நாடக மேடை நினைவுகள்/பதினான்காம் அத்தியாயம்

பதினான்காம் அத்தியாயம்


று வருஷமாகிய 1898இல் இந்தியா தேச முழுவதையும் பீடித்த பிளேக் (Plague) பண்டுக்காக இரண்டு நாடகங்கள் நடத்தியதுமன்றி, எங்கள் சபையில் டிசம்பர் மாதம் ஐந்து நாடகங்களை நடத்தினோம். இதுதான் கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் எங்கள் சபையார் நாடகங்களை மொத்தமாக நடத்த ஆரம்பித்தது. இவ்வருஷம் தெலுங்கில் அரிச்சந்திர நாடகத்தையும், தமிழில் சத்ருஜித், லீலாவதி-சுலோசனா, மனோஹரா, கள்வர் தலைவன் என்னும் நாடகங்களையும் நடத்தினோம்; ஒன்றுவிட்டொரு நாள் வரிசையாக ஐந்து நாடகங்கள், இரவில் 9 மணி முதல் ஏறக்குறைய 2 மணி வரையில் ஆடுவதென்றால் கஷ்டமாகத்தானிருந்தது. ஆயினும் அக்காலம் எல்லா ஆக்டர்களும் நல்ல வாலிபத்தி லிருந்தபடியால் அந்தச் சிரமத்தை நாங்கள் கவனிக்கவில்லை. 

இவ்வருஷம் நான் புதிய நாடகமொன்றும் எழுதவில்லை. அதற்கு முக்கியக் காரணம் நான் இவ்வருஷம் ஹைகோர்ட்டு வக்கீலாக ஆனதே என்று நினைக்கிறேன்; கோர்ட்டு விஷயங்களெல்லாம் புதிதாய்க் கவனிக்க வேண்டியிருந்தபடியால் எனக்கு நாடகம் எழுத அதிக சாவகாசமில்லாமற் போயிற்று.

இதற்கப்புறம் நான் எழுதிய நாடகம் “காலவ ரிஷி” என்பதாம். இந்த நாடகத்தை நான் 1899 ஆம் வருஷம் முதலில் ஆரம்பித்து, சீக்கிரம் எழுதி முடிக்க, இது எங்கள் சபையோரால் மார்ச்சு மாதம் ஆடப்பட்டது. நான் இப் புராணக் கதையை நாடக ரூபமாக எழுதியதற்கு ஒருவிதத்தில் காரண பூதமா யிருந்தவர் எனது நண்பர் ஸ்ரீமான் அ. கிருஷ்ணசாமி ஐயர் என்றே சொல்லவேண்டும். அவர் இக்கதையை ஒருவாறு எழுதி என்னிடம் கொண்டு வந்து காண்பித்தார். அதை நான் படித்துப் பார்த்து கதை நன்றாகத்தானிருந்தது; நாடகமாக எழுதியது அவ்வளவு நன்றாக இல்லை; நீ இந்நாடகத்தில் ஆடவேண்டுமென்று விருப்பமிருந்தால் சொல், நான் எனக்குத் தெரிந்த வரை ஒழுங்காக நாடக ரூபமாக எழுதித் தருகிறேன் என்று கூற, அவர் அதற்கு இசையவே, “காலவரிஷி’ என்று பெயரிட்டு இந்நாடகத்தை எழுதினேன். கிருஷ்ணசாமி ஐயர் விருப்பத்தின்படியே இதில் கதாநாயகியாகிய சந்தியாவளியின் பாகத்தை அவருக்குக் கொடுத்தேன். எம். சுந்தரேசய்யர் பி.ஏ. என்பவர் தமிழ் நாடகமொன்றில் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டுமென்று கேட்க, அவருக்கு சித்ரசேனன் பாத்திரம் கொடுத்தேன். அவருடைய தம்பி ராமநாத ஐயருக்கு சித்ரசேனனது மற்றொரு மனைவியாகிய ரத்னாவளியின் பாகம் கொடுக்கப்பட்டது. நான் நாரதர் வேடம் எடுத்துக்கொண்டேன். எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுவுக்கு, அவருக்குத் தக்கபடி எழுதிய சுபத்திரையின் பாகம் கொடுத்தேன். அவர் என்னுடனன்றி மற்றொருவனுடனும் மேடையின்மீது நடிக்க முடியாது என்கிற தீர்மானம் கொண்டிருந்தபடியால், நான் இந்நாடகத்தில் கடைசி இரண்டு காட்சிகளில் அர்ஜுனனாக வரும்படி நேர்ந்தது. ஒரு நாடகத்தில் ஒருவன் இரண்டு பாத்திரங்கள் பூணுவது தவறெனத் தெரிந்து, இதற்குப் பிறகெல்லாம், இந்நாடகம் எங்கள் சபையில் நடிக்கப்பட்ட பொழுது நான் பன்முறை அர்ஜுனன் வேடம் ஒன்றையே பூண்டேன். ஸ்ரீ கிருஷ்ண வேஷம் கே. ஸ்ரீனிவாஸனுக்குக் கொடுக்கப்பட்டது. 


