நாடக மேடை நினைவுகள்/மூன்றாம் பாகம்
நாடக மேடை
நினைவுகள்
மூன்றாம் பாகம்
முதல் வருஷம் தசராக் கொண்டாட்டத்தில் தினம் பூஜை ஆனவுடன், பிரசாதம் சாப்பிடுமுன், ஆக்டர்களில் பாடத் தெரிந்தவர்களெல்லாம் கொஞ்சம் பாட ஆரம்பித்தோம். இரண்டாவது வருஷம் கொட்டகை போட்டபின், அங்கு ஏதாவது நாடகக் காட்சிகள் நடத்தலாமேயென்று, இரண்டொரு நாள் எங்கள் நாடகங்களிருந்து சில காட்சிகளை ஆடினோம். பிறகு விக்டோரியா ஹால் மேல் மாடியை வாடகைக்கு எடுத்துக் கொண்டபின், ஒன்பது அல்லது பத்துத் தினங்களும் நாடகங்கள் ஆட ஆரம்பித்தோம். முதலில் தினச் செலவு அதிகமானால் 5 ரூபாயாயிருந்தது. பிறகு குறைந்தபட்சம் 50 ரூபாய் ஆகிவிட்டது! இவ்வாறு செலவு அதிகமாகவே, ஒருவாராக இதை மேற்கொள்வது கடினமென்று, அங்கத்தினரைக் கூட்டங்களாகப் பகிர்ந்து கொடுத்தோம். இவ்வாறு தற்காலம் வக்கீல்கள் தினமென்றும், ஆரிய மஹா வைசியர்கள் தினமென்றும், பேரி செட்டிகள் தினம் என்றும், வர்த்தகர்கள் தினமென்றும், மைலாப்பூர் அங்கத்தினர்கள் தினமென்றும் பலவிதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இத்தகைய கூட்டத்தாருள் இடைவிடாது நாளது வரையில் நடத்தி வந்தவர்கள் ஆரிய மகா வைசியர்களே. இக் கொண்டாட்டத்தின் இரண்டாம் வருஷம் முதல், ஸ்திரீகளுக்குப் பிரத்யேகமாக ஒரு தினம் ஏற்படுத்தினோம். அன்று சி.பி. ராமஸ்வாமி ஐயர் செலவையெல்லாம் மேற்கொண்டார்; முதலில் 20 அல்லது 30 ஸ்திரீகள் வர ஆரம்பித்துப் பிறகு நூற்றுக்கணக்காகி, ஒரு வருஷம் ஆயிரம் ஸ்திரீகளுக்கு மேல் வந்தார்கள் என்று சொல்வது மிகையாகாது. முதல் வருடங்களில் 20 அல்லது முப்பது ரூபாய் செலவழித்தவர் பிறகு நூறுக்கு மேலாகி, சில வருஷங்களில் 500, 600 ரூபாய் செலவழித்தது எனக்குத் தெரியும். ஒரு வருஷம் விக்டோரியா ஹாலில் இடம் போதாமல், சவுத் இந்தியன் அத்லெடிக் அசோசியேஷனில் இத் தினக் கொண்டாட்டத்தை வைத்துக் கொண்டபோது, இவர் 700 ரூபாய் இந்த ஒரு தினத்திற்காகச் செலவழித்தார். அப்பொழுது என்னை அழைத்து, “சம்பந்தம், வருகிற வருடம் முதல், செலவானது நூறு எண்களுக்குமேல் போகாமலிருக்கும்படி பார்த்துக் கொள்” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னது எனக்கு ஞாபகமாயிருக்கிறது. சென்னையில் அநேகம் செல்வந்தர்களைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் அவர்களுள் சத் விஷயங்களில் முகங்கோணாது சந்தோஷமாய் ஏராளமாய்ச் செலவழிக்கும் இவரைப் போன்றவர்கள் மிகவும் சிலரே எனக் கூற வேண்டும். இவர் ஸ்ரீமான் சேஷகிரி ஐயருக்குப் பிற்காலம் எங்கள் சபையில் அத்யட்சர் ஆனவரையில், தசராக் கொண்டாட்டத்தில் இத் தினக் கொண்டாட்டத்தை மிகவும் விமரிசையாக நடத்தி வந்தார். அதன் பிறகு இந்நாள்வரை, அத்யட்சகர் தினத்தை நடத்தி வருகிறார்.
மேற்சொன்னபடி தசராவில் ஸ்திரீகளுக்கு ஒரு நாள் ஏற்படுத்திய பொழுது, நியாயப் பிரகாரம் குழந்தைகளுக்கும் ஒரு நாள் ஏற்படுத்த வேண்டியதாயிற்று. “குழந்தைகள் தினத்தில்” அங்கத்தினர் வீட்டிலுள்ள குழந்தைகளையெல்லாம் வரவழைத்து, அவர்களுள் பாடத் தெரிந்தவர்களையெல்லாம் பாடச் சொல்லி, ரெசிடேஷன் (Recitation) ஒப்புவிக்கத் தெரிந்தவர்களை யெல்லாம் ஒப்புவிக்கச் சொல்லி, அவர்களுக்கெல்லாம் பரிசுகள் கொடுத்து, பிறகு எல்லாக் குழந்தைகளுக்கும் (50, 60 வயதுடைய குழந்தை கள் உட்பட) சிற்றுண்டியளித்து, ஏதாவது இரண்டொரு ஹாஸ்யக் காட்சிகள் ஆடி அவர்களைக் களிக்கச் செய்து, அவர்களை எல்லாம் தத்தம் இல்லங்களுக்கு அனுப்புவது வழக்கமாயிற்று. இத் தினக் கொண்டாட்டத்தில் சில சமயங்களில் 500, 600 சிறு குழந்தைகள் ஒருங்கு கூடியிருக்கும் காட்சியை நான் பன்முறை கண்டிருக்கிறேன். அச் சமயங்களில் அத்தனைக் குழந்தைகளும் முகமலர்ச்சியோடு வேடிக்கையாய் இரண்டு மூன்று மணி சாவகாசம் ஒருங்கே கழிப்பதைக் கண்டு சந்தோஷப்படாத மனிதனை நான் ஒரு முறையாவது கண்டேன் இல்லை! இவ்வாறு சிறு குழந்தைகளை வருஷத்தில் ஒரு தினமாவது ஒருங்கே சேர்த்துச் சந்தோஷிக்கச் செய்வது எங்கள் சபை செய்த பாக்கியம் என்று கருதுகிறேன்.
இவ்வாறு இவ்வருஷம் தொடங்கிய தசராக் கொண்டாட் டமானது இதுவரையில் ஈஸ்வர கிருபையால் தடைப்படாது நடந்து வருகிறது.
இவ்வருஷம் எங்கள் சபையில் ஆரம்பித்த இன்னொரு புதிய விஷயம் என்னவென்றால், நாடகக் கவிகளைப் பற்றியும் சிறந்த நாடகங்களைப் பற்றியும் கற்றறிந்த பெரியோர்களைக் கொண்டு உபன்யாசங்கள் செய்யும்படி செய்ததே. இவ்வருஷம் காலஞ்சென்ற பண்டிட் சதாவதானம் T. E. ஸ்ரீனிவாஸாச்சாரியார் அவர்கள் “நாடகம் நடிக்கும் லட்சணங்கள்” என்பதைப்பற்றி ஒரு உபன்யாசம் செய்தார். ஆர்தர் டேவிஸ் என்பவர் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய “ஹாம்லெட்” என்னும் சிறந்த நாடகத்தைத் தக்க அபிநயத்துடன் படித்துக் காட்டினார். இவ்வாறு அவர் படித்துக் காட்டியது முக்கியமாக எனது வேண்டுகோளுக்கிணங்கியாம். நான் அவரைக் கேட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதாவது அந்நாடகத்தை நான் தமிழில் அமைத்து முடித்து எங்கள் சபையில் அதை ஆட வேண்டுமென்று இச்சை கொண்டதேயாம்.
இனி அந்த “அமலாதித்யன்” நாடகத்தைப்பற்றிக் கொஞ்சம் விரிவாக எழுத விரும்புகிறேன். அதற்கு முக்கியமான காரணம், இந்நாடகத்தை நான் எழுதியுள்ள நாடகங்களிலெல்லாம் சிறந்தது என்று பெரும்பாலார் கூறுவதே யாம்; அன்றியும், நான் மேடையின் மீது நடித்த பாத்திரங்களில் எல்லாம்; இந்த நாடகத்தில் அமலாதித்யனாக நடித்தது மிகவும் சிலாகிக்கத்தக்கதென்று எனது நண்பர்கள் அநேகர் கூறக் கேட்டிருக்கிறேன். அன்றியும் எழுதுவதற்கும் நடிப்பதற்கும் இந்நாடகத்திற்காக நான் எடுத்துக் கொண்ட சிரமம், மற்றெந்த நாடகத்திற்கும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே இதைப்பற்றிப் பல விவரங்களை இங்கு எழுத என் நண்பர்களுடைய உத்தரவைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஷேக்ஸ்பியர் என்பவர் நாடகக் கவிகளுக்குள் எல்லாம் மிகச் சிறந்தவர் என்று உலகத்தோரில் யாவராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறது. அவர் எழுதிய சுமார் 42 நாடகங்களுக்குள் ‘ஹாம்லெட்’ என்பதுதான் மிகச் சிறந்தது என்று கற்றறிந்தோரால் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அன்றியும் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள எல்லாப் பாஷைகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று கூறுவது மிகையாகாது. ஆசியாக் கண்டத்திலுள்ள ஜப்பான் முதலிய தேசத்து பாஷைகளிலும் மொழிபெயர்க் கப்பட்டிருக்கிறதாக அறிகிறேன். அன்றியும் இங்கிலாந்து தேசத்தில் இந்நாடகத்தின் கதாநாயகனாகிய ‘ஹாம்லெட்’ என்னும் பாத்திரத்தை ஆட இச்சை கொள்ளாத நடிகர் கிடையாதென்றே சொல்லலாம். என்னைக் கேட்குமிடத்து, இதைப் படிக்கும் எவனும் தன்னிடம் கொஞ்சமாவது நாடகமாட வேண்டுமென்னும் இச்சையுடையவனாயின், இவ்வேஷம் தரிக்க வேண்டுமென்று விரும்பாதவன் இவ்வுலகிலேயே இல்லையென்று கூறுவேன். மாடம் சாரா பெர்ன் ஹார்ட் (Madame Sarah Bernhart) என்னும் பிரெஞ்சு தேசத்திய ஸ்திரீ, தான் ஆண் வேடம் பூண்டு, தன் 50ஆம் வயதில் இந்த வேடத்தைத் தரிக்கப் பிரியப்பட்டு, அவ்வண்ணமே நடித்தாள் என்றால், இதைப்பற்றி நான் அதிகமாகக் கூற வேண்டிய நிமித்தமில்லை என்று நினைக்கிறேன். நாடக மேடை ஏறியிராத, இதை வாசிக்கும் சில நண்பர்கள், இப் பாத்திரத்தில் என்ன அவ்வளவு ஆக்டர்களுடைய மனத்தைக் கவரும்படியான சூட்சுமம் இருக்கிறதெனக் கேட்கக்கூடும். நானும் இதைப்பற்றிப் பன்முறை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். இப் பாத்திரத்தில் ஒரு நடிகன் தன் முழு சாமர்த்தியத்தையும் காட்டப் போதுமான இடங்கள் ததும்பியிருக்கின்றனவென்பதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்னும் தீர்மானத்திற்கு வந்தேன். ஒவ்வொரு நாடகமும் கதாநாயகன் ஒன்றிரண்டு ரசங்களை முக்கியமாகக் காட்ட இடங்கொடுக்கும். சில நாடகங்களில் ஹாஸ்ய ரசத்தைக் காட்டலாம்; சில நாடகங்களில் கருணா ரசத்தைக் காட்டலாம்; சிலவற்றுள் சிருங்கார ரசத்தைக் காட்டலாம். இன்னும் இப்படியே மற்ற நாடகங்கள் மற்ற ரசங்களை நடித்துக் காட்ட இடங்கொடுக்கும். இந்த ஒரு நாடகப் பாத்திரத்தில்தான் எல்லா ரசங்களையும் எடுத்துக் காட்டச் சிறந்த இடங்கள் உண்டு. சுருக்கிச் சொல்லுமிடத்து இந்தப் பாத்திரத்தைத் திருப்திகரமாய் ஆடத்தக்கவன் எந்தப் பாத்திரத்தையும் நன்றாயாடுவான் என்பதற்கையமில்லை; ஆகவே இப் பாத்திரத்தைச் சபையோர் மெச்சும்படியாக நடிப்பது மிகவும் கடினமென்று எனது நண்பர்கள் அறிவார்களாக. அதனால்தான் இப்பாத்திரத்தில் பெயர் எடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு நடிகனும் விரும்புவது போலும்! அன்றியும் ஷேக்ஸ்பியர் காலம் முதல் இங்கிலாந்து தேசத்தில், பிரபல ஆக்டர் என்ற பெயர் பெற்ற ஒவ்வொரு நடிகனும் இதை நடித்திருக்கிறான். பூர்வகாலத்தில் எட்மண்ட் கீன் (Kean), கெம்பில் (Kemble) முதலிய பிரசித்தி பெற்ற ஆக்டர்களும், தற்காலத்தில் சர்ஹென்றி இர்விங், சர் பிர்போம் டிரி (Sir Beerbohm Tree), சர் போர்ப்ஸ் ராபர்ட்ச ன் (Sir Forbes Robertson), சர் பென்சன் (Sir Benson) முதலிய ஆக்டர்களும் இதில் பிரசித்தி பெற்றிருக்கின்றனர். அமெரிக்க தேசத்தில் எட்வின் பூத் (Edwin Booth) என்பவர் இப் பாத்திரத்தில் மிகவும் கியாதி பெற்றிருந்தார். ஆகவே எல்லா ஆக்டர்களும் இதை ஆட விரும்புவது ஓர் ஆச்சரியமன்று. இந்த ஆசை எனக்கும் கொஞ்சம் இருந்ததென நான் ஒப்புக்கொள்ள வேண்டியதே. ‘போதாக் குறைக்கு பொன்னியம்மன் குறை’ என்றவாறு எனது நண்பர் வாமன்பாய் என்பவர், இப்பாத்திரம் உன்னால் சரியாக ஆட முடியாதென்று கூறியது, என்னை எப்படியாவது இந் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து, இப் பாத்திரத்தை நான் ஆட வேண்டுமென்று உந்தியதென்கிற விஷயத்தை எனது நண்பர்களுக்கு முன்னமே தெரிவித்திருக்கிறேன். இவ்வாறு உந்தப்பட்டவனாய், ‘ஹாம்லெட்’ என்னும் பெயருக்கு ஒப்ப, அமலாதித்யன் என்று பெயர் வைத்து இச் சிறந்த நாடகத்தைத் தமிழில், ஆறு வருடங்களுக்கு முன்பாக எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாகக் கஷ்டப்பட்டு இந்த ஆறு வருடங்களாக எழுதி ஒருவாறு முடித்தேன். முடித்த பிறகு, எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் இதைக் கொண்டுபோய், நாள் தோறும் அவருக்குச் சவகாசமிருக்கும் பொழுதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் காட்டி அவர் சொல்லும் படியான திருத்தங்களையெல்லாம் குறித்துக்கொண்டு வந்தேன். இப்படி ஏறக்குறைய ஆறு மாதம் கழிந்தது. சில சமயங்களில், கஷ்டமான பாகங்கள் வரும்பொழுது ஒரு நாளைக்கு நான்கைந்து வரிக்கு மேல் போகாது; சில சமயங்களில் ஒரு பக்கம் இரண்டு பக்கம் முடிந்து போம். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒரு வாக்கியமோ வரியோ, இவைகளைப் படித்து, பிறகு அதன் தமிழ் அமைப்பை நான் கூறுவேன்; எனது நண்பர், ஆங்கிலத்தில் அம் மகா நாடகக் கவி எழுதிய ஒவ்வொரு பதத்தின் அர்த்தமும் சரியாகத் தமிழில் அமைந்திருக்கிறதா என்று ஆழ்ந்தாராய்வார்; கொஞ்சமாவது தன் மனத்திற்குத் திருப்திகரமாயில்லாவிட்டால், “ஜெஷ்டை! அதென்னடா அது? சரியாயில்லை யென்றால்! இன்னொரு தரம் படி” என்று மறுபடியும் படிக்கச் சொல்வார். இவ்வாறு ஒவ்வொரு வாக்கியத்தையும் படித்துப் படித்துத் திருத்தித் திருத்தி, தன் மனத்திற்குத் திருப்திகரமாகிற வரையில் விடமாட்டார். முதலிலேயே ஏதாவது நான் சரியாக எழுதி விட்டிருந்தால், உடனே எனக்கு இரண்டு மார்க்குகள் கொடுப்பார்! இதற்கு நான் அர்த்தம் கூறாவிட்டால் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு இது வெளிப்படையாகாது. பால்ய சிநேகிதர்களான எங்களுக்குள் அநேக வருஷங்களாக, ஏதாவது நன்றாகச் செய்தாலும் சொன்னாலும், ஒருவருக்கொருவர் மார்க்குகள் (Marks) கொடுத்துக் கொள்வது வழக்கம். இரண்டு மார்க்குகள்தானா, என்று எனது நண்பர்கள் பரிஹசிக்க வேண்டாம். எங்களுடைய நியமனப்படி இரண்டு மார்க்குகள்தான் அதிகப்படி (Maximum); இதைப் பெறுவது மிகவும் கடினம். சாதாரணமாக ஒரு மார்க் அரைமார்க்தான் வரும்! மேற்சொன்னபடி என் பால்ய நண்பருக்கு ஏறக்குறைய ஆறு மாசம் கஷ்டம் கொடுத்து, இந்நாடகத்தை எழுதி முடித்தேன். தன் அலுவல்களையும் கவனிக்காது, சிரமத்தையும் கவனிக்காது எனக்காக இவ்வளவு கஷ்டமெடுத்துக் கொண்டு, எனக்கு ஆசிரியர் ஸ்தானத்திலிருந்து இந்நாடகத்தைப் பூர்த்தி செய்ய உதவிய என் நண்பருக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? அவரிடம் போய் “இதற்காக உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும்?” என்று கேட்க மிகவும் அஞ்சுகிறேன். ஏனெனில், நான் அப்படி அவரைக் கேட்பேனாயின் “இந்தக் கேள்வி கேட்டதற்காக, உனக்கு மைனஸ் 200 மார்க் (minus 200 marks) கொடுக்கிறேன்!” என்று சொல்லி விடுவார்! அந்த மைனஸ் 200 மார்க்கை நான் எப்படிக் கழிப்பது? ஆகவே பேசாமலிருக்கிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள் “பயன் றூக்கார் செய்த வுதவி, நயன்றூக்கினன்மை கடலிற் பெரிது” என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவர் கூறியதை ஞாபகப்படுத்திக் கொள்வார்களாக.
நான் எழுதிய இந்நாடகத்தை எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாசய்யங்கார் திருத்தச் செய்ததற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. நான் சிறு வயது முதல், தமிழில் கொஞ்சம் கெட்டிக்காரனா யிருந்தேன் என்று எண்ணுவதற்கு இடமுண்டு. எனது நண்பரோ நான்காம் வகுப்பில் தமிழை விட்டு சம்ஸ்கிருதம் படிக்கத் தொடங்கினார். அப்படியிருந்தும் நாங்களிருவரும் பழைய மெட்ரிக் குலேஷன் (Matriculation) வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை பரீட்சையில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்ப்பதில் என்னைவிட அதிக மார்க் (mark) வாங்கினார். அப்பொழுது எனக்கு அவர் மீதிருந்த பொறாமை கொஞ்சமல்ல. தமிழனாய்ப் பிறந்து, தமிழில் கெட்டிக்காரனெனப் பெயர் பெற்ற என்னைவிட இந்தப் பிராமணப்பிள்ளை, தமிழைவிட்டு சம்ஸ்கிருதம் படித்தவன், தமிழ் மொழிபெயர்ப்பில் என்னைவிட அதிக மார்க் வாங்குவதா! என்று என் மனத்திலுதித்த பொறாமையானது அளவிடத்தக்கதன்று. இன்னும் அந்தப் பொறாமை என்னை முற்றிலும் அகலவில்லை யென்றே கூற வேண்டும். அவர் என்னைவிடப் பிரபலமான வக்கீல் எனப் பெயர் பெற்றார். அதற்குச் சந்தோஷப்பட்டேன்; நான் ஸ்மால் காஸ் கோர்ட்டு ஜட்ஜானபோது அவர் ஹைகோர்ட் ஜட்ஜானார், அதற்கும் சந்தோஷப்பட்டேன்; இதிலெல்லாம் சந்தோஷப்பட்டவன், என்னைவிடத் தமிழ் மொழி பெயர்ப்பில் அவர் கெட்டிக் காரராயிருக்கிறாரென நினைக்கும் பொழுதெல்லாம், அந்தப் பழைய பொறாமை என் மனத்தில், “இருக்கிறேன்”என்கிறது! “தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்றவெல்லாம், எற்றேயிவர்க்கு நாம் என்று” எனப் பெரியார் கூறிய உண்மை யைக் கடைப்பிடித்து அவரைப் போல் நாமும் இதில் விற்பன்னனாக வேண்டுமென்று விரும்புகிறேனேயொழிய, இப்பொறாமை எனக்கு வேறொரு கெடுதியையும் செய்ய வில்லை. இக் காரணத்தினால்தான் நான் மிகவும் கஷ்டப் பட்டு எழுதிய இந்த “அமலாதித்யன்” என்னும் நாடகத்தை, அவர் பார்வையிட்டுத் திருத்தச்செய்தேன். இந்த நாடகத்தைப் படிப்பவர்கள், இது நன்றாய்த் தமிழில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று எனக்கு (Mark) கொடுக்க விரும்பினால், முதலில் அதில் பாதியை, எனது பால்ய நண்பருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று உறுதியாய்க் கூறுவேன்.
