நாடக மேடை நினைவுகள்/பதினோராம் அத்தியாயம்

பதினோராம் அத்தியாயம்

பெங்களூரிலிருந்து நாங்கள் திரும்பி வந்தவுடன் எங்கள் முக்கியமான கோரிக்கை, அவ்விடம் நடித்துப் பெயர்பெற்ற சாரங்கதர நாடகத்தை சென்னையில் நடத்த வேண்டுமென்பதாயிருந்தது. அப்படியே நடத்த வேண்டுமென்று நிர்வாக சபையில் தீர்மானித்து, விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குப் பணம் கட்டி விட்டோம். கட்டின மறுதினம் ஒரு பெருங் கஷ்டம் நேர்ந்தது. சித்ராங்கியாக நடித்த ஜெயராம் நாயகருடைய தகப்பனார் எப்படியாவது இந்தக் கடைசிதரம் அவர் ஸ்திரீ வேஷம் தரிப்பதற்கு உத்தரவளிப்பார் என்று மூடத்தனமாய் எண்ணியிருந்தோம்; அவர் ஒரே பிடிவாதமாய் தான் மீசை எடுத்து விடுவதற்கு உடன் படமாட்டேன் என்று சொன்னதாக ஜெயராம் நாயகர் எங்களுக்கு மிக்க வருத்தத்துடன் தெரிவித்தார். ஹாலுக்குப் பணம் கட்டியாய் விட்டது. நாடகத்திற்கு இன்னும் ஒரு வாரம்தானிருந்தது. நாங்கள் இன்னது செய்வதென்று அறியாதவர்களாய்க் கலங்கிக் கொண்டிருக்கும் பொழுது, எங்களுடன் இருந்த அ. கிருஷ்ணசாமி ஐயர், “சம்பந்தம், உனக்கு ஆட்சேபணை யில்லாவிட்டால் நான் சித்ராங்கி பாகம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறினார்; ஜலத்தில் மூழ்க இருந்தவனுக்கு அகஸ் மாத்தாய்த் தெப்பம் கிடைத்ததுபோல் சந்தோஷப்பட்ட வனாய், உடனே ஒப்புக்கொண்டேன். சித்ராங்கி பாகத்தில் ஜெயராம் நாயகர் நடித்ததை, பக்கத்திலிருந்து மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்தபடியால் நாடகத்திற்குக் கொஞ்சம் தினங்கள்தான் இருந்தபோதிலும் இவருக்கு அதை எடுத்துக்கொள்வது சுலபமாயிற்று. இந்த இடத்தில் எனது இளைய நண்பர்களெல்லாம் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு நல்ல ஆக்டர், ஏதாவது ஒரு பாகத்தை நடிக்கும்பொழுது, பக்கத்திலிருந்து முற்றும் கவனித்துக் கொண்டிருத்தல் அதிகப் பலனைத் தருவதாகும் என்பதே. கிருஷ்ணசாமி ஐயர் அவ்வாறு கவனித்தபடியால் தான் அவ்வளவு சீக்கிரத்தில் அந்தக் கடினமான சித்ராங்கி பாகத்தை எடுத்துக்கொள்ள சக்தி வாய்த்தது. “இவனிடமிருந்து நாம் கற்கவேண்டியது என்ன இருக்கின்றது?” என்று சொல்லி அவ்வாறு கவனியாது கிரீன்ரூமில் (நேபத்யத்தில்) உட்கார்ந்து கொண்டு தற்காலம் சில ஆக்டர்கள் செய்கிறபடி கதை பேசிக் கொண்டிருந்தால், இது சாத்யமாயிராது. ஆகவே இதை வாசிக்கும், நாடக மேடையில் நாம் பெயர் பெற வேண்டு மென்று விரும்பும் எனது இளைய நண்பர்கள், சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் அதைக் கைவிடாது, தேர்ந்த ஆக்டர்கள் நடிக்கும் பொழுதெல்லாம் அவர்களைக் கவனித்துக் கற்றுக் கொள்வார்களாக. எவ்வளவுதான் ஒரு ஆக்டர் இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று ஒத்திகைகளில் சொல்லிக் கொடுத்த போதிலும், அவனைப் பார்த்துக் கற்க வேண்டுமென்று விரும்புவோர்க்கு மேடையின் மீதேறி நடித்துக் காட்டுவதைப் போல் அவ்வளவு பிரயோஜனப்படாது.

