நாடக மேடை நினைவுகள்/27ஆவது அத்தியாயம்

27ஆவது அத்தியாயம்

தற்கு மறு வருடமாகிய 1926ஆம் ஆண்டில் எனது “புத்தாவதாரம்” எனும் நாடகமானது எங்கள் சபையில் நடிக்கப்பட்டது. இது நான் எழுதியவற்றுள்ளும் நடித்தவற்றுள்ளும் ஒரு முக்கியமான நாடகம் என்று நான் மதிக்கிறபடியால், இதைப்பற்றிச் சற்று விரிவாக எழுத வேண்டியவனாயிருக்கிறேன். 1908ஆம் ஆண்டில் நான் இலங்கைக்குப் போனது முதல், புத்தருடைய ஜீவித சரிதை என் மனத்தைக் கவர்ந்தது. அம்முறை அவர் பிறந்த தினமாகிய விசாக பௌர்ணமி அன்று, அவர் பிறந்த தினக் கொண்டாட்டத்தைக் கொழும்பிலுள்ள பௌத்த மதத்தினரெல்லாம் நடத்தியது என் மனத்தை மிகவும் கவர்ந்தது. அதன் பிறகு அம் மஹானுடைய சரித்திரத்தை நாடகமாக எழுத வேண்டுமென்று தீர்மானித்து, அவரது சரித்திர சம்பந்தமாக, எனக்குக் கிடைக்கக்கூடிய புஸ்தகங்களை யெல்லாம் படித்து வந்தேன். அதன் பிறகு மூன்று முறை இலங்கைக்கு எங்கள் சபை போனபோதெல்லாம், புத்தமதஸ்தர்களுடன் பேசி அநேக விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அங்குள்ள புத்தாலயங்களை யெல்லாம் தரிசித்து வந்தேன். பிறகே அக் கதையை நாடக ரூபமாக எழுத ஆரம்பித்தேன். அங்ஙனம் நாடக ரூபமாக எழுதியதில் எனக்கு நேரிட்ட கஷ்டமென்னவென்றால், அவரது சரித்திரத்தில் எந்தப் பாகங்களைச் சுருக்கி, நான்கு மணி நேரத்திற்குள் ஆடத்தக்க நாடகமாய் எழுதுவது என்பதேயாம். அதன்மீது அவரது சரித்திரத்தில் முக்கியமான அம்சங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு அவைகளை நாடகம் பார்க்கும் ஜனங்களை ரமிக்கத்தக்க வழியில் காட்சிகளாகப் பிரித்து என் சிற்றறிவிற்குத் தோன்றியபடி ஒருவாறு 1918ஆம் வருஷத்தில் எழுதி முடித்தேன். நான் எழுதிய நாடகங்களுக்குளெல்லாம் அமலாதித்யனுக்குப் பிறகு, இந்த புத்த அவதாரம் எனும் நாடகம்தான் எனக்கு மிகவும் சிரமம் கொடுத்தது. ஆயினும் அந்தச் சிரமத்தின் பலனைப் பெற்றேன் என்றே நான் கூறவேண்டும். இதனால் நான் அடைந்த முக்கியமான பலன் என்னவென்றால், அப்புஸ்தகத்தின் முகவுரையில், ஆங்கிலத்தில் நான் எழுதியபடி, இப்பெரியாரது சரித்திரத்தில் பல விஷயங்களை ஆராய்ந்தறிந்ததனால், அவை என் குணத்தையே மாற்றின என்று நான் கூறவேண்டும்; அதற்கு முன் என்னிடம் பரவியிருந்த கோபம், சுய நன்மையை நாடுந்தன்மை, பொறாமை, பேராசை முதலிய பல துர்க்குணங்களைப் பெரிதும் போக்க வழி கற்றேன். மேற்சொன்ன துர்க்குணங்கள் முதலாயின முற்றிலும் என்னை விட்டகன்றன என்று இங்கெழுத எனக்கு வல்லமையில்லை; ஆயினும் அவைகளெல்லாம் பெரும்பாலும் நீங்கின என்று உறுதியாய்க் கூறுவேன். இதைப்பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்கள் யாருக்காவது சந்தேகமிருக்குமாயின் அவர்களை இது செய்யும்படி வேண்டுவேன். அதாவது “ஆசியாக் கண்டத்தின் ஜோதி” என்று ஸர் எட்வின் ஆர்னால்ட் என்பவர், அவரைப்பற்றிக் கூறிய சரித்திரத்தை முற்றிலும் படித்துவிட்டுப் பிறகு, அதனால் அவர்களுடைய மனமானது முன்பில்லாத தூய்மையையும் சாந்தியையும் கொஞ்சமாவது பெற்றதா இல்லையா என்று எனக்குச் சொல்லட்டும் என்பதேயாம்.

மேற்கண்ட வாக்கியத்தை எழுதுங்கால் புத்தரைப்பற்றி ஒரு நினைவு எனக்கு ஞாபகம் வருகிறது. ஸர் எட்வின் ஆர்னால்ட் என்பவர், மேற்சொன்னபடி அவர் சரித்திரத்தை, “ஆசியாக் கண்டத்து ஜோதி” என்று பெயரிட்டு அச்சிட்டபொழுது, சில இதர மதஸ்தர்கள், “ஆசியாக் கண்டத்தில், அவரைவிடப் பெரிய மஹான்கள் உதிக்கவில்லையா? இவரை மாத்திரம் ஆசியாக்கண்டது ஜோதி என்று புகழ்ந்து கூறியது சரியல்ல” என்று கடிந்துகொண்டார்களாம். இவ்விஷயத்தைப் பற்றி என் அபிப்பிராயத்தை வெளியிடும் வண்ணம் இப் புத்தாவதார நாடகத்திற்கு, ஆங்கிலத்தில் “லார்ட் புத்தா, ஆர் லைட் ஆப் தி யூனிவர்ஸ்” என்று பெயரிட்டேன். இம் மஹானுடைய பெருமையை, சில வாக்கியங்களில் எழுத விரும்புகிறேன். இவரது கோட்பாடுகளை, உலகில் ஐந்தில் ஒரு பங்கு ஜனங்கள் இப்பொழுதும் பின்பற்றி வருகின்றனர்; இவரது ஜனன பூமியாகிய இந்தியாவில் இவரது மதம் நிலைக்காவிட்டாலும் இத் தேசத்தின் முக்கிய மதமாகிய ஹிந்து மதத்தையே மிகவும் மாறச் செய்திருக்கிறது. “அஹிம்சையே பரம தர்மம்” என்பதைக் கடைப்பிடிக்கச் செய்து இவர் காலத்துக்கு முன் சாதாரணமாக மாம்சபட்சணம் செய்துகொண்டிருந்த பிராம்மணர்களையும் அதை விடும்படி செய்தது. இவரது அவதாரத்தை, மஹாவிஷ்ணுவின் அவதாரங்களிலொன்றாகச் சேர்த்துக் கொள்ளும்படி செய்தது. தற்காலம் மஹாத்மா காந்தி அவர்கள் மேற்பூண்டு ஒழுகும் அஹிம்சா தர்மமானது, புத்தரிடமிருந்து வந்ததேயாம் என்பதற்கு கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இதனுண்மையை அறிய வேண்டின் புத்தரது நூற்றுக்கணக்கான ஜாதகக் கதைகளைப் படித்தால் ஸ்பஷ்டமாகும். “நீ அச்சிட்டிருக்கும் புஸ்தகங்களுள், எதை வாங்கச் சொல்லுகிறாய்?” என்று என்னை யாராவது கேட்பார்களாயின், “இந்தப் புத்தாவதாரத்தை வாங்குங்கள்” என்பேன்.