மேற்சொன்னபடி என் நண்பரைக் கொண்டு இந்த நாடகத்தைச் சீர்திருத்திய பிறகு, துண்டுக் காகிதங்களில் இதை என் வழக்கப்படி பென்சிலினால் எழுதியிருந்ததை, ஒரு நோட் புஸ்தகத்தில் கடைசி முறை ஆங்கில நாடகத்துடன் ஒத்திட்டுப் பார்த்து இங்கியினால் எழுதி வைக்க வேண்டுமென்று தீர்மானித்து, சென்னையிலிருந்தால், இதற்கு ஏதாவது அடிக்கடி தடங்கலுண்டாகுமென்று, கோர்ட் விடுமுறைக் காலமானதால் திருவையாற்றுக்குப் போய்ச் சேர்ந்தேன். அத்தருணம் என் தமயனார் ப. அய்யாசாமி முதலியார் அங்கு டிஸ்டிரிக்ட் முன்சீப் (District Munsiff) ஆக விருந்தார்.
அவரிடம், நான் அங்கு வந்த காரணம் இன்னதென்றும், நான் இந்த நாடகத்தை எழுதி முடித்தாகிறவரையில், என்னை அங்குள்ள சிநேகிதர்கள் ஒருவரும் வந்து பார்க்கும்படி விடலாகாதென்றும், வாக்கு வாங்கிக்கொண்டு, அவரும் அதன்படியே செய்ய, மூன்று வாரத்தில், ஒரு மூச்சாய், தூங்குகிற வேளை - சாப்பிடுகிற வேளை தவிர இதே வேலையில் உட்கார்ந்து, ஒவ்வொரு வரியாகக் கடைசி முறை ஒத்திட்டுப் பார்த்து எழுதி முடித்தேன். எழுதி முடித்தவுடன் முதுகின் மீதிருந்த ஒரு பெரும் பாரம் நீங்கினவன்போல் சந்தோஷப்பட்டேன்.
இவ்வாறு எழுதி முடித்தவுடன் என் மனத்தில் ஒரு சிறு பயம் குடிகொண்டது. “சத்ருஜித்”நாடகத்தின் காகிதங்கள் காணாமற் போனபடி இது காணாமற் போனால் என்ன செய்கிறது என்று பயந்தவனாய், என் பென்சில் பிரதியை, என் பெட்டியில் வைத்துக் கொண்டு, நான் இங்கியில் எழுதிய பிரதியை, திருவையாற்றிலிருந்து சென்னைக்கு என் பேருக்கு ரிஜிஸ்டர் செய்து அங்கிருந்து அனுப்பி விட்டு, நான் பென்சில் பிரதியுடன் பட்டணம் வந்து சேர்ந்தேன்! நான் தனியாக ரெயிலேறி வந்தமையால், ஒன்று காணாமற் போனாலும், மற்றொன்றாவது நிற்கும் என்று இம்மாதிரிச் செய்தேன். ஒரு முறை பணம் பறி கொடுத்தவன் இரண்டு முடிப்புப் போடுவானன்றோ!
இவ்வாறு எழுதி முடித்தானவுடன், எங்கள் சபையின் நிர்வாக சபையார் இதைச் சபையில் ஆட வேண்டுமென்று தீர்மானித்தனர்; அப்பொழுது அவர்களிடம் நான், “ஒத்திகை களெல்லாம் என் மனத்துக்குத் திருப்திகரமாக ஆகிறவரையில் இந்நாடகத்தைப் பகிரங்கமாக ஆடேன்; அன்றியும், இந்நாடகம் முடிகிறவரையில், வேறெந்த நாடகமும் ஆட மாட்டேன்” என்று கூறிவிட்டேன். இது நடந்தது இவ்வருஷம் ஜூலை மாதம் என்று நினைக்கிறேன். உடனே ஒத்திகைகள் தொடங்கி ஆறு மாதம் இடைவிடாது ஒத்திகை நடத்தினேன். எனது மற்றெல்லா நாடகங்களை விட, இந்த நாடகத்திற்குத்தான் நான் அதிக ஒத்திகைகள் நடத்தினேன் என்று நிச்சயமாய்க் கூறக்கூடும். நான் ஒத்திகைகள் நடத்தும் விதத்தை, நாடக சபைகளில் கண்டக்டர்களாக இருப்பவர்களும் இருக்க விரும்புவோர்களும், அறிய இச்சைப்படுவாரென நம்பி இதைப் பற்றிச் சற்று விவரமாய் இங்கு எழுதுகிறேன்.
ஒரு நாடகத்தை ஆட வேண்டுமென்று தீர்மானித்தவுடன், முதலில் அதை எனது ஆக்டர்களையெல்லாம் ஒருங்கு சேர்த்து அவர்களுக்குப் படித்துக் காட்டுவேன். இதற்கு முன்பாகவே, அந் நாடகத்தைப்பற்றியும் அதன் குணா குணங்களைப்பற்றியும் எழுதியிருக்கும் புத்தகங்கள் ஏதேனும் உண்டேல், அவைகளையெல்லாம் படித்து முடிப்பேன். பிறகு என்னுடைய நாடகமாயிருந்தால் நான் எழுதும்பொழுதாவது, மற்றவர்கள் நாடகமாயிருந்தால், நான் அதைப் படிக்கும்போதாவது, நான் இன்ன ஆக்டருக்கு இன்ன வேஷம் தகுந்ததாயிருக்கும் என்று தீர்மானித்தபடி, அவர்களுக்கு நாடகப் பாத்திரங்களைப் பகிர்ந்து கொடுப்பேன். இதன் மீது ஒவ்வொரு ஆக்டராக, தனிமையில் எடுத்துக் கொண்டு, அவரது பாகத்தை நிதானமாய்ப் படித்துக்காட்டி, அதன் நுட்பங்களையெல்லாம் சொல்லிக் கொண்டு போவேன். பிறகு அவர்களுக்குத் தங்கள் தங்கள் பாகத்தைக் குருட்டுப் பாடம் செய்து கொள்ளும்படி சொல்வேன். இச் சமயம், “உங்கள் வசனங்களை மாத்திரம் குருட்டுப் பாடம் செய்து விடுங்கள்; இன்னமாதிரி அரங்கத்தில் நடிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்து விடாதீர்கள்!” என்று அவர்களுக்குச் சொல்லி வைப்பேன். இதற்கொரு முக்கியமான காரணம் உண்டு. ஆக்டர்களில் எல்லோரும் தேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்; சில புத்திமான்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும் இந்தப் பாத்திரத்தை என்று சரியாகத் தீர்மானிக்கக் கூடும். மற்றவர்கள் தங்கள் பாத்திரத்தைப் படிக்கும்பொழுது, இதை இப்படி நடிக்க வேண்டுமென்று தவறாகத் தீர்மானித்து விட்டார்களோ, பிறகு அவர்களைச் சரியான வழிக்குத் திருப்புதல் மிகவும் கடினம் என்பது என் அனுபவம். சரியாக ஒருவனை நேர்வழியில் அழைத்துக் கொண்டு போவது சுலபம்; அவன் கோணல் வழியில் போனபின், திருப்பிச் சரியான வழிக்குக் கொண்டு வருவது மிகவும் கஷ்டம். ஆகவே அவர்கள் பாகத்தைக் குருட்டுப் பாடம் செய்தானவுடன் அவர்களுடன் கலந்து பேசி இனி இப்படி ஆக்டு செய்ய வேண்டுமென்று நான் அவர்களுக்கு நடித்துக் காட்டும் வரையில், அவர்களாகத் தீர்மானிக்கவிடுவதில்லை. இவ்விஷயத்தில் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நான் பிடிவாதம் செய்வதில்லை என்று நினைக்கிறேன். புத்திமான்களான என் நண்பர்கள், நான் சொல்லிக் கொடுத்தை விட்டு இப்படி நடித்தால் நலமாயிருக்குமல்லவா, என்று ஏதாவது விசேஷமாகச் சொல்வார்களானால்; சரியானால், அதை ஒப்புக்கொண்டு, பிறகுதான் இப் பாத்திரத்தை இவ்வாறு நடிக்க வேண்டுமென்று தீர்மானிப்பேன். நான் எழுதிய நாடகங்களிலும், எனது ஆக்டர் நண்பர்கள் பலர், நான் முதலில் சொன்னதைவிட, மேலாக நடிக்கும் மார்க்கங்களை எனக்குக் காட்டியுள்ளனர். அதை நான் மிகுந்த சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர்களுடன் கலந்து பேசி இன்னவாறு நடிக்க வேண்டு மென்று தீர்மானித்த பிறகு, அவர்களை ஒவ்வொருவராக, தங்கள் பாகங்களை என்முன் நடித்துக் காட்டச் சொல்வேன். இப்படிச் செய்வதனால் ஒரு முக்கியமான அனுகூலமுண்டு. அநேக ஆக்டர்கள் கூச்சமுடையவர்களா யிருப்பார்கள்; பலர் எதிரில், அவர்கள் நடிப்பது சரியாகவில்லை வேறுவிதமாய் நடிக்க வேண்டுமென்று எடுத்துக் கூறினால், அவர்கள் மனத்தில் மிகவும் உறுத்தலாம். தனித்தனியாக எடுத்துக் கொண்டு, அவர்களை எவ்வளவு திருத்திய போதிலும், இம்மாதிரியாகக் கஷ்டப்படமாட்டார்கள். அன்றியும் புது ஆக்டர்கள், மிகவும் லஜ்ஜையுள்ளவர்களாயிருப்பார்கள். அவர்களைத் தனியாக ஒத்திகை செய்யும்படி செய்தால், அந்த லஜ்ஜை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும். இவ் விஷயத்தில் என்னாருயிர் நண்பரான சி. ரங்கவடிவேலு, எனக்கு மிகவும் கஷ்டம் கொடுப்பவராயிருந்தார். சாதாரண ஒத்திகைகளில், தன் பாகத்தைச் சும்மா படித்துக்கொண்டு போவாரேயொழிய நடித்துக் காட்டமாட்டார். கடைசி ஒத்திகைகளிலும், என் கட்டாயத்தின் பேரில்தான் சரியானபடி நடிப்பார். இதற்கு முக்கியக் காரணம் அவர் மிகவும் கூச்சமுடையவராக இருந் ததேயாம். ஆயினும் தாமோதர முதலியாரைப்போல், அவரிடமும் ஒரு நற்குணமுண்டு. அதாவது, தனக்கு ஏதாவது ஒரு விஷயம் நன்றாய் மனத்தில் உறுத்துகிற வரையில், என்னை அதைப் பன்முறை நடித்துக் காட்டும் படி தொந்தரவு செய்வார். இந்த அமலாதித்திய நாடகத்தில் அவர் எடுத்துக் கொண்ட அபலை (Ophelia) வேஷத்தில், அவர் வரும் கடைசிக் காட்சியில் பைத்தியக்காரியாக நடிக்க வேண்டியிருந்ததை, தனக்குச் சரியாக வருமளவும் நான் எத்தனை முறை அவருக்கு, அதை அவரது வீட்டின் மேல்மாடியில் நடித்துக் காட்டினேன் என்பது, என்னால் கணக்குச் சொல்ல முடியாது.
மேற்சொன்னபடி தனித்தனியாக ஒவ்வொரு ஆக்டரையும் தேர்ச்சி செய்த பிறகுதான், எல்லா ஆக்டர்களையும் ஒருங்கு சேர்த்து, மொத்த ஒத்திகைகள் ஆரம்பிப்பேன். இம்மாதிரியாக மொத்தமாய் ஆக்டர்கள் கூடி நடிக்கும் பொழுதுதான், அவரவர்கள் செய்ய வேண்டிய பை பிளே (By Play) என்ன என்பதைச் சொல்லிக் கொடுப்பேன். நாடக மேடையின்மீதேறி நாடகமாடியிராத இதை வாசிக்கும் சில நண்பர்களுக்கு இது இன்னதெனத் தெரியாதிருக்கலாம். ஆகவே இதைப்பற்றிச் சற்று விவரமாக எழுத வேண்டியவனாயிருக்கிறேன். பை பிளே என்றால், அரங்கத்தில், ஒரு நடன் ஏதாவது பேசிக் கொண்டிருக்கும் பொழுது, மற்றவர்கள் தாங்கள் பேச வேண்டிய வசனம் ஒன்றுமில்லா விட்டாலும், தாங்கள் செய்ய வேண்டிய காரியம், காட்டவேண்டிய முகக்குறிப்பு முதலியவைகளாம். இதற்கு என் நாடகமொன்றிலிருந்து ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுகிறேன். மனோகரன் நாடகத்தில் முதல் அங்கம் நான்காம் காட்சியில், மனோஹரன் மடிந்ததாக நம்பி, பத்மாவதியும் விஜயாளும் தீப் புகத் தீர்மானித்துப் புறப்படுகிறார்கள்; அச்சமயம் மனோஹரன் திடீரென்று ராஜப்பிரியனுடன் அரங்கத்தில் தோன்றுகிறான்; புஸ்தகத்தில் விஜயாளும் பத்மாவதியும் விரைந்து போய் மனோஹரனை ஆலிங்கனம் செய்து கொள்ளுகிறார்கள் என்று எழுதியிருக்கிறது; மேடையின் மீதிருக்கும் மற்ற ஆக்டர்களெல்லாம் என்ன செய்ய வேண்டும்? இச் சந்தர்ப்பத்தில், அநேகக் கம்பெனிகள் . இதை ஆடும் பொழுது, மற்ற ஆக்டர்களெல்லாம், அசைவற்று நின்று கொண்டிருப்பதை, நான் பன்முறை பார்த்திருக்கிறேன். நம்முடைய பாகம் வரவில்லையே, அதுவரையில் நாம் சும்மாதான் இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய தாத்பரியம் போலும்; ஆகவே, அவர்கள் நான் வேடிக்கையாய் எனது ஆக்டர்களுக்குக் கூறுவது போல “அவல் மென்று கொண்டு” இருப்பார்கள்! கொஞ்சம் யோசித்துப் பார்ப்பார்களாயின், ஒவ்வொரு ஆக்டரும் இன்னின்னது செய்ய வேண்டுமென்று அவர்களுக்கே புலப்படும். முதலில் பௌத்தாயனன் தான் செய்த சூழ்ச்சி யெல்லாம் கெட்டு, தன்னுயிருக்கே ஹானி வந்ததே என்று பயந்து மெல்ல நழுவப் பார்க்கவேண்டும்; ராஜப்பிரியர், ஆதிமுதல் இந்தக் கபட சன்னியாசியின்மீது சந்தேகங் கொண்டவர்; மனோஹரன் முதலிய மற்றவர்களையும் கவனியாது ஓடிப்போய் பௌத்தாயனனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்; மனோஹரனைத் தன் சொந்த மகன் போல் பாவித்து வந்த சத்தியசீலர், அளவிலாச் சந்தோஷம் கொண்டவராய் மனோஹரனிடம் நெருங்க வேண்டும்; பணிப்பெண்ணாகிய நீலவேணி, வசந்தசேனை செய்த சூதெல்லாம் பயன்படாமற் போயிற்றே என்று மகிழ வேண்டும். இவ்வாறு மற்ற ஆக்டர்களெல்லாம் செய்வ துடன், அவரவர்களுடைய மனோபாவத்திற்குச் தக்கபடி, முகக்குறிப்பு முதலிய அபிநயத்தைக் காட்ட வேண்டும். இப்படிச் செய்வதைவிட்டு, இந்நான்கு ஆக்டர்களும், “அவல் மென்று” கொண்டிருந்தால், இக்காட்சி என்னமாய் நன்றாயிருக்கும் என்பதை எனது நண்பர்களே கவனிப்பார்களாக.
இம்மாதிரியான பை பிளே ஒவ்வொரு ஆக்டருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது அதி அவசியமாம். இது சரியாக இல்லாவிட்டால் எந்த நாகடமும் சோபிக்காது. அரங்கத்தில் ஒரு ஆக்டர் நன்றாய் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது, அவனுடன் இருக்கும் மற்ற ஆக்டர்கள், அதற்குத் தக்கபடி, “பை பிளே” காட்டாதபடியால், அந்த ஆக்டர் நன்றாய் நடித்ததெல்லாம், சபையோர் மனத்தில் உறுத்தாததை நான் பன்முறை கண்டிருக்கிறேன். இக் குற்றம் முக்கியமாக நாடகமாடுவதையே ஜீவனமாக உடைய நாடகக் கம்பெனி களில் நான் கண்டிருக்கிறேன். தென் இந்திய நாடக மேடை சீர்பட வேண்டுமானால், இவர்கள் இந்த ‘பை பிளே’யை முக்கியமாகக் கவனிக்க வேண்டுமென்பது திண்ணம்.
இம் மாதிரியாக, இந்த “அமலாதித்யன்” என்னும் நாடகத்தில் எனது ஆக்டர்களுக்கு நான் “பை பிளே” சொல்லி கொடுத்ததற்கு ஓர் உதாரணத்தை மாத்திரம் இங்கெழுதுகிறேன். இந் நாடகத்தில் மூன்றாம் அங்கம் இரண்டாம் காட்சியில் அமலாதித்யன் தன் தந்தை மடிந்த விதத்தைப்போல் ஒரு நாடகத்தை வேஷதாரிகள் நடிக்கச் செய்ய, அதில் தூங்குகிற அரசன் காதில், அவனது சகோதரன் விஷம் விடுவதுபோல் நடிக்கப்படும் பொழுது இதைக் கண்டு, நான் செய்த கொடுங்கொலையை அமலாதித்யன் அறிந்துகொண்டான் எனத்தெரிந்தவனாய்ப் பயந்தெழுந்து, காலதேவன் அரங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகிறான். இது நடக்கும்பொழுது ஆட்கள் உட்பட அரங்கத்தின்மீது 11 நாடகப் பாத்திரங்கள் இருக்கின்றன. ஒரு நாள் விக்டோரியா பப்ளிக் ஹால் மேல் மாடியில், இக்காட்சியை ஒத்திகை செய்தேன். எனது நண்பர்களாகிய வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், அ. வாமன்பாய், இன்னும் இரண்டொரு பெயர்களை ஹாலில் மத்தியில் உட்கார வைத்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். முதலில் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் படிப்பதும், என் முகக்குறிப்பும் ஏற்றபடி இருக்கிறதா என்று அவர்களைப் பார்க்கச் சொல்லிவிட்டு, பிறகு நானும் அரங்கமேடையை விட்டு விலகி அவர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்தச் சந்தர்ப்பத்தில் மற்ற ஒவ்வொரு ஆக்டரும் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லி, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆக்டராகக் கவனித்து சரியாயிருக்கிறதா என்று பார்த்து வந்தோம். இந்த ஒரு சந்தர்ப்பத்தைப் பதினொரு முறை நடிக்கச் சொல்லி, சீர்திருத்தினோம். பதினொரு முறை இவ்வாறு நடித்தவுடன் காலதேவனாக நடித்த எனது நண்பர் எம். சுந்தரேசன் என்பவர், “சம்பந்தம்! இனி என்னால் இதை நடிக்க முடியாது. எனக்கு இளைப்பாயிருக்கிறது. என்னை மன்னிக்க வேண்டும்!” என்று சொல்லி சோபாவின் மீது சாய்ந்து விட்டார். என்னுடைய ஆக்டர்கள் அக்காலம், நான் அவர்களை எவ்வளவு கஷ்டப்படுத்திய போதிலும், உடன்பட்டு, மனம் கோணாது, கற்று வந்ததைப்பற்றி எனக்குண்டான மன மகிழ்ச்சியை, இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களுக்குக் கூறும் பொருட்டே இதை எழுதலானேன். தற்காலம் சில கண்டக்டர்கள், ஆக்டர்களை ஒத்திகைக்கு வரும்படி அழைத்தால், “எல்லாம் என் பாடம் எனக்கு நன்றாய் வரும், நான் மேடையின் மீது ஆடி விடுகிறேன். எனக்கு ஒத்திகை வேண்டாம்” என்று போய்விடுவதைப் பன்முறை பார்த்திருக்கிறேன். இதைப் படித்தாவது, என் இளைய நண்பர்கள் அவ்வாறு செய்யாம லிருக்க மாட்டார்களா என்று கோரினவனாயும் இதை இங்கு எழுதலானேன்.
