நாடக மேடை நினைவுகள்/பத்தொன்பதாம் அத்தியாயம்
இனி 1909ஆம் வருஷத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன்.
இவ் வருஷம் எங்கள் சபை அங்கத்தினராயிருந்த பி.எஸ். துரைசாமி ஐயங்காரால் எழுதப்பட்ட ‘ஜ்வலிதா - ரமணன்’ என்னும் தமிழ் நாடகம் ஆடப்பட்டது. இது ஷேக்ஸ்பியர் மகாகவி எழுதிய, “ரோமியோ - ஜூலியட்” (Romeo-Juliet) என்னும் நாடகத்தின் மொழி பெயர்ப்பாம். இவர் இதற்கப்புறம் யுத்த லோலன், பிரஹ்லாதன், வள்ளித் திருமணம் முதலிய நாடகங்களைத் தமிழில் எழுதியிருக்கிறார். இவர் நாடகங்களை எழுதுவதுமன்றி, அவைகளில் நடிக்கும் திறமையும் வாய்ந்தவர். அப்படியிருந்தும் தனது நாடகத்தில் என்னைக் கதாநாயகனான ரமணன் (Romeo) பாத்திரத்தை எடுத்துக் கொள்ளும்படிக் கேட்க, நானும் இசைந்தேன். அதன் பேரில் ஜ்வலிதை (Juliet) பாத்திரம் எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவுக்கே கொடுக்கப்பட்டது. இந் நாடகம் நாங்கள் விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடித்த பொழுது, முக்கியமான ஒரு சமாச்சாரம்தான் எனக்கு ஞாபகமிருக்கிறது. சாதாரணமாக நான் மேடையின் மீது தோன்றும்பொழுது, ஏதாவது மிகுந்த முக்கியமான சந்தர்ப்பங்களில்தான் சபையோர் கரகோஷம் செய்வார்கள்; இந்நாடகத்தில் நான் முதற் காட்சியில் தோன்றியவுடன் கரகோஷம் செய்யவே, ‘இதென்ன விந்தை! இப்படி எப்பொழுதும் நடந்ததில்லையே! இதற்குக் காரணம் என்ன’ வென்று எனது நண்பர்களைக் கேட்க அவர்கள், “இதுவரையில் மற்றவர்களுடைய நாடகங்களில் ஆடுவதில்லை யென்று தீர்மானித்த நீ, இதில் அத் தீர்மானத்தினின்றும் பிறழும்படி நேரிட்டதே எனக் கை கொட்டினோம்!” என்று தெரிவித்தார்கள். இந்தத் தர்மசங்கட சந்தர்ப்பத்திற்கு நான் என்ன சொல்வது? நான் அவ்வாறு மற்றவர்களுடைய நாடகங்களில் ஆடக்கூடாது என்று எப்பொழுதும் தீர்மானம் செய்துகொண்டவனல்லன். எனதுயிர் நண்பர் என்னுடனன்றி மற்றவர்களுடன் நாடக மேடையில் ஆடுவதற்குத் தனக்கு இஷ்டமில்லை என்று எனக்குத் தெரிவித்த பிறகு, நானும் அவருடனன்றி மற்றவர்களுடன் அரங்கில் ஆடுவதில்லையென்று தீர்மானித்ததன்றி வேறொன்றும் கிடையாது. ஆகவே, இதற்குமுன் எங்கள் சபையோரால் ஆடப்பட்ட மற்றவர்கள் எழுதிய இரண்டொரு நாடகங்களில், நாங்களிருவரும் ஒன்றாய் ஆடக்கூடிய தக்க பாத்திரங்கள் கிடைக்காமையால், அப்படிச் செய்யவில்லை. இதுதான் உண்மை . இது இப்படியிருக்க, நான் இதரர்களு டைய நாடகங்களில் ஆடக்கூடாது என்கிற கொள்கை உடையவனாயிருந்தேன் என்று வீண் அபவாதம் மற்றவர்களுடைய மனத்தில் இருந்தால் இதற்கு நான் என் செய்வது? இதற்குப் பிறகு நானும் என்னுயிர் நண்பரும் மற்ற நூலாசிரியர்கள் எழுதிய நாகடங்களில் பலவற்றை ஆடியிருக்கிறோம். உலகில் இத்தகைய தவறான எண்ணங்கள் உண்டாவதைத் தடுக்க யாரால் முடியும்?
இவ் வருஷம் நடந்த மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம் என்ன வென்றால், எங்கள் சபையார் ராஜப்பிரதிநிதி (Viceroy) லார்ட் மின்டோ (Lord Minto) சென்னைக்கு விஜயம் செய்த பொழுது, காஸ்மாபாலிடன் கிளப்பில், அவருக்குப் பெரும் விருந் தொன்று அளித்தகாலையில், அவர் முன்னிலையில் நடித்ததேயாம். இராஜப்பிரதிநிதிக்கு மேற்சொன்ன கிளப்பார் உபசரணை செய்ய வேண்டு மென்று தீர்மானித்தவுடன் எங்கள் குடும்ப சிநேகிதராகிய காலஞ்சென்ற பிட்டி. தியாகராய செட்டியார் அவர்கள் என்னை அழைத்து “சுகுண விலாச சபையார் ஒரு மணி நேரத்திற்கு ஏதாவது காட்சிகள் ஆட வேண்டும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் நீ செய்துவிடு” என்று சொன்னார். ‘ஆகட்டும்’ என்று ஒப்புக் கொண்டு அநேகம் ஆக்டர்கள் வரக்கூடியதாகிய ‘மனோஹரன்’ நாடகத்தில் முதல் - அங்கம் நான்காவது காட்சியை ஆடத் தீர்மானித்தோம். அன்றியும் ஹரிச்சந்திர நாடகத்திலிருந்து சில தோற்றக் காட்சிகளைக் காட்ட வேண்டும் என்று நிச்சயித்தோம். எல்லாம் தீர்மானித்தான பிறகு, நாடகத்திற்கு இரண்டு நாள் முன்னதாக பிட்டி. தியாகராய செட்டியார் என்னை அவசரமாகக் கூப்பிட்டனுப்பினார்; என்னவென்று போய்க் கேட்க “ரங்கவடிவேலுக்கு நாட்டியம் ஆடத் தெரியுமாமே, எப்படியாவது அதையும் காண்பிக்கவேண்டும்” என்று வற்புறுத்தினார். காட்சியின் மத்தியில் அது வர இடமில்லையே என்று நான் எவ்வளவு ஆட்சேபித்தும், “அதெல்லாம் உதவாது. எப்படியாவது அதை நீ ஏற்பாடு செய்துதான் தீரவேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தார். அதன்பேரில் சபைக்கு வந்து எனதுயிர் நண்பனுடன் கலந்து பேசியபொழுது, அவரும் அவர்களுக்கெதிரில் ஆட வேண்டுமென்று இச்சை கொண்டிருப்பதை அறிந்தேன். அதன்மீது, சரியென்று ஒப்புக்கொண்டு, நான் எழுதிய நாடகத்திலில்லாத ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் காட்சியின் முடிவில் அவரை நாட்டியம் செய்யும்படி ஏற்பாடு செய்தேன். ஏறக்குறைய ஆறு மாதம் எனதுயிர் நண்பர் கற்றுக்கொண்டு, இரண்டொரு முறை சபையில் ஆடியதைப் பார்த்தவர்களெல்லாம் மெச்சியது, எப்படியோ பிட்டி. தியாகராய செட்டியார் செவிக்கு எட்டி, இவ்வாறு அவர் பலாத்காரம் செய்யும்படி நேரிட்டது போலும்.
அன்றைத் தினம் காட்சியின் கடைசியில் எனதுயிர் நண்பர் நாட்டியம் ஆடியது எல்லோருடைய மனத்தையும் கவர்ந்ததெனச் சொல்வது அதிகமாகாது. இவருக்கு முன் ஆமெடுர் (Amateur) நாடக மேடையில் இப் பரத சாஸ்திரம் கற்றவர்கள் இல்லையென்றே சொல்லவேண்டும். ஆடவன் ஸ்திரீ வேஷம் பூணுவதே கடினம்; அதுவும் ஸ்திரீயைப் போல் நர்த்தனம் செய்வதென்றால் அதிலும் கடினம்; எனதுயிர் நண்பர் இக்கலையைக் கற்க ஆரம்பித்தபோது, சில மாதங்கள், தான் தக்க தேர்ச்சியடையும் வரையில், எனக்குக்கூடத் தெரியாதபடி ரகசியமாய் வைத்திருந்தார். பிறகு தக்கபடி கற்றபின் என்னை மாத்திரம் தனியாக வரவழைத்து, ஆடிக் காண்பித்தார். நான் மிகவும் நன்றாயிருக்கிறதென . ஒப்புக்கொண்ட பின்புதான் எங்கள் சபையில் ஆட ஆரம்பித்தார். இவருக்குப் பிறகு, எனது நண்பர்களில் அனேகர் இக்கடினமான பரத சாஸ்திரத்தைக் கற்று ஆடியதை நான் பார்த்திருக்கிறேன். ஆயினும் என் உள்ளத்து உண்மை உணர்ச்சியை நான் உரைக்க வேண்டின், அவரைப்போல், விநயத்துடன் அழகுற ஆடும்படியானவர்களைக் கண்டிலன் என்றே கூற வேண்டும். இச்சபையில் இவருக்குச் சற்று அருகில் வந்தவர், கே. நாகரத்தினம் ஐயரே என்பது என் துணிபு. நாட்டியம் ஆடுவதென்றால் அதற்குரிய அங்கலட்சணங்களெல்லாம் அமைந்திருக்க வேண்டும்; தேகம் அதி ஸ்தூலமாயுமிருக்கக்கூடாது, அதிக மெலிவடைந்துமிருக்கலாகாது; அதிக உயரமாயும் இருக்கலாகாது; அதிகக் குட்டையாயு மிருக்கலாகாது; முகத்தில் மிகுந்த சௌந்தர்யமிருக்க வேண்டும்; ஹஸ்தங்கள் பிடிப்பதில் அழகுறச் செய்ய வேண்டும்; பாதங்களினால் தாளம் போடும் போது துமுக்குவது போலிருக்கலாகாது; இவைகளெல்லாம் ஒருங்கு சேர்வது கடினம் போலும்.
எனதுயிர் நண்பர் அன்று ஆடியதைக் கண்ட அநேகர் கவர்னர் ஜெனரலுக்காக, அதைச் சீக்கிரம் முடிக்க வேண்டி வந்தது. அதை இன்னும் சவிஸ்தாரமாகக் காண வேண்டு மென்று கேட்டுக்கொள்ள, தியாகராய செட்டியார், மறு நாளும் கிளப்பில் ஏற்படுத்திய அரங்கத்தில், இதைப் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார். அதன் பேரில், “மாதர் மகாஜன சபா” என்று ஒரு சிறு காட்சியை ஏற்படுத்தி, அதில் சி. ரங்கவடிவேலு மறுநாளும் நர்த்தனம் செய்யும்படி, ஏற்படுத்தினோம். அதனுடன்கூட “சபாபதி”யிலிருந்து ஒரு காட்சியும் ஆடினோம்.