இப் புத்தகத்தை நான் எழுதியபொழுது காட்சி காட்சியாக அப்போதைக்கப்போது வாசித்து வந்த எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு யாது காரணம் பற்றியோ, அதில் தான் நடிக்க மனமில்லாததாக எனக்குத் தெரிவித்தார். நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை. அதன்பேரில் அச்சிடுமுன் நடிக்க வேண்டும் என்னும் என் வழக்கத்தையும் ஆசையையும் விட்டேன். அதன் பிறகு நான் அதை 1918ஆம் வருடம் அச்சிட்டேன். மேற்கூறிய படி, அவர் உயிருடன் இருந்தவரையில் அவர் மனங் கோணாதபடி அதில் நடிக்கும்படி நான் நிர்ப்பந்திக்கவில்லை. பிறகு 1925இல் இதைப்பற்றி எனது நண்பர் கே. நாகரத்தினம் ஐயருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர் தான் யசோதரையாக நடிக்க இஷ்டப்படுவதாகக் கூறினார். அதன்பேரில் எங்கள் நிர்வாக சபையில் இதை ஆடலாமெனப் பிரேரேபித்தேன். அச்சபையார் அப்படியே ஆட வேண்டுமெனத் தீர்மானித்தார்கள்; ஒன்றிரண்டு பெயர்கள் மாத்திரம் இந்நாடகம் மத விஷயமாயிருக்கிறதே யொழிய, நாடக மேடையில் ஜனங்களை ரமிக்கச் செய்யுமா என்று சந்தேகப்பட்டனர்; அவர்களுக்கு, “ஆடிப் பார்க்கலாம், பிறகு நீங்கள் கூறுவது சரியோ நான் கூறுவது சரியோ என்று தீர்மானிக்கலாம்” என்று பதில் உரைத்தேன். பிறகு 1925ஆம் வருஷம் ஒத்திகைகள் ஆரம்பித்து, டிசம்பர் விடுமுறை தவிர, சற்றேறக்குறைய ஆறு மாதங்கள் இடைவிடாது நடத்தினேன். என்னுடைய நண்பர்களாகிய ஆக்டர்களை நான் மிகவும் கசக்கியது, அலமாதித்யன் நாடகத்திற்குப் பிறகு இதில்தான். இதில் முக்கியமான கஷ்டம் ஒன்று என்னவென்றால், யசோதரை வேடம் பூண்ட நாகரத்தினத்திற்கு நர்த்தனம் செய்யக் கற்பிக்க வேண்டியிருந்தது. இன்னும் எட்டு ஸ்திரீ வேஷதாரிகளுக்கு, ஒன்றாய்ச் சேர்த்து, சித்தார்த்தன் (புத்தர்) முன்பாக நர்த்தனம் செய்யக் கற்பிக்க வேண்டியிருந்தது. இதற்காக அக்கலையில் வல்லவனாகிய ஓர் ஆசிரியனைக் கொண்டு, பல நாள் நர்த்தனம் செய்யக கற்பித்தேன். மூன்று மாதங்கள் இடைவிடாது ஒத்திகை செய்தானவுடன், நிர்வாக சபையார் 1925ஆம் வருஷம் டிசம்பர் மாதத்திலேயே இதை ஆட வேண்டுமென்று தீர்மானித்தனர். என் மனத்திற்குத் திருப்திகரமாயில்லை. இப்பொழுது வேண்டாம் என்று ஆட்சேபித்து அதை நிறுத்தி வைத்தேன். அச் சமயம் எனது நண்பர் திவான் பஹதூர் எஸ். பவாநந்தம் பிள்ளை அவர்கள் ஒரு முறை எனக்குக் கூறிய பழமொழி ஞாபகத்திற்கு வந்தது. அது, “அரைகுறையான வேலையை ஆசானுக்குக் காட்டலாகாது” என்பதேயாம்.

இச் சந்தர்ப்பத்தில்தான் நாகரத்தினம் ஐயர் நர்த்தனம் செய்யக் கற்றுக்கொண்டார். ரங்கவடிவேலுவுக்குப் பிறகு இவர்தான் எங்கள் சபையில் நர்த்தனம் செய்யக் கற்றுக் கொண்டது. இவர் இக் கலையைக் கற்கக் கொஞ்ச காலம் பிடித்தது; இவர் இதில் பூரண தேர்ச்சியடையும் வரையில், எனக்கு இந் நாடகத்தை ஆடுவதற்கிஷ்டமில்லை. புதிய நாடகங்களை சீக்கிரம் ஆட வேண்டுமென்று அவசரப்பட்டு ஒத்திகைகள் எல்லாம் நன்றாய் திருப்திகரமாக இல்லாத சமயத்தில், அவைகளை ஆடி சிலர் அவைகளைக் கெடுத்திருக்கின்றனர். ஒரு புதிய நாடகமானது முதன் முறை ஆடப்படும்பொழுது ஜனங்களுடைய மனத்தை ரமிக்கச் செய்யாவிட்டால், பிறகு அதைக் கொண்டு அவ்வாறு செய்வது மிகவும் கடினமாகும். இதை நாடகங்களை நடத்தும் கண்டக்டர்களும், புதிய நாடகங்களை எழுதும் நாடகக் கர்த்தாக்களும் கவனிப்பார்களாயின் நலமாயிருக்குமென எனக்குத் தோன்றுகிறது.

இந் நாடகத்திற்காக, நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டி வந்த இன்னொரு கஷ்டம் என்னவென்றால், இது சரித்திர சம்பந்தமான நாடகமாகையால், அக் காலத்திற்குத் தக்கபடி புதிய உடைகள், காட்சிகள் முதலியன சித்தம் செய்ய வேண்டி வந்தது. கௌதம புத்தர் இன்றைக்குச் சுமார் 2500 வருடங்களுக்கு முன் உயிர் வாழ்ந்ததாகச் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் பெரும்பாலும் ஒப்புக் கொள்கின்றனர். அக் காலத்தில் ஸ்திரீ புருஷர்கள் எப்படி உடை தரித்தனர் அரண்மனைகள் முதலிய கட்டடங்கள் எப்படியிருந்தன; அக்காலத்து ஜனங்கள் உபயோகித்த பாத்திரங்கள், ஆயுதங்கள், ஆபரணங்கள் முதலியன எப்படியிருந்தன? இன்னும் இப்படிப்பட்ட அநேக விஷயங்களை ஆராய்ந் தறிந்து அதன்படி எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய வேண்டி வந்தது. இதற்காகப் புஸ்தகங்களைக் கொண்டு நான் அறிந்தது போதாமல், சென்னை மியூஸியம் சென்று, அங்குள்ள அமராவதி சிற்பங்களையெல்லாம் பல நாள் சிரமப்பட்டுப் பரிசோதித்து வந்தேன்; அன்றியும், கன்னிமாரா புஸ்தகசாலையிலிருக்கும் அஜெந்தா படங்களைப் பார்த்து பல விஷயங்களை அறிந்தேன். அன்றியும் எங்கள் சபைக்கு அச்சமயம் படுதாக்களை எழுதி வந்த சித்திரம் வரைவோனை அழைத்துக் கொண்டுபோய், ஒவ்வொன்றாய்க் காட்டி, எனக்கு வேண்டிய திரைகள் முதலியவற்றிற்கெல்லாம், ஸ்கெட்ச் (sketch) எடுத்துக் கொள்ளச் செய்தேன். பிறகே அவனைக் கொண்டு இந் நாடகத்திற்கு வேண்டிய திரைகள் முதலியன வெல்லாம் எழுதி வைத்தேன். அக்காலத்திற்கு ஏற்றபடி ஆசனங்கள், ஆபரணங்கள், ஆலவட்டம் முதலிய சின்னங்கள், உடைகள் முதலியனவெல்லாம் புதியதாய்ச் சித்தம் செய்ய வேண்டியதாயிற்று இதற்கெல்லாம் சில மாதங்கள் பிடித்ததுமன்றி, பணமும் அதிகமாய்ப் பிடித்தது. இதற்கெல்லாம் நிர்வாக சபையார் யாதொரு ஆட்சேபணையுமின்றிப் பொருள் கொடுத்தது என் பாக்கியமே.