இது காரணம் பற்றியே சென்ற நாற்பது வருஷங்களாகச் சமயம் வாய்க்கும் போதெல்லாம், கைவிடாது யாராவது சிறந்த ஆக்டர்கள் சென்னையில் வந்து நடிக்கும்போதெல்லாம், அவர்கள் இங்கிலீஷ்காரர்களாயினுமாகுக, ஆந்திரர்களாயினுமாகுக, கன்னட தேசத்தவர்களாயினுமாகுக, அவர்களைப் போய்க் கவனித்து வருகிறேன். “கற்றது கணைக்காலளவு கற்க நின்றது கடலளவு” என்னும் பழமொழியின்படி, இன்னமும் கற்க விரும்புகிறேன். மேற்சொன்னபடி கிருஷ்ணசாமி ஐயர் சித்ராங்கியாக நடிக்க ஒப்புக் கொண்ட பொழுது, எங்கள் முக்கியமானகஷ்டம் தீர்ந்த போதிலும், அவருடைய பாகமாகிய ரத்னாங்கி வேஷத்திற்கு ஒருவரைச் சீக்கிரத்தில் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. உடனே எங்கள் சபையிலிருந்து நடந்து போய், காயார் சி. தேசிகாச்சாரியார் என்பவரைப் பார்த்து, அவரை இந்த வேடம் பூணும்படி வேண்டிக் கொண்டேன். அவரும் இசைந்தார். அவர் இதற்குக் கெஞ்ச நாளைக்கு முன்பாகத்தான் எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தார். அதுவரையில் தமிழ் நாடக மேடையில் ஏறினவரே அன்று. பள்ளிக்கூடத்தில் ஆங்கில நாடகத்தில் ஏதோ ஒரு முறை இரண்டு முறை அவர் ஆக்டு செய்ததாக எனக்கு ஞாபகம். இவர்ஸ்திரீவேஷத்திற்குப் பொருத்தமாயிருப்பார் என்று முன்பே எண்ணியிருந்தேன். இவரும் தான் ஸ்திரீ வேஷம் பூண வேண்டுமென்று தனக்கு இச்சையிருப்பதாக எனக்குத் தெரிவித்திருந்தனர். ஆகவே இந்த சமயம் வாய்ந்ததும் அவரை அணுகி நான் கேட்க, அவரும் ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டனர்; ஆயினும் “ரத்னாங்கி பாகம் கொஞ்சம் பெரிதும் கஷ்டமாயினதுமாயிற்றே, இவ்வளவு சீக்கிரத்தில் நான் சரியாக அதைப் படிக்க முடியுமா?” என்று சந்தேகித்தார். “உனக்கு அந்தச் சந்தேகமே வேண்டாம், நான் எல்லாம் சரிப்படுத்திவிடுகிறேன்” என்று அவருக்கு உறுதி கொடுத்து, அந்த நான்கைந்து தினங்களும் அவருக்குச் சாயங்காலங்களில் ஒத்திகை செய்து கற்பித்தேன். அவர் மிகவும் நன்றாய் நடித்த விதத்தை அப்புறம் சொல்லுகிறேன்.

சென்னையில் சாரங்கதர நாடகத்தை முதல் முதல் நாங்கள் நடித்த பொழுது, பெங்களூரில் சுமந்திரனாக நடித்த ஸ்ரீமான் எம்.வை. ரங்கசாமி அய்யங்கார், யாது காரணத்தினாலேயோ அப்பாத்திரத்தை எடுத்துக்கொள்ளத் தடைப்பட்டது. அதன் பேரில் எனதுயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுதான் அதை நடிக்க வேண்டுமென்று என்னைக் கேட்டார். அவர் ஆண் வேடம் பூணுவது எனக்கிஷ்டமில்லாவிட்டாலும், அவர் வற்புறுத்துகிறாரேயென்று இசைந்தேன். என் நண்பருக்காக அவர் சக்திக்கேற்றபடி, சில புதுப் பாட்டுகளைக் கட்டிக் கொடுத்தேன். 