நாடகம் நடிக்கப்பட்டபொழுது, எம் சுந்தரேச ஐயர் சித்திரசேனன் பாகத்தில் விமரிசையாகத்தான் நடித்தார். இவருக்கும் சங்கீதத்திற்கும் வெகுதூரம். ஆகவே இவர் ஒரு பாட்டும் பாடாவிட்டாலும் வசனத்தில் நன்றாய் நடித்தார். இவரை ஒத்திகை செய்வதில் எனக்கு நேரிட்ட முக்கியமான கஷ்டம் என்னவென்றால், இவருடைய ஆங்கிலேய உச்சரிப்பை மாற்ற நேரிட்டதே; இவர் அநேக வருஷங்களாகக் கிறிஸ்தவ கலாசாலையில், ஷேக்ஸ்பியர் மகாகவியின் நாடகங்களில் ஆங்கிலத்தில் நடித்துப் பழக்கப்பட்டவர்; அன்றியும் ஆங்கில பாஷையில் பேசுவதில் நிபுணர்; இவரது உச்சரிப் பெல்லாம் ஆங்கில பாஷைக்குரிய உச்சரிப்பாயிருக்கும். “கள்வர் தலைவன்” என்னும் நாடகம் இரண்டாம் முறை நாங்கள் போட்டபொழுது, இவருக்கு சௌரியகுமாரன் பாகம் கொடுத்திருந்தேன்; அதன் முதல் ஒத்திகையில் இவர் பேசவேண்டிய “பலாயனனுக்கு நாம் கொடுத்தது (மருந்து) போதுமா போதாதா?” என்னும் வார்த்தைகளை இவர் ஆங்கில உச்சரிப்புடன் வெள்ளைக்காரன் தமிழ் பேசுவது போல் பேசியதை, இப்பொழுது நினைத்துக்கொண்டாலும் எனக்கு நகைப்பு வருகிறது. இதை அவரைப்போல நான் சொல்லிக் காட்டும்பொழுதெல்லாம், எனது நண்பர்கள் நகைப்பார்கள். இந்த ஆங்கிலேய உச்சரிப்பை மாற்றுவதற்கு நான் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. ஆயினும் முடிவில் அதை முற்றிலும் ஒழித்தேன் என்றே நான் சொல்ல வேண்டும்.

சந்தியாவளியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயர் மிகவும் நன்றாகப் பாடி நடித்தார் என்பதற்கு ஐயமில்லை. இதனால் இவருடன், இவரது சக்களத்தியாக வரவேண்டிய எம். ராமநாத ஐயருக்கு ஒரு பெருங் கஷ்டமாயிற்று. எல்லாக் காட்சிகளிலும் ஏறக்குறைய இருவரும் ஒன்றாய் வர வேண்டியிருந்தது; ஆகவே ஒத்திகை நடக்குங்கால், ஒரு காட்சியில், கிருஷ்ணசாமி ஐயர் பாடும் பொழுதெல்லாம் இவர் சும்மா நின்று கொண்டிருப்பதென்றால், இவருக்குக் கஷ்டமாயிருந்தது. இவர் மெல்ல என்னிடம் வந்து “என்ன சம்பந்தம், எனக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறதே. கிருஷ்ணசாமி பாடும் பொழு தெல்லாம் நான் பக்கத்தில் மரம்போல் நின்று கொண்டிருந்தால், எல்லோரும் என்னைப் பார்த்து தகைக்கிறார்களே, இதற் கென்ன செய்வது?” என்று கேட்டார். 

