நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/சத்தியத்தின் பிரதிநிதியாய்

69. சத்தியத்தின் பிரதிநிதியாய்

கிளியோபாத்ராவின் மூக்கு இன்னும் சிறிது நீண்டோ, குறைந்தோ அமைந்திருந்தால் ஒரு சாம்ராஜ்யத்தின் வரலாறே மாறிப் போயிருக்கும் என்று சொல்கிறார்கள் அல்லவா?

மல்லிகை நகர் டாக்டர் சிவசங்கரன் எப்.ஆர்.ஸி.எஸ். அவர்களின் மகள் வசந்தாவுக்கு இப்போது வாய்த்திருந்த கண்கள் இன்னும் சிறிது அகலமாகவோ, குறுகியோ அமைந்திருந்தால் ஒரு நகரத்தில் ஒரு பெரிய கல்லூரியின் ஆயிரத்து இருநூறு மாணவர்களுக்கு வாழ்க்கை சுவாரஸ்யமில்லாமல் போயிருக்கும். கிளியோபாத்ரா விவகாரத்தைப் போல, இது ஒரு சாம்ராஜ்யத்தைப் பாதிக்கக் கூடிய விஷயமில்லையாயினும் பல பேருடைய ரசிகத் தன்மைக்கு நஷ்டத்தை உண்டாக்கக் கூடியதாயிருக்கும் இது. உடனே நீங்கள் இந்திய அரசாங்கத்தின் டூரிஸ்ட் அலுவலக வெளியீட்டுப் பிரதாபங்களையோ, ரோடு மேப்பையோ எடுத்து வைத்துக் கொண்டு மல்லிகை நகரத்தைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்!

மல்லிகை நகர் என்பது ஒரு பெரிய நகரத்தின் கண்டோன்மெண்ட் பகுதிக்குப் பெயர். பின் என்ன? ‘அரிஸ்டாக்ரடிக்குகள்’ வாழ்கிற இடத்துக்கு அரளி நகர் என்றும் துளஸி நகர் என்றுமா பேர் வைத்துக் கொண்டிருப்பார்கள்? பேரே மணக்க மணக்க அமைய வேண்டும் என்று இப்படி வைத்திருந்தார்கள். இதைத் தவிர இந்தப் பேருக்கும் அந்தக் கண்டோன்மெண்டுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

டாக்டர் சிவசங்கரன் மலையாளி. பாரதப் புழாவின் கரையில் திருச்சூருக்கும் பாலக்காட்டுக்கும் நடுவில் ஏதோ ஒரு சிறிய கிராமத்தைப் பூர்வீகமாக உடையவர் அவர் கொச்சி எக்ஸ்பிரஸில் புறப்பட்டால், ஒலவக்கோட்டில் இறங்கி அந்த ஊருக்குப் போகும் படி அருகில் இருக்கிற ஸ்டேஷன் எதுவோ, அதில் கொச்சி எக்ஸ்பிரஸ் நிற்காது என்கிற அளவுக்குப் புகழில்லாத ஊர் அது. அதற்குப் புகழில்லை என்பதற்காகச் சிவசங்கரன் கவலைப்பட்டகாலம் மலையேறி விட்டது.சிவசங்கரனாக இருந்த வரை அவர் ஊரைப் பற்றிக் கவலைப்பட்டார். சிவசங்கரன் எப்.ஆர்.ஸி.எஸ். ஆன பிறகு தம்முடைய பேரைப் பற்றியே அவர் அதிகமாகக் கவலைப் பட வேண்டியிருந்ததனால், ஊரைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு விட்டார். ஒரே சமயத்தில் பல காரியங்களுக்குக் கவலைப்பட்டால் ‘ஹிஸ்டீரியா’ போன்ற வியாதிகள் எல்லாம் வரலாம் என்று அவருடைய எம்.பி.பி.எஸ் மூளைக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் பாரதப் புழையாற்றின் கரையிலிருந்து நானூறு மைலுக்கு இப்பால் உள்ள தமிழ்நாட்டு நகரத்திலேயே பிறந்து தமிழ் நாட்டுச் சூழ்நிலையிலேயே வளர்ந்த அவருடைய திருக்குமாரிக்குச் சதா காலமும் பாரதப் புழையாற்றின் கரையில்தான் மனம் இருந்தது. அவளுடைய தாயார் அவளை அப்படிப் பைத்தியமாய் ஆக்கியிருந்தாள். அந்த வீட்டில் தாயும் மகளுமாகப் போட்டி போட்டுக் கொண்டு செய்கிற காரியம் ஒன்று வாரா வாரம் உண்டு. தபாலில் கிழமை தவறாமல் வந்து சேர்கிற மலையாள வாரப் பத்திரிகை படிக்கிற காரியம்தான் அது.

கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வசந்தா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் கல்லூரியில் கடைசிப் பாட வேளைக்கு ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்துவிடுகிற அளவு வெள்ளியன்று மாலைத் தபாலில் வந்து சேர்கிற மலையாள வாரப் பத்திரிகை அவளைக் கிறுக்குப் பிடித்தவளாக ஆக்கியிருந்தது. தாயும், மகளும் படித்து முடித்த பிறகு மூன்றாவது பைத்தியமாகச் செல்வாக்கில்லாத கிறுக்கு ஒன்றும் அந்த வீட்டில் இருந்தது. கொச்சம்மணி என்று பதினாறு பதினேழு வயதில் வேலைக்காரக் குட்டி ஒருத்தி அந்த வீட்டில் இருந்தாள். வீட்டு வேலைக்கும் டாக்டருடைய ஆஸ்பத்திரி வேலைக்கும் சேர்ந்து பயன்படுவதற்காகப் பத்துப் பன்னிரண்டு வயதிலேயே மலையாளத்திலிருந்து வரவழைத்து வைத்துக் கொள்ளப்பட்ட வேலைக்காரி அவள். நானூறு மைல் தொலைவுக்கு அப்பால் வந்தும் மண் அபிமானத்தைவிட முடியாமல் சில அரிய ஆபரேஷன் கேசுகளாக அவரிடம் தேடிவந்து சேரும் நோயாளிகளுக்கு எடுபிடி வேலையாளாகப் பயன்படுகிற நாட்கள் தவிர மற்ற நாட்களில் கொச்சம்மணி வீட்டு வேலைக்காரிதான். கொச்சம்மணி என்கிற வேலைக்காரக் குட்டிக்கு இந்த உலகத்தில் ஆடம்பரமான ஆசைகளோ, அந்தரங்கமான அபிலாஷைகளோ எதுவும் கிடையாது. தன்னுடைய உயிருக்கு அடுத்தபடியாகச் ‘சுதாகரன்’ எழுதும் கவிதைகளும் மலையாளக் கதைகளும் அவளுக்குப் பிடிக்கும். வெள்ளிக்கிழமையைத் தவிர இருக்கிற வாரத்தின் மற்ற ஆறு நாட்களிலும் அவள் எதற்காக உயிர் வாழ்கிறாள் என்றால் வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து உயிர் வாழ்கிறாள் என்று பகவதி சாட்சியாய்ச் சத்தியம் செய்யலாம். அந்தப் பத்திரிகை அவளுடைய கைக்குக் கிடைக்கும்போது வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு மேலாகி விடும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அது தன் கைக்குக் கிடைக்கிற விநாடி எதுவோ அதை அவள் வாழ்த்தியிருக்கிறாள். மகள் கல்லூரியிலிருந்து திரும்புவதற்குள் பெரியம்மா அந்தப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருப்பார்கள். மகள் திரும்பிய பின் அவளுடைய கைகளிலிருந்து அந்தப் பத்திரிகை விடுதலையடைந்து ஹாலில் உள்ள மேஜைக்கு வந்து சேர்வதற்கு இரவு ஒன்பது மணி ஆகும். அப்புறம் டாக்டர் அதை எடுத்து அலட்சியமாகவும் மேலோட்டமாகவும் ஒரு தரம் புரட்டிப் பார்த்து விட்டு எறிவதற்குக் கால் மணிக் கூறோ அரை மணிக் கூறோ ஆகும். அப்புறம்தான் அந்தப் பத்திரிகையின் உண்மையான இரசிகையின் கைகளுக்கு - அதாவது முதல் வரியிலிருந்து கடைசிப் பக்கத்தின் கடைசி வரி வரை படித்து முடிக்கப்போகிற இரசிகையின் கைகளுக்கு அது போய்ச் சேரும். பத்து வயதுப் பெண்ணாக விற்பனையாகி வந்த அடிமையைப் போல் அவள் அந்த டாக்டர் வீட்டு வேலைக்காரியாகச் சேர்ந்தபின் பாரதப் புழையாற்றின் கரைகளில் உலாவியதில்லை. சுதாகரனின் எழுத்துக்களைப் படிக்கும்போது பல முறை மானசீகமாகப் பாரதப் புழையின் கரைகளில் கொச்சம்மணி உலாவியிருக்கிறாள். அதிகாலையில் எழுந்து குச்சு வீட்டின் ஓட்டுச் சார்ப்பில் படர்ந்திருக்கும் மரமல்லிகைப் பூக்களைத் தொடுத்துக் கூந்தல் முடிப்பில் வைத்துக் கொண்டு பெட்டியும் கையுமாக ஒலவக்கோட்டுக்கு வந்து மல்லிகை நகரத்துக்கு வருவதற்கு முதன் முதலாக இரயிலேறிய நாள் அவளுக்கு நினைவு வருகிற வேளைகளில் சுதாகரனின் கதைகளும் நினைவு வரும். சுதாகரனின் மலையாளக் கதையை அந்த வாரப் பத்திரிகையில் படிக்கிற நேரத்தில் பாரதப் புழை தான் ஓடிக் கொண்டிருக்கிற இடத்திலிருந்து நானூறு மைல்களைக் கடந்து வந்து அந்த நாழிகையில் அவள் மனத்தில் மட்டுமே ஓடும். அது ஒரு விசித்திரமான அனுபவம். அதை உணர்வதற்குத் தான் கொச்சம்மணியால் முடியும். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

