நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/அருமை அம்மாவுக்கு

31. அருமை அம்மாவுக்கு

தாமரைப் பூவின் இதழ் போல் கமலிக்குப் பெரிய கண்கள். அந்தக் கண்களின் வனப்பைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவளுக்கு ஆச்சரியம் வரும் போது அவற்றைப் பார்க்க வேண்டும். முகத்தில் ரோஜா மொட்டுக்கள் அரும்பியது போன்ற அவளுடைய சின்னஞ்சிறு உதடுகள் குவியக் கண்கள் காதோரங்களைத் தொட்டு மீள்கிறாற் போல அப்படி அகன்று நீளும் அந்தக் கண்கள்.

“கமலிக்குப் புறா முட்டை போலக் கண் பெரிசு, அப்பா!” என்று என் பையன் அடிக்கடி கேலி செய்வான்.

“உங்கள் வீட்டு ராமு என்னைக் கேலி செய்கிறான், மாமா! என் கண் புறா முட்டையாம். இவனுக்கு மட்டும் கிளி மூக்கு இல்லையோ?” என்று என்னிடம் கட்சி கட்டிக் கொண்டு நியாயத்துக்கு வந்து சேருவாள் கமலி.

“அவன் கிடக்கிறான் அசட்டுப் பயல். உன் கண்கள் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கின்றன தெரியுமா? கொள்ளை அழகு” என்று கமலிக்குச் சமாதானம் சொல்லி அனுப்புவேன் நான். என் சமாதானத்தைக் கேட்டுக் கொண்டு “வவ்வ-வே! உனக்குத் தாண்டா கிளி மூக்கு” என்று ராமுவுக்கு அழகு காட்டி விட்டுத் திரும்பிப் போய் விடுவாள் கமலி.

கமலி தாயில்லாக் குழந்தை. எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். அவள் தகப்பனாருக்கு ஏதோ ஒரு திரைப்படவிநியோகக் கம்பெனியில் ஊர் சுற்றும் பிரதிநிதி வேலை. முக்கால்வாசி நாட்கள் வெளியூரில் இருப்பார். கம்பெனியின் படம் ஓடுகிற ஊரெல்லாம் போய்ச் சுற்ற வேண்டும். நான் குடியிருந்த வீட்டிலேயே பின் கட்டில் அவரும் குடியிருந்தார். தூரத்து உறவுள்ள வயதான பாட்டியம்மாள் ஒருத்தி வீட்டோடு இருந்து சமையல் செய்து போட்டுக் கொண்டிருந்தாள். தகப்பனார் ஊரில் இல்லாத நாட்களில் வீட்டில் பாட்டியும், கமலியும்தான் இருப்பார்கள். சின்ன வயதானாலும், குறும்புத்தனம், வேடிக்கைப் பேச்சு எல்லாம் கமலியிடம் நிறைய உண்டு.

“கமலி! அப்பாவை எங்கே காணோம்? ஊரிலே இல்லையா?” என்று எப்போதாவது நான் கேட்பேன்.

“மாமா! அதை ஏன் கேட்கிறீர்கள்? வீரமார்த்தாண்டனின் சபதம் முடிந்ததும், பாட்டியின் பசிக்காகவும், புருஷன் போற்றிய பெண் திலகத்துக்காகவும் அப்பா கிளம்பி விட்டார்!” என்று சொல்லி விட்டு ரப்பர்ப் பந்து மாதிரித் துள்ளிக் குதித்துக்கொண்டே கை கொட்டிச் சிரிப்பாள் கமலி.

"நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம், கமலீ? எனக்குப் புரியலையே?’ என்று தெரியாதது போல் கேட்பேன்.

"ஐயோ, மாமாவே! நீங்கள் சுத்த அசடாயிருக்கிறீர்களே. அதெல்லாம் சினிமாப் பேரு மாமா அந்தப்படங்கள் ஒடுகிற ஊருக்கெல்லாம் அப்பா போயிருக்கிறார் என்று அர்த்தம்' என்பாள் கமலி.