அதன்மீது, அக்கஷ்டத்தை அறிந்தவனாய், மறு ஒத்திகையில் அந்தப் பாகம் வரும்பொழுது, நீ சோகத்தால் மூர்ச்சையானவள் போல் விழுந்துவிடு என்று சொல்லி, என் நாடக ஏட்டிலும் “ஹா” என்று கூவி மூர்ச்சையாகிறாள் என்று எழுதி வைத்தேன். இவ்விரகசியம் எப்படியோ வெளியாகி, நாடக தினத்தில், இக்காட்சியில் கிருஷ்ணசாமி ஐயர் பாட ஆரம்பித்தவுடன், ராமநாத ஐயர் மூர்ச்சையாகி விழுந்து விடவே, சபையோரெல்லாம் நகைக்க ஆரம்பித்தனர்! இதற்கடுத்தாற்போல் இந்நாடகமானது பன்முறை பிறகு நடிக்கப்பட்ட பொழுது, இந்த ரத்னாவளியின் பாகம் எடுத்துக்கொண்ட எனது நண்பர் எம். ராமகிருஷ்ண ஐயருக்கும் பாடத் தெரியாது. ஆகவே இவரும் இக்காட்சியில் மூர்ச்சை யாகும் பொழுதெல்லாம், பாடத் தெரியாதபடியால் மூர்ச்சையாகிவிட்டார் என்று சபையோர் ஏளனம் செய்வது வழக்கமாகிவிட்டது. இப்பொழுதும் ஏதாவது நாங்களெல்லாம் உட்கார்ந்து வேடிக்கையாய்ப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, “ஹா! மூர்ச்சையாகிறாள்” என்று எனது நண்பர்கள் ஏளனம் செய்வார்கள். இப்பொழுதும் யாராவது பாடத் தெரியாத ஸ்திரீ வேஷதாரி, எங்கள் சபை நாடகத்தில் வந்தால், என்ன, “ஹா! மூர்ச்சையாகிறாளோ?” என்று கேட்பார்கள் வேடிக்கையாக. எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு எங்கள் சபையில் சுமார் 28 வருஷங்கள் நடித்த பாத்திரங்களுக்குள் ஒரு முக்கியமான பாத்திரம்; இந்நாடகத்தில் அவர் சுபத்திரையாக வந்ததே. இந்த சுபத்திரையாக நடிப்பதில் அவருக்கு அதிகப் பிரீதியிருந்தது. சந்தியாவளியைப்போல் அவ்வளவு பெரிய பாகமுடைய பாத்திரமாயில்லாவிட்டாலும், நன்றாய் நடிப்பதற்கு அநேக இடங்கள் அமைந்திருந்தன. இவர் சுபத் திரையாக இந்நாடகத்தில் நடித்தபொழுதெல்லாம் வந்திருந்தவர் களுடைய மனத்தைக் கவர்ந்தனர் என்று நான் கூறுவது மிகையாகாது. இதில் நடிக்கும் பொழுது, ப்ரௌடா நாயகியாகிய ஒரு குல பத்தினி எப்படி வேஷம் பூண வேண்டுமோ, அதற்குத் தக்கபடி வேஷம் பூண்டு, மிகவும் ஒழுங்காய் நடிப்பார். முக்கியமாக சுபத்திரை தன் கணவனான அர்ஜுனனை வசப்படுத்த வேண்டி, வயிற்று நோயால் ஏதோ பாதைப்படுவதாக நடிக்கும் காட்சியில், இவருக்கு நிகர் ஒருவரும் இல்லையென்றே சொல்ல வேண்டும். இவருக்குப் பிற்காலம் இந்தக் காட்சியை சில ஆக்டர்கள் ரசாபாசப்படுத் 


தியதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். சற்றேறக்குறைய ரங்கவடிவேலுக்குச் சமானமாக, இக் காட்சியில் நடித்தது, கே. நாகரத்னம் ஐயர் ஒருவர்தான் என்பது என்னபிப்பிராயம்.

இந்நாடகமானது எங்கள் சபையோரால் பன்முறை பிறகு நடிக்கப்பட்டது. அங்ஙனம் நடிக்கப்பட்ட பொழுதெல்லாம் சித்திரசேனர் வேடம் டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரி பூண்டனர். முதல் சித்திரசேனனைப் போலல்லாது, இவருக்கு நன்றாய்ப் பாடத் தெரியுமாதலால், இப் பாத்திரத்தில் அநேகம் பாட்டுகளைப் பாடுவார். கிருஷ்ணசாமி ஐயருக்குப் பின் சந்தியாவளி வேடம் பூண்ட டி.சி. வடிவேலு நாயகரும் இந்நாடகத்தில் அதிகப்பாட்டுகள் பாடுவது வழக்கமாதல் பற்றி, இந்நாடகத்தை எங்கள் சபை அங்கத்தினர் “சங்கீத காலவர்” என்று பெயரிட்டழைப்பதுண்டு. சில சமயங்களில் இதில் எல்லா ஆக்டர்களும் சேர்ந்து சுமார் 50 பாட்டுகள் பாடியதுமுண்டு. ஆகவே, யாராவது சுகுண விலாச சபையில் பாட்டுக்குறைவு என்று சொல்வார் களாகில், “காலவ ரிஷி” நாடகத்திற்கு வந்து பாருங்கள், என்று நான் பதில் உரைப்பேன்.

