நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/கருநாக்கு

77. கருநாக்கு

ங்குனி, சித்திரை மாதங்களில் மதுரையில் திருவிழாக்கள் அதிகம். திருவிழாக்களை விட வெயில் கொடுமை இன்னும் அதிகம். இந்த வெயிலின் தீட்சண்யத்தைக் கோடைக்கானலுக்கு டிக்கெட் வாங்க ‘கியூ’வில் நிற்பவர்கள் தான் அறிவார்கள்.

அன்று நான் அப்படித்தான் கோடைக்கானலுக்கு டிக்கெட் கிடைக்காமல் ‘புக்கிங் ரூம்’ என்ற லட்சியத்தை நோக்கி, ‘கியூ’ என்னும் சாதனம் கொண்டு, வெயில் என்னும் புலனை அடக்கித் தவம் செய்துகொண்டிருந்தேன். தவம் என் சொந்த முயற்சியால் சித்திப்பதற்கு முன்னால், ஒரு நண்பரால் அதிசீக்கிரமாகச் சித்தித்து விட்டது.

என் நண்பர் பட்டாபி நாராயணன் கோடைக்கானல் ஹில் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வருபவர். அன்று தற்செயலாக, ஆபீஸ் காரிய நிமித்தம் மதுரைக்கு வந்திருக்கிறார். நான் கோடைக்கானலுக்கு வருவது பற்றி, நேற்றே அவருக்குக் கடிதம் கூட எழுதியிருந்தேன். ஆனால், அவர் இன்று இங்கே வந்திருப்பதால், கடிதத்தைப் பார்த்திருக்க நியாயமில்லை. ஆபீஸ் காரியம் முடிந்து ஊர் திரும்புவதற்காக அவர் ஸ்டாண்டை அடைந்த போதுதான் ‘கியூ’வில் நின்று கொண்டிருந்த என்னை அவர் காண நேரிட்டது.

அவருடைய தயவினால் டிக்கெட்டும் சுலபமாகக் கிடைத்தது. பஸ்ஸில் டிரைவருக்கு அடுத்தபடி இருந்த முன் சீட்டில் இருவரும் ஏறி அமர்ந்து கொண்டோம். மலைப் பிரயாணத்திற்கு வாய்க்கும் பாக்கியங்களில் எல்லாம் சிறந்த பாக்கியம், இந்த முன் ஆசனத்தில் அமரும் பாக்கியம்தான். உடம்பு நோகாமல், பஸ்ஸின் அலுங்கல், குலுங்கல்களுக்கு ஆளாகாமல், இருபுறமுள்ள இயற்கை வனப்புகளையும் ரசித்துக் கொண்டு போகலாம். .

ஆனால், எங்கள் துரதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வது? மதுரையிலிருந்து புறப்பட்ட பஸ், சோழவந்தானுக்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவில் ஒரு சிறு கிராமத்தின் அருகில் மெஷினில் கோளாறாகி நின்று விட்டது.

சோழவந்தானில் பஸ் நின்ற போது, மதுரையிலிருந்து வந்த சக பிரயாணி ஒருவர் காப்பி சாப்பிட இறங்கினார். பஸ் புறப்படவேண்டிய நேரமாகியும், அவர் ஹோட்டலிலிருந்து வந்து ஏறிக் கொள்கிற வழியாகக் காணோம். எல்லாப் பிரயாணிகளும் வந்தாகி விட்டது. டிரைவர் ஆசனத்தில் வந்து அமர்ந்து கொண்டு ‘ஹார்ன்’ அடித்துப் பார்த்தார். என்ன செய்தும், ஹோட்டலில் நுழைந்த பேர்வழி உடனே வரவில்லை. அன்று அவரால் சோழவந்தானிலிருந்து பஸ் ஐந்து நிமிஷம் ‘லேட்’டாகப் புறப்பட வேண்டியதாயிற்று.

இதனால் கோபமடைந்த கண்டக்டர், அந்த ஆள் பஸ்ஸில் வந்து உட்கார்ந்ததும், ஆத்திரம் பொங்கும் குரலில், “உங்களைப்போல ஆளுங்க எல்லாம் பஸ்ஸுலே ஏன் ஐயா வந்து உசிரை வாங்குறீங்க? சே! சே! டயத்துக்குப் போய்ச் சேரலைன்னா எங்களைக் கம்பெனிலே சும்மா விடுவானா? நீர் என்னையாமனுஷன்? அஞ்சு நிமிஷம் லேட்டாக்கிட்டீரே, ஐயா!” என்று பொரிந்து தள்ளினான்.