முன்னால் இங்கு நான் மனோஹரனாக நடித்த பொழுது நேரிட்ட ஓர் அசந்தர்ப்பத்தை எழுத விரும்புகிறேன். இக் காட்சியில் நான் விரைந்து வரவேண்டியிருக்கிறது. அப்படி விரைந்து வரும்பொழுது, நான் அணிந்திருந்த பீதாம்பரத்தின் மூல கச்சம் அவிழ்ந்து விட்டது. அதை அறிந்தவனாய் ஒரு கரத்தால் கீழே அவிழ்ந்து விழாமலிருக்க அதைப் பிடித்துக்கொண்டு, அங்கிருந்த ஆசனத்தில் பத்மாவதிக்கும் விஜயாளுக்கும் இடையில் உட்கார்ந்து கொண்டேன். பிறகு நான் விஜயாளுடன் எழுந்திருந்து பேச வேண்டிய வார்த்தைகளை எல்லாம் அவ்விடமே உட்கார்ந்து பேசி முடித்தேன். இதைக் கண்டு கோபித்து எனதுயிர் நண்பர் “இதென்ன அங்கிருந்தே பேசுகிறீர்களே!” என்று மெல்லக் கேட்டார். ‘பிறகு அதற்குப் பதில் சொல்லுகிறேன், காட்சி முடியட்டும்’ என்று சமாதானம் சொல்லிக் காட்சியெல்லாம் ஆடி முடிந்தவுடன், நான் உட்கார்ந்தே பேசியதன் காரணத்தை அவருக்கும், என்னுடன் நடித்த மற்றவர்களுக்கும் எடுத்துக் கூற எல்லோரும் நகைத்தனர். இதை நான் இங்கெடுத்தெழுதியதற்கு ஒரு முக்கியக் காரணமுண்டு. இம் மாதிரியான அசந்தர்ப்பங்கள் சில முறை நாடக மேடையில் நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை எங்கள் சபையிலேயே ஒரு ஆக்டருடைய ஆடையவ்வளவும் நெகிழ்ந்து கீழே விழுந்து விட்டது! தெய்வாதீனமாக, அவர் உள்ளே சிறு நிஜார் ஒன்று அணிந்திருந்தார்! ஆகவே ஆக்டர்களெல்லாம் இதைக் கவனித்து, வேகமாக ஏதாவது நடிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் இருந்தால் அச்சந்தர்ப்பங்களில் தாங்கள் அணிந்திருக்கும் ஆடை அலங்கோல மாகாதபடி, முன்பே அதைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அதி அவசியம். அது முதல் இது வரையில் நான் மனோஹரன் முதலிய வேஷங்கள் தரிக்கும் போதெல்லாம், நாடகம் ஆரம்பத்திற்கு முன், கீழே விழுந்தோ ஓடியோ ஆடை அலங்கோலமாகப் போகத்தக்க சந்தர்ப்பமிருந்தால், அதைத் திரைக்குப் பின் நடித்துப் பார்த்து, நான் அணியும் உடை நெகிழாமலிருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது வழக்கமாய் விட்டது; எனது இளய நண்பர்கள் இதைக் கொஞ்சம் கவனிப்பார்களென்றே இதை எழுதலானேன்.
இனி 1910ஆம் வருஷம் எங்கள் சபையில் நிகழ்ந்த முக்கியக் காரியங்களை யெழுதுகிறேன். இவ்வருஷம் எங்கள் சபையோரால் விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குக் கொடுக்கப்பட்ட, காலஞ் சென்ற மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியின் படமானது சென்னை கவர்னர், சர் ஆர்தர்லாலி (Sir Arthur Lawley) என்பவரால் திறக்கப்பட்டது. அச்சமயம் வேதம் வெங்கடாசல ஐயரவர்கள் எழுதிய ராணியின் சொப்பனம் என்னும் ஒரு சிறு நாடிகை ஆடப்பட்டது; சில தோற்றக் காட்சிகளையும் காட்டினோம். கவர்னர் அவர்கள் சபையை மிகவும் சிலாகித்துப் பேசினார்.
இவ்வருஷம் சபையின் ஆரம்ப முதல் கண்டக்டராயிருந்த வி. திருமலைப்பிள்ளையவர்கள், வயது மேலிருந்தபடியால் அவ் வேலையைக் கவனிக்கக்கூடாமற் போகவே, பொதுவாகக் கண்டக்டர் என்கிற பெயரை மாற்றி, தமிழ் கண்டக்டர், தெலுங்கு கண்டக்டர் என்று இரு பிரிவாக்கப்பட்டது. அதன்பேரில் பொதுச் சபைக் கூட்டத்தில் என்னை தமிழ் கண்டக்டராக நியமித்தார்கள்.
இவ்வருஷம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டத்திற்காக விக்டோரியா பப்ளிக் ஹாலுக்குப் பின்புறம் இருக்கும், நாங்கள் டென்னிஸ் விளையாடும் இடத்தில், ஒரு சிறு மேடை ஏற்படுத்தி, அதில் ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவியின் நாடகங்களினின்றும், என்னால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட சில காட்சிகளை ஆடினோம்.
இவ்வருஷம் எங்கள் சபையின் சரித்திரத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சி யென்னவென்றால், இதுவரையில் விக்டோரியா பப்ளிக் ஹாலில், மேற்குப்புறமுள்ள ஒரு சிறு அறையில் இருந்த நாங்கள், விக்டோரியா ஹாலின் கீழ்ப்பாகம் முழுவதும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, இப்பொழுது இருக்கும் இடத்திற்கு நாங்கள் குடி புகுந்ததேயாம். இவ் வருஷம் செப்டம்பர் மாதம் வரையில் அவ்விடம் மர்க்கென்டைல் அண்டு மெரீன் கிளப் (Mercantile & Marine Club) என்று ஒரு கிளப் இருந்தது; அந்த கிளப் க்ஷணித்துப் போய், அவர்களிருந்த இடத்தை ஒழித்து விட்டனர். அதன் பேரில் விக்டோரியா பப்ளிக் ஹால் டிரஸ்டிகளின் அனுமதியின் பேரில், அவ்விடத்தை மாதம் ஒன்றுக்கு ரூபாய் 125 வாடகைக்குப் பேசிக்கொண்டு குடி புகுந்தோம். இப்படி நாங்கள் அவ்விடம் போகப்போகிறோம் என்கிற சங்கதியைக் கேள்வியுற்ற காலஞ்சென்ற சர். வி. சி. தேசிகாச்சாரியார் அவர்கள் என்னை அழைத்து, “என்ன சம்பந்த முதலியார், இது வரையில் அவ்விடமிருந்த” அநேக கிளப்புகள் முன்னுக்கு வரவில்லையே! உங்கள் சபை இதுவரையில் விருத்தியடைந்து கொண்டே வந்திருக்கிறதே, நீங்கள் அவ்விடம் போனால் எப்படியிருக்குமோ?” என்று சொன்னார். அவர் எங்கள் சபையின் நன்மையையே கோரி இவ்வாறு எச்சரித்தார் என்பதற்கு ஐயமில்லை. அதன்மீது நான், “எக்காரியத்தை நான் தொடங்கினாலும், ஸ்வாமியின் பாரம் என்று அவர்மீது பாரத்தைச் சுமத்தி ஆரம்பிக்கிறேன். அவர் எங்கள் சபையைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்” என்று விடை பகர்ந்தேன். ஆயினும் நாங்கள் இவ்வாறு இடம் பெயர்ந்தது இடையூறுகள் இன்றியன்று; பல ஆட்சேபங்கள் நேரிட்டன. முக்கியமாக, இங்குச் செல்வதென்றால் 125 ரூபாய் மாதம் வாடகை கொடுக்க வேண்டுமே என்பதாம். இதுவரையில் கேவலம் நாடக சபையாயிருந்ததை, ஒரு கிளப்பாக ஆக்க வேண்டியிருந்த படியால் பில்லியர்ட்ஸ் (Billiards) முதலிய ஆட்டங் களுக்குரிய செலவையும் ஏற்க வேண்டி வந்தபடியால், இதுவரையில், அங்கத்தினருக்கு மாதச் சந்தாக் கட்டணம் 8 அணாவாகவிருத்ததை ஒரு ரூபாயாக அதிகப்படுத்த வேண்டியதாயிற்று. இதற்காகச் சபையின் பொது ஜனக் கூட்டம் கூடி, அவர்கள் சம்மதத்தைப் பெற வேண்டியதாயிருந்தது. இதற்குப் பலர் ஆட்சேபித்தனர். இவர்களுடைய ஆட்சேபணையையெல்லாம் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானுமாக, மெல்லச் சமாதானப்படுத்தினோம். ஆயினும், அச் சமயம் ஆட்சேபித்தவர்களுள் ஒருவராகிய, பி.எஸ். துரைசாமி ஐயங்கார் அவர்கள் கூறிய வார்த்தை மாத்திரம் எனக்கு மனத்தில் மிகவும் உறுத்தியது. அதை இங்கு நான் எழுதக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் அன்றைத் தினம் பொதுக்கூட்டத்தில் கூறிய வார்த்தைகளாவது: “இதுவரை யில் நாடக சபையாயிருந்த இதை ஒரு கிளப்பாக மாற்றுவீர்களானால், பிறகு, வெறுங்கிளப்பாக மாறிவிடுமேயொழிய, நாடக சபை என்கிற பெயர் அழிந்துவிடும். இப்பொழுதே சொன்னேன்!” என்பதேயாம். இதை எனது பழைய நண்பர்களும் நானும் இந்த இருபத்தொரு வருடங்களாகக் கவனித்து அப்படிக் கெடுதி ஒன்றும் நேரிடா வண்ணம், எங்கள் - சபையைக் காத்து வந்தோம். இனிச் சபையின் பாரத்தைத் தோள் மீது ஏற்றுக்கொண்ட எங்கள் சபையின் இளைய அங்கத்தினரும், அப்படியே சுகுண விலாச சபை, முக்கியமாக நாடக சபையென்னும் பெயர் அழியாது நீடூழிக் காலம் காப்பார்களாக!
இவ்வாறு சபையை ஒரு கிளப்பாக மாற்ற வேண்டிய தற்காக, பில்லியர்ட் டேபில் முதலிய செலவுகளன்றி, மின்சார விளக்குகள் போடுவதற்காகவும், நாற்காலிகள் முதலிய சாமான்கள் வாங்குவதற்காகவும், அதிகச் செலவு பிடித்தபோதிலும், இவ்வருஷம் எங்கள் சபைக்கு 191 அங்கத்தினர் புதிதாகச் சேர்ந்தபடியால் சபைக்குப் பொருள் நஷ்டமின்றிச் சமாளித்தோம். மாதாந்தரக் கட்டணத்தை அதிகப்படுத்தினால் எங்கள் அங்கத்தினர் குறைந்து போவார்களோ என்று நான் பயந்திருந்ததற்கு, இதுவரையில் எந்த வருஷமும் இல்லாதபடி, அதிகமாகப் புதிய அங்கத்தினர்கள் சேர்ந்தனர்! இது எங்கள் சபையின் அதிர்ஷ்ட மென்றேனும், தெய்வ கடாட்சமென்றேனும் அவரவர்கள் இஷ்டப்படி எண்ணிக்கொள்ளலாம். இது முதல் எல்லா விஷயங்களிலும் சபையானது அபிவிருத்தியடைய ஆரம்பித்தது என்றே கூறவேண்டும். ஒரு டென்னிஸ் கோர்ட்டாயிருந்ததை, இரண்டாக்கி, பிறகு மூன்றும் ஆக்கினோம். இது முதல் வருஷத்திற்கு இருபத்தைந்து முப்பது நாடகங்கள் கொடுக்கத் தலைப்பட்டோம். இது முதல் சபா தினக் கொண்டாட்டமும், தசராக் கொண்டாட்ட மும் மிகவும் பலப்பட்டன; சபை தினக் கொண்டாட்டத்தைச் சார்ந்த வனபோஜனத்திற்கு (Picnic) இவ்வருஷம் 200 பெயர் வந்திருந்தனர். தசராக் கொண்டாட்டத்தில், விக்டோரியா ஹால் கீழ்ப்பக்கம் முழுவதும் சிற்றுண்டிக்காக ஏற்படுத்தி, மேல் மாடியில் நாடகங்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகவே எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்குமிடத்து, இவ்வருஷம், எங்கள் சபையின் சரித்திரத்தில் மிகவும் முக்கியமானதென்றே கருதல் வேண்டும்.
