நாடும் ஏடும்/"நாடும் ஏடும்"
"நாடும் ஏடும்"
தோழர்களே !
உங்களிடை இன்று எனது மதிப்பிற்குரியவரும், உங்கள் ஆசிரியரும் எனது முன்னாள் ஆசிரியருமான திரு. கந்தசாமி முதலியார் அவர்களை தலைமையில் பேசும் பெரும்பேறு வாய்த்தமைக்குப் பெரிதும் இறும்பூ தெய்துகின்றேன் மற்றும் நான் கல்வி கற்றுத் தேர்ந்த இதே பச்சையப்பன் கல்லூரி மாணவத் தோழர்களாகிய உங்களிடையே பேச நேர்ந்த இவ்வாய்ப்பை நினைத்தும் மகிழ்கின்றேன். இதுபற்றி மிகுதியம் பெருமை யடைகின்றேன். இவ்வாய்ப்பை எனக்களித்த இத்தமிழ்ச் சங்கத்தாருக்கு எனது மனமுவந்த நன்றி செலுத்த மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனது நன்றி அவர்க்குரித்தாகுக!
ஏடு எது ?
நாடு மக்களால் நிறையப்பட்டிருக்கும் ஒன்று. ஏடு நாட்டு மக்களால் கற்கப்படுவது; கையாளப்படுவது; செய்யப்படுவது, போற்றப்படுவது. அந்தந்த நாட்டிலுள்ள ஏடுகளைப் பார்த்தால் அந்தந்த நாட்டு மக்களைப்பற்றி, நாகரிகத்தைப் பற்றி, வாழ்க்கை வளங்களைப்பற்றி, நாகரிகத்தைப் பற்றி பாங்குற எளிதாக, ஏமாற மார்க்க மின்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆம்/ நாட்டிலுள்ள ஏடுகள், நாட்டில் உள்ளதை, நடப்பதை, மக்கள் வாழ்க்கை முறைகளை வகுத்துக் காட்டும் கண்ணாடியாகக் காட்சி யளிக்க வேண்டும். நாட்டு மக்களை மேன்மையுறச் செய்யும் தூண்டா விளக்காய்த் துலங்குதல் வேண்டும். நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பிருக்கவேண்டும். நாட்டோரை நடுநிலை பிறழா நல்நீதிபதிகளாக்க உறுதுணை செய்யும் ஊன்று கோலாக உதவவேண்டும்.
தொல்காப்பியம்
நிற்க, நான் இன்று நாட்டோடு, நாட்டு மக்களோடு நீங்காத் தொடர்பு கொண்டு பழகி வருகின்றேன். நீங்களும் உங்கள் கல்வி முடிந்த உடன் அத்தகைய தொடர்பு கொள்வீர்கள் என்றும் துணிபுடையேன். மக்களுடைய அன்றாட வாழ்வை அலசிப் பார்க்கின்றேன். அறிவோடு ஆராய்ந்து பார்க்கின்றேன். எனவே, நாட்டாரோடு நாட்டானாய் நாட்டு மக்களை யறிந்த ஒருவனும், உங்களைப்போன்று கலை பயிலும் மாணவத்தோழர்களும் சந்தித்து அளவளாவுதல் முற்றும் முறையே. முயற்சியோடு நாளும் நாளும் நடாத்துதல் மிக மிக நன்றே.
நான் இன்று நாட்டில் நடமாடி வரும் நானாவித ஏடுகளில் சிலவற்றைப் படித்திருக்கிறேன். சிலவற்றைப் பார்த்திருக்கின்றேன். பலவற்றைப்பற்றிப் பண்பாளர்கள் பன்னிப் பன்னிப் புகழ்வதைப் பல முறை கேட்டிருக்கின்றேன். அத்தகைய வித்தகரால் போற்றப்பெறும் பண்டை நூல்களில் ஒன்று, நந்தம் 'தொல்காப்பியம்'. நான் தொல்காப்பியம் தொன்மை நூலென்றும் தமிழிரின் தனித்தமிழ் நூல் என்றும், விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியால் எடுத் தியம்பும் ஆற்றல் வாய்ந்த அரும் பெரும் பொக்கிஷம் என்றும்; தமிழனின் தனி நாகரிகத்தை நாட்டோர் நன்கு உணர, நயமாக நவிலும் நிகண்டெனவும், தன்னேரிலாத் தமிழ் மொழி தரணியெங்குந் தழைத்தோங்க தகுமுறை வகுத்த ஒப்பிலாப் பண்டைத் தமிழ் இலக்கணமென்றும் அறிவேன். எப்படி? படித்துப் பாங்குறச்சுவைத்ததனாலா? அல்ல. படித்த பண்டிதர்கள், பேராசிரியர்கள் முதலியோரின் புகழுமுரையைக் கேட்டதனால் தான், நான் கூறுகின்றேன்; சிறிதும் கூச்சமின்றிக் கூறுகின்றேன், நான் தொல்காப்பியம் படித்ததில்லை என்று. தமிழனின் தொன்மைப் பெரு நூலைப்படிக்கவில்லை என்றுதான் கூறுகின்றேன். அது பற்றி நான் சிறிதும் வெட்கப்படவில்லை. வெட்கப்படக் காரணமுமில்லை, வெட்கப்படவேண்டி யதுமில்லை. என்? தமிழே தம் தனம் எனக் கருதும் பற்பல தமிழப் பண்டிதர்களிலேயே அநேகர் தொல்காப்பியத்தை பழுதற நன்குணர்ந்தோர் இல்லை. ஏன் கிடையாது? தொல்காப்பியம், பழம் பெரும் நூல் என்றும், இன்னும் பலவிதமாகவும் புகழப்படுகின்றதேயன்றி அது மக்களுள் சிற்றறிவுடைய மக்களுங் கூடப் புரிந்து கொள்ளக்கூடிய விதமாய் நாட்டிலே, மக்களுடைய மார்க்கட்டிலே வந்து நடமாடவில்லை; நடமாடும்படி செய்ய பெரும் புலவர்கள் விடுவதில்லை; அதற்காகப் பெருமுயற்சி எடுப்பதில்லை என்ற காரணத்தைத்தான் கூறமுடியும்.
தொல்காப்பியத்தைத் தமிழுக்குத் தொண்டு செய்யும் பேரறிவாளர்கள். பெரும் புலவர்கள், பண்டித மணிகள், நாவலர்கள் முதலானோர் சிறு சிறு நூல்களாகத் திரட்டி, சிறு சிறு வெளியீடுகளாக, சிறுசிறு வருவாயுள்ளோரும் வாங்கி வாசித்து வாழ்க்கை வளம்பெற உறுதுணை செய்தல் வேண்டும். அது அவர்தம் கடன். அறிவுக்கேற்ற வேலை, ஆராய்ச்சிக்கேற்ற பணி.
நல்ல தீர்ப்பு
வாழ்க்கையில் நாம் சிறந்த பொருள்களை, வாழ்க்கைக்கு வளமான பொருள்களைச் சிறிதும் வாட்டமின்றிப் பெறமுடியாது. ஓயாத உழைப்பும், சலியாத முயற்சியும் வேண்டும். சான்றாக முத்துக்களைப் பெறவேண்டுமானால் கடலின் கொந்தளிப்பையும், சுறா மீன்களின் உபத்திரவத்தையும் அகற்றி ஆண்மையோடு முத்துக் குளிக்க வேண்டும்; கண்ணைப் பறிக்கும் பற்பலவித ஆபரணங்கள் செய்யத் தங்கம் வேண்டுமானால், பாறையின் வெடிப்பிற்கும் மணலின் சரிவிற்கும் துணிந்த பல்லாயிரவர் பொற்சுரங்கங்களிலே அல்லும் பகலும் அனவரதமும் பாடுபட வேண்டியிருக்கின்றது. அதுபோலவேதான். ஏடுகளிலும், இலக்கியங்களில் சிறந்தவற்றை, நாட்டுக்கு நலம் பயக்கும் ஏடுகளை, மனிதனை மனிதத் தன்மையுள்ளவனாக விளங்கத் தூண்டும் இலக்கியங்களை, அறிவை அகலப் பரப்பும் அந்தாதிகளையடைய முன்னம் பெரிதும் சிறிதுமான பற்பல இடுக்கண்களோடு இடறி மோத நேரிடும். பலரின் பரிதாபத்திற்கும் கேலிக்கும் கண்டனத்திற்கும் உள்ளாக நேரிடும். அவற்றை அறிவாளர் அறமென மதியார். எடுத்த காரியத்தை எதிர்ப்புக்கும் ஏளனத்திற்கும் அஞ்சாமல் புகழ்ச்சிக்கும் பூசலுக்கும் மண்டியிடாமல் தொகுத்து முடிப்பர். அது மனிதர் மனிதருக்கு மனிதத்தன்மையோடு செய்யும் நேரிய செயல்; அதுதான் முறை நல்ல தீர்ப்பு.
திருக்குறள்
நந்தம் தமிழ் நாட்டில் தமிழ்மறையெனப் பல்லோராலும் போற்றப்படும் 'திருக்குறளைத் திருத்தமாக அறிந்தவர் மிகமிகச் சிலர். அத்தகையோரை விரல்விட்டு எண்ணவிடலாம். பலர் அதன் உள்ளுறை என்னவென்பதையும் அறியார். பண்டிதர்களிலும் பலர் அதனைப் பெருமைக்காகப் படிக்கின்றார்களே ஒழியக் கருத்தூன்றிக் கற்பவர் மிகச் சிலரே. நானும் திருக்குறள் அறிவேன் என்று பேசிப் பெருமிதம் அடைவோர் பலராவர். அவர்தம் நிலைகண்டு இரங்கார் எவரே !
போராட்டம்
இலக்கியங்கள் ஏடுகள், மக்களின் மார்க்கெட்டிலே மலிந்து நடமாட வேண்டுமானால், இலக்கியம் கோபுர உச்சியி லிருந்து குப்பை மேட்டுக்கு வரத் தயாராக இருக்க வேண்டும். கற்றோரும் மற்றோரும் பண்டிதரும் பாமரரும் பணக்காரனும் ஏழையும் படித்துணரும் பாங்கிலே, எளிய நடையிலே இயல்பான இயற்கைக் கருத்துக் கூறும் கருத்தைக் கவின்பெறச் செய்யும் கருத்துக்கள் நிரம்பியும் அமைய வேண்டும். ஆனால் நம் நாட்டு இலக்கிய கர்த்தாக்கள் செய்துள்ள இலக்கிய சேவை இதற்கு நேர்மாறானது. அதனைப் பண்டிதரும் பகுத்தறிய முடியாத பண்புடனே சமைத்துள்ளனர், சிற்றறிவினர் சிந்தனையில் சிந்திக்கவும் கூடாத சிறப்புற்று விளங்குகின்றன இந்நாட்டு ஏடுகள்.
இன்றைய இலக்கியங்களிலே சிலவற்றிற்கு மூலத்தைவிட அவற்றின் விரிவுரைகளும், விருத்தியுரைகளும் பன்மடங்கு கடினமாகத் திகழ்கின்றன. மற்றும் இக்காலப் பண்டிதர்கள் தம் காலத்தை ”இந்த உரை நல்லது" அல்லது "அந்த உரை நல்லது” இது இன்னாரால் கொள்ளப்படுவதால் சிறப்புடைத்து; அது அன்னோரால் கொள்ளப் பட்டமையால் ஒவ்வாதது என இத்தகைய போராட்டங்களிலே கழிக்கின்றனர் சிறிதும் நாட்டைப்பற்றிய நாட்டமின்றி கடமை பற்றிய கருத்தின்றி. மற்றும் இத்தமிழ்ப் பண்டிதர்கள் ஒருவர் மீதொருவர் பொறாமையும் பொச்சரிப்பும் பூண்டு ஒருவரையொருவர் தாக்கிப் பேசி எழுதும் இழிகுணத்தையே மேற்கொண்டுள்ளனர். எனது மதிப்பிற்குரிய தலைவர் பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்கள் கூறுவார். சில சமயம் இந்தத்தமிழ்ப் பண்டிதர்கள் ஒரு பன்னிருவர்சேர்ந்து ஒரு சிறு மாநாடுநடத்தினாலும், அருகே ஒரு ஸ்பெஷல் போலீஸ் வேண்டும் அவர்களிடை நிகழும் சண்டை சச்சரவைத் தீர்ப்பதற்காக என்பது தான் அது. அது கேட்டு நாம் மனம் மிக மருளுவதுண்டு. ஆனால் சென்ற திங்கள் காஞ்சியிலே பொங்கல் விழாக் கொண்டாடினர். நானும் போயிருந்தேன். திரு. மே. வீ. வேணுகோபாலன் என்பார் தலைமை தாங்கினார். நம் மதிப்பிற்குரிய நண்பர் திரு. மா. இராசமாணிக்கம் அவர்கள் சொற்பொழிவு ஆற்றுங்கால் ஓர் ஐயவினா தரப்பட்டது கூட்டத்திலுள்ள சிலரால். ”சிவம்” என்னும் சொல் வடமொழியா? அன்றித் தமிழா என்பதே அவ்வையவினா. அதற்கு திரு. இராசமாணிக்கம் அவர்கள் சிவம் என்பது தனித் தமிழ்ச் சொல் தான் என்றார். தலைவர் திரு. வேணுகோபாலன் அவர்கள் தன் முடிவுரையில் சிவம் என்னும் சொல் தமிழல்ல; அது வடமொழிதான் என்று வன்மையாகக் கூறினார். உடனே இராசமாணிக்கனார் எழுந்து வேணுகோபாலரைப்பார்த்து அது தமிழ்ச் சொல்தானே; மற்றும் அது மறைமலையடிகள் கருத்தாயிற்றே என நவில; வேணுகோபாலர் சபையோரைப் பார்த்து "அந்த மறைமலையடிகள் கருத்திருக்கட்டும்; இந்த வேணுகோபாலன் சொல்லுகின்றேன் சிவம் என்னுஞ்சொல் வடமொழிதான் என்று, என்று கூறிமுடித்தார். இவ்விதம் வழக்காரும் வழக்கத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு மீளாக் குழப்பத்தில் திளைக்கின்றனர். அவர்களின் பெருமையெல்லாம் பன்னூற் பாண்டித்ய மெல்லாம் மற்றவர்களின் நூல்களில் குற்றங் குறை காண்பதில் உறுதென உள்ளத்தில் உறுதி கொண்டுள்ளனர். மற்றொருவர் சொல்லில், நூலில் காவியத்தில் குறைகாணாவிடில் தம் திறமை முற்றும் முதிர்ந்ததல்ல என்ற மூட நம்பிக்கையை மூல மந்திரமாகக் சொண்டிருக்கின்றனர். என்னே! இவர் தம் அறிவும், ஆற்றலும், படிப்பும் பண்பும் செல்லுமாறு? மற்றும் ஒருவர் எழுதும் ஏட்டிற்கு மற்றொருவர் மறுப்பும் அம்மறுப்பிற்கு மறுப்பாகப் பிறிதொரு ஏடு எழுதுவதும் இந்நாட்டின் அன்றாட நிகழ்ச்சிகளாய் நீடிக்கின்றன. சான்றாக இன்று தலைமை தாங்கும் அறிஞர் ஒரு நல்ல ஏட்டை நாட்டிற்கு நல்கினார் என நினைமின். மற்றும் அதில் யாதொரு குற்றங்குறைகளுமில்லை யெனவும் கொள்மின். அதிலே சொற்செறிவும் பொருட் செறிவும் பொருந்தி இருக்கலாம். இலக்கிய ரசமும் காவியக் குழைவும் எதுகை மோனைகளின் இயற்கை யமைப்பும் சரிவர அமைக்கப்பட்டிருக்கலாம் கலைப் பண்பாடு மிகுந்திருக்கலாம். கருத்துப் பிழை கடுகத்தனையும் காணக் கிடைக்காதிருக்கலாம்; என்றாலும் புலவர் எவரையேனும் அதுபற்றி அபிப்பிராயம் கேட்டால் அவர் அது முற்றும் நல்ல நூல் என்று தீர்ப்புக் கூறார். குறையேதேனும் காண்டல் அன்றோ அவர் தம் அறிவுடைமைக்குப் பூஷணம், புலமைக்கு அணிகலன்; ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டு. எனவே அவர் "இந்நூலாசிரியர் செய்ததெல்லாம் சரிதான் ஆனாலும் நூல் முற்றிலும் அவருடைய சொந்தமன்று; முற்றம் இரவல். அதில் 100-க்கு 20 பாகம் திருக்குறளையும் 20 பாகம் சிலப்பதிகாரத்தையும் 20 பாகம் சங்க நூற்களையும் 10 பாகம் மணிமேகலையையும் இவ்வண்ணமாக ஒரு நூலிலிருந்து ஓர் முத்தையும் மற்றொரு நூலிலிருந்து மாணிக்கத்தையும் பிறிதொரு நூலிலிருந்து பிறிதொரு வைரத்தையும் பொறுக்கி எடுத்துக் கோத்திருக்கின்றார்" என்று அவர்பால் குற்றங்காண்பர் இதுவே தம் கடன் என்று பணியாற்றும் புலவர் பெருமக்களை என்னென்று இயம்புவது.