இந் நாடகமானது சென்னையில் முதல் முறை 1896 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி, மஹாசிவராத்திரி தினம் ஆடப்பட்டது. காயார் சி. தேசிகாசாரியார் ரத்னாங்கியாக மிகவும் நன்றாக நடித்தார். இவருக்காகவென்று கடைசியில் சாரங்கதரன் மடிந்ததும் அவன் உடல் மீது விழுந்து புலம்புவதாக ரத்னாங்கிக்கு வசனம் எழுதிக் கொடுத்தேன். இவருக்குச் சங்கீத ஞானம் கொஞ்சமுமில்லாதபடியால் ஒரு பாட்டும் பாடவில்லை; அப்படியிருந்தும் தன் வசனங்களை நன்றாய் நடித்து சபையோரையெல்லாம் மகிழ்வித்தார். கொஞ்சம் ஸ்தூல சரீரமுடையவராயிருந்தும், ஸ்திரீ வேஷம் இவருக்கு மிகவும் பொருந்தியதாயிருந்தது. முக அபிநயத்தில் ஸ்திரீ வேஷம் தரிப்பதில் இவர் மிகவும் கெட்டிக்காரரென்றே சொல்ல வேண்டும். சோக பாகத்தில், தத்ரூபமாய் நடித்து, முதல் வகுப்பில் இவர் ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமென்று வந்து உட்கார்ந்திருந்த இவரது தந்தை தாயாரைக் கண்ணீர் விடும்படி செய்தார். இவ்வளவு நன்றாய் நடித்தும், ஏதோ காரணத்தினால் எங்கள் சபையில் பிறகு இவர் இரண்டொரு முறை தவிர ஸ்திரீ வேஷம் பூண்டதாக எனக்கு ஞாபகமில்லை. இது எங்கள் சபையின் குறையென்றே நான் கூற வேண்டும்.

துரைசாமி அய்யங்காரும் ராஜகணபதி முதலியாரும் வழக்கம்போல் நன்றாய் நடித்து, சபையோருக்கு விடா நகைப்பை விளைத்தனர்.

அ. கிருஷ்ணசாமி ஐயர் சித்ராங்கியாக மிகவும் விமரிசையாக நடித்தார். இவரது பாட்டுகள் சபையோரையெல்லாம் மிகவும் களிக்கச் செய்தன். சித்ராங்கியின் அறைக்குள் சாரங்கதரன் புகுந்தவுடன், சித்ராங்கியாக இவர் ‘வாரும்! வாரும்!’ என்கிற பல்லவியுடன் கூடிய பாட்டு ஒன்றைப் பாடியது சித்ராங்கியை வெறுக்க வேண்டிய சாரங்கதரனையும் சந்தோஷிக்கச் செய்தது என்றுதான் கூற வேண்டும். இவர் இள வயதில் சோக பாகங்களாடுவதில் இவருக்கு இணையில்லை யென்றே கூற வேண்டும். அப்பொழுது நல்ல வாலிபத்திலிருந் தமையால், குரலும் கம்பீரமாயும் இனிமையாயுமிருந்தது. இவர் சித்ராங்கியாகக் கடைசிக் காட்சிகளில் நடித்ததும், மிகவும் அற்புதமாயிருந்தது.

எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு சுமந்திரனாக நடித்தது ஒன்றும் தவறாக இல்லாவிட்டாலும், வந்திருந்தவர் வந்திருந்தவர்களில் பெரும்பாலர் நன்றாயிருந்ததெனக் கூறியபோதிலும், என் மனத்திற்கு மாத்திரம் திருப்திகரமாயில்லை. ஸ்திரீவேஷம் தரிப்பதற்குப் பொருத்தமுடையவர்கள் ஆண் வேடம் தரிக்கலா காது என்பது என் கொள்கை. இக்கொள்கை அப்பொழுது மிருந்தது இப்பொழுதும் எனக்கிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், ஸ்திரீ வேடம் தரித்து சில முறை அரங்கத்தின்மீது ஆடிய பிறகு, ஆண் வேடம் தரித்தால், ஸ்திரீகளுக்குரிய அபிநயமானது அவர்கள் அறியாத படி வந்து விடுகிறது. ஆண் வேடம் சாதாரணமாகப் பூணுபவர்கள், எப்பொழுதாவது ஸ்திரீ வேடம் தரித்தால் ஆடவர்களுக்குரிய அபிநயம் கலந்து விடுகிறது. இதற்காக, முதலிலேயே நாடக மேடையின் மீதேற விரும்பும் ஒவ்வொரு ஆக்டரும் தனக்கு ஸ்திரீ வேடம் சரியானதா, அல்லது ஆண் வேடமே சரியானதாவென்று நன்றாய் ஆராய்ந்து மற்றவர்களுடைய அபிப்பிராயத்தையும் கேட்டுத் தீர்மானித்து அந்தத் தீர்மானத்தினின்றும் மாறாதிருப்பதே நலமாம் என அப்பொழுதும் எண்ணினேன். நாடக மேடை. அனுபவம் ஏறக்குறைய நாற்பது வருடங்கள் ஆகியும் இப்பொழுதும் எண்ணுகிறேன். இதற்கு உதாரணமாக எனது பழைய நண்பராகிய அ. கிருஷ்ணசாமி ஐயரையே எடுத்துக் கூறுவேன். இவர் ஸ்திரீ வேஷத்துக்குத்தான் உரித்தானவர் என்பது என் தீர்மானம். அவரும் அப்படியே ஒப்புக் கொள்வாரென்பதற்குத் தடையில்லை. இவர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து வருடங்களாக நாடக மேடையில் பெயர் எடுத்ததெல்லாம் ஸ்திரீ வேஷங்களி லேயே. லீலாவதியாகவோ, பத்மாவதியாகவோ, வரூதினி யாகவோ, சந்திரமதியாகவோ, சபலை யாகவோ, கௌரீ மணியாகவோ, சௌமாலினியாகவோ, சத்யபாமையாகவோ, கைகேயியாகவோ, இன்னும் இத்தகைய ஸ்திரீவேடங்களில் இவருக்கிணையில்லையென்றே சொல்ல வேண்டும். ஆயினும் இவர் இரண்டொரு முறை ஆண் வேடம் தரித்து, சாருதத்தனாகவும், நந்தனாகவும் நடித்தபொழுது, அநேகர் அவ்வளவு பொருத்தமாகவில்லை யென்றே சொன்னார்கள். அதுதான் எனது அபிப்பிராயமும். இந்த ஆண் வேடங்களில் இவர் நடிக்கும்பொழுது இவருமறியாதபடி ஸ்திரீகளின் அபிநயம் வந்து விடுகிறது என்பது என் அபிப்பிராயம். மற்றவர்களும் அப்படியே கூறியிருக்கின்றனர்.

எங்கள் சபையில் பல வருடங்களாகப் பெயர் பெற்ற எனது நண்பராகிய இவரைப்பற்றிக் குறையாகக் கூறுகிறேன் என்று இதை வாசிப்பவர்கள் எண்ணாதிருப்பார்களாக. அவரிடம் எனக்கு மிகுந்த நன்கு மதிப்புண்டென்பதை அவரும் அறிவார், மற்றவர்களும் அறிவார்கள். ஆயினும் அவர் ஆண் வேடமே எப்பொழுதும் பூணாதிருந்தால் நலமாயிருக்கும் என்பது என் அபிப்பிராயம். இதை அவரே ஒப்புக்கொள்வாரென்பது திண்ணம்.