சுதாகரனுடைய கதைகளையும், கவிதைகளையும் படிப்பதைத் தவிர அவளுக்கு வேறு ஆசைகளே இல்லையென்று சொன்னேன் அல்லவா? அதற்கு அப்பாலும் அவளுக்கு ஒரே ஓர் ஆசை உண்டு. அதுதான் சுதாகரன் என்கிற அந்தக் கவியுள்ளம் படைத்த கதாசிரியனை நேரிலே எப்போதாவது பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை. அவனுடைய கதைகள் தாய்ப்பாலைப் போல் கொச்சம்மணியின் மனத்துக்கு அவள் பிறந்த நாட்டின் பண்புகளை நினைவூட்டிக் கொண்டேயிருந்தன.

அந்த வாரம் வெள்ளிக்கிழமை வந்த மலையாள வாரப் பத்திரிகையில் சுதாகரன் ஒரு கவிதை எழுதியிருந்தார். அந்த கவிதையின் தலைப்பே அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘பாரதப் புழையின் கரையிலே’ என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது அந்தக் கவிதை.

“பாரதப் புழையின் கரையில் குவிந்திருக்கிற மண்ணே! என் கண் பார்வைக்குத் தெரிந்தமட்டில் உனக்கு நிறமில்லை. உனக்கு மணமில்லை. ஆனால் உனக்கு உள்ளே உன்னுடைய கர்ப்பத்தில் ஏதோ விந்தைகள் நிறைந்திருக்கின்றன. இல்லையென்றால் உன் மேல் முளைத்திருக்கும் எல்லையற்ற பூஞ்செடிகளில் இத்தனை நிறங்களில் இத்தனை விதமான மணங்களோடு பூத்திருக்கும் பூக்களுக்கு அவை எப்படிக் கிடைத்தன? ஓகோ! புரிந்தது. அவையெல்லாம் பாரதப் புழை நீரின் பெருமைதான். இந்த நீர்ப் பிரவாகத்தின் வழியே எங்கள் வாழ்க்கையை அழகு செய்யும் மலர்களும், எங்கள் வயிற்றை நிரப்பும் உணவும், எங்கள் பண்பாடுகளும் உருவாகின்றன. நீ பெருகுவதும், குறைவதும், வறண்டு போவதும் எங்களுடைய பருவ காலங்களை மாற்றிமாற்றிப் படைக்கின்றன. உன்னுடைய நீர்ப் பெருக்கில் என்னுடைய மனமும் நினைவுகளும் நித்யமாக நனைந்து கிடக்குமாக! ஒவ்வொரு இந்தியனுடைய உள்ளத்தையும், நினைவுகளையும் கங்கை மானசீகமாக நனைத்துக் கொண்டிருப்பது போல ஒவ்வொரு மலையாளியின் மனத்தையும் அவன் எங்கிருந்தாலும் நீநனைத்துக் கொண்டிருக்கிறாய்...!” என்று இப்படிப் பொருளமைந்த அந்தக் கவிதையைப் படித்தபோது கொச்சம்மணியின் மனம் பாரதப் புழையிலும் விழிகள் கண்ணீரிலும் நனைந்தன.