இந்தக் “காலவ ரிஷி” நாடகமானது இதர சபையோர் களாலும், நாடகக் கம்பெனிகளாலும், முக்கியமாக, பாய்ஸ் கம்பெனிகளாலும் பன்முறை ஆடப்பட்டிருக்கிறது. நான் அறிந்தபடி இதுவரையில் 307 முறை ஆடப்பட்டிருக்கிறது. நான் அறியாதபடி எத்தனை முறை ஆடப்பட்டிருக்கிறதோ ஈசனுக்குத்தான் தெரியும்.

இந் நாடகமானது எங்கள் சபையில் வருஷத்திற்கு ஒரு முறையாவது சராசரியில் போடப்படும். கிறிஸ்ட்மஸ் விடுமுறையில் மொத்தமாகப் பத்து அல்லது பதினைந்து நாடகங்கள் போடும் பொழுதெல்லாம் இது ஒன்றாய் இருக்கும்; அன்றியும் நாங்கள் வெளியூருக்குப் போய் நாடகம் ஆடிய பொழுதெல்லாம், ஆடிய நாடகங்களில் இது ஒன்றாயிருந்தது. இதுவரையில் எங்கள் சபைக்கு அதிக பொருளைச் சேர்ப்பித்த நாடகங்களில் இது ஒரு முக்கியமானதாகும்.

1899ஆம் வருஷம் நான் “நற்குல தெய்வம்’ என்னும் ஒரு சிறு நாடகத்தை எழுதினேன். இவ்வருஷம் சபை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஏதாவது புதியதாய் வேண்டு மென்று எனது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் இது எழுதப்பட்டது. கொஞ்ச நாளாக ராமாயணத்திலிருந்து சீதா 


கல்யாணத்தை ஒரு நாடகமாக எழுத வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்த நான், அதை எழுதுவதிற் பிரயோஜனமில்லை; புருஷோத்தமனான, ஸ்ரீ ராமருடைய பாத்திரத்தை யாரால் சரியாக நடிக்க முடியும் என்று விட்டு விட்டேன். அந்நாள் முதல் இது வரையில் எனது நண்பர்களில் அநேகர் ராமாயணத்தை நாடக ரூபமாக எழுத வேண்டுமென்று பன்முறை கேட்டும், அவர்கள் வேண்டுகோளுக்கு நான் இசையாததற்கு இதுதான் காரணம். சீதா கல்யாணத்தை எழுதுவதைவிட, சீதா தேவியின்சுயம் வரக் காட்சியைப்போல வேறொரு சுயம்வரம் எழுதலாமெனத் தோன்றியது. அதன்பேரில், அதையே முக்கியமான காட்சியாக வைத்துக் கொண்டு, “நற்குல தெய்வம்” என்னும் நாடகத்தை எழுதி முடித்தேன். முதன் முறை இதை எங்கள் சபையார் நடித்தபொழுது இப்பொழுது இந்நாடகத்துடன் ஆடப்படும் இடைக் காட்சிகள் சேர்க்கப்படவில்லை. சபை தினக் கொண்டாட்டத்திற்காக அனைவரையும் வரவழைத்து, டிக்கட்டு இல்லாமல் ஆடிய நாடகமாகையால் சிறியதாயிருந்தாலும் தவறில்லை என்று அப்படியே ஆடினோம்.