இலக்கியப் பண்டிதர்களும் பண்டித மணிகளும் பாவலர்களும் மற்றுமுள்ள கலைஞானிகளும் கலா ரக்ஷகர்களும் நாட்டைப்பற்றி, நாட்டிலே வதியும், தமிழ் நாட்டிலே வாழும் நாலரைக் கோடி மக்களைப்பற்றிக் கவலையுறார். எண்ணியும் பாரார். எவர் சொல்லையும் கேளார்; நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பு கலப்பு உண்டா? இல்லையா? என்றும் தம் கண் கொண்டு பாரார். "எல்லாமறிவோம் யாம்; என இறுமாந்து இன்புறுவர். நாட்டில் நடமாடும் ஏடுகளின் வழி, ஊட்டும் உணர்ச்சிகள் ஊடே, ஏற்றும் எண்ணங்களின் ஏவற்படிதான் நாட்டு மக்கள் செயலாற்றுவர் என்பது இவர் தம் சிந்தனைச் சுடரிலே சிறிதும் தோன்றுவதில்லை. நாட்டின் நிலைக்கேற்ற நிகண்டுகள் நிச்சயம் தேவை என்பதை நினைத்துப் பார்ப்பதும் இல்லை. நாட்டு ஏடுகள் எடுத்தியம்புவது என்ன ? நகரிலே வீட்டிலே நடப்பது என்ன என்பதை ஊர்ந்து உணர்கின்றார்களில்லை.
வீரம் விளைக்கும் காவியங்களும், கற்பின் மாட்சி விளக்கும் கதைகளும் நீதி நடு நின்று நவிலும் நிகண்டுகளும் நந்தம் தமிழ்நாட்டிலே உண்டு என்று உள்ளங் குளிரும் புலவோர் அந்த நிகண்டுகள் அந்த வீரம் விளைக்கும் காப்பியங்கள் மக்களிடை, எத்துணை மலிவாக எளியதாக நிலவுகிறது, நிலவச்செய்கின்றனர். அல்லது மலிவாக எளிதாக இவ்விலக்கியங்களை மக்கள் கடை வீதியிலே நிலவும் நிலைமைதான் நாட்டில் உண்டா என்பது பற்றிக் கனாக் காண்பதும் கடினம். கற்றோரின் கவிதாத் திறனும் ஆராய்ச்சி அறியும் புலமையின் பூஷணமும் சிந்தனையின் சிறப்பும் ஏற்றத்தின் எடுத்துக்காட்டும் மற்றும் எல்லாப் பழங் காவியங்களுக்குப் பதவுரை பகருவதோடு சரி, நிகண்டுகளுக்கு நித்தநித்தம் புத்தம் புதிய உரைகளும் விளக்கங்களும் அள்ளியள்ளித்தெளித்து அதனை எவரும் அறிய முடியாத அகராதி வைத்துத்தான் படிக்கநேரும் பரிதாப நிலைக்கு மக்களை இழுத்துச் சென்று மயங்கவைப்பதே மாண்பு. பழமையோடு அன்றாடம் தோன்றும் புதுமைக் கருத்துக்களை ஒட்ட வைத்து "என்னே எந்தம் முன்னோர் மூதறிவு" என்று பழமையில் புதுமை கண்டு பூரிப்படைவதே புலமையின் பொக்கிஷம் என்ற நிலைமைதான் இன்று நாட்டிலே நர்த்தனமாடுகின்றது. மக்கள் மருளும் படியான மகா கடின நடையையே பின் பற்றுகின்றனர். பழையனவற்றிற்குக் கூறும் தத்துவார்த்தங்களும் விளக்கங்களும் எளிதிலே புரியாதவை. அவற்றை விளங்கத் தெரிந்துகொள்ள விழைவோர் இப்புலவர் குழாத்தை அண்டுவதே ஆகாத காரியம். ஏன்? இலக்கியம், புலமை எனும் அரியணையிலே அரசோச்சும் செம்மல்கள் பால் ஏதோ சிறிது தெரிந்தவர் செல்வது எளிதல்லவே! மற்றும் தம்மோடு ஒப்பாருடனும் மிக்காருடனுந்தான் வாதம் நிகழ்த்தல், ஆராய்ச்சியுரை ஆற்றல், வினா விடையறுத்தல் முறையென அம் மூதறிஞர் கருதிக் கொண்டிருக்கின்றனர். அதைத் தடுத்துக் கேட்பது ஆகாது. அது ஆசான்--மாணாக்கன்--குரு--சிஷ்யமுறைக்குப் பங்கம் விளைக்கும் செயல். அடக்க ஒடுக்கமாய் ஆசான் அறவுரைகேட்டு வாளாயிருப்பதே வணக்கத்திற்கறிகுறி, அன்றிக் குறுக்கே கேட்பது குதர்க்கம்; குறும்புக்காரன் செயல் அது; என்ற கருத்துடையவர்கள் தான் அவர் தம் சீடனாகிச் செம்மை யுறலாம் அவ்விதம் இருந்தும் தப்பித்தவறி எவனாவது சந்தேகம் சரிவரத் தெரியவில்லை; புரியவில்லை என்று கேட்டுவிட்டால் "அப்பா; உனக்கு அந்தப் பக்குவம்--இதனை புரிந்து கொள்ளும் நிலைக்கு நீ இன்னும் வரவில்லை; அந்நிலையை அடைந்த பின்வா; என வாயுறை வழங்குவர். 'எந்நிலை அந்நிலை' என உசாவினால் உறுமுவர் அந்தோ! அந்நிலை அவனருளின்றிக் கிட்டாது. அவனை (கடவுளை)த் தொழு என்று திருவாய் மலர்ந்தருளுவர்.
பழமையில் மூழ்குதல்
பழையன வற்றிற்கு விளக்கம் விருத்தியுரை கூறுதலன்றி வேறு நூல்கள் இந்தக் காலத்திற்கும் கருத்திற்கும் ஏற்றமுறையிலே, நடையிலே செய்து தர இக்காலப் புலவர்களால் முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் பழையனவற்றைப் புது மெருகிட்டுப் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைவதே தம் செயற்கருஞ் செயலெனக் கருதுகின்றனர் மக்கள் சிந்தனையைத் தூண்டும் நூல்கள் இயற்றுவதற்கு, மக்கள் வீரம் அடைவதற்கு, நீதியை நடுநின்று நோக்குதற்கு, சாதி பேத சமயச் சண்டைகளை ஒழிப்பதற்கு, பொருளாதார மாறுபாட்டை மடிப்பதற்கு, புத்துலகம் சமைப்பதற்கு, கயமைத்தனமான கண்மூடி கபோதி பழக்க வழக்கங்களை மதத்தின் பேரால், சமயத்தின் பேரால், சாஸ்திரத்தின் பேரால், பழமையின் பேரால் பின்பற்றி, வறுமையில் மடமையில் கண்மூடித்தனத்தில் மக்கள் மருண்டு உழலும் மாயாமார்க்கத்தை வேரறுப்பதற்கு அவசியமானவற்றை அணைந்து பற்று அல்லாததை யகற்றி, எதையும் பகுத்துணர்ந்து பார்க்க வழிகோலும் ஏடுகள் இயற்றினார்களா? இயற்றுகின்றார்களா? இக்கால இலக்கியக் கர்த்தாக்கள் இனியேனும் இயற்றுவார்களா? நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பில்லா வகையிலே நாட்டின் இனத்திற்கு இம்மியும் பயன்படாக் காவியங்களும் ஏட்டில் எடுத்தியம்புவது ஒன்றாயும் எண்ணத்திலே வேறாயும் அன்றாட வாழ்க்கையில் நாட்டில் நடப்பது பிறிதொன்றாயும் ஏடுகள் அமைக்கப்படும்வரை இனம் எழுச்சியுறுமா? மக்களிடையேயுள்ள மடமைத்தனம் மறையுமா? ஏட்டின் மூலம் நாட்டின் நிலையறியலாம் மேனாடுகளிலே இது சர்வ சாதாரணம்; அவ்விதம் நாட்டின் நிலை நவிலா ஏடு மாளட்டும். இலக்கியம் இறக்கட்டும். கலை கலையட்டும் நமக்கு வேண்டுவது ஏட்டைப் புரட்டினால் நாடு, நாட்டின் மக்கள், மக்கள் வாழ்க்கை, அவர்தம் வாழ்க்கை வளன், நாகரிகம் இன்ன பிற யாவும் தெள்ளிதின் விளங்குதல் வேண்டும்; அது ஏட்டோடு நிற்றல் சாலாது, நடமுறையில் நடப்பதையே நவிலும் நூலாதல் வேண்டும்.
ஒரு காலத்திய ஏடுகள் பிறிதொரு காலத்தின் நிலைக்கு. கருத்திற்குப் பொருந்தாவெனின் அது மாற்றப்பட வேண்டும். இன்றேல் அந்தந்தக் காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த ஏடுகள் உண்டாக்கப்பட வேண்டும். உள்ளத்தை உள்ளவாறு உணரச்செய்யும் ஏடுகள் தேவை. மடமையை மடியவைக்க வழிகோலும், வழிகாட்டும் வளம் பொருந்திய காவியங்கள், கதைகள் தேவை. மக்கள் நிலையை உயர்த்த உறுதுணையாகும் ஏடுகள்தான் தேவை. இன்றேல் நமக்கு ஏடுகள் வேண்டாம். அவற்றால் இனம் இழிவுற வேண்டாம். மடமைக்கு வித்திடும் மாண்புள்ள மறைகள் வேண்டாம். ஏன்? பண்டை இலக்கியங்களில்லாமல் எந்த நாடும் முன்னேற வில்லையா? உலகத்தாரால் "உயர்ந்த நாடு" என்று உரைக்கப்படவில்லையா! இலக்கியத்தால்தான் நாடு முன்னேற முடியுமா? சான்றாக, துருக்கியும் ஆஸ்திரேலியாவும் பண்டைய இலக்கியப் பெருமை வாய்ந்த நாடுகள் அல்லவே! மக்கள் அங்கு மாக்களாகி விட்டனரா; இலக்கியமில்லாத காரணத்தால், கருத்துக்கினிப் பூட்டும் காவியங்களோடு காலத்துக்கேற்ற கதைகளும் நாளடைவில் தோன்றத்தான் செய்யும். நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்புள்ள நாடுகள் என்றும் நலியாது. நாட்டிலே சிறந்த ஏடுகள் எல்லையற்றவையிருப்பினும் அந்நாட்டிற்கும் அவ்வேடுகட்கும் சிறிதும் சம்பந்தமின்றிச் சதுர் ஆடிக்கொண்டிருந்தால் அந்நாடு நாளடைவில் நசித்துப்போகும். கலை நாகரிகம் யாவும் மறைந்தொழியும். பண்டைமான் தமிழும் இங்ஙனம் தொடர்பற்றே செல்லுமானால் மடமைக்கு மண்டியிடும் எடுப்பார் கைப் பிள்ளையாய் ஏங்கித் திரியும் என்பது திண்ணம்.