இந்த ஒத்திகைகள் இவ்வாறு நடக்கும் பொழுதும், அதற்கு முன்பாகவும், இந்த “ஹாம்லெட்” நாடகத்தைப் பற்றிச் சென்னையிலுள்ள புஸ்தகசாலைகளில் என்னென்ன அச்சிட்ட புஸ்தகங்களிருந்தனவோ ஏறக்குறைய அவைகளையெல்லாம் படித்தேன்; முக்கியமாக நான் பூண மேற்கொண்ட அமலாதித்யன் பாத்திரத்தைப் பற்றி என்னென்ன ஆராய்ச்சிகள் (Criticism) கிடைத்தனவோ அவைகளை யெல்லாம் வாசித்தேன்; அதன்றியும் பிரபலமான ஆங்கில ஆக்டர்கள் இதை எப்படி எப்படி நடித்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் வாசித்து, ஒரு நோட் புஸ்தகத்தில் குறித்துக்கொண்டேன். இந்தப் பாத்திரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களும், ஆடினவர்களும் இரண்டு பிரிவாயிருக்கின்றனர். ஒரு பிரிவர், அமலாதித்யன் (ஹாம்லெட்) வாஸ்தவத்தில் பித்தம் பிடித்தவனானான் என்று மதிக்கின்றனர்; மற்றொரு பிரிவார், அவனுக்குப் பித்தம் பிடிக்கவில்லை , பித்தம் பிடித்தவன் போல் நடித்தான் என்று சில சமயங்களில் கூறுவார்கள். இதில் எது சரி, எது தவறு என்கிற விவாதத்தைப்பற்றி எழுதியிருப்பதை யெல்லாம் சேர்த்தால் ஒரு சிறு புஸ்தக சாலையாகும்! ஆராய்ச்சியுடன் நிற்க விரும்புவோர் பாடு சுலபம்; இதை நடிப்பவர்பாடு கஷ்டம். ஏனெனில், ஆராய்ச்சி செய்பவர்கள், ‘கோமுட்டி சாட்சியாக’ இரண்டு பக்கத்திலும் கொஞ்சம் நியாயமிருக்கின்றது என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடலாம்; மேடையின்பேரில் நடிப்பவன் ஏதாவது ஒரு பட்சத்தை ஒப்புக்கொண்டு, அதன்படி நடித்தாக வேண்டும். ஆதலால் எனக்குக் கிடைக்கக்கூடிய ஆராய்ச்சிகளையெல்லாம் படித்தான பிறகு நான் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டியதாயிற்று. நான் கடைசியில் வந்த தீர்மானத்திற்குக் காரணங்கள் எல்லாம் கூறப்புகில் அது ஒரு பெரிய வியாசம் ஆகும். ஆகவே அதை விட்டு என் தீர்மானத்தை மாத்திரம் இங் கெழுதுகிறேன். தன் தந்தையின் அகால மரணத் தினாலும் தன் தாய் விரைவில் மறு விவாகம் புரிந்ததாலும், மிகவும் மனங்கலங்கினவனான அமலாதித்யன், தனது தந்தையின் அருவத்தின் மூலமாக, அவர் தம்பியினால் கொலை செய்யப்பட்டதை அறிந்தவுடன், தலைமீது இடி விழுந்ததுபோல, மண்டை கலங்கினவனானான்; உடனே அவன் உயிர்த் தோழனான ஹரிஹரனுடன் பேசுங்காலையில் அவன் இன்னது சொல்கிறோம் இன்னது சொல்ல வில்லை என்பதையே சற்றும் அறியாதபடி, மூளை கலங்கியே பேசத் தொடங்கினான்; ஆயினும் அவனுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை . பிறகு ஒருவாறு நிதானம் கொண்டவனாய், தான் பைத்தியக்காரனைப்போல், நடந்ததையே, தனக்கொரு உதவியாகக் கொண்டு தன் சிற்றபனாகிய அரசன் தன்மீது சங்தேகங் கொள்ளாதிருக்கும்படி, தான் பழிவாங்கத்தக்க சமயம் வாய்க்கும் வரையில், பைத்தியக் காரனைப் போல் நடித்து வந்தான் என்பது என் தீர்மானம். இதை மனத்தில் வைத்துக்கொண்டே இப் பாத்திரத்தை நான் நடித்தேன்.
அன்றியும் இப் பாத்திரத்தை நடிப்பதில் எனக்கு இன்னொரு கஷ்டம் நேர்ந்தது. இந்தப் பாத்திரத்தை மேடையில் நடித்தபொழுது, எட்மண்ட்கீன் (Kean) என்பவர் இவ்வாறு நடித்தார்; கெம்பில் (Kemble) என்பவர் இவ்வாறு நடித்தார்; சர் ஹென்ரி இர்விங் (Sir Henry Irving) என்பவர் இவ்வாறு நடித்தார்; பார்பேன் (Burbage) என்பவர் நடித்தது இவ்விதம்; சர்பீர்போம் டிரீ (Sir Beerbohm Tree) நடித்தது இவ்விதம்; அமெரிக்கதேசத்து ஆக்ட்ராகிய பூத் (Booth) என்பவர் நடித்த மாதிரி இது; சர் போர்ப்ஸ் ராபர்ட்சன் (Sir Forbes Robertson) நடித்தது இம்மாதிரி; சர் பிராங்க் பென்சன் (Sir Frank Benson) இம்மாதிரி நடித்தார்; இன்னும் மற்ற பிரபல ஆக்டர்கள் இப்படி இப்படி நடித்தார்கள் என்பதை எல்லாம் வாசித்தபொழுது, எனக்கு, இதில் எதை ஏற்றுக்கொள்வது, எதைத் தள்ளிவிடுவது என்கிற ஒரு பெரிய சங்கையுண்டாயிற்று. இவற்றையெல்லாம் படித்து, என் மூளையும் கொஞ்சம் சிதறிப்போயிற்று என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். இத் தருவாயில் இன்னது செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றபொழுது, எனது நண்பர், நமது நாட்டின் நன்மைக்காகக் காங்கிரஸ் மகாசபையில் பல வருஷங்கள் உழைத்த, எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவர், ஒரு சந்தர்ப்பத்தில், கல்வியின் பயனைப்பற்றிக் கூறிய சில வார்த்தைகள் எனக்கு ஞாபகம் வந்தது; அவர் சொன்ன தாவது, “கல்வியின் முழுப்பயனையும் பெற வேண்டுமென்றால், நாம் கற்ற பல விவரங்களையும் மறந்து அவற்றின் சாரம் மாத்திரம் நமது மனத்தில் நம்மையும் அறியாதபடி, நாம் தங்கச் செய்ய வேண்டும்!” என்பதாம். இதையே நான் ஒரு பற்றுக்கோடாகக் கொண்டு, பிரபல ஆக்டர்கள் நடித்த விதத்தில் நான் படிக்க விரும்பியதையெல்லாம் படித்தான பிறகு, ஒரு வாரம் இந்த நாடகத்தைப் பற்றி ஒன்றுமே எண்ணாது, மற்ற வேடிக்கை வினோதங்களில் என் மனத்தைச் செலுத்தி, நான் படித்த விவரங்களை யெல்லாம் மறக்க முயன்று, ஒருவாறு அப்படியே சாதித்தேன். பிறகு கடற்கரையோரம் தனியாகச் சென்று, அமலாதித்யன் பாத்திரம் இன்னின்ன காட்சிகளில் இப்படி இப்படி நடித்தால் சரியாகுமென்று தீர்மானித்தேன். இதன் பிறகுதான் எனது பாத்திரத்தை ஒத்திகை செய்ய ஆரம்பித்தேன்.
இவ்வாறு என் கவனத்தையெல்லாம் இந் நாடகத்தின் மீதே செலுத்தியபடியால் இவ்வருஷம் கடைசிவரையில் ஏறக்குறைய 8 மாதத்திற்கு வேறொரு தமிழ் நாடகமும் என்னால் கொடுக்க முடியாமற் போயிற்று. அதற்காக நிர்வாக சபையார் என்மீது குறை கூறியும் எழுதினர். என்ன நேர்ந்த போதிலும் என் தீர்மானத்தினின்றும் மாறமாட்டேன் என்று ஒரே பிடிவாதமாய் உட்கார்ந்தேன்.
மேற்சொன்னபடி ஒத்திகைகளெல்லாம் சரியாக நடத்தி இந் நாடகத்திற்கென்று வேண்டிய திரைகள், உடுப்புகள் எல்லாம் தயார் செய்தான பிறகு, 1906 ஜனவரி மாதத்தில் ஒரு தேதி குறித்தோம். இந்நாடகத்தை ஆடுவதற்கு இதற்குத் திடீரென்று ஓர் இடையூறு நேர்ந்து, தெய்வாதீனத்தால், என் தீர்மானத்தினின்றும் பிறழவேண்டி வந்தது. ஒரு நாள் சாயங்காலம் என் கடைசி ஒத்திகைகள் ஒன்றை நான் நடத்திக் கொண்டிருக்கும்பொழுது, எனது பால்ய நண்பர், என்னிடம் வந்து, “கொஞ்சம் ஒத்திகையை நிறுத்து; ஒரு முக்கியமான சமாச்சாரம் சொல்ல வந்திருக்கிறேன்!“ என்றார். அப்படியே நிறுத்தி, என்னவென்று விசாரிக்க அவர் பின்வருமாறு தெரிவித்தார்: “சர் சுப்பிரமணிய ஐயர் (ஹைகோர்ட்டு ஜட்ஜ்) என்னை அவசரமாகக் கூப்பிட்டனுப்பினார். என்னவென்று போய்க் கேட்டேன். அவர் அத்யட்சராயிருக்கும் லார்ட் ஆம்டில் என்டர்டெயின்மெண்ட் (Lord Ampthil Entertainment) கமிட்டியில் கவர்னருக்குக் கொடுக்கப் போகிற என்டர்டெயின்மெண்டில் சுகுண விலாச சபை சில காட்சிகள் நடிக்க வேண்டுமென்று கேட்டார். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கைவிடலாகாது. நமது சபைக்கு நல்ல பெயருண்டாகும்; நீ என்ன சொல்லுகிறாய்?” என்றார்.
அதற்கு நான் அதெல்லாம் முடியாது; இந்த அமலாதித்ய நாடகத்தைப் பிரித்துக் கொஞ்சம் காட்சிகளாக ஆட முடியாது. இந்த நாடகம் ஆடியாகிற வரையில் வேறெந்த நாடகமும் ஆடமாட்டேன் என்று தீர்மானித்துவிட்டேன். அந்தத் தீர்மானத்தினின்றும் மாற மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லிப் பார்த்தேன். எனது நண்பர், “முரட்டுத்தனம் பண்ணாதே! நான் சொல்வதைக் கேள்!” என்று எவ்வளவோ நியாயங்களெடுத்துக் கூறிப் பார்த்தார். என்னுடனிருந்த ஆக்டர்களும் வேண்டினர். எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலுவும், “நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்” என்று மன்றாடினார்; கவர்னர் முன்னிலையில் நாடகம் நடத்துவதென்றால் எல்லோருக்கும் ஆசைதானே! அன்றியும் கவர்னர் முன்னிலையில் எங்கள் சபை அதுவரையில் ஆடியதில்லை. இவ்வாறு எல்லோரும் கேட்டும், நான் ஒரே பிடியாய், ‘மாட்டேன்!’ என்று கூறிவிட்டேன். “இந்த மக்கு ஒரு பிடிவாதம், மாறமாட்டான்!” என்று சொல்லி மனங் கசிந்து, ஒத்திகையிடத்தை விட்டு வெளியே போய்விட்டார். நான் என் ஒத்திகையை மறுபடி ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் கொஞ்சம் காலம் கழித்து மறுபடியும் வந்து சேர்ந்தார்! ஒரு காட்சி ஒத்திகை முடித்து சற்றுச் சிரம பரிஹாரம் கொள்ளும் சமயம் பார்த்து, “சம்பந்தம்! நான் சொல்வதைக் கேள்! குறுக்கே ஒன்றும் பேசாதே! நான் சொல்லியானதும், உனக்கு இஷ்டமில்லாவிட்டால், நான் உன்னைப் பலவந்தம் செய்யவில்லை” என்று மெல்ல ஆரம்பித்தார். இந்த முரட்டுக் குதிரையை அடக்கி ஆள அவர் ஒருவருக்குத்தான் வழி தெரியும். “என்ன, சீக்கிரம் சொல்!"என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டேன். “நான் பதில் கொண்டு வருவதாகச் சொல்லி வரவே, அவர்கள் எல்லாம் மீட்டிங் கலை யாதிருந்தார்கள்; நான் போய், ‘எங்கள் சபையில் ஒரு பிடிவாதக்கார மக்கு ஒருவன் இருக்கிறான்; அவன் முடியாதென்கிறான்; நான் இப்படிச் சொல்லவில்லை; ஆயினும் நான் சொன்னதன் தாத்பர்யம் அது!’ - என்று சொல்ல, ‘ஏன்? என்ன ஆட்சேபணை?’ என்று கேட்டார், சர். சுப்பிரமணிய ஐயர்; அதன்மீது நான் வாஸ்தவத்தைச் சொல்ல வேண்டியதாயிற்று - ‘எங்கள் சபையில் தமிழ் கண்டக்டர், தமிழில் ஹாம்லெட் நாடகத்தை ஒத்திகை செய்து கொண்டிருக்கிறான். அவன் அந்த நாடகம் ஆடப்படுகிற வரையில் வேறு எந்த நாடகத்தையும் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான் என்று தெரிவித்தேன். யார் அப்படிப் பிடிவாதம் செய்வதென்று அவர் கேட்க, உன் பெயரைச் சொன்னேன். அதன் மீது அவர் ‘எந்த சம்பந்தம்? மிஸ்டர் விஜயரங்கம்’S பிள்ளையா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன். அப்படியா? எனக்குச் சம்பந்தத்தைத் தெரியும். (அவரும் என் தந்தையும் அத்யந்த சினேகிதர்களாகவிருந்தவர்கள்; என்னையும் அவர் பன்முறை பார்த்திருக்கிறார்.) ‘நீ சம்பந்தத்தினிடம் போய், அவன் எங்களுடைய என்டர்டெயின்மெண்டில் ஏதாவது நாடகத்தில் சில காட்சிகள் ஆடினால், அவனது ‘ஹாம்லெட்’ நாடகத்திற்கு பேட்ரனேஜ் (Patronage) நான் கொடுப்பதாகச் சொல், எப்படியாவது ஒப்புக்கொள்ளச் சொல்’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார்கள். அவர்களெல்லாம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம்! என்று சொல் பிறகு மற்ற சமாச்சாரங்களையெல்லாம் அப்புறம் தீர்மானித்துக் கொள்ளலாம்?” என்று கூறினார். இந்தத் தர்மசங்கடத்திற்கு நான் என்ன செய்வது? ஒரு பக்கம் எனது ஆக்டர்களெல்லாம் கவர்னர் முன்னிலையில் ஆட வேண்டுமென்று தங்களுக்கு இச்சையிருப்பதைத் தெரிவித்துக்கொள்கின்றனர். மற்றொரு பக்கம், என் தந்தையின் அத்யந்த நண்பராகிய சர். சுப்பிரமணிய அய்யர், ஹைகோர்ட்டு ஜட்ஜ் கேட்டனுப்பியிருக்கிறார். அன்றியும் பச்சையப்பன் கலாசாலையின் வருடாந்திரக் கொண்டாட்டங்களில் இரண்டொரு முறை, நான் புஸ்தகப் பரிசு பெற்றபோது இவர் எனக்கு என் தந்தை முன்னிலையில், சந்தோஷ வார்த்தைகள் கூறியிருக்கிறார்; முக்கியமாக, என் அமலாதித்ய நாடகத்திற்குத்தான் வருவதாகச் சொல்லியனுப்பியிருக்கிறார், என்று இவைகளையெல்லாம் யோசித்துச் சரிதான் என்று ஒப்புக்கொண்டேன். இத்தனை வருடங்கள் பொறுத்து இதைப்பற்றி யோசித்துப் பார்க்கும்பொழுது அந்தக் கடைசி காரணம்தான் முக்கியமாக என்னை ஒப்புக்கொள்ளச் செய்தது என்று நினைக்கிறேன். உடனே எனது நண்பர், இதைத் தெரிவிக்க, அந்த மீட்டிங் நடக்கு மிடத்திற்குப் போய்விட்டார். எனது ஆக்டர்களெல்லாம் மிகவும் சந்தோஷப்பட்டனர். எனக்கும், ஒரு விதத்தில் நமது தீர்மானத்தினின்றும் தவறுகிறோமேயென்று இருந்த போதிலும் நமது சபைக்கு இவ்வளவு பெருமையடைகிறதே என்ற சந்தோஷம்தான்.
இங்கு, பெரிய கதையில் கிளைக்கதை வருகிறதுபோல், அமலாதித்யன் நாடகம் ஆடிய கதையைச் சொல்ல வந்தவன், இடையில், கவர்னர் முன்னிலையில் நாங்கள் ஆடிய காட்சிகளைப்பற்றி எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.
போன எனது நண்பர் ஸ்ரீனிவாச ஐயங்கார், “நான் சீக்கிரம் திரும்பி வருகிறேன்” என்று கூறிவிட்டுப் போனபடியால், நாங்கள் அன்றைய ஒத்திகையை முடித்து விட்டு உட்கார்ந்து கொண்டிருந்தோம். அவர் வந்தவுடன், “அவர்கள் மிகவும் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டார்கள். பிறகு என்ன ஆடுவது என்கிற பேச்சு வந்த பொழுது, உனது அபிப்பிராயம் என்னவென்று என்னைக் கேட்டார்கள். அதற்கு நான், நீங்கள் சொல்லுகிறபடி ஒருமணி நேரத்தில் முடிய வேண்டுமென்றால், முழு நாடகம் ஒன்றும் போட முடியாது. ஒரு சோககரமான காட்சியும் ஒரு ஹாஸ்யமான காட்சியும்தான் ஆடமுடியும் என்றேன். அதற்கு அங்கிருந்த பாடம் துரையவர்கள் (Boddam J) உங்கள் சபையார் இரண்டு காட்சிகள் ஆடட்டும், அதில் எது சோககரமானது, எது ஹாஸ்யகரமானது என்று நாங்கள் தீர்மானிக்கிறோம் என்றார். (பகிடியாய்ப் பேசிய இவரது அபிப்பிராயம் என்னவென்றால், நீங்கள் ஹாஸ்யம் என்று நினைக்கும் காட்சி எங்களுக்குத் துக்கத்தை விளைவிக்கலாம்; சோக ரசம் என்று நீங்கள் நினைப்பது, எங்களை நகைக்கச் செய்யலாம்! என்பதாம்.) நாம் என்ன ஆட வேண்டுமென்பதை இப்பொழுதே சொல்லுங்கள்! நாளை அவர்களுக்குத் தெரிவிப்பதாகச் சொல்லி வந்திருக்கிறேன்” என்றார். பிறகு நாங்கள் எல்லோரும் ஆலோசித்து ‘விரும்பிய விதமே’ என்னும் எனது நாடகத்தினின்றும், குஸ்தி பிடிக்கும் காட்சியில் அநேக ஆக்டர்களுக்குப் பாகம் இருக்கிறது என்று அதை ஒன்றாக ஏற்படுத்தினோம். சோககரமான காட்சி தகுந்ததாக அகப்படவில்லை. அன்றியும், சந்தோஷகரமான காலத்தில், சோகரசம் கூடாதென்று யோசித்து, கவர்னருக்குக் கொடுக்கும் கூட்டத்தில் அநேகம் ஆங்கிலர்கள் வருவார்கள். அவர்களுக்குத் தெரிந்த கதையாயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து ‘சகுந்தலை’ நாடகத்தில் முக்கியமான காட்சிகளை தோற்றக்காட்சிகளாக (Tableau Vivantes) காட்டுவோம் என்று தீர்மானித்தோம்.
அதன்படியே இவ்வருஷம் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதியில், சவுத் இந்தியன் அத்லெடிக் அசோசியேஷன் (South indian Athletic Association) மைதானத்தில் லார்ட் ஆம்டில் அவர்களுக்கு நடந்த உபசரணைக் கூட்டத்தில், மேற்சொன்ன காட்சிகளை நடத்தினோம். காட்சிகள் முடிந்த உடன் அங்கு நடந்த ஒரு வேடிக்கையைக் கூறுகிறேன். காட்சிகள் நடிக்கப்படும்பொழுது, கவர்னர் அவர்கள் ஸ்திரீ வேடம் பூண்ட ஆக்டர்கள் (அ. கிருஷ்ணசாமி ஐயரும், ரங்கவடிவேலுவும்) ஸ்திரீகளே என்று எண்ணி, இப்பெண்கள் நடிப்பது நன்றாயிருக்கிறதென மெச்சினாராம். அதன் பேரில் பக்கத்திலிருந்தவர்கள், இவர்கள் ஸ்திரீகள் அல்ல, ஆடவர்; பெண் வேடம் தரித்திருக்கின்றனர் என்று கூறவே, அவர் நகைத்து, ஆனால் அவர்களைத்தான் பார்க்க வேண்டுமென்று சொல்ல, காலஞ்சென்ற ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் அவர்கள், என்னிடம் வந்து “அப்பன், அந்தப் பெண்டுகளை கவர்னர் பார்க்க வேண்டுமாம். கொஞ்சம் அனுப்பு” என்று நடந்ததைக் கூறி நகைப்புடன் கேட்டார். பிறகு அவர்களுடைய வேஷத்துடன் அவர்களிரு வரையும் கவர்னர் அருகில் அழைத்துக்கொண்டு போய், அவர்களை இன்னாரெனத் தெரிவித்தார்.