இது காரணம்பற்றியே எனதுயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு சாரங்கதர நாடகத்தில் சிலமுறை சுமந்திரனாக நடித்த போதிலும், இதற்குப் பிறகு, அவரது ஆயுள் பரியந்தம் ஆண் வேடமேதரித்திலர். எனக்கு ஞாபகம் இருக்கிற வரையில், “ஆண் வேடம் எப்படி ஆடுகிறாய், நாங்கள் பார்க்க வேண்டும்” என்று எங்கள் சபையோர் சிலர் கேட்க அதற்கிணங்கி, இதற்கப்புறம் ஒரு முறைதான், “பேயல்ல பெண்மணியே’ என்னும் எனது நாடகத்தின் இடைக் காட்சியில், பின் பாட்டுக்காரனாக வந்தாரென நினைக்கிறேன்.

இச் சாரங்கதர நாடகத்தில், 1904ஆம் வருஷத்திற்குப் பிறகு, கிருஷ்ணசாமி ஐயருக்குப் பதிலாக, என் ஆருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவே சித்ராங்கியாக எங்கள் சபையில் நடித்து வந்தார். இச் சித்திராங்கி வேஷத்தையாடிய பலரை நான் பார்த்திருக்கிறேன். எல்லோரையும்விட. சி. ரங்கவடிவேலுவே, மிகுவும் மெச்சத்தக்கபடி நடித்தார் என்பது என் ஆய்ந்த அபிப்பிராயம். சாதாரணமாக, கேவலம் சிற்றின்பப் பிரியையாக நடித்துக் காட்டுகிறார்கள்; இவர் ஒருவர் தான் அச்சித்ராங்கியை மேம்பட்ட குணமுடைய ஸ்திரீயாக எடுத்துக் காட்டியுள்ளார். நான் முன்பே கூறியிருக்கிறபடி, சாரங்கதரன் மீது பழி சுமத்திய குற்றமொன்று தவிர, நான் எழுதியிருக்கிறபடி, சித்ராங்கி வேறு ஒரு குற்றமுமுடையவளல்ல; நாடக ஆசிரிய னாகிய என் அபிப்பிராயப்படி, சித்ராங்கியின் நற்குணங்களை யெல்லாம் சபையோர் கண்டு அறியும்படி, நடித்துக் காட்டியவர் இவரே. இந்நாடகத்தில் இவர் சித்ராங்கியாக வருகிறார் என்று கேள்விப்பட்டால், இந்நாடகத்திற்கு வசூல் எப்பொழுதும் அதிகமாக வரும். இது சென்னையில் மாத்திரமன்று, வேறு இடங்களிற்போய் சுகுண. விலாச சபையார் நாடகமாடும் பொழுதெல்லாம் அப்படியே. இவர் உயிருடன் இருந்தவரையில், எங்கள் சபை வெளியூருக்குப் போனபோதெல்லாம், மனோகரன், லீலாவதி, சுலோசனா முதலிய எங்கள் முக்கியமான நாடகங்களுடன் இதுவும் ஒன்றாக எப்பொழுதும் ஆடப்பட்டதென்றே சொல்ல வேண்டும்.