அந்த ஆள் முரட்டுத்தனம் மிக்கவர் என்பது, கண்டக்டருக்கு அவர் கூறிய கண்டிப்பான பதிலிலிருந்தே தெரிந்தது.

“அட, சரிதான் நிறுத்து வேய்! எனக்குத் தெரியாதோ, உங்க பஸ்ள டயத்துக்குப் போற லட்சணம்? சும்மா எங்கிட்டவச்சுக்கிடாதே, இந்த மிரட்டல் எல்லாம். எத்தனை நாள் நடுரோட்டிலே நின்னுக்கிட்டு சண்டித்தனம் பண்ணியிருக்கு உங்க பஸ்? என் கை வவிக்க நான் தள்ளியிருக்கேனே, தம்பீ! அது மாதிரி இன்னைக்கும் கொஞ்ச நேரம் சண்டித்தனம் பண்ணினதாக நினைச்சிட்டுப் போவையா? எங்கிட்ட மோதுறே!”

“ஐயா! ஐயா! நீங்கலேட்டாக்கினதுனாலேகூடத் தோஷமில்லை. உங்க கருநாக்குப் பிடிச்ச வாயாலே பஸ்ஸைப் பத்தி எதுவும் சொல்லி வைக்காதீங்க! நடு வழிலே நின்னுடப் போவுது!” அந்த ஆளைச் சமாதானப்படுத்துவது போல டிரைவர் கூறினான். இதற்கு அப்புறம் இந்தப் பேச்சு வளரவில்லை.

இப்போது தற்செயலாகக் காக்கை உட்காரப் பணம் பழம் விழுந்தது என்கிற கதையாகப் பஸ் நின்று விடவே, எல்லோரும் அந்த முரட்டு மனிதரை வாய்க்கு வந்தபடி ஆக்ரோஷமாகத் திட்டத் தொடங்கிவிட்டார்கள்.

பட்டாபியும் நானும் இறங்கி, பட்டாபியின் மாமனார் வீட்டில் இரவு தங்க முடிவு செய்து கிளம்பினோம். வழியில் என் மனத்தில் உறுத்திய சந்தேகத்தைக் கேட்டேன். ‘கருநாக்கு’ என்றால் என்ன?

பட்டாபி சொன்னார், “சிலருடைய வாக்குக்குத் துர்த்தேவதைகள் கட்டுப்படுவதுபோல, கருநாக்குக்காரர்களுக்கு ஏகதேசம் சொற்கள் கட்டுப்பட்டுத் தன் விளைவை உண்டாக்குகின்றன. இதற்கு உதாரணமாக, பிரத்தியட்சமாக நடந்த நிகழ்ச்சி ஒன்றை எடுத்து, உங்களுக்கு நான் சொல்ல முடியும். அந்த நிகழ்ச்சியைக் கேட்டால், எப்படியும் நீங்கள் இந்த மாதிரி விஷயத்தில் கொஞ்சம் நம்பிக்கை கொள்ளத்தான் வேண்டியிருக்கும்...” என்று அழுத்தமான தொனியில் கூறினார்.

“என்ன அது?” என்றேன் ஆவலுடன்.

“கதை இல்லை; உண்மையாகவே என் கண்காண நடந்தது” என்ற பீடிகையோடு நண்பர் பட்டாபி கூறத் தொடங்கினார்.


யிரத்துத் தொளாயிரத்துப் பதினோறாம் வருடம். அப்போதுதான் என்னை முதன் முதலாக மதுரையிலிருந்து கோடைக்கானல் ரூரல் ஸ்டேஷனுக்கு மாற்றியிருந்தார்கள். சுதந்திரப் போராட்டம் மும்முரமாக நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பம் அது. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை மணியாச்சி ஜங்ஷனில் செங்கோட்டை வாஞ்சி ஐயர் சுட்டுக்கொன்ற பயங்கர சம்பவம் நடந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது. இந்தச் சம்பவத்தால் பெரிய பெரிய உத்தியோகங்களில் இருந்த வெள்ளைக்காரத் துரைகள் எல்லாம் போலீஸ் பாதுகாப்பை அதிகமாக நாடினர். மதுரை ஜில்லா முழுவதும் சுதந்திரப் போராட்டம் உச்ச நிலைமை அடைந்திருந்த சமயத்தில், கோடைக்கானலுக்கு மாற்றல் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்திருந்தேன் நான். பொழுதை அமைதியாகக் கழிக்கலாம் அல்லவா?