இவ்வருஷம் நான் எழுதிய புதிய நாடகம் “பொன் விலங்குகள்” என்பதாம். இதுதான் நான் முதல் முதல் எழுதிய சோஷல் நாடகம் (Social drama). சோஷல் டிராமா என்பதைச் சரியாகத் தமிழ்ப்படுத்த அசக்தனாயிருக்கிறேன்; ஒருவாறு ஜன சமூக நாடகம் அல்லது பொதுஜன நாடகம் என்று கூறலாம்; ஆயினும் அவ்விரண்டு பதங்களும் எனக்குத் திருப்திகரமாயில்லை. இதை வாசிக்கும் நண்பர் யாராவது இந்தச் சோஷல் என்கிற பதத்திற்குச் சரியான தமிழ்ப் பதம் கூறுவார்களாயின் அவர்களுக்கு நன்றியறிதலுடையவனாயிருப்பேன். இத்தகைய நாடகங்கள், ராஜாக்கள் தேவதைகள் முதலியவர்களைப்பற்றிக் கூறாது, பொது ஜனங்கள் அல்லது தற்கால ஜனங்களைப் பற்றிக் கூறுவதாகும். இதை நான் எழுத நேரிட்ட காரணம் அடியில் வருமாறு: சென்ற வருஷத்தில் கடைசியில், எங்கள் சபையார் தற்காலத் தமிழ் நாடக மேடையில், இப்படிப்பட்ட நாடகங் களில்லாத குறையைத் தீர்க்கவேண்டுமென்று தீர்மானித்து, இத்தகைய நாடகங்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, தமிழ் நாடகத்திற்கு ஒரு பொன் பதக்கமும் (Medel), தெலுங்கு நாடகத்திற்கு ஒரு பொன் பதக்கமும் அளிப்பதாக விளம்பரம் செய்தனர். அதற்காகச் சில நிபந்தனைகளும் ஏற்படுத்தினர். அவையாவன: கதை புதிதாக இருக்கவேண்டும்; தற்காலத் திய ஜனசமூகத்தைச் சேர்ந்ததாயிருக்க வேண்டும்; நாடகாசிரியன் பரிசோதகர்கள் தீர்மானிக்கும் வரையில் தன் பெயரை வெளியிடக் கூடாது; மற்றவர்கள் உதவியைக் கொண்டு எழுதலாகாது. தானாக எழுதியதாயிருக்க வேண்டும் என்பவுையாம். சபையிலுள்ள அங்கத்தினர் மாத்திரமின்றி, மற்றவர்களும் இதற்குப் பிரயத்தனப்படலாம் என்றும் தெரிவித்தனர். அதன் மீதுதான் இப் ‘பொன் விலங்குகள்’ என்னும் நாடகத்தை எழுதியனுப்பினேன்.
எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் இதனுடன் மொத்தம் 11 நாடகங்கள் அனுப்பப்பட்டன. இவைகளையெல்லாம் பரீட்சித்து எதற்குப் பரிசு கொடுக்கவேண்டு மென்று தீர்மானிப்பதற்காக, காலஞ்சென்ற பச்சையப்பன் கலாசாலையில் தமிழ் வித்வானாக இருந்த, தி. செல்வகேசவராய முதலியார் எம்.ஏ.ஒன்று; திவான் பகதூர் மாசிலாமணிப் பிள்ளை அவர்கள் இரண்டு; திவான்பகதூர் எம்.எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்கள் மூன்று; இவர்களை ஏற்படுத்தினார்கள். இம் மூவரும், அப் பதினோரு நாடகங்களையும் பரிசோதித்துப் பார்த்து, “பொன் விலங்குகள்” என்னும் நாடகத்திற்குத்தான் பரிசளிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்த பிறகுதான், இதை எழுதினவன் நான் என்று, அவர்கள் உட்பட, எல்லோருக்கும் தெரிவிக்கப்பட்டது; இம்மாதிரியே தெலுங்கில், வே. வெங்கடேச சாஸ்திரியார் எழுதிய, “உபயப்பிரஷ்டம்” என்னும் தெலுங்கு நாடகத்திற்கு, தெலுங்குப் பரிசு கொடுக்கப்பட்டது.
இப் “பொன் விலங்குகள்” என்னும் நாடகத்தின் கதையைப் பற்றி நான் எழுத வேண்டிய அவசியமில்லை; என் நண்பர்கள் பெரும்பாலும் இதைப் படித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் பாட்டென்பதே கிடையாது. கதா நாயகியாகிய பங்கஜவல்லி, சங்கீதமாகப் பாடும் ஒரு விருத்தம் தவிர, சாதாரணமாக நாடகங்களில் பாடும் பாட்டுகள் ஒன்றேனும் கிடையாது. இதனால், இதை மேடையில் நடித்தால் ஜனங்களுக்குச் சந்தோஷத்தையுண்டு பண்ணுமோ என்று எங்கள் அங்கத்தினர் பலர் ஐயமுற்றனர். ஆயினும் இவ்வருஷம் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இதை ஆடினபொழுது, அந்த ஐயமெல்லாம் நீங்கியது. விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஜனங்கள் நிறைந்திருந்தனர். எனக்கு ஞாபகமிருக்கிறபடி சற்றேறக்குறைய நானூறு ரூபாய் வசூலாயிற்று; வசூல் அதிகமானது பெரிதல்ல, வந்தவர்கள் எல்லாம் நன்றாயிருக்கிறதெனக் கூறினதுதான் எனக்கு முக்கியம். இதைப்பற்றி நானும் கொஞ்சம் பயந்து கொண்டுதானிருந்தேன்; ஏனெனில், தொன்றுதொட்டு இந்நாட்டில் நாடகம் என்றால், பாட்டுகளில்லாமல் கிடையாது. பூர்வகாலத்தில் நாடகம் முழுவதும், வெறும் பாட்டுகளாகவே இருந்ததென்பதற்கையமில்லை; பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வசனங்கள் நுழைந்தபோதிலும்; பெரும்பாலும் தற்காலத்திய நாடகங்களும் பாட்டு மயமாயிருக்கின்றனவென்பது எல்லோரும் அறிந்த விஷயமே. சங்கீதமல்லாத நாடகமென்றால் சந்திரனில்லாத வானம் என்று எங்கு வெறுக்கிறார்களோ என்று நானும் பயந்தவனே. ஆயினும் அன்றைத் தினம் வந்திருந்த திரளான ஜனங்கள், ஆதிமுதல் அந்தம் வரையில் ஆங்காங்கு கரகோஷத்துடன் நாடகக் கதையைக் கவனித்து வந்தது எனக்கு அப் பயத்தைப் போக்கி, தென் இந்தியாவிலும், ஐரோப்பாக் கண்டத்திலிருப்பது போல், இத்தகைய நாடகங்களுக்கு இடமுண்டு என்று எண்ணும்படி செய்தது. இந்த ஊக்கத்தைக் கொண்டுதான், பிறகு நான், ‘விஜயரங்கம்’, ‘தாசிப்பெண்’, ‘உண்மையான சகோதரன்’ முதலிய ஜனசமூக நாடகங்களை இயற்றியுள்ளேன். ஆயினும் நாடகம் என்றால் சங்கீதம் அதற்கு இன்றியமையாதது என்னும் எண்ணம், நமது தென் இந்தியாவில் அற்றுப் போய் விட்டது என்று நான் சொல்லவில்லை. அநேக நூற்றாண்டுகளாய் வேரூன்றிய எண்ணத்தை அத்தனை எளிதில் மாற்ற எவருக்கும் ஆற்றல் கிடையாது என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனே. பாமர ஜனங்கள் இன்னும் நாடகம் பார்க்கப் போனால், சங்கீதத்தையே கவனிக்கின்றனர் என்பது திண்ணம். இருந்த போதிலும், கற்றறிந்தவர்கள், எந்த நாடகத்திற்கும் சங்கீதம் இருந்துதான் தீரவேண்டும் என்னும் கொள்கையினின்றும் சிறிது மாறியிருக்கின்றனர் என்று உறுதியாய்க் கூறலாம். இவ்விஷயத்தில், இதை வாசிக்கும் நாடகப் பிரியர்களாகிய எனது நண்பர்கள் கவனிக்க வேண்டியதொன்றுண்டு. ஐரோப்பா முதலிய கண்டங்களில் நாடகங்களில் சங்கீத மென்பதில்லாமற் போகவில்லை. ஆயினும் அவ்விட மெல்லாம் நாடகங்கள், முக்கியமாக இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன; டிராமா பிராபர் (Drama proper), ஆபெரா (Opera) என்று இருவகை. முதற் சொல்லப்பட்டதில் சங்கீதமே கிடையாது; இரண்டாவது பிரிவில் சங்கீதம் முற்பட்டதாம்; வசனங்கள் இங்கும் அங்குமாக, ஏதோ கொஞ்சம் இருக்கும். நம்முடைய தேசத்திலும் நாடகங்கள் இவ்வாறு பிரிக்கப்பட வேண்டுமென்பது என்னுடைய கருத்து. புராண சம்பந்தமான ‘நந்தனார் சரித்திரம்,’ ‘ராமதாஸ் சரித்திரம்,’ ‘அரிச்சந்திர நாடகம்’ முதலிய நாடகங்களில் சங்கீதத்திற்கு வேண்டிய அளவு இடங்களிருக்கலாம். ஆயினும் தற்காலத்திய ஜன சமூக நாடகங்களில் சங்கீதமே இல்லாமலிருக்க வேண்டும் என்பதுதான் என் துணிபு. இந்த எண்ணமானது ஈடேற, இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். இருந்த போதிலும், எனதாயுளில் இது ஆரம்பிக்கப்பட்டதே என்று ஈசனைப் போற்றுகிறேன்.
