நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. கோவிந்தசாமி ராவ்

இந்நூல்

என் தந்தை தாயர்களாகிய

ப. விஜயரங்க முதலியார்

ப. மாணிக்கவேலு அம்மாள்

ஞாபகார்த்தமாக பதிக்கப்பட்டது

நான் கண்ட நாடக கலைஞர்கள்

திரு. கோவிந்தசாமி ராவ்

பழங்காலத்து தமிழ் நாடகங்கள் சீர்குலைந்து தெருக்கூத்துகளாய் மாறின. பிறகு, தமிழ் நாடகத்தை உத்தாரணம் செய்தவர்களுள் காலஞ்சென்ற கோவிந்தசாமி என்பவரை ஒரு முக்கியமானவராகக் கூறலாம்.

அவர் ஒரு மஹாராஷ்டிரர். இவரது முன்னோர் சிவாஜி மன்னரது தம்பி தஞ்சாவூரை ஆள ஆரம்பித்த காலத்தில் அவருடன் வந்த பரிவாரங்களில் ஒருவராம். அவர் மஹாராஷ்டிர பிரிவுகளில் பான்ஸ்லே பிரிவினர். தஞ்சாவூரில் தனது சிறுவயதில் ஆங்கிலம் கற்று பிரவேசப் பரீட்சையில் தேறினவராய் அக்காலத்தில் நமது நாட்டை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில கவர்ன்மெண்டில் உத்தியோகத்தில் சொல்ப சம்பளத்தில் குமாஸ்தாவாக அமர்ந்திருந்தார். இவரது வயது சுமார் 35 ஆன காலத்தில் பூணாவிலிருந்து ஒரு மஹாராஷ்டிர நாடக கம்பெனியார் தஞ்சாவூருக்கு வந்து மஹாராஷ்டிர பாஷையில் சில நாடகங்களை நடத்தினராம். இவைகளை ஒன்றும் விடாது பார்த்துக்கொண்டிருந்த கோவிந்தசாமி ராவ் தானும் அப்படிப்பட்ட நாடகக் கம்பெனி ஒன்று ஏற்படுத்தி அதில் முன்சொன்ன நாடகங்களைப் போல தாங்களும் நாடகங்களில் நடிக்கவேண்டுமென்று ஆசைகொண்ட நல்ல உருவமும், சங்கீதக் கலையும் வல்ல சில நண்பர்களை ஒருங்கு சேர்த்து மனமோகன நாடகக் கம்பெனி என்னும் பெயருடைய நாடகக் கம்பெனியைத் தஞ்சையில் ஏற்படுத்தினராம்.

இவருக்கு இங்கிலீஷ், மஹாராஷ்டிரம் என்னும் இரண்டு பாஷைகளுமன்றி தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி பாஷைகளிலும் நன்றாய்ப் பேசவரும் ஆயினும் மனமோகன நாடகக் கம்பெனியின் நாடகங்களை தமிழ் பாஷையிலேயே ஆடவேண்டுமென்று தீர்மானித்தார். இவருடன் சேர்ந்த மஹாராஷ்டிர வாலிபர்களும் தஞ்சாவூர் வாசிகள் ஆனபடியால் தமிழ் நன்றாய் பேசவரும், முதன் முதலில் தஞ்சாவூரில் பூனா சாங்கிலி கம்பெனியார் நடத்திய சில புராணக் கதைகளையே, தமிழில் தனது நடிகர்களுக்கு கற்பித்து அந்த நாடகங்களை தஞ்சாவூரில் ஒரு கொட்டகையில் ஆடி பெயர் பெற்றார். நல்ல பணமும் வசூலாயிற்று. அதன் பேரில் தனது கம்பெனியுடன் சென்னைக்கு வந்து, தான் தஞ்சாவூரில் ஆடிய நாடகங்களையும் ராமாயண பாரதக் கதைகளிலிருந்து எடுத்த சில நாடகங்களையும் ஆடினார்.