‘எப்போதாவது பெரிய ஆபரேஷனுக்காகத் தேடி வரும் நாட்டுப்புறத்து மலையாளிகளிடம் பேசிப் பழக மொழி தெரிவதன் காரணமாகவும், வீட்டு வேலை செய்வதற்காகவும் சாப்பாடு துணிமணி தவிர மாதம் முப்பது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இந்த உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிராவிட்டால் நானும் பாரதப் புழையின் கரையில்தான் திரிந்து கொண்டிருப்பேன். என் உடம்பும் தினம் ஒரு முறையாவது பாரதப் புழையின் நீரில் நனைந்து கொண்டிருக்கும்’ என்று இந்தக் கவிதையைப் படித்தபோது சுதந்திர உணர்ச்சி வசப்பட்டு நினைத்துக் கொண்டாள் கொச்சம்மணி. அப்படி நினைத்தபோது பெட்டியும் கையுமாக வந்து ஒலவக்கோட்டுக்கு இரயிலேறிய நாள் அவளுக்கு நினைவு வந்தது. ‘பாரதப் புழையின் கரையிலே’ என்ற அந்தக் கவிதையைப் பற்றி வீட்டு எஜமானியம்மாளும் அவளுடைய பெண்ணும் மறு நாள் தங்களுக்குள் பேசிக்கொண்டதையும் கொச்சம்மணி தன் இரு செவிகளும் நிறையக் கேட்டாள்.

வசந்தா கெண்டை மீன் புரள்வதுபோல் தன் அழகிய கண்கள் பிறழ முகத்தில் எல்லையற்றுப் பெருகும் உற்சாகம் தென்படத் தன் தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்:

“அம்மா! சுதாகரனின் இந்தக் கவிதையைப் படித்தவுடன் ஆகாயத்தைவிட வேகமாகப் பறக்கக் கூடிய நவீன சாதனம் ஒன்றில் ஏறிப் போய் அப்படியே பாரதப் புழையின் கரையில் குதித்துவிட வேண்டும் போல் இருக்கிறது. ‘ஒவ்வொரு இந்தியனுடைய மனத்தையும், நினைவுகளையும், கங்கை மானசீகமாக நனைத்துக் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு மலையாளியின் மனத்தையும் அவன் எங்கிருந்தாலும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்’ என்று பாடியிருக்கிற வரிகளுக்கு மட்டுமே அட்சர லட்சம் கொடுக்கலாம். எனக்கு மட்டும் நோபல் பரிசு கொடுக்கிற அதிகாரம் இருந்தால் அதை இந்தச் சுதாகரனுக்குக் கொடுத்து விடுவேன்” என்று கூறும் போது கிளியோபாத்ராவின் மூக்கைப் போல் அற்புதங்களைச் செய்யவல்ல வசந்தாவின் அழகிய கண்களில் ஆர்வம் ஒளி பெருக்கி நின்றது. ஒரு பெரிய கல்லூரியின் ஆயிரத்து இருநூறு மாணவர்களை ஏங்கச் செய்து கொண்டிருக்கும் அந்த அழகிய கண்கள் சுதாகரனுடைய கவிதைக்காகத் தானே ஏங்குவது கண்டு கொச்சம்மணி வியப்படைந்தாள். பிறந்த பூமியிலிருந்து வெளியேறி எங்கெங்கோ பிழைப்புக்காக வாழும் சராசரி மலையாளியின் நினைவில் இருப்த்து நாலு மணி நேரமும் தாய்த் திருநாட்டின் நினைவு இருக்குமா என்பது சந்தேகம்தான். எங்காவது டீக் கடையிலிருந்து தேங்காய் எண்ணெயில் பெரிய பெரிய பொற்காசுகள் புரளுவது போல நேந்திரங்காய் வறுபடுகிற மணத்தினாலும், ஒணம் பண்டிகையின் போதும் எப்போதாவது மைனாரிட்டியினருக்கும் இரசிகத் தன்மை இருக்கலாம் என்ற சலுகையில் ஏதாவது ஒரு தியேட்டரிலே காலை பத்து மணி ஆட்டமாகக் காட்டப்படும் மலையாள சினிமாவைப் பார்க்கும்போதும், ஜன்ம பூமியின் அரசியல், கலை, இலக்கியக் காற்றில் அழுந்தி வரும் ஏதேனும் ஒரு பத்திரிகையைப் படிக்கும்போதும் பிறந்த தேசத்து நினைவுகள் மனத்தைக் கவ்விக்கொண்டு குமையச் செய்வது உண்டுதான். கொச்சம்மணி அப்படிப் பலமுறை மனம் குமைந்திருக்கிறாள். அதிகாலையில் எழுந்து நீராடிக் குச்சு வீட்டின் ஓட்டுச் சார்பில் படர்ந்து குண்டு குண்டாகப் பூத்திருந்த மல்லிகைப் பூக்களைத் தொடுத்து ஈரமும் தேங்காய் எண்ணெய் பூசிய பளபளப்புமாகக் கருப்பு ‘வெல்வெட்’டைப் போல் வழுக்கிய நீண்ட கூந்தல் முடிப்பில் செருகிக்கொண்டு அவசரம் அவசரமாக ஒலவக்கோட்டுக்கு வந்து இரயிலேறிய வேளையை நினைக்கும் போது கொச்சம்மணி தன் மனத்துக்குள்ளேயே அழுதிருக்கிறாள். பல முறை அப்படி அழுதிருக்கிறாள். படித்த மலையாளியான டாக்டர் சிவசங்கரன் எப்.ஆர்.ஸி.எஸ்.அவர்களை விடக் கொச்சம்மணியின் நாட்டுப் பற்று அதிகமாக இருந்தது. டாக்டர் சிவசங்கரன் மலையாளப் பத்திரிகையைப் புரட்டிப் பார்க்கிறார். டாக்டர் சிவசங்கரனுடைய மனைவி மலையாளப் பத்திரிகையில் வருகிற கதைகளையும், கவிதைகளையும் படிக்கிறாள். சிவசங்கரனுடைய மகள் பிறப்பிலிருந்தே தமிழ்நாட்டில் வளர்ந்தும், சுதாகரனுடைய கவிதைக்காக ஏங்குகிறாள்.

ஆனால், கொச்சம்மணியைப்போல் சதா காலமும் அந்த உணர்விலேயே நனைந்து கொண்டிருக்க அவர்களால் முடியவில்லை. டாக்டர், அவர் மனைவி, மகள் இவர்களைப் போலக் கொச்சம்மணிக்கு ஆங்கிலம் தெரியாது. அதே போலக் கொச்சம்மணிக்குத் தெரிந்த பல விஷயங்கள் அவர்களுக்குத் தெரியாது. கொச்சம்மணிக்கு மகாகவி வள்ளத்தோவின் ‘சித்திர யோகமும்’ ’பால சீதை’யும் நன்றாகத் தெரியும். அவருடைய சாகித்ய மஞ்சரியில் பல பாடல்களை அவள் மனப்பாடம் பண்ணியிருக்கிறாள். குஞ்சுக் குட்டன் தம்பிரானுடைய பாரதத்திலும், குமாரனாசானுடைய ‘வீணபூவு’விலும்கூட அவளுக்குப் பரிச்சயம் உண்டு. டாக்டர் சிவசங்கரனுடைய மகள் வசந்தாவோ இவற்றின் பேர்களைக் கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டாள்.