இந் நாடகத்தை எங்கள் சபையார் நடித்தபொழுது எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு பங்கஜவல்லியாகிய கதா நாயகியாக மிகவும் நன்றாக நடித்தார். நான் கதாநாயகனான ராமச்சந்திரன் வேடம் பூண்டேன். நான் ராமச்சந்திரனாக நடித்தபொழுது நேரிட்ட ஒரு சந்தர்ப்பத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ராமச்சந்திரனாகிய கதாநாயகன் ஒரு வைத்தியன். அவன் க்ஷயத்திற்காக ஒரு மருந்தைக்கண்டு பிடித்திருந்தான். அதை அவன். சிறு வயதில் மணந்து பிறகு மரணமடைந்ததாக நினைத்திருந்த அவனது மனைவி பங்கஜவல்லி, அப்பிரிவாற்றாமையே முக்கியக் காரணமாக நேரிட்ட க்ஷயரோகத்தினால் பீடிக்கப்பட்டபொழுது, பங்கஜவல்லிக்கு அம் மருந்தைக் கொடுத்துச் சிகிச்சை செய்கிறான் என்பது கதையின் ஒரு பாகம். இதை நான் மேடையின்மீது தக்கபடி நடித்துக் காட்ட வேண்டி, வைத்தியப் பரீட்சையில் தேறி வைத்தியர்களாயிருக்கும் எனது சில நண்பர்களிடம் சென்று, க்ஷயரோகம் பிடித்த ஒரு நோயாளியை - அதிலும் ஒரு பால்ய ஸ்திரீயை - எப்படிப் பரிசோதிப்பது? நாடியை எப்படிப் பார்ப்பது? ஹிருதயத்தை எப்படிக் கவனிப்பது? ஸ்வாசாசயத்தை எப்படிப் பரீட்சிப்பது? முதலிய எல்லா விவரங்களையும் நன்கு கற்றேன். பிறகு மேடையின்மீது அந்தக் காட்சி வந்தபொழுது, அதன்படியே, வைத்தியனாக நோயாளியைப் பரிசோதித்தேன். நாம் எல்லாம் சரியாகச் செய்துவிட்டோம் என்று கொஞ்சம் கர்வப்பட்டேன் என்றே நான் சொல்ல வேண்டும். ஏனெனில், வந்திருந்தவர்க ளெல்லாம் இக்காட்சியானது மிகவும் நன்றாக நடிக்கப்பட்ட தெனக்கரகோஷம் செய்தனரன்றோ ? ஆயினும், ஒரு தப்பிதம் செய்தேன் என்பதை நாடக முடிவிற் கண்டேன். அக்காலத்தில், எங்கள் சபையார் தமிழ் நாடகங்கள் போடும் போதெல்லாம் ஏறக்குறைய தவறாமல் எல்லாவற்றிற்கும் வந்திருந்த காலஞ்சென்ற டாக்டர் நாயர் என்பவர் (இவர் இங்கிலாந்து தேசம் போய் எம்.டி. பட்டம் பெற்ற பிரபல வைத்தியர் என்பதை இதை வாசிப்பவர்களுக்கு நான் கூற வேண்டியதில்லை) நாடகம் முடிந்தவுடன், மேடைக்குள் வந்து -ரங்கவடிவேலுவையும் என்னையும் ஏதோ கொஞ்சம் சிலாகித்துப் பேசிவிட்டு, “ஆயினும் சம்பந்தம்! ஒரு தப்பிதம் செய்தாய்!” என்றார்.
என்னவென்று நான் வினவ, “எந்த வைத்தியனாவது தர்மா மிடரை (Thermometer-ஜுரம் பார்க்கும் கருவி) நோயாளியின் நாவில் வைத்து, பிறகு அதனை எடுத்துக் கழுவாமல், அதன் உறையில் போட்டதைப் பார்த்திருக்கிறாயா? சாதாரண நோயாளியாயிருந்தாலே பெரும் தப்பிதமாம். அதிலும் க்ஷயரோகத்தினால் பீடிக்கப்பட்ட நோயாளி!” என்று பதில் உரைத்தார். நாங்களிருவரும் சம்பாஷித்தது ஆங்கிலத்தில்; இங்கு அதைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதன்மீது வைத்தியர்கள் முறைப்படி மிகவும் நன்றாய் ஆடிவிட்டோம் என்கிற கர்வம் அடங்கினவனாய், தலை வணங்கி என் தப்பிதத்தை ஒப்புக்கொண்டு, அது முதல் இந் நாடகத்தில் நான் நடிக்கும் பொழுதெல்லாம் இந்தத் தப்பிதம் செய்யாதபடி நடந்து வருகிறேன். நாடக மேடையில் நடிக்க வேண்டும் என்று விரும்பும் என் இளைய நண்பர்களுக்கு இதனால் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், ஏதாவது வேடம் பூண்டால், அதற்குரிய விஷயங்கள் எவ்வளவு அற்பமானதா யிருந்தபோதிலும், கவனிக்க வேண்டுமென்பதே. இது ஒரு சிறு விஷயம், இதை யார் கவனிக்கப் போகிறார்கள்? என்று கருதலாகாது. அதை அறிந்த ஒரு புத்திமான் சபையில் வந்திருக்கலாம்; அவன் கண்ணுக்கு அக்குற்றம் எப்படியும் வெளிப்படையாகும்.
இந் நாடகத்தில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், சாமிநாதனாக நடித்தார். அதை அவருக்கென்றே எழுதினேன். ஆயினும் அதை நடிப்பது அவருக்குக் கஷ்டமாயிருந்தது. இதற்குக் காரணம், அவர் ஞாபகசக்தி கொஞ்சம் குறைவாகயிருந்ததேயன்றி வேறொன்றுமில்லை. பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் பொழுதே அவருக்கு எதையாவது குருட்டுப்பாடம் செய்வதென்றால் கஷ்டமாயிருந்தது. நடு வயதில் தமிழில் குருட்டுப் பாடம் செய்வதென்றால் அவருக்குப் பகீரதப் பிரயத்னம்தான்! அன்றியும் தமிழ் நாடக மேடையையேறி அறியாதவர் இதுவரையில்; ஆகவே மிகவும் கூச்சப்பட்டார். ஆயினும் நாடக தினம், மிகவும் நன்றாக நடித்தார். இதன் பிறகு இரண்டொருமுறை ஆங்கிலத்தில் இவர் நடித்தபோதிலும் இவர் தமிழ் நாடகத்தில் நடித்தது இதுதான் முதன் முறையும் கடைசி முறையுமாம். இவருக்குத் தெய்வ கடாட்சத்தினால் சென்ற வருஷம் ஷஷ்டி பூர்த்தியும் ஆகிவிட்டது. இனி இவர் நாடக மேடையில் தோன்றுவது மிகவும் அபூர்வமாம். மறுபடியும் இவர் நாட்க மேடை ஏறுவாராயின், எங்கள் சபையும் நானும் செய்த பெரும்பாக்கியமெனக் கொள்வேன். இவரிடம் நாடக மேடையைப் பற்றிய ஒரு பெருங்குணம் உண்டு. இவர் தானாக மேடையில் நடிக்க யாது காரணத்தினாலோ அவ்வளவு சக்தியில்லாதவராயிருந்த போதிலும், மற்றவர்களுக்கு இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுப்பதில் சிறந்த சக்தி வாய்ந்தவர். நாற்பது வருடங்களாக நான் நாடக மேடையில் பழகனவனாயினும், இப்போதும் ஏதாவது புதிதாக நடிப்பதென்றால், அவருடைய புத்திமதிகளைக் கேட்பேன். ‘அமலாதித்யன்’ ‘புத்தர்’ முதலிய கடினமான நாடகப் பாத்திரங்களை நான் ஒத்திகை செய்தபோதெல்லாம், இவர் முன்பாக நடித்துக் காட்டி, இவரது அபிப்பிராயங்களைக் கேட்டு, என்னைத் திருத்திக்கொண்டிருக்கிறேன். இவரை மற்ற ஆக்டர்கள் ஆஸ்ரயித்து இவரது புத்திமதிகளால் அபிவிருத்தி அடையாதது அவர்களுடைய துர்அதிர்ஷ்டம் என்றே நான் சொல்வேன். இவருக்கு நாடகக் கம்பெனியிலும் மற்றக் கம்பெனிகளிலும் உள்ள ஆசையினால், இவரை அண்டிக் கேட்டவர்களுக்கு, எப்பொழுதும் உதவாமற் போனதில்லை. ஆற்றில் ஜலம் ஏராளமாகவும் நிர்மலமாகவும் ஓடும்பொழுது அதை வாரி அருந்தாமற் போனால் யார் தவறு? ஆறு தானாகக் கேட்குமோ, என்னிடமுள்ள ஜலத்தை நீங்கள் ஏன் அருந்தவில்லையென்று?
இவரிடம் இன்னொரு விசேஷமுண்டு. இவருக்குச் சங்கீதம் என்பது கொஞ்சமும் தெரியாது; சங்கீத ஞானம் சற்றுமில்லை; அதாவது ராகங்களைப் பகுத்தறியுஞ் சக்தி கொஞ்சமுமில்லை; ஆயினும் நாடக மேடையில் நடிகர்கள், இப்படி இப்படிப் பாடினால் நன்றாயிருக்குமென்று மிகுந்த புத்தி சாதுர்யமாகச் சொல்லிக் கொடுக்கும் திறமை வாய்ந்தவர்; சங்கீதத்தில் நிபுணர்களுக்கும் இவர் யுக்தி சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஓர் உதாரணத்தை இங்கெடுத் தெழுதுகிறேன்; நந்தனார் சரித்திரத்தில், எனது நண்பர் டாக்டர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார், நந்தனாக நடிப்பதில் எனக்கு நிகரில்லையென்று பெயர் பெற்றிருக்கிறார்; இவர் சங்கீதத்தில் மிகவும் பழகித் தேர்ச்சி பெற்றவர்; ராகக்கியானத் திலும் தாளக்கியானத்திலும் எங்கள் சபையில் எல்லோரையும் விடச் சிறந்தவர் என்றே கூற வேண்டும். இப்படியிருந்தும், நந்தனார் சரித்திர நாடகத்தில், “பிறவிப்பிணி தீர மருந்தொன்றுண்டு பேரின்பமன்றுளே” என்னும் பாட்டின் சரணத்தை ஒரு விதமாகப் பாடும் பொழுது, ஓரிடத்தில் நாடகத்தைப் பார்க்க வந்தவர்களெல்லாம் கரகோஷம் செய்யாத காலமில்லை; ஆயினும் அதை இப்படிப் பாவித்துப் பாட வேண்டுமென்று இவருக்குச் சொல்லிக் கொடுத்தது, எனது பால்ய நண்பரான வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்காரே. அன்றியும் ஒரு ராகமாவது இப்படிப் பாட வேண்டுமென்று தெரியாவிட்டாலும், ஏதாவது பாடினால், இந்தச் சந்தர்ப்பத்திற்கு இது தகுதியானதன்று, இது தகுதி, என்று சொல்வதில் இவருக்கு இணையானவர்களை நான் கண்டதில்லையென்றே கூறவேண்டும். சிறு வயது முதல் நல்ல சங்கீதத்தைக் கேட்டுக் கேட்டு, சங்கீதச் செவிச் செல்வம் பெரிதும் உடையார். நான் புத்த சரித்திரத்தை நாடக ரூபமாக ஆட ஒத்திகை நடத்தினபோது, அதிலுள்ள பாட்டுகளையெல்லாம் இவருக்குப் பாடிக் காட்டச் செய்து, இவர் சிலவற்றைத் திருத்திக் கொடுக்கப் பெரும்பயனை அடைந்தேன். ஏதாவது சங்கீதம் தனக்குத் திருப்திகரமாயில்லாவிட்டால், “இதென்ன, ஜஷ்டை! நன்றாயில்லை. வேறு ஏதாவது பாடச்சொல்” என்று சொல்வார். அவர் கூறுவது சரியாகத்தானிருக்கும். இவருடைய சங்கீதத்தைப் பற்றி, இதையெழுதும் பொழுது ஒரு சிறு விருத்தாந்தம் எனக்கு ஞாபகம் வருகிறது.