ஆனால், கோடைக்கானலுக்கு வந்து பதவி ஏற்றுக்கொண்ட பிறகுதான், ‘வேலை எனக்கு அங்கும் குறைவில்லை’ என்று தெரிந்தது. அந்தச் சமயம் இந்தப் போராட்டத்துக்குப் பயந்தே ஜில்லாக் கலெக்டர், சப்-கலெக்டர் ஆகிய இரண்டு வெள்ளைக்காரத்துரைகளும் கோடைக்கானலுக்கு வந்து முகாம் போட்டிருந்தார்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய வேலை வேறு என் தலையில் சுமந்திருந்தது. கலெக்டர் துரைகளின் முகாமை அறிந்து புரட்சிக்காரர்களும் வேட்டைக்கு வருவார்கள் என்ற ஹேஷ்ய பூர்வமான செய்தி கிடைத்திருந்ததனால், நான் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டி வந்தது. இப்படியிருக்கும்போதுதான், ஒரு நாள் முன்னிரவில் அந்தப் பயங்கர சம்பவம் நடந்தது.

மாலை சுமார் ஆறரை மணி இருக்கும். கோடைக்கானலில் சில சமயங்களில் மூன்று மணிக்கே இரவைப்போல ஆகிவிடும். அன்றோ, மழை இருட்டு.

அன்று ஓர் விசேஷச் செய்தி கிடைத்திருந்ததனால், நான் அந்தச் செய்தியை ஊர்ஜிதப் படுத்துவதற்குரிய தகவலை ஓர் ஆள் மூலம் எதிர்பார்த்து, ஸ்டேஷன் வராந்தாவில் நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தேன். எதிரே அமைதியாகத் தென்பட்ட ஏரியில் அவ்வளவு இருட்டையும் பனியையும் பொருட்படுத்தாமல் யாரோ பாட்டரி விளக்குகளின் வெளிச்சத்தோடு படகுகளில் போய் வந்து கொண்டுதான் இருந்தார்கள்.

மணி ஏழேகால் ஆகிவிட்டது. ஏரியில் படகுகளின் ஒலியையும் குமுறும் இடியோசையையும் தவிர கோடைக்கானல் ஊர் அடங்கிவிட்டது. விநாடிக்கு விநாடி பனி கோரமாகிக் கொண்டிருந்தது. நான் எதிர்பார்த்த ஆள் இன்னும் வரவில்லை.

விஷயம் இதுதான் கலெக்டர் துரை எதற்காகப் பயந்து கொண்டுகோடைக் கானலில் ‘ஸ்பெஷல் போலீஸ்’ பாதுகாப்புடன் முகாம் போட்டிருந்தாரோ, அதுவே அங்கே அவரைத் துரத்திக் கொண்டு வந்திருக்கிறது என்று எனக்கு உளவு கிடைத்தது. கோடைக்கானல் மலைத்தொடரின் அடிவாரத்தில் பண்ணைக்காடு என்று ஒரு ஊர் இருக்கிறது பாருங்கள், அந்த ஊரில் ‘பேயாண்டி அம்பலம்’ என்ற ஒரு தீவிர தேச பக்தரும், மதுரையைச் சேர்ந்த வேறு சில தேசியப் புரட்சிக்காரர்களும் சேர்ந்து ‘கலெக்டர் துரை’யைக் கொலை செய்துவிடுவதுபற்றிப் பேசுவதற்கு அன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு சதிக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தக் கூட்டம் பண்ணைக்காடு ஊரில் மேல்புறம், சாலையோரமாக இருக்கும் பேயாண்டி அம்பலத்தின் கொடிக்காலுக்குள்ளே நடைபெறப் போகிறது. சதியில் சம்பந்தப்பட்ட வர்களை அன்றிரவே கைது செய்யத்தவறினால், பின்னர் கலெக்டர் உயிர் பிழைப்பது துர்லபம். அவ்வளவு குரூரமான சதி”