இவ்வாறு நாங்கள் கவர்னர் எதிரில் நடித்ததன் பலன் என்னவென்றால், சுகுண விலாச சபையின் புகழ் பரவி, விரைவில் சென்னையிலுள்ள கனவான்களில் அநேகர் எங்கள் சபையைச் சேர்ந்ததேயாம்; இவ்வொரு வருஷத்தில் 153 அங்கத்தினர் சேர்ந்தனர். இது முதல் பல வருஷங்கள் வரையில், சென்னையில் கவர்னருக்கோ, ராஜப்பிரதி நிதிக்கோ (Viceroy) அல்லது யாராவது சென்னைக்கு வந்த பெரிய மனிதருக்கோ, உபசரணைக் கூட்டங்கள் நடந்தால் சுகுண விலாச சபையார் ஏதாவது காட்சிகள் நடத்த வேண்டுமென்று கேட்கப்பட்டோம். அடிக்கடி எல்லோரும் இம்மாதிரியாகக் கேட்கிறார்கள். இது என்ன பெரிய கஷ்டமாயிருக்கிறதென, பிறகு சபையின் பொதுஜனக் கூட்டத்தின் (General Body) உத்தரவின்றி இம்மாதிரியான கூட்டங்களில் சபையார் ஆடக் கூடாதென்றும் ஒரு தீர்மானம் செய்யப்பட்டது!
இனி இக் கிளைக் கதையை இதனுடன் முடித்து, மூலக் கதைக்குப் போகிறேன். இந்த “அமலாதித்யன்” நாடகத்திற்கு ஒத்திகைகள் மிகவும் கண்டிப்பாய் நடத்தியதுமன்றி இதற்காக வென்று புதிய படுதாக்களும், உடுப்புகளும் சித்தம் செய்தோம்; ஒரு நாள் எல்லா உடுப்புகளுடன் மேடையின்மீது ஒத்திகையும் போட்டுப் பார்த்தோம்.
இந்த நாடகமானது 1906ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்டது. விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஆடப்பட்டது என்கிற மேற்கண்ட வாக்கியத்தை நான் எழுதும் பொழுது, அதைப்பற்றிய ஒரு வேடிக்கையான சமாச்சாரம் எனக்கு ஞாபகம் வருகிறது. இதை எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எனக்குத் தெரிவித்தபடி இங்கு எழுதுகிறேன்.
அவர் இந் நாடகத்திற்கு முந்திய தினம், சாயங்காலம் என்னிடம் வந்து, “சம்பந்தம்! ஒரு சமாச்சாரம் கேட்டாயா? இன்று மத்தியானம், கோர்ட்டில் நடந்தது தெரியாதே உனக்கு? பத்தரை மணிக்கு, சர் சுப்பிரமணிய ஐயர், தன் அறைக்குக் கையில் தடியைப் பிடித்துக்கொண்டு, பட்! பட்! என்று போய்க் கொண்டிருந்தவர், என்னைப் பார்த்து சற்று நின்று ‘ஸ்ரீனிவாச ஐயங்கார், நாளைக்கு நாடகம் என்று சொன்னீர்களே, அது எங்கே? மெமோரியல் ஹாலில்தானே நடக்கப் போகிறது?’ என்று கேட்டார். எனக்கு அடங்காச் சிரிப்பு வந்தது. ஆயினும் அதை அடக்கிக்கொண்டு, மெமோரியல் ஹாலில் அல்ல, விக்டோரியா பப்ளிக் ஹாலில் என்று தெரிவித்து, விக்டோரியா பப்ளிக் ஹால் பீபில்ஸ் பார்க்கில் இன்ன இடத்திலிருக்கிற தென்பதையும் தெரிவித்தேன்! இல்லாவிட்டால் இந்தக் கிழவனார், நாளைக்கு மெமோரியல் ஹாலுக்குப் போய் அங்கு ஒன்றுமில்லாததைக் ஒன்றுமில்லாததைக் கண்டு, வீட்டுக்குத் திரும்பிப் போயிருப்பார்!” என்று நகைத்துக் கொண்டே தெரிவித்தார்.
இனி மறுநாள் நடந்த இந் நாடகத்தைப்பற்றி எனக்கு ஞாபகம் இருக்கிற சமாச்சாரங்களை என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன்.
அன்று நாடகம் நடந்ததில் எனக்கு முக்கியமாக ஞாபமிருக்கிற விஷயம் என்னவென்றால், இது எப்படி முடியுமோ என்று என் மனத்தில் பெரும் பயம் குடி கொண்டிருந்ததே! ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியியற்றிய நாடகங்களிலெல்லாம் சிறந்த இந்நாடகத்தை, நான் தமிழில் மொழி பெயர்த்தது, எப்படி இருக்கிறதெனச் சபையார் நினைக்கிறார்களோ என்று முதல் பயம்; இரண்டாவது, ஹாம்லெட் (அமலாதித்யன்) வேடத்தில் மிகவும் கீர்த்தி பெற்ற ஆக்டர்களும் சூட்சும புத்தியுடைய அறிவாளிகளை முற்றிலும் திருப்தி செய்விக்கவில்லையே? நாம் எப்படிக் கற்றறிந்தவர்கள் கூடிய இச்சபையாரைத் திருப்தி செய்விக்கப்போகிறோம் என்கிற பயம்; மூன்றாவதாக, எனது நண்பர் ரங்கவடிவேலு முதலிய ஆக்டர்களெல்லாம், சரியாக நடிப்பார்களோ இல்லையோ என்கிற பயம்; இவ்வாறு பலவிதமான பீதியினால் கலக்கப்பட்டிருந்தேன் என்பது திண்ணம். நான் பி.ஏ., பி.எல் பரிட்சைக்குப் போனபோதுகூட அவ்வளவு பயப்படவில்லை.
இப் பயமானது கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டகன்றது. அன்றிரவு ஈசன் அருளால் விக்டோரியா பப்ளிக் ஹால் முழுதும் இடமில்லாது நிரம்பியிருந்தது. நான் பேசத் தொடங்கியது முதல் சந்தடியற்றிருந்ததென நான் கூற வேண்டும். நான் நேராகச் சபையோரைப் பார்ப்பதில்லை என்று எனது நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். ஆயினும், நான் மேடையிலிருக்கும் பொழுது, என் வார்த்தைகளை எப்படி அவர்கள் கவனிக்கிறார்களென்று அறியும் சக்தி சிறிது எனக்குண்டென நினைக்கிறேன். முதல் காட்சியில், என் கடைசி வார்த்தைகளைப் பேசிவிட்டு நான் அரங்கத்தினின்று போக, திரை விடப்பட வே, கரகோஷம். செய்தனர். ஆகவே நன்றாயிராமல் போகாது என்று என் மனத்தைத் தைரியம் செய்து கொண்டேன். எனது இரண்டாம் காட்சி, அமலாதித்யன் தன் தந்தையின் உருவத்தைச் சந்திக்கும் காட்சியாகும். அக்காட்சி மிகவும் அழகாக ஜோடித்திருந்ததனாலோ அல்லது அமலாதித்ய னுடைய தந்தையின் அருவமாக நடித்த எம். சுந்தரேச ஐயர் மிகவும் நன்றாய் நடித்ததனாலோ, அல்லது நான் நன்றாய் நடித்ததனாலோ, ஜனங்கள் அதை மிகவும் நன்றாயிருந்த தெனக் கொண்டாடினர் என்று அறிந்தேன். ஆயினும் எனது மூன்றாவது காட்சி அவ்வளவாக எனக்குத் திருப்திகரமாயில்லை . முதலில், அக்காட்சியில் “பதங்கள், பதங்கள், பதங்கள்!” என்று ஒரு சந்தர்ப்பத்தில் நான் கூற வேண்டியிருக்கிறது. அதை ஒரு நூதனமானபடி நடிக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்து நடிக்க, சபையில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சர். சுப்பிரமணிய ஐயரோ அல்லது வி.கிருஷ்ணசாமி ஐயரோ நன்றாயிருந்ததெனக் குறிக்கும் பொருட்டு குட் குட் (Good Good) என்று சொன்னது என் செவியிற்பட, எனக்கிருந்த பயமெல்லாம் பெரும் பாலும் போனவனாகி, உற்சாகத்துடன் நடிக்க ஆரம்பித்தேன். அது முதல், நாடகம் முடியும் வரையில் எனது முக்கியமான பாகங்கள் வரும்பொழுதெல்லாம் சபையோர் கரகோஷம் செய்தனர்!
இதை வாசிக்கும் எனது நண்பர்கள், இதை நான் ஏதோ தற்புகழ்ச்சியாகக் கூறுகிறேன் என்று எண்ணக்கூடாது. நடந்த விருந்தாந்தத்தையெல்லாம் உண்மையாக எழுத வேண்டும் என்று தீர்மானம் பண்ணியிருப்பதால் இதை இங்கு எழுதலானேன். அன்றியும் ஆக்டர்களுக்குத் தக்க புத்திமான்கள் ஏதாவது கொஞ்சம் உற்சாகப்படுத்தினால், அவர்களுக்கு அது அவர்களுடைய பயத்தைப் போக்கி எவ்வளவு நன்றாய் நடிக்கச் செய்யக்கூடுமென்பதைப் பலருக்கும் அறிவிக்கும் பொருட்டாம். இதைக் கருதியே, என்னுடன் மேடையில் புதிய ஆக்டர்கள் யாராவது, முதன் முதல் நடிக்கத் தொடங்கினால் அவர்கள் என்ன தப்பு செய்தபோதிலும், பெரிதல்ல, சுமாராயிருக்கிறது, என்று சொல்லி அவர்களைத் தட்டிக் கொடுப்பது வழக்கம். இந்தச் சூட்சுமத்தை அறியாத எனது நண்பர்களில் சிலர் “சம்பந்தம் என்ன எல்லோரையும் புகழ்ந்து விடுகிறான்!” என்று தவறாக எண்ணியிருப்பார்கள். இதற்கு முக்கியக் காரணம், அரங்கப் பீதியடைந்திருக்கும் ஆக்டர்களுக்குச் சிறிது உற்சாகமானது, எவ்வளவு பயன்படுகிறது என்று நான் சுயானு பவத்திற் கண்டதன் பலனை மற்றவர்கள் பெறும் பொருட்டே என்பதை, என்மீது குறை கூறுபவர்கள் அறிவார்களாக.
அதற்கப்புறம் நான் வருகிற காட்சிதான், இந் நாடகத்தில் ஆக்டர்களுக்கு “வியாச கட்டம்” போன்றது. இதில்தான், “இருப்பதோ இறப்பதோ” (To be or not to be) என்கிற மிகவும் கடினமான அமலாதித்யன் தனிமொழி (Soliloquy) வருகிறது; அன்றியும் இதில்தான் அமலாதித்யன் அபலையைச் சந்திக்கிறான். இந்நாடகத்தில் முதன் முதல் இதற்குக் கன்யாமாடக் காட்சி (Nunnery Scene) என்று இங்கிலீஷ்காரர் பெயரிட்டிருக்கின்றனர். இது நடிப்பது மிகவும் கடினம் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது; இதைத் தெய்வானுகூலத்தினால் சபையோருக்கு மிகவும் திருப்திகரமாய் நடித்தேன் என எண்ணுகிறேன்; ஆயினும் இக்காட்சியில் நான் அபலையை விட்டுப் பிரியும் பொழுது சபையோர் செய்த பெரும் கரகோஷமானது, பாதி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடி வேலு அபலையாக நன்றாய் நடித்ததற்காக என்று உறுதியாய் நம்புகிறேன். இக்காட்சியானவுடன், மறு காட்சி, “நாடகத்துள் நாடகம்” (Play within a play) என்பதான படியால், அதற்காக, அரங்கத்தின் மத்தியில் சிறு அரங்க மொன்றை ஏற்படுத்தும்பொருட்டு, ஐந்து நிமிஷம் இடைக் காலம் (Interval) கொடுக்கப்பட்டது. அந்த இடைக்காலத்தில் அதுவரையில் வெளியிலிருந்து நாடகம் என்னமாகப் போகின்றது என்ற கவனித்துக் கொண்டிருந்த எனது நண்பர்களுட் பலர் வேஷம் தரிக்கும் நேபத்யத்திற்கு (Green Room) வந்து, என்னைப் புகழ்ந்து கூறினர். மற்றவர்கள் கூறிய வார்த்தைகளைவிட, “உன்னால் இந்த ஹாம்லெட் வேஷம் சரியாக ஆக்டு செய்ய முடியாதென்று கூறிய, எனது நண்பர் ஆ. வாமன்பாய் கூறியதுதான் எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. அவர் என்னைப் புகழ்ந்துரைத்த வார்த்தைகளை நான் இங்குக் கூறவில்லை. கடைசியில் அவர் கூறியது மாத்திரம் எழுதுகிறேன்; அவர் ஆங்கிலத்தில் கூறிய வார்த்தைகளின் மொழி பெயர்ப்பு, “சம்பந்தம்! என் தொப்பியைக் கழற்றி உன்னை வணங்குகிறேன்! நீ ஜெயித்தாய்! நான் தோற்றேன் என்று ஒப்புக்கொள்கிறேன்!” என்பதாம். இவ்வார்த்தைகள் அவர் என்னுடன் போட்ட பந்தயத்தைப் பொறுத்தனவாம் என்பதை என் நண்பர்கள் கவனிப்பார்களாக.
எனது நண்பர் இவ்வாறு கூறிவிட்டு, “இனியும் இரண்டு மூன்று கட்டங்கள் இருக்கின்றன. ஜாக்கிரதையாயிரு” என்று புத்தி சொல்லிவிட்டு வெளியே போனார்.
இப்பொழுதுதான் என் பயமெல்லாம் நீங்கி மிகவும் திருப்தியடைந்தேன் என்று நான் கூற வேண்டும். எனது நண்பர்கள் என்னை இவ்வாறு புகழ்ந்ததனாலோ அல்லது சபையோரெல்லாம், எனது முக்கியமான வார்த்தைகளுக் கெல்லாம் கரகோஷம் செய்ததனாலோ, நாம் இந் நாடகத்திற்காக எடுத்துக்கொண்ட சிரமம் கடவுள் கிருபையால் வியர்த்தமாகவில்லை என்று உந்தப்பட்டவனாய், பிறகு வந்த, நாடகத்துள் நாடகக் காட்சியிலும், அமலாதித்யன் தன் தாயாருடன் பேசுங் காட்சியிலும் எனது முழு உற்சாகத்துடன் நடித்தேன். முக்கியமாக இரண்டாம் முறை இந் நாடகத்தில் அமலாதித்யனுக்கு அருவம் தோன்றும் இந்த இரண்டாவது காட்சியில், நான் அருவம் மறையும்பொழுது ஆச்சரியமும் பயமும் குறிக்கும் மலர்ந்த என் கண்களால், அதைப் பின்தொடர்ந்தது - சபையை மிகவும் களிக்கச் செய்தது. சாதாரணமாக இங்கிலாந்திலுள்ள ஆக்டர்கள் செய்வதில்லை. முதல் முதல், அமெரிக்கா தேசத்து ஆக்டராகிய எட்வின் பூத் (Booth) என்பவர்தான் இதை ஆரம்பித்தவர்; இதை நான் ஒரு புஸ்தகத்தில் வாசித்து, இப்படித்தானிருக்க வேண்டுமென்று மனத்தில் தீர்மானித்து, நடித்தேன். இக்காட்சி முடிந்தவுடன், நாங்கள் இரண்டாம் இடைக்காலம் கொடுத்தபொழுது ஆர்தர் டேவிஸ் (Arthur Davies) என்பவர், நேபத்யத்தின் பின் வந்து, இதைப்பற்றி வியந்து பேசி, “இதை எங்கிருந்து கற்றாய்?” என வினவ, நான் “அமெரிக்கா தேசத்து ஆக்டர் எட்வின்பூத் இவ்வாறு செய்ததாகப் படித்தேன். ஆகவே அவரிடமிருந்து நான் கற்றதாகக் கூற வேண்டு”மென்று விடை கொடுத்தேன்.
இவ்வாறு நான் எல்லோராலும் புகழப்பட்டது எனக்கு ஒரு கெடுதியைப் பயந்தது. நான் அளவிற்கு மிஞ்சிய சந்தோஷத்தை அடைந்தேன் என்று நினைக்கிறேன்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷயமாகுமல்லவா? இதை என் அருகிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த என் நண்பர் வாமன்பாய், “சம்பந்தம்! ஜாக்கிரதையாயிரு, வருகிற ஸ்மசானக்காட்சியில் நீ மிகவும் அமைதியுடையவனாயிருக்க வேண்டும்!” என்று எச்சரிக்கை செய்தார். அவர் இவ்வாறு எச்சரிக்கை செய்தும் பயன்படாமற் போயிற்று. மேற்சொன்ன காரணத்தினால் அக்காட்சியில் சாந்தத்துடன் நடிக்காது அதைக் கெடுத்து வைத்தேன் என்று எண்ணுகிறேன்.
தவறிழைத்தால் அதற்குப் பிராயச்சித்தம் வேண்டாமா? ஆயினும் அக்காட்சி ஆனவுடன், நான் செய்த தப்பிதத்தை அறிந்தவனாய், என் புத்தியை ஸ்திரப்படுத்திக்கொண்டு மனத்தைத் திருப்பி, கடைசிக் காட்சியில் சரியாக நடித்தேன் என நம்புகிறேன். நான் இந்நாடகத்தில் நடித்ததைப் பற்றி இவ்வளவு விவரமாய் எழுதுவதற்குக் காரணம், எனது கற்றறிந்த நண்பர்கள் நான் நடித்த நாடகங்களுக்கெல்லாம் இதுதான் மிகச் சிறந்தது என்று கூறுவதேயாம். ஒருவிதத்தில் எனக்கும் அப்படித்தான் கொஞ்சம் தோற்றுகிறது.
இனி மற்ற ஆக்டர்களைப்பற்றி எழுதுகிறேன். எம். சுந்தரேச ஐயர், இந்நாடகத்தில் இரண்டு வேஷங்கள் பூண்டனர்; காலதேவனாகவும், அருவமாகவும்; அருவத்தின் பாகம் வேறொருவருக்குக் கொடுத்திருந்தது; ஒத்திகைகளில் அந்த ஆக்டர் நன்றாய் நடிக்காமையால், பிறகு சுந்தரேச ஐயருக்கு மாற்றப்பட்டது. இவர் இந்த இரண்டு வேஷங்களிலும் மிகவும் நன்றாய் நடித்தார். இதுதான் எங்கள் சபையில் இவர் கடைசி முறை நடித்தது. சில மாதங்கள் பொறுத்துத் தனது முப்பத்தைந்தாம் ஆண்டில் இவர் தேகவியோகமானார். இது எங்கள் சபைக்குப் பெரும் தௌர்ப்பாக்கியம் என்று சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் இவர் “ஒதெல்லோ” முதலிய நாடகப் பாத்திரங்களை ஆடுவதில் மிகவும் கியாதி பெற்றிருந்தார். தமிழிலும் காலதேவன் முதலிய பாத்திரங்களில் நல்ல பெயர் பெற்றார். இவரது ஞாபகச் சின்னமாக இவரது படமொன்று எங்கள் சபையில் வைக்கப்பட்டிருக்கிறது.
அ. கிருஷ்ணசாமி அய்யர் கௌரீமணியாகச் சபையோர் மெச்சும்படி நடித்தார் என்பதற்கையமில்லை. இவர் சங்கீதத்தில் மிகுந்த வல்லமைசாலியாயிருந்தும்; இந்நாடகத் தில் இவர் பாடுவதற்கு, ஒரே பாட்டுதான் இருந்தது. இதற்குக் காரணம் முக்கியமாக ஷேக்ஸ்பியர் நாடகங்களில், சங்கீதத்தை நான் குறைக்க வேண்டுமென்று தீர்மானித்ததே; இருந்தும் அந்த ஒரு பாட்டை மிகவும் நன்றாய்ப் பாடிச் சபையோரின் கரகோஷத்தைப் பெற்றனர்.