ஒருமுறை நானும் இவருமாகத் திருச்சானூருக்கு ஒரு நண்பருடைய குமாரத்தியின் கலியாணத்திற்காகப் போயிருந்தோம். ஒரு நாள் இரவு, சாப்பிட்டுவிட்டு நாங்கள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தபொழுது, “சம்பந்தம், எனக்கு ராகங்கள் கொஞ்சம் சொல்லிக்கொடு!” என்றார். ஆகட்டும் என்று இசைந்து, அன்று சாயங்காலம் கச்சேரியில் வீணை தனம் வாசித்த சஹானா ராகம், இப்படிப்பட்டதென்று விஸ்தரித்து, என்னாலியன்ற அளவு அதைப் பாடிக் காண்பித்தேன். அதன் முக்கியமான மூர்ச்சையின்னதென்று சொல்லி, அந்த ராகத்தில் எனக்குத் தெரிந்த இரண்டொரு விருத்தங்களையும் பாடிக் காண்பித்தேன்.
பிறகு மறுநாள் நாங்கள் துயில் நீத்து எழுந்தவுடன் கலியாண வீட்டில் நலங்கிற்காகக் குழந்தைகள் பாட, அதை சஹானாராகத்தில் நாதஸ்வரக்காரன் வாசித்தான். உடனே எனது நண்பர், “சம்பந்தம், இதென்ன ராகம்?” என்று கேட்டார்! அதன் பேரில் என்னையுமறியாதபடி எனக்கு அடங்காச் சிரிப்புண்டாக, சிரித்து ஓய்ந்தபின் “இராத்திரி யெல்லாம் ராமாயணம் கேட்டு விட்டு, ராமனுக்குச் சீதை என்ன வேண்டுமென்று கேட்பது போல, இரவெல்லாம் உனக்கு சஹானா ராகத்தைச் சொல்லிக் கொடுத்தேன்! இப்பொழுது இதென்ன ராகமென்று கேட்கிறாயா?” என்று கூறி, ‘ராகத்திற்கும் உனக்கும் ரொம்பா தூரம். இப் பிரயத் தனத்தை விட்டுவிடு’ என்றேன். இது நடந்து அனேகம் வருஷங்களாயின; இருந்தும் இப்பொழுது இதை நான் எழுதும்பொழுது, எனக்கு அடங்காச் சிரிப்பு வருகிறது!
இவ்வாறு ஒரு ராகமும் தெரியாதவர் நாடக மேடை சங்கீதத்தைப் பற்றி எவ்விதம் ஆக்டர்களுக்குப் புத்திமதி கூறத்தக்கவராயிருக்கக்கூடும் என்று இதை வாசிக்கும் சிலர் சந்தேகிக்கக் கூடும். அவர்களுக்கெல்லாம், ‘இப்படிப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் தட்டினால் அவரிடம் சென்று சில நேரம் சம்பாஷித்துப் பாருங்கள் பிறகு அவரது அரிய குணத்தை நன்றாய் அறிவீர்கள்’ என்று நான் பதில் உரைக்கக்கூடும். ஏதோ எனது பால்ய நண்பரை நான் புகழ்கிறேன் என்று நீங்கள் கருதலாகாது. புகழும் பொழுது, “நண்பனைக் காணாவிடத்தும்” என்று பெரியோர்கள் கூறியிருக்கின்றனர். ஆயினும் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரை என் நண்பனாகப் பாவித்தது மன்றி, என் குருவாகவும் பாவிக்கின்றபடியால் அவரை நான் இவ்வாறு புகழ்வது தவறாகாது. நான் மேற்குறித்த பாட்டில், குருவை அவர் முன்னிலையிலும் அவர் இல்லாவிடத்தும் புகழலாம் என்றிருப்பதை, இதை வாசிப்பவர்கள் கவனிப்பார்களாக.
இப் “பொன் விலங்குகள்” என்னும் நாடகத்தில், மற் றொரு முக்கியமான பாத்திரம் பங்கஜவல்லியின் அத்தையாகிய விதவை. காலஞ்சென்ற கா. ச. தேசிகாச்சாரியார் பி.ஏ., பி.எல். இவ்வேடம் பூண்டு மிகவும் நன்றாக நடித்தார். நாடக மேடையின்மீது, அநேகம் “விதவை”களைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் இவர் அன்று நடித்ததைப் போல் அவ்வளவு நன்றாக நடித்தவர்களை இதுவரையில் கண்டிலன். இந்தத் தேசிகாச்சாரியார் பிறகு எங்கள் சபையில் வேஷம் தரிக்காதது எங்கள் சபை செய்த தௌர்ப் பாக்கியமென்றே சொல்ல வேண்டும். இவரைச் சாதாரணமாக ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளச் செய்வது மிகவும் கடினம்; எடுத்துக்கொண்டாரோ, அப்பாத்திரத்திற்கு ஏற்ற படி மிகவும் சாதுர்யமாக நடிக்கும் குணம் வாய்ந்திருந்தார். இப் பொன் விலங்குகள் என்னும் நாடகத்தில் “பிஸ்தாக் கொட்டை ஸ்வாமிகள்” என்று ஒரு பாத்திரமுண்டு. அது நான் எழுதிய ஹாஸ்ய பாகங்களில் அதி முக்கியமானது. நகைப்பை யுண்டுபண்ணும் பாத்திரங்களுள், “சபாபதிக்கு”ப் பிறகு இதைத்தான் எடுத்துக் கூறவேண்டும். இந்தப் பாத்திரத்தைக் காலஞ்சென்ற எனது நண்பர் டி.வி. கோபால்சாமி முதலியார் எடுத்துக்கொண்டார். அவர் மேடையின் மீது தோன்றியது முதல் கடைசி வரைக்கும் ஜனங்களுக்கு இடைவிடா நகைப்பையுண்டாக்கினார் என்பதற்கு ஐயமில்லை. இவர் இப் பாத்திரத்தை நன்றாக நடித்தமையால் இவருக்கு “பிஸ்தாக் கொட்டைச் சாமியார்” என்றே பெயர் வைத்து விட்டார்கள். இவரைப் பார்த்த அனைவரும், ஒருமுறை இவரே என்னிடம் அடியிற் கண்டிருக்கும் கதையைச் சொல்லியிருக்கிறார். இந்நாடகம் நடித்த சில நாட்கள் பொறுத்து, தென் இந்திய இரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் (தஞ்சாவூரோ என்னவோ, நன்றாய் எனக்கு ஞாபகமில்லை ), இவர் இந்நாடகத்தில் பிஸ்தாக் கொட்டைச் சாமியாராக நடித்ததைப் பார்த்திருந்த, ஹைகோர்ட் ஜட்ஜாயிருந்த கனம் சதாசிவ ஐயரவர்கள், இவரைத் தூரத்தில் பார்த்து, “வாருங்களையா பிஸ்தாக் கொட்டை ஸ்வாமிகளே!” என்று உறக்கக் கூப்பிட, ஸ்டேஷனில் அருகிலிருந்தவர்களெல்லாம் கொல்லென நகைத்தார்களாம்; தனக்கு வெட்கமாயிருந்த போதிலும், ஒருவிதத்தில் சந்தோஷப்பட்டதாயும் எனக்குத் தெரிவித்தார். பிறகு இவரது மரண பர்யந்தம் இவருக்கு இப்பெயரே வழங்கலாயிற்று. யாராவது கோபாலசாமி முதலியார் என்றால், “என்ன, பிஸ்தாக்கொட்டை ஸ்வாமிகளா?” என்பார்கள்.
நான் அதற்குத் தக்க பாத்திரனாக அல்லாவிட்டாலும், என்னிடம் மிகவும் பிரீதி வைத்திருந்த கனம் சதாசிவ ஐயர் அவர்கள், ‘இந்தப் பிஸ்தாக்கொட்டைச் சாமியார் என்கிற பாத்திரத்தை எங்கு பிடித்தீர்?’ என்று ஒருமுறை கேட்ட ஞாபகமிருக்கின்றது. ஆகவே, இப்பாத்திரத்தை அப் பெயருடன் நிர்மாணம் செய்த விவரத்தை இங்கு எழுதுகிறேன்.
1894ஆம் வருஷம் புதுச்சேரியிலிருந்த தனவந்தரான கூனிச்சம்பட்டு லட்சுமணசாமி செட்டியார் என்பவர் தன் குடும்பத்தார் பலருடன் காசி யாத்திரைக்குச் சென்றார். அப்பொழுது அவருக்கு அத்யந்த சிநேகிதராயிருந்த என் தகப்பனாரையும் உடன் அழைத்துச் சென்றார்; என் தகப்பனாருடன் என் தமயனார் ப. ஐயாசாமி முதலியாரும் சென்றார். யாத்திரையாக இப்படிப் புறப்பட்டவர்கள், சிப்பந்திகளுட்பட, ஏறக்குறைய நூறு பெயர் இருந்தனர். இவர்களுள் புதுச்சேரியிலிருந்து ஒரு ஸ்வாமியாரும் இருந்தனர். இத்தனை பெயரும் யாத்திரை செய்வதற்காகச் செட்டியார் அவர்கள் ஒரு பெரிய செலூன் (Saloon) வண்டியும் இதர வண்டிகளையும் சேர்த்து ஒரு ஸ்பெஷல் வண்டி (Special Train) ஆக ஏராளமான திரவியம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார். யாத்திரை செய்து கொண்டு போகும் பொழுது, காலையில் இஷ்டமான இடத்தில், இந்த ஸ்பெஷல் வண்டி நிறுத்தப்படும். எல்லோரும் இறங்கி ஸ்நானம் எல்லாம் செய்து, பிறகுதான் சமையலுக்கு ஏற்பாடு செய்வார்களாம். சமையலாக நாழிகையாகும். ஆயினும் இந்த ஸ்வாமியாருக்கு மாத்திரம் யாத்திரைக்குச் செட்டியாருடன் சென்ற சில வயோதிகர்களான விதவைகள் ஒரு பெரிய புட்டியில் பிஸ்தாக் கொட்டைகளை நறுக்கிக் கல்கண்டுடன் கலந்து வைத்திருப்பார்களாம். மற்றவர்களெல்லாம் பசியுடன் காத்திருக்க நம்முடைய ஸ்வாமியார் மாத்திரம், காலையில் பல் விளக்கியவுடன் இந்தப் பிஸ்தாக் கொட்டையையும் கல்கண்டையும் சாப்பிட்டுவிட்டு, ஹாய் என்று இருப்பாராம். இரண்டொரு நாள் காலையில் பட்டினியால் கஷ்டப்பட்ட என் தமயனார் பசியாற்றாது மூன்றாவது! தினம், மெல்ல ஸ்வாமியார் அறியாதபடி அவருக்கென்று வைத்திருந்த புட்டியினின்றும் கொஞ்சம் பிஸ்தாக்கொட்டையையும் கல்கண்டையும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டாராம்.
இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் நடைபெற, ஸ்வாமியார் அவர்கள் தினம் தனக்குக் காலையில் சேரவேண்டிய பிஸ்தாக் கொட்டை கல்கண்டு குறைவதைக் கண்டு, என் தகப்பனாரிடம் போய் முறையிட்டனராம். அதன்பேரில், வேடிக்கையான ஒருவிதக் குறும்பு வாய்ந்த என் தகப்பனார், (தற்காலம் எனக்கிருக்கும் சிறு குறும்பு, அவரிடமிருந்து நான் பிதுரார்ச்சிதமாகப் பெற்றேன் என்று நினைக்கிறேன்) என் தமயனை அழைத்து, சிரித்துக் கொண்டே, “ஐயா சாமி, நீதான் இதைச் செய்திருக்க வேண்டும். இனி முன்பு போல் செய்யாதே! எடுத்தால் சாமியாருக்குத் தெரியும்படியாக அவ்வளவு எடுத்துவிடாதே ஒரே விசையில்! கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடு!” என்று காய்தா செய்தாராம்! இதையெல்லாம் என் தமயனார் எனக்குக் கடித மூலமாகத் தெரிவித்தார். அக்கடிதங்கள், என் பழைய கட்டுகளில் இன்னும் எங்கோ இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பிறகு என் தமயனுக்கு நான் நிருபம் எழுதும் பொழுதெல்லாம், “உங்கள் பிஸ்தாக் கொட்டைச் சாமியார் எப்படியிருக்கிறார்?” என்று கேட்பேன். இந்த யாத்திரை முடிவு பெறும் வரையில், இதுதான் பிஸ்தாக் கொட்டை ஸ்வாமிகள் எனும் பாத்திரம் என் மனத்தில் உதித்ததற்கு அங்குரார்ப்பணம். இந்த ஸ்வாமியார் மிகவும் ஸ்தூல தேகமுடையவராகவிருந்தாராம். இராதா பிறகு! தினம் காலையில் பிஸ்தாக் கொட்டையும் கல்கண்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால்! ஆயினும் இவர் வாஸ்தவத்தில் ஒரு மஹானாயிருக்கலாம்! இவரைப்பற்றி எனக்கு வேறொன்றும் தெரியாது. என் அனுபவத்தில் ஸ்வாமியார் என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கும் பலர்களுக்குள் நூறில் ஒருவர்தான் வாஸ்தவமான சன்னியாசியாக இருப்பார்; மற்றவர்களெல்லாம் வயிறு வளர்க்க வேஷம் போடுபவர்களே. இப்படிப்பட்டவர்கள் பேதைகளை ஏமாற்றி ஜீவித்து வருவதை நமது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்றே, இந்த “பிஸ்தாக் கொட்டைச் சாமியாரை” ஒரு நாடகப் பாத்திரமாக இந்நாடகத்தில் எழுதலானேன்.
இந்தப் பிஸ்தாக் கொட்டைச் சாமியாருடைய இரண்டு சிஷ்யர்கள் வேடம், பாலசுந்தர முதலியாரும் நாராயணசாமிப் பிள்ளையும் பூண்டு, சபையோரைக் களிக்கச் செய்தனர்.
இந்நாடகத்தில் வயோதிகனான தமிழ் உபாத்தியாயர் பாத்திரம் ஒன்று வருகிறது; அதற்கு நான் சென்ன கேசவராய முதலியார் என்று பெயர் வைத்தேன். இப்பெயர் வைத்தபொழுது நான் ஒருவரையும் குறிப்பிட்டுச் செய்தவனன்று. ஆயினும் இதற்குப் பல வருஷம் கழித்து, என் சம்பந்தி முறையை வகித்த பச்சையப்பன் கலாசாலைத் தமிழ் வித்வானாயிருந்த செல்வகேசவராய முதலியார், ஒருநாள் என்னுடன் வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டிருந்த பொழுது, “என் பெயரை என் அனுமதியின்றி உங்கள் நாடகத்தில் உபயோகித்திருக்கக் கூடாது” என்று சொன்னார். அப்பொழுது “ஐயோ! அப்படி யொன்றுமில்லை. உங்கள் பெயரை உபயோகிக்க வேண்டுமென்று செய்தவனன்று. ஏதோ தமிழ் உபாத்தியாயருக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமேயென்று அப்பெயர் வைத்தேன். இது அகஸ்மாத்தாய் நேரிட்டது” என்று சொல்லி அவர் மன்னிப்பைக் கேட்டேன். இதில் வேடிக்கையென்ன வென்றால், இப்பொன் விலங்குகள் என்னும் நாடகம்தான் மற்ற நாடகங்களைவிட மேலானது என்று இதற்குப் பரிசு கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்த பரீட்சகர்களுக்குள் இவர் ஒருவராய் இருந்தார்! நாடகப் பாத்திரங்களுக்குப் பெயர் வைத்திருப்பதிலும் நாடக ஆசிரியர்கள் ஜாக்கிரதை யாயிருக்க வேண்டியிருக்கிறது!
இப்பொன் விலங்குகள் நாடகத்தில், டி.சி.வடிவேலு நாயகர், மிஸ் ரோஸ் கமலா என்னும் கிறிஸ்தவப் பெண்ணாகவும், பி.ஏகாம்பர ஐயர், பி.ஏ; பி.எல்; ராமச்சந்திரனுடைய தந்தையாகவும் மிகவும் விமரிசையாக நடித்தார்கள்.
இந்நாடகமானது என் குறிப்பின்படி இதுவரையில் 35 முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. நாடகக் கம்பெனிகள் இதைச் சாதாரணமாக ஆடுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் இதில் சங்கீதத்திற்கு இடமில்லாமையேயென்று நினைக்கிறேன். ஒரு முறை வேலு நாயர் இதைத் தன் கம்பெனியைக் கொண்டு சென்னை ராயல் தியேடேரில் ஆடினார். அப்பொழுது என்னை வரவழைக்க, நான் போயிருந்தேன். நாடகத்தை வேலு நாயர் நன்றாய் நடத்திய போதிலும், வந்திருந்த ஜனங்களுக்கு இது சந்துஷ்டியை அளிக்கவில்லை யென்பது என் அபிப்பிராயம். இரண்டுமணி நேரம் நாடகம் நடந்த பிறகு, காலெரி (Gallery) யிலிருந்த ஒருவன் எழுந்திருந்து “என்ன ஐயா? இந்த நாடகத்தில் பாட்டே இல்லையா?” என்று உரக்கக் கேட்டான்! சங்கீதத்தையே விரும்பும் நாடகாபிமானிகளுக்கு இந்நாடகம் பிரயோஜனப்படாது என்பது திண்ணம். மதுரையில் கிங் ஜார்ஜ் அமேடூர் டிராமாடிக் அசோசியேஷன் (King George Amateur Dramatic Association) என்னும் சபையார் சில வருஷங்களுக்கு முன் இதை மிகவும் நன்றாய் நடித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அச்சமயம், ராமச்சந்திரனாகவும் சாமிநாதனாகவும் நடித்த எனது நண்பர்கள் ராவ்சாஹெப் மாணிக்கவாசகம் பிள்ளை, வைகுண்டம் ஐயர் இருவரையும் நான் நேரிற் கண்டானந்திக்கக் கொடுத்து வைக்கவில்லை. சங்கீதம் பாடத் தகுந்த அங்கத்தினர் அதிகமாயில்லாத சபைகள் இந்நாடகத்தை எளிதில் ஆடலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த 1910ஆம் வருஷம் எங்கள் சபையார் நடத்திய இன்னொரு முக்கியமான நாடகம் “ஹரிச்சந்திரன்” என்பதாம். இதற்கு முன்பாக அநேக ஹரிச்சந்திர நாடகங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. இது மிகவும் புராதானமான நாடகம் என்பதற்குச் சந்தேகமில்லை . நமது தேசத்தில் ஹரிச்சந்திரன் கூத்து ஆடப்படாத கிராமங்களில்லையென்றே கூறலாம். ஒருவிதத்தில் இதற்கு முன் அச்சிடப்பட்ட ஹரிச்சந்திர நாடகங்களுள் பிரபலமானது, “சத்ய பாஷா ஹரிச்சந்திரன்” என்று பெயர் வைத்துப் பெங்களூரில் வசித்த அப்பாவு பிள்ளை இயற்றியதுதான். இவரது புஸ்தகத்தில், பழைய பாட்டுகளையெல்லாம் நீக்கி, புதிய மெட்டுகளுடன் அச்சிட்டிருந்தார். இதுதான் நாற்பது ஐம்பது வருடங்களுக்குமுன் நாடகக் கம்பெனிகளால் ஆடப்பட்டு வந்தது. இதை ஆடுவதில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆக்டர் சுப்பராயச் ‘சாரி என்றொருவர் இருந்தார் என்று நான் முன்பே எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட பழைய கதையை, எனது நண்பர் திவான் பகதூர் சரவண பவாநந்தம் பிள்ளை அவர்கள் நூதன வழியில் கதையை அமைத்து எழுதினார். சாதாரணமாக இக்கதையை நாடக ரூபமாக எழுதுகிறவர்கள் ஹரிச்சந்திரனை நோக்கி, நட்சத்திரேசன் முதலியோர் ஏதாவது ஒரு பொய் சொல்லிவிடு போதும், என்று சொன்னதாகவே எழுதியிருக்கின்றனர். எனது நண்பர், “பொய்சொல் என்று ஒருவனைக் கேட்டால் பொய் சொல்லிவிடுவானா?” இது அவ்வளவு ஒழுங்காகவில்லை. ஹரிச்சந்திரன், தானாகப் பொய்புகலும்படியான பல கஷ்டங்களுக்குட்படுத்தி, அவைகள் ஒன்றினாலும் அவன் மனங்கலங்காது, சத்தியத்தையே பேசி வந்ததாகக் கதையை ஏற்படுத்தி மிகவும் சாதுர்யமாக எழுதியிருக்கிறார்.