சாதாரணமாகத் தமிழ் நாடகமேடையிலும் ஆநெக்ரோனிசம்; (anachronism), அதாவது நாடக நிகழ்ச்சி காலத்திற்குப் பொருத்தமின்மை அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. நானே இதைப்பற்றி இதற்கு முன்பாக எழுதியிருக்கிறேன். பாரதக் கதை நடிக்கும் பொழுது துரியோதனன் உட்கார, 1896ஆம் வருஷத்திய பென்ட்வுட் நாற்காலிகளை உபயோகிப்பது போன்ற ஆபாசங்களைக் கண்டித்து; எங்கள் சபையிலும் இதற்கு முன்பாகப் பல நாடகங்களில் இம் மாதிரியான ஆபாசங்கள் இல்லாமற் போகவில்லை; இனிமேலாவது இப்படிப்பட்ட ரசாபாசங்கள் கூடாதென்று தீர்மானித்து, இந் நாடகத்திற்காக மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டோம். சுத்தோதனராஜன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தபொழுது, தன் பாதங்களை வைத்துக் கொள்ள எப்படிப்பட்ட சார்மணைகள் அக்காலத்தில் உப யோகப்பட்டன என்பதைக்கூட ஆராய்ந்து, அப்படிப் பட்டதைச் செய்து வைத்தோம். சற்றேறக்குறைய மேற் சொன்ன ஆநெக்ரோனிசம் இல்லாமல் நடத்திய நாடகம் எங்கள் சபையில் இதுதான் முதலானது என்று கூறக்கூடும்.

இந் நாடகம் நடத்துவதில் இன்னொரு கஷ்டம் எங்களுக்கு ஏற்பட்டது. கௌதமருடைய சிஷ்யர்களாகப் பலர் வரவேண்டியிருந்தது; அவர்களையெல்லாம் தலை மொட்டையடித்துக்கொள்ளச் சொல்ல முடியுமா? ஆகவே, தீர்க்காலோசனை செய்து, தலையில், ரோமம் அதிகமாக இல்லாதவர்களாகப் பார்த்து அவர்களுக்கெல்லாம், தலை மொட்டையாயிருந்தால் எப்படியிருக்குமோ அப்படித் தோன்றும்படியான தொப்பிகள் மாதிரி செய்து போட்டு பத்துப் பன்னிரண்டு சிஷ்யர்களைத் தயார் செய்ய வேண்டி வந்தது.

இந் நாடகத்தில் வேண்டிய பாட்டுகளுக்காக, கதை வடக்குப் பிரதேசத்தில் நடப்பதால், தக்க இந்துஸ்தானி வர்ண மெட்டுகளாகப் பிடித்து அம் மெட்டுகளில், காலஞ் சென்ற எனது நண்பராகிய ம. முருகேச முதலியாரைக் கொண்டு சாஹித்யங்கள் செய்து கொடுத்தேன். அன்றியும் இப் பாட்டுகளெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி இருக்கின்றனவா என்று எனது நண்பர்களாகிய வி.வி. ஸ்ரீநிவாச ஐயங்கார், டபிள்யூ துரைசாமி ஐயங்கார் முதலியோரைக் கொண்டு பரீட்சிக்கச் செய்து, அவர்கள் கூறிய சில குறிப்புகளின்படி சில பாட்டுக்களை மாற்றினேன்.

இந் நாடகத்திற்கென்றே திரைகள் முதலியனவெல்லாம் காலத்திற்குத் தக்கபடி புதிதாகத் தயார் செய்ததை முன்பே தெரிவித்திருக்கிறேன். ஒரு நாள் விக்டோரியா ஹால் மேடையின் மீதே முழு ஒத்திகை வைத்துக்கொண்டு, அத்திரைகள் முதலியன வெல்லாம் சரியாயிருக்கின்றனவா என்று போட்டுப் பார்த்தோம். எங்களுக்குத் தயார் செய்த புதிய உடைகளையும் அணிந்து பார்த்தோம். அன்றுதான் எங்களுக்கு ஒரு புது கஷ்டம் தேன்றியது! பௌத்த சன்யாசிகளுக்குத் துவர் (காவி) ஆடைகளை யெல்லாம் சித்தம் செய்தோம் தக்கபடி; ஆயினும் அவைகளை அணியும் விதம் எங்களுக்குத் தெரியவில்லை ! அதன்பேரில், எனது நண்பராகிய பாலசுந்தர முதலியார் சிரமம் எடுத்துக் கொண்டு, ஒரு பௌத்த சந்நியாசியிடம் போய் அதை எப்படி அணிவது என்று கற்றுக்கொண்டு வந்து மற்ற ஆக்டர்களுக்கெல்லாம் கற்பித்தார்! இந்நாடகத்திற்கு முன்பாக முழு ஒத்திகை வைத்துக் கொண்டிராவிட்டால், இக்குறையை நாடக தினம்தான் கண்டுபிடித்துத் திகைத்திருப்போம்! ஆகவே, ஒவ்வொரு புதிய நாடகத்திற்கும் டிரஸ் ரிஹர்சல் “உடுப்புடன் ஒத்திகை” பார்க்க வேண்டிய அதி அவசியம் என்பது என் முடிவான தீர்மானம். எங்கள் சபையின் ஆரம்பத்தில் சில வருஷங்கள் இவ்வாறு செய்து வந்தோம். பிறகு சோம்பேறித்தனத்தினாலோ அல்லது கர்வத்தினாலோ இந்த வழக்கத்தைச் சில வருடங்கள் விட்டிருந்தோம். இதன் பிறகு கட்டாயமாய் அப்படிச் செய்துதான் தீர வேண்டுமென்று எங்கள் சபையின் பொதுக்கூட்டத்தில் ஒரு சட்டம் ஏற்படுத்திக் கொண்டோம்.

இனி இந் நாடகத்தை முதன் முறை ஆடிய கதையை எழுதுகிறேன்.

இதைப் பகிரங்கமாக ஆட வேண்டுமென்று தீர்மானித்த பொழுது, எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், இவ்வளவு கஷ்டமெடுத்துக்கொண்டு சித்தம் செய்த நாடகத்தை, ஒரு வாரத்திற்குள் மூன்று நான்கு முறையாவது ஆடவேண்டும் என்று வற்புறுத்தினார்; அவர் இவ்வாறு கூறியபொழுது அது அவ்வளவு உசிதமாக எனக்குத் தோன்றவில்லை. நான் அதற்கு ஆட்சேபம் செய்ததும் எங்கள் நிர்வாக சபையார், மூன்று முறை போடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இதுதான் முதல் முறை எங்கள் சபையானது, மதராஸ் டிராமாடிக் சொசைடியாரைப் போல் ஒரு நாடகத்தை எடுத்துக்கொண்டு ஒரு வாரத்திற்குள் அதை மூன்று நான்கு முறை ஆடத் தீர்மானித்தது. அங்ஙனமே இவ்வருடம், மூன்று முறை ஆடிய பிறகு எனது நண்பர் உத்தேசித்ததே சரி, நான் அதற்கு ஆட்சேபித்தது தவறு என்று கண்டேன். அவருடைய அபிப்பிராயத்தினின்றும் மாறுபட்டு, பிறகு அவர் கூறியதே சரியென்று நான் கண்ட பல விஷயங்களில் இது ஒன்றாம். இம்மாதிரி ஒரு நாடகத்தை எடுத்துக்கொண்டு, அதைப் பன்முறை ஆடுவதில் சில பெரும் நன்மை களுண்டு. அவற்றைப் பிறகு குறிக்கிறேன்.

இந்தப் “புத்தாவதாரம்” முதன்முறை ஆடியபொழுது மேன்மை தங்கிய சென்னை கவர்னர் அவர்கள் வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அவரும் அதற்கிசைந்தார். முதன்முறை ஆடியபொழுது அறுபத்து நான்கோ அறுபத்தைந்தோ ஆக்டர்கள் மேடையின் பேரில் வரவேண்டி வந்தது. இத்தனை ஆக்டர்களுக்கும், வேஷம் தரித்தாக வேண்டு அத்தனை ஆக்டர்களையும் காலையிலேயே விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு வரும்படி செய்து, கடைசியாக மேடையின் மீது அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களை யெல்லாம் சொல்லிக் கொடுத்து, பதினோரு மணிக்கெல்லாம் (என் செலவில்) அவர்களைப் போஜனம் செய்யச் சொல்லி உடனே வேஷம் பூண ஆரம்பம் செய்தேன். அவ்வளவு சீக்கிரம் ஆரம்பித்தும் வேஷங்களெல்லாம் சரியாக 51/2 மணிக்குத் தான் முடிந்தன. மேற்சொன்னபடி செய்திராது வழக்கம் போல் இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஆரம்பித்திருந்தால், நாடக ஆரம்பத்திற்கு ஏற்படுத்திய தவணை கடந்து இரண்டு மணிக்குப் பிறகே நாடகம் ஆரம்பித்திருப்போம்! கவர்னர் அவர்களும் சரியாக 51/2 மணிக்கெல்லாம் வர, உடனே மணிப்பிரகாரம் ஆரம்பித்தோம்.