கமலிக்கு அம்மா இறந்து போய் நாலைந்து மாதங்கள் கூட ஆகவில்லை. அம்மா இருந்தபோது கமலி நான்காம் வகுப்பிலோ என்னவோ, படித்துக் கொண்டிருந்தாள். தாய் போனதும் படிப்பு அரைகுறையாக நின்று விட்டது. படிப்பு நின்று விட்டாலும் அந்த வயதில் அம்மாதிரி ஒரு பெண் குழந்தைக்குச் சூடிகை, வக்கணைப் பேச்சு, விவாத முறை எல்லாம் இருப்பது ஆச்சரியம். வயதுக்கு மீறின. பேச்செல்லாம் கமலியின் வாயிலிருந்து வரும் சில சமயங்களில், "மாமா! உங்கள் வீட்டு ராமுவைக் கொஞ்சம் வாயை அடக்கிப் பேசச் சொல்லுங்கள். எனக்குக் கோபம் வரும் அப்புறம். காலித்தனமாகப் பேசறான்.”

"அப்படி என்ன பேசினான், கமலீ?”

"நீ படிப்பை நிறுத்தினது நல்லதாகப் போச்சு, பொம்பளைக்கெல்லாம் படிப்பு வராது என்று என்கிட்டேயே வந்து துணிச்சலாகச் சொல்கிறான், மாமா!

“ஏ அப்பா!

இந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லி என்ன பயன்? ராமுவைப் பற்றிப்புகார் செய்யும் போதுதான் கமலியின் முகத்தில் எவ்வளவு கோபம்? உதடு கோணிக் கொண்டு போக விம்மலும், விசும்பலுமாக அவள் இருந்த கோலத்தைப் பார்த்தால் நான் சமாதானப்படுத்தாவிட்டால் அழுது விடுவாள் போலிருந்தது.

“அவன் சொன்னதிலே எது காலித்தனம், கமலீ?”

“போ, மாமா! நீ வேண்டுமென்றே தூண்டித் தூண்டிக் கேட்கிறே. உனக்கு ஒண்ணும் தெரியாதோ? பொம்பளை என்று சொல்றானே! அப்படி அவன் சொல்லலாமோ?”

“அடே தேவலையே! வேறே எப்படிச் சொல்ல வேண்டும், கமலி?”

“பெண்கள், மாதர்கள் என்று சொல்லணும் மாமா! முகத்தில் உறுதி ஒளிர உலகத்துப் பெண் குலத்தின் தன்மானமெல்லாம் தன் பொறுப்பில் பாதுகாக்கப்படுவது போல் ஆவேசத்தோடு சொன்னாள் அந்த மழலை திருந்தாத சிறுமி. மற்றச் சமயங்களில் நீங்கள், உங்களை என்று பேசும் சிறுமி கோபம் வந்துவிட்டால் என்னை, நீ உன்னை என்று ஒருமையில் பேச ஆரம்பித்து விடுவாள்.

“கமலீ! 'பொம்பளை' என்று சொன்னால் குற்றமா?”

“அதென்னமோ! சொல்லப்படாது. சொன்னால் எனக்குக் கோவம் வரும்”

"கோவம் வந்தால் என்ன செய்வாய்?”

“அழுவேன்.”

அழகான கவிக்குப் பொருள் காண்பதைப் போலவே, குழந்தைகளின் மனத்தைப் புரிந்து கொள்ள முயல்வதிலும் ஒரு தெய்வீக இன்பம் கிடைக்கிறது.

“அடே! ராமு இங்கே வா..இனிமேல் கமலியைப் 'பொம்பளை'ன்னு சொன்னால் முதுகுத் தோலை உரித்து விடுவேன்” என்று என் பையனை உடனே கூப்பிட்டுக் கண்டித்தேன். கமலியின் முன்னிலையிலேயே ராமுவைக் கூப்பிட்டுக் கண்டித்ததில் அவளுக்குப் பரம திருப்தி. ஆனால், ராமு திரும்பவும் அவளை வம்புக்கு இழுத்து விட்டான்.