சான்றாக இன்னும் பழம் பெரும் இலக்கியங்களைப் பெற்றுள்ள கிரீஸ், சைனா தேசத்தைப் பாருங்கள். அந்நாடுகளிலேயுள்ள ஏடுகள் மிகச் சிறந்தவை. தத்துவத்திலே தரணி முழுதும் ஆள்பவை. எனினும் அந்நாடுகள் சிறப்பற்றுச் சீர்கேடுற்றிருப்பதேன் ? இலக்கிய மெல்லாம் இனத்தை மறந்ததுதான் காரணம்; ஏடுகள் எல்லாம் நாட்டின் நிலையை எண்ணாத ஏமாளித்தனத்தினால் தான் என்றால் அது மிகையாகாது. முறை. முற்றும் உண்மைகூட,
வாழ்வையும் தாழ்வையும் வளர்ப்பது ஏடே
நாடு மேன்மையுறுவதும் தாழ்வுறுவதும் ஏட்டிற்கும் நாட்டிற்கும் உள்ள தொடர்பைப் பொறுத்துத்தானிருக்கிறது. நாட்டிலே நலிந்தோர் மிகுதியாயினகாலத்து, ஏட்டில் அவர் தம் வறுமைக்குக் காரணம் கூறாது, இழிவுக்குமருந்து இயற்றாது, பூங்காவையும், கோயிலையும் இளங் காதலரையும், காதல் நெறியையும் அரசரையும் அந்த உலகத்திலே (தேவலோகத்திலே) அநுபவிக்கப்போகும் இன்பத்தையும் பற்றி இணையிலாக் காவியங்கள் எண்ணிறந்தன இயற்றப்படுமேல் அவ்விலக்கியங்களால் எவர்க்கு என்ன பயன் விளையும் ? வறுமையால் வாடும் மக்கள் அதனைப் படித்தால் அவர் தம் வாட்டம் வாடுமா? அன்றி வளருமா? என்று சிந்தியுங்கள் தோழர்களே! அரசபோகம் அதிகமாகுமா? அன்றி அரசர் நாட்டு வறுமையாயினர் வாட்டம் போக்க நாட்டம் உறச்செய்யுமா? அதற்கு வழிகாட்டுமா? வாழ்வில் சலிப்பூட்டுமா அன்றி "முயற்சி திருவினையாக்கும்" என்று முயன்று வாழ்க்கையை வளம்படுத்தி வாழ வகை சொல்லுமா? என்று தான் உங்களைக் கேட்கின்றேன்.
இந்நாட்டு ஏடுகள்
நம் நாட்டு இலக்கியங்களிலே காண்பது ஒன்று. நாட்டிலே நடப்பது பிறிதொன்று. நான் ஊர் சுற்றிச்சுற்றிக் களைப்பால் கால்வாய் ஓரங்களிலே களைப்பாறும்போதும் இரயிலிலே பிரயாணம் செய்யும்போதும் மற்றும் பலப்பல காலங்களிலும் சிந்தித்திருக்கின்றேன்; சிந்தித்து வருகிறேன். பல நாட்கள் தூக்கம் வராமல் துன்பப்பட்டுமிருக்கிறேன் இந்த நாட்டு ஏடுகளில் காணும் கவின் பெறும் காட்சிகளை நாட்டிலே ஏன் காணமுடியவில்லை? காணப்படாததற்குக் காரணம் என்ன? என்பன பற்றித் துருவித்துருவி ஆராய்ந்து ஆயாசமடைந்த காலமுமுண்டு. இந்த நாடு எடுப்பார் கைப்பிள்ளையாய் ஏமாளித்தனம் மிகக்கொண்டு இருப்பதே அடிப்படையான காரணமாகலாமோ வென ஐயுற்றகாலமு முண்டு.
நான், நம் நாட்டு ஏடுகளிலே படித்திருக்கின்றேன் நம் நாடு நன்செய்யாலும் புன்செய்யாலும் நாற்புறமும் சூழப்பட்டதென்று நாடெங்கும் செந்நெல்லும் செங்கரும்பும் மற்றும் பல விளை பொருள்களும் மலிந்து கிடக்குமென்று. ஆனால் ஊரிலே, நாட்டிலே, நகரிலே நாம் காணுவது நேர் மாறான காட்சிகள். படிப்பது பசிப்பிணி யறியா மக்கள். பார்ப்பது பசியால் மிகநொந்து மெலிந்து வாடி வதங்கும் பல்லாயிரக்கணக்கான பாட்டாளிகள். ஏட்டில் காண்பது கண்ணுக்கினிய காட்சி தரும் கூடகோபுர மாடமாளிகைகள்; அலங்காரமான ஆபரண வகைகள் ; இன்ன பிறவற்றை இன்பம் நுகரும் மக்கள். ஆனால் கண்ணால் காண்பது காதால் கேட்பது யாவும் உண்ண உணவின்றி இருக்க இடமின்றி உடுக்க உடையின்றி ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கும் பரிதாப நிலைமை. நீர் நிலவளம் மிகுந்த செல்வமுடைத்தாய்ச் சீர்பெற்றிலங்கும் நாடு என ஏட்டிலே நவிலப்படும் நாட்டிலே ஏன் இந்தத் தோற்றங்கள்; எண்ண முடியாத ஏழைமக்கள் ; பசிக்கு உணவில்லாத பச்சிளங் குழந்தைகள் என்று கேட்கின்றேன்.
ஏன் பல இலட்சக்கணக்கானவர் சிங்கப்பூர், மலாய் நெட்டால் முதலிய நாடுகட்குத் தத்தம் பெண்டுபிள்ளைகளோடும் தன்னந்தனியராகவும் தாம் பிறந்த நாட்டைவிட்டு அல்லல்பட்டு அரை வயிற்றுக் கஞ்சிக்காவது வழி கிடைக்காதா என்று வாட்டத்தோடு போகின்றனர்? இறைவனைப் பாடும் இலக்கிய கர்த்தாக்கள், பகலவனைப் பாடும் பண்டிதர்கள், காதலைப் பாடும் கலைவாணர்கள், இயற்கை எழிலையும் நட்பின் மேன்மையை நாடறியச் செய்யும் நாவலர்கள், பண்டைப் பெருமையைப் பாடும் புலவர் குழாங்கள், பரமன் திருவிளையாடலைத் திருத்தமாகப் பதிப்பிக்கும் திருக்கூட்டத்தார்கள் அய்யன் உலா அம்மை அந்தாதி பாடி எல்லாம் வல்ல எம்பெருமானை ஏத்தியேத்தித் தொழும் பணியிலேயே ஈடுபட்டு "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்" என்ற அடியை இழைத்து இழைத்துப் பாடிச் சுவைக்கும் பக்திமான்கள் மற்று எவராவது இந்த நாட்டிலே செல்வம் கொழித்திருக்க, எம்பெருமானுக்கு எல்லையற்ற திருக்கோயில்கள் எழுப்பப்பட்டு அன்றாட ஆறுகால பூசை தவறாது நடந்துவர அதற்கென மலைபோல் செல்வம் முடங்கிக்கிடக்க, இத்தனை குடும்பங்கள் மண்ணோடு மண்ணாய்ப் பசியால் வாடி மடிகின்றனவே என்பதை நினைத்ததுண்டா? நெஞ்சில் ஈரம் இருந்து கைவைத்துச் சொல்லத் துணிவுண்டா? அவ்வேழை மக்களின் பரிதாப நிலையைப் பாடினதுண்டா?
பாடிப் பாரோரின் பகுத்தறிவுக்குச் சிந்தனை தந்ததுண்டா? வறுமையை நீக்க வழி கோலினதுண்டா? வறுமை தாண்டவமாட, நாடு நலிந்துகொண்டே போக அடிமைத் தளை அழுந்திக்கொண்டே செல்ல, பழமையைப் பிடித்துக்கொண்டு, மக்கள் பக்குவமடைய, மனோ உறுதிகொண்டு வாழ்க்கையில் வழுக்காது விழிப்போடு செல்லச் சமுதாயத்தொண்டு செய்யும் ஏடுகள் தேவையாகும் நேரத்திலே, இதிகாச புராணங்களைப் பிடித்துக்கொண்டு அல்லியரசாணி மாலை பாடிக்கொண்டு, கம்பன் காவியரசனையில் கருத்தைச் செலுத்திக்கொண்டு மதத்திற்கு மாசுவரா வகையிலே, ஆண்டவன் லீலையை அப்பழுக்கின்றி உள்ளதுள்ளபடி, நவிலும் நல்லெண்ணம் ஒன்றைமட்டும் உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, காலத்திற்கும் கருத்திற்கும், நிலைமைக்கும், சுற்றுமுள்ள சூழ் நிலைக்கும் ஏற்ப ஏடுகளை உண்டாக்காது மகிமையில் கண்மூடி மோகம்கொண்டு இனத்தை இழிவு செய்யும் இலக்கிய ஏடுகளை ஏத்தி ஏத்திக் தொழும் இலக்கிய வீரர்களே! உங்கள் கடமை இதுவா? இது முறையா? அடுக்குமா? என்றும் நிலைக்குமா இந்த நீதி? நீங்கள் சிந்தியுங்கள், நாட்டுக்கும் ஏட்டிற்கும் தொடர்பில்லாவிட்டால் நாட்டு மக்களுக்கு வழி காட்டும் வகை யென்னவென்று: இனநலனைக் கருதா இலக்கியப் பணிபால் இனம் இன்புறுமாவென்று. இனத்திற்கு நலம் பயக்கும் ஏடுகளை இயற்றுதலே நம் கடமை. அதுவே நம் வேலை. அதுவே மனித சமுதாயத் தொண்டு. முற்காலத்தில் தமிழன் தன்னலங் கருதாது உழைத்தான் தரணியிலுள்ளோர் தம் நலனுக்காக என்பர். சூதும் வாதும் விருப்பும் வெறுப்பும் அறியான் தமிழன்; மானமே பெரிதென மதித்தான் தமிழன்; கப்பலோட்டினான் தமிழன்; கடாரம் வென்றான் தமிழன்; எவ்வுயிரையும் தன்னுயிர்போல் காத்து வந்தான் தமிழன் என்று புலவர் பெருமக்கள் இஞ்ஞான்று பறை சாற்றுகின்றனர். உண்மை. மேலும் முற்காலத் தமிழர் வாழ்ந்த வகையைக் கூறுங்கால் நமது திரு. வி. கலியாணசுந்தரனார் நடையிலே கூறவேண்டுமானால் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கூறலாம். இவ்வரிய உண்மைகளுக்கு நந்தம் பண்டை இலக்கியங்களிலே தக்க சான்றுகள் உள. ஆராய்ச்சி வல்லுநரின் முற்ற முடிந்த முடிபுகளும் உள. அத்தகைய இலக்கியங்கள் இன்று மக்கள் கடை வீதியிலே மலியாமல், ஏதோ சிற்சில புராண இதிகாசங்களும் ஆண்டவன் அருள் திருவிளைடால்களைப் பாடும் பாசுரங்களும்மட்டும் மலிந்திருக்கக் காரணம் என்ன? ஏன் நம் ஏடுகள் நாட்டிற்கு நன்மை விளைக்கவில்லை. மற்றும் நன்மை விளைத்திலவாயினும் நாசம் விளைக்காமலாவது இருக்கின்றனவா? அதுவும் இல்லை ஏன் இந்த நிலை?
மதம்பிடியா ஏடுகள்
நமது பண்டிதர்கள் இலக்கிய ஏடுகளை மதம் எனும் போர்வையால் மறைத்துள்ளார்கள். இந்த நாட்டு ஏடுகளால் நாட்டுமக்கள் பயனுறவேண்டுமாயின், இந்த நாட்டு மக்கள் நற்பண்புள்ள ஏடுகளைப்பெற்று வாழ்வில் ஏற்றமுற வேண்டுமானால், இந்த மதப்போர்வையைக் கிழித்தெறிய வேண்டும். இந்த மதமெனும் மாசு இலக்கியங்களை விட்டு அகலாமுன்னம் நமக்கு நன்மை பயக்கும் நல்ல இலக்கியங்களோ ஏடுகளோ இல்லாமல் போகும். இலக்கியமின்றி நிலைத்திராத மதம் மதமல்ல. அது வெறும் மதந்தான். மக்களுக்குள்ள மதத்தின் எடுத்துக்காட்டுதான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இலக்கியமின்றி இலங்கமுடியா மதம் வேண்டாம் நமக்கு. மதமின்றித் திகழ வொண்ணாத இலக்கியமும் வேண்டாம் நமக்கு. இந்த மதப் போர்வையைப் போர்த்துப் போர்த்து மக்களை மடையர்களாக்கிவிடுகின்றன இந்நாட்டு ஏடுகள். இந்த ஏடுகளைப் படித்துப் படித்து மக்கள் வாழ்வைப் பெரிதென எண்ணாது, மகேஸ்வரன் முன் மண்டியிட்டு மாலை பாடினால்மட்டும் போதும்; மண்டபங்கள் கட்டினால்மட்டுப் போதும், திருவிழாக்கள் தினந்தினம் நடத்தினால் தான் நாட்டுக்கு நன்மை என்று நம்பி தம் அறிவு ஆக்கம், சொல், செயல், சிந்தனை, சிறப்பு, ஊக்கம்-உறுதி-உழைப்பு, கல்வி, கேள்வி முதலிய எல்லாவற்றானும் முற்போக்கடைய முற்படாமல் அவைகளை, வீணே, ஆண்டவனின் அற்புத லீலா விநோதங்களைப் படிப்பதிலும், பாடுவதிலும், விழாக் கொண்டாடுவதிலும், காலத்தை, கருத்தைச் செலவிடுகின்றனர். ஸ்தல புராணங்களைப் படித்துப் படித்து ஸ்தோத்திரத்திலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.