இந்தத் தகவல் அன்று மாலை நாலு மணிக்குத்தான் எனக்குத் தெரிந்தது. விஷயம் மெய்தானா என்று அறிந்து வர நம்பிக்கை வாய்ந்த ஒரு கான்ஸ்டபிளைச் சாதாரண உடையில் பண்ணைக் காட்டிற்கு உடனே அனுப்பியிருந்தேன். அவன்தான் இன்னும் திரும்பி வரவில்லை. முதலில் எனக்குத் தகவல் தெரிவித்தவரும் அதே பண்ணைக்காடு ஊரைச் சேர்ந்தவர்தாம்.ஆனால், தகவல் கடித மூலமாக வந்திருந்தது.ஆகவே, எனக்குச் சிறிது சந்தேகமும் இருந்தது. இதனால் எனக்குக் கடிதம் அனுப்பிய ‘நடராஜ அம்பலம்’ என்பவரையும் கையோடு கோடைக்கானலுக்குக் கூட்டிக்கொண்டு வருமாறு கான்ஸ்டபிளிடம் வற்புறுத்திச் சொல்லி அனுப்பியிருந்தேன்.

ரியாக எட்டு மணிக்கு நான் அனுப்பியிருந்த கான்ஸ்டபிளும், எனக்குக் கடிதம் எழுதியிருந்தவரான பண்ணைக்காடு நடராஜ அம்பலமும் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள்.

இருவரையும் தனித்தனியே விசாரித்ததில், அன்றிரவு பேயாண்டி அம்பலத்தின் கொடிக்காலில் புரட்சியாளர்களின் பூர்வாங்கச் சதிக் கூட்டம் நடக்கப்போவது உண்மைதான் என்று உறுதியாகத் தெரிந்தது. நான் உடனே ஆயுதம் தாங்கிய போலீஸ் படையுடன் லாரியில் பண்ணைக் காட்டிற்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்யலானேன்.

அப்போது நடராஜ அம்பலம் சிறிது தயக்கமும் பயமும் நிறைந்த குரலில் என் அருகே வந்து, “இன்ஸ்பெக்டர் ஐயா! இந்தச் சதிக் கூட்டத்திலேயே நாம் அதிகமாகப் பயப்பட வேண்டிய ஆள் ஒருவர்தான். அந்த மனிதர் வாயிலே விழுந்தால் பெரிய தொல்லைதான். கருநாக்குக்கார மனிதர். இந்தச் சதிக் கூட்டத்திலே எங்களூர்ப் பேயாண்டி உள்பட மொத்தம் எட்டுப் பேருங்க. இந்த எட்டுப் பேரிலே வேம்பத்துர் ஆசுகவி நம்பிராஜ ஐயரும் ஒருத்தர். பெரிய மாந்திரீக பரம்பரையிலே வந்தவருங்க. எடுத்தெறிந்து துக்கிரித்தனமா ‘பட்னு’ ஒரு வார்த்தை சொல்லிவிட்டார்னா, அதிசீக்கிரமாகப் பலித்துவிடுகிறது.”

“சட்! நிறுத்தும் ஐயா, பேச்சை இன்றிரவு பன்னிரண்டு மணிக்குப் பேயாண்டி அம்பலம் வெற்றிலைக் கொடிக்காலில் கலெக்டர் துரையைக் கொல்வதற்குச் சதிக்கூட்டம் நடக்க போகிறதா, இல்லையா? அதுதான் எனக்குத் தெரியவேண்டும். ‘வேம்பத்துார் நம்பிராஜ ஐயர் கருநாக்குக்காரர்’, ‘வாக்குச் சக்தி பொல்லாதது’ என்று எல்லாம் சுத்த ‘ஹம்பக்’ பண்ணாதேயும்... போலீஸ் ‘டிபார்ட்மெண்டு’க்குக் குற்றவாளியின் சாமர்த்தியத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேணுமென்கின்ற அவசியம் கிடையாது.” திரும்பவும் நான் அதிகாரத் தொனியில் இப்படி அதட்டவே, நடராஜ அம்பலம் வாயை மூடிக்கொண்டு ‘கப்சிப்’ என்று நின்று விட்டார்.

