நாடக மேடை நினைவுகள்/ஏழாம் அத்தியாயம்
பிறகு நான் மூன்றாவதாக எழுதிய நாடகம் “லீலாவதி சுலோசனா” என்பதே. இதுதான் நர்ன் எழுதிய நாடகங்களுக் கெல்லாம் மிகச் சிறந்தது என்று எனது பால்ய நண்பரும், ஹைகோர்ட் வக்கீலாகி நற்பெயரெடுத்து பிறகு ஹைகோர்ட் ஜட்ஜாகி, ராஜினாமா கொடுத்து விட்டு, இப்பொழுது அட்வகேட்டாக இருக்கும் மகா-ள-ள-ஸ்ரீ ஸ்ரீனிவாசஐயங்கார் எண்ணுகிறார். இவர் நாடகங்களைப் பரிசீலனம் பண்ணுவதில் மிகுந்த நிபுணர்; இவரை அநேக விஷயங்களில் எனது ஞானாசாரியனாகக் கொண்டு நடந்து வருகிறேன். ஆகவே இவர் புகழ்ந்ததை நான் ஒப்புக் கொள்ள வேண்டிய வனாயிருக்கிறேன். அன்றியும் இந் நாடகமானது எங்கள் சுகுண விலாச சபையில் ஏறக்குறைய 50 தடைவைக்குமேல் ஆடப்பட்டிருக்கிறது. இதர சபைகளினாலும் பன்முறை ஆடப்பட்டிருக்கிறது. என்னுடைய அனுமதியின் பேரில், எனது இன்னின்ன நாடகம் இத்தனை முறை ஆடப்பட்டிருக்கிறது என்று நான் ஒரு ஜாபிதா வைத்திருக்கிறேன்; அதன்படி இந்த லீலாவதி-சுலோசனா இதுவரையில் 336 முறை ஆடப்பட்டிருக்கிறது. எனது உத்தரவில்லாமல் எத்தனை முறை ஆடப்பட்டிருக்கிறதோ நான் அறியேன். இப்பொழுது சாதாரணமாக மற்ற சபையார் என் உத்தரவில்லாமல் என் நாடகங்களை ஆடுவது வழக்கமில்லாவிட்டாலும், பல வருஷங்களுக்கு முன் அப்படிச் செய்வது சாதாரணமாயிருந்த தென்பதற்குச் சந்தேகமில்லை. சில வருஷங்களுக்கு முன் ஒரு நாடகக் கம்பெனி மாத்திரம் இந்நாடகத்தை ஒரு வருஷத்தில் ஆறுமுறை என் உத்தரவின்றி நடித்ததாகக் கண்டு பிடித்தேன். ஆகவே மற்ற சபைகளும் நாடகக் கம்பெனிகளும் இந் நாடகத்தைக் கணக்கில்லாதபடி, பலமுறை ஆடியிருக்க வேண்டுமென்பதற்கு ஐயமில்லை.
அன்றியும் இந்த “லீலாவதி-சுலோசனா” தான் நான் முதல் முதல் அச்சிட்ட நாடகம். இதை என்னை அச்சிடும்படித் தூண்டியவர் எனதருமை நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார வர்களே. இதை 1895ஆம் வருஷம் ஜனவரி மாதம் அச்சிட்டு வெளிப்படுத்தினேன். அதற்கு முன்பாக, தமிழ் நாடகத்தை அச்சிட்டால் யார் வாங்கிப்படிப்பார்கள் என்று மிகவும் சந்தேகப்பட்டதனால், இதை அச்சிட வேண்டும் என்னும் தீர்மானம் என் மனத்தில் உதிக்கவேயில்லை . எனது நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார், “நீ எண்ணுவது தவறு, அச்சிட்டுப் பார், எத்தனை பெயர் வாங்கிப் படிக்கிறார்கள் பார்” என்று வற்புறுத்தினார். அதன் பேரில் என் தந்தையைக் கேட்டபொழுது அவரும் அப்படியே சொன்னார்.
அதன்மீது 1894ஆம் வருஷம் கடைசியில் இதை அச்சிடத் தொடங்கி 1895ஆம் வருஷம் ஜனவரி மாதம் வெளியிட்டேன். பகிரங்கமாக வெளிப்படுத்து முன், சில பிரதிகளைச் சென்னையிலுள்ள தமிழ் வித்வான்களுக்கெல்லாம் அனுப்பி அவர்களிடமிருந்து சாற்றுக் கவிகள் பெற்றேன். அவைகளை யெல்லாம் அவ்வருஷம் வெளிப்படுத்திய முதற் பதிப்பில் சேர்த்து அச்சிட்டேன். இந்த “லீலாவதி-சுலோசனா” நாடகத்தை எழுதிய பொழுது எனக்கு வயது சரியாக 20; அச்சிட்டபொழுது 22 வயதுக்குக் கொஞ்சம் குறைவே. ஏதோ சிறுவன் என்று அசட்டை செய்யாமல் எனக்குச் சாற்றுக் கவிகளையும், நற்சாக்ஷிப் பத்திரங்களையும் கொடுத்து எனக்கு ஊக்கத்தையுண்டு பண்ணின தமிழ் வித்வான்களுக்கும் தமிழ் அபிமானிகளாகிய பெரியோர்களுக்கும் அன்று முதல் இன்றுவரை என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்தி வருகிறேன். இதுதவிர அவர்களுக்கு நான் என்ன பிரதி செய்யக்கூடும்? கருணையுடன் மழை பொழிந்த மேகத்திற்கு, அதன் பலனையடைந்த நெற்பயிரானது என்ன பிரதி செய்யக்கூடும்?
மேற்குறித்தபடி சாற்றுக்கவிகள் அனுப்பியவர்களுள், எனது ஒன்பதாம் வயது முதல் எனக்கு வீட்டில் தமிழ் உபாத்தியாயராயிருந்த வரதாச்சாரியார் ஒருவர்; பச்சையப்பன் ஹை ஸ்கூலில் எனக்குத் தமிழ் உபாத்தியாயராயிருந்த முருகேச முதலியார் ஒருவர்; துரைத்தனக் கலாசாலையில் எனது தமிழ் உபாத்தியாயராயிருந்த கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் ஒருவர்; அக்காலத்தில் கிருஸ்துவக் கலா சாலையென்று பெயர் பெற்ற கல்லூரியின் தமிழ்ப் பண்டிதராகிய சின்னசாமிப் பிள்ளை என்பவர் ஒருவர்; எனக்கு வயதிற் சிறியவராயிருந்த போதிலும் தமிழில் அக்காலத்தில் பிரசித்தி பெற்ற சூரியநாராயண சாஸ்திரி ஒருவர்; இன்னும் அஷ்டாவ தானம் பூவை கலியாணசுந்தர முதலியார், திருமயிலை வித்வான் ஷண்முகம் பிள்ளை அவர்கள், கனகசபை நாயக்கர் முதலியோரும் சாற்றுக்கவிகள் எழுதி எனக்கு அன்போடனுப்பினர். இவைகள் எல்லாவற்றுள்ளும் நான் மிகுந்த அருமையாகப் பாவிப்பது, மூழ்கிப்போகக் கிடந்த தமிழ் மாதின் தௌர்ப்பாக்கிய ஸ்திதியைக் கண்டிரங்கி, கைகொடுத்துக்கரை யேற்றி, முன்பிருந்த உன்னத பதவிக்குக் கொண்டுவர, தன் ஆயுட் காலமெல்லாம், தனது முதுமையையும் கவனியாது உழைத்து வரும். மஹா மஹோபாத்தியாயர் என்கிற பட்டப் பெய்ரைப் பெற்ற, நான் தமிழ்ப் பாஷையைப்பற்றி நினைக்கும்போதும், தமிழில் ஏதாவது எழுதும்போதும், அவரது அடி பணிந்து வரும், பிரம்மஸ்ரீ வே. சாமிநாத அய்யர் எனக்கனுப்பிய சாற்றுக் கவியேயாம். இதை அந்நூலின் முகப்பில் அச்சிட்ட சாற்றுக் கவிகளில், முதலாகவே அமைத்துள்ளேன். என் மனத்திலும் அங்ஙனமே அமைத்துள்ளேன். இவருக்கு நான் செய்யத்தக்க கைம்மாறு ஒன்றுதான் இருக்கிறது. அதாவது, இவருக்கு இவர் மேற் கொண்ட பழைய தமிழ் நூல்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் இச்சையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அவரது ஆத்மதெய்வமாகிய ஸ்ரீ தியாகராஜப் பெருமான் இன்னும் பல்லாண்டு ஆயுளையும் தேகாரோக்கியத்தையும் கொடுப்பாராக என்று பிரர்த்திப்பதேயாம்.
மேற்சொன்ன சாற்றுக்கவிகளின்றி, சென்னை கலா சங்கத்தில் முதல் முதல் பி.ஏ. பட்டம் பெற்ற, “இலக்கண விளக்கம்” முதலிய அரிய பெரிய நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்திய ராவ்பஹதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களும் “மனோன்மணீயம்” என்னும் சிறந்த நாடகத்தைத் தமிழில் இயற்றிய, ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் விற்பன்னராகி தமிழ் மாது செய்த தௌர்ப்பாக்கியத்தினால் குறைந்த வயதிலேயே இறைவனடி சேர்ந்த திருவனந்தபுரம் சுந்தரம் பிள்ளை அவர்களும், இன்னும் சிலரும், ஆங்கிலத்தில் நற்சாட்சிப் பத்திரங்கள் அன்புடன் அனுப்பினர். அவற்றையும் இந்நாடகத்தின் முதற் பதிப்பில் சேர்த்து அச்சிட்டேன். கடைசியாக இந் நாடகத்தை அச்சிடும்படிக் கூறிய என் பால்ய நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார், இதற்கு ஆங்கிலத்தில் வெகுவிமரிசையாக ஒரு முகவுரை எழுதினார்.