பிறகு இதையே டிக்கட்டுகளுடைய நாடகமாக நடிக்க வேண்டுமென்று தீர்மானித்தபோது அவ்வளவு சிறியதாயிருந் தால் உதவாது, கொஞ்சம் பெரிதாக ஆக்க வேண்டுமென்று தீர்மானித்து, மூன்று இடைக் காட்சிகளும் இத்துடன் சேர்த்து ஆடினோம். இவ்விடைக் காட்சிகள், நான் அச்சிட்டிருக்கும் பிரஹசனங்களுள் “கண்டுபிடித்தல்” என்னும் பிரஹசனமாக அச்சிடப்பட்டிருக்கிறது. இச் சிறு நாடகம் அன்று ஆடப்பட்ட பொழுது, வித்யா வினோதி ராவ்பகதூர் பி. அனந்தாசார்லு இந் நாடகத்தைப்பற்றியும் எங்கள் சபையைப்பற்றியும் மிகவும் சிலாகித்துப் பேசினார். நாடகம் நன்றாயிருந்ததென்பதற்கு அத்தாட்சியாக, வந்திருந்தவர்களில் பலர் சபையில் அங்கத்தினராகச் சீக்கிரம் சேர்ந்தனர். இது எனது இளைய நண்பர்கள் கஷ்டமில்லாதபடி ஆடக்கூடிய நாடகம். பள்ளிக் கூட வருஷோற்சவங்களில் இதை எளிதில் ஆடலாமெனத் தோன்றுகிறது.

இவ் வருஷம் எங்கள் சபையின் நண்பர்களுள் சிலர் அ. கிருஷ்ணசாமி ஐயர், சி. ரங்கவடிவேலு, ராஜகணபதி முதலியார், எம். வை. ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்களுக்கும், எனக்கும் பொற் பதக்கங்கள் பரிசாக அளித்தனர். இதை 

எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஒரு பெருமையாக எடுத்துக் கூற வரவில்லை; இதனால் நேரிட்ட ஒரு கெடுதியை உரைக்கவே இதை எழுதலானேன். மேற்சொன்னபடி சிலருக்கு இவ்வாறு பொற் பதக்கங்கள் அளிக்கப்படவே, மற்றவர்களுக்கு மனஸ்தாபமுண்டாகி, சபையில் கலகம் பிறந்து குழப்பமாய் முடிந்தது. ஆக்டர்களுக்குள் இப்படிப் பிறந்த மனஸ்தாபனத்தை அகற்ற நாங்கள் எல்லோரும் வெகுபாடு பட வேண்டியதாயிற்று. அதன் பிறகு, இனி நாடக மேடையில் எங்கள் சபையில் ஒரு ஆக்டருக்கும் யாரும் பரிசளிக்கலாகா தென்றும், அப்படி யாராவது அளிக்க முயன்றாலும் ஆக்டர்கள் பெறக்கூடாதென்றும் ஒரு நிபந்தனை செய்து கொண்ட பிறகே இந்த மனஸ்தாபம் அடங்கியது. ஆகவே ஜீவனோபாயமாக நாடகமாடுபவர்கள் இவ்வாறு பொற்பதக்கங்கள் பெறுவது தவறென்று நான் சொல்லவில்லை. அஃதன்றி வேடிக்கை யார்த்தமாக நாடக சபையின் அபிவிருத்திக்காக நடிக்கும் அமெடூர்ஸ் (amateurs) அரங்க மேடையில் பரிசு பெறுவது எப்பொழுதும் மற்ற ஆக்டர்களுக்கு மனஸ்தாபம் உண்டு பண்ணுமாதலால், இதை வாசிக்கும் நாடகமாடவிரும்பும் எனது இளைய நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக. மேற்சொன்ன நிபந்தனையானது எங்கள் சபையில் இதுவரையில் மிகவும் ஜாக்கிரதையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிபந்தனையை மேற்கொள்ளாது நடந்த அநேகம் சபைகள், இதனாலுண்டான மாச்சரியத்தினால் கலைந்து போனதை நான் அறிந்திருக்கிறேன்.

1900ஆம் வருஷம் எங்கள் சபையானது கொஞ்சம் நித்ரா வஸ்தையிலிருந்ததென்றே சொல்ல வேண்டும். லீலாவதிசுலோசனா, இரண்டு நண்பர்கள் என்னும் இரண்டு பழைய தமிழ் நாடகங்களை ஆடியதன்றிப் புதிதாய் ஒன்றும் ஆடவில்லை . தெலுங்கில் மாத்திரம், ஊ. முத்துக்குமாரசாமி செட்டியார் எழுதிய “சுபத்ரார்ஜுனா” என்னும் நாடகம் ஆடப்பட்டது. இப்படி உற்சாகக் குறைவுடன் இருந்ததன் பலன் என்னவென்றால் எங்கள் சபையின் வரும்படியும் குறைந்ததேயாம். இவ்வருஷம் ஜூன் மாதம் எங்கள் கையிருப்பு ரூ.51-9-7 தான். எந்த விஷயத்திலும் சிரத்தை குறைந்தால் வருவாயும் குறையும்.