“மகாராணி கமலிதேவி அவர்களே! இனி அங்ங்னம் தங்களைப் பேசேன்” என்று நாடக பாணியில் அவன் வணங்கியபோது மறுபடியும் அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.

“பாருங்க மாமா..! உங்க முன்னேயே இப்படிச் சினிமாவிலே பேசற மாதிரிப் பேசறான்.”

“தடிக்கழுதை! போடா உள்ளே போய் ஏதாவது படி” என்று நான் பையனை அதட்டி உள்ளே துரத்தினேன்.

‘மாமா! இந்தக் காலத்து "ஆம்பிளைப் பையன்களுக்கு' எதுவருதோ வரலையோ, இந்த மாதிரி வசனம் பேசமட்டும் வருகிறது.”

“அடி சக்கை நூறு வயதுக் கிழவி மாதிரிப் பேசுகிறாயே! நீ எந்தக் காலத்துப் பெண்? நீயும் இந்தக் காலத்துப் பெண்தானே?”

கமலி பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள்.

உள்ளே படிக்கப் போன என் பையன் அடிபட்ட புலிபோல் சீறிக் கொண்டு வெளியே ஓடிவந்தான்.

"அப்பா அவளை விடாதே அப்பா. அவள் மட்டும் இப்போ ‘ஆம்பிளை' என்று சொன்னாளே. சொல்லலாமோ? கேளப்பா அவளை”

ராமு சண்டைக்குப் பிள்ளையார் சுழி போட்டுக்கொண்டு வந்தான். எனக்கும் அவன் கேள்வி நியாயமாகவே பட்டது.

“அவன் கேட்பது நியாயந்தானே கமலீ. அவன் உன்னைப் 'பொம்பளை' என்று சொல்லக் கூடாதென்கிறாய். நீ மட்டும் பையன்களை "ஆம்பிளை' என்று சொல்லலாமா?”

கமலியின் கன்னங்களில் ஆப்பிள் பழ ஒளி வழிந்தது. அவள் பதில் சொல்லாமல் வெட்கித் தலை குனிந்தாள்.

“என்ன கமலீ! பதிலைக் காணோம்!

“தெரியாமற் சொல்லி விட்டேன் மாமா. ஏதோ வாயில் தவறி வந்து விட்டது. இனிமேல் "ஆம்பளை' என்று சொல்லப்படாது.”

இவ்வாறு கூறிக்கொண்டே குனிந்த தலை நிமிராமல் ஓடி விட்டாள் கமலி, தரையில் கால்கள் பாவாமல் துள்ளித்துள்ளிப் பாய்வது அவளுக்கென்றே அமைந்த ஒரு நடை கமலி நடந்து வரும்போது பல நிறமும், பல மணமுமுள்ள பூக்களெல்லாம் ஒன்றுபட்டுக் குழந்தை என்ற ஒரு பெருமலராகி என்னை நோக்கி அசைந்தாடி வருவதுபோல் எனக்கு ஒரு பிரமை உண்டாகும்.

னக்கு ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் உத்தியோகம். இரயிலில் ஊர் ஊராகத் தபால் வண்டிக்குள் பயணம் செய்து கடிதங்களைப் பிரிக்கும் வேலை. தொடர்ந்தாற் போல் சில நாட்கள் வேலைக்குப் போனால் சில நாட்கள் ஒய்வு கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் ஒய்வு நாட்களில் என் வீட்டின் பின்கட்டில் குடியிருக்கும் கமலி என்ற பெண் குழந்தையோடு வம்பு பேசுவது எனக்குப் பிடித்தமான காரியம். ஆயிரம் புத்தகங்களைப் படித்தாலும் தெரிந்த கொள்ள முடியாத தூய எண்ணங்கள் குழந்தையின் கண்களிலும், சிரிப்பிலும், திருந்தாத பேச்சிலும் இருப்பதாக எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. கமலி எனது இந்த நம்பிக்கையின் உறைவிடமாக இருந்தாள்.