மக்கள் மனத்தாலும் நினைக்கொனாத மாசுமிக்க மடத்தனங்களை மகேசுவரனுக்கேற்றி மனங் குழைந்து மகிழ்கின்றனர். கடவுள் பேரால், சாஸ்திரத்தின்பேரால், சாதிமதப் போராட்டங்கள் சர்வ சாதாரணமாய் நாட்டில் நடைபெறுகின்றன. மக்களை மக்கள் மதியாத மனப்பாங்கும் ஒருவனை ஒருவன் தொடாத, தொல்லைதரும் தொட்டில் பழக்கமும், சாதிச் சண்டை, சமயச் சண்டை, கண்மூடி கபோதி வழக்கங்களும் மக்களிடையே மலிந்து கிடக்கக் காரணம் ஏடுகள் எல்லாம் எம்பெருமான் லீலைகளையும் இலக்கியமெல்லாம் இதிகாசங்களையும் புராணங்களெல்லாம் கடவுளரைப்பற்றிய மாயத்தனமான கதைகளையும் எடுத்தியம்பி மக்களின் மதியை மதம் எனும் மாசால் மறைத்து மடித்து மாபாதகஞ் செய்வதல்லால் வேறு காரணமும் உளதோ? கூறுமின்? இவ்விதம் கேட்பதில் குற்றமென்ன தோழர்களே! நாட்டில் நடைபெறும் நாசவேலைகள் எல்லாம், கடவுளை, மதத்தை முன்வைத்தல்லது மற்றெதன் வாயிலாய் நடைபெறுகின்றன. நாட்டிலே பலர் தீண்டாதார். நாட்டிலே அன்பே வடிவமாய் அனைத்துலகும் படைத்துக் காத்தழிக்கும் அண்ணலார் கோயில்கள் அநேகம். அந்தணருக்கு அவர் அண்மையிலே இருக்க இடம். ஆனால் அக்கோயிலைத் திருத்தமாய்ச் சமைத்த சிற்பிக்கு இடம் வெகு தொலைவிலே நந்தி தேவர் அருகிலே. மேலும் தீண்டாதார் அருள் திரு ஆண்டவனின் திருக்கோயிலைத் தீண்டவும் தகுதியற்றார். அத்தீண்டாதவரைக் கோயிலுக்குள் நுழையவைக்க வேண்டுமென விழைந்தால் அதற்கு மறுப்பு, வேத ஆகம சாஸ்திரங்களிலிருந்து தரப்படுகின்றது. இதனையும் ஐயங் கொள்ளாமல் அறியாமல் சிறிதும் ஆராய்ச்சி செய்யாமல் மதத்தால் அவர் தம் மதி மந்தமடைந்திருப்பதால் பெரிதும் மதிக்கின்றனர். இது தானா ஏடுகளின் இணையிலாத்தொண்டு
ஏடுகளிலே மதம், அங்கும், இங்கும், எங்கும், என்றும், அநுதினமும் காட்சியளிக்கின்றது. இந்நிலை மாறவேண்டும். மாற்றப்படவேண்டும். மாற்றித்தான் தீரவேண்டும். நாம் பிற நாட்டு நூல் நிலையங்களைச் சென்று பார்ப்பின் ஆங்கு, கற்றறிந்த நல்லோரால் இயற்றப்பட்ட மத நூல்கள் மிகச் சிலவாகத் தானிருக்கும். அறிவுரை பகரும் ஏடுகள் எண்ணற்று மிளிரும். மதங்கலவாத ஏடுகளின் எண்ணிக்கை எண்ணற்கரியன.
ஒவ்வொரு வீட்டிலுமுள்ள படிப்பறையிலும் இத்தகைய நிலைமைதான் உண்டு. ஆனால் இங்கோ! இதற்கு நேர் மாறான நிலைமை. இந்த நாட்டிலே வீடுகட்டுவர், அதிலே பலப்பல அறைகளும் அமைப்பர். மாட்டுக் கொட்டகை ஒருபால், பொக்கிஷ அறை ஒருபால், சமயலறை மற்றொருபால். பெண்டிற் வீட்டு விலக்கமானால் வதிய மற்றோர்பால் அறை அமைப்பர் வீட்டினிலே. மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மறவார். ஆனால் அறிவூட்டும் அறவுறை மிக்க ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிப் பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது அவசியமானது, அலட்சியப் படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனயில் தோன்றாது. யாவும் மதப் பயித்தியத்தின் விளைவு தான் எனில் மிகையாகாது. வீட்டிலே ஏடுகள் என வைத்திருப்போர் நம் தமிழ்ப்பண்டிதராவர். அவையும் அவர்தம் சொந்தமல்ல. கலாசாலை நூல் நிலையங்களிலிருந்து இரவலாகப் பெற்றவைதான். (தமிழாசிரியர்கள் தாமே ஏடுகள் வாங்கும் நிலையிலே அவர் வருவாய் நிலை யில்லையென்பதை நாமறிவோம்) அவை அடுக்காக அவர் தம் மனையிலே மாண்புற விளங்கும். அவையாவும் மத நூல்களாகவே விளங்கும். மதம் கலவாத நூல்கள் யாதொன்றும் அவர் தம் மனையில் காணக்கிடக்கா. நூல்களின் அருமை பெருமை தெரியாத பள்ளி நூல் நிலையங்களிலே அவை கிடப்பதை விட நமது இல்லத்தில் இனிது வீற்றிருக்கட்டுமே என்று அவற்றைப் பூரிப்போடு போற்றி வைத்திருப்பர்.
இந்த மத நூல்கள் கடவுளரைப்பற்றிக் கூறும் கருத்துக்கள் முன் பின் முரண்பாடுடையனவாயுளவே. மூடனும் கண்டு ஏளனம் செய்யும் ஏமாற்றங்கள் நிறைந்துள்ளனவே! நீக்ரோவும்கூட தன் கடவுளுக்கு இத்தகைய அநாகரீக, அற்புத, ஆபாச லீலைகள் வேண்டாம் என்று வெறுத்துத்தள்ளும் அளவுக்கு ஆபாசங்கள். ஆசார சீல மென்றும் கடவுள் திரு அவதார லீலை யென்றும் கடவுளரைக் கயமைக் குணத்திற்கு உட்படுத்தியுள்ளனவே இந்த ஏடுகள். இவை வேண்டுமா? அவசியமா என்று எண்ணுங்கள்; சிந்தியுங்கள்; சீர் தூக்கிப்பாருங்கள் தோழர்களே!
இயற்பகைக்குச் சோதனை
முழுமுதற் கடவுள், எம்பெருமான், கயிலைவாழ் கடவுள், பார்வதி சமேதரன், அம்மையப்பன், அர்த்த நாரீஸ்வரன் அருள் திருவிளையாடல்களைக் கேளுங்கள். அவருக்கு அருமருந்தன்னவன் இயற்பகை என்பான். சிவனடியார் கேட்டதை யெல்லாம் இல்லை யென்னாது அவர் கொடுத்து வந்தாராம். அவர் இவன்பால் மாறாக் காதல் கொண்டு அவனருளையே சிந்தித்து வாழ்ந்து வராநின்ற காலையில் சிவனார் புறப்பட்டார் எங்கு? தமதன்பன், இரக்கும் சிவ நேசற்கு இல்லையென்னாதீயும் இயற்பகையின் பக்தியை பரிசோதிக்க சிவனார் இயற்பகையிடம் சென்றார். சென்று "இல்லை யென்னாதீயும் இயற்பகை நீதானோ" என்று கேட்டார். அதற்குத் தலை வணங்கிய இயற்பகையை நோக்கி "ஆயின் உம் இல்லக்கிழத்தியை எம்மோடு அனுப்புக" என்றார். இயற்பகையும் மிக மகிழ்ந்து தம் மனையாளை அவருடன் அனுப்பினார். இது முறையன்றெனத் தடுத்த முதியோரையும் "அடாது" என அறிவுறுத்திய அறிவாளரையும் "கூடாது" எனக் கூறிய சுற்றத்தாரையும் கொன்று குவித்து, இயற்பகையார் தம் மனையாளுடன் சிவனார் சிறிதும் தடையின்றிச் செல்லுமாறு செய்தார். பின்னர் சிவனார் தம் திருவுருவங்காண்பித்து அவரை ஆட்கொண்டனராம். என்னே! சிவனாரின் திறம்.
தோழர்களே! உங்கள் சிந்தனைக்குச் சற்று வேலை கொடுங்கள். இயற்பகை தன் வாழ்க்கைத் துணைவியைக் கூட மதத்தின்பால் தன் மதியை அடகு வைத்திருந்தமையால் பிறனுடன் பிரியத்தோடு அனுப்பிவைக்கும் நிலையை அடைந்தார். மனைவியை வேண்டிய சிவனார் தான் நேரில் வந்து கேட்டனரா? இல்லை; பிராமண வடிவங்கொண்டு வந்து கேட்டார். யார்? நம்முடைய சிவனார். எப்படிப்பட்ட பிராமண வடிவம்? தூர்த்தப பிராமண வடிவங்கொண்டு வந்தார். இதற்குப் பொருள் திரு. வி. க. நடையிலே கூற வேண்டுமானால் காந்தகாரங்கொண்டு கட்டழிந்த தோற்றத்தோடு கூடிய பிராமணன் என்பதாகும். இத்தகைய பிராமணன் கேட்டபோது கூசாமல், எண்ணாமல்; ஏதும் கேட்காமல் தம் மனையாளைத் தந்தார் இயற்பகையார். சிவனாருக்கும் வேறு சோதனை கிடைத்திலபோலும், இதைத் தவிர பக்தனைப் பரிசோதிக்க; காமாந்தகாரங்கொண்ட பிராமணனுடன் மனைவியை, அவளை யேதுங் கேட்காமல் அனுப்பி வைத்த மாண்பு எதை விளக்குகின்றது? பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்பதையல்லவா? கணவன் பக்தியைத் தானே பரிசோதிக்க வந்தார் கடவுள். தன்னை ஏன் பரிசோதிக்க வேண்டும்; தான் ஏன் கணவனை விட்டு அகல வேண்டும் என்ற கருத்து அவர் தம் மனைவியாருக்குத் தோன்றவில்லை போலும்! கணவனுக்கு மனைவி அடங்குதல் வேண்டும். என்பது கடமை என்று கொண்டாலும் அது கருத்துக் களங்கம் விளைத்தல் கூடாது.
சான்றாக, பாரதத்திலே ஐவருக்குந் தேவியான பாஞ்சாலியை எடுத்துக்கொள்வோம். அவளைப் பாண்டவர் சூதிலே தோற்றனர். வென்ற துரியோதனன் வீரமுடன் தம்பிக்குக் கட்டளையிட்டான் துரௌபதையை சபைக்குக் கூட்டிவா வென்று, துச்சாதனன் துரௌபதையை அழைத்தான், அவள் தான் வீட்டுவிலக்காயிருப்பதால் அரசசபைக்கு வரலாகாது என்றாள். துச்சாதனன் அவள் தங்கள் அடிமையென்றும் தருமன் முதலானோர் அவளைத் தங்களிடம் சூதாட்டத்தில் பணையமாக வைத்துத்தோற்றமையால் அவள் தங்கள் சொற்படி நடக்க வேண்டுமெனவும் நவில்கின்றான். கணவனால் கண்ணியமாகப் பந்தயத்திலே தோற்கடிக்கப்பட்ட தான், கணவன் சொற்படி கருத்துப்படி நடக்கக் கடமைப்பட்டவள் என்று அறிந்தபின்னரும், அவள் கேட்கின்றாள் பாண்டவர் என்னை முன்தோற்றனரா அன்றித் தங்களைத் தோற்றபின் என்னை தோற்றனரா என்று. தங்களைத் தோற்றுப்பின் தன்னைத் தோற்றனர் என்பதறிந்தவுடன், தாங்கள் அடிமையாயின் பின் தன்னைப் பந்தயம் வைக்க அவர்கட்கு உரிமையில்லை; ஆகவே தான் துரியோதனாதியர்க்கு அடிமையாக நியாயமில்லையே என்று தன் கருத்தைக் கூறினாள். அரசவையில் முறையிட்டாள். பிறகு பலாத்காரமாக அவள் துகில் உரியப்பட்டபோது; கண்ணன் அருளை வேண்ட, "சேலையவிழ்ந்த நேரத்திலே தட்டாது காட்சியளிக்கும் தனது இயற்கைக் கேற்ப மாதவனும் மங்கை மானங்காத்தான் என்று கதை சொல்லப்படுகின்றது. கடமையை கருத்தோடு சேர்த்து வாதிட்ட பாஞ்சாலியின் அளவுக்காவது, இயற்பகையார் தம் இல்லக்கிழத்தி பிராமணரை நோக்கி, ஐயா என் கணவர்தான் உமக்கடிமை நானல்ல; அவருக்குத்தான் சோதனை; எனக்கல்ல என்றாவது கூறியிருக்கக் கூடாதா?