ஏதோ ஒருவிதமாகத் தமிழ் நாடகக் கர்த்தாவாக எனக்கு ஊக்கம் என் சிறுவயதில் அளித்த மேற்சொன்ன பெரியோர்களுக்கெல்லாம் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அக்கடனைத் தீர்க்க என்னால் ஏலாது என்று ஒப்புக்கொண்டு, “இந் நாடக மேடை நினைவுகள்” மூலமாக என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.
எனக்கு அக்காலம் இருந்த பயம் முக்கியமாக ஒன்று. இந்நூலின் முகவுரையில் நான் எழுதியபடி அதுவரையில் நாடகத் தமிழ் என்பதற்கு இலக்கியங்கள் இல்லையெனவே ஒருவாறு கூற வேண்டும். அதற்குமுன் வெளிவந்த சில நாடகங்கள் பெரும்பாலும் செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டன. நான் எழுதிய இந்த லீலாவதி -சுலோசனாவோ முற்றிலும் வசன ரூபமாக எழுதப்பட்டது. இதைக் கற்றறிந்த தமிழ் உலகம் எங்ஙனம் ஏற்கும் என்னும் பீதியேயாம்.
அப் பயத்தைப் போக்கி அன்று முதல் இது வரையிலும் ஏறக்குறைய அறுபது நாடகங்களைத் தமிழில் வசனரூபமாக எழுதும்-படி அடியேனைச் செய்து வைத்த எல்லாம் வல்ல கருணையங் கடவுளின் பாதாரவிந்தங்களைப் பணிந்து, இந்த “லீலாவதி- சுலோசனா” என்னும் நாடகத்தை நான் எழுதிய கதையை இதை வாசிக்கும் என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.
இந்த “லீலாவாதி-சுலோசனா” என்னும் நாடகத்தின் கதை எப்படி என் மனத்தில் முதல் முதல் உதித்தது என்று அநேகம் நண்பர்கள் என்னைக் கேட்டிருக்கின்றனர். ஆகவே அதைச் சற்று விவரமாய் எழுதுகிறேன். எங்கள் சபையின் முதல் இரண்டு நாடகங்கள் ஆடி முடிந்தவுடன், அதன்பொருட்டு சந்தோஷக் கொண்டாட்டமாக ‘ஒரு பிக்னிக்’ (Picnic-வன போஜனம் என்று இதை ஒருவாறு கூறலாம்). வைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தோம். அதற்காகத் தக்கதோர் இடம்வேண்டுமென்று, வழக்கப்படி நான் என் தகப்பனாரைக் கேட்க, அவர், அருணாசலீஸ்வரர் பேட்டை யில் காகிமானு சேஷாசல செட்டியாருடைய பங்களாவை, எங்களுக்கு சனி ஞாயிறு இரண்டு தினங்களுக்கு வாங்கிக் கொடுத்தார். அச்சமயம் எங்கள் சபையில் சுமார் 50 அங்கத்தினர் இருந்தனர்.
சற்றேறக்குறைய இந்த 50 பெயரும் ஒரு சனிக்கிழமை சாயங்காலம் அவ்விடம் ஒருங்குசேர்ந்து மறுதினம் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் வரையில் வேடிக்கையாய்க் காலங்கழித்தோம். சனிக்கிழமை சாயங்காலம் நாங்கள் எல்லாம் அந்தப் பங்களாவின் பின்பக்கத்திலுள்ள நடைவாயிலின் சுற்றிலு முள்ள பூந்தோட்டத்தைச் சுற்றி உலாவி வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டு காலங் கழித்த பொழுது, அவ்விடமிருந்த ரோஜாச் செடியில் மலர்ந்திருந்த, என் கண்ணைக் கவர்ந்த ஒரு ரோஜாப் புஷ்பத்தைப் பறித்து, என் பக்கத்திலிருந்த என் நண்பனாகிய ஸ்ரீமான் அ. சுப்பிரமணிய ஐயருக்குக் கொடுத்தேன். இதைச் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த என் நண்பர் ஜெயராம் நாயகர், “சம்பந்தம்! அவனுக்குத்தானே கொடுத்தாய். எனக்குக் கொடுக்க வில்லையே!” என்று சொல்லி வேடிக்கையாய்ப் பொறாமை கொண்டது போல் முகத்தைச் சுளித்தார். அந்த க்ஷணம் ஒரு நாடகத்தில் இவர்களிருவரையும் இரண்டு சகோதரிகளாக அமைத்து, தங்கையின் மீது அக்காள் பொறாமை கொள்வதாக ஏற்படுத்தி இந்த ரோஜாப் பூ விருத்தாந்தத்தை அதில் ஒரு சந்தர்ப்பமாக வைத்து, எழுத வேண்டுமென்று தோன்றியது! இதுதான் இந்நாடகக் கதைக்கு என் மனத்தில் அங்குரார்ப் பணமாயது. பிறகு ஜெயராம் நாயகர் நடிக்கும் சக்திக்கேற்றபடி “லீலாவதி"யையும், அ. சுப்பிரமணிய ஐயர் நடிக்கும் சக்திக்கேற்றபடி “சுலோசனா"வையும் இரண்டு சகோதரிகளாக அமைத்து நாடகத்தை எழுத ஆரம்பித்தேன். ஸ்ரீதத்தனாகிய கதாநாயகன் வேஷம் நான் தரிக்கவேண்டுமென்று தீர்மானித்து எனது நாடகமாடும் சக்திக்கேற்றவாறு அதை அமைக்கலானேன். இப்படியே எங்கள் சபையில் அச்சமயம் நடித்த முக்கியமான ஆக்டர்களுக்கெல்லாம் இன்னின்ன வேஷம் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்து, அவரவர்களுக்கு ஒவ்வொரு நாடகப் பாத்திரத்தை அமைத்து அவர்கள் நடிக்கும் திறமைக்கேற்றபடி அந்தந்தப் பாத்திரங்களை எழுதலானேன்.
எனது நண்பராகிய ராஜகணபதி முதலியாரை நாங்களெல்லோரும் ‘நாட்டுப்புறம்! நாட்டுப்புறம்!’ என்று ஏளனம் செய்வது வழக்கம். (இவர் பிறகு கவர்ன்மென்டில் சிறந்த உத்தியோகஸ்தராய், சென்ற ஐரோப்பிய யுத்தத்தில் பிரான்ஸுதேசம் வரைக்கும் போய்த் திரும்பி வந்து பென்ஷன் வாங்கிக்கொண்டு சுவாமியின் அருளினால் சௌக்கியமாயிருக்கிறார்) இவருக்காக இந்நாடகத்தில் “சாரங்கன்” என்னும் நாட்டுப்புறத்து வழிப்போக்கன் பாத்திரம் எழுதினேன். எந்நேரமும் வேடிக்கையாய்ப் பேசி எல்லோரையும் சிரிக்கச் செய்யும் சக்தி வாய்ந்த, எனது காலஞ்சென்ற நண்பர் ம. துரைசாமி ஐயங்காருக்காக இந்நாடகத்தில் “விசித்ரசர்மா"என்னும் விதூஷகன் பாத்திரம் எழுதினேன். அவர் அக்காலம் யாராவது அவசரப்பட்டால், “அவசரப்படேல்” என்று ஒரு விதமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லி ஏளனம் செய்வார். இதையே அஸ்திவாரமாகக் கொண்டு, இந்நாடகத்தில் ‘அவசரப் படேல் சீன்’ என்று எனது நண்பர்களும் அந்நாடகத்தைப் படிப்பவர்களும் கூறும் காட்சியை எழுதி முடித்தேன். எனக்குப் பாடத் தெரியாதென்பதை இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு முன்பே நான் தெரிவித்திருக்கிறேன்; அன்றியும் அப்பொழுது எங்கள் சபையில் நன்றாய்ப் பாடத்தக்கவர் எம். வை. ரங்கசாமி ஐயங்கார் என்பதையும் தெரிவித்திருக்கிறேன். நான் பாடாத குறையைப் பூர்த்தி செய்வதற்கும் அவரது சங்கீதஞானம் சபையோர் நன்றாயனுபவிக்கும்படிக்கும், பாட்டு பாடுவதற்குப் பல சந்தர்ப்பங்களை அமைத்து, அவருக்காக “கமலாகரன்” பாத்திரத்தை எழுதலானேன். இப்படியே மற்ற அங்கத்தினர்க்கும் அவர்வர்கள் நடிக்கும் சக்திக்கேற்றவாறு நாடகப் பாத்திரங்களை அமைத்து எழுதினேன்.
“லீலாவதி - சுலோசனா” போன்ற புதிய கதையையுடைய நாடகங்களை நான் எழுதும் விதம் இப்படி என்று அறிய எனது நண்பர்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.