இவர் சென்னையில் ஆடியது செங்காங்கடையில் தற்காலம் இருக்கும் சினிமா கட்டிடத்தில் அச்சமயம் இருந்த ஒரு ஓட்டுக் கொட்டகையிலாம். நல்ல மாதிரியில் பழைய ஆபாசங்கள் ஏதுமின்றி இவர் தமிழ் நாடகங்களை நடத்துகிறார் எனும் பெயர் சீக்கிரம் பட்டணம் எங்கும் பரவலாயிற்று. ஜனங்களும் ஏராளமாக இவரது நாடகங்களைப் பார்க்கலாயினர். அக்காலம் முதலில் சனிக்கிழமைதோறும் ஆட ஆரம்பித்து பிறகு ஜனங்களின் நன்மதிப்பைப் பெறவே செவ்வாய்க்கிழமை வியாழக்கிழமைகளிலும் நாடகம் நடத்தினர். சனிக்கிழமை நாடகங்களுக்கு சில சமயங்களில் இரவு 8-30 மணிக்குமேல் டிக்கட்டுகள் கிடைக்காமலும் போவதுண்டு. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சென்னைக்கு வந்து இவ்வாறு தமிழ் நாடகங்களை நடத்திப் பெயர்பெற்றார். முன்சொன்னபடி இவர் செங்காங்கடை கொட்டகையிற் ஸ்திரீ சாகஸம் என்னும் ஓர் நாடகத்தை நடத்தியபோது எனது நாடகமேடை நினைவுகளில் கூறியபடி என் தகப்பனார் என்னை இதைப்பார்க்க அழைத்துக்கொண்டு போனார். அன்றியும் நாடகம் முடிந்ததும் கோவிந்தசாமிராவுக்கு என்னை அறிமுகப் படுத்தினார். அதுமுதல் கோவிந்தசாமி ராவ் ஆயுள் பரியந்தம் எனது நண்பராக இருந்தார். சென்னைக்கு வரும்போதெல்லாம் என்னைத் தவறாமல் பார்ப்பார். இதுவரை அவரைப்பற்றி நான் கூறியுள்ள பல விஷயங்களை அவர் வாயிலாகவே அறிந்தேன்.


அவர் பெரிய உருவமுடையவர். பரந்தமுகம், விசாலமான கண்களையுடையவர், கம்பீரமான குரலுடன் பேசும் சக்தி வாய்ந்தவர். சாதாரணமாக பூனா மஹாராஷ்டிரர்கள் அணியும் தோவத்தியையும் நீண்ட சட்டையையும் அதன் பேரில் ஒரு சால்வையும் அணிவது அவர் வழக்கம். தலையில் மஹாராஷ்டிரர்கள் அணியும் சரிகை முகப்புடைய அணியை அணிவார். தஞ்சாவூர் அரசர்களைப்போல் கல் மீசை வைத்திருந்தார். இவர் நடத்திய தமிழ் நாடகங்களுள் முக்கியமானவை :-- ராம்தாஸ் சரித்திரம், பாதுகா பட்டாபிஷேகம், திரௌபதி வஸ்திராபரஹணம், தாராசசாங்கம், கோபிசந்து, கர்ணவதம், அபிமன்யு, சிறுத்தொண்டர் முதலியன. இதில் வேடிக்கை யென்னவென்றால் இந்த நாடகங்களில் ஒன்றேனும் தமிழில் அக்காலத்தில் அச்சிலும் கிடையாது. ஓலை ஏட்டிலும் கிடையாது. பிறகு இவர் எப்படி அந்நாடகங்களை நடத்தினார் என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் ஒரு புதிய நாடகத்தை எடுத்துக்கொண்டு எப்படி ஒத்திகை நடத்தினார் என்று நான் கூறுவதால் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஒரு புதிய நாடகத்தை அவர் ஆடவேண்டுமென்று தீர்மானித்தால் அக்கதையை ராமாயணத்திலிருந்தோ, பாரதத்திலிருந்தோ மற்ற எவ்விடத்திலிருத்தோ அதைப் படித்துவிட்டு தனது நடிகர்களை எல்லாம் தனது எதிரில் உட்காரவைத்துக் கொண்டு அக்கதையை விரிவாக அவர்களுக்குத் தெரிவிப்பார். பிறகு தனக்குத் தகுந்த ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு அவரவர்களுடைய சரீர சாரீரங்களுக்கு ஏற்றபடி பகிர்ந்து கொடுப்பார். அதன்பின் நடக்க வேண்டிய ஒவ்வொரு காட்சியின் சாராம்சங்களை விரிவாகக்கூறி அதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் பேசவேண்டிய விஷயங்களைப் பற்றியும் நடக்கவேண்டிய சந்தர்ப்பங்களைப்பற்றியும் தன்னால் இயன்ற அளவு விவரமாய் எடுத்துரைப்பார். பிறகு இரண்டாம், மூன்றாம் ஒத்திகைகளில் எல்லா பாத்திரங்களையும் அவர்கள் பாகத்தின்படி வசனத்தைப் பேசச் சொல்வார். அவர்கள் பேசும்போது ஏதாவது திருத்தவேண்டிய விஷயங்கள் இருந்தால் திருத்துவார். அதன் பிறகு கடைசி ஒத்திகைகளில் அவர்கள் பாடவேண்டிய பாட்டுகளை மஹாராஷ்டிரம், தெலுங்கு, தமிழ் நூல்களிலிருந்து எடுத்து அவர்களுக்குக் கற்பிப்பார். அவ்வளவுதான்.