இந்த அழகிய நூதன அமைப்பை , அவர் எழுதிய புஸ்தகத்தை வாசித்தால்தான் தெரியும். ஆயினும் தமிழ்க் கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்று, தமிழுக்கே பல வருடங்கள் உழைத்து வந்த இந் நண்பர் இயற்றிய இந்த ஹரிச்சந்திர நாகடத்தில் என் மனத்திற்கு ஒரு குறை தோன்றுகிறது. அதாவது இந்நாடகம் மிகவும் பெரியதாயிருக்கின்ற தென்பதே. இவர் முதலில் இந்நாடகத்தை வெளியிடு முன் ப்ரூப் காபி (Proof Copy) எனக்குக் காட்டியபடி ஏறக்குறைய எழுநூறு அச்சிட்ட பக்கங்கள் அடங்கியதாயிருந்தது! எனது நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானுமாக, ஆசிரியரிடம் இது மிகவும் நீளமாயிருக்கிறது, இதைக் குறுக்க வேண்டும் என்று தெரிவித்தோம். இதற்கு உதாரணமாக, சந்திரமதியை, காசிராஜன் தன் மகவைக் கொன்றதாக விசாரணை செய்த காட்சி மாத்திரம், அச்சிட்ட 60 பக்கங் களுக்கு மேலிருந்தது! தற்காலத்திய செஷன்ஸ் கோர்ட்டு விசாரணை மாதிரி தற்சாட்சி விமரிசை, எதிர் விமரிசை, மறு விமரிசை முதலியவைகளுடன் எழுதியிருந்தது! இதையெல்லாம் மாற்ற வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், எங்கள் வேண்டுகோளுக்குக்கிசைந்து பிள்ளை அவர்கள் நாடகத்தை ஏறக்குறைய முன்னூற்று முப்பது பக்கங்களாகக் குறுக்கினார். இதை எங்கள் சபை ஆடின போது, இதில் மூன்றிலொரு பாகமாகக் குறுக்கி ஆடினோம். அப்படிக் குறுக்கியும், ஏறக்குறைய நான்கரை, ஐந்து மணி நேரம் பிடித்தது!
பல வருஷங்களாகக் கஷ்டப்பட்டு எழுதிய இந் நாடகத்தை ஆசிரியர் அச்சிட்டு வெளியாக்கியவுடன், எங்கள் சபையார் இதை ஆடவேண்டுமென்று தீர்மானித்தனர். ஆயினும் முதலில் எடுக்கும் பொழுதே ஒரு கஷ்டம் வந்தது. தெலுங்கில் ஹரிச்சந்திரனாக நடித்த கே. ஸ்ரீனிவாசன் என்பவர், எங்கள் சபையை விட்டகன்று நெல்லூர் போய்ச் சேர்ந்து விட்டார். தமிழில் அக்காலம் ஹரிச்சந்திரன் வேடம் பூணத் தகுந்தவர்கள் ஒருவருமில்லாதிருந்தது; என்னால் ஹரிச்சந்திரன் வேடம் பூண முடியாது என்று கூறிவிட்டேன். இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களுண்டு. முதலாவது ஹரிச்சந்திரன் வேடம் பூணத்தக்க திடமான காத்திரம் எனக்கில்லை. இரண்டாவது, எனக்கு அரிச்சந்திரன் பாட வேண்டிய பாட்டுகளை யெல்லாம் பாடும்படியான சங்கீத ஞானமில்லை. இவ்வாறு ஹரிச்சந்திரனாயாட எனக்குச் சாமர்த்தியமில்லை என்று மறுக்கவே, எனதாருயிர் நண்பராகிய சி.ரங்கவடிவேலுக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று. அவர் அநேக வருஷங்களாக இந் நாடகத்தில் சந்திரமதியாக ஆட வேண்டுமென்று விருப்பமுற்றிருந்தார். என்னை இந்நாடகத்தை யெழுதும்படியாகப் பன்முறை கேட்டும், என்னால் முடியாதென்று மறுத்து வந்தேன்; பிறகு இந்தச் சந்தர்ப்பம் வாய்க்கவே, தன் பொருட்டாவது நான் இந்த ஹரிச்சந்திரன் வேடம் பூணவேண்டுமென்று வற்புறுத்தினார். எங்கள் சபை நிர்வாக சபையாரும் என்னை ஆடும்படிக் கேட்டனர். நூலாசிரியராகிய பவாநந்தம் பிள்ளை அவர்களும் என்னைக் கேட்டனர். இவர்கள் எல்லாம் என்னை வேண்டிக் கொண்டனர் என்று பெருமையாக இதை இங்கு நான் எடுத்து எழுதவில்லை. வாஸ்தவத்தில் சரியாக அப் பாத்திரத்தையாடச் சக்தி அற்றவனாயினும் அதை ஆட நான் ஒப்புக்கொண்டத்தற்குக் காரணத்தைக் கூறினேனே யொழிய வேறன்று. கடைசியில் நிர்வாக சபையில், இவ்விஷயம் தீர்மானத்திற்கு வந்தபொழுது, “எனக்கு ஹரிச்சந்திரனாயாட இஷ்டமில்லை. அந்தப் பாத்திரத்தைச் சரியாக நடிப்பதற்கு எனக்குத் திறமையில்லை; ஆயினும் எனது நண்பர் ரங்கவடிவேலு சந்திரமதி யாக நடிப்பதற்கு இடங்கொடுக்க வேண்டுமென்றே, நான் அரிச்சந்திரனாக நடிக்க ஏற்றக் கொள்ளுகிறேன்” என்று வெளிப்படையாகச் சொல்லி, பிறகே இப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டேன். நான் இதை இங்கு எடுத்து எழுதியதற்கு முக்கியக் காரணம், நாடக மேடையில் பெயர்பெற வேண்டுமென்று விரும்பும் எனது நண்பர்கள் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டால், அப்பாத்திரத்திற்கு நாம் தகுந்தவர்கள்தானா, அதை நம்மால் நடிக்கத் திறமையுண்டா, நமக்குப் பொறுத்தமாயிருக்குமா என்று யோசித்தே பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கவனிக்கும் பொருட்டே.
இந்நாடகம் ஒத்திகை செய்த பொழுது நடந்த ஒரு சிறு சமாச்சாரத்தை இனி எழுதுகிறேன். எனக்கோ பாடத் தெரியாது; ஆகையால் இந்த அரிச்சந்திரனாக நடிப்பதில் வசனத்தைக் கொண்டே நான் சபையோரைத் திருப்தி செய்ய வேண்டியவனாயிருக்கிறேன் என்று யோசித்து, இப் பாத்திரத்தை நடிப்பதில் ஆங்காங்கு உருக்கமான பாகங்களிலெல்லாம் இப்படி இப்படி நடிக்க வேண்டுமென்று யோசித்துத் தீர்மானித்து, கஷ்டப்பட்டு ஒத்திகை செய்து வந்தேன். சந்திரமதியையும், தேவதாசனையும் அடிமையாகக் கொண்ட காலகண்ட ஐயர் வசம் அவர்களை ஹரிச்சந்திரன் ஒப்புவிக்கும் சமயத்தில், கண்களில் நீர் தாரைதாரையாக வரும்படி ஒத்திகையில் ஒரு நாள் நடித்தேன். அத்தினம் எனது ஆக்டர்கள் நாடகாசிரியர் உள்படப் பல அங்கத்தினர், ஒத்திகை செய்யும் அறையில் குழுமியிருந்தனர். பார்த்தவர்களெல்லாம் இது நன்றாயிருக்கிறதென மெச்சினர். ஆயினும் இவர்களே, நாடக தினம் இக்காட்சியை காண அபின், என்னிடம் வந்து, அன்று ஒத்திகையில் நீங்கள் ஆக்டு செய்தது போல் அவ்வளவு உருக்கமாயில்லை என்று கூறினர். நான் யோசித்துப் பார்க்குமிடத்து, ஒத்திகையில் நடித்தது போலத்தான் மேடையின் மீதும் நடித்ததாக எனக்குத் தோன்றியது. அப்படியிருக்க இவர்கள் மனத்தில் ஏன் இப்படிப் பட்டது என்று ஆலோசித்துப் பார்குமிடத்து, நாட மேடையைச் சார்ந்த ஓர் உண்மை எனக்கு வெளியானது. அதாவது, ஜனங்கள், ஒரு ஆக்டர் இன்ன சந்தர்ப்பத்தில் இப்படி நடிக்கப் போகிறான் என்று அறியாதிருக்கும் பொழுது, அந்த ஆக்டர் புதுவிதமாய் நடித்தால், அது அவர்களுக்கு ஆச்சரியமாகத் தோன்றி, அவர்கள் மனத்தில் நன்றாய் உறுத்தி, அவர்கள் மனத்தைக் கவர்கிறது; அதையே மறுபடியும் பார்க்கும் பொழுது, இவன் இந்த சந்தர்பத்தில் இப்படி நடிக்கப்போகிறான் என்று அறிந்தவர்களாதலால், அது அவர்களுக்குச் சாதாரணமாகப் போய்விடுகிறது; இது காரணம் பற்றியே, இங்கிலாந்து முதலிய தேசங்களில், ஆக்டர்கள் ஒத்திகை செய்யும் பொழுது, நாடகாசிரியன், பக்க வாத்தியக்காரர்கள் தவிர மற்றவர்கள் ஒருவரையும் சாதாரணமாகப் பார்க்க விடுவதில்லை.
இதற்குக் காரணம், நான் முன்னே கூறியது என்பதை என் சுயானுபவத்தில் கண்டேன். ஆகவே சாதாரணமாக, ஒத்திகைகள் நடத்தும் பொழுது, உடனிருக்க வேண்டிய ஆக்டர்கள் தவிர மற்றவர்களைப் பார்க்க விடுவது அவ்வளவு நல்லதல்ல. அன்றியும் அப்படி ஆக்டர்களல்லா தாரை ஒத்திகைகளைப் பார்க்க விடுவதில் இன்னொரு கஷ்டம் இருக்கிறது. சில ஆக்டர்கள் கூச்சமுடையவர்களாயிருப்பார்கள்; தாங்கள் அறியாதவர்கள் எதிரில் ஒத்திகை நடத்த நாணப்படுவார்கள்; அன்றியும், அவர்கள் ஏதாவது தவறாக நடித்தால், அந்நியர்கள் எதிரில், கண்டக்டர்கள் அவர்களது தப்பை எடுத்துக்காட்ட மனம் ஒப்பார்கள்; மேலும் ஒத்திகைகளில் ஏதாவது தவறு நடந்தால், இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆக்டர்கள் அல்லாதார், நாடக தினம் வெளியில் உட்கார்ந்து அந்த இடம் வரும் பொழுது, இந்த இடத்தில் இப்படித் தப்பு நடக்கப் போகிறதென்று, அவ்விடம் வருமுன்னமே பேச ஆரம்பிக்கின்றனர். இவைகளையெல்லாம் கருதுமிடத்து, ஆக்டர்களைத் தவிர மற்வர்களை ஒத்திகைகளைப் பார்க்க விடுவது உசிதம் அல்லவென்று எனக்குத் தோன்றுகிறது. இது பற்றியே சில காலம் கழித்து, கண்டக்டர்கள் ஒத்திகை நடத்தும் பொழுது, ஒத்திகை அறையினின்றும் அந்நியரை வெளிப்படுத்தலாம் என்று ஒரு சட்டம் ஏற்படுத்தினேன் எங்கள் சபையில். இதை இதர நாடக சபைகளும் கவனிக்குமாறே இதைப் பற்றி இங்கு விரிவாய் எழுதலானேன்.