ஒரு புதிய நாடகத்தின் கதை என் மனத்தில் தோற்றியவுடன் பல தினங்கள் அக்கதையை என் மனத்தில் திருப்பித் திருப்பி எனக்குச் சாவகாசமிருக்கும் பொழுதெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பேன். அப்படி யோசித்து, ஒரு விதமாக இப்படி ஆரம்பித்து, இப்படி நடத்தி, இப்படி முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று தீர்மானித்தவுடன், ‘ஏ’ என்னும் அரசருக்கு, ‘பி’ என்னும் ஏக புத்திரனுண்டு . ‘சி’ என்னும் மற்றொரு அரசருக்கு, ‘டி,இ’ என்னும் இரண்டு புத்திரிகள் இருந்தார்கள். ‘ஏ’ தன் குமாரனுக்கு மணம் செய்விக்க வேண்டித் தன் மந்திரிகளுடன் ஆலோசித்து ‘எப்’ என்னும் ராயபாரியை ‘சி’ அரசரிடம் அனுப்பினார் என்று இம்மாதிரியாகக் காட்சி காட்சியாக ஒரு காகிதத்தில் குறித்து கொண்டே போவேன். இப்படிச் செய்யும் பொழுது, கதையின் போக்கில் முன்பு நான் யோசித்ததைவிட, யுக்தமானதாக ஏதாவது தோற்றினால், இதன்படி கதையை மாற்றுவேன்; பிறகு இம்மாதிரியாகக் காட்சிகளை முற்றிலும் பிரித்தானவுடன், ஏ,சி,டி முதலிய பாத்திரங்களுக்கெல்லாம் தக்கபடி யோசித்து பெயர்கள் கொடுப்பேன்; கூடியவரைக்கும் ஒவ்வொரு நாடகப் பாத்திரத்திற்கும் குணத்திற்குத் தக்கபடி பெயர்களைக் கொடுத்துக் கொண்டு போவேன். இது முடிந்த பின்தான் உட்கார்ந்து நாடகத்தை எழுத ஆரம்பிப்பேன்.
மேற் சொன்னபடி “லீலாவதி-சுலோசனா"வுக்கும், நாடகத்தின் பிரிவுகளைக் காட்சி காட்சியாக முதலில் எழுதி வைத்துக் கொண்டேன். முதல் முதல் இந்நாடகத்திற்குப் “பொறாமை” என்கிற பெயரையே கொடுக்கத் தீர்மானித்தேன். பிறகு காட்சிகளின் பிரிவுகளைக் குறித்துக் கொண்டபின் அதை மாற்றி “லீலாவதி- சுலோசனா” என்கிற பெயரைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்தேன்.
எனது இன்னொரு வழக்கமும், நாடகங்களைப் புதிதாய் எழுத விரும்பும் எனது நண்பர்கள் அறிவது நலமெனத் தோன்றுகிறது. நாடகத்தின் காட்சிகளை இவ்வாறு பிரித்துக் குறித்துக்கொண்டபின், அறிவிற் சிறந்தோர்களாகிய எனது நண்பர்களுட் சிலரை வரவழைத்து, அவர்களுக்கு நான் எடுத்துக் கொண்ட நாடகத்தின் காட்சிகளின் குறிப்பைப் படித்துக் காட்டுவேன். அதில் ஏதாவது குற்றங் குறையிருக்கிறதா என்று அவர்களைக் கேட்பேன். சங்கோசமில்லாமல் தாராளமாக அதைப்பற்றி என்னுடன் பேசும்படி வேண்டுவேன். அவர்கள் கூறும்படியான குணாகுணங்களை யெல்லாம் கவனித்து, என் சிற்றறிவிற்குப் பொருத்தமானது என்று தோற்றும்படியான விஷயங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு, அதன்படி கதையின் விவரங்களை மாற்றிக் கொள்வேன். இப்படிச் செய்வதனால் நான் பெரும்பலன் பெற்றிருக்கிறேன். எனது இளைய நண்பர்களும் இவ்வாறே செய்வார்களாயின் பெரும்பலன் அடையக் கூடும் என்று எனக்குத் தோற்றுகிறது.
இதற்கொரு உதாரணமாக இந்த “லீலாவதி-சுலோசனா” நாடகத்தின் ஒரு பாகத்தையே எடுத்துரைக்கக்கூடும். இந்த நாடகத்தின் கதையை அக்காலத்தில் எனக்கு அத்யந்த நண்பர்களாயிருந்தவர்களுள் ஒருவராகிய வாமன்பாய் (Vaman Pai) என்னும் மங்களூர் சிநேகிதர் ஒருவரிடமும் கூறிய பொழுது, நாடகத்தில் இரண்டாம் அங்கத்தில் “கைவளை” சீன் என்று வழங்கும் ஒரு காட்சியில் முக்கியமான ஓர் அம்சத்தை அவர்தான் இப்படி எழுதுவாயாயின் நன்றாயிருக்கு மென்று எடுத்துக் கூறினார். அவர் கூறியது மிகவும் சரியென ஒப்புக்கொண்டு, அப்படியே மாற்றி எழுதினேன். இவரிடமிருந்து இன்னும் சில நாடகங்களிலும் சில முக்கியமான குறிப்புகளைப் பிறகு பெற்றேன். இவர் தெய்வகடாட் சத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறார். இவர் செய்த உதவிக்காக இவருக்கு நான் இந்த “நாடக மேடை நினைவுகளின்” மூலமாக எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த “லீலாவதி-சுலோசனா” என்னும் நாடகத்தைச் சென்னையில் எழுத ஆரம்பித்த போதிலும், அதன் பெரும் பாகம், திருவனந்தபுரத்தில் எழுதும்படி நேர்ந்தது. எங்களுடைய சிறுபிராயம் முதல் பள்ளிக்கூடத்தில் வெயிற்காலத்திற்காக விடுமுறை விடும் பொழுதுதெல்லாம், வருஷா வருஷம் எங்கள் தகப்பனார் எங்களை ஒவ்வோர் ஊருக்கு அனுப்புவது வழக்கம். இதனால் நான் பெரும் பலன் அடைந்தேன் என்றே சொல்லவேண்டும். இம் மாதிரியாக என் இருபதாவது வயதுக்குள் அநேகம் ஊர்களைப் பார்த்ததனால், என் சிற்றறிவு கொஞ்சம் விசாலமடைந்ததென்றே நான் சொல்லவேண்டும். இவ்வழக்கப்படி இவ்வருஷம் எங்கள் தகப்பனார், என்னையும் என் மூத்த சகோதரர்களுள் ஒருவரையும் திருவனந்தபுரம் அனுப்பினார். இங்ஙனம் நான் திருவனந்தபுரம் போயிருந்த பொழுது, மத்தியான காலங்களில் வேறொன்றும் கவலையில்லாமல் சாவகாசம் அதிகமாயிருந்த படியால், இந்த நாடகத்தை எழுத எனக்கு மிகவும் சௌகர்யமாயிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து திரும்பி வந்தவுடன் நாடகத்தைப் பூர்த்திசெய்து, என் நண்பர்களுக்கெல்லாம், என் வழக்கப்படி அதைப் படித்துக்காட்டினேன். அவர்களெல்லோரும் மிகவும் நன்றாயிருக்கிறதெனக் கூறிக் குதூஹலத் துடன் சீக்கிரத்தில் அதை ஆடவேண்டுமென்று சொன்னார்கள். இன்னின்னாருக்கு இன்னின்ன நாடகப் பாத்திரம் என்று நான் உத்தேசித்து எழுதியபடியே, ஒரு கஷ்டமுமில்லாமல், அவரவர்களுக்கு நாடகப் பாத்திரங்களெல்லாம் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஒத்திகைகள் வெகு மும்முரமாய் மூன்று மாதம் நடத்தினோம். அன்றியும் ஒரு நாள் இரவு பூர்ண ஒத்திகையாக வைத்துக்கொண்டு, வேஷத்துடனும் சங்கீதத்துடனும் நடத்திப் பார்த்தோம். தற்காலம் சில சபைகளில், ஒத்திகைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, நாடகத்திற்காக ஹாலுக்குப் பணம் கட்டி விடுகிறார்களே அம்மாதிரியான வழக்கம் எங்கள் சபையில் அக்காலம் இல்லை. நன்றாய் ஒத்திகைகள் நடத்தி எல்லோரும் தங்கள் வசனத்தையும் பாட்டையும் சரியாகப் படித்திருக்கிறார்களா என்று கண்டறிந்து, பூர்ண ஒத்திகை ஒன்றை வைத்து, அதற்கு எல்லா அங்கத்தினரையும் வரவழைத்து அவர்களைப் பார்க்கச் சொல்லி, அவர்களெல்லாம் சரியாக இருக்கிறதென அனுமதி கொடுத்த பின்தான், ஹாலுக்குப் பணம் கட்டுகிற வழக்கம்! இந்த வழக்கத்தை எங்கள் சபையாரும் இதர சபையோர்களும் பின்பற்றி வந்தால், மிகவும் நலமாயிருக்குமெனத் தோன்றுகிறதெனக்கு.
