நாடக மேடை நினைவுகள்/பதினாறாம் அத்தியாயம்
1903ஆம் வருஷத்தின் முன் பாகத்தில் “பேயலல பெண்மணியே” என்னும் நாடகத்தையும், பிற்பாதியில் “வாணீபுர வணிகன்” என்பதையும் எழுதி முடித்தேன்.
இப் “பேயல்ல பெண்மணியே” எனும் நாடகத்தின் கதையானது, “லா சோம்நாம்புலா” எனும் இத்தாலிய நாடகத்தின் இங்கிலீஷ் மொழி பெயர்ப்பினின்றும் எடுக்கப்பட்டது. இந்நாடகம் அவ்வளவு பிரபலமானதல்லவாதலால், இதன் கதையின் முக்கியாம்சத்தை இங்கெழுத விரும்புகிறேன். “சோம்நாம்புலிசம்” என்பது ஒரு நரம்பைச் சார்ந்த வியாதி. இதைத் தமிழில் தூக்கத்தில் எழுந்து உலாவும் வியாதி என்று சொல்லலாம். இக்கதையில் கதாநாயகி இவ் வியாதியால் பீடிக்கப்பட்டவளாய்த் தூக்கத்தில் தானறியாதபடி நடந்து சென்று, ஓர் அரசனுடைய படுக்கையறைக்குப் போகிறாள். இந்த உண்மையறியாது அவள் காதலன் அவளைத் துர்நடத்தையுடையவள் என்று வெறுக்கிறான்; பிறகு முடிவில் உண்மை வெளியாக, அவன் சந்தேகம் நிவர்த்தியாகி, அவளை மணக்கிறான். இந்த வியாதிக்குத் தமிழில் பெயர் கிடையாது; சாதாரணமாக இவ்வாறு யாராவது நடந்தால் பேய் பிடித்திருக்கிறது என்று சொல்வார்கள். ஆகவே இந்நாடகத்திற்குப் “பேயல்ல பெண்மணியே’ என்று பெயர் வைத்தேன். இந்நாடகத்தின் கதை மிகவும் சிறியதாயிருந்தபடியால், ஏறக்குறைய ஒரு நாடகம் மூன்று மணி நேரமாவது பிடிக்கா விட்டால் பணம் கொடுத்து அதைப் பார்க்க வரும் ஜனங்கள் அதிருப்தியடைவார்கள் என்று, தெருக்கூத்து ஆடுபவர்களுடைய கிளைக்கதை யொன்றையும் இதனுடன் சேர்த்து எழுதினேன். இவ்வாறு நான் செய்ததற்கு உலகெங்கும் பிரசித்தி பெற்ற ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் அனுமதியே இருக்கின்றது. அவர் “மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம்” (Mid Summer Night's Dream) என்னும் ஒரு நாடகத்தில் ஆதன்ஸ் நகரத்தின் கூத்தாடிகளுடைய கதையையும் புனைந்து எழுதியிருக்கிறார்; அம்மாதியாகவே கதாநாயகனும் நாயகியும் வசித்திருந்த ஊரிலுள்ள தெருக் கூத்தாடிகள், அங்குள்ள காளி கோயிலின் உற்சவத்தில், அவ்வூர் வழக்கப்படி நாடகமாட ஒத்திகை நடத்தும் கதையை இந்நாடகத்தின் முக்கியக் கதையுடன் புனைந்து எழுதினேன். இந்நாடகத்தில் ஒரு விசேஷமென்ன வென்றால், ஒரு வேஷதாரிக்காவது சம்கி முதலிய விலையுயர்ந்த உடுப்புக் கிடையாது. சாதாரணமாக நாடக மென்றால், ராஜா வேஷம், ‘மந்திரி வேஷம்’ அரசி வேஷம் முதலியன இருக்கவேண்டுமென்பது நமது நாட்டிலுள்ளார் கொள்கையல்லவா? அம்மாதிரியான பாத்திரங்கள் ஒன்றுமின்றி, சாதாரண ஜனங்களின் நடவடிக்கையை நாடகமாக ஆடினால் நன்றாயிராது என்று பெரும்பாலும் அக்காலம் எண்ணப்பட்டது. இது தவரென்று நிரூபிப்பதற்காக இந்நாடகத்தில் வரும் பாத்திரங்களெல்லாம் பெரும்பாலும் சாதாரண ஜனங்களாகவே யமைத்து இந்நாடத்தை எழுதி முடித்தேன். இதில் ஓர் அரசன் மாத்திரம் வந்தபோதிலும், அவ்வரசனும் மாறு வேடத்தில் தேச சஞ்சாரம் செய்வதாக அமைத்து அப்பாத்திரத்தையும் சாதாரண உடையில் வரும்படி செய்தேன். இந்நாடகத்தை நாங்கள் ஒத்திகை செய்த பொழுது, இதைப் பார்த்த பல அங்கத்தினர், இது நன்றாயிருக்குமா