முன்பே நான் குறித்தபடி எனதாருயிர் நண்பர் சி. ரங்கவடிவேலு, அபலை வேஷம் பூண்டனர். நான் கற்பித்தபடி ஒன்றையும் விடாது, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியாக நடித்துச் சபையோரின் நன்மதிப்பைப் பெற்றார். முக்கியமாக அபலை பைத்தியக்காரியாக வரும் காட்சியில், வெள்ளை வஸ்திரம் உடுத்தி, பைத்தியத்தில் பாடும் பாட்டுகளைப் பாடி, வந்திருந்தவர்கள் மனத்தைக் கவர்ந்தனர். இவர் இக்காட்சியில் நடித்ததைப் பார்த்து, ஸ்பிளென்டிட் (Splendid), மாக்னிபிசென்ட் (Magnificent) என்று கூறி, சர். சுப்பிரமணிய அய்யர் அவர்கள் தாரை தாரையாகக் கண்ணீர் விடுத்ததாக அவரருகிலிருந்தவர்கள் என்னிடம் கூறினர். அபலையின் சவத்தைச் சமாதியில் புதைக்கும் காட்சியில், வந்திருந்த மாது சிரோமணிகள் அநேகர் கண்ணீர் விட்டனர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எனதுயிர் நண்பர் நடித்த அநேக ஸ்திரீ பாத்திரங்களில், இந்த அபலையாக நடித்தது ஒரு மிகச் சிறந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. இவர் இந்த வேடத்தில் நடித்தபடி எழுதிய படமொன்று, இன்னும் சிந்தாதரிப்பேட்டையில் இவரது வீட்டில் இருக்கிறது. என்னைப்போல் இவரும் இந் நாடகத்தில் எப்படி நடிக்கப் போகிறோமோ என்று பயந்து கொண்டிருந்தவர், கடைசியில் பைத்தியக்காரக் காட்சியில் மிகவும் நன்றாக நடித்ததாக எங்கள் சபையார் புகழ மிகவும் சந்தோஷப்பட்டார் என்பது எனக்கு ஞாபகமிருக்கிறது. இதை எழுதும்பொழுது, இவர் எனது துர் அதிர்ஷ்டத்தால் சிறுவயதில் மரித்த பொழுது நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தைப் பற்றி இத்தனை வருஷம் சென்றும், அது எனக்கு அடங்காத் துக்கம் விளைவிப்ப தாயினும், இங்கு எழுத வேண்டியவனாயிருக்கிறேன். இவர் இந் நாடகத்தில் அபலையாக நடித்த பொழுது எப்படி நாடக மேடையில் புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்டுச் சமாதிக்குக் கொண்டு போனார்களோ, அதே மாதிரியாக, இவர் மரித்தபொழுதும் புஷ்பப் பல்லக்கில் அலங்காரம் செய்து ஸ்மாசனத்திற்குக் கொண்டு போனோம்! இதைப்பற்றி அதே மாதிரியாக இருந்ததென எனது நண்பர் ராவ்பஹதூர் கிருஷ்ணராவ் பான்ஸ்லே , ஹிந்துப் பத்திரிகையில் எழுதினார். மேடையில் லீலாதரனாக நடித்து சவத்துடன் சென்றது போல், இவரது மைத்துனர் தாமோதர முதலியார், இச்சமயமும் உடன் சென்றனர். ஒரு வித்தியாசம் மாத்திரம் இருந்தது; நாடகமேடையில் அமலாதித்யனாக நடித்த நான் ஒரு புறமாய் நின்றுகொண்டு அபலையைப் பாடைமீது கொண்டு வரும் பொழுது, இதெல்லாம் நாடகம்தானே என்று மனத்தைத் தேற்றிக் கொண்டிருந்தேன், அச்சமயம்; இச்சமயம், நாடகமாய் நடித்தது வாஸ்வதமாய் முடிந்ததே என்று, இதை எழுதும் பொழுது நான் அழுவது போல், அழுது கொண்டு அமலாதித்யனாக நடித்த சம்பந்தம் பாடையின் பக்கத்தில் சென்றான்!
தாமோதர முதலியார் லீலாதரனாக நடித்தார். இவருக்கு இந்த வேஷம் முதலில் நான் கொடுத்தபொழுது, இதைச் சரியாக நடிப்பாரோ என்னவோ என்று சந்தேகப்பட்டேன். ஆயினும், ஒத்திகைகளில் மிகவும் கஷ்டப்பட்டுக் கற்று நாடக தினத்தில் நான் எண்ணியதற்கு மேலாக நடித்தார். இவரும் நானும் இந்நாடகத்தில் நடித்ததைப்பற்றி ஒரு சமாச்சாரம் எனக்கு முக்கியமாக நினைவிற்கு வருகிறது. கடைசிக் காட்சியில் நாங்களிருவரும், ரேபியர் (Rapier) என்னும் கத்திகளைக் கையில் கொண்டு சண்டை போட வேண்டியிருக்கிறது. இதற்காக ஒத்திகைகளில் பன்முறை, அவர் இப்படி என்னைக் குத்த, நான் இப்படித் தடுக்க வேண்டும்; நான் அவரை இப்படிக் குத்த, அவர் இன்னபடித் தடுக்க வேண்டும் என்று கத்தி வரிசிகளையெல்லாம் பழகி வைத்தோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் சிறு வயதில் பீபில்ஸ் பார்க் பேரில் (Fair) 1885-86-87 ஆம் வருஷங்களில் பார்த்திருந்த பென்சிங் (Fencing) மிகவும் உபயோகப்பட்டது. பென்சிங் என்றால், தற்காலத்திய கோல்யுத்தம் அல்ல; கூர்மையான இரும்புக் கம்பிகள் போன்று மெல்லிய கத்திகளைக் கையிற் பிடித்து யுத்தம் செய்வதாம். என் முரட்டுத்தனத்தை அறிந்த முதலியார் அவர்கள், “வாத்தியார், நீங்கள் ஜாக்கிரதையாயிருங்கள். உங்களை மறந்து எங்கேயாவது என்னைக் குத்திவிடப் போகிறீர்கள்!” என்று, அப்போதைக்கப்போது எச்சரிக்கை செய்திருந்தும், இந்நாடகம் நடந்த இம்முறையோ அல்லது ஷேக்ஸ்பியர் கொண்டாட்டத்திற்காக இதை இரண்டு மாதம் பொறுத்து மறுபடியும் ஆடியபொழுதோ, இக் கடைசிக் காட்சியில், இவரை என் கையிலிருந்த ரேபியர் (Rapier) கத்தியால் பலமாய்க் குத்திவிட்டேன். தெய்வாதீனத்தால் அந்தக் குத்து, அவர் அணிந்திருந்த பெல்ட்டில் (Belt) பட்டது; குத்திய வேகத்தினால் பெல்ட்டில் பட்டபொழுது என் கத்தி, அப்படியே “ட” ஆனா மாதிரி வளைந்து விட்டது! அந்த பெல்ட் தடுத்திராவிட்டால், அவரது வயிற்றில் பிரவேசித் திருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை ; நாடகம் விபரீதமாய் முடிந்திருக்கும்! ஈசன் கருணையானது இவ் ஆபத்தினின்றும் என்னைக் காத்தது.
சாராயம் குடிப்பவன், அது தவறு என்று நன்றாய் அறிந்திருந்தும், அந்த வெறி வரும் பொழுது, அதை யெல்லாம் மறந்து குடிப்பது போல்; இது தவறு, நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று எவ்வளவோ தீர்மானித்திருந்தும், மேடையின் மீது நடிக்கும் பொழுது இந்தத் தீர்மானங்கள் எல்லாம் எங்கேயோ பறந்தோடிப் போய், என்னை மறந்தவனாகிறேன். இதற்கு இன்னொரு உதாரணம், இதே அமலாதித்யன் நாடகத்தில் நேர்ந்திருக் கிறது. இந்நாடகம் இன்னொரு முறை நாங்கள் நடித்த பொழுது, டாக்டர் ஸ்ரீநிவாச ராகவாச்சாரியார் காலதேவனாக நடித்தார். நாடகத்தின் கடைசிக் காட்சியில் அமலாதித்யன் காலதேவன் சூதினால் தன் மரணம் கிட்டியதெனக் கண்டறிந்தவன், காலதேவன் தன்னைக் கொல்வதற்காகச் சித்தம் செய்துவைத்திருந்த விஷக் குப்பியை எடுத்து, அதில் மகாராணி குடித்து மிகுதியாயிருந்த பானத்தை, காலதேவன் குடிக்கும்படி செய்கிறான்; இதை நான் நடிக்கும்பொழுது, டாக்டர் ஸ்ரீனிவாசராகவாச்சாரி உதடு கிழிந்து இரத்தம் பெருகும்படியாக அழுத்தி விட்டேன்! இன்றும் ஏதாவது பேச்சு வரும்பொழுது, என் நண்பராகிய டாக்டர் இதைப் பற்றி என்னை ஏளனம் செய்வார். எனது பழைய நண்பராகிய ச. ராஜகணபதி முதலியார் பாலநேசர் வேடம் பூண்டு அதற்கேற்றபடி நடித்தார். இவர் சாதாரணமாக ஹாஸ்ய பாகங்கள் நடிப்பவர், இதை நன்றாய் நடித்தது விசேஷமே.
ஹரிஹரனாக நடித்தது ம. ஆனந்தவேலு முதலியார் என்பவர், இவர்தான் அமலாதித்யனாக நடிக்க வேண்டு மென்று இச்சை கொண்டார். இதை அறிந்த நான் முன்பு ஹரிஹரனாக நடியுங்கள், சரியாகயிருந்தால் அப்புறம் பார்ப்போம் என்று சொல்லி. இப் பாத்திரத்தைக் கொடுத்தேன். இவரால் அமலாதித்யன் பாகம் நடிக்க முடியா தென்பது என் எண்ணம். இவரிடம் இருந்த ஒரு குறை என்னவென்றால், இவரது முகமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரேமாதிரியாயிருக்கும். ரச பாவங்கள் மாறும்பொழுது இவர் முக பாவம் மாறாது! இதற்கு ஓர் உதாரணம் கூறுகிறேன். அமலாதித்யன் தன் தந்தையின் அருவத்தைச் சந்திக்கும்பொழுது அவரது தோழனாகிய ஹரிஹரனும் கூட இருக்கிறான். அருவம் தோன்றிய உடன் இருவரும் பீதி யடைந்த முகத்தை உடையவர்களாய்க் காட்ட வேண்டும்; இதற்காக அக் காட்சியை ஒத்திகை செய்யும் பொழுது பன்முறை, இவ்வாறு பயந்தவராய்க் கண் விழித்துக் காட்ட வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன். அவர் முகமானது இந்த பாவத்தைக் காட்டச் சக்தியற்றதாயிருந்தது. நான் பன்முறை கேட்டும், “இதோ, பயந்தவன் போல் நடிக்கிறேனே என்று சொல்லுவதே ஒழிய முகத்தில் ஒரு பயச் சின்னமுமிராது! கண்கள் விழித்துக்காட்டுவதைவிட்டு, சற்றே சுருக்கிக்கொள்வார்! இப்படிப்பட்டவர் அமலாதித்யனாக நடிப்பதென்றால், நான் அதற்கிசைவதெப்படி? இதை இங்கு நான் எடுத்து எழுதியது, இவர்மீது குற்றம் கூறும்படியல்ல; ஆயினும் ஒவ்வொருவனும், ஏதாவது நாடகப் பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பினால் அதற்குத் தக்கபடி நடிக்க நமக்குச் சக்தியிருக்கிறதா என்று முதலில் யோசித்தே பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை, இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அறியும் பொருட்டே, இதை இங்கு எழுதலானேன். மற்றவர்கள் குறையினை எடுத்துக் கூறுவ தென்றால், அவர்களும் மற்றவர்களும் இனி அம்மாதிரியான தவறிழைக்கா வண்ணம் எடுத்துக் கூற வேண்டுமேயொழிய, வேறெக் காரணத்தினாலும் கூறக் கூடாதென்னும் நியமமுடையவனாயிருத்தல் நலமெனத் தோன்றுகிறது.
ராஜகாந்தன், கிரிதரன் பாத்திரங்கள் பி. கோபாலசாமி முதலியாரும் சி. பாலசுந்தர முதலியாரும் எடுத்துக்கொண்டனர்.
இந்நாடகத்தில் ஹாஸ்ய பாகம் அவ்வளவாக இல்லாமல் போனாலும் வே. வெங்கடாசல ஐயர், நாடகத்தில் நாடக அரசனாகவும்; வடிவேலு நாயகர், நாடக அரசியாகவும் நடித்தது சபையோருக்குக் களிப்பைத் தந்தது. இக்காட்சியில் ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி, அவர் காலத்தில் வேஷதாரிகள் நாடக மேடையில், பேச்சிலும் நடிப்பதிலும் இழைத்த குற்றங்களை யெல்லாம் எடுத்துக் காட்டியுள்ளார்; அதற்கேற்ப, எனது இந் நாடகத் தமிழ் அமைப்பில், எனது காலத்திய, ஜீவனத்திற்காக நாடகமாடும் வேஷதாரி களுடைய குற்றம் குறைகளையெல்லாம், இவ்விரண்டு ஆக்டர்களைக் கொண்டு எடுத்துக் காட்டியுள்ளேன். வே. வெங்கடாசல ஐயர் நாடக அரசனாய் நடித்ததுமன்றி, இந் நாடகத்தின் கடைசி அங்கத்தில் வெட்டியானாகவும், மிகவும் நன்றாய் நடித்தார்.
இந்நாடகம் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து சற்றேறக் குறைய 5 மணி நேரத்திற்குமேல் பிடித்தது, முற்றுப்பெற. இதற்குப் பிறகு இதை ஆடும்பொழுது மிகவும் நீடித்திருக்கிறது என்று சில பாகங்களாகக் குறைத்தேன்.
நாடகத்திற்கு அத்யட்சராக விஜயம் செய்த சா. சுப்பிரமணிய ஐயர் என்பவர் ஒன்பது மணிக்கெல்லாம் வந்தவர், தனக்கு வயதானபடியாலும், நித்திரையின்றி அதிக காலம் இரவில் கழித்தால் தன் உடம்பிற்கு ஒத்துக்கொள்வதில்லை யென்றும் சொல்லி, எங்கள் சபை பிரசிடென்டாகிய வி. கிருஷ்ணசாமி ஐயரிடம், “ஓர் அரைமணி நேரம் பார்த்து விட்டுப்போவேன்! என்னை மன்னிக்க வேண்டும்” என்று சொன்னாராம். அதற்குக் கிருஷ்ணசாமி ஐயர், உங்கள் இஷ்டப்படி செய்யலாமென்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னாராம். பிறகு நாடகம் ஆரம்பித்த பிறகு ஒரு மணிநேரம் ஆகியும். சர். சுப்பிரமணிய ஐயர் இடம் விட்டுப் பெயராது மேடையின் மீதே கண்ணாயிருப்பதைக் கண்டவராய், கிருஷ்ணசாமி ஐயர் அவரைப் பார்த்து ஒருமுறைக்கு இரண்டு முறை, “ஐயர்வாள் சீக்கிரம் போக வேண்டுமென்று சொன்னாற் போலிருக்கிறது” என்று ஞாபகப்படுத்தினாராம்; அதற்கு சர். சுப்பிரமணிய ஐயர், “அதெல்லாம் உதவாது கிருஷ்ணசாமி ஐயர், கடைசி வரையில் பார்த்துவிட்டுத்தான் போக வேண்டும்!” என்று சொன்னாராம். இதையெல்லாம் அருகிருந்த ஒருவர் எனக்கு அன்றிரவே தெரிவித்தார்.
இவ்வாறு அரைமணி நேரத்துக்கு மேல் இருக்க முடியாதென்று தெரிவித்தவர், 5 மணிக்கு மேல் இருந்ததுமன்றி நாடகம் முடிந்தவுடன், தானாக, தன்னை யொருவரும் கேளாமலிருக்கும் பொழுதே, சபையோர் அறிய, கால் மணி சாவகாசத்திற்கு மேல், நாடகத்தையும் நாடகத்தில் நடித்தவர்களையும் புகழ்ந்து பேசினார். என்னைப்பற்றியும் கொஞ்சம் புகழ்ந்தார் என்பது என் ஞாபகம். முக்கியமாக, எங்கள் சபை இம் மஹானால் புகழப்பட்டதே என்று சந்தோஷப்பட்டேன். நான் அன்றிரவு வீட்டிற்குப்போய், “தெய்வத் தாலாகா தெனினும் முயற்சி மெய்வருந்தக் கூலி தரும்!” என்னும் திருக்குறளை நினைத்துக்கொண்டு மிகுந்த சந்தோஷத்துடன் உறங்கினேன்.
மறுநாள் காலை, டாக்கர் தோட்டத்தில் (Taukers gardens) சூணாம்பெட்டு ஜமீன்தார் முத்துக்குமாரசாமி முதலியார் அவர்கள் சர். வி. சி. தேசிகாச்சாரியாருக்கு ஒரு விருந்தளித்தனர். அதற்கு நானும் வரவழைக்கப்பட்டுப் போக, அங்கு என்னைப் பார்த்தவர்கள் அநேகர் முன்னாள் நடந்த நாடகத்தைப் பற்றியும் எங்கள் சபையைப் பற்றியும் மிகவும் கொண்டாடிப் பேசினர். நான் ஆடியதையும் புகழ்ந்தனர் என்பது என் ஞாபகம். முக்கியமாக சர். வி.சி. தேசிகாச்சாரியார் கூறிய வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. “என்ன சம்பந்த முதலியார்! நேற்று ராத்திரி, சுகுண விலாச சபை நாடகம் மிகவும் நன்றாயிருந்ததாமே! காலை மணி அய்யர் அவர்களைப் பார்த்தேன். அவர் நேற்றிரவு தான் பார்த்த நாடகத்தைப்பற்றி அரை மணி சாவகாசம் பேசினார். உங்களை மிகவும் புகழ்ந்தார். என்ன சார்! இர்விங் கிர்விங் (Sir Henry Irving) என்று சொல்லு கிறார்கள்; அவர் கூட இம்மாதிரியாக நடிப்பார்களோ என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது!” என்று ஆங்கிலத்தில் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். இதை இங்கு எழுதுவதற்காக என் நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக. ஆயினும் தற்புகழ்ச்சியாக இதை வெளியிட்டேன் என்று எண்ணாதிருப்பார்களாக. சர். ஹென்றி இர்விங்குடன், ஒப்பிட்டுக் கூறும்படியான அவ்வளவு பெருமை எனக்கு இல்லை என்பதை உறுதியாய் நம்புகிறேன். இவ்விடம் இதை எழுதியதற்குக் காரணம், எங்கள் சுகுண விலாச சபை நடத்திய நாடகத்தை, சிறந்த கல்விமான்களும், புத்திமான்களும் கொண்டாடினார்கள் என்று கூறும் பொருட்டேயாம்.
சர். சுப்பிரமணிய ஐயர் இவ்வாறு புகழ்வதுடன் நில்லாது, இன்னொரு காரியமும் செய்தார். அதைப்பற்றி அக்காலத்தில் மறுபடியும் எங்கள் சபை பிரசுரம் செய்த “தமிழ் நாடக மேடை” (Indian Stage) என்னும் மாதாந்திரப் பத்திரிகையில் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் “ஒரு பெரும் தயாளமான கொடை” என்கிற தலைப் பெயர் வைத்து எழுதியுள்ளார். தான் பார்த்த அமலாதித்யன் நாடகத்தை மெச்சி, எங்கள் சபையை வாழ்த்தி, அதற்கு நன்கொடையாக ரூபாய் 250க்கு செக்கை அனுப்பினார் மறுதினம்! அக் கடிதம் இன்னும் எங்கள் சபையோரால் போற்றப்பட்டுப் பாதுகாத்து வரப்பட்டிருக்கிறது. இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்களுக்கு எப்பொழுதாவது சாவகாசமிருந்தால் எங்கள் சபைக்கு வந்து காரியதரிசியிடமிருந்து உத்தரவு பெற்று, இக் கடிதத்தைக் கண்ணுறும்படி வேண்டுவேன். எங்கள் சபையைப் பற்றி இப் பெரியார் புகழ்ந்ததை அவர்கள் அறிய வேண்டுமென்று நான் இதைக் கேட்கவில்லை; அக் கடிதத்தின் கடைசியில் போஸ்ட் ஸ்கிரிப்டாக (Post Script) இப் பெரியார் எழுதியதை அவர்கள் கவனிக்கும் பொருட்டே நான் கேட்பது. கடிதத்தை யெல்லாம் எழுதி முடித்த பிறகு கடைசியில், “நான் இந்த ரூபாய் கொடுத்ததை, மற்றவர்கள் அறிய வேண்டியதில்லை!” என்று பொருட்பட ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ளதை அவர்கள் கவனிக்கும் பொருட்டே. “வலது கை செய்யும் தானத்தை இடது கையறியலாகாது!” என்னும் பழமொழியை உண்மை மொழியாக இப் பெரியார்பால் அவர்கள் கண்டு களிக்க வேண்டுமென்பதே என் வேண்டுகோள்.