சதி அநுசூயைக்குச் சோதனை
இன்றேல் சதி அநுசூயைபோல் சற்றுத் தம் அறிவால் அன்பர் (கணவன்) செய்கையையும், ஆண்டவனின் வேண்டுகோளையும் அலசிப்பார்த்திருக்கலாகாதா என்று கேட்கின்றேன். அநுசூயா பதிவிரதாசிரோன்மணி. இரும்புக் கடலையைச் சிற்றுண்டியாக்கித் தரும் பாங்குடைய பத்தினி, விருந்தினரை உபசரிக்கும் உத்தமி. அவர்தம் பெருமை ஏழுலகங்களிலும் எட்டிப்பரவிற்று. அவ்வநுசூயையின் பெருமை தனக்கு இழிவு தருகின்றது; தம் சீரும் சிறப்பும் சிதைகின்றது என்று கருதினர் மும்மூர்த்திகளின் மனைவியர். அழுக்காறு கொண்டனர். ஆகவே தத்தம் துணைவரை ஏவி அநுசூயையின் பெருமையைக் குறைத்துச் சிறுமைப்படுத்தச் சொல்லினர். மூலக்கடவுளர் மூவரும் தத்தம் இல்லக்கிழத்தியின் ஏவலைச் சிரமேற்கொண்டு சென்றனர். அநுசூயையின் வீட்டிற்கு அவர் தம் அன்பர் (கணவர்) அயலே சென்றிருக்கும்போது துறவிகள் போல மாற்றுருக்கொண்டனர். மங்கை நல்லாளை நண்ணினர், பிச்சை கேட்டனர். "தருவேன்" என்றாள் மங்கை. "சரி, எங்கள் இச்சைப்படி பிச்சை இடுவையோ என்றனர் மும்மூர்த்திகள். ஆகா அவ்விதமே உங்கள் இச்சைப்படி பிச்சையிடுவேன்" என்றாள் நங்கை. உடனே மூர்த்திகள் முவரும் "அங்ஙனமாயின் நிர்வாணமாக நின்று நீ எமக்கு பிச்சையிடுக" என்றனர். வந்த விருந்தினரை உபசரித்தல் தன் கடமை மேலும் அவர்கள் இச்சைப்படி பிச்சையிடுவதாகவும் உறுதி கூறியிருக்கின்றாள். எனினும் அநுசூயை அவர்கள் மீது ஐயங்கொண்டாள். அவர்களை நோக்கி "நீங்கள் கேட்டவண்ணம் செய்தல் முறை ஆனால் அது நீதிக்கு முரண்பாடானது, அறிவுக்கு ஒவ்வாதது" என்று மறுத்தாள். உடனே கோபங்கொண்டனர் மும்மூர்த்திகளும். எங்களை யாரென்று நினைத்தாய்; நாங்கள் மும்மூர்த்திகள், சொன்ன சொல்லை மீறினால் நாங்கள் சபிப்போம் உன்னை என்று உறுமினார்கள். மும்மூர்த்திகள் வந்து கேட்கின்றார்களேயென்று மதி தயங்கவுமில்லை; பயங்கொள்ளவுமில்லை; மும்மூர்த்திகள் நீங்களல்ல; மும்மூர்த்திகள் என்று நவின்று நாட்டை நாசம் செய்ய வந்த வேடதாகரிளாகும் நீங்கள்; அல்லது மும்மூர்த்திகளேயாயினும் அறிவு மழுங்கி ஆராய்ச்சி மடிந்து மானமற்றவராய் வந்திருத்தல் வேண்டும். இது கேட்கத் தகுந்தது; இது கேட்கத் தகுதியற்றது என்ற பாகுபாடு அறியா மூடர்களே! உங்களை நம்பேன்" என்று கூறினளாம். சொன்ன சொல் தவறாதிருக்க வேண்டுமல்லவா!
பின்னர் தனது கற்பின் மகிமையால் அவர்களைக் குழந்தைகளாக்கிக் கொண்டு பிச்சையிட்டதாகக் கதை செல்கின்றது. அதன் உண்மை ஒருபுறம் இருக்கட்டும். கடவுளே நேரே வந்து கேட்டபோதும் வாதாடின அந்த அளவுக்காவது இயற்பகாயாரின் மனையாள் கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் யாவரும் பக்தியின் பால் சித்தங் கலங்கிச் சீரழிந்து கிடந்தனர். மனைவியைத் தாவென்னும் மாண்புமிக்க மகேஸ்வரனையும் "நிர்வாணப் பிச்சையிடு" என்று கேட்கும் நீதியற்ற கடவுளையும் பாடும் நிகண்டுகளுமா நமக்குத் தேவை? வேண்டவே வேண்டாம்.
திருவிளையாடல்
இதே பரமசிவன் திருவிளையாடற்புராணத்திலே புரிந்துள்ள லீலையைக் காண்போம். தாய்ப்பன்றி இறந்து விட்டது, பன்றிக் குட்டிகள் பசியால் தவிக்கின்றன, கண்டார் முப்புரம் எரித்த பெம்மான். உளமுருகினார், உடனே தாய்ப் பன்றியின் உருவம் தாங்கினார். பன்றிக் குட்டிகளின் பசி தீர்த்தார். அவற்றைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார். அவற்றைப் பின்னர் பாண்டியனிடம் கொண்டு சென்று ஆண்டு அவன் அவைக் களத்திலே வீற்றிருந்த மந்திரிகளை நீக்கி அவர்களுக்குப் பதிலாக இவைகளை அங்கு அமர்த்தினார். அத்துடன் விட்டாரா? அம்மந்திரிமார்களின் பத்தினிகளையும் இவைகளுக்குப் பத்தினிமார்களாக அமைத்தார் என்று திருவிளையாடல் புராணம் செப்புகின்றது. இது நாடறிந்த உண்மை தகுமா? முறையா? அறிஞர் ஆற்றும் அறமா? ஆண்டவன் செய்யும் அற்புதமா? ஆபாச வேலையா? அக்கிரமமா? மக்களை மடையராக்கும் வழியல்லவா? இதனைப் பாடும் ஏடும் வேண்டுமா நமக்கு? இதனால் யாது பயன் நாட்டுக்கு நவிலுங்கள் நாட்டின் எதிர் காலப் பெரியோர்களே!
கடவுள் திருடுகிறார்
பிறிதொரு கடவுள் அவதாரமான கண்ணன் சிறு வயதிலே வெண்ணெய் திருடுகிறான். சற்றுப் பெரியவனான பிறகு பெண்கள் குளிக்குங்கால் அவர் தம் சேலைகளைத் திருடுகிறான், பின்னர் கோபிகளோடு பற்பல லீலைகள் செய்கின்றான். அர்ச்சுனனுக்கு அழகிய அணங்குகள் அநேகரைக் கூட்டி வைக்கின்றான். பாரத யுத்தத்திலே சிறந்த ராஜதந்திரத்தைக் கையாள்கிறான். "நாலு வருணங்களைப் படைத்தவன் நான் தான் என்று கீதை செய்கிறான். இத்தகைய கடவுளரை ஆதாரமாகக் கொண்டு ஒழுகினால் நம் மக்கள் மாண்புறும் காலம் என்றோ? மதிபெறும் காலம் காணக் கிடைக்குமா? அன்றி அறிவால் ஆராய்ந்து அறமெனப் பட்டதைத் துணைகொண்டு செல்வது நேர்மையா? செப்புங்கள் எதிர்காலச் செம்மல்களே!
மதத்தால் மயங்கிய மன்னவன்
கடவுளரின் கயமைத்தனத்தையும் கபோதிக் குணத்தையும் ஏடுகளினின்று எடுத்து காட்டப் புகின் அஃது ஓர் எல்லைக்குட்படாது நீண்டு செல்லும். மதமானது சிறந்த இலக்கியங்களூடே செறிந்து விளங்குவதால் மதியிழந்த மன்னர்கள் எத்துணையர், எத்துணை அறிஞன் பணி நாட்டு நலன் கருதாமல் நாசமாயிற்று.
நம் நாட்டிலே ஓர் மன்னன் வேட்டைக்குச் சென்றான், வழியிலே ஓர் குளம், அக்குளத்திலே தவளைகள் கரகர வென்று ஓசையிட்ட வண்ணமாயிருந்தன. அரசன் மகா சிவபகதன். சிவ புராணங்களைக் கரைகண்டவன்; அவன் காதிலே இந்தக் கரகர என்ற ஓசை அரகர என்று வீழ்ந்தது. வீழலும் அம்மன்னவன் மனம் மிக நொந்தான் ஏன்? சிவநேசர்கள் குளத்தில் குளிரினால் வாடுகின்றார்களே என்ற ஏக்கத்தால். உடனே காவலாளர்க்குக் கட்டளை யிட்டான். அரண்மனைப் பொக்கிஷத்தைக் குளத்தில் கொண்டு வந்து போடுங்கள்; அவை அடியார்க்கு உபயோகப்படட்டும்" என்று. தவளைகள் சப்தத்தையும் தவறாகக் கேட்டான். வேந்தன் தவளைகட்குப் பொன்னும் மணியும் உதவுமா என்று பகுத்துணரவில்லை. அந்தப் பொன்னும் மணியும் நாட்டிலே நலியும் ஏழைகளின் ஏக்கத்தை எத்துணை எளிதில் போக்கும் என்பதையும் எண்ணினானில்லை. குளத்தில் போடும் பொருள் எவர்க்கும் எத்துணையும் பயன்தராது என்பதறியாது மதமெனும் மயக்கத்திலாழ்ந்து, பக்தியெனும் பரிதாப வலையில் சிக்கி அறிவை அடகுவைத்துப் பொருளை வாரியிறைத்தான். இதைக் கேட்கும் போதும் ஏடுகளில் பார்க்கும்போதும் நமக்கு நகைப்புத்தான் வருகின்றது. அம்மன்னன்பால் இரக்கமும் உண்டாகின்றது. மதப்பற்றினால் மன்னன் மதியிழந்ததைப்போல் மன்னன் வரலாற்றை ஏட்டிலே காணும் நாட்டு மக்கள் எத்தனை பேர் இன்னும் மதியை மதத்தின்பால் மண்டியிட்டுப் பறிகொடுப்பர் என்ற எண்ணம் எமை வாட்டுகின்றது, எனவே இத்தகைய மதம் கலந்த அநாகரிக, ஆபாச, புராணங்கள் நிறைந்த கதைகளைப் பாடுதற்கே ஏடுகள் பயன்படுமானால் அறிவு; ஆராய்ச்சி என்றாவது நம் நாட்டில் உதிக்குமா ஆண்மை பெருகுமா? ஆற்றல் அதிகரிக்குமா? வாழ்க்கையில் வளம்காண்போமா? வழங்குங்கள் இதற்கோர் நல்ல தீர்ப்பு வாலிபத் தோழர்களே!
இத்தகைய ஏடுகள் மதியை வெருட்டி மனதை விதியில் இருத்தி மக்கள் அறிவை மயக்கி, ஆண்டவன் அருளால் அனைத்தையும் அரைக்கணத்தில் பெறலாம் என்ற ஆசையைக் கிளப்பி மக்கள் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முழு மூடர்களாக்குகின்றன. அதுவுமன்றி நாம் இலக்கியங்களிலே, ஏடுகளிலே மதத்தைப் புகுத்தி ஆண்டவன் திருவிளையாடல்கள் என்றும், அவதாரங்கள் என்றும் அறிவுக்குப் பொருந்தாதவற்றைக் கூறி கடவுளருக்குக் கயமைத்தனத்தையும் கபோதிக் குணத்தையும் ஆபாச ஆசாரங்களையும் ஏற்றி ஏளனத்திற்குள்ளாக்குகின்றோம். கடவுளை மதிகெட்டவனாகக் காட்டுகின்றோம். இவைகளைத் தவிர வேறு ஏடுகளை இக்கால இலக்கியப் பண்டிதர்கள் ஏன் செய்து தரலாகாது?
தற்கால இலக்கிய கர்த்தாக்கள்
நமது சேதுப்பிள்ளையவர்கள் எழுதுவது "வேலும் வில்லும்' அதற்கு அடுத்தாப்போன்று சேதுப்பிள்ளையவர்கள் தம் தூவிலே கம்பராமாயணத்தையும் கந்த புராணத்தையும் சரிவரக் கையாளவில்லை என்று வேறு நூல் ஒருவர் இயற்றுவர். சோமசுந்தர பாரதியாரின் ஏடு "தசரதன் குறையும் கைகேயியின் நிறையும்" என்பது. திரு. வி. க. வின் ஏடு பெரிய புராணத்திற்குப் புத்துரை. மறைமலையடிகளார் நூல் "மாணிக்க வாசகர் கால ஆராய்ச்சி" பிறிதொரு புலவர் இயற்றுவார் இதிகாசங்களிலே காணும் நீதிகள் என்று. இவ்விதம் பழைய பத்தாம் பசலியையே திரும்பத் திரும்ப வெவ்வேறு நடையில் கொண்டு வருவதால் நாட்டுக்கு வரும் நன்மை என்ன? நன்கு சிந்தியுங்கள். அறிவு கொண்டு ஆராயுங்கள் கலை பயிலுங் காளைகளே!
நமது தற்காலப் புலவர்கள் பண்டைத் தமிழ் மன்னர்கள் வீரத்தை விளக்குங் கவிதைகளை ஏன் பாடக்கூடாது? செங்குட்டுவனின் வடநாட்டு யாத்திரையையும், ஆரிய மன்னரான கனக விசயரைப் போரில் வென்ற வீரத்தையும் அவர்தம் முடியினிலே கண்ணகி சிலைக்குக் கல்தூக்கி வரச்செய்த பெருமையையும்பற்றி ஏன் ஒரு பரணி பாடக்கூடாது? ஏன் கடாரம் வென்ற தமிழரசர்களைப்பற்றி ஓர் காவியம் இயற்றக்கூடாது? பர்மா வென்ற பராந்தகனைப்பற்றி ஏன் ஒரு புகழ்மாலை இயற்றக்கூடாது, அறிவுபற்றியும். ஆராய்ச்சியின் மேன்மைபற்றியும் அன்றாட வாழ்க்கை வளம்பற்றியும் பலப்பல ஏடுகள் ஏன் எழுதக்கூடாது? இவர்களால் முடியாதா? முடிக்கும் ஆற்றலில்லையா? முடியும். ஆனால் முயலுவது கிடையாது. அவர்கள் இத்தகைய நாட்டுக்கும் ஏட்டுக்கும் தொடர்பூட்டும் பெரும் பணியிலே சிந்தை செலுத்தினால் நாடு நாளடைவில் புத்துணர்ச்சி பெற்றுப் புதுவாழ்வு பெறும். பாடவேண்டுமென்றால் பரமன் திருவிளையாடல்களும், பூஞ்சோலைகளும், கோயில்களும் ஸ்தல மகிமைகளுந்தான் கிடைக்கின்றனவா? அன்றாட கஞ்சிக்கு அலையும் தோழனைப்பற்றி உள்ளமுருகப் பாடிப் படிப்பவர் மனதில் இரக்கமுண்டு பண்ணலாமே. நாட்டிலே உள்ள செல்வம் ஒரு சிலருக்கு மட்டும் பயன்பட்டு, பலருக்குப்பயன்படாது, கோயில்களிலும், மடங்களிலும், ஜமீன்தார்களிடையும் முடங்கிக் கிடப்பதை ஊரறியச் செய்யலாகாதா? நாட்டிலே ஆண்டி - அரசன், ஏழை - பணக்காரன், பறையன் - பார்ப்பான் என்ற மாறுபாடுகளின் இழிதன்மைகளை ஏடுகளின் மூலம் எடுத்தியம்பி மக்களிடை மறுமலர்ச்சிக்கான கிளர்ச்சி உண்டுபண்ணலாகாதா?