எனச் சந்தேகித்தனர். நாடகத் தினத்தில் மேடையின் பேரில் இது ஆடப்பட்டு, வந்திருந்த சபையோர்கள் நன்றாயிருந்ததென அங்கீகரித்த பிறகுதான், அவர்கள் திருப்தியடைந்தனர். ஒருவிதத்தில் இதை ஜன் சமூக நாடகம் (Social Drama) என்றே நான் சொல்லவேண்டும். ஆயினும் இது தற்கால ஜனசமூகக் கதையன்று; பழைய காலத்திய கதையாகும். ஆயினும் இது நன்றாயிருக்கிறது என்று எல்லோரும் ஒப்புக் கொண்டதுதான், பிறகு என்னைத் தற்காலத்திய ஜன சமூக நாடகங்கள் (Present day Social Drama) எழுதும்படி உந்தியது.
இந்நாடகத்தில் கதாநாயகியின் பாகம் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு எடுத்துக் கொண்டார். இது இவர் ஆடிய வேடங்களிலெல்லாம் ஒரு கஷ்டமானது என்றே கூற வேண்டும். நித்திரையில் எழுந்து நடப்பவர் போல் நடிக்கும் பொழுது, கண்கள் திறந்து கொண்டேயிருக்க வேண்டும்; ஆயினும் அவைகளில் பார்க்கும் சத்தியில்லாதது போல் காட்ட வேண்டும்; நான் இம்மாதிரியான வியாதி பிடித்தவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனேயொழியப் பார்த்ததில்லை. ஆகவே இன்னது செய்வதென்று தோன்றாதவனாய், இவ்வியாதியைப் பற்றி ஆங்கில வைத்தியப் புஸ்தகங்களில் எழுதியிருப்பதை யெல்லாம் சற்றேறக்குறைய வாசித்து, ஒருவாறு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று தீர்மானித்து, அவருக்குக் கற்பித்தேன். இந் நாடகத்தில் அவர் நடித்தது மிகவும் நன்றாயிருந்ததெனப் பலர் புகழ்ந்ததே அவர் எடுத்துக் கொண்ட சிரமத்திற்குச் சரியான சன்மானமாகும் என எண்ணுகிறேன். அ. கிருஷ்ணசாமி ஐயர் பங்கஜாட்சியாக நடித்தார். எஸ் ராஜகணபதி முதலியார், ஹாஸ்ய பாகமாகிய சோமநாதன் வேடம் பூண்டார். ஆயினும் ரங்கவடிவேலு நடித்த கஷ்டமான பாகத்தையும், கிருஷ்ணசாமி ஐயரின் திவ்யமான சங்கீதத்தையும், ராஜ கணபதியின் ஹாஸ்யத்தையும் விட, இந்நாடகத்தில், வந்திருந்தவர்களுக்கு மிகுந்த ஆரவாரமான சங்தோஷத்தை உண்டுபண்ணியது தெருக் கூத்தாடிகளாக வந்த ஆக்டர்களே! இதற்கு ஒரு காரணம், சாதாரணமாக கிராமாந்தரங்களில் ஆடும் தெருக்கூத்துகளிலுள்ள ஆபாசங்களையெல்லாம் திரட்டி இதில் எழுதியதாயிருக்கலாம். இருந்தாலும் அதற்குத் தக்கபடி நடித்த ஆக்டர்களுடைய விமரிசையில்லாவிட்டால் இது அவ்வளவு சோபித்திராது என்பது என் துணிபு. இத் தெருக் கூத்தாடிக்களுக்குப் பெயர் வைத்தபொழுது நடித்த ஆக்டர்களின் பெயரையே சுருக்கி வைத்தேன். நாராயணன், ரெங்கன், குப்பன், சாமன், கோபாலன் என்ற பெயர்களை அப்பெயர் கொண்டவர் களுடைய அனுமதியைப் பெற்றே எழுதி வைத்தேன்; இது அவர்களுக்கும் நகைப்பாயிருந்தது; வந்து நாடகம் பார்த்தவர்களுக்கும் நகைப்பாயிருந்தது. இவர்களுக்குள் நாராயண சாமிப்பிள்ளை, தெருக்கூத்தாடி நாராயணனாக நடித்தது எல்லோருக்கும் இடைவிடா நகைப்பாயிருந்தது; இப்பொழுதும் இவருக்கு என்னைப்போல் 59 வயதுக்கு மேலாகியும், இந்தத் தெருக்கூத்து அர்ஜுனன் வேடத்தில் இவரைப் போல் நடிக்கத்தக்கவர்கள் இல்லையென்றே நான் சொல்ல வேண்டும். இவரைப்பற்றி நாராயணசாமிப் பிள்ளை என்று கூறினால், யாருக்காவது தெரியாவிட்டால், “யார் அது, தெருக் கூத்து அருச்சுனனா?” என்று கேட்பார்கள்.