இவர், மேற்சொன்னபடி நாடகாபிமானிகளின் மனத்தைக் கவர்ந்ததற்கு, என்ன காரணங்கள் உள்ளன என்று எனக்குத் தெரிந்த வரையில் இங்குச் சற்று எழுதுகிறேன். இவர் 1895ஆம் வருஷமுதல், 1923ஆம் வருஷம் வரையில் சற்றேறக்குறைய 28 வருடங்கள், எங்கள் சபையில் முக்கியமான ஸ்திரீ வேடம் தரித்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த இருபத்தெட்டு வருடங்களிலும் எந்தப் பாகம் தனக்குக் கொடுக்கப்பட்ட போதிலும், அதை முதலில் நன்றாக மனனம் செய்து விடுவார். ஒத்திகைகளில், “இந்தப் பாகம் எனக்கு நன்றாய்த் தெரியும், நான் நாடக தினத்தில் ஆடி விடுகிறேன்” என்று சிலர் சொல்வதுபோல் கூறாமல் ஒன்று தவறாது மணிப் பிரகாரம் எல்லா ஒத்திகைகளுக்கும் வந்து நடத்துவார். ஏதாவது நூதனமான பாகம் இவருக்கு நான் கொடுத்தால், அந்தப் பாத்திரத்தை எப்படி நடிப்பது என்கிற விஷயம் தன் மனத்தில் நன்றாய் ஊன்றுகிறவரையில் என்னை சும்மா விட மாட்டார். ஒரு முறைக்குப் பன்முறை அதை நடத்திக் காட்டும்படி வற்புறுத்துவார்; சொல்லிக் கொடுப்பதில் நான் தளர்ச்சியடைந்தாலும் அடைவேனேயொழியக் கற்றுக் கொள்ளுவதில் அவர்தளர்ச்சியடையமாட்டார். பிறகுதான் எடுத்துக்கொண்ட பாத்திரத்திற்குத் தக்கபடி பாட்டுகளை, என்னைக் கொண்டாவது, இதரர்களைக் கொண்டாவது கட்டிக் கொடுக்கச்செய்வார்; அப்பாட்டுகளெல்லாம் சந்தர்ப்பத்திற்குச் சரியாயிருக்கின்றனவா என்று என்னிடமிருந்து தெரிந்து கொண்டு, பிறகு சங்கீதம் சரியாயிருக்கிறதாவென, சங்கீதப் பயிற்சியில் தேர்ந்த எங்கள் சபை அங்கத்தினரைக் கொண்டு, சிட்சை சொல்லிக் கொள்வார். வேஷம் பூணுவதில் சிறிய விஷயங்களையும் கவனித்து, மிக விமரிசையாக வேஷம் தரிப்பார். கை கால்களுக்கும் வர்ணம் பூசிக்கொண்டு நகங்களுக்கும் தீட்டவேண்டிய வர்ணத்தைத் தீட்டுவார். இச் சந்தர்ப்பத்தில் நாடக மேடைமீது வரவிரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு ஒரு விஷயம் அறிவிக்க விரும்புகிறேன். சாதாரணமாக ஆக்டர்கள் முகத்தில் மாத்திரம் வர்ணத்தைப் பூசிக்கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். மறதியினாலோ, அல்லது சோம்பலினாலோ கைகால்களுக்கு வர்ணம் தீட்டுவதில்லை சிலர். அது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எவ்வளவு அருவருப்பைத் தருகின்றது என்பது, வெளியிலிருந்து கண்ணால் கண்டவர்களுக்குத்தான் தெரியும். கை கால்களுக்கு வர்ணம் தீட்டுவதிலும், அதனுடன் நின்றால் போதாது; நகங்களுக்கும் கொஞ்சம் சிவப்பு வர்ணம் தீட்டாவிட்டால், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒருவித வியாதி பிடித்த அவயவங்கள் போலத் தோன்றும். இது சிறு விஷயமாயி ருந்தபோதிலும் இதை ஆக்டர்கள் கவனிப்பார்களாக.