என் பால்ய நண்பரும், இந்நாடகத்தை நான் எழுதுவதில் எனக்கு நான் முன்புரைத்தபடி மிகவும் உதவி செய்த வருமான வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், மறுநாள் என்னைச் சந்தித்த பொழுது, “நீ இந் நாடகத்தில், நன்றாய் நடிப்பாய் என்பதைப்பற்றி நான் எப்பொழுதும் சந்தேகப்பட்ட வனன்று; ஆயினும், இவ்வளவு நன்றாய் நடிப்பாயென்று, நான் நினைக்கவில்லை” என்றார். எனக்கு மார்க்கும் (Mark) அதிகமாய்க் கொடுத்தார் என்று நினைக்கிறேன். எவ்வளவு என்பது எனக்கு ஞாபகமில்லை .
இந்த “அமலாதித்ய நாடக”மானது, எஸ்.பி.சி.ஏ. என்று சொல்லப்பட்ட, பிராணிகளுக்கு ஹிம்சையில்லாமல் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சபையாரின் உதவிக் காகக் கொடுக்கப்பட்டது. இதற்கு மொத்த வசூல் 685 ரூபாய் வந்தது. அதில் எங்கள் செலவு போக மிகுந்த தொகை, ரூபாய் 261-4-6 அந்தச் சபையாருக்குக் கொடுக்கப்பட்டது.
இந்த நாடகத்தைப் பலவிதத்தில் எங்கள் சபையின் ஒரு முக்கியமான நாடகமென எண்ண வேண்டியிருக்கிறது. இதனால் எங்கள் சபைக்குப் பெரும்புகழ் கிடைத்த தென்பதற்குச் சந்தேகமில்லை. இதற்கு முன்பு 15 வருடங்களாக நடத்தி வந்த நாடகங்களைப் பார்க்கிலும் இதற்குத்தான் அதிகப் பணம் வசூலாயது. அன்றியும் நாளது வரையில் கணக்கிட்ட போதிலும், இந் நாடகத்தில்தான் எங்கள் சபைக்கு அதிகப் பணம் வசூலாயிருக்கிறது; கொழும்பில் நாங்கள் இந் நாடகம் ஆடியபொழுது ரூபாய் 1792 வசூலானது; இதற்கு அதிகமாக இன்னும் எந்த நாடகத்திலும் எங்களுக்கு வசூலாகவில்லை. அன்றியும் இதுவரையில் எங்கள் சபை ஆடிய நாடகங்களிலெல்லாம், இதுதான் மிகச் சிறந்தது என்று என் பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதியிருக்கிறார். மேலும் எங்கள் சபையில் நூறாவது நாடகமாக இது 1908ஆம் வருஷம் ஆடப்பட்டது. கடைசியாக, இதுவரையில் எங்கள் சபை ஆடிய நாடகங்களைப் பார்க்கிலும் இதில்தான் அரங்கத்தின் காட்சிகளை ஏற்படுத்துவதில், அதிகச் சிரமம் எடுத்துக் கொண்டோம். இதற்காக இவ்வருஷத்திய சபை அறிக்கை (Report) யில் எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலுவுக்கு, அவர் எடுத்துக் கொண்ட சிரமத்திற்காக, சபையார் வந்தனம் அளித்தனர். இந்த அமலாதித்ய நாடகமானது, இதுவரையில் எங்கள் சபையோரால் 12 முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. இதை ஆடுவது கஷ்டமானபடியால் இதை அடிக்கடி ஆடுவதில்லை. அக்காரணம் பற்றியே இதர சபையார் இந்நாடகத்தை அதிமாய் ஆடினதில்லை; மற்றவர்கள் இதை இதுவரையில் ஒன்பது தரம்தான் ஆடியிருக்கிறார்கள்.
இவ் வருஷம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டத்திற்காக இந் நாடகம் எங்களால் மறுபடியும் ஆடப்பட்டது. இம்முறை இந் நாடகம் ஆடினதைப்பற்றி ஒரு முக்கியமான விஷயம் எனக்கு ஞாபகம் வருகிறது. இதற்கு முன்பாக எனக்குக் கொஞ்சம் உடம்பு அசௌகர்யமாயிருந்ததனாலோ அல்லது எக்காரணத்தினாலோ என் மனம் இந்நாடகத்தின்மீதில்லை. நான் இதை இம்முறை நடித்தது எனக்கே திருப்திகரமாயில்லை; வந்திருந்தவர்களில் அநேகர் நன்றாயிருந்ததெனக் கூறியபோதிலும், எனது கற்றறிந்த நண்பர்களிற் பலர்; நான் முன்பு நடித்தது போலில்லை என்றே கூறினார்கள். முக்கியமாக எனது நண்பர் அ. வாமன்பாய் என்பவர், நான் இம்முறை ஆடியது தனக்குத் திருப்திகரமாயில்லை என்று கூறி என்னைச் சந்தித்து, “என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நான், இதை ஆடியபோது என் தேகத்திலும் உற்சாகமில்லை; ஏதோ காரணத்தினால் என் மனத்திலும் உற்சாகமில்லை என்று ஒப்புக் கொண்டேன். அதன்மீதவர், “இம் மாதிரியான முக்கியமான பாத்திரங்களாடும் பொழுது, இதை ஆடுவதில் நாம் சரியாக ஆடுவோம் என்று உன் மனத்தில் திடமாய்த் தோன்றாவிட்டால், ஆடாதே!” என்று புத்திமதி கூறினார். அவர் கூறியதை ஒப்புக்கொண்டு, அமலாதித்யன் முதலிய கஷ்டமான நாடகங்களில், என் மனத்தில் பூர்ண வகையும் திடமும் இல்லாவிட்டால் ஆடாது தவிர்த்து வந்திருக்கிறேன். இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களும் கடினமான நாடகங்களில் ஆட வேண்டி வந்தால், தங்கள் முழு மனத்துடனும், உற்சாகத்துடனும் ஆட, ஏதாவது தடையேற்பட்டால் அவற்றை ஆடாதிருப் பார்களாக. அச்சமயத்தில் இதற்கு நிதர்சனம் இம்முறை ஆடிய இந்நாடகத்திலிருந்தே எடுத்துக் கூறக் கூடும். அமலாதித்யன் தன் தந்தையின் அருவத்தை முதன்முறை சந்திக்கும் காட்சியில், முதன் முறை ஆடியபொழுது, அந்த பயத்தை மனத்தில் வகித்தவனாய் உடம்பெல்லாம் வியர்த்தது; இம்முறை, மேற்சொன்னபடி, அந்தக் கஷ்டம் எடுத்துக்கொள்ள அசக்தனாகி, அதைச் சபையோர் கவனிக்கப் போகிறார்களா என்று எண்ணினவனாய், முகத்தைச் சற்றே திருப்பிக்கொண்டு, நான் பேச வேண்டிய வார்த்தைகளைப் பேசினேன். பலன்? உடனே ஹாலிலிருந்து இந் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கற்றறிந்த எனது நண்பர்கள் இதைக் கண்டுபிடித்து விட்டனர்; முன்புபோலில்லை! ஏதோ குறையிருக்கிறது; என்று அவர்கள் மனத்தில் பட்டுவிட்டது. இவ்விதமாக அநேக விஷயங்களில், நமது குறை மற்றவர்களுக்குத் தெரியாது என்று எண்ணி, நமது மனத்தை நாமே மோசம் செய்து கொள்ளுகிறோம்.
இவ்வருஷம் (1906) எங்கள் சபை நீலகிரிக்குப் போய், உதகமண்டலத்தில் 3 நாடகங்கள் ஆடியது. 1897 இல் பெங்களூருக்குப் போய், நஷ்டமடைந்து வந்தபிறகு, இந்த ஒன்பது வருடங்களாக, வெளியே போகிற எண்ணத்தை விட்டோம். இனி வெளியிற் போவதில்லை என்று தீர்மானித்தோம் என்றே சொல்ல வேண்டும். அத்தீர்மானத் தினின்னும் இவ்வருஷம் மாறியதற்கு ஒரு காரணமுண்டு. எங்கள் சபையில் தெலுங்கு ஆக்டராகச் சேர்ந்த பி. ராம மூர்த்தி பந்துலு நீலகிரிக்கு ஓவர்சியராக மாற்றப்பட்டார்; மற்ற இரண்டு ஆக்டர்களாகிய அ.கிருஷ்ணசாமி ஐயரும், சி. பாலசுந்தர முதலியாரும் கவர்ன்மெண்டு செக்ரடரியேட் (Secretariat) ஆபீசில் இருந்தபடியால், கோடைக் காலத்தில் அந்த ஆபீசுடன், நீலகிரிக்குப் போக நேர்ந்தது; உதகமண்டலத்தில் ஒரு சிறு நாடக சாலையுமிருந்தது; இந்த ஹேதுக்களெல்லாம் இவ்வருஷம் ஒருங்கு சேரவே, அவ்விடமிருந்து எங்கள் சபை அங்கத்தினராகிய மேற் சொன்ன மூவர்களும், சபையானது, அவ்விடம் வந்து நாடகமாடினால் நன்றாயிருக்கும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் நாங்கள் செய்கிறோம். நஷ்டம் வராமற்படி பார்த்துக் கொள்ளுகிறோம் என்று எழுதினார் கள். எங்கள் சபை ஆக்டர்களுக்கும் (நான் உட்பட) நீலகிரிக்குப் போக வேண்டும் என்னும் ஆசை பிறந்தது. எங்கள் சபையின் நிர்வாக சபையாரும் ஒப்புக் கொண்டனர்.
அதன் பேரில் உதகமண்டலம் போய் மூன்று நாடகங்கள் கொடுக்க வேண்டும் என்றும்; அங்கு போகிறவர்களெல்லாம் ஆக்டர்கள் உட்பட ரெயில் சார்ஜ் தாங்களே போட்டுக் கொள்ளவேண்டும் என்றும் தீர்மானித்தோம்; ரெயில்வேக்காரர்கள், முன்பு இரண்டுமுறை போலவே எங்கள் சபைக்கு, இரண்டாவது வகுப்பில், பாதி சார்ஜில் போய் வரலாமென்று அனுமதி கொடுத்தனர். அதன்பேரில் சென்னையிலிருந்து மே மாதம் 24ஆம் தேதி புறப்பட்டுப் போய், அவ்விடம் இரண்டு தமிழ் நாடகங்களும் ஒரு தெலுங்கு நாடகமும் கொடுத்து ஜூன் மாதம் இரண்டாம் தேதி வரை அவ்விடமிருந்து, 3ஆம் தேதி புறப்பட்டுப் பட்டணம் வந்து சேர்ந்தோம். இப்படிப் போய் வந்தவர்கள் ஆக்டர்களல்லாதார் உட்பட 31 பெயர். இதைப்பற்றி எனக்கு ஞாபகம் இருக்கும் சில முக்கிய விஷயங்களை இனி எழுதுகிறேன்.
இதைப்பற்றி நான் இப்பொழுது எழுதும்பொழுது, அநேக வருஷங்களுக்கு முன்னால் நான் குறிப்பிட்டிருக்கும் எங்கள் சபை நடத்தி வந்த “இந்திய நாடக மேடை” (Indian Stage) என்னும் பத்திரிகையில் நான் ஆங்கிலத்தில் எழுதிய விவரங்கள் எனக்கு மிகவும் உபயோகப்படுகின்றன. அவ்வியாசங்களை நான் பாதுகாத்து வைத்தது எனக்குப் பெரும் உதவியாயிற்று.
இம்முறை நாங்கள் வெளியூருக்குப் போகத் தீர்மானித்ததற்குக் கொஞ்சம் ஆட்சேபணை இருந்தது. முக்கியமாக எங்கள் சபையின் அங்கத்தினர் ஒருவர் ஆட்சேபணை செய்தார் என்பது என் ஞாபகம்; அவர் ஆட்சேபணை செய்தது எனக்குச் சந்தோஷத்தைத் தந்தது, இரண்டு முக்கியக் காரணங்களினால்; முதலாவது, நான் சபையின் சார்பாக ஆரம்பிக்கும் அதன் விஷயங்களி லெல்லாம், ஆட்சேபணை யாதேனும் இருந்தால்தான் சரியாக ஈடேறும் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். இரண்டாவதாக, முக்கியமாக இந்த அங்கத்தினர் ஆட்சேபித்தால்தான், எதுவும் மிகவும் நன்றாய் முடியும் என்பது என் அனுபவம். அவர்மீது குற்றங்கூறவில்லை நான் அவர் வந்த ராசி அது!
நாங்கள் சென்னையை விட்டு உதகமண்டலம் போகும் பொழுது, எங்களில் பெரும்பாலர் மலை ரெயிலில் அதுவரையில் போயறியாதவர்களாயிருந்தபடியால், அந்தப் பிரயாணம், எங்களுக்கு மிகவும் களிப்பைத் தந்தது. உதகமண்டலம் அல்லது ‘ஒத்தியில்’ (Ooty) எங்கள் சபை நண்பர்கள் எங்களுக்காகத் தக்க ஏற்பாடுகளெல்லாம் செய்திருந்தனர். ஆயினும் முதலிலேயே எங்களுக்கு ஒரு பெருங்கஷ்டம் நேரிட்டது. போன மறுநாள், ‘விரும்பிய விதமே’ என்னும் நாடகம் வைத்துக் கொண்டோம். அன்று சாயங்காலம் 712 மணி வரையில் எங்கள் உடுப்புகள் வந்து சேரவில்லை! நாடக உடுப்புகள் இல்லாமல் எப்படி நாங்கள் நாடகமாடுவது? நந்தனாரைப்போன்ற நாடகமாயிருந்தால் ஆடிவிடலாம்; ஷேக்ஸ்பியர் நாடகத்தைத் தக்க உடைகளில்லாமல் எப்படி நடிப்பது? நாடக சாலையில் எல்லா ஏற்பாடுகளும் செய்தாயது. முன்னாலே நாங்கள் அனுப்பிய திரைகளும் கட்டியாயது. உடைகள் மாத்திரம் இல்லை! இந்தக் கஷ்டத்தில் இன்னது செய்வதென்றறியாது திகைத்து நிற்கையில், அனுப்பிய எங்கள் உடுப்புப் பெட்டிகள் 712 மணிக்கு வந்து சேர்ந்தன! அதன்மீது, துரிதப்பட்டு, இந்நாடகத்துக்கு வேண்டிய அத்தனை ஆக்டர்களும் ஒரு மணி சாவகாசத்திற்குள்ளாகச் சித்தமானோம்! சாதாரணமாக எங்களுக்கு இதற்கு நான்கு மணி சாவகாசம் வேண்டும். விளம்பரங்களில் குறித்தபடி சரியாக ஒன்பது மணிக்கு நாடகத்தை ஆரம்பித்து விட்டோம். நாங்கள் ஆடிய நாடகக் கொட்டகைக்கு ஆர்மரி ஹால் (Armoury Hall) என்று பெயர். அது அவ்வளவாகப் பெரிய இடம் அன்று; நாடகம் பார்க்க வந்த ஜனத் தொகை அதிகமாயும் இல்லை; கொஞ்சமாகவும் இல்லை; இது எங்கள் சபையின் குற்றமல்ல. எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலு, விளம்பரங்கள் மூலமாக ‘ஒத்தி’வாசிகளுக்கு எவ்வளவு தெரியப்படுத்தக்கூடுமோ அவ்வளவு தெரியப்படுத்தினார். ஆயினும் அவ்விடம் தமிழ் அறிந்தவர்கள் அவ்வளவு அதிகமில்லாதபடியால், நாடகம் பார்க்க வந்த ஜனத்தொகை அதிகமாயில்லை. இச்சந்தர்ப்பத்தில் எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலு செய்த ஒரு யுக்தியை இங்கு எனது நண்பர்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.
‘ஒத்தி’ (Ooty) என்பது ஒரு சிறிய ஊர். அதில் அக்காலம் வாரத்துக்கு ஒரு முறைதான் சந்தை’ கூடுவதுண்டு.
அங்கிருப்பவர்கள், வாரத்திற்குத் தங்களுக்கு வேண்டிய காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வார்கள், எனது நண்பர், எங்கள் சபை அங்கு போயிறங்கின தினத்தில் காலையில், அச் சந்தைக்குப் போய் அதிகாலையிலேயே, அங்கு கடைகளிலிருந்த வாழை இலைகளை யெல்லாம், எங்களுக்கு ஒரு வாரத்திற்கு ஆகும்படி வாங்கிவிட்டார்! பிறகு அச் சந்தையில் வாழை இலை வாங்க வந்தவர்களுக்கெல்லாம் ஒருவருக்காவது, ஒரு வாழையிலை யாவது கிடைக்காமற் போச்சுது! வாழை இலைக்காகக் கேட்பவர்களுக்கெல்லாம், கடைக்காரர்கள், பட்டணத்திலிருந்து ஏதோ ஒரு சபை வந்திருக்கிறதாம். அதற்காக, சந்தையிலுள்ள வாழை இலைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள் என்று பதில் உரைத்தனர். அச்சமயம் ஒத்தியில் தங்கள் பரிவாரங்களுடன் வந்திருந்த இரண்டொரு மஹாராஜாக்கள் வீட்டிற்குக்கூட வாழை இலை இல்லாமற் போயிற்று! இந்த யுக்தியின் மூலமாக, எல்லோரும், யாரடா இந்தச் சபை? என்று கேட்க நேரிட்டு, எங்கள் சபை ஒத்திக்கு வந்த சமாச்சாரம் நன்றாய்ப் பரவியது!
நாங்கள் ஆடிய முதல் நாடகத்தைப்பற்றி இங்கெழுதத்தக்க விசேஷம் ஒன்றும் அவ்வளவாக எனக்கு ஞாபகமில்லை. வழக்கம்போல் இந்நாடகத்தில் அ. கிருஷ்ணசாமி ஐயரும், சி. ரங்கவடிவேலுவும் நல்ல பெயர் எடுத்தனர் என்பது தவிர வேறொன்றும் என் நினைவுக்கு வரவில்லை. இந்நாடகம் ஆடி முடிந்ததும், நாங்கள் அதுவரையில் தங்கியிருந்த ஒரு நண்பருடைய பங்களா, எங்களுக்குச் சௌகர்யக் குறைவாயிருந்தபடியால், விஜயநகரம் மகா ராஜாவின் பெரிய பங்களா அச்சமயம் காலியா யிருந்தபடியால் அதை ஐந்து நாளைக்கு 200 ரூபாய்க்கு, வாடகை பேசிக்கொண்டு, அங்கு போய்ச் சேர்ந்தோம்.
நாங்கள் இங்காடிய இரண்டாவது நாடகம் தெலுங்கில் “வரூதினி” என்பதாம். இந்நாடகத்தை எழுதியவர் எனது நண்பர் ராமமூர்த்தி பந்துலு. இதில் முக்கியமான கதாநாயகனாக அவர் மிகவும் நன்றாய் நடிப்பார். இந்நாடகமானது, சில வருஷங்களாக சென்னையில் அடிக்கடி போடுவதுண்டு. எங்கள் சபையார், இதைப் பற்றி, சற்று விகடமாய்ப் பேசும்போது எனது நண்பர் ராமகிருஷ்ண ஐயர், “வருஷா வருஷம் சிராத்தம் வருவது போல் இது வந்து கொண்டிருக்கிறதே!” என்று வேடிக்கையாய்ச் சொல்வார். இந்த நாடகத்தை எப்படியாவது இவ்விடம் நடத்த வேண்டுமென்று இச்சை கொண்டவராய், இவர், ஒத்தியில் தெலுங்கு தெரிந்தவர்கள் அநேகம் பெயர் இருக்கின்றனர், தெலுங்கு நாகடமும் போடலாம் என்று வற்புறுத்தினார். எனக்கு மாத்திரம் சந்தேகமாயிருந்த போதிலும் இவ்வளவு தூரம் சொல்லுகிறாரே பார்ப்போம் என்று ஆட்சேபிக்காது விட்டேன். இந்நாடகம் இங்கு ஆடிய பொழுது நாடகம் நன்றாயிருந்தது; ஜனங்கள்தானில்லை! முன்னால் கொடுத்த தமிழ் நாடகத்திற்கு வந்ததில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை! என்ன செய்வது? கொண்டபின் குலம் பேசி என்ன பிரயோஜனம்? ராமமூர்த்தி பந்துலுவின் மீதும் நான் குறை கூறுவதற்கில்லை. நானும் அந்தக் கிரந்த கர்த்தாவாயிருந்தால் அப்படியே செய்திருப்பேனோ என்னவோ? ஆங்கிலத்திலே “The wish is father to the thought” என்று ஒரு பழமொழியுண்டு. அதைத் தமிழில், “விருப்பமானது, எண்ணத்திற்குத் தந்தையாயிருந்தது” என்று ஒருவாறு கூறலாம். பந்துலு அவர்களின் செய்கையும் அவ்வாறு இருந்தது போலும்!