இவ்வருஷம் நான் புதிதாய் எழுதிய மற்றொரு நாடகம் “வாணீபுர வணிகன்” என்பது. இது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய மர்ச்சென்ட் ஆப் வெனி (Merchant of Venice) என்பதன் தமிழ் அமைப்பாம். இது அந்நாடகக் கவி எழுதிய நாடகங்களில் ஒரு சிறந்ததாய், தற்காலத்தில் இங்கிலாந்திலும், ஜர்மனியிலும் பன்முறை ஆடப்படுகிறது. “ஆஸ் யூ லைக் இட்” டில் செய்தபடியே இதிலும் பெயர் களையும் ஊர்கள் முதலியவைகளையும் மாற்றி எழுதினேன். இந் நாடகம் இவ் வருஷம் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் எங்கள் சபையோரால் ஆடப்பட்டது. இதில் முக்கியமான பாத்திரம் ஷாம்லால் (Shylock) ஆக இருந்தபோதிலும் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு சரோஜினி வேடம் பூண்டபடியால், நான் பானுசேனன் வேடம் எடுத்துக் கொண்டேன். ஷாம்லாலின் பாகம் எம். சுந்தரேசையரால் மிகவும் நன்றாய் நடிக்கப்பட்ட தென்று சபிகர்கள் புகழ்ந்தனர். இதில் இவ்வருடம்தான் எங்கள் சபையை சேர்ந்த என் தமயனார் ஏகாம்பர முதலியார் வாணீபுர அரசனாக வேடம் பூண்டார். எங்கள் சபையில் இதுவே அவர் பூண்ட முதல் வேஷமும் கடைசி வேஷமுமாம். இந்நாடகத்தில் தான் அது வரையில் எங்கள் சபையில் சங்கீதத்தில் நல்ல பெயர் பெற்றிருந்த என் பழைய நண்பர் எம். வை. ரங்கசாமி ஐயங்கார் எங்கள் சபையில் கடைசி முறை, அருகபுரத்தரசனாகத் தோன்றினார். இவர் இதற்கப்புறம் கொஞ்ச நாளைக்குள் எங்கள் சபை செய்த தௌர்ப்பாக்கியத்தால் காலகதி அடைந்தனர். இதில், டபிள்யூ துரைசாமி ஐயங்கார் லீலாதரனாகவும், அ. கிருஷ்ணாசாமி ஐயர் ஜலஜாவாகவும் ஆக்டுசெய்தார்கள். ஹாஸ்ய பாகத்தில் ராஜகணபதி முதலியார் லாவண்ய கபீரனாகவும், ஆர். ஸ்ரீனிவாசராவ் என்பவர் கிழ கபீரனாகவும் வேடம் பூண்டு சபையோரைக் களிக்கச் செய்தனர். நீலகேசி வேடம், எஸ். பத்மனாபராவ் பூண்டனர். இந்த நீலகேசி எனும் பெயர் வைத்ததில் எனக்கு ஒரு சிறு சந்தோஷம். நாடகத்தை நான் எழுதியபொழுது ஆங்கிலத்தில் ‘நெரீசா’ என்று பெயர் இருக்க, என் மாமூல்படி அப்பெயரை ஒட்டி நீலகேசி என்று பெயரிட்டேன். பிறகு கொஞ்சநாள் பொறுத்து, நாடக மேடையில் இதை ஆட வேண்டி, இந் நாடகத்தைப் பற்றி ஆங்கிலத்தில் என்னென்ன ஆராய்ச்சிகளும், சர்ச்சைகளும் இருக்கின்றன என்று அங்ஙனம் படித்துக் கொண்டு வரும்பொழுது, “நெரீசா” என்னும் பதத்திற்கு நீலவர்ணமுடைய தலைமயிரை உடையவள் என்று அர்த்தம் கண்டேன். இந்த உண்மையை அறியாமலே, அப்பெயரை ‘நீலகேசி’ என்று அமைத்ததற்காகக் கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்.