இந்த “லீலாவதி - சுலோசனா” நாடகத்திற்குப் பாட்டுகள் எழுதிக் கொடுத்தவர், என் நண்பராகிய பண்டிட் கோபாலாச் சாரியார் அவர்கள். இவர் அக்காலம் திருவல்லிக்கேணி ஹைஸ்கூலில் தமிழ் உபாத்தியாயராக இருந்தார். இப்பொழுது வயதாகி, பென்ஷன் வாங்கிக்கொண்டு, ஸ்ரீமந் நாராயணனது கிருபையால் ஜீவந்தராயிருக்கிறார். எங்கள் பாட்டு உபாத்தியாயராயிருந்த தாயுமான முதலியார், யாதோ காரணத்தினால் எங்களோடு சச்சரவிட்டு, எங்கள் சபைக்கு வருவதை நிறுத்திவிட்டபொழுது, பாட்டுகள் கட்டுவதற் கென்ன செய்வது என்று நாங்கள் கலக்கப்பட்டிருக்கும் பொழுது, என் நண்பர் எம். வை. ரங்கசாமி ஐயங்கார் இந்த கோபாலாச்சாரியார் அவர்களை எங்கள் சபைக்கு அழைத்து வந்து, எங்களுக்கெல்லாம் தெரிவித்தார். அதன் பேரில் இந்த நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகளை எல்லாம் இவர் வெகு விமரிசையாகக் கட்டிக் கொடுத்தார், இதற்காக ஒரு ஊதியமும் பெறாமல். இப்பாட்டுகளை யெல்லாம் எனது “கீதமஞ்சரி” என்னும் புஸ்தகத்தில் அச்சிட்டிருக்கிறேன். பண்டிட் கோபாலாசாரியார் அவர்கள் அக்காலத்தில் எங்களுக்குச் செய்த உதவி மிகவும் கொண்டாடற் பாலது; “பயன் றூக்கார்ச் செய்த உதவி நயன்றூக்கினன் மைகடலிற் பெரிது” என்ற திருவாக்கின்படி, இவர் செய்த உதவிக்காக என் மனமார்ந்த வந்தனத்தை, இந்த “நாடக மேடை நினைவுகள்” மூலமாகச் செலுத்துகின்றேன்.இவர் பாட்டுகளைக் கட்டியதுமன்றி, அருகிலிருந்து எல்லோருக்கும் அப்பாட்டுகளைப்பாடும் விதத்தையும் கற்பித்தார். இந்நாடகத்தின் பாட்டுகளில், ஒன்றைப்பற்றிய சிறு நகைப்புக்கிடமான விஷயம் ஒன்றை என் நண்பர்களுக்குத்தெரிவிக்க விரும்புகிறேன். இந்நாடகத்தில் பிரதாபசீலன் பாட வேண்டிய பாட்டொன்றில் அநுபல்லவியில் “அல்லும் பகலும் சொல்லி முடியாத” என்கிற ஒரு அடி எழுதப்பட்டது. அதைப் பாடுபொழுது, பாடுபவன், சங்கீதத்தின் பூர்ணத்தின் பொருட்டு “அல்லும் பகலும் சொல்லி முடியாதரீ” என்று இழுத்தான்; சிறுவயதுக் குரும்பில் நான் “என்னடா அப்பா, அது? அல்லும் பகலும் சொல்லி முடியாதரீ! எவ்வளவு பெரிய ரீயாக இருக்கவேண்டும்!” என்று ஏளனம் செய்தேன். பாட்டை எழுதிவர் உட்பட எல்லோரும் நகைத்தும், அதைவிட்டு வேறுவிதமாகப் பாட வழியில்லாமற் போயிற்று! எங்கள் சபையில் நாங்கள் பாடும் சில பாடல்களில் இம்மாதிரியான குற்றங்கள் இன்னும் இருக்கின்றன. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் இக் குறை வராமல் எப்படிப் பாடுவது என்பது இன்றளவும் ஒரு கஷ்டமாகத்தானிருக்கிறது. இக்குறையை அகற்றும் மார்க்கம் இதைக் கண்ணுறும் சங்கீத வித்வான்கள் யாராவது அறிவிப்பார்களாயின், நானும் எங்கள் சபையாரும் மிகவும் கிருதக்ஞர்களாயிருப்போம்.
இந்த நாடகத்திற்காக நாங்கள் ஒத்திகைகள் நடத்திக் கொண்டிருந்த தறுவாயில், எங்களுக்கு நேரிட்ட ஒரு முக்கியமான கஷ்டத்தைத் தெரிவிக்க வேண்டியவனாயிருக்கிறேன். பல்லாரி சரச வினோத சபையார் சென்னையில் நாடகங்கள் ஆடியதைப் பார்த்து, எப்படி நாங்கள் சுகுண விலாச சபையை ஏற்படுத்தினோமோ, அந்தப் பிரகாரம் இன்னும் சிலர் வேறு சபைகளை ஸ்தாபிக்கத் தொடங்கினர். இம்மாதிரியாக உற்பவித்த நாடக சபைகளில் “ஓரியண்டல் டிராமாடிக் ஸொஸைடி” என்பது ஒன்று. அப்பெயர் கொண்ட சொஸைடி பல வருடங்களுக்கு முன் ஒன்றிருந்து, யாது காரணத்தாலோ அது க்ஷணத்தை அடைந்து அற்றுப் போய் விட்டது. அதன்பேரில் நாங்கள் சுகுண விலாச சபையை ஸ்தாபித்த வருஷம் வேறு சிலர் இந்த ‘ஓரியண்டல் டிராமாடிக் சொஸைடி'யை மறுபடியும் உத்தாரணம் பண்ணவேண்டுமென்று தீர்மானித்து அங்கத்தினரைச் சேர்க்க ஆரம்பித்தனர். இந்தச் சபையின் அங்கத்தினரெல்லாம் பிராமணர்களே. பிராமணர்களைத் தவிர மற்றவர்களை இந்தச் சபையில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்வதில்லையென்று ஒரு நிபந்தனை செய்து கொண்டனர். இச்சபையாரும் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நாடகங்கள் ஆட ஆரம்பித்தனர். இதன் மூலமாக அச் சபையாருக்கும் எங்கள் சபையினருக்கும் கொஞ்சம் பொறாமையுண்டானது என்று நான் ஒப்புக் கொள்ள வேண்டியதே. இதன்பேரில் இச்சபையார் எங்கள் சபையில் மிகவும் அழகாய்ப் பாடிப் பெயர் பெற்ற எம். வை. ரங்கசாமி ஐயங்கார் என்பவரை எங்கள் சபையினின்றும் நீக்கி, தங்கள் சபையில் சேர்த்துக் கொள்ளப் பிரயத்தனப் பட்டனர். இதை எப்படியாவது தடுக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு சூழ்ச்சி செய்தோம். “சுகுண விலாச சபையின் ஆக்டர்களாகிய நாங்கள் மற்ற சபைகளில் ஆக்டு செய்வதில்லை என்று பிரமாணம் செய்கிறோம்” என்று ஒரு பிரமாணக் கடிதத்தை வரைந்து அதில் நாங்கள் எல்லோரும் கையொப்பமிட்டோம். அதை மெல்ல மறுநாள் ரங்கசாமி ஐயங்காரைப் பார்த்தபொழுது, நான் அவரை ஒரு புறமாக அழைத்துக் கொண்டுபோய்ப் படித்துக் காட்டி, அவரது கையொப்பத்தையும் வாங்கிக்கொண்டேன். அன்று அவர் செய்த பிரதிக்ஞையினின்றும் அவர் தன் ஆயுள் வரை அணுவளவும் மாறவில்லை . அவரது பந்துக்கள், நண்பர்கள், ஆபீஸ் உத்தியோகஸ்தர்கள், இன்னும் பெரிய மனிதர்கள் அநேகர் அவரது மனத்தைக் கலைக்க எவ்வளவோ முயன்றும், மாறாதிருந்தார்; எவ்வளவு முயன்றும் அவர் மாறாதிருப்பதைக் கண்டு அந்தச் சபையார் கடைசியாக, சுகுண விலாச சபையில் சூத்திரர் மெம்பர்களாக இருக்கிறார்கள்; ஆகவே அவர்களே நாடகமாடும் பொழுது அவர்களுக்குப் பிராமணனாகிய நீ நமஸ்காரம் செய்யவேண்டி வந்தாலும் வரும், காலில் விழவேண்டி வந்தாலும் வரும்! ஆகையால் அதை விட்டுவிட வேண்டும் என்று அவர் தகப்பனார் மூலமாகவும் சொல்லிப் பார்த்தனர்! இதை நான் இங்குக் குறிப்பிட்டது, பிராமணர்களுக்கும் மற்ற ஜாதியாருக்கும் துவேஷம் உண்டு பண்ண வேண்டுமென்றல்ல; நான் எந்த ஜாதியாரையும் அவர்கள் ஜாதியின் பொருட்டுத் துவேஷிப்பதில்லை என்கிற விஷயம் என் நண்பர்கள் அனைவரும் அறிவார்கள்; ஆயினும் எங்கள் சபையைப் பற்றி நடந்த உண்மையையெல்லாம், என் சிறிய நண்பர்களுக்கு உள்ளது உள்ளபடி உரைத்திடல் வேண்டு மென்று நான் தீர்மானித்திருக்கிறபடியால் இதை எழுதலானேன். அன்றியும் இம்மாதிரியாக எவ்வளவோ நிர்பந்திக்கப்பட்டும், அந்த ரங்கசாமி ஐயங்கார் அணுவள வேனும் மனம் மாறவில்லை என்பதை எல்லோரும் அறியும் பொருட்டுமாம். இவரது மன உறுதியை வியந்து, இவருக்கு நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? இவர் இறந்து பல வருடங்கள் ஆயின; ஆயினும் இவர் எங்கள் சபைக்கும் எனக்கும் செய்த பேருபகாரத்திற்கு நான் செய்யத்தக்க கைம்மாறு என்னுளது? இதை எழுதும்பொழுது, என்னையு மறியாதபடி நான் கண்ணீர் விடுகின்றேனே அதுதான்!
மேற்சொன்னபடி எங்கள் சபை அங்கத்தினராகிய எம். வை. ரங்கசாமி ஐயங்காரை, மற்றொரு சபையார் வலித்துக் கொள்ளப் பார்த்தார்களே என்று அக்காலம் எனக்கு மிகவும் கோபம் பிறந்தது. அதன் மீது அச்சபையாரைத் தக்கபடி நான் கண்டிக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயது. அவ்வாறு எனக்கு எண்ணம் உண்டானது தவறு என்று இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் அப்பொழுது தோன்றவில்லை. இப்பொழுதிருக்கும் சிறிது நற்புத்தி அப்பொழுது இல்லை; யாராவது எனக்கு ஏதேனும் கெடுதி தற்காலம் செய்வதாக என் மனதுக்குட்பட்டால், இவ்வாறு ஆலோசனை செய்கிறேன் - அவர்கள் செய்தது சரியாகவாவது இருக்கவேண்டும் தப்பாகவாவது இருக்க வேண்டும். சரியாக இருந்தால் நான், அவர்கள் மீது கோபம் கொள்வது பாபமாகும்; தப்பாகவிருந்தால், பரமேஸ்வரன் தண்டிக்கிறார் என்று சும்மா இருந்து விடுகிறேன். அக்காலம் எனது யௌவனத்தின் கொழுமையில் இந்தப் புத்தி எனக்குத் தோன்றாமற் போயிற்று என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே.