இவைகளை விடுத்து பக்தனைப் பரிசோதிக்க மனைவியையும், பிள்ளைக் கறியையும் கேட்கும் புண்மைக் குணத்தைக் கடவுளர்க்கு ஏற்றி அதனைப் பாடுவதால் நாட்டிற்கு நன்மை யாதும் உளதோ? இவைகள் நம்மைக் காட்டுமிராண்டிக் காலத்திற்கு ஈர்த்துச் செல்லவில்லையா? இதனை முதன் மந்திரி சர்ச்சில் கேள்விப்படின் நமக்கு கி. பி. 2045-லாகிலும் சுதந்திரம் வழங்க எண்ணங் கொள்வாரா?
இத்தகைய கதைகளும் புராணங்களும் ஏடுகளும் இலக்கியங்களும் மக்களைக் கடவுளர்க்குத் திருப்பணி செய்வதிலும், திருவிழாக்கள் செய்வதிலும் அளவிறந்த பணத்தைச் செலவிட ஊக்குகின்றன. இதனால் ஏழை மக்கள் பணம், கல்வி, கேள்வி முதலியவற்றிற்குச் செலவிடப்படாமல் ஆச்சார அனுட்டானங்களுக்கும் ஆண்டவனின் நிவேதனத்திற்கும் அநாவசியமாகச் செலவிடப்படுகின்றது. அறிவு மழுங்குகின்றது; ஆராய்ச்சி குன்றுகின்றது; மடமை மலருகின்றது; மதி மடிகிறது, செல்வம் குறைகிறது; சமய சாதிச் சண்டைகள் வளருகின்றன; அமைதி அழிகின்றது; நாடு நவில்கின்றது; நாட்டார் நாசமாகின்றனர்; கலை, இலக்கியம், காவியம் யாவும் பண்டைய கலைகளோடு இலக்கியங்களோடு, காவியங்களோடு நின்றுவிட்டன; அவைகளைச் சுவைப்பதுதான் நன்று; அதுவே போதும்.
"தமிழ் நாடு போனாலும் போகட்டும்; கம்ப ராமாயணமே வேண்டும்" என்று நாட்டுப்பற்றின்றி கலைப் பற்றே (அதிலும் நாட்டோடு முற்றும் தொடர்பற்ற ஏடு) பெரிதும் மிகுந்து பழைய பத்தாம் பசலியையே பெரிதும் பிடித்து நிற்பாராயின், நான் உறுதியாகச் சொல்லுகின்றேன். அப்பண்டிதர்களின் காலமும் இத்துடன் முடிவடைந்தது என்று. ஏன்? இன்று உலகில் பலப்பல பகுதிகளிலும், ஏடுகள் காலத்திற்கும் கருத்திற்கும் நிலைமைக்கும் ஏற்ப மாறிக்கொண்டே வருகின்றன. சான்றாக கசபியான்கா என்ற சிறுவனின் கதையை எடுத்துக் கொள்வோம். கசபியான்கா என்னும் சிறுவன் தன் தந்தையோடு கப்பலில் சென்றான்; கடல் நடுவே கொடிய கப்பற் சண்டை நடந்தது, கசபியான்காவின் தந்தையும் ஒரு கப்பல் தலைவன் அவன் தன் மகனைக் கூப்பிட்டு ஓரிடத்திலே அவனை நிறுத்தி, "குழந்தாய் நான் அழைக்குமளவும் இவ்விடம் விட்டு நகராதே" என உரைத்து ஏதோ அலுவலாக அப்பாற் சென்றான்.
சிறுவன் கசபியான்கா நல்ல பிள்ளை தந்தை சொல் தட்டாத தனயன், கடமையை உணர்ந்த பாலன். சண்டையில் கசபியான்காவின் தந்தை உயிர் நீத்தான். இது இச்சிறுவனுக்குத் தெரியாது; திடீரென்று கப்பல் தீப்பிடித்துக் கொண்டது. கப்பலில் உள்ளோர் யாவரும் தமது உயிரைப் பெரிதென மதித்து பலவாற்றானும் உயிர் தப்பி ஓடினர்; பாலன் கசபியான்காவைப் பலர் அழைத்தனர்; அவன் போக மறுத்தான்; தீ நாற்புறமும் அவனைச் சூழ்ந்து கொண்டது: அதுகாலையில் பலரும் அவனை வற்புறுத்தினர் உடன்வருமாறு; அவன் தன் தந்தையின் கட்டளையை மீறி நடக்க முடியாது என்று உறுதி கூறிவிட்டான் அனைவரும் போய்விட்டனர். கசபியான்கா, "தந்தாய்! தந்தாய்! நான் போகலாமா; போகலாமா" என்று பன்முறை கூவினான். தகப்பன் உயிரோடிருந்தா லல்லவா பதில் கிடைக்கும். எனவே தந்தை சொல்லைத் தலை மேற்றாங்கி அவ்விடத்திலே நின்று தீயில் மடிந்தான். தந்தையின்பால் அவன் செலுத்திய அன்பைக் கண்டு பலரும் அவனைப் போற்றினர்; கவிகள் அவனை ஏத்தி ஏத்திப் பாடினர்; அப்படிப்பட்ட கசபியான்காவைப் பற்றி இந்தநாளிலே ஏடுகளிலே பொறிக்கும்பொழுது "கசபியான்கா தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற கடமையைக் கடைப்பிடித்து நடந்து மடிந்தான் ஆனாலும் அவன் தன் கடமையைக் கடைப்பிடித்தானேயன்றிக் கருத்தோடு ஒன்றிச் செய்தானில்லை" என்று கூறப்பட்டிருக்கின்றது. தீயின் வேகத்திலே கடலின் கொந்தளிப்பிலே கப்பல் உடையும் ஓசையின் நடுவிலே தந்தையின் மறுமொழி தனக்கு எட்டாதிருக்கலாம் அன்றித் தன் கூக்குரலும் தந்தைக்கு எட்டாதிருக்கலாம் அன்றி அத்தகைய பேராபத்தினின்றும் தப்ப தந்தை சொல்லை மீறினால் குற்றமில்லையென்று கொண்டிருக்கலாம்; கசபியான்கா கடமையைத்தான் கவனித்தான்; கருத்தோடு கவனிக்கவில்லை; கருத்துக்கே களங்கம் வந்துவிட்டதே என்று முகவுரை தீட்டுகின்றனர்; அதற்கு மேனாட்டிலே இத்தகைய முற்போக்கானமுறைகள் கையாளப்படுகின்றகாலையில் நம் நாட்டில் பழமை பழமை என்று பாடித்திரியும் பண்டிதர்கள் தம் பரிதாப நிலைகண்டு நாம் இரங்காது வேறென்ன செய்வது!
கம்பர் செய்த தொண்டு
கம்பராமாயணத்திலே கம்பன் கிட்கிந்தையை வருணிக்குங்கால் அதனையொரு சிறந்த நாடாகக்காண்கின்றான். ஆங்கு வதியும் மக்கள் சகலகலா வல்லவர்கள் என்றும், சாஸ்திர விற்பன்னர்கள் என்றும், நீதி தவறாது ஆண்டனர் என்றும், பலப்பல ஆடை ஆபரணங்கள் அணிந்திருந்தனர் என்றும் பெண்கள் மிக அழகுள்ளவர்களென்றும், பேசுவதில் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் கூறி முடிவில் அவர்கள் குரங்குகள் விலங்குகள் என்று கூறுகின்றான் இது முன்னுக்குப்பின் முரண்பாடல்லவா!
மக்களின் கருத்திற்கேற்ற நற்குணங்கள் யாவும் படைத்தவர்கள் என்று கூறிய அதே வாயால் அவர்களைக் குரங்குகள் என்று அடுத்தாற்போன்று கூறுவது முறையா? அறிவுடையார் ஒப்பும் உண்மையாகுமா? நேர்மையா? மற்றும் கம்பன் இலங்கையை வருணிக்கும் பொழுது மாட மாளிகைகளும் கோபுரங்களும் அமைந்த நகரம் என்று கூறுகின்றான். கற்றார் வேதமோதினர்; நகரெங்கும் ஆடல் பாடல் நிரம்பியிருந்தது; ஆங்காங்கு வீணை முதலிய இசைக் கருவிகளின் ஓசை எழுந்தது என்று சிறப்பாகக் கூறுகின்றான். ஆனால் அங்கு வதிந்தவர்கள் இரக்கமில்லாதவர்கள் என்று கூறுகின்றான். ஆண்கள் மகா கோர உருவினர்; நீண்ட வாயும். கோரைப் பற்களும், செம்பட்டை மயிரும், கரிய மேனியும், பெருஉடலும் கொண்டு விகாரமாய் விளங்கினர் என்கின்றான். ஆனால் பெண்களைப்பற்றிக் கூறும்போது மட்டும் அவரது இயற்கையான பெண்களைப் பாடுவதிலுள்ள தனி விருப்பப்படி அழகிகள், அந்தர மாதர்க்கு ஒப்பானவர்கள் என்று கவி தீட்டியிருக்கிறார். ஆண்கள் அழகற்ற விகார உருவினர்; ஆனால் பெண்கள் அழகுள்ள அணங்குகள். இதிலே ஆண்-பெண் பொருத்தம் உண்டா அன்றி நம் நாட்டுத் தற்கால முறைப்படி, காதலின்றிக் கணவன் மனைவியராகச் சேர்க்கப் பட்டாலுங் கூட அவர்கட்குப் பிறக்கும் ஆண்கள் எல்லோரும் அழகற்ற அநாகரிகர்களாயும், பெண்கள் எல்லோரும் அழகுமிக்க அணங்குகளாகவுமா விளங்குவர் என்று சிந்தித்துப் பாருங்கள் இத்தகைய கருத்துக்கள் காலத்திற்கும் நிலைமைக்கும் ஏற்றவாறு மாற்றப்பட வேண்டுமா என்று ஆராய்ச்சி செய்யுங்கள்! உங்கள் அறிவிற்கு வேலை தாருங்கள் தோழர்களே!
பழைய ஏடுகளில் நீதிகள் நிறைந்திருக்கின்றனவாம்; நீதியின்நேர்மை நடுநிலைமை நவிலப்படுகின்றனவாம்; சான்றுகளும் பல பகரப்படுகின்றன; அறவுரை அடிக்கடி அறிவுறுத்தப்படுகின்றது. உண்மை என இக்கூற்றைக் கொண்டாலும் 'நல்ல நீதி' கொண்ட ஏடுகள் எவையெனத் தெரிந்து கோடல் எளிதன்று. நீதியின் தத்துவம் ஓர் நூலில் ஒருவிதமாயும் பிறிதொன்றில் பிறிதோர் வண்ணமாயு மிருக்கின்றன. அவற்றில் நீதியைப்பற்றியே மக்கள் வாழ்க்கைக்கு வேண்டியனவற்றையே கூறும் நூல் திருக்குறளாகும் எத் தேயத்தார்க்கும் எக் குலத்தார்க்கும் ஒப்பமுடிந்த ஓர் நீதி நூலாகும் சிற்சில இடைஞ்சல்கள் நீக்கப்படின்.
மதப் பித்தர்கள் செயல்
இத்தகைய திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் எம்மதத்திலும் சேராத இயல்பினராய்த்தான் இருந்திருக்க வேண்டும். அவரையும் இம்மதப் பித்தர்கள் ஏடுகளிலே "திருவள்ளுவர் மத வாராய்ச்சி" என மகுடமிட்டு ஒவ்வொருவரும் அவரைத் தத்தமது மதத்தைச் சேர்ந்தவரெனக் கொள்கின்றனர். கூசாமல் கூறுகின்றனர். சான்றுகளாக திருக்குறளிலிருந்து சிற்சில சொற்களையும், சொற்றொடர்களையும் எடுத்துக் காட்டி, இச்சொல் இச்சொற்றொடர் எந்தம் இறைவனைக் குறிக்குமாதலின் தமிழ் மறையை மலர்வித்த வள்ளுவர் எந்தம் மதத்தைச் சார்ந்தவர். என்னே எந்தம் மதத்தின் மாண்பு! திருவள்ளுவரே கொண்ட மதம் எம்முடைய மதமெனில் அதன்பால் குற்றங் காணலுங் கூடுமோ என்று எண்ணி இறும்பூதெய்துகின்றனர். என்னே! இவர்தம் இழிமதி! மதம் கலவாத ஏடு ஒன்றாகிலும் இருந்து, மக்களுக்குப் பயன்படும் நிலையிலிருந்தால் அதனை மதப் புரட்டிலே சிக்க வைத்து மக்கள் அறிவைப் பாழ்படுத்துகின்றார்களே! இவர்தாம் அவைகளிலுள்ள நீதிகளைச் சுவைப்பவராம்! நேர்மையை அனுபவிப்பவராம்! என்னே! இம்மதங்களின் மீளாத் தொல்லை, என்று தணியும் இந்த மடமையில் மோகம் மாந்தர்க்கு அன்றே நாடு நலம் பெறும் நன்னாள்.
நீதி நிலையுடையதா?