இந்த ஹரிச்சந்திரன் நாடகத்தை விக்டோரியா பப்ளிக் ஹாலில் எங்கள் சபையார் நடத்தியபொழுது, ஹாலில் இடமில்லாமல் டிக்கட்டுகள் விற்பதை நிறுத்தும்படி நேரிட்டது. ஆகவே, இதைச் சீக்கிரத்தில் மறுபடியும் இன்னொரு முறை இவ்வருஷமே ஆடினோம். இரண்டு முறையும் நல்ல தொகை வசூலாயிற்று. நான் ஹரிச்சந்திரனாக நடித்தது நன்றாயிருந்ததென என் முன் எல்லோரும் கூறிய போதிலும், அவர்கள் மனத்தில் நான் பாடவில்லை என்னும் குற்றம் இருந்தது என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை . எனதாருயிர் நண்பர், சி.ரங்கவடிவேலு பற்றி, மிகவும் நன்றாய்ப் பாடி நடித்ததாக எல்லோரும் புகழ்ந்தனர். ஆயினும் இப்பாத்திரத்தில் அ. கிருஷ்ணசாமி ஐயரைப் போல் அவ்வளவு நன்றாய் நடிக்கவில்லை என்பது என் துணிபு. ஆயினும் ரங்கவடி வேலு சந்திரமதியாக நடித்ததில், ஹரிச்சந்திரனை விட்டுப் பிரியும் கட்டத்திலும் காலகண்டர் வீட்டில் பணிவிடை செய்யும் கட்டத்திலும் மிகவும் நன்றாய் நடித்தார் என்பது என் அபிப்பிராயம்; முக்கியமாக மேற்சொன்ன இரண்டாவது கட்டத்தில் ஓர் உயர்குலத்து ஸ்திரீ துர் அதிர்ஷ்டத்தினால் துடைப்பத்தைக் கொண்டு ஒரு வீட்டின் முற்றத்தைப் பெருக்கும்படியான இழிதொழில் புரியும்படி நேரிட்ட பொழுது இப்படித்தான் நடிக்கவேண்டுமென்பதை இவரிடம் நான் கண்டேன். இக்காட்சியில் ரங்கவடிவேலு நடித்தது எல்லோருடைய மனத்தையும் உருகச் செய்தது என்பதற்கு ஐயமன்று. இந்நாடகத்தில் நாங்கள் இருவரும் ஐந்தாறு முறை நடித்திருக்கிறோம். இலங்கைக்குச் சென்று கொழும்பில் ஒரு முறை இதை நாங்களிருவரும் நடித்தபொழுது ரூபாய் 1400க்கு மேல் வசூலாயிற்று. தற்காலம் இந்நாடகத்தை எங்கள் சபையார் நடிக்கும் பொழுது டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரியாராவது எஸ். ராகவாச்சாரியாராவது ஹரிச்சந்திரனாக நடிக்கின்றனர். சந்திரமதி வேடம் டி.சி.வடிவேலு நாயகர் பூணுகின்றனர். தெலுங்கில் ஹரிச்சந்திரனாக நடித்த கே. ஸ்ரீனிவாசனுக்குப் பிறகு, பாட்டில் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியாரை எடுத்துக் கூறுவேன். ஆயினும் இப்பொழுது எங்கள் சபையார் நடிக்கும் ஹரிச்சந்திர நாடகம், திவான் பஹதூர் பவாநந்தம் பிள்ளை அவர்கள் எழுதியதன்று. சில பாகம் வி.வி.தேவநாத ஐயங்கார் எழுதியது; சில பாகம் பவாநந்தம் பிள்ளை அவர்கள் எழுதியது; சில பாகம் நான் அச்சிட்டிருக்கும் பிரதியிலிருந்து எடுத்தது; இவைகளையெல்லாம் சேர்த்து ஆடப்பட்டு வருகிறது. இவ்வாறு கலப்படமாய் ஆடுவது உசிதமல்லவென்பது என் அபிப்பிராயம்.
மேலே நானும் ஹரிச்சந்திர நாடகம் ஒன்று தமிழில் அச்சிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அது எழுதப் பட்டது அடியில் வருமாறு: இதற்குச் சில வருஷங்களுக்கு முன் சென்னையில் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் சிறுவர்கள் ஒரு நாடக கிளப்பாகச் சேர்ந்து, சில ஆங்கில நாடகங்களை வருஷந்தோறும் நடத்தி வந்தனர். அதன் பெயர் ‘மதராஸ் ஸ்டூடன்ட்ஸ் டிராமாடிக் கிளப்’ (Madras Students Dramatic Club) என்று எனக்கு ஞாபகம். அவர்கள் ஆங்கிலத்தில் நாடகம் ஒன்று நடத்திய பொழுது என்னை அழைத்திருந்தார்கள். அதற்குப் போயிருந்தபொழுது, நான் இந்த ஆங்கிலக் கதைகள் நடத்துவதை விட்டு, நமது தேசத்துக் கதைகளை நடத்தக் கூடாதா என்று கேட்டேன். தென்னாலி ராமன் தகப்பனார் சிரார்த்தத்தைப் பற்றிய கதையொன்று முன்னமே இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன்; அதன்படி, நானிவர்களை இப்படிக் கேட்கவே, “நீங்கள் அப்படிப்பட்ட நாடகத்தை எங்களுக்கு இங்கிலீஷில் எழுதித் தாருங்கள”” என்று அச் சபையார் கேட்டனர். அவர்கள் வேண்டுகோளுக்கிரங்கி ஹரிச்சந்திரன் கதையை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தேன். அதை அச்சிட்டும் வெளிப்படுத்தினேன். அதை அப்பால்ய சபையார் ஆடிய பொழுது, வந்திருந்தவர்கள் நன்றாயிருந்ததென மெச்சினர். அது பன்முறை சென்னையிலும் நெல்லூர் முதலிய வெளி ஜில்லாக்களிலும் ஆடப்பட்டது. அச்சிட்ட அப் புத்தகத்தின் இரண்டு பதிப்புகளும் செலவழிந்து போய், இன்னும் அப்புஸ்தகம் வேண்டுமென்று அடிக்கடிக் காகிதங்கள் வருகின்றன. இப்படி இது கொஞ்சம் பிரபலமாகவே, மற்றொரு சபையார் திவான் பகதூர் பவாநந்தம் பிள்ளை அவர்கள் அச்சிட்டிருக்கும் புஸ்தகம் மிகப் பெரியதாயிருக்கிறது; ஓரிரவிற்குள் ஆடத் தகுந்தபடி, ஆங்கிலத்தில் நீங்கள் அச்சிட்டிருக்கும் ஹரிச்சந்திர நாடகத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தாருங்கள் என்று கேட்டனர். அதன் பேரில், அதை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டுக் கொடுத்தேன். இது நான்கைந்து முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. சென்ற வருஷம் ட்ரேட்ஸ் ஸ்டாப் கிளப் (Trades Staff Club) அங்கத்தினர் இதை மிகவும் விமரிசையாக நடித்தனர். நான் பார்த்த சந்திரமதிகளுக்குள் இச்சபையைச் சார்ந்த சந்திரமதி வேஷதாரியே, எங்கள் சபை கிருஷ்ணசாமி ஐயருக்குப் பிறகு, நன்றாய் நடித்தவர் என்பது என் அபிப்பிராயம்.
இந்த ஹரிச்சந்திர நாடகத்தை ஒரு முறை எங்கள் சபையார் நடத்திய பொழுது, ஷ துரைசாமி ஐயங்காரும், வடிவேலு நாயகரும் ஹரிச்சந்திரனாகவும் சந்திரமதியாகவும் நடிக்க, எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலுவும் நானும் காலகண்டியாகவும் காலகண்ட ஐயராகவும் நடித்தோம்.
இந்த ஹரிச்சந்திர நாடகத்தை விட்டகலுமுன் இன்னொரு விஷயத்தைக் குறித்து எழுத விரும்புகிறேன். ஒரு முறை வெளியூரில் இதை எங்கள் சபையார் நடித்த பொழுது, ஸ்ரீனிவாச ராகவாச்சாரியும் வடிவேலு நாயகரும் ஹரிச்சந்திரனும் சந்திரமதியுமாக நடிக்க, நான், அவர்கள் காட்டில் கஷ்டப்படும்பொழுது, அவர்களைப் பயமுறுத்தும் பூதமாக நடித்தேன்; பூதத்திற்கேற்றபடி முகத்தை விகாரமாகச் செய்து கொண்டு, கறுப்பு ஆடை அணிந் தேன்; நான் பேசவேண்டியதெல்லாம், “பூ!” என்னும் ஒரு கூச்சலே! இதை நான் இங்கெடுத்து எழுதவேண்டிய காரணம், நாடகமாடுவதென்றால் ஒரு சபையின் அங்கத்தினன் எந்த வேஷமும் தரிக்கச் சித்தமாயிருக்க வேண்டுமென்பதை என் இளைய நண்பர்கள் அறிய வேண்டியே; நாம் அயன் ராஜபார்ட் ஆக்டராயிற்றே, ஆகவே வேறு சின்ன வேஷங்கள் தரிக்கலாகாது என்று எண்ணலாகாது; அன்றியும் இந்நாடகத்தில் கதாநாயகனாக நடித்தோமே, ஆகவே அதே நாடகத்தில் ஓர் அற்ப வேஷம் தரிக்கலாமா என்று யோசிக்கலாகாது. எந்த வேஷத்தை எடுத்துக் கொள்ளும்படி நேர்ந்த போதிலும் அதற்குத் தக்கபடி நடித்தல்தான் ஆக்டருக்குரிய நற்குணம் அதுவும் முக்கியமாக இதை ஜீவனோபாயமாகக் கொள்ளாது வினோதமாக கொள்ளும் ஆமெடூர் (Amateur) ஆக்டர்களுக்கு.
இந்த வருஷம் தசராக் கொண்டாட்டத்தில் தமிழ் தெலுங்கு நாடகங்களுடன், ஒரு மலையாள நாடகமும் ஒரு சிறு ஹிந்துஸ்தானி நாடகமும் ஆடினோம். இச்சமயம் மலையாளி அங்கத்தினர் பலர் இருந்தபடியால், அவர்களையெல்லாம் சேர்த்து ‘கல்யாணிக் குட்டி’ என்னும் மலையாள நாடகத்திலிருந்து சில காட்சிகள் ஆடினோம். அதில் நான் “கேலு” எனும் நாயர் வேலைக்காரன் வேஷம் பூண்டேன். சில மஹம்மதிய மெம்பர்கள் இருந்தபடியால், ஷேக்ஸ்பியர் எழுதிய “நடுவேனிற் கனவு” (Mid summer Nights’ Dream) என்னும் நாடகத்திலிருந்து ஒரு காட்சியை ஹிந்துஸ்தானியில் மொழி பெயர்த்து, அதை ஆடினோம். அதிலும் எனக்கு ஒரு பாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்துஸ்தானி பாஷை பேச நான் கற்றுக்கொண்டபடியால், இதில் ஆடுவது எனக்கு எளிதாயிருந்தது. பெரிய நாடகங்களில் முக்கியமான கதாநாயகன் பாகத்தை ஆடுவதில் எவ்வளவு சந்தோஷமாயிருந்ததோ, அவ்வளவு சந்தோஷ மிருந்தது, வேறு பாஷைகளில் இப்படிப்பட்ட சிறிய பாகங்களை எடுத்துக்கொள்வதிலும்; ஒருவிதத்தில் அதைவிட அதிக சந்தோஷமிருந்ததென்றே நான் கூற வேண்டும்; ஏனெனில் பெரிய பாகங்கள் ஆடும்பொழுது எப்படியிருக் குமோ என்னும் பயமிருந்தது; இச் சிறிய பாகங்கள் ஆடும்பொழுது கவலையேயில்லை.