மேற்கண்டபடி அச்சபையாரைக் கண்டிக்கத் தீர்மானித்தவனாய் உடனே அச்சபையார் எங்கு நாடகம் ஆடுகிறார்கள், அச்சபையின் அங்கத்தினர் யாவர் என்று அச்சபையைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அறிய முயன்றேன். சீக்கிரத்தில் அவர்கள் ஓர் ஒத்திகை நடத்துவதாக அறிந்து, எனது நண்பர் ஒருவர் மூலமாக அந்த ஒத்திகைக்கு ஒரு டிக்கட்டைப் பெற்று அந்த ஒத்திகையைப் பார்க்கப்போனேன். அச்சமயம் “பிரதாப சந்திர விலாசம்” என்னும் நாடகத்தை, எழும்பூரில் பெகன்ஸ் பீல்ட் (Beaconsfield) என்னும் நாடார் பங்களாவில் நடத்தினார்கள். எனக்கு டிக்கட் கொண்டுவந்து கொடுத்த நண்பராகிய தியாகராஜன் முதலியாரும் நானும் அன்றிரவு ஒத்திகையைப் பார்த்தோம். அதைப் பார்த்த பொழுது, அதில் அ. கிருஷ்ணசாமி ஐயர், “பிரதாப சந்திரனாக” நடித்தார். இவர்தான் பிறகு எங்கள் சபையைச் சேர்ந்து அது முதல் இதுவரையில் நூற்றுக்கணக்கான தமிழ், தெலுங்கு நாடகங்களில் முக்கிய ஸ்திரீவேஷம் தரித்து, எங்கள் சபைக்கு மிகவும் பெருமை கொண்டு வந்தவர். ஆகவே இவரைப்பற்றி சற்று விவரமாய் எழுதவேண்டியது என் கடமை என்றெண்ணி அவ்வாறு செய்கிறேன். அன்றைத் தினம் இவர் பாட்டைக் கேட்டவுடன், எனக்கு மிகவும் ஆனந்தம் உண்டாச்சுது. எப்படியாவது இவரை எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று உடனே என் மனத்தில் ரகசியமாகத் தீர்மானித்தேன்.
என்னடா, நம்முடைய சபை அங்கத்தினரொருவரை இச் சபையார் வலித்துக் கொள்ளப் பார்த்தபொழுது நாம் எவ்வளவு துயரப்பட்டோம், கோபங் கொண்டோம். அப்படித்தானே அச்சபை அங்கத்தினர் ஒருவரை நாம் வலித்துக் கொண்டால் அவர்களுக்குமிருக்கும் என்னும் யோசனை எனக்குக் கொஞ்சமாவது இல்லாமற் போயிற்று! கிருஷ்ணசாமி ஐயருடைய பாடல் என் மனத்தைக் கவர்ந்த போதிலும் அவர் ஆண் வேடம் பூண்டு நடித்தது எனக்கு அவ்வளவு திருப்திகரமாயில்லை . இவருக்கு இவர் குரலுக்கேற்றபடி, ஸ்திரீ வேடம்தான் தகுந்தது என்று என் மனத்துக்குள் தீர்மானித்தேன். ஒத்திகை முடிந்து வீட்டிற்கு வந்த மறுநாள், என் நண்பராகிய மேற்சொன்ன தியாகராஜ முதலியார் மூலமாக, கிருஷ்ணசாமி ஐயரைப் பற்றிய சமாச்சாரங்களெல்லாம் தெரிந்து கொண்டு, மறு ஞாயிற்றுக் கிழமை எங்கள் சபை ஒத்திகைக்கு அவரை அழைத்து வரச்செய்து, கிருஷ்ணசாமி ஐயருடன் கலந்து பேசி, மெல்ல அவரை எங்கள் சபை அங்கத்தினராகச் சேரும்படி யுக்தி செய்தேன். சில தினங்கள் பொறுத்து அவரும் இசைந்து அப்படியே எங்கள் சபையைச் சேர்ந்தார். அச்சமயம் நாங்கள் மேற்குறித்த “லீலாவதி- சுலோசனா” நாடகத்தின் ஒத்திகையை நடத்திக் கொண்டிருந்தோம். மற்றப் பெரிய நாடகப் பாத்திரங்களெல்லாம் மற்றவர்களுக்கு முன்பே கொடுத்துவிட்டபடியால், மிகுதியாயிருந்த ஒரு சிறு நாடகப் பாத்திரமாகிய காந்திமதி யென்னும் பாகத்தை இவருக்குக் கொடுத்தேன். அவரும் சிறுபாகமாயிருக்கிறதென்று ஆட்சேபணை செய்யாமல் ஒப்புக்கொண்டு அந்தப் பாகத்தை எழுதிக்கொண்டு, உடனே எங்களுடன் சேர்ந்து ஒத்திகை நடத்தி வந்தார். இதில் இவருக்கு இரண்டு பாட்டுகளுக்குத்தான் இடமிருந்தது. அந்த இரண்டு பாட்டுகளையும் சுறுசுறுப்புடன் கற்று மிகவும் நன்றாய் ஒத்திகைகளில் பாடிக் கொண்டிருந்தார். இவ்விடம் என் பழைய நண்பராகிய இவரிடம் அப்பொழுதே இருந்த ஒரு பெரும் நற்குணத்தை நான் எழுத வேண்டியது அதி அவசியம். முதலில் மற்றொரு சபையில் கதாநாயகனாக வேடம் தரித்திருந்த போதிலும் எங்கள் சபையைச் சார்ந்த பொழுது ஒரு சிறு நாடகப் பாத்திரத்தை நடிக்க ஒப்புக் கொண்டார்! தற்காலத்தில் நாடக மேடையில் பயிற்சி ஒன்றுமில்லாதவர்கள்கூட, ஒரு சபையில் சேர்ந்தவுடன், கதாநாயகன் அல்லது கதாநாயகி வேடம் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள்! மேலும் இவர் நல்ல சாரீரத்துடன் சங்கீதப் பயிற்சி நன்றாயடைந்தவராயிருந்தபோதிலும் இரண்டே இரண்டு பாட்டுகளைக் கொடுத்த போதிலும், போதும் என்று ஒப்புக்கொண்டு அதை நன்றாய்ப் பயின்று வந்தது, மெச்சத்தக்கது. தற்காலத்தில் இவரது சாரீரத்தில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாதவர்கள் ஒரு ஸ்திரீ வேடம் கொடுத்தால், இவ்வளவு பாட்டுதானா, இன்னும் அதிகம் வேண்டும் என்று சச்சரவிடுபவர்கள் பலரைக் கண்டிருக்கின்றேன். இந்தக் கிருஷ்ணசாமி ஐயர் எங்கள் சபையில் சற்றேறக்குறைய முப்பத்தொன்பது வருடங்களாக முக்கியமான பாகங்கள் நடித்ததைப் பற்றிப் பிறகு விஸ்தாரமாய் நான் எழுத வேண்டி வரும். ஆயினும் முதலில் மற்ற ஆக்டர்களெல்லாம் இவரிடமிருந்து கற்கவேண்டிய ஒரு முக்கியமான நற்குணத்தை நான் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். அதென்ன வென்றால், தான் எடுத்துக்கொண்ட பாத்திரத்தை நடிப்பதில் யாராவது இப்படி படித்தால் நலமாயிருக்கும் என்று கூறுவார்களானால் அதை அசட்டை செய்யாது கவனிக்கும் குணமேயாம். யார் என்ன சொன்ன போதிலும், இவர்களுக்கென்ன தெரியும், இவர்கள் என்ன நம்மைவிட அறிந்தவர்களாயென்று அவமதிக்காமல், இவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வதா என்று கர்வமும் கொள்ளாமல், அவர்கள் சொல்லுவதை மரியாதையுடன் கவனிக்கும் குணம் மிகவும் அருமையானது. இந்த நற்குணத்தை என் பழைய நண்பராகிய கிருஷ்ணசாமி ஐயர், அன்று முதல், இன்று வரை உடைத்தாயிருக்கின்றார் என்று நான் உறுதியாகச் சொல்வேன். அன்றியும் முதலில் என்னைப் பார்த்த நாள் முதல், இதுவரையில் இவர் என்னை நாடக விஷயத்தில் தனது ஆசாரியனாக மதித்து வருகிறார். அக்கௌரவத்தை ஏற்க என்னிடம் பாண்டித்யமில்லையென்று எண்ணுகிறேன். ஆயினும் அதுமுதல் இதுவரை, சபையில் தமிழில் எந்த நாடகப் பாத்திரத்தை ஆட ஒப்புக்கொண்ட போதிலும், என்னிடம் வந்து இதை எப்படி நடிப்பது என்று எல்லா விவரங்களையும் பொறுமையாகக் கேளாமற் போவதில்லை. சென்ற 1930ஆம் வருஷம் தனக்கு ஏறக்குறைய ஐம்பத்தைந்து வயதாகியும், நாடகமாடுவதில் முப்பத்தேழு வருடங்கள் பயிற்சி பெற்றவராயினும், சற்றேறக் குறைய ஐந்நூறு நாடகங்களில் நடித்தவராயினும், “கொடையாளி கர்ணன்” என்னும் என்னுடைய ஒரு நாடகத்தில், குந்திதேவியாக நடிக்க நேர்த்தபொழுது, ஒவ்வொரு வரியையும் கிரந்தகர்த்தாவாகிய நான் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்கிறேன் என்பதைக் கவனமாய்க் கேட்டு, பிறகு நடித்தார். இவரது இந்த வழக்கமானது நாடக மேடையில் பெயர்பெற வேண்டுமென்று விரும்பும் எனது இளைய நண்பர்களெல்லாம் நன்கு மதிக்கத்தக்கதென இதனை இங்கு வரையலானேன். ஆக்டர்களெல்லோரும் எவ்வளவு தான் தேர்ச்சி பெற்றவர்களாக்யிருந்தும் நாடகக் கர்த்தாவின் அபிப்பிராயத்தை முன்பு அறிந்து, பிறகே அந்நாடகத்தில் ஆடவேண்டியது அவசியமென்பது என்னுடைய உறுதியான எண்ணம்.