தவிர, நீதி நீதி என்று கூறுகின்றார்களே நீதி என்றும் நிலையுடையதா? நிகண்டுகட்குக் கட்டுப்பட்டு நிற்கக் கூடியதா? அல்லவே அல்ல ஒரு காலத்திய நீதி மற்றொரு காலத்தில் மாற்றப்படலாம்; காலத்தையும் கருத்தையும் கொண்டு. நீதி நிலையற்றது, நிலைமைக்கு ஏற்றபடி மாறும். இதுதான் நீதி என்று அறுதியிட்டுக் கூற எவராலும் முடியாது, மறு முறையும் கூறுகின்றேன் ஏடுகளிலே எழுதப்பட்ட நீதிகள் என்றும் நிலையுடையனவல்ல என்று எந்தெந்தச் சமயத்தில் மாறவேண்டுமோ மாற்றப்படவேண்டிய மனப்பண்பு மக்களிடை மலர்கின்றதோ மாற்றித்தான் தீரவேண்டும் என்ற நிலைமை நாட்டில் நீடிக்கிறதோ அன்றெல்லாம் அது மாறும்: மாறிக்கொண்டே வரும்; மாறிக் கொண்டே போகும்.
சான்றாக ஏ. ஆர். பி. விதிகள் நகரிலே ஏற்படும் முன்னர் வண்டிகட்கு ஒளிமிகு விளக்குகள் போட வேண்டியது அப்போதைய காலத்திற்கு, நிலைமைக்கு, கருத்துக்கு ஏற்ற நீதி. ஆனால் ஏ. ஆர். பி. விதிகள் நகரிலே நடமாடத் தொடங்கின பின்னர் மங்கலான, முற்றும் மறைக்கப்பட்ட விளக்குகளுடனே வண்டிகள் நடமாட வேண்டியது என்பது இப்போதைய காலத்திற்கு, கருத்திற்கு, நிலைமைக்கு ஏற்ற நீதி. வலுத்தவன் இளைத்தவனை ஏய்த்தது ஒரு காலத்திலே நீதி அது இக்காலத்திலே செல்லுமா?
நீதியைக் காலத்திற்கும் கருத்திற்கும் நிலைமைக்கும் ஏற்ப நடுநின்று வழங்கும் ஏடுகள் தோன்றித்தான் தீரும். அத்தகைய நூல்களை இந்நாட்டு நாவலர்கள், பண்டித மணிகள், சொற்செல்வர்கள் செய்துதரல் வேண்டும். அதுவே முறை பழைய நீதிகளிலும் இன்றைக்கும் இயைந்து வருவனவற்றை வேண்டாமென்று எந்தப் புல்லறிவாளனும் புகலான். எனவே என் சொற்கேட்டு எவரும் மருளவேண்டாம் மனம் வைத்து மக்களுக்குப் பணிபுரியும் ஏடுகள், இனப்பற்றை மிக்கூட்டும் இலக்கியங்கள், கடவுளைக் கயவனாக்காத கதைகள், வாழ்ச்கை வளமுற வழிகாட்டும் வாழ்க்கைச் சரிதங்கள், வரலாறுகள், கற்பனைகள், காவியங்கள் செய்து தர முன் வாருங்கள் வாருங்கள் என்று வரவேற்கின்றேன் வாலிபத்தோழர்களே! என் சொல்லைக் கேளுங்கள்; கேட்டுச் சிந்தியுங்கள்! செயலுக்கு வேண்டுவதா செம்மைப்பட வழிகாட்டுமா? காட்டும் என்று கருத்திற்பட்டால் கலங்காது போரிடுங்கள்! வெல்வீர் விரைவிலே; வீழ்த்துவீர் வீணரை; நாட்டுக்கு நலம் பயப்பீர்; இனத்தை இசைபட வாழச் செய்வீர்! செய்வீர் என்று உங்கள் சிந்தனையைச் சற்றுத் தூண்டி விடுகின்றேன்; சீர்தூக்கிப் பாருங்கள்! அறிவினால் ஆராய்ந்து பாருங்கன்! அறம் எது என்று அதன் வழி நடவுங்கள்! நலன் எய்துங்கள்.
உலகிலே உத்தமர்களின் ஓயா உழைப்பினாலும் அறிவாளிகளின் குன்றாத ஆராய்ச்சியாலும் உண்டாக்கப்படும் விஞ்ஞானக் கருவிகள் ஆகாய விமானங்கள் பறக்கும் குண்டுகள் முதலிய இன்னபிற புதுமைகள் எல்லாம் நம்முடைய பண்டைய புராண இதிகாசங்களிலிருந்து காப்பியடித்தவை என்று கழறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளல் போன்ற ஏமாளித்தனம் அல்லவா! நாட்டிலே ஆகாயவிமானம் ஆகாயத்திலே பறக்கும். கிராமத்தான் அதுகண்டு அதிசயமுறுவான். ஆ! ஆ! இந்த வெள்ளைக்காரன் என்ன கெட்டிக்காரன் என்பான். அத்தருணம் அண்டையிலே இருப்பார் இராமநாத சாஸ்திரிகளோ அல்லது சோமசுந்தர குருக்களோ எவராவது உடனே உரைப்பார்: "என்ன அப்பா பெரிய அதிசயத்தைக் கண்டுவிட்டாய் நம்முடைய புராணத்திவே இல்லாத ஆகாய விமானமா? இராமாயணத்திலே புஷ்பக விமானத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நேற்றுக்கூடக் கேட்டாயே; அதற்குள்ளாகவா மறந்து விட்டாய்! அந்தக் காலத்திலே இல்லாத விமானமா? எல்லாம் நம்முடைய வேதங்களிலிருந்து காப்பியடித்தவைதான். இன்னும் ஒரு சிறியவிஷயம் பார். அதோ பறப்பது என்ன? கருடன்.
கருடன் என்ன நேராகப் பறக்கிறது. பார்ப்பதற்கு ஆகாய விமானம் போல இல்லையா? அந்தக் கருடனைப் பார்த்துத்தான் அவனும் (வெள்ளைக்காரனும்) காப்பியடித்திருக்கிறான். அந்தக் 'கருடன் மெக்கானிசம்' தான் அந்த ஏரோப்பிளேனில் இருக்கின்றது. வேறென்ன?" என்று வாய் வேதாந்தம் பேசுவர்; அப்படியா சங்கதி நான் என்னமோண்ணு பார்த்தேனே என்று ஒரு அலட்சியப் பேச்சு பேசிவிட்டு வழிநடப்பான் கிராமத்தான். இத்தகைய உரையாடல் ஊரிலே, நாட்டிலே இல்லையென யாரும் இயம்ப முடியாது. இத்தகைய மனப்பான்மை நாட்டிலே வளரும். மட்டும் நாடு முன்னேறுமா?
அக்கினியாஸ்திரம் வாயுவாஸ்திரங்கள் எங்கே?
மேலும் தற்காலத்திலேயுள்ள குண்டு, தீக்குண்டு முதலியனவெல்லாம் பழையகால வாயுவாஸ்திர அக்கினியாஸ்திரங்கள் தான் என்று வீண் பெருமை பேசுகின்றனர். அத்தகைய அஸ்திரங்கள் அந்தக் காலத்தில் இருக்தனவோ? இல்லையோ? என்பது ஒருபுறமிருக்கட்டும், அவை நமக்குத் தெரியா. ஆனால் இக்காலத்தில் இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அவைகளைக் காணலாம். எங்கு? ஏழை பாட்டாளிகளின் வீட்டில். ஏழை பாட்டாளி நாளெல்லாம் உழைத்து நலிந்து மாலையில் ஆயாசம் தீர அமுதரசத்தைப் (கள்ளை) பருகி ஆனந்தமாக உள்ளே நுழைந்து அவன் தனது மனைவியை அறையும் அறைதான் அக்கினியாஸ்திரம். அதைப்பெற்று அவள் அழுவதால் வழியும் கண்ணீர் நமக்கு வருணாஸ்திரத்தின் வனப்பை நினைவிற்குக் கொண்டு வருகின்றது. அதைக்கண்டு அக்குடியன் விடும் பெருமூச்சே வாயுவாஸ்திரமாகும். இத்தகைய அஸ்திரங்களைத் தான் அன்றாட வாழ்க்கையிற் காண்கின்றோம்; தீக்குண்டு அக்கினியாஸ்திரத்தைக் கண்டு உண்டாக்கியது என்று கூறுவது அறியாப் பாலகரும் எள்ளி நகையாடத் தக்க ஏமாற்றும் வித்தை. புதியனவெல்லாம் நம் நாட்டுப் பழம் பெரும் பொக்கிஷங்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை என்று பேசிப் பூரிப்பதிலே பெருமை ஏதாவது உண்டா இல்லை, முக்காலும் இல்லை. இதனால் வீண் வீறாப்பு பெருகுகிறது; மதி தேய்ந்து மந்த மடைகிறது. அறிவு அசட்டை செய்யப்படுகிறது. பழையனவற்றில் பெருமை உண்டு; புதியனவெல்லாம் பழமையைக் கண்டு தான் செய்தவை என்றாலும் அவை இன்று எங்கே? எங்கே எங்கே என்று கேட்கின்றேன். அந்நியனிடம் சோரம் விட்டு அண்ணாந்து ஆர்ப்பாட்டம் செய்கிறாயே அது உனக்குப் பெருமையா? சிறுமையா? உன் நாட்டிலே இருந்தது என்று உரத்து உரத்துப் பேசுகின்றாயே அந்த வீரம் இன்று எங்கே? எங்குப்போய் ஒளிந்தது? சமத்துவம் பண்டைய ஏடுகளிலே சரமாரியாகப் பரவிக் கிடக்கின்றதென்கின்றாயே, அந்தச் சமத்துவம் இன்று நாட்டிலே சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தாலும் சல்லிக்காசு பெறுமான அளவுகூட அகப்படவில்லையே, பழமை வீரம் பேசுவது பயனளிக்குமா என்று ஆராய்ந்து பாருங்கள்! நாட்டுக்கு நலம் தருமா? பயனளிக்காது என்பதில் பிழையில்லை. தராது என்பதில் தப்பிதமில்லை; இதனால் தமிழனின் மானம் பறி போகிற தென்பதற்கோர் தடையில்லை.
எது தன்மான உணர்ச்சி?
எடுத்துக்காட்டாக, கூடகோபுரம் போன்ற மாடமாளிகையிலே. மக்களோடு மாண்புற வாழ்ந்த மனிதன் ஒருவன், கால நிலைமையாலோ கருத்தழிவினாலோ, கர்வத்தாலோ, கயமைத்தனத்தாலோ பிறரின் படுமோசத்தாலோ வறிஞனானான் என வைத்துக் கொள்வோம். அவனது மாட மாளிகை மாற்றானுக்கு உரிமையாய் விட்டது, சிலகாலம் சென்றபின் அவ்வறியனான முன்னாள்செல்வன் தன் நண்பன் ஒருவனோடு அவ்வீதி வழியே செல்லப் புறப்படுங்கால் அவனது மானம் அவனை அவ்வீதி வழியில் காலெடுத்து வைக்கவிடாது. அவன் தன்மானமுடையவனாயிருந்தால். தவறி அவ்வழி புக நேரினும் அவ்வீட்டை ஏறெடுத்துப் பாரான். தன்மானமுள்ளோன் தன் நண்பன் அம்மனையின் மாண்பைக் குறித்துப் பேசினும் தலை கவிழ்வான். மனையைப் பார்க்க மனமில்லாததால் நண்பன் அதுபற்றி அவனோடு உரையாடப் புகினும் இரண்டொரு சொற்களால் தன்னிலையை உணர்த்தாது உணர்த்தி வேறு போக்கிலே உரையாடலைத் திருப்பி அவ்விடம் விட்டு விரைவிலே நகர்வான். அதுதான் மனிதனின் தன்மான உணர்ச்சி; அது ஒவ்வொரு உயிருக்கும் வேண்டும் மிக இன்றியமையாததுகூட. ஆனால் தன்மானமற்ற தன்மையாளன் தூரத்தே வரும்பொழுதே, நண்பன் வேறுவழி செல்லப்புகினும் தடுத்து, "நமது மனை மகா நேர்த்தியானது இதோ இந்த வீதியில்தான் உள்ளது பார்த்துப் போகலாம் வா, ஆகா! அதன் அழகே அழகு. அதனை வைத்து அநுபவிக்கக் கொடுத்து வைக்க வேண்டும்; சுற்றிலும் பூங்காவென்ன; நடுவே நடுவேயுள்ள கண்ணாடிகளின் நேர்த்தியென்ன; என்று இன்னும் பலப்பல பேசுவான். முடிவிலே, "அது ஒரு காலத்திலே நம்மிடமிருந்த மனைதான்; அப்பொழுதிருந்த சீரும் சிறப்புமென்ன; என்னை இவன் ஏமாற்றி இம்மனையைப் பறித்துக் கொண்டான்; இருந்தாலும் நான் அநுபவித்து ஆண்ட அரண்மனை தானே" என்று உள்ளம் நெகிழ்வான்; உற்சாகம் காட்டுவான். இதுபோன்ற தன்மைதானே நம் தற்காலப் பழம் பெருமை பேசும் வீரர்களின் செயல்.
மிக நல்ல உவமை
இன்னும் சற்று விளங்க உரைக்க வேண்டுமானால், சான்று சற்றுக் கடுமையாக இருக்கும் என்றபோதிலும் உங்கள் மன்னிப்பு கிடைக்கும் என்ற மனப்பான்மையோடு ஒன்று கூறுகின்றேன். சோலையிலே இருவர் உல்லாசமாக உலவுகின்றனர். உரையாடல் மிக உன்னதமாயிருக்கின்றது. இருவரும் இளவயதினர்; இளமை விருந்தை நுகர்கின்றனர் வசந்தகாலத்திலே. ஒருவர் ஆண்; மற்றொருவர் பெண். மனமொத்த காதலர்கள் என்று தான் மாசற்ற மனத்தினர் எண்ணுவர்; அது சமயம் இருவர் அவ்வழியே வருகின்றனர். அழகான இக்காட்சியைக் கண்டு களிப்படைகின்றனர். ஆனால் இருவரில் ஒருவர் மற்றவரைப் பார்த்து "என்ன ஐயா! எதோ ஒரு மாதிரி பார்க்கிறீர்; எல்லாம் எம்மிடமிருந்ததுதான் அவள் யாரோவென்று நினைக்காதீர் அவனோடு சல்லாபமாக இருக்கின்றாளே என்று. அவள் என்னுடைய மனைவியாக இருந்தவள்தான்! அவள் அழகென்ன அற்புத குணமென்ன! எனக்கும் அவளுக்கும் இருந்த பொருத்தம் தான் என்ன என்று எக்காளமிடுவதற்கு ஒப்பாகுமென்று கூறுகின்றேன். தப்பிதமான முறையல்லவா? நேர்மையோடு நினைத்துப் பாருங்கள் நேயர்களே!