இந்நாடகம் பிறகு எங்கள் சபையில் ஐந்தாறு முறைதான் ஆடப்பட்டது. எம். சுந்தரேச ஐயருக்குப் பிற்காலம் டாக்டர் டி. ஸ்ரீனிவாசராகவாச்சாரியார், ஷாம்லால் வேடத்தில் மிகவும் நல்ல பெயர் பெற்றனர். இந்த நாடகமானது இதர சபைகளால் அதிகமாக ஆடப்படவில்லை. என் குறிப்பின்படி இதுவரையில் என் அனுமதியின் மீது 18 தரம்தான் ஆடப்பட்டிருக்கிறது.
இவ் வருஷத்தில் எங்கள் சபையில் நடந்த இன்னொரு விசேஷம் என்னவென்றால், அ. கிருஷ்ணசாமி ஐயர் எழுதிய “வாசந்திகை என்னும் தமிழ் நாடகம் ஆடப்பட்டதேயாம். இதுவரையில், எங்கள் சபை ஸ்தாபித்தது முதல் தமிழில் நான் எழுதிய நாடகங்களே ஆடி வந்தார்கள். இவ்வருஷம் எனது நண்பர் - கிருஷ்ணசாமி ஐயர் அப்புதிய நாடகத்தை எழுதி முடித்தபடியால் அது ஆடப்பட்டது. அதில் நாடகாசிரியராகிய கிருஷ்ணசாமி ஐயர் கதாநாயகியாகிய வாசந்திகை வேடம் பூண்டனர். இந்நாடகத்தில் ரங்கவடிவேலு எடுத்துக் கொள்ளக்கூடிய ஸ்திரீ பாத்திரம் ஒன்றுமில்லாதிருந்தது; ஆகவே நாங்கள் இருவரும் இதில் ஆடவில்லை . எனதாருயிர் நண்பர் என்னுடனன்றி மற்றவர்களுடன் நாடக மேடையில் ஆடுவதில்லை என்று முதன் முதல் தீர்மானித்துத் தன் மரணபர்யந்தம் அத்தீர்மானித்தினின்றும் தவறினவர் அன்று! இதைப்பற்றி நான் பிறகு எழுத வேண்டி வரும்.
இவ் வருஷமானது எங்கள் சபையின் சரித்திரத்தில் இன்னொரு விதத்தில் முக்கியமானதாயிருந்தது இது வரையில் வருஷா வருஷம் வரவிற்கும் செலவிற்கும் சரியாகப் போய்க்
கொண்டிருந்தது. உதாரணமாக 1902 ஜுன் மாசம் 30ஆம் தேதிவரையில், வரவில் செலவு போக, கையிருப்பு மிகுதிப் பணம் ரூபாய் 1-15-8 தானிருந்தது! இவ்வருஷம் டிசம்பர் மாதம் நான்கு நாடகங்கள் நடித்து செலவு போக ரூபாய் 354-2-11 கையிருப்பு நின்றது. பிறகு இதில் ரூபாய் 250 புரசைவாக்கம் பண்டில் வைத்தோம். இவ்வருஷம் முதல்தான் எங்கள் சபைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்க்கத் தலைப்பட்டோம். இவ்வருஷம் என் ஆருயிர் நண்பர் சி.ரங்கவடிவேலு பொக்கிஷதாராக இருந்தார். அவரது கைராசி நன்றாயிருந்தது போலும்!