உடன் வந்து சதி நடக்கும் இடத்தைக் காட்டுவதாகவும் ஒப்புக்கொண்டார்.

ப்படியும் இப்படியுமாகக் கோடித்துக்கொண்டு நாங்கள் பண்ணைக் காட்டிற்குப் புறப்படும்போது, மணி ஒன்பதரைக்குமேல் ஆகிவிட்டது. வழித்துத் தடவி வைத்ததுபோல மையிருட்டு. மழைக் கோப்பாக இருந்ததனால், அண்ட முகட்டை அணுத் துண்டுகளாகப் பிளந்தெறிந்து விடுவதுபோல வானில் இடி முழக்கம் வேறு குமுறிக் கொண்டிருந்தது. எங்கள் லாரி கோடைக்கானல் மலையின் அடிவாரத்திற்குப் போய்ச் சேர்ந்தபோது, சோனாமாரியாக மழை பிடித்துக் கொண்டுவிட்டது. இடியும் மின்னலும் மழையும் இருட்டுமாக ஒரு பெரும் பைசாசச் சூழ்நிலையில் லாரி பண்ணைக் காட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. லாரிக்குள் பத்து ரிசர்வ் போலீஸ்காரர்களும், நானும், நடராஜ அம்பலமும், ஒரு டிரைவரும் இருந்தோம்.

அப்பப்பா! இப்போது நினைத்தால் குடல் நடுங்குகிறது. அன்றைக்கு இடித்த மாதிரி இடிகளை நான் வேறெந்த மழை நாளிலும் இன்றுவரை கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. சாலையில் லாரி சென்றுகொண்டே இருக்கும்போது “படபட” வென்று இடிக்கு இலக்கான மரங்கள் முறிந்து விழும் ஒசைகள், பச்சைமரம் இடியால் தீயுண்டு எரியும் கோரத் தோற்றம், இவைகளைக் கேட்கவும் காணவும் சகிக்கவில்லை. கோடைக்கானலிலிருந்து பண்ணைக் காட்டிற்கு மிகக் குறுகிய தொலைவுதான். ஆனால், காட்டு ஓடைகளில் தண்ணீர் வடியும்வரை பொறுத்திருந்தும், சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி வழி உண்டாக்கிக் கொண்டும் போனதால், பதினொன்றரை மணி சுமாருக்குத்தான் பண்ணைக் காட்டை அடைய முடிந்தது. பண்ணைக் காட்டில் ஊர் அரவம் அடங்கிப் போயிருந்தது.

பேயாண்டி அம்பலத்தின் வெற்றிலைக் கொடிக்காலுக்கு இரண்டு பர்லாங் இப்பக்கம் தள்ளியே லாரியை நிறுத்தி, டிரைவரை அதற்குக் காவல் வைத்துவிட்டு, நாங்கள் பன்னிரண்டு பேர் மட்டும் மழையில் நனைந்து கொண்டே கொடிக்காலை அடைந்தோம்.

“இந்தக் கொடிக்கால்களிலே பச்சைப் பாம்பு அதிகமுங்க ஜாக்கிரதையா இருக்கணும்” என்று எச்சரித்தார் நடராஜ அம்பலம்.

அம்பலம் முன் வழிகாட்டிச் செல்ல, நான் பின்பற்றி நடந்தேன்.

குளம் போலப் பரந்திருந்த ஒரு கிணற்றின் கரையில் நாற்புறமும் திறந்த ஒரு தகரக் கொட்டகை, கொடிக்காலின் நடுமையம் அந்த இடம் கொட்டகைக்குக் கதவு இல்லை யாகையினால், இருளில் மறைந்து நடப்பதைக் கவனிக்க எங்களுக்கு அதிகச் செளகரியமாக இருந்தது. அம்பலம் சுட்டிக் காட்டிய திசையில் பார்வையைச் செலுத்தினேன்.