இந்த “லீலாவதி-சுலோசனா” நாடகமானது எங்கள் சபையாரால் 1893ஆம் வருஷம் அக்டோபர் மாதம் விக்டோரியா பப்ளிக்ஹாலில் ஆடப்பட்டது. இரவு 9 மணிக்கு ஆரம்பித்து மறுநாட்காலை 312 மணிக்கு முடித்தோம்! அக்காலத்தில் இத்தனை மணிக்குள் நாடகங்கள் முடிக்கவேண்டுமென்னும் நிபந்தனை கிடையாது. ஜீவனத்திற்காக நாடகமாடுபவர்கள், தெருக்கூத்துக்காரரைப்போல் 4 மணி வரையிலுங்கூட ஆடுவதுண்டு. இப்படி 612 மணிநேரம் இந்த நாடகம் நடந்தும் அதைப் பார்க்க வந்திருந்த ஜனங்களில் ஒருவரும் எழுந்திருந்து போகவில்லை! அன்றைத்தினம் ஏராளமான ஜனங்கள் வந்திருந்தார்கள் என்றே நான் சொல்ல வேண்டும். டிக்கெட் விற்றதனால் சபைக்கு அன்று வந்த ரொக்கம் 350 சில்லரை; இதன்றியும் எங்கள் அங்கத்தினர் ஏறக்குறைய எல்லோரும் வந்திருந்தார்கள். இந்த நாடகம் இத்தனை நாழிகை பிடித்தற்குக் காரணம், அதை முதலில் அச்சிட்டபடி ஒரு வார்த்தையும் குறைக்காமல் ஆடப்பட்டதேயாம். அச்சுக் காகிதத்தில் சுமார் 150 பக்கங்கள் அடங்கிய ஒரு நாடகத்தை ஒரு வரியும் விடாமல் ஆடுவதற்கு 612 மணி நேரம் பிடித்தது ஒரு ஆச்சரியமன்று. இதன்றியும் ஏறக்குறைய எல்லா ஆக்டர்களும் பாடினோம்! பாடினவர்களில் நானும் ஒருவன்! ராகம் தவறாமல் சுமாராகப்பாடும் சக்தி எனக்கிருந்தபோதிலும் அக்காலம் தாளம் எனக்கு நன்றாய் வராது. (இக்காலம் முற்றிலும் வராது!) அப்படித் தாளம் தவறி ஒரு பாட்டை நான் பாடியபொழுது, மேடையின் பேரில் பக்கப் படுதாவின் புறமாக நின்று கொண்டிருந்த எங்கள் கண்டக்டராகிய திருமலைப் பிள்ளை அவர்கள் காட்சி முடின்தவுடன் “சம்பந்தம், நீ நன்றாய் நடிப்பதை ஆபாசமாகப் பாட்டைப் பாடி ஏன் கெடுத்துக் கொள்கிறாய்?” என்று கேட்டார். அது முதல் நாடக மேடையின் மீது பாட்டைப் பாடுவதில்லையென்று தீர்மானம் செய்து அநேக வருஷங்கள் பாடாமலே இருந்தேன். பிறகு என் ஆருயிர் நண்பனான சி. ரங்கவடிவேலு முதலியார் வேண்டுகோளின்படி “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில் இத்தீர்மானத்தைக் கொஞ்சம் மாற்றினேன்.
அன்றைத்தினம் நாடகத்தில் சங்கீதத்தில் பெரும் கீர்த்தி பெற்றவர் எம்.வை. ரங்கசாமி ஐயங்காரே. இவர் கமலாகரன் வேஷம் பூண்டு பாடிய பாடல்கள் சபையோரனைவருடைய மனத்தையும் கவர்ந்ததென்றே நான் சொல்ல வேண்டும். இவர் பாடிய பாட்டுகளுக்கெல்லாம், ஒன்றும் விடாமல், எல்லாவற்றிற்கும் வந்திருந்த ஜனங்கள் கரகோஷம் செய்தனர் என்பது என் நினைவு. முக்கியமாக அந் நாடகத்தின் இடையில் ஒரு முக்கியமான காட்சியில், இவர் தாயுமானவர் பாடலில் தோடி ராகத்தில் “காடுங்கரையும்” என்னும் பாடலைப் பாடியது மிகவும் ரமணீயமாயிருந்ததென அனைவரும் புகழ்ந்தனர். அக்காட்சி முடிந்தவுடன், அக்காலத்தில் தமிழறிந்தவர்களுக்குள் பிரசித்தி பெற்ற பல தமிழ் நூல்களை அச்சிட்ட ராவ் பஹதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை என்னும் பெரிய மனிதர், நாகடமேடைக்குள் வந்து இப்பாட்டைப் பாடிய சிறுவன் யார் என்று விசாரித்து, என் நண்பராகிய எம். வை. ரங்கசாமி ஐயங்காரை நேராகக்கண்டு, சிலாகித்துப் போனார். இந்த “லீலாவதி - சுலோசனா” நாடகமானது அதற்கப்புறம் சற்றேறக்குறைய 50 முறை எங்கள் சபையாரால் ஆடப்பட்டிருக்கிறது. மற்றப் பாட்டுகளை யெல்லாம் மற்ற ஆக்டர்கள் எவ்வளவோ மாற்றிப் பாடியபோதிலும், இந்த “காடுங்கரையும்” என்னும் தாயுமானவர் பாடலை மாத்திரம், எந்த ஆக்டர் கமலாகரன் வேஷம் பூண்டபோதிலும், எம். வை. ரங்கசாமி ஐயங்கார் பாடிய அந்தத் தோடி ராகத்திலேயே பாடி வருகின்றனர். எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு இதர ஆக்டர்கள் செய்த கௌரவம் இதுவேயாகும். இவர் நடித்ததும் மிகவும் நன்றாயிருந்தது. என்னுடன் இந்த நாடகத்தில் கமலாகரன் வேஷம் பூண்டு அநேகர் நடித்திருக்கின்றனர். ஆயினும் இந்த வேஷத்தில் எம். வை. ரங்கசாமி ஐயங்காருக்கு இணையாக ஒருவரும் நடிக்கவில்லை என்பதே என் தீர்மானமான அபிப்பிராயம்; இந்த வேடத்திற்கு அவ்வளவு பொருத்தமானபடி அவர் பாடி நடித்தார்.
ஸ்திரீ வேஷங்களில் த. ஜெயராம் நாயகர் “லீலாவதி” யாக நடித்தது மிகவும் கொண்டாடப்பட்டது. இவருக்குப் பிற்காலம் எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் இந்த நாடகத்தில் அநேகர் இந்த “லீலாவதி” வேடம் பூண்டு நடித்திருக்கின்றனர். ஆயினும் கேவலம் வசனத்தை மாத்திரம் கருதுமிடத்து அன்றைத் தினம் இவர் லீலாவதியாக நடித்ததுபோல் மற்றொருவரும் நடித்ததில்லை என்று நான் நிச்சயமாய்க் கூறுவேன். இவர் அன்று ஒரு தரம்தான் இந்த லீலாவதியாக நடித்தார். பிறகு இவர் இந்த வேஷம் பூண்டிலர். இருந்தும் இவர் அன்றிரவு நடித்தது என் மனத்தில் இன்னும் படிந்திருக்கிறது. இவர் பிறகு இரண்டு முறை ஸ்திரீ வேடம் தரித்தபோதிலும் இவரது “லீலாவதி"க்குச் சமானமாக அவைகள் வரவில்லை. எங்கள் சபையில் முதல் அங்கத்தின ராகிய இவர் பூண்ட வேடங்களிலெல்லாம் “லீலாவதி"யே மிகச் சிறந்ததென்பதற்கு ஐயமில்லை. இப்பொழுது வயதாகி ஸ்தூல சரீரமுடையவராய்க் கேசம் நரைத்தவராயிருக்கும் இவரைப்பார்க்கும் என் இளைய நண்பர்கள், இவரா ‘லீலாவதி'யாக நடித்தார் என்று ஆச்சரியப்படக்கூடும். அப்பொழுது மெல்லிய ரூபமுடையவராயிருந்தார். ஸ்திரீ பாவத்தை நன்றாயறிந்து முக்கியமாக “லீலாவதி"யின் குணத்தை ஆராய்ந்தறிந்து பார்த்தவர்கள் யாவரும், இந்த “லீலாவதி” வேஷம் இவருக்குத்தான் தகும் என்று புகழ்ந்தார்கள். சுருக்கிச் சொல்லுமிடத்து எங்கள் சபையிலும் இதர சபைகளிலும் பின் வந்த “லீலாவதி"களெல்லாம் இவரையே ஓர் உதாரணமாக வைத்துக்கொண்டு, இவர் நடித்தது போலவே நடிக்க வேண்டுமென்று முயன்றனர் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை .
ஆயினும் சங்கீதத்தில் மாத்திரம் இவர் பெயரெடுக்கவில்லை; என்னைப் போல்தான், தாளத்தில் கொஞ்சம் குறையுள்ளவர். இந்த வேஷத்தில் இவருக்குப் பின் வந்த அ. கிருஷ்ணசாமி ஐயர் இவரைவிட எளிதில் சங்கீதத்தில் மேம்பட்டவர் என்பதற்குச் சந்தேகமில்லை. இந்தக் கிருஷ்ணசாமி ஐயருக்கும், பிறகு எங்கள் சபையில் “லீலாவதி” வேஷம் பூண்ட அநேகருக்கும், ஜெயராம் நாயகர் இந்த நாடகப் பாத்திரத்தை இப்படி நடிக்க வேண்டுமென்று கற்பித்திருக்கிறார்.
இந்நாடகத்தில் “சுலோசனா” வேடம் தரித்தவர் அ. சுப்பிரமணிய ஐயர். இவர் நடித்தது மொத்தத்தில் நன்றாகவேயிருந்தது என்பது வந்திருந்தவர்களுடைய அபிப்பிராயம். என்னுடைய அபிப்பிராயமும் அப்படியே. இவர் நடித்ததும் நன்றாயிருந்தது, பாட்டும் நன்றாயிருந்தது. எம். வை. ரங்கசாமி ஐயங்காரைப் போல் சங்கீதத்தில் பெயரெடுக்கவில்லை; இருந்தபோதிலும் இரண்டிலும் சுமாராகவிருந்தது என்று சபிகர்களுடைய நன்மதிப்பைப் பெற்றார். இந்த வேடத்தில் ஜெயராம் நாயகர் “லீலாவதி” வேஷம் இப்படித்தான் நடிக்க வேண்டுமென்று பின் வந்தவர்களுக்கு ஓர் ஏற்பாட்டைத் தந்தது போல், இவர் தந்தார் என்று சொல்வதற்கில்லை. அப்பெருமை, எங்கள் சபையில் இந்த நாடகத்தை இரண்டாம் முறை போட்ட பொழுது “சுலோசனா” வேடம் பூண்ட, என் ஆருயிர் நண்பனான சி. ரங்கவடிவேலு முதலியாருக்கு உரித்தாயது.
ஹாஸ்ய பாகத்தில், எம். துரைசாமி ஐயங்கார் விசித்ர சர்மன் வேடம் பூண்டு, மிகவும் நன்றாய் நடித்தார்; இவருக்கென்றே இந்த நாடகப் பாத்திரம் எழுதப்பட்டதென்று முன்பே இதைப் படிப்பவர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். இவர் “அவசரப்படேல்” காட்சியில் நடித்தது இடைவிடா நகைப்பை உண்டாக்கியது; வந்திருந்தவர்கள் எல்லோரும் விதூஷகன் வேஷம் இவருக்கு மிகவும் பொருத்தமானது என்று புகழ்ந்தனர். இவர் நான்கைந்து காட்சிகளில் நடித்து சபையோரைச் சந்தோஷிக்கச் செய்தபோதிலும், ஒரே காட்சியில் வந்த ராஜ கணபதி முதலியார் இவரைவிட நன்றாக நடித்தார் என்பது என் அபிப்பிராயம். ராஜகணபதி முதலியார், வழிப்போக்கனான “சாரங்கன்” வேடம் பூண்டார். அவருக்குப் பாடவே தெரியாது. பிறகு இந்நாடகத்தில் நடித்த அநேகம் சாரங்கர்கள், பல பாட்டுகள் பாடிய போதிலும் இவர், அன்றைத்தினம் ஒரு பாட்டும் பாடவில்லை. அதற்கு முக்கியமான காரணம், ஆமைக்கு எவ்வளவு சங்கீதப் பயிற்சியுண்டோ அவ்வளவு பயிற்சி இவருக்கும் சங்கீதத்தில் உண்டு என்பதே! இவரது வசனமெல்லாம் பத்து அல்லது பன்னிரண்டு வரிக்குமேல் இராது. இருந்தும் இவர் சாரங்கனாக வேடம் பூண்டு பாத்திரத்திற்குத் தக்கபடி நடித்தது மிகவும் சிலாகிக்கத் தக்கதாயிருந்தது. நடிக்கப்பட்ட நாடகங்களின் குணாகுணங்களை எடுத்துக் கூறுவதில் மிகவும் தேர்ச்சி பெற்ற என் பால்ய நண்பராகிய ஸ்ரீனிவாச ஐயங்கார், ஒரு முறை இந்த “லீலாவதி சுலோசனா” பிறகு நடந்தபொழுது, கதாநாயகி, கதாநாயகன், மற்றுமுள்ள முக்கியமான பாத்திரங்களை யெல்லாம் விட்டு, இந்த ராஜ கணபதி முதலியார் ‘சாரங்கனாக’ நடித்ததுதான் மிகவும் மெச்சத்தக்கதாயிருந்ததென, அக்காலத்தில் அச்சிடப்பட்ட “இந்தியன் ஸ்டேஜ்” என்னும் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
இதற்குக் கொஞ்ச நாளைக்கு முன்புதான் புதிதாய் எங்கள் சபையைச் சேர்ந்த அ. கிருஷ்ணசாமி ஐயர், காந்திமதி வேஷம் பூண்டனர் என்பதை முன்பே தெரிவித்திருக்கின்றேன். இவர் அன்று நடித்ததில் ஒரு வேடிக்கையான சந்தர்ப்பம் நேரிட்டது. இவருக்கு இரண்டு பாட்டுகள் இருந்தன. அவற்றுள் இரண்டாவதைப் பாடவேண்டிய சந்தர்ப்பத்தில் பாட மறந்து விட்டனர்! அக்காட்சி முடிந்தவுடன், நான் நேபத்யத்தில் (Green Room) வேஷம் பூண்டு கொண்டிருக்கும் பொழுது, என்னிடம் ஓடிவந்து “சம்பந்தம்! சம்பந்தம்! என்னுடைய இரண்டாவது பாட்டைப் பாட மறந்து விட்டேன்! என்ன செய்வது?” என்று கவலையுடன் கேட்டார். நான் உடனே அப்பாட்டைக் கொஞ்சம் மாற்றி, பின்வரும் காட்சியில் அதைச் சந்தர்ப்பத்திற்கேற்றபடி செய்து, அதில் பாடும்படியாகச் சொன்னேன். அப்படியே அதைப் பாடி முடித்தார்! ஆக்டர்களாகிய எங்களுக்குத் தவிர நாடகத்தைப் பார்க்க வந்த மற்ற ஜனங்களுக்கு இது தெரியாது. இம்மாதிரியாக அநேக நாடகங்களில் தவறுகள் வாய்ப்பதுண்டு. அவற்றைச் சரிப்படுத்திக்கொண்டு சமாளிக்கும்படியான சக்தியிருப்பது மிகவும் அனுகுணமாம்.
மேற்கண்ட நாடகப் பாத்திரங்கள் தவிர, மற்றுமுள்ள பாத்திரங்களையும் தரித்தவர்கள் ஏறக்குறைய நன்றாகவே நடித்தார்களென்று எண்ணுகிறேன். என்னுடைய அபிப் பிராயத்தில் இந்த நாடகமானது பார்த்தவர்களுடைய மனத்தை ரமிக்கச் செய்ததன் முக்கியக் காரணம், சற்றேறக்குறைய எல்லா ஆக்டர்களும் தங்கள் பாடங்களையும் பாட்டுகளையும் நன்றாகக் கற்று மொத்தத்தில் குறையொன்றுமின்றி நடித்ததேயாம்.
நாடகம் அன்றிரவு 312 மணிக்கு முடிந்தவுடன், நாடகம் பார்க்க வந்த பெரிய மனிதர்களுள் பலர் நாடக மேடைக்கு வந்து எங்களைப் புகழ்ந்து கூறி உற்சாகப்படுத்தினர். எங்கள் வேஷங்களை யெல்லாம் களைந்த பிறகு ஆக்டர்களில் பெரும்பாலர் நாடகமாடிய மேடையின்மீதே படுத்துக் கொண்டு, பேசிக் காலம் கழித்தோம். அன்றிரவு நாங்கள் தூங்கவேயில்லையென்றே சொல்ல வேண்டும். நாடகம் நன்றாயிருந்தது என்கிற சந்தோஷத்தில் எங்களுக்குத் தூக்கமே வரவில்லை. பொழுது விடிந்தவுடன் பல் விளக்கிக்கொண்டு காப்பி வரவழைத்துச் சாப்பிட்டுவிட்டுப் பிறகுதான் அவரவர்கள் வீடு போய்ச் சேர்ந்தோம்!இந்த “லீலாவதி - சுலோசனா” நாடகம்தான் எங்கள் சபையை முதல் முதல் சென்னையில் பிரபலமடையும்படி செய்தது. அந்நாடகம் அது முதல் இதுவரையில் எங்கள் சபையோரால் சுமார் 50 முறை ஆடப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நாடகத்தின் மூலமாக எங்கள் சபைக்கு 25000 ரூபாய்க்கு மேல் வரும்படி வந்திருக்கிறது. சபைக்கு எப்பொழுதாவது பணம் வேண்டியிருந்தால் “லீலாவதி - சுலோசனா” போடுகிறதுதானே என்று அங்கத்தினர் வேடிக்கையாகப் பேசிக்கொள்வார்கள். இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்புவரை, வெளியூர்களில் நாடகமாடும் பொழுதும், சென்னையில் டிசம்பர் மாதம் தொடர்ச்சியாக நாடகங்கள் போடும் பொழுதும், முதலில் இந்த நாடகத்தைத்தான் போடுவது எங்கள் சபையில் வழக்கமாயிருந்தது.