ஆடையாபரணங்களை அணிவதிலும் எனது உயிர் நண்பர் மிகவும் ஜாக்கிரதையாயிருப்பார். சேலை கட்டுவதில் ஏதாவது கொஞ்சம் தப்பாகச் சுருங்கலாக இருந்த போதிலும், அவிழ்த்துத் திருப்பிக் கட்டுவார். ‘இதென்ன? அல்ப விஷயம்! இதை யார் கவனிக்கப் போகிறார்கள்’ என்று சும்மா இருந்து விடமாட்டார். எல்லா விஷயங்களிலும் இவர் இவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டபடியால்தான், அவர் மேடையின் மீது தோன்றும் பொழுதெல்லாம், ஸ்திரீகள் உட்பட வந்திருப்பவர்களெல்லாம் சந்தோஷப்படும்படி இருந்தது. ஒரு முறை எங்கள் சபையின் நாடகமொன்றில் நடந்த விருத்தாந்தத்தை இங்கு எழுதுகிறேன். காலஞ்சென்ற ராவ்பகதூர் அநந்தாசார்லு, சி.ஐ.இ. அவர்கள் ஒருமுறை தமிழ் நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிய ஓர் ஆங்கில மாதை விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு அழைத்துக்கொண்டு வந்தார். பாதி நாடகம் நடந்த பிறகு அரங்கத்தில் வெகு விமரிசையாக நடித்துக்கொண்டிருந்த சி.ரங்கவடிவேலுவைப் பார்த்து இது யார் என்று கேட்க, அநந்தாசார்லு அவர்கள்; இவர் ஒரு ஹைகோர்ட்டு வக்கீல் என்று தெரிவித்தார். “ஆடவனா அது? நான் நம்பவில்லை” என்று சொல்லி, அநந்தாசார்லு இடைக் காலத்தில் (Interval) நேபத்யத்துக்குள் அம் மாது சிரோமணியை அழைத்து வந்து நேராக சி. ரங்கவடிவேலுவைக் காட்டியும், சந்தேகம் தெளியாதவராய், “இப்பெண் ஆண் பிள்ளையா!” என்று கேட்டார்கள்! அவரை முதன் முதல் அரங்கத்தில் பார்க்கும், அதற்கு முன் அறியாத பலர், அவர் பெண் பிள்ளையே என்று எண்ணிமருண்டது எனது நண்பர்கள் பலர் அறிந்த விஷயமே. 

எனது நண்பர் தான் நடிக்க மிகவும் ஆவல் கொண்டிருந்த வேடங்களில் இந்த சித்ராங்கி யொன்று. இதைப்பற்றியே நான் என்றும் மறக்கமுடியாத துக்ககரமான நினைவு ஒன்று உண்டு.

எங்கள் சபையில் எனதாருயிர் நண்பர், கடைசியாக ஒத்திகை செய்தது இந்த சித்ராங்கி பாத்திரமேயாம். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை சாரங்கதர நாடகம் நடத்துவதற்காக நான் ஒத்திகை நடத்த வேண்டி வந்தது. அச்சமயம் தனக்கு மிகவும் தலை நோயாயிருக்கிறதென எனது நண்பர் கூற, “ஆனால் நீ ஒத்திகை செய்ய வேண்டாம். உன் உடம்பை ஜாக்கிரதை யாகப் பார்த்துக்கொள்” என்று நான் சொல்லியும், என் வார்த்தையைக் கேளாது, தன் பாட்டுகளை யெல்லாம் பாடி ஒத்திகையை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். போனதும் 102 டிக்ரி ஜுரம் வந்து விட்டது. ஒத்திகையினால் தான்ஜுரம் வந்ததென்று நான் சொல்லவேயில்லை. ஆயினும் அந்த ஒத்திகையினால் அது அதிகப்பட்டது என்பது என் அபிப்பிராயம். அதுதான் அவர்கடைசி முறை எங்கள் சபைக்கு வந்தது. அப்படியே படுக்கையாயிருந்து, காலவியோசமானார் ஒரு விதத்தில் எனது நண்பர் தன் ஆருயிரை எங்கள் சபைக்காகக் கொடுத்தார் என்றே நான் கூற வேண்டும். எனது நண்பனைப்பற்றி இவ்வளவு அதிகமாக நான் எழுதுவது, இதைப் படிப்பவர்களுக்கு ஓர் ஆச்சரியமாயிருக்கலாம். அப்படியிருந்தால் என்னை மன்னிக்கும்படிக் கேட்டுக் கொள்ளுகிறேன். 28 வருஷங்கள் என்னுடன், எங்கள் சபையின் அரங்கத்தில் நடித்த எனது நண்பனுக்கு நான் செய்ய வேண்டிய கைம்மாறில் நூற்றிலொரு பங்கையாவது, இவற்றையெல்லாம் எழுதி, செலுத்த முயல்கிறேன்.