டாக்டரின் மகள் இணையில்லாத பேரழகியாக இருக்கலாம். ஆனால், நாட்டுப்பற்றிலும் மொழி அபிமானத்திலும் அவள் தன்னோடு போட்டிபோட முடியாது என்று எண்ணிக் கொச்சம்மணி பல முறை தனக்குள் அந்தரங்கமாகக் கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.அந்த வீட்டில் அவள் மட்டும் படமுடிந்த கர்வமாக இது ஒன்றுதான் மீதம் இருந்தது.

முதன் முதலாக வசந்தா சுதாகரனுடைய கவிதையைத் தன் தாயிடம் புகழ்ந்ததைக் கேட்டபோதுதான் கொச்சம்மணி தன்னுடைய கர்வத்துக்கும் போட்டி இருப்பதாக ஓரளவு புரிந்துகொண்டாள்.

இதற்கடுத்த மறுவெள்ளிக்கிழமை ஓர் அதிசயம் நடந்தது. பங்களாவின் கீழ்ப்பகுதி முழுவதும் நோயாளிகளின் படுக்கையோடு கூடிய அறைகளாகத் தடுக்கப்பட்டு ஆசுபத்திரியாகவும், மாடி முழுதும் குடியிருப்புக்காகவும் அமைந்திருந்தது. இதனால் ஆசுபத்திரி வேலை உள்ள நாட்களில் கொச்சம்மணி கீழேயும் மற்ற நாட்களில் மாடியிலும் இருப்பாள். தமிழோ ஆங்கிலமோ சிறிதும் பேசத் தெரியாத அப்பட்டமான மலையாளி ‘பேஷண்ட்ஸ்’ யாராவது வந்தால்தான் அவளுடைய ‘சர்வீஸ்’ கீழே தேவைப்படும். அன்று அப்படிப்பட்ட ‘சர்வீஸ்’ எதுவும் அவளிடமிருந்து தேவையில்லை. ஆனால் பிற்பகலில் தபால் வாங்குவதற்காகக் கொச்சம்மணி கீழே இறங்கி வந்தாள்.

தபாலில் வழக்கத்துக்கு மாறாக ஒரே மலையாள வாரப் பத்திரிகையின் இரண்டு வேறு பிரதிகள் இருக்கவே இன்னொன்று யாருக்காக வந்திருக்கும் என்று அறிவதற்காக முகவரியைப் பார்த்தாள். ஏதோ ஒரு பேரின் கீழே ‘டாக்டர் சிவசங்கர மேனன் கிளினிக்’ என்று எழுதி வார்டு எண்ணும் தெளிவாகப் போட்டிருந்தது.

அதை அந்த வார்டில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவதற்காகப் போன கொச்சம் மணி அங்கேதான் அந்த அதிசயத்தைச் சந்தித்தாள். வார்டுக்குள் நுழைந்தவுடன் நீங்கள்தான் இந்த விலாசத்துக்கு உரியவரா என்று கேட்பதற்காகப் பேரைப் படித்தவள், ‘சுதாகரன் நாயர்’ என்று படித்துவிட்டு மனத்தில் சந்தோஷமானதொரு சந்தேகத்தோடு எதிரே கட்டிலில் படுத்திருந்த இளைஞரின் முகத்தைப் பார்த்தாள்.

அந்த இளைஞர் புன்முறுவலோடு கை நீட்டி அவள் கொடுத்த பத்திரிகைப் பிரதியை வாங்கிக் கொண்டார். அதைக் கொடுத்த பின்பும் நகராமல் கொச்சம்மணி அங்கேயே நின்றாள்.தன் மனத்திலிருப்பதை எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை அவளுக்கு. அந்த இளைஞரின் முகத்தைப் பார்ப்பதற்கும் அவளுக்கு நாணமாக இருந்தது.

