கால் வெண்பாவால் இயற்றப்பட்டது. இங்கு பிற்காலத்திலும் தற்காலத்திலும் தமிழ் நாடகங்கள் ஆரம்பிக்குமுன் விக்நேஸ்வரர் துதி சரஸ்வதி துதி முதலியன செய்யும் வழக்கமானது பூர்வகாலத்தில் இல்லையென்பது கவனிக்கத்தக்கது.

இன்னும் பூர்வகாலத்தில் ஒவ்வொரு கூத்தும் நிகழும்பொழுது அதற்குரிய நடையுடை பாவனைகளுடன் நடத்தப்பட்டது என்று அறிகிறோம். மாதவி பதினோராடல் ஆடியபொழுது அவ்வவ்வாடலுக்குத் தக்க கோலமும் கொண்டாள் என்பதனாற் காண்க. அன்றியும் நாடகங்களில் ஸ்திரீகள் ஆண் மக்கள் வேடம் புனைவதும் ஆண்மக்கள் ஸ்திரீ அல்லது பேடி வேஷம் புனைவதும் தற்காலத்தைப்போல் அக்காலத்திலும் உண்டென அறிகிறோம். ஆண் சோடின என்றால் ஆண் வேடத்திற்குரிய அலங்காரமாம். சோடின என்றால் நாடக வேஷம் அல்லது அலங்காரம் நன்றாய் ஆடிய நாடகக் கணிகைக்கு அரசன் வழங்கும் பரிசு ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் எனக் கூறப்பட்டிருக்கிறது.

நாடக ஆரம்பத்தின்முன் அந்தரக் கொட்டு என்னும் ஓர் வகைக் கூத்தாடுவது வழக்கமெனச் சிலப்பதிகாரத்தினின்றும் அறிகிறோம். இது ஜனங்களின் மனதை முன்பு ரமிக்கச்செய்யும் பொருட்டு போலும். முற்காலத்தில் கூத்தாடிகள் நகைகளைப் பிறரிடமிருந்து இரவல் வாங்கிப் புனைவது வழக்கம் என அறிகிறோம். மணிமேகலையில் "ஆடுகூத்தர் அணியைபோல, வேற்றோர் அனியொடுவந்தீரோ" வெனக கூறியிருப்பதைக் காண்க.