நாடகம் மிகவும் நன்றாயிருந்ததென, கவர்னர் அவர்கள் உட்பட எல்லோரும் மெச்சினர். அதைப்பற்றி நான் இங்கு எழுதப் போகிறதில்லை. அதிலுள்ள குற்றங் குறைகளை மாத்திரம் எடுத்து எழுதுகிறேன். முதலில் ஐந்தரை மணிக்கு ஆரம்பித்த நாடகமானது பத்தரை மணிக்கு முடிந்தது! இது பெரும் தவறாகும். சாதாரணமாக ஒவ்வொரு புதிய நாடகத்தை நான் எடுத்துக் கொள்ளும் பொழுதும், கடைசி ஒத்திகைகளில், ஒவ்வொரு காட்சியும், இத்தனை நிமிஷம் பிடிக்கிறது என்று குறித்துக் கொண்டு போய், மொத்தத்தில் நாடகமானது இத்தனை மணி பிடிக்கும் என்று தீர்மானிப்பது வழக்கம். சில நாடகங்களை ஆக்டர்கள் வளர்த்தி விடுகிறார்களென்று, நான்கு மணி நேரத்திற்கு மேல் சாயங்கால ஆட்டங்கள் செல்லக் கூடாதென்று எங்கள் சபையில் ஒரு சட்டமும் ஏற்படுத்தினோம். இதைக் கடந்து இதற்கு மேல் ஒரு மணி சாவகாசம் பிடித்தது இந்நாடகம். கவர்னர் அவர்கள், பொறுமையுடன், நான்கு மணி நேரம் அதாவது இரவு 91/2 மணி வரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு மேல் இருப்பது கஷ்டமாயிருக்கிறதென நாடகத்தைப் பற்றி ஏதோ புகழ்ச்சியாக, எங்கள் சபையின் பிரசிடெண்டவர்களிடம் சொல்லிவிட்டு விடை பெற்றுப் போனார். அதற்குக் கொஞ்சம் முன்பாக எங்கள் சபையின் வைஸ் பிரசிடெண் எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் வேடிக்கையாக, “நாடகத்தின் முடிவைப் பார்ப்பதற்கு, நான் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வரலாம் போலிருக்கிறதே” என்று சொன்னாராம்! இவ்வளவு நேரம் இந் நாடகத்தை நீடிக்கச் செய்தது பெரும் தவறாகும். இரண்டாம் முறை இந்நாடகத்தை ஆடியபொழுது குறைக்க வேண்டிய பாகங்களை யெல்லாம் குறைத்து 4 மணி நேரத்திற்குள் முடியும்படி செய்தேன். முதன் முறை இந்நாடகம் அவ்வளவு நீடித்ததற்குக் காரணம், காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் இண்டர்வெல் அதிகமானதேயாம். ஒவ்வொரு காட்சியும் இத்தனை நிமிஷம்தான் பிடிக்கும் என்று கணக்குப் போட்டவன், இந்த இண்டர்வெல்களை கவனிக்க மறந்தேன். இரண்டு மூன்று முறை உடனே ஆடியபடியால், முதன்முறை நேர்ந்த இக்குறையைத் தீர்த்துக் கொள்ள மிகவும் அனுகூலமாயிருந்தது.

இம்முறை இந் நாடகத்தை ஆடியதில் இன்னொரு முக்கியக் குறை என்னவென்றால், காட்சிகளுக்கு எல்லாம் தக்கபடி திரைகள் முதலியன ஏற்படுத்தியும், ஒவ்வொரு காட்சிக்கும் இன்னின்னபடி வெளிச்சம் இருக்க வேண்டுமென்று நாங்கள் ஏற்பாடு செய்யாமற் போனதே. இதைக் கண்டுபிடித்து எனக்கு அறிவித்தவர், மதறாஸ் டிராமாடிக் சொசைடியின் அங்கத்தினரும் எனது நண்பருமான மிஸ்டர் லெஸ்லி கோல்ஸ் என்பவரே. இவர் தனது சொசைடியிலிருந்து என் வேண்டுகோளின்படி எங்களுக்கு ஸ்டேஜ் லைட்களை உதவியிருந்தார். அவரையும் அவரது மனைவியாரையும் நாடகத்திற்கு வரும்படி இரண்டு டிக்கட்டுகள் வாங்கி அனுப்பியிருந்தேன். அவர்களிருவரும் வந்திருந்து நாடகம் பார்த்தனர். மறுதினம் மிஸ்டர் லெஸ்லி கோல்ஸ், எனக்குத் தான் பார்த்ததைப் பற்றி, ஏதோ சிலாக்கியமாக எழுதினார். அக் கடிதத்திலுள்ள ஒரு வாக்கியத்தை மாத்திரம் இங்கு மொழிபெயர்த்து எழுதுகிறேன். “நீர் நாடகத்தை எழுதி ஒத்திகை செய்து, முக்கிய பாகத்தை ஆக்டு செய்து, ஸ்டேஜ் மானேஜராக இருந்து, எல்லாக் காரியங்களையும் பார்த்துக்கொண்டு, இவ்வாறு பல காரிங்களையும் ஒருவனாக வகித்தது, எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது” என்று எழுதினார். அக் கடிதத்தில் கடைசியாக, “மற்றெல்லாம் மெச்சத்தக்கதா யிருந்தபோதிலும், ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் வெளிச்சம் ஏற்பாடு செய்தது மட்டும் எனக்குத் திருப்திகரமாயில்லை” என்று எங்கள் சபையில் அதுவரையிலிருந்த ஒரு முக்கியமான குறையை எடுத்துக் காட்டினார். இவ்விஷயம் மற்ற சபைகளுக்கும் நாடகக் கம்பெனிகளுக்கும் மிகவும் உபயோகப்படும் என்று எனக்குப் படுகிறபடியால், இதைப்பற்றிச் சற்று விவரமாக இங்கு எழுத அனுமதி கேட்கிறேன்.