“இந்தப்பத்திரிகையின் சென்ற இதழில் வந்த ‘பாரதப் புழையின் கரையிலே’ என்ற கவிதையைப் படித்தீர்களோ?” என்று வேறு விதமாகத் தன் கேள்வியை அவரிடம் கேட்டாள் கொச்சம்மணி.

அவளுடைய இந்தக் கேள்வியைச் செவியுற்றவுடன் சாய்ந்தாற் போல் படுத்திருந்த அந்த இளைஞர் நிமிர்ந்து உட்கார்ந்தார். பதில் ஒன்றும் கூறாமல் புன்முறுவல் பூத்தபின், “ஏன், அந்தக் கவிதையில் ஏதாவது விசேஷம் உண்டோ?” என்று அவளைக் கேட்டார். கொச்சம்மணிக்கு நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. ஆனாலும் சமாளித்துக்கொண்டு பதில் கூறினாள்.“அந்தக் கவிதையே ஒரு விசேஷம்தான்! அதைப் படித்த விநாடிகளை நான் வாழ்த்தினேன். அதைப் படைத்த கைகளில் மணம் நிறைந்த பூக்களை அள்ளிச்சொரிய வேண்டுமென்று ஆசைப்பட்டேன்” என்று கொச்சம்மணி கூறியவுடனே படுக்கையில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞர் கையிலிருந்த பத்திரிகையைக் கீழே வைத்துவிட்டு ரோஜாப் பூவின் உள்ளிதழ்போல் வெண் சிவப்பு நிறமான தன் உள்ளங்கைகள் இரண்டையும் திடீரென்று அவளுக்கு முன்னால் நீட்டி, “பூக்களைச் சொரியுங்கள்” என்று கூறிச் சிரித்தார்.

அந்தக் கணத்தில் கொச்சம்மணியின் கண்களிலே பக்தி மலர்ந்தது. நெஞ்சிலே பாரதப் புழையின் நீர் பெருகி நனைந்தது. அவரிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை அவளுக்கு.

“எங்கள் டாக்டரின் மகள் அந்தக் கவிதையைப் படித்துவிட்டு உங்களுக்கு நோபெல் பரிசு தர வேண்டும் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறாள்” என்று மீண்டும் புகழ்மாலையில் இறங்கினாள்.

“உங்கள் டாக்டரைப் பார்த்தால் கவிதைகளை இரசிக்கிறவராகத் தெரியவில்லையே? என்னுடைய நோக்கில் பார்த்தால் உலகத்தில் உள்ள டாக்டர்கள் எல்லாரும்தான் நிஜமான நோயாளிகள். சாதாரண மனிதர்களுக்கு இருக்கிற ஆர்வங்களையும் சுவையுணர்வுகளையும் டாக்டர்கள் இழந்து போயிருக்கிறார்கள். வாயினால் பேசி மற்றவர்களுடைய நாடித்துடிப்பை உணர்வதற்குப்பதில் ஸ்டெதாஸ் கோப்பினாலேயே உணர்கிறவர்களுக்குக்கவி இதயமும் கத்தரிக்காய் விற்கிறவனுடைய இதயமும் ஒன்றாகத்தான் துடிக்கும். நல்ல வேளையாக உங்கள் டாக்டரின் மகளுக்காவது கவிதையை இரசிக்கும் இதயம் இருப்பதாக நீங்கள் சொல்வதைக் கேட்டு மகிழ்கிறேன். நீங்கள் ‘நான் இன்னார்தானா’ என்று கேட்டுத் தெரிந்து கொள்வதற்கே ஆர்வமாக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் டாக்டரோ நான்கு நாட்களுக்கு முன்பு நான் இங்கு வந்து ‘அட்மிட்’ ஆனபோது என்னைப் பற்றி நானாக இன்னாரென்று கூறியும் கூடப்பதிலுக்குப் புன் சிரிப்புக்கூடச் சிரிக்கவில்லை” என்று கொதிப்போடு பேசினார் அவர்.

“அது அவர் சுபாவம்! அவருடைய மனைவிக்கும், மகளுக்கும் நீங்கள் இங்கே அட்மிட் ஆகியிருப்பது தெரிந்தாலோ ஒரு திருவிழாக் கொண்டாட்டமே கொண்டாடி விடுவார்கள்” என்று உற்சாகமாகப் பதில் கூறினாள் கொச்சம்மணி.