தகரக் கொட்டகையின் நடுவே ஒரு பெரிய அரிக்கேன் லாந்தர் எரிந்து கொண்டிருந்தது. அந்த அரிக்கேன் லாந்தரைச் சுற்றி ஏழெட்டு மனிதர்கள் உட்கார்ந்திருந்தனர். அநேகமாக ஒரே ஒருவர் தவிர, மற்றவர்கள் எல்லாம் கதர்க் குல்லாய் வைத்திருந்தனர். அந்த ஒருவர் நெற்றியில் மட்டும், சந்தனமும் குங்குமமுமாகக் காலனா அகலத்துக்கு ஒரு பொட்டு. சோழியர்கள் மாதிரி முன் புறம் முடிந்த குடுமி. பஞ்சக்கச்சம் வைத்துக் கட்டிக் கொண்டிருந்தார். கம்பீரமான ஆகிருதி.

“அவர்தானுங்க நம்பிராஜ ஐயர்!” நடராஜ அம்பலம் பீதி தொனிக்கும் குரலில் என் காதருகே மெல்ல முணுமுணுத்தார்.

அரிக்கேன் லாந்தரின் மங்கிய ஒளியில், அவர்களுக்கு நடுவே தரையில் நாலைந்து கைத் துப்பாக்கிகள் கிடப்பதைப் பார்த்தேன். உட்கார்ந்து கொண்டிருந்த ஆட்களில் கிருதா மீசையும் முரட்டுத்தோற்றமும் உடைய ஒருவர் எழுந்திருந்து, கீழே கிடந்த துப்பாக்கிகளில் ஒன்றை எடுத்து, அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று விளக்கத் தொடங்கினார்.

“இவர்தானுங்க எங்க ஊர் பேயாண்டி அம்பலம். துப்பாக்கி சுடறதிலே நல்ல பழக்கமுள்ளவருங்க” மீண்டும் என் செவியில் நடராஜ அம்பலத்தின் நடுங்கிய குரல் மெல்ல விழுந்தது.

துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டிருந்த ஆள், “வந்தே மாதரம்! பாரதமாதாவுக்கு” என்று கோஷம் கொடுத்துவிட்டு, “சகோதரர்களே! இதோ மாதிரிக்கு ஒரு முறை சுட்டுக் காட்டுகிறேன். எல்லாரும் நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் துப்பாக்கியை மேலே தூக்கிச் சுழற்றி மனத்துக்குத் தோன்றிய திசையில் குறி வைத்துக் குதிரையை அழுத்தினார். உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாரும் எழுந்திருந்து நின்றதால், பேயாண்டி அம்பலம் குறிவைத்த திசை எனக்குத் தெரியவில்லை.

ஆனால், அவர் அப்படிக் குதிரையை அமுக்கிக் கொண்டிருந்தபோது முன் குடுமியோடு இருந்த ஆள்-நம்பிராஜ ஐயர் கணீரென்ற குரலில் கூறிய சொற்கள், என் உடம்பு புல்லரித்து நடுங்கும்படி செய்தன.

“பேயாண்டி! நீ இப்போது சுடுகின்ற குண்டுகள் காட்டிக் கொடுக்கும் துரோகி ஒருவனின் வலது புஜத்துக்கு யமனாகப் போகின்றன என்று என் மனத்தில் பகவதி சொல்கிறாள். அப்பா” நின்றவர்களின் நிழல், விளக்கு ஒளியை மறைத்து விட்டது. குதிரை அழுத்தப்பட்டது. குண்டுகள் படீரென்று வெடிக்கும் ஓசை! ஆனால் இதென்ன? ஐயோ! என் பக்கத்தில் பதுங்கிக் கொண்டிருந்த நடராஜ அம்பலம் அல்லவா பயங்கரமாக அலறிக்கொண்டு கீழே சாய்கிறார்!

என் உடம்பு நடுங்கியது. சட்டென்று விஸிலை எடுத்து இரைந்து ஊதினேன். போலீஸார் ‘தடதட’ வென்று ஓடிவரும் ஓசை கேட்டது. பக்கத்தில் விழுந்து கிடந்த நடராஜ அம்பலத்தைக் கீழே குனிந்து பார்த்தேன். அவர் வலது புஜத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியில் பிரக்ஞை இழந்திருந்தார் அவர்.