எங்கள் சபை நாடகங்கள் ஆட ஆரம்பித்த பிறகு, அநேக வருஷங்கள் வரை எல்லாக் காட்சிகளுக்கும் ஒரே மாதிரியான வெளிச்சங்கள்தான் உபயோகித்து வந்தோம். தற்காலமும் அநேக சபைகளிலும், நாடகக் கம்பெனிகளிலும் அம்மாதிரி செய்து வருகிறார்கள். இதைப்பற்றிச் சற்று யோசித்துப் பார்த்தால், இது தவறு என்பது ஸ்பஷ்டமாகத் தெரியும். ஒரு காட்சி காலையிலிருக்கலாம்; மற்றொரு காட்சி நன்றாய் வெயிற்காயும் நடுப்பகலிலிருக்கலாம்; இன்னும் மற்றொரு காட்சி நடுநிசியிலிருக்கலாம்; இவைகளை நாடக மேடையின் மீது காட்டும் பொழுது, ஒரே வெளிச்சம் இருப்பது தவறல்லவா? அன்றியும் சில காட்சிகள் ஒரே காலத்தில் நடப்பனவாயினும், நடக்கும் இடம் வேறுபட்டிருக்கலாம். உதாரணமாக, காட்சி நடக்கும் காலம் நடுபகலாயிருக்கலாம்; ஆயினும் நடக்கும் இடம் வெவ்வேறாயிருக்கலாம்; ஒன்று வெட்டவெளியிலிருக்கலாம், மற்றொன்று இருண்ட குகையிலிருக்கலாம்; ஒன்று அரசனது கொலுவிலிருக்கலாம், மற்றொன்று அடர்ந்த காட்டிலிருக்கலாம்; இவைகளுக்கெல்லாம் ஒரே மாதிரியான வெளிச்சம் இருக்கச் செய்வது தவறல்லவா? ஆகவே ஒவ்வொரு காட்சிக்கும் வெளிச்சம் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மானிக்கும்போது, முதலில் அது நடக்கும் காலத்தைக் கருதிப் பிறகு அது நடக்கும் இடத்தையும் கருதியே, இப்படிப்பட்ட வெளிச்சம் இருக்க வேண்டுமென ஏற்படுத்த வேண்டும். மற்ற விஷயங்களையும் கருத வேண்டும். இதற்கோர் உதாரணம் கூறுகிறேன்; ஒரு காட்சி பகல் பொழுதில் ஒரு தோட்டத்திலிருக்கலாம்; ஆயினும் அக்காட்சி நடக்கும் சமயத்தில் பெரும் மழை பொழிவதாக இருக்கலாம். பகலில் நடக்கிற காட்சியாயிற்றே என்று அதிக வெளிச்சத்தில் நடக்கும்படி செய்யலாமா? ஆகவே ஒரு நாடகத்தை நடிக்கும்பொழுது, ஒவ்வொரு காட்சிக்கும், இப்படிப்பட்ட வெளிச்சம் இருக்க வேண்டுமென்று பல சந்தர்ப்பங்களையும் யோசித்தே முடிவு செய்ய வேண்டும். இவ்வுண்மை நான் பல வருடங்கள் அறியாதிருந்தேன். முதல் முதல் என் சிற்றறிவிற்கு இது பட்டது, நான் ஒருமுறை மதராஸ் டிராமாடிக் சொசைடியார் நாடகம் ஒன்றைப் பார்த்தபொழுதே. அந்நாடகம் மூன்று காட்சிகள்தான் அடங்கியது. ஒரே இடத்தில் அம்மூன்று காட்சிகளும் நடந்தன; ஆயினும் ஒரு காட்சி காலையிலும், இரண்டாவது காட்சி பகலிலும், மூன்றாவது காட்சி இரவிலும் நடப்பதாக நாடகக் கர்த்தா எழுதியிருந்தார்; இதற்கேற்றபடி ஒவ்வொரு காட்சியிலும் வெளிச்சத்தை மாற்றினர்; காலையில் நடக்கும் காட்சிக்குக் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது; பகலில் நடக்கும் காட்சிக்கு அதிக வெளிச்சத்தை உபயோகித்தனர்; இரவில் நடக்கும் காட்சிக்கு வெளிச்சங்களையெல்லாம் மிகவும் குறைத்து, இரவில் விளக்குகள் ஏற்றி வைத்திருந்தால் எவ்வளவு வெளிச்சம் இருக்குமோ, அப்படியே காண்பித்தனர். இது மிகவும் சரியென என் மனத்திற்குப் பட்டது. இதன் பிறகுதான் இவைகளையெல்லாம் அச்சபையார்க்கு சாதாரணமாக ஏற்பாடு செய்யும் ஐரோப்பியக் கனவானாகிய மிஸ்டர் லெஸ்லி கோல்ஸ் என்பவரைப் பரிச்சயம் செய்துகொண்டு, அவரை இந்தப் “புத்தாவ தாரம்” என்னும் நாடகத்திற்கு வந்து பார்க்கச் செய்தேன். இவரிடமிருந்து இன்னின்ன காட்சிகளுக்கு இன்னின்ன மாதிரி வெளிச்சம் ஏற்படுத்த வேண்டுமென்னும் பல விஷயங்களைக் கற்றேன். மேலும் திருவனந்தபுரத்தில் தற்காலமிருக்கும் எமிலிஹாட்சி என்னும் துரைசானியார் சென்னைக்கு வந்திருந்தபொழுது, இது விஷயமாகப் பல நுட்பங்களை எனக்குக் கற்பித்தனர்; அவர்களிருவருக்கும் இதன் மூலமாக எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.

இந் நாடகத்திற்குப் பிறகுதான் எங்கள் சபையில் காட்சிகளுக்குத் தக்கபடி வெளிச்சத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமென்கிற விஷயத்தைக் கொஞ்சம் கவனித்து வருகிறோம். இதை இதர நாடக சபையோர்களும், நாடகக் கம்பெனிக்காரர்களும் முக்கியமாகக் கவனிப்பார்களாக. இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா முதலிய பிரதேசங்களில் நாடகங்களில் இதற்காக ஏராளமான பணம் செலவு செய்து ஒவ்வொரு காட்சியிலும் இயற்கையில் எப்படியிருக்குமோ, அப்படிச் செய்து வருவதாகப் படித்திருக்கிறேன். அவர்களைப்போல் பணம் செலவழித்து ஏற்பாடு செய்ய ஏழைகளாகிய நமக்கு முடியாமற் போனாலும், கூடியவரையில் இதைக் கவனிக்க வேண்டுமென்பது என் அபிப்பிராயம். இந்தச் சமாச்சாரத்தை விட்டு அகலுமுன், நாடக மேடைகளில் ‘லைம் லைட்’ என்னும் அதிகப் பிரகாசமான வெளிச்சத்தை உபயோகிக்கும் விதத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். நாடக மேடை ஏறியிருக்கும் ஒவ்வொரு ஆக்டருக்கும் இது இன்னதென்று தெரியும்; ஆயினும் இதைப் படிக்கும் சிலருக்கு அது இன்னதென்று தெரியாதிருக்கக் கூடுமாகையால், அது இன்னதென்று இங்கு விவரிக்கிறேன்; அது ஒரு பெருஞ் ஜோதியைப் போன்ற வெளிச்சத்தை நாடக மேடையின் பேரிலாவது அல்லது அங்கிருக்கும் சில ஆக்டர்கள் மீதாவது, விழும்படி செய்யும் ஓர் ஏற்பாடாம். இது ஒரு வேடிக்கையாயிருக்கிறதென்று பல நாடக சபைகளிலும், கம்பெனிகளிலும், சமயமில்லாத சமயங்களிலும் உபயோகிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இது பெருந் தவறாகும். இதை நமது தமிழ் நாடக மேடையில் தேவதைகள் வரும்படியான காட்சிகளில்தான் உபயோகிக்க வேண்டுமென்பது என் அபிப்பிராயம். உதாரணமாக வள்ளித் திருமணத்தில் சுப்பிரமணியர் தன் சுயரூபத்துடன் வள்ளிக்குக் காட்சி கொடுக்கும் காட்சியிலும், ராமதாஸ் நாடகத்தில் ஸ்ரீராமர் முதலியோர் நவாப்புக்கும் ராமதாஸுக்கும் சுயரூபத்துடன் காட்சி கொடுக்கும்பொழுதும், சிறுத்தொண்டர் நாடகக் காட்சியில் பரமேஸ்வரன் பார்வதி சமேதராய் ரிஷப வாஹன ரூடராய், சிறுத்தொண்டருக்குக் காட்சி கொடுக்கும் சமயத்திலும் இந்த லைம் லைட்டை உபயோகிக்க வேண்டியது அவசியம் தான். “லீலாவதி-சுலோசனா” நாடகத்தில் ஸ்ரீதத்தனும் சுலோசனாவும் இரவில் கதளிக் கிரஹத்தில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது இதை ஏன் உபயோகிக்க வேண்டும்? இனியாவது கண்டக்டர்கள், ஆக்டர் விரும்புகிறார்களே என்று இதை உபயோகியாமல், சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி இந்த லைம் லைட்டை உபயோகிப் பார்களாக.

