நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. நவாப் ராஜமாணிக்கம்
இவர் ஒரு நல்ல நடிகர், சுவாமியின் கிருபையால் வயதாகிய போதிலும் இவர் இன்னும் நடித்துவருகிறார். இவர் தன் சொந்தமாக தேவிகான சபா என்னும் நாடக சபையை ஏற்படுத்தி புராண சம்பந்தமான பல நாடகங்களை நடத்தி வருகிறார். ஒருமுறை ராமாயணத்தில் அனுமார் இராவணனை சந்திக்கும் கட்டத்தில் மிகவும் நன்றாய் நடித்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இவர் சிறந்த பக்திமான், ஐயப்பன் என்னும் சுவாமியை தன் குலதெய்வமாகக் கொண்டவர். ஐயப்பன் கதையை நாடகமாக பன்முறை நடத்தி நல்ல பொருளும் புகழும் பெற்றார். ஆயினும் சில வருடங்களுக்கு முன்பாக பெரும் காற்றுமழையால் இவர் ஆடிவந்த நாடகக் கொட்டகை சரிந்து விழுந்து திரைகள், உடைகள் முதலிய எல்லா சாமான்களும் அழிந்துவிட்டன. அச்சமயம் சென்னை அரசியலார் 5000 ரூபாயும் சங்கீத நாடகசபையார் 5000 ரூபாயும், மத்திய அரசியலார் 5000 ரூபாயும் கொடுத்து உதவி மறுபடியும் முன்போல் இவரது சபையை நடத்தும்படியாக உதவினார்கள், இவர் சுமார் 200 பிள்ளைகளுக்கு உணவு, ஆடை முதலியவை அளித்து ஆரம்பக் கல்வியையும் கற்பித்து நடிகர்களாகவும் தேர்ச்சி பெறச் செய்திருக்கிறார், பழைய நாடக சபைகளில் இவர் சபைதான் பல வருடங்களாக நீடித்த காலம் நல்லமுறையில் நாடகங்களை நடத்தி வருகிறது.