இதற்குள் நம்பிராஜ ஐயர், “வந்தே மாதரம் ஓடுங்கள், ஓடுங்கள், போலீஸ் துரத்துகிறது” என்று இரைந்து கூறுவதையும், அதை அடுத்துக் கதர்க் குல்லாய்காரர்கள் திசைக்கொருவராக ஒடுவதையும் கண்டேன். போலீஸ்காரர்கள் அப்போதுதான் தகரக் கொட்டகையை நெருங்கியிருந்தார்கள்.

கடைசியில், நம்பிராஜ ஐயரும், பேயாண்டி அம்பலமும் எங்களிடம் சிக்கிக்கொண்டார்கள்! லைசென்ஸ் இல்லாத அந்தத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. தகரக் கொட்டகையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் பேயாண்டிக்குக் கைகளில் விலங்கு மாட்டிக்கொண்டிருந்தார்கள். அடுத்தாற்போல, நம்பிராஜ ஐயருக்கு மாட்டவேண்டும்.

இந்த நிலையில் நம்பிராஜ ஐயர் திடீரென்று நாலடி முன்னால் நடந்து என் அருகே வந்து விறைப்பாக நின்றுகொண்டு, என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டுக் கூறினார்: “ஓய் இன்ஸ்பெக்டரே! உம்முடைய கம்பளிக் கோட்டை உடனே கழற்றிக் கீழே வையும் ஐயா! இல்லையானால், இன்னும் சில நிமிஷத்தில் சாகப் போகிறீர்!”

“இந்தாரும், நம்பிராஜ ஐயரே! உம்முடைய மாந்திரீகம், வாக்கு சக்தி, கருநாக்கு இதெல்லாம் எங்கிட்டே செல்லாது. சும்மா எதையாவது பிதற்றாதேயும்” என்றேன் நான்.

"நான் பிதற்றவில்லை. பகவதி சொல்கிறாள். சற்றுமுன் நீர் புதருக்குள் ஒளிந்திருந்தபோது, உமக்குத் தெரியாமலே ஒரு விஷஜந்து உம்முடைய கோட்டுப் பையைத் தனது தற்காலிக வாசஸ்தலமாக ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறது.என் நாக்கு கருநாக்கு பொய் அதில் பிறக்காது. சந்தேகமாயிருந்தால், இதோ நீரே உம் கண்களால் பாருமேன்!” இப்படிக் கூறிக்கொண்டே நான் எதிர்பாராத விதமாக என்மேல் பாய்ந்து, என் கம்பளிக் கோட்டைக் கழற்றிக் கீழே வீசி அறைவது போல எறிந்தார் நம்பிராஜ ஐயர்.

என்ன ஆச்சரியம் ஒரு பாக நீளத்துக்குப் பளபளவென்று கண்ணைப் பறிக்கும் நிறத்தோடு ஒரு பச்சைப் பாம்பு கோட்டுப்பையிலிருந்து சீறிக்கொண்டு வெளிவந்தது. கான்ஸ்டபிள் ஒருவன் லத்திக் கம்பால் பாம்பை அடித்துக் கொன்றான்.

“என்ன, இன்ஸ்பெக்டர் நம்புகிறீரா?" - நம்பிராஜ ஐயர் சிரித்துக்கொண்டே கேட்டார். நான் அவருக்குப் பதில் சொல்லாமலே கான்ஸ்டபிளை நோக்கி,“இவருக்கு விலங்கு மாட்டு அப்பா” என்றேன். அவன் விலங்கு மாட்டினான். இதற்குள் வலது தோளில் குண்டு பட்டுக் காயமடைந்து கிடந்த நடராஜ அம்பலத்துக்குப் பிரக்ஞை வந்திருந்தது. கைத்தாங்கலாக இரண்டு கான்ஸ்டபிள்கள் அவரை லாரி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்களோடு நாங்களும் லாரிக்குச் சென்றோம். லாரி ஒன்றரை மணி சுமாருக்குக் கோடைக்கானலுக்குப் புறப்பட்டது.

இடையில் ஒரு பாட்டம் பெய்து ஓய்ந்திருந்த மழையும் இடியும், மீண்டும் ஆரம்பமாகியிருந்தன.