இதற்கு ஓர் உதாரணமாக இந்தப் “புத்தாவதாரம்” என்னும் நாடகத்தில் ஒரு முக்கியமான காட்சியையே எடுத்துக்கொள்கிறேன். இதில் ஒரு மிகவும் முக்கியமான காட்சி. கௌதம புத்தர் போதி விருட்சத்தின் அடியில் மெய்ஞ் ஞானத்தை அடையும் காட்சியாம்; இக்காட்சியின் ஆரம்பத்தில் களைத்த கௌதமர், சாயங்காலத்தில் சுஜாதையின் கரத்தினின்றும் உணவை உட்கொள்ளுகிறார். அச்சமயம் சாயங்கால வெயிலிருப்பதுபோல், மேடையில் வெளிச் சத்தைக் குறைத்துக் காட்ட வேண்டும். பிறகு புத்தர் போதி விருட்சத்தின் அடியிற் போய் தீர்மானத்துடன் உட்கார்ந்ததும், சந்திரன் எழுவதுபோல சந்திர வெளிச்சத்தைக் காட்ட வேண்டும். அதன் பிறகு மாரன் மங்கையர் அவரை மயக்க முயலும்போதும் நர்த்தனம் செய்யும் போதும் சந்திர ஒளியை அதிகப்படுத்திக் காட்டவேண்டும். பிறகு அவர்கள் ஜம்பம் சாயாமற் போனபின், சந்திரன் மேகங்களால் மறைவுறுவதுபோல், வெளிச்சத்தைக் கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைத்துக்கொண்டே போக வேண்டும். பிறகு குரோதம், மாச்சரியம், லோபம், அகங்காரம், அவித்யை, அவா முதலியன கோர ரூபங்களுடன் அவரை அதட்ட வரும்போது, ஏறக்குறைய இருண்டிருக்க வேண்டும். கடைசியாக அவைகள் மறைந்தவுடன் சில விநாடி வரைக்கும் நாடக மேடை முற்றிலும் இருள் சூழ்ந்தே இருக்க வேண்டும். திடீரென்று கௌதமருக்கு ஞானம் உதித்தது போல் அவர் நெற்றியின் மத்தியில் ஒரு வெளிச்சம் தோன்றவேண்டும். பிறகு அந்த ஞானம் பரவியது போல் முதலில் முகத்திலும் பிறகு உடல் முழுவதிலும் ஜோதி தோன்ற வேண்டும். இந்த ஒரு காட்சிக்கு வெளிச்சத்திற்கு இவ்வளவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. மற்றவைகளையெல்லாம் சுலபமாக ஏற்பாடு செய்து பார்த்தோம், எங்கள் கடைசி ஒத்திகைகளில்; ஆயினும், கௌதமருடைய நெற்றியில் பிரகாசம் தோன்றும்படி செய்வது எங்ஙனம் என்று ஏக்கமுற்ற பொழுது, இதிலெல்லாம் மிகவும் புத்தி சாதுர்யமுடைய எனது நண்பர் தாமோதர முதலியார் அவர்கள் என் உதவிக்கு வந்தார். ஒரு மின்சார பாட்டரியை (battery) என் உடைக்குள் மறைத்து வைத்து அதன் கம்பியை என் தலையில் அணிந்திருந்த டோபாவுக்குள் கொண்டு போய், நெற்றிக்கெதிராகத் தொங்கும்படியாக, அதன் முனையில் ஒரு சிறு மின்சார பல்ப் (bulb) ஏற்பாடு செய்தார். மறைவாக இருந்த அந்த பாட்டரியை முடுக்கினால், அந்த வெளிச்சம் தோன்றும்படி ஏற்பாடு செய்தார். இக்காட்சி நடக்கும்பொழுது, எல்லாம் இருட்டியவுடன், இவ்விசையை நான் முடுக்க, என் நெற்றியில் இரு கண்களுக்கு மத்தியில் இந்த எலெக்டிரிடிக் வெளிச்சம் தோன்றிய போது, ஹாலிலுள்ள ஜனங்க ளெல்லாம் இதைக் கண்டு ஆச்சரியமும் சந்தோஷமுமுற்ற வராய்க் கரகோஷம் செய்தனர். அச்சமயம் அக் கரகோஷம் என்னைச் சார்ந்ததல்ல, எனது நண்பர் தமோதர முதலியார் புத்தி சாதுர்யத்தைச் சார்ந்ததென்று அவருக்கு அதை என் மனத்தில் அர்ப்பணம் செய்தேன். உடனே லைம் லைட்டைக் கொண்டு முதலில் முகத்திலும், பிறகு எனது உடல் முழுவதும் ஜோதியுண்டானதுபோல் செய்யப்பட்டது. இப் புத்தாவதார நாடகத்தில் இக் காட்சியானது மிகவும் நன்றாயிருந்ததென எல்லோரும் புகழ்ந்தது என் நினைவிற்கு வந்து, இப்பொழுதும் எனக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.

ஜனங்கள் இந்நாடகத்தில் பலரும் மெச்சிய மற்றொரு காட்சி, கௌதமர் முன்பாக நடன மாதர் நடனஞ் செய்யுங்கால், திடீரென்று பலகணியோரம் வைத்திருந்த யாழின் மூலமாகத் தேவர்கள் அவருக்கு அவர் இவ்வுலகில் அவதாரம் செய்த வேலையைக் கவனிக்கும்படி சங்கீதத்தின் மூலமாகத் தெரிவிக்கின்ற காட்சியாகும். இந்தக் காட்சிதான் ஒத்திகைகளில் எனக்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுத்தது. இக் காட்சியில் நடனமும் சரியாயிருக்க வேண்டும், சங்கீதமும் சரியாயிருக்க வேண்டும், ஆக்டிங்கும் சரியாயிருக்க வேண்டும். இம் மூன்றையும் தக்கபடி சரிப்படுத்த இக்காட்சியை எத்தனை முறை ஒத்திகை செய்து பார்த்தேன் என்று என்னால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது.

ஆயினும் எனக்கு நடிப்பதற்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுத்த காட்சி நான் கௌதமராக போதி விருட்சத்தின் அடியில் ஏறக்குறைய முக்கால் மணி நேரம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டி வந்த காட்சியே! இந்த முக்கால் மணி நேரமும் மௌனமாய் அசையாதபடி உட்கார்ந்திருப்பதுதான் எனக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. அதுவும் கண்களை மூடிக்கொண்டிருப்பதென்றாலும் ஒரு வகையாக இருந்து விடலாம்; நான் கண்களைத் திறந்து கொண்டிருக்க வேண்டி வந்தது! சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது ஒரு கஷ்டமா என்று இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் கேட்கலாம். பத்து நிமிஷம் அசையாது உட்கார்ந்து பாருங்கள்; பிறகு இந்தக் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லி விடுவீர்கள் என்று, அவர்களுக்கு நான் பதில் உரைப்பேன். நாடக மேடையின் பேரில் நான்கைந்து மணி சாவகாசம் நடிப்பதைவிட, நாற்பது நிமிஷம் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பது மிகவும் கடினமாம் என்பதற்குச் சந்தேகமேயில்லை . இவ்வாறு நான் “சும்மா” உட்கார்ந்து கொண்டிருந்ததில் மற்றொரு விபரீதமான கஷ்டமொன்று நேர்ந்தது. தான் எனது ஆசனத்தில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் எனது துடையில் ஏதோ ஒரு பூச்சி (அந்த ஆசனத்திலிருந்த மூட்டைப் பூச்சியாயிருக்கலாம் என்று நினைக்கிறேன்) என்னைக் கடிக்க ஆரம்பித்தது! நான் அதை அகற்றுவ தென்றால் எனது கைகால்களை அசைக்க வேண்டும். அப்படிச் செய்வேனாயின் காட்சி கெட்டுப்போகும். இந்த தர்மசங்கடத்தில் அது கடிக்கும் தினவைப் பொறுத்துக் கொண்டேயிருந்தேன், அந்த முக்கால் மணி நேரமும்! இதை நினைத்துக்கொண்டால் இதைப் படிப்பவர்களுக்கு வருவது போல் எனக்கும் சிரிப்பு வருகிறது; ஆயினும் அப்பொழுது எனக்குச் சிரிப்பாயில்லை.

எனது நண்பர் இந் நாடகத்தில் யசோதையாக நடித்ததும், பாடியதும், மாயா யசோதையாக நர்த்தனம் செய்ததும் மிகவும் நன்றாயிருந்ததெனப் பலரும் மெச்சினர். இவருடைய சிறு குமாரன் ‘மணி’ என்பவன் ராகுலனாக அழகாய் நடித்தான்.

இந்நாடகத்தில் கௌதம புத்தராக நடிக்கும் ஆக்டருக்கு முக்கியக் கஷ்டம் என்னவென்றால் “ஹாம்லெட்” என்னும் நாடகத்தில், “ஹாம்லெட்”டின் பாகம்போல், இந்நாடகத் தில் முதற்காட்சி முதல் கடைசிக் காட்சி வரையில், இடையில் இளைப்பாறச் சாவகாசமின்றி, ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் வர வேண்டுமென்பதே.