ஒரு நாள் அதுவரையில் கேட்காத புதுக் கேள்வி ஒன்றைக் கமலி என்னிடம் கேட்டாள்:

"மாமா! நீங்க தபால் கடிதாசுகளை ஒவ்வொரு ஊருக்கும் இரயில்லே கொண்டுபோகிற உத்தியோகமா பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

"ஆமாம்! உனக்கு யார் சொன்னார்கள், என் உத்தியோகத்தைப் பற்றி?”

“ராமு அப்பாவுக்கு என்ன வேலை' என்று எங்க அப்பாவிடம் கேட்டேன். அவர்தான் சொன்னார்.”

"அப்படியா?”

"மாமா! யார் கடிதாசு போட்டாலும் நீங்க கொண்டு போய்க் கொடுப்பீங்களோ?"

"தாராளமாகக் கொடுப்பேன்.”

“நான் போட்டால் கூடவா?”

“நீ யாருக்குக் கடுதாசு போடணும், கமலீ?”

“அதெல்லாம் உங்களுக்கு என்ன கேள்வி? நான் ஒருத்தருக்கு இரகசியமா ஒண்ணு எழுதிப் போடணும். போட்டால் போய்ச் சேருமா, இல்லையா? அதை மட்டும் நீங்க சொன்னால் போதும்.”

எனக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு கமலிக்குச் சரியாக உட்கார்ந்து கொண்டு பேசினேன்.

"கமலீ! நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாமலா போய் விடும்? கடிதத்தை எழுதி என் கையில்தானே கொடுப்பாய்? அப்போது நான் படித்து விடுவேனே!”

"ஆசையைப் பாரு! நான் 'கார்டி'லே எழுதிக் குடுத்தால்தானே நீங்க படிக்க முடியும்? கவரிலே எழுதி ஒட்டித்தானே குடுப்பேன்.”

“கவரைப் பிரித்துப் படித்துவிட்டால் என்ன செய்வாய்?”

"ஐயோ! ஒருத்தர் ஒட்டிப் போட்ட கவரை இன்னொருத்தர் பிரிப்பாளோ? நீங்க அப்படிச் செய்வீங்களா, மாமா? உங்களை நான் நல்ல மாமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்!”

"சே! சே! நான் அப்படியெல்லாம் செய்வேனா, கமலீ சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீ கடிதாசு எழுதிக் கொடு, நான் கொண்டு போறேன்.”

“அதானே கேட்டேன்! நீங்க ரொம்ப நல்ல மாமாவாயிற்றே!”

என் சிரிப்பு இதழ்களுக்கு உட்புறமே சிறைப்பட்டு நின்றது.

"மாமா! நீங்க நாலு மணிக்குத் தானே கிளம்புவீர்கள், அதற்குள் எழுதிக் கொண்டு வந்து உங்களிடம் கொடுத்துடறேன்”- இப்படி அவள் சொன்ன போது பகல் பன்னிரண்டு மணி.

“சரி கொண்டு வா.”

கமலி வீட்டுக்கு ஓடினாள்.

என் மனத்தில் சிந்தனை சூழ்ந்து கொண்டது. இந்தச் சிறுமி யாருக்குக் கடிதாசு எழுதப் போகிறாள்? அதில் என்ன இரகசியம் இருக்கும்? இவளாகத் தான் வந்து இவ்வளவும் விசாரித்தாளா? அல்லது பாட்டி ஏதாவது கடிதம் தபாலில் சேர்ப்பதற்காகக் கமலியை விட்டு விசாரித்துக் கொண்டு வரச் சொன்னாளா? எப்படியானால் என்ன? கடிதத்தைக் கொண்டு வந்து கொடுக்கும்போது, தானே தெரிந்து விடுகிறது என்று மன அமைதி பெற்றேன்.