லாரி போய்க்கொண்டிருக்கும்போதே, “ஏன் ஸார் இன்ஸ்பெக்டர் ? எங்களைக் கோடைக்கானலுக்குத்தானே கொண்டுபோகிறீர்கள்” என்று எதையோ நினைத்துக் கொண்டு கேட்பவர்போல, நம்பிராஜ ஐயர் திடீரென்று கேட்டார்.

“அதை நீர் ஏன் ஐயா கேட்கிறீர்? எங்கே கொண்டு போக வேண்டுமோ, அங்கே கொண்டுபோக எங்களுக்குத் தெரியும். நீர் உம்முடைய கருநாக்கை அடக்கிப் பேசாமல் வாரும்” என்று அமுத்தலாக அவருக்குப் பதில் கூறினேன் நான்.

“நான் அதற்குச் சொல்ல வரவில்லை, சார்! உங்கள் கோடைக்கானல் ஹில் ஸ்டேஷனில் இப்போது மனிதர்கள் தங்குவதற்கு முடியாதே என்றுதான் விசாரித்தேன்.”

“வாயை வைத்துக்கொண்டு சும்மா வாரும். மனிதர்கள் தங்க வசதி இல்லாவிட்டால் போகிறது; உங்களைப் போன்ற புரட்சிப் புலிகள் எல்லாம் தங்கலாம். அல்லவா” என்றேன்.

“எங்களை ‘மிருகங்கள்’ என்று மறைமுகமாக நீங்கள் குத்திக் காட்டுவது எனக்குப் புரிகிறது, இன்ஸ்பெக்டர். ஆனால் இந்த மிருகங்கள் தங்குவதற்குக்கூட இடம் ஹில் ஸ்டேஷனில் இப்போது கிடையாதே? அவ்வளவேன் சார்? ஹில் ஸ்டேஷனே இப்போது இல்லை! போங்கள்!”

“ஏன்?...” நான் கேட்டேன்.

“சற்று முன் வீழ்ந்த பயங்கரமான இடி விபத்துக்கு ஆளாகி, உங்கள் ஹில் ஸ்டேஷன் தரைமட்டமாகி விட்டதற்காக என் ஆழ்ந்த அனுதாபங்கள் இன்ஸ்பெக்டர்!”

“என்ன? இடி விபத்தா?’ ஆச்சரியம் தாங்கமுடியாமல் கூவியது என் வாய். டிரைவரை லாரியை வேகமாகச் செலுத்தும்படி தூண்டினேன்.

விரைவில் லாரி கோடைக்கானலை அடைந்து ஸ்டேஷன் வாசலில் போய் நின்றது.

அவசர அவசரமாகக் கீழே இறங்கிப் பார்த்தேன். கண்களைக் கசக்கிக்கொண்டு இமைக்காமல் பார்த்தேன். எங்கள் ஸ்டேஷன் கட்டிடம் நொறுங்கித் தரை மட்டமாக்கப்பட்டிருந்தது, இடி விபத்தால்!

“என்ன இன்ஸ்பெக்டர், நான் சொன்னது நிஜம்தானே?”

திரும்பிப் பார்த்தேன். நம்பிராஜ ஐயர் சிரித்த முகத்தோடு, கை விலங்குகளை ஆட்டியவாறே, லாரியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

ண்பர் பட்டாபி நாராயணன் இவ்வாறு கதையைக் கூறி முடித்தபோது, நாங்கள் வத்தலகுண்டை அடைந்திருந்தோம்.

“அந்த நம்பிராஜ ஐயர் இப்பொழுது ஜீவிய வந்தராக இருக்கிறாரா?” என்று நண்பரை நான் கேட்டேன்.

“ஆகா! பேஷாக இருக்கிறார். சர்க்கார் மானியமாகக் கிடைத்த தியாகி நிலம் ஐந்து ஏக்கர், பெரியாற்றுக்கால் பாசனத்தில் வாய்த்திருக்கிறது. அந்த வருமானத்தைக் கொண்டு வேம்பத்தூரில் சுகவாசம் செய்கிறார்! ‘வாக்கு சக்தியுள்ளவர்’ என்ற ‘கெத்து’ இன்னும் ஊர் உலகத்தில் அவருக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது!” என்று கூறிக்கொண்டே மாமனார் வீட்டில் நுழைந்தார் நண்பர் பட்டாபி.

(1963-க்கு முன்)