இந்தத் தெலுங்கு நாடகத்தினால் எங்கள் சபாவுக்கு நேரிட்ட நஷ்டத்தை யெல்லாம், இவ்விடத்தில் நாங்கள் கொடுத்த கடைசித் தமிழ் நாடகமாகிய “சாரங்கதரன்” சரிப்படுத்திவிட்டது. சாரங்கதரன் நாடகமாடிய தினம் சாயங்காலம் மழை பெய்ய ஆரம்பித்து ஏறக்குறைய இருட்டும் வரையில் பெரும் மழை பெய்தது. ஒத்தியில் மழை பெய்வதை அனுபவித்தவர்கள் அன்றிரவு எப்படி இருந்திருக்க வேண்டுமென்று அறிவார்கள். மழை ஆரம்பித்தால் தாரை தாரையாகக் கொட்டும். விஜயநகரம் மகாராஜாவின் பங்களாவிலிருந்து நாடகசாலைக்கு வர ஏறக்குறைய இரண்டு மைல் நாங்கள் நடந்து வர வேண்டியிருந்தது; வரும் வழியில் ஆக்டர்களாகிய நாங்கள் முழங்காலளவு ஜலத்தில் நடந்து வரவேண்டி வந்தது, சில இடங்களில். முந்திய நாடகமே நஷ்டத்தில் முடிந்ததே, இதுவும் நஷ்டத்தில் முடிந்தால் என்ன செய்வது என்று மனத்தில் துயரத்துடனே நாடக சாலைக்குப் போய்ச் சேர்ந்தோம். ஸ்வாமி இருக்கிறாரென்று என் மனத்தை நான் தைரியம் செய்துகொண்டு, வேஷம் பூண ஆரம்பித்தேன். கருணைக் கடவுளின் கிருபையால் 8 மணிக்கெல்லாம் மழை நின்று விட்டது. மழை நின்றதும், வெளியில் வந்து பார்த்தால், எங்கும் ஒருவித மூடு பனி சூழ்ந்திருந்தது. இதென்ன இப்படியிருக்கிறதே என்று நான் பயந்தபொழுது, எனது நண்பர் சி. பாலசுந்தர முதலியார் “நீங்கள் பயப்படாதீர்கள் வாத்தியார், இனி மழை வராது. அன்றியும் ஒத்திவாசிகளெல்லாம், இம்மாதிரியான மூடு பனிக்கு அஞ்சமாட்டார்கள்! இப்பனியில் நடப்பதுதான் இங்குள்ள வர்களுக்கு ஒரு வினோதமாகும்!” என்று தைரியம் சொன்னார். இவர் சொன்னதற்கேற்ப, மழை நின்ற ஒரு மணி அவகாசத்திற்கெல்லாம், நாகடசாலை ஜனங்களால் நிரம்பிவிட்டது! அந்த நாடகசாலை எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு டிக்கட்டுகள் விற்றுப் பிறகு வருபவர்களுக்கு இடம் இல்லாமல், நிறுத்தி விட்டோம். இச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சிறு விஷயம் ஞாபகம் வருகிறது. நாடகம் ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்கும் பொழுது, டிக்கட்டுகள் விற்கும் இடத்தில், எனது நண்பர் சபையின் பொக்கிஷதாரராகிய வி. ரங்கசாமி ஐயங்கார், யாருடனோ உரத்த சப்தமாய்ச் சச்சரவிட்டுக் கொண்டிருந்தார். அவர் ரகசியம் பேசினாலே பக்கத்து வீட்டிற்குக் கேட்கும்! சண்டை போட ஆரம்பித்தால்! வேஷம் போட்டுக்கொண்டிருந்த நான் பாதி வேஷத்துடன் அவ்வறைக்குப் போய்க் கேட்க, நடந்த செய்தியைத் தெரிவித்தார்; அவருடன் வாதாடிக் கொண்டிருந்த மனிதன், அரைமணி நேரத்துக்கு முன் ஒரு எட்டு அணா டிக்கட்டு கேட்டானாம்; ‘எட்டணா வகுப்பில் இடமில்லை! இனி எட்டணா டிக்கட்டு விற்க முடியாது!’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். அந்த மனிதன் ஒரு மைல் தூரம் திரும்பிப் போய்த் தனக்குத் தெரிந்தவர்களிட மிருந்து, இன்னொரு எட்டணா வாங்கிக்கொண்டு வந்து ஒரு ரூபாய் டிக்கட்டு கேட்டானாம்; இதற்குள்ளாக ஒரு ரூபாய் வகுப்பும் நிரம்பிவிட்டது. “ஆகவே, நான் என்ன செய்வது? ஒரு ரூபாய் டிக்கட்டு இல்லை. இனி இரண்டு ரூபாய் டிக்கட்டுதான் இருக்கிறது என்று நான் சொன்னால், இவன் என்னோடு சண்டை போடுகிறான். இவன் ஒரு மைல் தூரம் நடந்து போய் வந்து ஒரு ரூபாய் கொண்டு வந்தால் எனக்கென்ன? நான் என்ன செய்யக்கூடும்? ‘நீங்கள்தானே ஒரு ரூபாய் கொண்டு வந்தால் டிக்கட்டு தருகிறேன் என்று சொன்னீர்கள்?’ என்று என்னுடன் சண்டை பிடிக்கிறான். நான் என்ன செய்வது இப்பொழுது?’ என்று என்னிடம் தன் மெல்லிய குரலுடன் தெரிவித்தார். ‘ஐயோ பாவம்! அம் மனிதன் (அவன் யாரோ எனக்குத் தெரியாது) இந்நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரு மைல் தூரம் நடந்து போய் வந்திருக்கிறானே! ஒரு ரூபாய் கொண்டு வர!’ என்று எண்ணினவனாய், “அந்த மிகுதி ரூபாயை நான் கொடுக்கிறேன்! என் கணக்கில் போட்டுக்கொள்!” என்று சொல்லி, அம்மனிதனுக்கு இரண்டு ரூபாய் டிக்கட்டைக் கொடுக்கச் செய்தேன். இதை நான் எழுதியது, எங்கள் பொக்கிஷதாரர், எவ்வளவு கண்டிப்பானவர் என்று மற்றவர்கள் அறியும் பொருட்டும், அன்றியும், என்றும் சுயநலத்தையே நாடும் என் ஜன்மத்தில்கூடக் கோடைக் காலத்தில் எப்போதவது மழை நீர் துளிப்பது போல், இம்மாதிரியான அற்ப விஷயங்களிலாவது கொஞ்சம் மற்றவர்களுக்கு நம்மாலியன்ற அளவு உதவி செய்ய வேண்டும் என்னும் குணம் சிறிது இருக்கிறதுபோல எனக்குத் தோன்றுகிறதென, என் இளைய நண்பர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டே! இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள், இம்மாதிரியான சந்தர்ப்பங்கள், தங்களுக்கு நேருமானால், மற்றவர்களுக்கு உதவி செய்து, அதனால் பெரும் மனோசந்துஷ்டியை அடைவார்களாக!
இந் நாடகத்தில் முதற்காட்சியில் மதுரகவி மரத்தின் கிளையினின்றும் கீழே விழுந்தது முதல், கடைசி வரைக்கும் ஒவ்வொரு முக்கியமான சந்தர்ப்பமும் வந்திருந்த சபையோரால், கிரஹிக்கப்பட்டு அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. நான் எழுதியுள்ள ஒவ்வொரு நாடகத்திலும், இன்னின்ன இடத்தில் ஜனங்கள் கரகோஷம் செய்வார்கள், இன்னின்ன இடத்தில் நகைப்பார்கள், இன்னின்ன இடத்தில் துக்கப்படுவார்கள், இன்னின்ன இடத்தில் நிசப்தமாய்க் கவனிப்பார்கள் என்று அனுபவத்தினால் எனக்கு ஒரு கணக்குண்டு. இதன் பிரகாரம் யோசிக்குமிடத்து இந் நாடகம் ஜனங்களை மிகவும் திருப்தி செய்ததென்றே நான் கூற வேண்டும். மேற்சொன்ன சந்தர்ப்பங்களில் சபையோர், நான் எண்ணியபடி செய்யாவிட்டால், ஆக்டர்கள் சரியாக நடிக்காமலாவதிருக்க வேண்டும் அல்லது நாடகம் பார்க்க வந்திருப்பவர்கள் அவ்வளவாக நாடக ரசிகர்களாக இல்லாமலிருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். இம்முறை எனது நண்பர்கள் ஆ. கிருஷ்ணசாமி ஐயர் ரத்னாங்கியாகவும், சி. ரங்கவடிவேலு சித்ராங்கியாகவும் சென்னையில் நடித்ததைவிட அதிக விமரிசையாக நடித்தனர் என்றே கூற வேண்டும். எந்தச் சபையிலும், அதை அறிந்து அனுபவிக்கத்தக்க ரசிகர்கள் எதிரில் இருக்கிறார்கள் என்று பட்டால், அந்தக் கலைஞனுக்கு உற்சாகம் உண்டாகி, தன் முழு சாமர்த்தியத்தையும் தன்னையும் அறியாதபடி சில சமயங்களில் காட்டுகிறான்; எதிரிலிருப்பவர்கள் மண்டு களாகி மௌனமாயிருந்தால், எப்படிப்பட்டவனுக்கும் உற்சாகம் சிறிது குறைந்துதான் தீரும். இவ்வாறு வெகு விமரிசையாய் நடத்தப்பட்ட இன்றிரவு நாடகத்தில், ஒரு சந்தர்ப்பம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இதை அன்றிரவே எனது நண்பர் ரங்கசாமி ஐயங்கார் என்னிடம் வந்து தெரிவித்தார். அன்று பந்தோபஸ்துக்காக வந்திருந்த போலீஸ்காரன் ஒருவன், அவர் உத்தரவு பெற்று ஒருபுறமாக வந்து, சுவரின் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், சாரங்கதரன் தன் அன்னையைவிட்டுப் பிரிந்து கொலைக் களம் கொண்டு போகப்படும் காட்சியில், கிருஷ்ணசாமி ஐயரும் நானும், மேடையின்மீது நடித்துக் கொண்டிருந்த பொழுது, கண்ணீர் தாரை தாரையாக விட்டழ ஆரம்பித் தானாம். எனது நண்பர் ரங்கசாமி ஐயங்கார், அவன்மீது பரிதாபங் கொண்டவராய் அவனைத் தேற்றுமாறு, ஏனடா அப்பா அழுகிறாய்? இதெல்லாம் நாடகங்தானே!” என்று கூற, அந்தக் கான்ஸ்ட பில் “இருங்க சார்! இருங்க சார்! என்னை அலட்டாதீர்கள்! என்ன நன்றாயிருக்கிறது!” என்று பதில் உரைத்து, காட்சியின் கடைசிவரையில் அழுது கொண்டே இருந்தானாம். காட்சியை கண்டு கண்ணீர் விட்டழும் சுகத்தினின்றும் அவன் கலைக்கப்பட இஷ்டப்படவில்லை!
ஒத்தியில் (Ooty) நாங்கள் ஆடிய நாடகத்தைப்பற்றி இன்னொரு விஷயம் எழுத விரும்புகிறேன். இங்கு ஒவ்வோர் இரவும் சுமார் 5 மணிநேரம் நாடகமாடியும் கொஞ்சமாவது எங்களுக்கு வியர்க்கவில்லை; சிரமம் என்பதே தோன்றவில்லை; ஆரம்பத்தில் எவ்வளவு உற்சாகத்துடன் இருந்தோமோ அவ்வளவு உற்சாகத்துடன் இருந்தோம். நாடக முடிவில் “கல்லார்க்கும் கற்றவர்க்கும” பாடும் பொழுது இதற்கு முக்கியக் காரணம் இவ்விடம் உஷ்ணம் என்பது சிறிதுமின்றி, குளிர்ச்சியாயிருந்ததே என்பதற்குச் சந்தேகமில்லை. இக்காரணம்தான் போலும், இங்கிலாந்து முதலிய தேசங்களில், ஆக்டர்கள் வருஷம் முழுவதும், ஒரு நாள்கூட விடாது இரவில் நாடகமாடுவதற்கு இடங்கொடுப்பது. அவர்கள், நமது தேசத்துக்கு வந்து, திருநெல்வேலி போன்ற ஜில்லாவில், மே - ஜூன் மாதத்தில் இரண்டு இராத்திரி ஒன்றாய் நடித்தால் நாம் இங்கு படும் கஷ்டம் அவர்களுக்குத் தெரியும்.
கடைசி தினம் சாரங்கதர நாடகம் ஆடினவுடன் நாடகசாலையில் வெந்நீர் கிடைக்காமல், ஆக்டர்களெல்லாம் அங்கிருந்து நாங்கள் தங்கியிருந்த பங்களாவிற்கு எங்கள் வேஷத்துடன், ஒவ்வொருவரும் ஒரு போர்வையைப் போர்த்துக்கொண்டு, நிலவு வெளிச்சத்தில் வேடிக்கையாய்ச் சந்தோஷமாய்ப் பேசிக் கொண்டு நடந்து சென்றோம். இவ்வாறு அன்று நாங்கள் சந்தோஷமுள்ள மனமுடையவர் களாயிருந்ததற்கு முக்கியக் காரணம், சபைக்கு நஷ்டமில்லாத படி, தெலுங்கு நாடகத்தினாலுண்டான நஷ்டத்தையும் நீக்கிச் செலவுக்கும் வரவுக்கும் சரியாகப் போகும்படி அன்று நல்ல தொகை வசூலானதுதான் என்பதற்குச் சந்தேகமில்லை.
மறுநாள் காலை எங்கள் சபைக்குப் பிரசிடெண்டாயிருந்த வி. கிருஷ்ணசாமி ஐயர், நாங்களிருந்த பங்களாவிற்கு வந்தார். இவர் இச்சமயம் ஒத்தியில் இருந்தும், முதல் இரண்டு நாடகங்களுக்கு ஏதோ அசந்தர்ப்பத்தால் வர முடியாமற் போயிற்று. கடைசி நாடகத்திற்கு வந்திருந்தார். தான் முன்னாளிரவு பார்த்த நாடகத்தைப்பற்றிச் சிலாகித்துக் கூற வேண்டிய இடங்களில் சிலாகித்துக் கூறி, குறையாயிருந்த இடங்களிற் குறைகளை எடுத்துக் கூறினார். இவரது சுபாவம் குறைகளை மறைக்காது, எதற்கும் அஞ்சாது எடுத்துக் கூறும் சுபாவம் என்பதை இவரைத் தெரிந்த அனைவரும் அறிவார்கள். குறையாகக் கூறிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகமிருக்கிறது. சாரங்கதர நாடகத்தில் நான் எழுதியபடி, சித்ராங்கியானவள், சாரங்கதரன் தன் அறைக்கு வரப் போகிறான் என்று அறிந்தவுடன், அங்கிருந்த கண்ணாடியின் எதிராகப்போய் நின்று, தன் அலங்காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு, “நான் அழகாயிருக் கிறோனா?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்ளுகிறாள். “இவ்வாறு ஒரு ஸ்திரீயும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள மாட்டாள், இது தவறு!” என்று வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் வாதித்தார். நான் இதற்கு எத்தனையோ எனக்குத் தோன்றிய நியாயங்களை எடுத்துக் கூறியும், தான் சொன்னதுதான் சரியென்று பிடிவாதமாகச் சொன்னார். அதன்மீது சர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) என்னும் கிரந்த கர்த்தா கெனில்வொர்த் (Kenilworth) என்னும் நவீனத்தில் (Novel) கதாநாயகி, இவ்வாறு சொன்னதாக எழுதியிருக்கிறார் என்று எடுத்துக் கூறினேன். அதன் பேரில் கொஞ்சம் யோசித்துவிட்டு, “நீ சொல்வது சரிதான்!” என்று ஒப்புக்கொண்டார்.
இதை நான் இங்கு எழுதியதன் காரணம், அவருடன் வாதாடி வென்றேன் என்னும் கர்வத்தினாலன்று. சிறந்த புத்திமானாயிருந்தும், உன்னத பதவியை வஹித்தவராயிருந்தும், தான் கூறியது தவறு என்று பட்டவுடன், அதை ஒப்புக்கொள்ளும்படியான சிறந்த குணம் இவரிடமிருந்தது என்பதை எனது இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே இதை இங்கு எடுத்தெழுதலுற்றேன். அதுவரையில் நாம் கூறியதை எப்படியாவது ஸ்தாபிக்கவேண்டும் என்னும் பிடிவாத குணமுடையவனாயிருந்த நான், இதன் பிறகு, இப் பெரியாருடைய இச் சிறந்த குணத்தைக் கடைப்பிடித்து நடக்கத் தீர்மானித்து, அது முதல் இதுவரையில், அதன்படி நடக்க முயன்று வருகிறேன் என்பதை என்னுடன் நெருக்கமாய்ப் பழகிய நண்பர்கள் அறிவார்களென நினைக்கிறேன். இதனால் நான் மிகவும் பயனடைந்தேன். ஆகவே இதை வாசிக்கும் என் இளைய நண்பர்களும் இதைக் கைப்பற்றி நடப்பார்களாக என்று கருதி இதை எழுதலானேன்.
எல்லாம் பேசி முடித்தான பிறகு, அவர் எங்களிடம் விடை பெற்றுத் தான் இருந்த வீட்டிற்குப் போகப் புறப்பட்ட பொழுது, பங்களாவின் கேட் (Gate) வரையில் அவரை வழி விட்டு வர அவருடன் நான் போனபொழுது, தெலுங்கு நாடகத்தினால் சபைக்கு அதிக நஷ்டம் உண்டானதென்பதைக் கேட்டறிந்த அவர், மொத்தத்தில் எப்படியிருக்குமென என்னைக் கேட்க, “எல்லாம் சரியாகி விடும்; நேற்று வந்த தொகையானது அந்த நஷ்டத்தை யெல்லாம் அடைத்துவிடும். ஒரு முப்பது நாற்பது ரூபாய்தான் குறையும் போலிருக்கிறது. அது ஒரு பெரிதல்ல” என்று பதில் உரைத்தேன். அவர் ஒன்றும் பேசாது புறப்பட்டுப் போய்விட்டார். அவர் போன ஒரு மணி நேரத்திற்கெல்லாம் அவரிடமிருந்து எங்கள் சபைக் காரியதரிசிக்கு ஒரு நிரூபம் வந்தது. அதில் ஒரு 50 ரூபாய்க்கு ஒரு செக்கை வைத்து “சபைக்கு நேரிட்ட நஷ்டத்தை அடைக்க” என்று ஆங்கிலத்தில் ஒரு துணுக்கு எழுதியிருந்தது. “தினைத்துணை நன்றி செய்யினும், பனைத் துணையாகக் கொள்வர் பயன் தெரிவார்” என்ற திருக் குறளின்படி, அந்நன்றியை நாங்கள் அனை வரும் மிகவும் பாராட்டினோம். அவர் அனுப்பிய ரூபாய் 50, அவருக்கு ஒரு பெரிதல்ல; எங்கள் சபைக்கும் அது ஒன்றும் அதிகமில்லை ; அவர் அதை உதவிய விதமும், அதன் பின் இருந்த ஹிருதயமும் எங்களைப் பூரிக்கச் செய்தது.
அவரைப்பற்றி இன்னொரு விஷயம் இங்கு எழுத வேண்டியவனாயிருக்கிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், அவரை ஏதோ முகஸ்துதி செய்கிறேன் என்று எண்ணாதிருக்கும்படி வேண்டுகிறேன். அனேகம் வருடங்களுக்கு முன் இறந்தவரை இப்பொழுது முகஸ்துதி செய்து நான் அடையப்போகிற பலன் என்ன? ஆயினும் அப்பெரியாருடைய அரிய பெரிய குணங்களுக்கு ஈடுபட்ட மனத்தினனாய் அவருக்கு நான் செலுத்த வேண்டிய கடமையைக் கொஞ்சம் கழிக்க முயலுகிறேன்.