அன்று எனக்கு மாலை நான்கு மணிக்குப் புறப்படவேண்டும். மூன்றரை மணிக்கே நான் தயாராகி விட்டேன். கிளம்பும்போது கமலி மூச்சு இரைக்க ஓடி வந்து ஒரு கவரைக் கொடுத்தாள்.அதைப் பார்க்காமல் அப்படியே வாங்கிப் பைக்குள் போட்டுக் கொண்டேன்.

ஆர்.எம்.எஸ். ஊழியர்கள் பயணம் செய்யும் மெயில் காரேஜில் ஜன்னல்களையெல்லாம் அடைத்து விடுவதால் இரயில் ஒடிக் கொண்டிருந்தாலும் உள்ளே வேர்த்துக் கொட்டும். குவிந்து கிடக்கும் கடிதங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டிருந்தவ்ன் வேர்வையைத் துடைத்துக் கொள்வதற்காகக் கைக்குட்டையைத் தேடிச் சட்டைப் பைக்குள் துழாவினேன்.

கைக்குட்டையோடு கமலி கொடுத்தனுப்பியிருந்த கவரும் வந்தது. அடேடே! மறந்தே போய்விட்டேனே! கமலியின் கவரைத் தபாலில் சேர்க்க வேண்டுமே. அவள் அப்பா எந்த ஊரில் டூரிங் சினிமாவில் சுற்றிக்கொண்டிருக்கிறாரோ பாட்டி சொல்லச் சொல்லக் கேட்டுக் கமலி அப்பாவுக்கு எழுதியிருப்பாள், இந்தக் கடிதத்தை என்று எண்ணியவனாய்க் கடித உறையைத் திருப்பி மேலே இருந்த முகவரியைப் படித்ததும் ஒன்றும் புரியாமல் திகைத்தேன். ஊர், பேர், தெரு ஒன்றும் புரியாமல் கோணல்மாணலான சிறு பிள்ளைக் கையெழுத்துக்களால், அருமை அம்மாவுக்கு என்று மட்டும் உறையின் மேல் எழுதியிருந்தது.

“அசடே' என்று வாய்க்குள் என் நாக்கு மெல்ல அசைந்தது. கவரைப் பிரித்தேன். உள்ளேயும் அதே சிறு பிள்ளைக் கையெழுத்தில் தாறுமாறாக ஏதோ கிறுக்தி வைத்திருந்தாள் கமலி! நெஞ்சில் பொங்கும் சோகக் கிளர்ச்சியும், ஆவலும் என்னை அதைப் படிக்குமாறு துண்டின. எழுத்துக் கூட்டிப் பிழைகளை நீக்கிப் படிப்பதே கஷ்டமாக இருந்தது. ஆனாலும் பொறுமையோடு படித்தேன்.

“அருமை அம்மாவுக்குக் கமலி எழுதிக் கொள்வது என்னவென்றால், நீ போய் ரொம்ப நாட்களாயிற்று. இன்று வரையில் உன்னிடமிருந்து ஒரு கடிதாசும் கிடையாது. உன்னைப் பற்றி அப்பாவைக் கேட்டாலும் பதில் பேசமாட்டேங்கறார். பாட்டியைக் கேட்டா ஒண்னும் பதில் சொல்லாமே அழ ஆரம்பிச்சுடறா.