எனக்கு ஞாபகமிருக்கிறபடி இவ்வருஷம் இன்னொரு விசேஷம் நடந்தது. இவ்வருஷம்தான் எங்கள் சபையின் இருப்பிடமானது, தம்புச்செட்டித் தெருவிலிருந்து விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு மாற்றப்பட்டது. இதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பாக, விக்டோரியா பப்ளிக்ஹாலில், தற்காலம் பட்சணம் தயாரிக்குமிடமானது எங்களுக்கு வாடகைக்குக் கிடைத்தது. அதில் எங்கள் படுதாக்கள் முதலிய சாமான்களை யெல்லாம் போட்டு வைத்தோம். சென்னையில் தம்புச் செட்டித் தெருவில் ஒரு மூலையில் இருப்பதை விட, விக்டோரியா பப்ளிக் ஹால் சென்னைக்கு மத்தியில் இருக்கிறது, டிராம் வண்டி சௌகர்யமுமிருக்கிறது. ஆகவே, அந்த இடத்திற்கு எங்கள் சபையை மாற்ற வேண்டுமென்று தீர்மானித்தோம்.
அங்கிருந்த எங்கள் சாமான்களை யெல்லாம் சிந்தாதரிப் பேட்டையில் ஓர் இடத்தை வாடகைக்கு அமைத்து, அதில் வைத்துவிட்டு, நாங்கள் விக்டோரியா பப்ளிக் ஹாலின் மேற்குப்பாகத்தில் குடி புகுந்தோம். பழைய கதையில் ஒட்டகமானது முதலில் மூக்குக்கு இடம் பெற்றதுபோல் இதைப்பெற்று, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வியாபித்து விக்டோரியா பப்ளிக் ஹாலின் கீழ்ப்பாகம் முழுவதையும் பெற்றோம். எப்படியெனில், இப்பொழுது எங்கள் சபையில் படுதாக்கள் வைத்திருக்கும் இடம் காலியாயிருக்கக் கண்டு விக்டோரியாஹால் அதிகாரிகளிடமிருந்து அதை வாடகைக்குப் பெற்று, எங்கள் சாமான்களை அதில் கொண்டு வைத்தோம், முதலில். பிறகு, 1911ஆம் வருஷம் விக்டோரியா ஹாலின் கீழ்ப்பாகத்தில் அதுவரையில் இருந்தசைக்கில் கிளப் (Cycle Club) உடைந்து போகவே, அதிகாரிகளிடமிருந்து அதையும் குடிக் கூலிக்கு வாங்கிக் கொண்டோம். இவ்வாறு “சிறுகக்கட்டி பெருக வாழ்” என்னும் பழமொழியின்படி கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் சபையை விருத்தி செய்தோம். இவ்வாறு வரவுக்குத் தக்கபடி செலவு செய்துகொண்டு, வரவு அதிகமாக ஆக செலவையும் அதிகப்படுத்திக் கொண்டு வந்தபடியால் தான், இதர சபைகள் அழிந்ததுபோல் அழியாமல் எங்கள் சபை நீடித்திருக்கின்றது என்று உறுதியாய் நம்புகிறேன். இச் சந்தர்ப்பத்தில் என் அருமைத் தந்தையார் எங்களுக்குக் கூறிய ஒரு புத்திமதி எனக்கு ஞாபகம் வருகிறது. அதாவது ஒருவனுக்கு நூறு ரூபாய் மாதம் வரும்படியிருந்தால். அதில் 99 ரூபாய் 15 அணா பதினொருபை, அவன் செலவழிப்பானாயினும் அவன் சுகியாவான்; நூறு ரூபாய்க்குமேல் ஒரு தம்பிடி அதிகமாகச் செலவழித்து அவன் கடன்காரனாவானாகில், அவன் துக்கத்திற்கிடங் கொடுப்பவனே என்று பன்முறை எங்களுக்குக் கூறியுள்ளார். அதைக் கடைப்பிடித்து நாங்கள் இதுவரையில் எங்கள் சபையைப் பாதுகாத்து வந்திருக்கிறோம். இனிமேலும் எங்கள் சபையார் இப்புத்திமதிப்படி நடப்பார்களாக. வரவுக்கு மிஞ்சி செலவு செய்ய விரும்பும் எனது இளைய நண்பர்கள் இதைக் கொஞ்சம் முக்கியமாகக் கவனிப்பார்களாக!