இதன் பிறகு 1901ஆம் வருஷம் முதலில் நான் “மார்க்கண்டேயர்” என்னும் நாடகத்தை எழுதினேன். இதை 

எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுக்காக எழுதினேன். இச்சமயம் எங்கள் சபையில் பிடில் வாசித்துக்கொண்டிருந்தவர், சோமுராவ்; இந்தச் சோமு ராவ், சிறு வயதில் நாடகக் கம்பெனியில் ஆக்டராயிருந்து, மார்க்கண்டேயர் வேடத்திலும், குறத்தி வேடத்திலும் பெயர் பெற்றவர்; அக்காலத்திலெல்லாம் சோமுராவ் குறத்தியாகவோ, மார்க்கண்டேயராகவோ மேடைமீது வருகிறார் என்றால், ஜனங்கள் கூட்டம் கூட்டமாய் நாடகம் பார்க்கப் போவார்களாம்; இதைப்பற்றி என் தந்தை எனக்குச் சொல்லியிருந்தார்; இவர் பெயரை நாடக விளம்பரங்களில் “ஜகன்மோகனசபா ரஞ்சித சுகசாரீர சோமு ராவ்” என்று அச்சிடுவார்களாம்; குறத்தியாக வந்து, “சுந்தரமாய் சுகிர்த குற வஞ்சி வந்தாள்!” என்னும் பாட்டை, ஒரு மணி நேரம் பாடி நடிப்பாராம்; இப்படிப்பட்டவர் வயது மேலிட்டமையால் நாடகமாடுவதை விட்டு, பிடில் வாசிக்க எங்கள் சபைக்கு 1895ஆம் வருஷம் வந்து சேர்ந்தார். இவரை எங்கள் சபைக்குச் சிபாரிசு செய்தது சி. ரங்கவடிவேலு. அதுமுதல் எங்கள் சபையில் பக்க வாத்தியக்காரராகப் பிடில் வாசித்துக்கொண்டிருந்தார். சென்ற 1930ஆம் வருஷம்தான் முதுமை மேலிட்டபடியால் எங்கள் சபையை விட்டு விலகினார். இந்த 35 வருஷங்களாக விடாது எங்கள் சபையில் ஊழியஞ் செய்ததற்காக, இவருக்கு மாசம் பென்ஷன் கொடுத்து வருகிறோம். இந்த சோமு ராவ் எனதாருயிர் நண்பருக்கு மார்க்கண்டேயர் நாடகத்துப் பாட்டுகளை யெல்லாம் கற்பித்தார். அப்படிக் கற்ற எனது நண்பர், அந்த நாடகத்தை நான் எழுத, அதில் தான் மார்க்கண்டனாக நடிக்க இஷ்டமிருப்பதாகத் தெரிவிக்க, உடனே அதற்கிசைந்து அந்நாடகத்தை நான் விரைவில் எழுதி முடித்தேன். இந்நாடகம் இவ்வருஷம் சிவராத்திரி தினம் ஆடப்பட்டது. அ. கிருஷ்ணசாமி ஐயர் மருத்துவதியாகவும் சி. ரங்கவடிவேலு மார்க்கண்டனாகவும் மிகவும் நன்றாய் நடித்தார்கள். எனக்கு ஞாபகமிருக்கும் வரையில் நான் சித்ரகுப்தனாக நடித்தேன் என எண்ணுகிறேன்.

இம் மார்க்கண்டேயர் நாடகம் பிறகு எங்கள் சபையில் சில முறைதான் நடிக்கப்பட்டது. ஆயினும் இதர சபையோர்களால் பன்முறை நடிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாகப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளின் சபைகளால்; இதற்குக் காரணம், இதில் ஸ்திரீ வேஷங்கள் அதிகமர்யில்லாதபடியால் என்று நினைக்கிறேன். இவ்வருஷம் நேரிட்ட ஒரு துக்ககரமான சம்பவம் என்னவென்றால், எனது பழைய நண்பரும் எங்கள் சபைக்குப் பல வருடங்களாகக் காரியதரிசியாகவுமிருந்த ஊ. முத்துக்குமாரசாமி செட்டியார் இறந்ததேயாம்.