இந்நாடகத்தில் முதன் முறை நடித்தபொழுது எனக்கு நேர்ந்த ஒரு சிறு கஷ்டத்தை எடுத்து எழுதுகிறேன். கடைசிக் காட்சிக்கு முந்திய காட்சியில், நான் அரங்கத்தின் பேரில் நடந்து செல்லும்பொழுது காலில் பாதரட்சை ஒன்றுமில்லாதபடியால், அங்கு அகஸ்மாத்தாய்க் கிடந்த ஒரு பழைய இரும்பாணி, எனது உள்ளங்காலில் நன்றாய்க் குத்தி ரத்தம் வடிய ஆரம்பித்தது. சீக்கிரம் காட்சியை முடித்துக்கொண்டு, கிரீன் ரூமுக்குப் போய் ரத்தம் வருவதை நிறுத்தி, காயத்தின் மீது கொஞ்சம் சுண்ணாம்பைப் பூசி பிறகு நன்றாய்க் கட்டிவிட்டேன். நாடகம் முடிந்தவுடன் வர்ணத்தைக் கூடக் கழுவுவதன்முன் எனது நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, நேராக வைத்தியர் வீட்டிற்குப் போய் அதற்குச் சிகிச்சை செய்து கொண்டேன். இதை இங்கு நான் எடுத்து எழுதுவதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. நாடக மேடையில் ஆடும் ஆக்டர்களுக்கு அங்கிருக்கும் பழைய இரும்பு ஆணி முதலிய சாமான்களால் காயம் நேரிடக்கூடும்; அவைகள் பழையனவாகித் துருப்பிடித்திருந்தால், ஏதோ சிறு காயந்தானே என்று அசட்டை செய்யலாகாது; உடனே சுண்ணாம்பையிட்டு, ரத்தம் வராதபடி கட்டிவிட்டு, கூடிய சீக்கிரத்தில் வைத்தியரிடம் போய் அதற்குச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு பழைய குண்டூசியாயினும் அது துருவேறியிருந்தால், ஒரு சமயம், செப்டிக் (sceptic) விஷத்தை யுண்டுபண்ணக்கூடும். ஆகவே, “கொட்டினால் தேள், கொட்டா விட்டால் பிள்ளைப் பூச்சி” என்கிற பழமொழிக்கிணங்க, எதற்கும் முன் ஜாக்கிரதையாயிருப்பது நலம்; இதை எனது நாடக மேடை நண்பர்களுக்கு அறிவிப்பது எனது கடன் என இங்கு இதைப்பற்றி எழுதலானேன்.

இப் புத்தாவதாரமானது, உடனே இன்னும் இரண்டு முறை ஆடப்பட்டது. இவ்வாறு கூடிய சீக்கிரத்தில் மூன்று முறை ஆடிய பொழுதும் நல்ல பணம் வசூலாயது. இந்நாடகத்திற்கென்று செலவு செய்த தொகை யெல்லாம் ஏறக்குறைய இந்த மூன்று முறை ஆடியதினாலேயே எடுத்துவிட்டோம். அன்றியும் இரண்டாம் முறை மூன்றாம் முறை ஆடியபொழுது முதன் முறை ஆடியதிலிருந்த குறைகளையெல்லாம் நீக்க சமயம் வாய்த்தது; அன்றியும் முதல் நாள் வருவதற்கு அசந்தர்ப்பமாயிருந்த நாடகாபி மானிகள், இரண்டாவது தினமாவது மூன்றாவது தினமாவது வந்து பார்ப்பதற்குச் சௌகரியமாயிருந்தது. இதன் பிறகுதான் எனது பால்ய நண்பர், சென்னை டிராமாடிக் சொசைடியாரைப் போல் நமது முக்கியமான நாடகங்களை யெல்லாம் மூன்று நான்கு தினங்களில் ஆடவேண்டும் என்று வற்புறுத்தியதன் நியாயத்தைக் கண்டேன்.

இந் நாடகமானது இதற்கப்புறம் எங்கள் சபையோரால் சில முறைதான் ஆடப்பட்டிருக்கிறது. இதர சபைகளும் இரண்டு மூன்று விசைதான் இதை ஆடியிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், இதற்குத் தக்க திரைகள் உடுப்புகள் முதலியன சித்தம் செய்வது மேற்சொன்னபடி கடினமென்பது ஒன்றாயிருக்கலாம்; அன்றியும் தக்கபடி நடிப்பதற்கும் இது மிகவும் கஷ்டம் தரும் என்பதற்குச் சந்தேகமில்லை. இதர சபைகள் இந்நாடகத்தை நடித்ததில் நான் பார்த்த வரையில் “ட்ரேட்ஸ் ஸ்டாப் கிளப்” (Trades Staff Club) இந் நாடகத்தை நடித்தது மிகவும் நன்றாயிருந்த தென்பது என் அபிப்பிராயம். சில காட்சிகளின் ஒழுங்கில் அவர்கள் எங்கள் சபையைவிட மிகவும் புத்தி சாதுர்யமாகச் செய்தார்கள் என்று நான் கூற வேண்டும். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. இதில் ஒரு சிறு வேடிக்கை என்னவென்றால் என் பெயர் கொண்ட ஒருவரே அங்கும் கௌதம புத்தராக நடித்தார்.

இந் நாடகக் கதையானது இரண்டு முறை சினிமாக் காட்சியில் சென்னையில் காட்டப்பட்டதைப் பார்த்தேன். ஆயினும் அவைகள் எனக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றவில்லை. அச் சினிமாக் காட்சியிலும் - எங்கள் சபையிலும் இக் கதையைப் பார்த்த அநேகர், எங்கள் சபை நடித்ததே அதிக விமரிசையாக இருந்ததெனக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். 

நான் தற்கால மும் நடிக்க விரும்பும் நாடகங்களில் இது ஒன்றாகும்.

இவ் வருஷத்தில் எங்கள் சபையின் அங்கத்தினருள் சில முக்கியமானவர்கள் மரித்தனர் என்று நான் துக்கத்துடன் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். முதலில் பல ஆண்டுகளாக எங்கள் சபைக்குப் பிரசிடெண்டாயிருந்து, அதற்காகப் பலவிதத்திலும் முயற்சி எடுத்துக் கொண்ட டி.வி. சேஷகிரி ஐயர் அவர்கள் காலகதியடைந்தனர். இவர் மரணமடைவதற்குச் சில தினங்களுக்கு முன் நான் இவரைப் போய்ப் பார்த்தபொழுது, “உன்னுடைய புத்தாவதாரம் எப்பொழுது வரப்போகின்றது?” என்று மிகவும் ஆவலுடன் கேட்டது எனக்கு நினைவிற்கு வருகிறது. என் துர் அதிர்ஷ்டத்தால் அதைப் பாராமலே அவர் பரலோகம் சென்றார். இவர் ஞாபகச்சின்னமாக ஏதாவது சபையில் ஏற்படுத்த வேண்டுமென்று சபையார் தீர்மானித்து, பணம் சேகரித்து, அவருடைய உருவப் படம் ஒன்றைச் சபையின் இருப்பிடத்தில் வைத்திருக்கின்றனர்.

அன்றியும் பல வருடங்களாக எங்கள் சபையில் கிரீன் ரூம் டைரெக்டராக உழைத்து வந்த என் பழைய நண்பராகிய வெங்கடாசல ஐயரும் இவ் வருஷம் சிவலோகப் பிராப்தியடைந்தார். இவர் பொருட்டும் ஒரு பொதுக் கூட்டம் கூடி, சபையின் துக்கத்தைத் தெரிவித்து, இவரது ஞாபகச் சின்னமாக இவரது உருவப் பட மொன்றைச் சபையில் வைக்க வேண்டுமென்று தீர்மானித்தோம். இப்பிரயத்தனமானது சீக்கிரம் முடிந்து, இவரது படம் ஒன்று எங்கள் சபையின் ஹாலை அலங்கரிக்கிறது.