“அன்னிக்கிச் சாயங்காலம் நான் பள்ளிக்கூடம் விட்டு வரதுக்கு முன்னால் சிவப்பா ஒரு கார் - ஆம்புலன்ஸ்காராமே; உன்னை அது வந்து ஏத்திண்டு போனதைப் பார்த்ததாகத் தபால் மாமா வீட்டு ராமு சொல்றான். எனக்கு ஒண்னும் புரியவேயில்லை. நீ எப்போ வருவே? எங்கே போயிருக்கிறே? யாரைக் கேட்டாலும் தெரியலே. மேல் வீட்டுப் பிச்சி இருக்காளே, கோண வாயி.... அவ வந்து ஒரு நாள், 'உங்கம்மா செத்துப் போயிட்டாடி’ன்னு என்கிட்டச் சொன்னா எனக்கானா ஒரே கோவமா வந்தது. 'பளீர்’னு ஒரு அறை அவள் கன்னத்திலே விட்டேன் பாரு, அப்புறம் மூணு நாளைக்கு என் கூட அவ பேசவேயில்லை.

“பாட்டிக்குக் கண்ணே சரியாகத் தெரியலே. அவ சமைச்சுப் போடற சோறு வாயிலே வைக்க விளங்கலே. அப்பா முக்கால்வாசி நாள் ஊர் சுத்தப் போயிடறார். எனக்குத்தான் பொழுதே போகலை. பள்ளிக்கூடமும் நிறுத்தியாச்சு. உனக்குப் புதுப் பாப்பா பொறக்கப் போறதுன்னுதானே நீ ஆஸ்பத்திரிக்குப் போனே? இன்னும் பொறக்கலியாம்மா? எப்ப வருவே? நீ வரும்போது புதுப் பாப்பாவோடதானே வருவே?

“ராமு இருக்கான் பாரு அம்மா, அவன் 'பொம்பளைக்கெல்லாம் படிப்பு வராது’ன்னான். எனக்குப் பொறுக்கல்லே. . “பொம்பளை'ன்னு சொல்லப்படாது என்று அவன் அப்பாகிட்டப் போயிச் சண்டை பிடிச்சேன். அவர் தான். அந்த மாமாவை நீ பார்த்திருக்கிறாயே, ரொம்ப நல்லவர். அவர் ராமுவைக் கூப்பிட்டுக் கண்டிச்சார்.

"இன்னொரு ரகசியம் உனக்குச் சொல்லிடனும் அம்மா பாட்டி இல்லை, பாட்டி - அவ வந்து ஒரு நாள் ஒரு சங்கதி சொன்னாள்:

“கமலீ சீக்கிரம் உனக்கு ஒரு புது அம்மா வந்திடுவா, அப்புறம் முன்னைப்போல நீ தினம் பள்ளிக்கூடம் போகலாம். பூ வைத்துத் தலையைப் பின்னிக்கலாம். புது அம்மா கிட்டச் சமர்த்தா இருப்பியோ, மாட்டியோ?” அப்படீன்னு பாட்டிகேட்டாள்.

“ஏன்? பழைய அம்மாவரமாட்டாளா பாட்டி... 'அப்படின்னு நான் பாட்டியைக் கேட்டேன். அதுக்கு அவ பதில் சொல்லாமல் அழுதாள்.

"நீயே சொல்லும்மா! எனக்குப் புது அம்மா எதுக்கு? நீதான் இன்னுங் கொஞ்ச நாளிலே புதுப் பாப்பாவோடே வீட்டுக்கு வந்திடுவியே. நீ வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையாப்பாட்டியை அவ ஊருக்குத் தொரத்திப்பிடணும். நீ சுருக்க வெரசா வந்திடு அம்மா.

கமலி

என் கண்களில் ஈரம் கசிந்து விட்டது. ஆயிரமாயிரம் கடிதங்களை விலாசம் பார்த்து ஊர் பிரித்து அனுப்பிப் பழகியவை என் கைகள்.ஆனால், கமலியின் கடிதத்தை எங்கே அனுப்புவது? எந்த ஊர் முத்திரை குத்தி அனுப்புவதென்று எனக்கு விளங்கவே இல்லை. கைக் குட்டையால் ஈரம் கசிந்த என் கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

(கல்கி, 25.1.1959)