அன்றியும் இந்நாடகமானது மற்றச் சபையோர்களாலும் பெரும்பாலும் நடிக்கப்பட்டிருக்கிறது. நான் எழுதிய நாடகங்களுள் இதைவிட “மனோஹரன்” ஒன்று அதிகமாக ஆடப்பட்டிருக்கிறது.
எங்கள் சபையாரன்றி இந்நாடகத்தை முதல் முதல் நடித்தது, எனக்கு ஞாபகம் இருக்கும்வரை, கோவிந்தசாமி ராவின் ‘மனமோன நாடகக் கம்பெனி'யாரே. அவர்கள் சென்னையில் இந்த நாடகத்தை நடித்தபொழுது, என் உத்தரவைப் பெற்றே நடித்தார்கள். கோவிந்தசாமிராவ் என்னை வரும்படி நேராக அழைத்தார். முதல் முதல் நான் எழுதிய நாடகத்தை மற்றவர்கள் நடிக்கக் கண்டது இதுதான். அதுவரையில் நான் எழுதிய நாடகங்களிலெல்லாம் நானே நடித்துக்கொண்டிருந்தபடியால், இம்மாதிரியான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்காமற் போயிற்று. அக்கம்பெனியில் சிறந்த பாடகராயிருந்த சுந்தரராவ் என்பவர் சுலோசனையாக நடித்தார். குப்பண்ணராவ் என்பவர் லீலாவதியாக நடித்தார். இதில் ஒரு விசேஷம், நாடகத் தோரணையை நோக்குமிடத்து, லீலாவதியே கதாநாயகி என்று ஒருவிதத்தில் சொல்ல வேண்டும். அன்றியும் சுலோசனா பாத்திரத்தைவிட லீலாவதி பாத்திரத்தை ஆடுதல் மிகவும் கடினம் என்பதற்குக் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. அப்படியிருந்தும், ஏறக்குறைய எல்லாக் கம்பெனிகளிலும், “அயன் ஸ்திரீ பார்ட்” என்று சொல்லப்படும் முக்கியமான ஸ்திரீ வேஷம் தரிப்பவரே, சுலோசனா பாத்திரமாக நடிப்பது வழக்கமாய்விட்டுது. கதாநாயகன் மனைவி கதாநாயகி என்று தீர்மானித்து விடுகிறார்கள். இது பெரும்பாலும் வாஸ்தவமாக இருந்த போதிலும், அப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை. இதை ஷேக்ஸ்பியர் நாடகங்களைக் கற்கும் என் இளைய நண்பர்கள் நன்கு அறிவார்கள். இதில் இன்னொரு வேடிக்கை, சுந்தரராவ் என்பவர் கொஞ்சம் ஸ்தூல சரீரமுடையவர்; குப்பண்ணராவ் மெல்லிய சரீரமுடையவர். இருந்தும் குப்பண்ணராவ் மூத்தவளாகவும் சுந்தரராவ் இளையவளாகவும் நடித்தார்கள். சில குடும்பங்களில் மூத்த பெண்ணைவிட இளைய பெண் பெரிய உடம்பை உடைத்தாயிருப்பதை நான் அறிந்திருக்கிறேன். இருந்தும், கூடுமானால் இதைத் தவிர்த்திருந்தால் நலமாயிருக்குமெனத் தோன்றியது. அன்றைத் தினம் நடிகரில் சுந்தர ராவ் பாடல் நான் முன்பே குறித்தபடி மிகவும் நன்றாயிருந்தது; ஆயினும் கேவலம் வசனத்தை மாத்திரம் கருதுங்கால் குப்பண்ணராவ் நடித்ததே சிலாகிக்கத்தக்கதாயிருந்தது. நான் பார்த்த அநேகம் லீலாவதிகளுக்குள், ஜீவனத்துக்காக நடிக்கும் நடர்களுக்குள் இவரே சிறந்தவரென்று நான் சொல்லவேண்டும். ஜீவனத்துக்காக நடிக்கும் பிரபல நடிகர்கள் சாதரணமாக அநேக காரணங்கள் பற்றி நெடு நாள் ஜீவித்திருப்பதில்லை. இதற்கு விரோதமாக இந்தக் குப்பண்ணராவ் அநேக வருஷங்கள் ஜீவித்திருந்தார். கடைசியாகச் சில வருஷங்களுக்கு முன், அவருக்கு வயது அதிகமான போதிலும், இந்த லீலாவதி வேடம் பூண்டு நடித்தபோது, பூர்வகாலத்திலிருந்த மிடுக்குடனேயே வெகு விமரிசையாக நடித்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இவரிடமிருந்து, இந்நாடக ஆசிரியனாகிய நானே, லீலாவதி பாத்திரம் நடிப்பதில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன்! அதுவரையில் எங்கள் சபையில் இந்த நாடகம் ஆடிய பொழுதெல்லாம் லீலாவதி, இரண்டாவது காட்சியில், தன் தங்கை சுலோசனையைக் கொல்வதற்காகப் பாலில் விஷமிடவேண்டிய சந்தர்ப்பத்தில், ஒரு காகிதப் பொட்டலத்தில் விஷமருந்தை வைத்து, அதை அப்பாலில் கொட்டிவிடுவது போல் நடித்து வந்தோம். இதுதான் லீலாவதி ஆக்டருக்கு நான் கற்பித்தது. முதல் முதல் குப்பண்ணராவ் இந்த கோவிந்தசாமி ராவ் கம்பெனியில் நடித்த பொழுது, வெகு புத்தி சாதுர்யமாய்த் தன் விரலில் ஏதோ ஒரு விஷத்தை இரகசியமாய் வைத்து, அதை குலோசனையறியாதபடி பாலில் கலக்கியதுபோல் நடித்துக் காட்டினார். அதைக் கண்டதும் எனக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் உண்டாயிற்று; இதுதான் சரியான முறை, இனி இப்படித்தான் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து அதுமுதல் இந்த நாடகத்தை நடித்த பொழுதெல்லாம் இம்மாதிரியாகவே நடித்து வந்திருக்கின்றோம். ஒரு விதத்தில் இந்த யுக்தி எனக்கு முன்பே தோன்றாமற் போயிற்றே என்று வெட்கப்பட்டேன். அன்றியும் இதனால் நான் இன்னொரு பெரும் நன்மை அடைந்தேன்.
நாடக ஆசிரியனாகிய எனக்கு எனது நாடகத்தைப்பற்றி எல்லாம் தெரியும் என்று நான் அடைந்திருந்த கர்வமானது பங்கப்பட்டு, மற்றவர்களிடமிருந்து, நான் எழுதிய நாடகங் களிலேயே நான் கற்க வேண்டிய விஷயங்கள் அனேகம் இருக்கக்கூடும் என்னும் புத்தி வந்தது. அது முதல் நான் எழுதிய நாடகங்களாயிருந்த போதிலும் அவற்றை மற்றவர்கள் நடிக்கும்போது, அதிலுள்ள நாடகப் பாத்திரங்கள் எப்படி நடிக்கிறார்கள் என்று கவனமாய்ப் பார்த்து வர வேண்டு மென்றும் புத்தியுண்டாயிற்று.
இக்கம்பெனியில், அன்று மற்றப் பாத்திரங்களாக நடித்தவர் களுடைய ஆக்டிங் எனக்குப் பிடிக்கவில்லை. “பஞ்சண்ணா” என்கிற செல்லப் பெயர் பெற்ற பஞ்சநாதராவ் என்பவர், விதூஷகனாகிய விசித்திரசர்மாவாக நடித்தது மாத்திரம் கொஞ்சம் சுமாராக இருந்தது. நாடகம் முடிவதற்கு வெகு நேரமாகியும் கடைசிவரையில் உட்கார்ந்து பார்த்துவிட்டுப் போனேன். நாம் எழுதிய நாடகத்தை ஜீவனத்திற்காக நாடகமாடுபவர்களும் ஆடினார்களே என்னும் சந்தோஷத்துடன் அன்றிரவு உறங்கினேன். இந்த நாடகத்தை அனேகம் கம்பெனியார்கள் பிறகு ஆடியிருக்கின்றனர். அதைப்பற்றி இன்னொரு சமயம் எழுதலாமென்றிருக்கிறேன்.
இந்நாடத்தை விட்டு விலகுமுன் இதை நான் அச்சிட்ட பொழுது, என் தந்தையின் அனுமதியின் மீது என் தாயாருடைய ஞாபகத்திற்கே இதை அர்ப்பணம் செய்தேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். இதை அச்சிட்ட சில மாதங்களுக்குள் என் ‘அருமைத்’ தந்தையார் என் தாயாரிடம் போய்ச் சேர, பிறகு 1923ஆம் வருஷம் வரையில் நான் அச்சிட்ட நாடகங்களை யெல்லாம், நான் தினம் தொழுதுவரும் தெய்வங்களாகிய என் தந்தை தாயாருக்கே அர்ப்பணம் செய்திருக்கிறேன் என்கிற விஷயம், எனது நாடகங்களை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு எல்லாம் தெரிந்த விஷயமே. இனி எனது நான்காவது நாடகமாகிய “கள்வர் தலைவன்” என்னும் நாடகத்தை, நான் எழுதிய கதையை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.