காலையில் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது தான் இருக்குமிடத்தில் எங்களையெல்லாம் சாயங்காலம் டீ (Tea) சாப்பிட அழைத்தார். நாங்கள் அப்படி அழைத்ததற்காக அவருக்கு வந்தனம் செய்து,"நாங்கள் வருவதற்கில்லை ; எங்களையெல்லாம் இன்று சாயங்காலம் செக்ரடேரியட் ஆபீசில் இருக்கும் எங்கள் சினேகிதர்கள் டீ (Tea) சாப்பிடச் சாயங்காலம் அழைத்திருக்கிறார்கள்; அங்கு போவதாக ஒப்புக்கொண்டோம்.’ என்று பதில் உரைக்க, “நமது சபையை யெல்லாம் அவர்கள் வரும்படிக் கேட்டிருந்தால், நீ எனக்கேன் தெரிவிக்கவில்லை? அப்படித் தெரிவிக்காதது தவறு! நான் சபையின் பிரெசிடென்ட் என்பதை மறந்தீர்கள் போலும்!” என்று சிரித்துக்கொண்டே, எங்கள் மீது கோபித்து மொழிந்து, அன்று சாயங்காலம் பார்ட்டி (Party) க்குத் தானும் வருவதாகத் தெரிவித்து, “நீங்கள் எல்லாம் அங்கு வருமுன் நான் அங்கு போய்ச் சேரப் போகிறேன். அப்பொழுதுதான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்!” என்று சொல்லி, அப்படியே அங்கு வந்து சேர்ந்தார். வந்ததுமன்றி, எல்லோருடனும் வேடிக்கையாய்ப் பேசிக்கொண்டிருந்து விட்டு, எங்களுக்கு விருந்தளித்த செக்ரடேரியேட் நண்பர்களுக்கு எங்கள் சபையின் சார்பாக வந்தனம் அளித்தார். நான் எப்பொழுதாவது, என் இளைய நண்பர்களுடன் இம்மாதிரிக் கலக்க வேண்டி வந்தால், நான் மூத்தவன், அவர்களைவிட அந்தஸ்துடையவன், அவர்களுடன் சரிசமானமாகக் கலப்பதா என்னும் துர் எண்ணம் எனக்குத் தோன்றினால், இப்பெரியார் நடத்தை என்னும் பெருந்தடி கொண்டு, அதன் மண்டையில் அது தலை யெடுக்கவொட்டாமல் போடுவது வழக்கம்; பெரியோருடன் நாம் பழகுவதனால், நாம் பெறும் முக்கியமான நலம், இத்தகைய புத்திமதிகளை அவர்கள் சொல்லாமற் சொல்வதேயாம்.
அன்று சாயங்காலம், ஒத்தியில் எங்கள் நண்பர்கள் எங்களுக்கு, அவர்களுடைய டெனிஸ் கோர்ட்டில் (Tennis court) கதிரவன் குடதிசையில் மூழ்குமுன் தன் ஒள்ளிய கிரணங்களால், மலைப் பிரதேசமெங்கும் அழகுறச் செய்யும் சாயங்காலத்தில் கொடுத்த சிற்றுண்டி உபசரணையும், நாங்கள் இரண்டு மணி நேரம் வேடிக்கையாய்ப் பேசிக் காலங்கழித்ததும், முடிவில் வி. கிருஷ்ணசாமி ஐயர், எங்கள் சபையின் சார்பாகப் பேசிய வார்த்தைகளும், என் மனத்தில் இன்னும் குடிகொண்டிருக்கின்றன. இந்த வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் ‘கடின சித்தமுடையவர்’ என்று சிலர் கூறக் கேட்டிருக்கின்றேன். அக்கடினமான வார்த்தைகளுக்குப் பின் இருந்த வெண்ணெயைப் போல் இளகிய சுத்தமான ஹிருதயத்தை அவர்கள் அறியவில்லை போலும்!
எங்கள் சபை ஒத்திக்குப் போயிருந்த கதையை முடிக்கு முன், அன்றிரவு நடந்த ஒரு சிறு கதையைக் கூறுகிறேன். அன்றிரவு நாங்கள் எல்லாம் போஜனங் கொள்வதற்கு வெகு நாழிகையாய் விட்டது. நாங்கள் உடனே புறப்பட்டு மாட்டு வண்டிகளில் ஏறி (அக்காலத்தில் மோட்டார் வண்டிகள் அதிகமாய்க் கிடையாது) மேட்டுப்பாளையம் வரையில் வந்து ரெயில் ஏற வேண்டியவர்களாயிருந்தோம். அதற்காக 16 வண்டிகளோ அதிகமோ, உத்தரவு செய்திருந்தோம். எங்களையும் எங்கள் சாமான்களையும் கொண்டு போக, நாழிகையாய் விட்டது. சீக்கிரம் புறப்பட வேண்டுமென்று, வண்டிகளைக் கட்டச் சொன்னால், அத்தனை வண்டிக்காரர்களும், (எந்த மதுவிலக்குச் சங்கத்திலும் அங்கத் தினராய்ச் சேராதவர்களானபடியினால்) நன்றாய்க் குடித்து விட்டு, படுக்கையை விட்டெழுந்திருக்கவில்லை. நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்! அதட்டிப் பார்த்தோம்! ஒன்றும் பயன்படவில்லை! இதென்ன கஷ்டகாலம் என்று நாங்கள் எல்லோரும் திகைத்து நிற்கையில், எங்கள் பிரயாண ஏற்பாடுகளை யெல்லாம் பார்த்து வந்த எனது நண்பர் பி.எஸ். தமோதர முதலியார், ஒரு யுக்தி செய்தார்; அவர் சாதாரணமாக ஆங்கில உடையே அப்பொழுது அணிவது வழக்கம்; அதன் பேரில், வெள்ளைக்காரர்கள் அணியும் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு, கையில் ஒரு சவுக்கை (Riding whip) எடுத்துக் கொண்டு, அந்த வண்டிக்காரர்கள் உறங்கிக்கொண்டிருக்குமிடம் போய், வெள்ளைக்காரர்கள் பேசுவது போல் தன் குரலை மாற்றி, “ஏ! கள்தைங்கோ ! எள்ந்தி கீரைங்களா இல்லியா?” என்று கூவித் தன் சவுக்கினால் இரண்டு மூன்று பெயர் முதுகில் வைத்தார் நன்றாக! உடனே அடிபட்டவர்களெல்லாம் தங்கள் முதுகையும், கண்ணையும் துடைத்துக்கொண்டு, விரைவில் எழுந்து, ‘அரேரேரே! தொர்ரே ஒச்சினார்ரா!’ (துரை வந்து விட்டாரடா!) என்று கூவிக் கொண்டு மற்றவர்களையும் எழுப்பி ஐந்து நிமிஷத்திற்குள், மாடுகளை யெல்லாம் வண்டிகளில் பூட்டி நிறுத்தி விட்டார்கள்! அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பதினுண் மையும், வெள்ளைக்காரத் தொப்பிக்கு இவ்வளவு மகிமை இருக்கிறதென்பதையும் அன்று கண்டேன்!
இன்னொரு சிறுகதை! மறுநாட் காலை எங்கள் 16 வண்டிகளும் வரிசையாக மேட்டுப்பாளையம் வரும் பொழுது அங்கிருந்த நாட்டுப்புறத்தார், ‘இது யாரடா இத்தனை வண்டிகளில் வருகிறது!’ என்று வியந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், “இது யாரடா இத்தனை வண்டிகளில் வருவது?” என்று கேட்டான். அதன்மீது, எனது நண்பர் சி. ரங்கவடிவேலுடன் ஒரு வண்டியில் உறங்கிக்கொண்டிருந்த நான், இக் கேள்விக்கு என்ன பதில் கிடைக்கிறது கேட்போம் என்று, தலையை நிமிர்த்திக் கேட்டேன். அக் கேள்விக்கு மற்றொருவன், “யாரோ, மகாராஜாவின் அரண்மனையைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும்!” என்று பதில் உரைத்தான். உடனே என் மனமெனும் தர்மாமிடர் (Thermometer) மூன்று டிகிரி (degree) மேலே போச்சுது! உடனே பக்கத்திலிருந்த இன்னொருவன், “இல்லையடா! இவர்கள் யாரோ கூத்தாடிகள்!” என்று சொன்னான். உடனே என் தர்மாமிடர், பத்து டிகிரி, திடீரென்று இறங்கி விட்டது.
இந்த 1906ஆம் வருஷத்தில்தான் எங்கள் சபையார் சாயங்காலத்தில் நாடகமாடுவதை ஆரம்பித்தனர். இதற்கு முன்பெல்லாம், இரவில் 9 மணிக்கு ஆரம்பித்து, மறு நாட்காலை சுமார் இரண்டு மணிவரையில் ஆடுவது வழக்கமாயிருந்தது. இராத்திரி ஆடுவதனால் ஆக்டர்களுக்கும் கஷ்டம்; நாடகம் பார்க்க வரும் ஜனங்களுக்கும் கஷ்டமாயிருந்தது. ஆக்டர்கள் 9 மணிக்கு நாடகம் ஆரம்பிக்க வேண்டுமென்றால், 5 மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டு வேஷம் பூண ஆரம்பித்து, 9 மணிக்கு மேல் 4 அல்லது 5 மணி சாவகாசம் மேடையின் மீது ஆடிவிட்டு, பிறகு வேஷத்தைக் களைய ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிவந்தது. அன்றியும் 3 மணிக்கு வீட்டிற்குப்போனால் சரியாகக் தூக்கம் வருவதில்லை . இப்படி விழிப்பதனால், மறுநாள் எல்லாம் உடம்பு மிகவும் ஓய்ச்சலாயிருக்கும்; நாடகம் பார்க்க வருபவர்களுக்கு இவ்வளவு கஷ்டமில்லா விட்டாலும், அவர்களும் இரவில் நித்திரை நீக்கவேண்டி யவர்களாயிருக்கிறார்கள்; இரண்டு மணி வரையில் நாடகம் பார்த்து விட்டு வீட்டிற்குப் போனால் அவர்களுக்கும் உடனே தூக்கம் வருவது கடினம். இத்தகைய கஷ்டங்களை யெல்லாம் கருதி இதற்கு ஏதாவது யுக்தி செய்ய வேண்டுமென்று ஸ்ரீனிவாச ஐயங்காரும் நானும் பலமுறை யோசித்ததுண்டு. இரவு இரண்டு மூன்று மணி வரையில் நடக்கும் நாடகங்களைக் குறுக்கி ஒருமணிக்கெல்லாம் முடிக்கும்படி பிரயத்தனம் செய்து பார்த்தோம்; அதிலும் பயன்படவில்லை; சாயங்காலங்களில், இங்கிலாந்து முதலிய தேசங்களில் மேடினீ (Matinee) நாடகங்கள் நடைபெறுவ தாகக் கேள்விப்பட்டிருந்தோம்; ஆயினும் அதன்படி இந்தியாவில் வைத்துக் கொண்டால், ஜனங்கள் வருவார்களோ என்பது பெரும் சந்தேகமாயிருந்தது. இப்படியிருக்கும் தருவாயில், பாரசீகக் கம்பெனியார் ஞாயிற்றுக் கிழமைகளில் சாயங்காலத்தில் சில நாடகங்கள் ஆடினார்கள். அதற்குச் சாதாரணமாக ஜனங்கள் வரத் தலைப்பட்டதைக் கண்டோம். அவர்களுக்குச் சாயங்காலங்களில் வரும் ஜனங்கள், நமக்கு ஏன் வரக்கூடாது என்று தைரியமடைந்த வர்களாய், இவ்வருஷம் ஒரு நாடகம் சாயங்காலத்தில் ஆடிப் பார்ப்போம் என்று யோசித்தோம். இதை நாங்கள் எங்கள் நிர்வாக சபையில் முதலில் பிரேரேபணை செய்த பொழுது, அவர்களில் பெரும் பாலோர் ஆட்சேபித்தனர். மெல்ல அவர்களுடன் பேசி, ஒரு முறை முயன்று பார்ப்போம், சரிவராவிட்டால் விட்டு விடுவோம் என்று சொல்லி, இவ்வருஷம் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி எனது “காதலர் கண்கள்” என்னும் நாடகத்தை, 6 மணி முதல் 9 மணி வரையில் ஆடுவதாகப் பிரசுரம் செய்து அப்படியே நடத்தினோம். இப் புது வழக்கம் நாடகபிமானிகளுக்கு முதலில் ஏதோ ஒரு மாதிரியாகத் தோன்றியபோதிலும், வந்தவர்களெல்லாம் இதனாலுண்டான சவுகரியத்தைக் கண்டு, இதுவே நல்ல மாதிரி என்று ஒப்புக்கொண்டனர். முன்பு ஆட்சேபித்த ஆக்டர்களும், இதனால், தங்களுக் குண்டான சிரமக் குறைவை அனுபவித்தவர்களாய், இப்புதிய வழக்கத்திற்கு இணங்கினர். இம்மாதிரி நாங்கள் இரண்டு மூன்று நாடகங்கள் சாயங்காலத்தில் நடத்தின பிறகு இராக்காலத்தில் வரும் ஜனங்களைவிட சாயங்கால நாடகங்களுக்கு ஜனங்கள் அதிகமாய் வர ஆரம்பித்தனர்! இதற்கு முக்கியக் காரண்ம், எங்கள் சபையின் நாடகங்களுக்கு வருபவர்கள் கற்றறிந்த உத்யோகஸ்தர்கள் முதலியோரே. பகலெல்லாம் வேலை செய்து விட்டு, இராத்திரி ஒன்பது பத்து மணிக்கு மேல் தெருக்கூத்துப் பார்க்கப் போய் அக்கூத்தை விடிய விடியக் காணும் பாமர ஜனங்களல்ல. ஆகவே, உத்தியோகஸ்தர்கள் முதலியோர், சாயங்கால ஆட்டத்தை ஒன்பது மணி வரையில் பார்த்துவிட்டு, வீட்டிற்குப் போய் 10 மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு, உறங்குவதனாலுண்டான சௌகர்யத்தை அறிந்தவர்கள், பிறகு இராத்திரி நாடகங்களென்றால் வெறுக்க ஆரம்பித்தனர். இதன் பிறகு சீக்கிரத்தில் நாங்கள் இரவு நாடகமென்பதையே அடியுடன் விட்டு, இத்தனை வருஷ காலமாக, சாயங்காலத்தில்தான் ஆடி வருகிறோம். இதற்காக முக்கோடி ஏகாதசி அல்லது சிவராத்திரியில் நாடகம் வைத்துக்கொண்டால் மாத்திரம், இராத்திரியில் இப்பொழுது நாடகமாடுகிறோம். சென்னையிலுள்ள கற்றறிந்த நாடகாபி மானிகளுக்கு இவ்வழக்கத்தை நாங்கள் சகஜப்படுத்திய போதிலும், வெளியூர்களில் நாங்கள் போய் ஆடும்பொழுது, இந்த ஜபம் அங்கு சாயவில்லை! அங்கெல்லாம், “சாயங் காலத்தில் நாடகமாடுவதாவது! நாடகம் என்றால் இராத்திரியில்தான் ஆடவேண்டும்!” என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். அவர்களும் மெல்ல மெல்ல, நாளாவர்த்தத்தில் இவ்வழியைக் கடைப்பிடிப்பார்களென்று நம்புகிறேன்.
இவ்வருஷம் நான் “சபாபதி” என்னும் ஒரு சிறு நாடகத்தை எழுதினேன். இதை நான் எழுத நேர்ந்த விதம் என் நண்பர்களுக்குக் கொஞ்சம் நகைப்பை உண்டாக்கு மாதலால், அதை இங்கெழுதுகிறேன். எனது பால்ய நண்பருக்கு, “சபாபதி” என்று கோச்மான் இருந்தான். அவனை அவர் கூப்பிடும் போதெல்லாம், “சபாபதி” என்று அந்த ப என்னும் அட்சரத்தை அதிகமாய்த் தொனித்துக் கூப்பிடுவார். “சபாபதி” என்று, அவரை ஏளனம் செய்யும் பொருட்டு, நானும் அவரைப்போல் “சப்பாபதி” என்று கூப்பிடுவேன். நான் இவ்வாறு அழைக்கும் போதெல்லாம், அவர் வீட்டிலிருப்பவர்களெல்லாம், குழந்தைகள் வேலைக் காரர்கள் உட்பட, நகைப்பார்கள்; எனது நண்பரும் சிரிப்பார். ஆகட்டும், இப்பெயர் வைத்து ஒரு நாடகம். எழுதுகிறேன் பார், என்று சொல்லி சபாபதி என்ற ஒரு வேலைக் காரனுடைய நாடகத்தை எழுதத் தலைப்பட்டேன். அன்றியும் எனது நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் நரசிம்மன் என்ற ஒரு ஐயங்கார் பிள்ளை வேலையாளாக இருந்தான். அவன் வாஸ்தவத்தில் கொஞ்சம் புத்திசாலியாக இருந்த போதிலும், மேற்பார்வைக்கு மட்டியைப் போல் தோற்றுவான். (இவன் இன்னும் உயிருடன் இருக்கிறானென நம்புகிறேன். அவனைப் பற்றி இவ்வாறு நான் எழுதுவதற்காக அவன் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.) நானும் எனது நண்பரும் சீவரம் முதலிய ஊர்களுக்குப் போகும் போதெல்லாம் இவனை அவர். அழைத்துக் கொண்டு வருவார். இவனது செய்கைகள் எங்களுக்குப் பன்முறை நகைப்பை விளைவித்திருக்கிறது. இவனது செய்கைகள்தான், நான் எழுதிய சபாபதி நாடகத்தில், வேலைக்கார சபாபதியின் பாத்திரத்திற்கு அஸ்திவாரமாயது. அன்றியும் செர்வான்டிஸ் (Cervantes) என்னும் ஸ்பெயின் தேசத்து ஆசிரியர் எழுதிய டான் குவிக்சோட் (Don Quixote) என்னும் கதையில், கதாநாயகனுக்கு சான்கோ பான்சா (Sancho Panza) என்னும் விகடனான ஒரு வேஷக்காரனைப் பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்களில் பலர் படித்திருக்கலாம்.
இதுபோலவே ஓர் ஆங்கில நவீனத்தில் ஹான்டி ஆன்டி என்னும் மூடவேலையாளைப் பற்றியும் எனது நண்பர்கள் படித்திருக்கலாம். இவைகளையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து, “சபாபதி” வேலையாளைச் சிருஷ்டித்தேன். மேலும், நகைப்பு உண்டாக்கத்தக்க, வேலைக்காரர்கள் செய்யும் தப்பிதங்களை யெல்லாம் கவனித்து, இந்தச் ‘சபாபதி’யின் தலையில் சுமத்தினேன். இவ்வாறே படிப்பில்லாத வாலிபர்கள் செய்யும் குற்றங்களையும் குறும்புகளையும் சேர்த்து சபாபதி முதலியாரை உண்டாக்கினேன். சில முதலியார் பிள்ளைகள் சரியாகப் படிக்காதபடி, தங்கள் வீட்டில் தாய் தந்தையர்களை ஏமாற்றும் விதத்தையும் கவனித்து, இதையெல்லாம் சேர்த்து, ‘சபாபதி’ என்னும் ஒரு சிறு பிரஹசனமாக (Farce) எழுதினேன். இதைப்பற்றி நான் இவ்வளவு விவரமாக எழுதுவதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், இந்தப் பிரஹசனத்தை வரவேற்று எனது நண்பர்களில் அநேகர், ‘இந்தச் சபாபதியை எங்கே பிடித்தாய்?’ என்று என்னைப் பன்முறை கேட்டிருக்கின்றனர். அன்றியும் இச்சிறு நாடகத்தைப் பார்த்துச் சிரித்தவர்களெல்லாம், யாராவது வேலைக்காரன் தவறிழைத்தால் இவன் என்ன சபாபதியோ என்றும், இங்கிலீஷ் பேசுவதில் யாராவது தவறாகப் பேசினால், இவர் என்ன சபாபதி முதலியாரோ என்றும் கேட்பது சகஜமாய்விட்டது. தமிழ்நாட்டில், கற்றறிந்த இல்லங்களில் சபாபதியை அறியாதார் இல்லையென்று நான் ஒருவாறு கூறலாம். இதுதான் நான் முதன் முதல் எழுதிய பிரஹசனம். இது எல்லோருக்கும் விடா நகைப்பைத் தந்து, களிக்கச் செய்தமையால், சபாபதி இரண்டாம் பாகமென்றும், சபாபதி மூன்றாம் பாகமென்றும் பிறகு எழுதினேன். தற்காலம் நான்காம் பாகமென்றும் அச்சிட்டிருக்கிறேன். இந்தச் சபாபதி, ஒரு சிறு பிரஹசனமாயிருந்த போதிலும், 120 முறைக்குமேல், என் அனுமதியின்மீது ஆடப்பட்டிருக்கிறது; என் அனுமதியினின்றியும் சில முறை ஆட்டப்பட்டிருக்க வேண்டுமென்பதற்குச் சந்தேகமில்லை.
இந்தச் சபாபதி நாடகத்தில் வேலைக்கார சபாபதியின் பாகத்தை எனது பழைய நண்பர் தாமோதர முதலியார்தான் இந்திய நாடக மேடையை விட்டு நீங்குமளவும், மிகவும் விமரிசையாக ஆடி வந்தார். இந்தப் பாகத்தை ஆடுவதில் முக்கியமான . கஷ்டம் என்னவென்றால், முகத்தில் கொஞ்சமாவது புத்தியிருப்பதாகப் பிறர் அறியக் கூடாததேயாம்; கொஞ்சமாவது புத்தியுடையவன்போல் நடித்தாலும் இப்பாத்திரம் ரசாபாசமாகும். தாமோதர முதலியாருக்குப் பிறகு நண்பர் சி. பாலசுந்தர முதலியார் இதை நன்றாக நடித்து வந்தார். சபாபதி முதலியாரின் பாகத்தை அநேக வருஷங்களாக நான் நடித்து வருகிறேன். நான் எனது சிற்றறிவைக்கொண்டு சிருஷ்டித்த அநேக பாத்திரங்களில், மனோஹரனைப் போல் சபாபதி பாத்திரமும் நெடுநாள் ஜீவித்திருக்குமென நினைக்கிறேன்.