இனி அவர் சாதாரணமாக தமிழ் நாடகங்களை நடத்தியதைப் பற்றி கொஞ்சம் கூறுகிறேன். நாடகமானது ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் என்று பிரசுரித்தபோதிலும் அரைமணி முக்கால் மணி பொறுத்துத்தான் துவக்கமாகும். அந்த துவக்கமும் திரைக்குப் பின்னால் தான். முதலில் கோவிந்தசாமிராவ் தனது இஷ்டதேவதையாகிய ஸ்ரீராமர், சாமுண்டீஸ்வரி இவர்கள் ஸ்தோத்திரத்தைப் பாடுவார். பிறகு டிராப் படுதாவுக்கு முன் வந்து நிற்க விதூஷகன் வந்து அவருடன் பேசுவான். இவ்விருவர்களுடைய சம்பாஷணையினால் இன்ன நாடகத்தின் கதை என்று சபையோருக்கு விளங்கும். இதெல்லாம் ஆன பிறகு தான் சரியான நாடகம் ஆரம்பமாகும். நாடகம் முடிவதற்கு சுமார் 5 மணி நேரமாகும். இதில் இன்னொரு வேடிக்கை யென்ன வென்றால் ஒரே நாடகத்தை இரண்டு முறை ஒருவர் பார்ப்பதினால் சங்கீதப் பாட்டுகள் ஒரே மாதிரி இருந்த போதிலும் நடிகர்கள் பேசும் வசனம் எவ்வளவோ மாறி வரும். இதற்குக் காரணம் முன்பே கூறியுள்ளேன். இவரது நாடகங்களில் விதூஷகன் வேடம் பூணும் பஞ்சநாதராவ் சற்றேறக் குறைய எல்லாக் காட்சி களிலும் தோன்றி சமயோசிதமாய் விகடவார்த்தைகளை நாடக பாத்திரங்களுடன் பேசுவான். நாடகம் முடிந்தவுடன் மகிஷாசுர மர்த்தினி திரைவிடப்படும். அதற்கும் மேடையின் மேல் நிற்கும் எல்லா நடிகர்களுக்கும் திரி ஒன்று ஏற்றப்பட்ட ஒரு கலியாண பூசணிக்காய் சுற்றி உடைப்பது வழக்கம்.

இனி கோவிந்தசாமிராவ் அவர்கள் நடித்த பாத்திரங்களைப் பற்றி கொஞ்சம் கருதுவோம், எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில் பாதுகாபட்டாபிஷேகத்தில் இவர் பரதனாக நடித்ததும் கோபிசந்தில் கோபிசந்தாக நடித்ததும் ராம்தாஸில் நவாப்பாக நடித்ததும் தான் ஜனங்களின் மனதைக் கவர்ந்தன என்பேன். இந்த முக்கிய பாத்திரங்களில் இவர் சோக பாகத்தை நடிக்கும் போதெல்லாம் சபையில் நாடகத்தைப் பார்க்க வந்திருக்கும் பெரும்பாலோர் கண்ணீர் விட்டு அழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவ்வளவு உருக்கமாக நடிப்பார். ராம்தாஸில் நவாப்பாக ஐதராபாத்தில் ஒருமுறை இவர் நடித்ததற்காக அதைப் பார்த்த பல மகம்மதிய தனவான்கள் இவருக்குப் பொற்பதக்கம் அளித்து கீன்காப் சால்வை முதலிய மரியாதைகள் செய்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாராசசாங்கத்தில் இவர் பிரகஸ்பதியாக நடித்தது சாதாரண ஜனங்களின் மனதைக் கவராவிட்டாலும் என் மனதைக் கவர்ந்தது. ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் மந்திரி, பிரதானி முதலிய சில்லரை பாத்திரங்களையும் சமயோசிதமாக இவர் தரிப்பது வழக்கம். அவைகளிலும் மிகவும் பொருத்தமாக நடிப்பார்.

இவர் மனமோஹன நாடக சபையில் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறச் செய்த இவரது மாணவர்களுள் முக்கியமானவர்கள் கோனேரிராவ், வீராசாமிராவ் என்னும் அயன் ராஜ பார்ட்டு நடிகர்களும் சுந்தரராவ், குப்பண்ணராவ் எனும் அயன் ஸ்திரீ பார்ட் நடிகர்களுமாம். இவர்களெல்லாம் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மனமோஹன நாடகக் கம்பெனியை விட்டுப் பிரிந்து தாங்கள் ஏற்படுத்திய சொந்த நாடக கம்பெனிகளில் பெரும்பாலும் நடிக்க ஆரம்பித்தனர். இதுவே கோவிந்தசாமிராவின் நாடகக் கம்பெனி கலைந்து போனதற்கு முக்கிய காரணம். தனது கம்பெனி கலைந்த பிறகு சுந்தர ராவ் முதலியோருடைய கம்பெனிகளில் தான் சூத்திரதாரனாக இருந்து சில வருடங்கள் நடத்தி வந்தார். கடைசியாக பாலாமணி நாடகக் கம்பெனியில் சூத்திரதாரனாக ஊதியம் பெற்று தமிழ் நாடகத்திற்காக உழைத்தனர். ஆகவே ஆயுள் பர்யந்தம் தமிழ் நாடகத்திற்காகவே உழைத்தனர். என்று ஒருவாறு கூறலாம்.