மேலும், இவ் வருஷம் எங்கள் சபையில் சற்றேறக் குறைய ஆரம்ப முதல் அங்கத்தினராயிருந்த வி. எதிராஜுலு செட்டியார் வைகுண்டப் பிராப்தி அடைந்தார். இவர் எங்கள் சபையின் தெலுங்குப் பிரிவிற்காகப் பல ஆண்டுகள் கண்டக்டராயிருந்து அதை முன்னுக்குக் கொண்டு வந்தவர்; அதன் அபிவிருத்திக்காக அதிகப் பணமும் செல விட்டவர்; எங்கள் சபையில் கடைசியில் பல வருடங்கள் பொக்கிஷதாரராகவிருந்து, மிகவும் ஒழுங்காகக் கணக்குப் பார்த்தவர். இவரும் இவ்வருடம் இறந்தது எங்கள் சபையின் துர்அதிர்ஷ்ட வசமாம். கடைசியாக இவ் வருஷம் மரித்த எங்கள் சபையின் அங்கத்தினருள், என் மனைவியாகிய தனம்மாளையும் நான் குறிக்கவேண்டும். எங்கள் சபையில் ஸ்திரீகளை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்த நாள் முதல், என் மனைவி அவர்களுள் ஒருத்தியாய்ச் சேர்ந்து, தன் ஆயுள் பரியந்தம் ஏறக்குறைய ஒரு நாடகமாவது தவறாமல் பார்த்து வந்தனள். சபையின் மற்றொரு லேடி மெம்பராகிய பண்டிதை விசாலாட்சி அம்மாள், என் மனைவியைப்பற்றி ஒரு முறை கூறியது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது. அதாவது, “மற்ற லேடி மெம்பர்களெல்லாம், என் கணவன் அப்படி நடிக்கின்றார், என் தமயன் அப்படி நடிக்கிறார், என் தகப்பனார் அப்படி நடிக்கிறார் என்று சும்மா பேசிக்கொண்டிருக்கிறார்கள்; நீ ஒருத்திதான், உன் புருஷன் நடிப்பதைப் பற்றிப் புகழ்ந்து பேசாது மௌனமாயிருக்கின்றவள்!” என்று புகழ்ந்ததேயாம். முப்பத்தாறு வருடங்கள் என் இல்லறத் துணைவியாயிருந்த எனது பத்தினியை இவ்வருஷம் இழக்கும்படியாக ஈசன் எனக்கு விதித்தார். தனது பெண்ணுக்கும் பிள்ளைக்கும் கலியாணம் செய்து பார்த்துவிட்டு, பேத்தி ஒன்றையும் கண்டு கண் குளிர்ந்த பிறகு அதிகச் சிரமமில்லாமல், சுமங்கிலியாக, இறைவன் தன் பதம் சேர்த்துக் கொண்டது அவள் பாக்கியமென என் மனத்தை ஒருவாறு தேற்றிக் கொள்கிறேன்.

இவ் வருஷம் எங்கள் சபையின் பிரதம அங்கத்தினராயிருக்கும் த. ஜெயராம நாயகருடைய உருவப் படமும், அ. கிருஷ்ணசாமி ஐயருடைய உருவப் படமும் அவர்கள் எங்கள் சபைக்கு உழைத்ததற்கு ஒரு சிறு கைம்மாறாகத் திறந்து வைக்கப்பட்டன.

இவ் வருஷ நிகழ்ச்சிகளுள் முக்கியமானது, பல வருடங்களாகப் பிரயத்தனப்பட்டும் இதுவரையில் பூர்த்தியாகாமற் போன ‘பிரதாப ருத்ரீயம்’ என்னும் தெலுங்கு நாடகத்தை ஆடியதே. இது காலஞ் சென்ற வேதம் வெங்கட்ராயலு சாஸ்திரி அவர்கள் எழுதிய நாடகங்களுள் மிகச் சிறந்த தென்பது என் அபிப்பிராயம். இது ஆடுவதற்கும் ஒரு கஷ்டமான நாடகம். இதில் முக்கியமாக யௌகந்தரராகிய மந்திரி வேடமும், வண்ணான் வேடமும் மிகவும் கஷ்டமானவை. அவ்விரண்டு வேடங்களில், முறையே எனது நண்பர் ச. ராகவாச்சாரியாரும், பி.வி. ராமாநுஜம் செட்டியாரும் மிகவும் விமரிசையாய் நடித்தார்கள் என்பது என் தீர்மானம். எங்கள் சபைக்குக் கீர்த்தி கொண்டு வந்த தெலுங்கு நாடகங்களில் இது ஒரு முக்கியமானதாம். இதைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமென்று இது முதல் பன்முறை பிரயத்தனப்பட்டிருக்கிறேன். அதன் பொருட்டுக் காலஞ்சென்ற வே. வெங்கட்ராயலு சாஸ்திரி யாருடைய உத்தரவையும் பெற்றிருக்கிறேன். ஆயினும் இதுவரையில், இதைப் பூர்த்தி செய்யாதிருக்கிறேன். இறைவன் அருள் இருக்குமாயின், என் பெற்றோர் பாத கமலம் போய்ச் சேருமுன் இதைப் பூர்த்தி செய்யும்படி ஈசன் திருவுள்ளமிருக்குமாறு பிரார்த்திக்கிறேன்.

சாதாரணமாகத் தெலுங்கு நாடகங்களில் நான் ஆடுவதில்லை. எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலுக்காக, ‘பிரமேளா’ என்னும் நாடகத்திலும் ‘ராமதாஸ்’ நாடகத்திலும் நானவருடன் ஆடியதைப் பற்றி என் நண்பர்களுக்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். இவ்வருடம் இப் பிரதாப ருத்ரீயம் என்னும் தெலுங்கு நாடகத்தில், தெலுங்கு கண்டக்டரின் இச்சைப்படி, நான் இந்த நாடகத்தில் இரண்டு வேடம் தரித்தேன். ஒன்று; மகம்மதிய சிப்பாயாகவும் மற்றொன்று மகம்மதிய மந்திரியாகவும் சிப்பாயாக நடித்ததில் ஒன்று மாத்திரம் எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. எனது பால்ய நண்பரில் ஒருவரான ராமதுரையும் நானும் பிரதாபருத்ர மஹாராஜாவை கைதியாகக் கொண்டு போகும் படகில் மகம்மதிய சிப்பாய்களாக, மேல் தட்டில் உட்கார்ந்து பீடி பிடித்ததுதான்! இந் நாடகம் நடிக்கும் பொழுதெல்லாம் வருஷா வருஷம் காஞ்சீபுரம் கருட சேர்வைக்குச் சிலர் பிரார்த்தனையாகப் போய் வருவது போல், நாங்களிருவரும் பீடி பிடித்து வருகிறோம்! இம்மாதிரியான சிறு வேஷங்கள் தரிப்பதில் எனக்குத் தற்காலம் மிகவும் சந்தோஷம்; பாடம் படிக்க வேண்டிய கஷ்டமில்லை; முகத்தில் வர்ணம் பூசிக் கொள்ள வேண்டிய கஷ்டமில்லை; வார்த்தைகளை மறப்பதற்கில்லை; சரியாக நடிக்கிறோமோ இல்லையோ என்னும் பீதியில்லை, கடைசியில் வேஷத்தைக் கலைப்பதிலும் கஷ்டமில்லை! இவ் வருஷத்திய புது நிகழ்ச்சிகளுள் எஸ்பிளநேட் தியேட்டரில், எங்கள் சபை ஒரு நாடகம் நடத்தியதாகும். ராயல் தியேட்டரைப் போல் அவ்வளவு சௌகர்யமாயில்லாவிட்டாலும் விக்டோரியா பப்ளிக் ஹாலைவிட, இது மிகவும் சௌகர்யமாகத்தானிருந்தது. அன்றியும் அரியக் குடி ராமாநுஜ ஐயங்கார் அவர்களாலும் முசிரி சுப்பிரமணிய ஐயர் அவர்களாலும் இரண்டு சங்கீதக் கச்சேரிகளை எங்கள் சபையில் ஏற்பாடு செய்து பார்த்தோம். இவ்விரண்டிலும் எங்கள் அங்கத்தினர் அவ்வளவாக சிரத்தை எடுத்துக் கொள்ளாதபடியால், இப்படிப்பட்ட கச்சேரிகளை வைப்பதை இதன் பிறகு விட்டோம்.