பெரும் பெரும் பண்டிதர்களும் புலவர்களும் நாவலர்களும் இத்தகைய பழம் பெருமையில் பாசம் வைத்து நாட்டைக் கருதாமல் ஏடுகள் செய்வதிலேயே காலத்தைக் கழிக்கின்றனரே. இந்த நிலைகண்டு என் மனம் பெரிதும் வருந்துகின்றது; எண்ணத்தில் ஏக்கம் உண்டாகிறது; என்று நீங்கும் இந்த வீண் பெருமையென்று சிந்தித்த வண்ணமே இருக்கின்றேன் காலம் இதனை மாற்றும். வருங்கால உலகம் இதற்கோர் வழிகோலும் என்ற நம்பிக்கைதான் மேலும் மேலும் சலியாதுழைக்க ஊக்குகின்றது. உரிமைக்காக, மக்களின் வாழ்க்கை உரிமைக்குப் போரிடும் உணர்ச்சியில் உள்ளம் ஊடுருவிச் செல்கின்றது.
அநுமான் சொற் செல்வனாம்
சமீபத்தில் நான் ஒரு பண்டிதருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அதுபோழ்து உலகிற் சிறந்த சொற்செல்வர்கள் யாவர் என்ற விவாதம் ஏற்பட்டது. பண்டிதர் பதட்டமின்றிக் கூறினார் டெமாஸ்தனிஸ், பர்க், அநுமான் ஆகிய மூவரும் சொற்செல்வர்கள் என்று. அனுமான் சிறந்த சொற்செல்வனாம் இது கேட்டு என் நிலை கலங்கிற்று. பழமை மோகம் பண்டிதர்களின் பகுத்தறிவை எத்துணை பாழ்படுத்தியுள்ளது; பாழ்படுத்துகின்றது என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணானேன். என் செய்வது? டெமாஸ்தனிஸ் சிறந்த சொற்செல்வன் என்பதை ஒப்புக் கொள்ளலாம். பர்க் விஷயத்தில்கூட சிறிது ஐயப்பாடு நேர்கிறது. "பர்க் பேசுகின்ற பொழுது உணவுக்கு மணி அடிக்கிறது" என்ற வாசகம் நினைவிற்கு வருகின்றது. பர்க் பேசுவதில் வல்லவன், ஆனாலும் கேட்போர் உள்ளத்தைத் தன்பால் திரும்பும் திறமற்றவன் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் கடல்தாண்டிச் சீதையின் இருப்பிடமறிந்து இலங்கையைக் கொளுத்தின அநுமனையும் இவ்வரிசையில் சேர்ப்பது என்பதை நினைக்குந்தோறும் நகைப்பு மேலிடுகின்றது. அனுமானது திருவுருவப் படத்தைப் பார்க்கும் எவராவது அவனது வாய் வனப்பைக் காணும் எவராவது அநுமானும் சொற்பெருக்காற்றவலன் என்று நினைப்பரோ? நினைக்கத்தான் இடமிருக்கின்றதா? தாடைகளின் அமைப்பைக் காணும்போது உடல்நூல் வல்லார் தம் சிந்தனைக்கு விருந்தாகும் கேள்வி இது. தாடைகளின் அமைப்பை விடுத்து சொற் செல்வன் என்று கொண்டாலும் கொள்வோம். உலகச் சொற்பொழிவாளர் வரிசையிலே அநுமானும் ஒருவன் என்று பிரதேசத்தவர் கேள்விப்பட்டு நம்மை "உங்கள் சொற் செல்வன் அநுமனின் சொற்செல்வங்கள் எங்கே? சொற்பெருக்கங்கள், சொற்போர்கள், அறிவுரைகள், அறவுரைகள், ஆராய்ச்சித் தொடர்கள் எங்கே? நாங்கள் காணவேண்டும் அவனுடைய ஆற்றலை; எடுத்துக் காட்டுங்கள் அவனுடைய ஏடுகளை" என்று கேட்டால் இதற்கு யாது விடை பகர்வர் எம்மனோர், எம்புலவர் பெருமக்கள் ? ஏதாவது இருந்தால்தானே பதில் வரும். கம்பன் கவிதைபால் கரைகாணாக் காதல் கொண்டு நாட்டு வளப்பமறியாத கவிதா ரத்தினங்களால் காணப்படும் சொற்செல்வர் வேறு எவ்வித மிருப்பர்?
செய்யத்தக்க வேலைகள்
இக்கால பண்டித மணிகள் பழமை விரும்பிகள் பழமையில் உள்ள புன்மையை விடுத்து கருத்துக்குக் களங்கம் விளைக்கும் இடங்களை எடுத்து மக்களுக்குப் பயன்படுமாறு அவற்றைச் செய்து தரலாகாதா? நீதிபற்றித் தனி ஏடு ஒன்று அமைக்கலாம். அதிலே பல புலவர்களின் கருத்தையும் ஒருங்கு திரட்டிக் குவிக்கலாம். காதல்பற்றித் தனி ஏடு செய்யலாம். அதிலும் பல பண்டிதர்களின் கருத்துக்கள் இடம் பெறச் செய்யலாம். அதுபோலவே நட்பு, மதம், போர் அரசாட்சி முதலியனபற்றிய விழுமிய கருத்துக்களைப் பண்டைய ஏடுகளிலிருந்து எடுத்துத் தனித்தனியே தொகுத்து மக்களிடை பரப்பலாகாதா? இதுபோன்றே, தொல்காப்பியம், திருக்குறள் இவற்றையும் உரைகளையும் சிறு சிறு தொகுதிகளாக வெளியிட முடியாதா? பலரின் மாறுபட்ட கருத்துக்களையும் அவற்றில் தெளிவுறப் பொறிக்கலாகாதா? அதனைக் காணும் மக்கள் எது நன்றோ அதனைக் கொள்வர். தத்தம் கருத்திற்கேற்ப பழமை போகக் கூடாது எனக் கச்சையை வரிந்து கட்டுவோர் இம்முறையைக் கோடல் முறை, அதுவன்றிப் பழமையைப் பாகுபடுத்தி பகுத்தறிலோடு பார்க்கத் துணிவின்றேல் பழமை பாழாகும் என்பதைக் காலப்போக்கு அவர்களுக்கு எடுத்துக் காட்டும்; ஆராய்ச்சிக்கு முதலிடம் தாருங்கள் பண்டிதர்களே.
எச்சரிக்கை !
பண்டிதர்களே ! புலவர்களே ! நாவலர்களே ! இலக்கிய கர்த்தாக்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! சிந்தியுங்கள் என்பதுதான் அது. அறிவோடு சிந்தியுங்கள்! நடுநிலை நின்று எண்ணுங்கள்! ஏடுகளைப் பாருங்கள் எத்துணை வேறுபாடுகள் உள்ளனவென்று, ஏடுகளால் நாட்டிற்கு விளைந்த நன்மையைக் கணக்கெடுத்துப் பாருங்கள்; பார்த்து சிந்தித்து சீர்தூக்கி நல்ல முடிவுக்கு வாருங்கள். அதன் வழி நடவுங்கள்: பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள்; காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த இலக்கியங்களை இயற்றுங்கள் இன்றேல் உங்கள் காலம் பழைய புராணங்களோடு நிற்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை செய்கின்றேன். எச்சரிக்கையை கோமாளியின் கூத்தென்று ஏமாளித்தனமாக எண்ணாதீர்; நிலைமை நிச்சயம் மாறும் என்பதைப் பற்பல நாட்டு வரலாறுகளைப் படித்துப் பார்க்கின் உணரலாம்; காலம் அறிந்து கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்; நிலைமையறிந்து நீதி வழங்குங்கள்; நாட்டையறிந்து ஏடுகள் இயற்றுங்கள்; மதத்தைப் புகுத்தி கலையைக் கறைப்படுத்தும் கயமைத்தனத்தைக் கைவிடுங்கள்; அதனால் மக்களை மக்களாக வாழச் செய்வீர்கள்; மற்று நிர்வாணப் பிச்சை கேட்கும் ஆண்டவனைப் பாடின் மக்களை நிர்வாண காலமாகிய காட்டுமிராண்டிக் காலத்திற்கு இழுத்துச் செல்லும் இழிசெயல் புரிந்தோராவீர்; மக்கள் மதியைக் குறைத்த குறைமதியாளராவீர்.
மதத்திற்கென தனி ஏடு இயற்றுங்கள் மதம் வேண்டுமேல், அழகான கதைகளிலே, ஆராய்ச்சி மிக்க ஏடுகளிலே ஆண்டவன் அவதார லீலைகளைப் புகுத்தி அறிவைப் பாழ்படுத்தாதீர். அது அறமல்ல. அறிவுடமையு மல்ல ஆராய்ச்சிக்கு அணை போடாதீர். ஆண்டவனுக்குரிய ஏடுகள் என்று தனியே தயாரியுங்கள் ஆண்டவனை விட்டு அகல முடியாவிட்டால் அதற்காக ஏடுகள் எல்லாம் எம்பெருமானுக்கே அற்பணம் என்ற நிலைமை வேண்டாம். அதை மாற்றுங்கள், அதுதான் நீதி நேர்மை கூட. படித்த இளைஞர்கள் பகுத்தறிவு கொண்டு எதனையும் துருவித் துருவி ஆராய முற்பட்டு விட்டனர். நீங்கள் எத்துணை மண்டலங்கள் தவமிருந்து தத்துவார்த்தங்கள் கண்டு அவர் ஆராய்ச்சியை அலட்சியப் படுத்தியபோதிலும் உமது தத்துவார்த்தம் நிலைக்காது. பாமர மக்களை பகுத்தறிவாளர்களாக்கப் பாங்குள்ள ஏடுகள் எழுதித் தாருங்கள். 'இன்றேல் உலகம் உம்மை மதியாது என்பது எனது துணிவு உண்மை உரை. நாட்டைக் கருதாவிடின், நாட்டின் நலிவு நாளடைவில் உம்மையும் பற்றும். எனவே ஆண்மையோடு அருந்தொண்டாற்ற முன் வாருங்கள். உலகம் உம்மை போற்றும். நாடு உம்மை ஏத்தும். ஆனால் நீவீர் சிலரின் சீற்றத்தைப் பெரிதெனவும் மதவாதிகளின் மமதையை மாலை எனவுங் கருதி மனந்தடுமாறி எங்களுக்கு எதிர்ப் பிரசாரம் செய்யாதிருப்பதே நீங்கள் நாட்டுக்குச் செய்யும் நல்லறமாகும் இதையேனும் நீங்கள் செய்ய முற்படலா மல்லவா?
ஏட்டின் நன்மையைக் கருதி நலமுள்ள ஏடுகளைப் பண்டிதர்கள் இயற்றித் தாராவிடில் நாளடைவில் நாடு இழி நிலையடையும். செவி சாய்ப்பார்களா இலக்கிய கர்த்தாக்கள்; செயலில் இறங்குவார்களா கற்றுணர்ந்த கலா வல்லுநர்கள். எது எப்படியாகிலும் நாம் அபாய அறிவிப்யை அறிவித்துக் கொண்டு அறிவின் வழி யேகுவோம். எதிர்ப்பாரைக் கண்டு பின் வாங்கோம்.
தோழர்களுக்கு வேண்டுகோள் !
மாணவத்தோழர்களே! உங்கள் நேரத்தை நெடுநேரம் எடுத்துக்கொண்டேன். ஏதோ விருந்து கிடைக்குமென்று, வந்தீர்கள். ஆனால் மருந்துதான் கொடுத்துள்ளேன். மருந்து என்றதும் மருளவேண்டாம். மருந்தை உண்டு உணர்வோடு ஒன்றிச் சுவைக்குங்கால் உண்மை தெரியும். கேட்டவற்றைச் சிந்தனையிலே கொண்டு சீர்தூக்கிப் பாருங்கள், அறிவுக்கு ஒத்ததை கொள்ளுங்கள். நாட்டுக்கும் ஏட்டுக்கும் தொடர்பு வேண்டுமா? வேண்டாமா? நாட்டு நலன் கருதா ஏடுகள் நமக்குத் தேவையா? மதங்கலந்த ஏடுகள் மதியை வளர்க்குமா? அன்றி மதியை மறைக்குமா? மடமையைப் போற்றுமா வென்று எண்ணுங்கள். ஆண்டவனின் அற்புத குணங்கள் என்பவை அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு, நாகரீக நாட்டார்க்கு நல்ல குணங்கள் என்றாவது ஏற்படுமா என்றும் கருத்திலே கருதுங்கள், இலக்கியப் பண்டிதர்களின் இயல்பு நல்ல முறையிலே இருக்கின்றதாவென்று இரவும் பசுலும் பகுத்துணருங்கள். எது முறையோ அதன் வழி நடவுங்கள். எதிர்ப்புக்கு அஞ்சாதீர். ஏளனத்தைக்கேட்டு ஏமாராதீர். மதத்தின் முன் மண்டியிடாதீர். கடவுளைக்கண்டு கருத்தழியாதீர். அறிவே துணை. மானமே மனிதனை மனிதனாக்குகிறது என்பதை உணருங்கள். உலுத்தர் பேச்சை உதறித் தள்ளுங்கள். சமத்துவம் நாடுங்கள். சகோதரத்துவம் கோருங்கள். சாதி மத பேதத்தைச் சாடுங்கள். தோல்வி கண்டு சலிப்புறாதீர். மாற்றார் மமதை கண்டு மனம் மருளாதீர் சிந்தித்து முடிவுக்கு வாருங்கள். அதன் வழி செயலாற்றுங்கள் செம்மல்களே! உங்கள் யாவருக்கும் எனது நன்றி.
✽