“நீங்கள் இங்கு நர்ஸாக இருக்கிறீர்களோ?”

சுதாகரனின் இந்தக் கேள்விக்கு மறுமொழியாகத் தன் சரித்திரத்தையே சுருக்கமாகச் சொல்லி முடித்தாள் கொச்சம்மணி.

“இன்றைய நிலையில் உங்களைப் போன்று கஷ்டப்படுகிறவர்கள்தான் தேசப் பற்றையும், மொழிப் பற்றையும், தேசீய உணர்ச்சிகளையும் இழந்துவிடாமல் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார் சுதாகரன்.

“நீங்கள் இப்படி ஏங்கிப்போய்ப் பேசக்கூடாது. இங்கே தங்கியிருக்கிற வரை உங்களுக்கு வேண்டிய செளகரியங்களை நான் செய்து கொடுப்பேன். ஒவ்வோர் இந்தியனுடைய உள்ளத்தையும் நினைவுகளையும் கங்கை மானசீகமாக நனைத்துக் கொண்டிருப்பதைப் போலத் தன் கரையில் பிறந்த ஒவ்வொரு மலையாளியின் மனத்தையும் பாரதப்புழை நனைத்துக் கொண்டிருப்பதாக நீங்கள் எழுதியிருக்கிறீர்களே! என் மனத்தை ஒவ்வொரு விநாடியும் நான் பிறந்த இடத்து நதிக்கரை நீர் அலை அலையாக நனைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு உதவி செய்வதன் மூலம் நான் பெருமைப்படமுடியும்” என்று கொச்சம்மணி கூறியபோது சுதாகரன் அவளைப் பார்த்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினார். ‘அட்மிட்’ அவள் உற்சாகம் தாங்க முடியாத மனத்தோடு தபால்களை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள். வாரப் பத்திரிகைக்காகக் காத்துக் கொண்டிருந்த டாக்டரின் மனைவியிடம் பத்திரிகையையும் சுதாகரன் கீழே தங்கள் ஆசுபத்திரியில் வந்து ‘அட்மிட்’ ஆகியிருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியையும் சேர்த்துத் தந்தாள் கொச்சம்மணி. ஆனால் அந்த முதிய அம்மாள் சுதாகரனின் எழுத்துக்களை விரும்பிப் படித்த அளவு இந்தச் செய்தியைக் கேட்டு அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை.

“அப்படியா? சாயங்காலம் வசந்தா கல்லூரியிலிருந்து வந்ததும் அவளிடம் சொல்லு மிகவும் மகிழ்ச்சி அடைவாள்” என்று சொல்லிவிட்டுப் பத்திரிகை படிப்பதில் மூழ்கிவிட்டாள் சிவசங்கரனின் மனைவி கொச்சம்மணியின் ஆர்வம் இந்த அலட்சியத்தில் பேர்பாதி அடங்கிப் போய்விட்டது. ஏதோ பெரிய திருவிழாக் கொண்டாட வேண்டிய நிகழ்ச்சி நடந்திருப்பது போலவும் அதைப் பொருட்படுத்தாமல் எல்லாரும் வேண்டுமென்றே திட்டமிட்டுக் கொண்டு அலட்சியம் செய்வது போலவும் கொச்சம்மணிக்கு அப்போது தோன்றியது. சாயங்காலம் வசந்தா வந்ததும் அவளிடம் ஓடிப்போய் இந்தச் செய்தியைச் சொன்னாள். அவள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. இந்தச் செய்தியைக் கேட்டதும் வசந்தா மகிழ்ச்சிக் கூத்தாடினாள்.

“இதோ வருகிறேன்! இரண்டு பேருமாகக் கீழே போய் அவரைப் பார்க்கலாமடீ’ என்று கூறிவிட்டு அலங்காரம் செய்து கொள்ளப் புகுந்த வசந்தா முக்கால் மணி நேரத்துக்குப் பின்புதான் வெளியே வந்தாள். ஏதோ கிளியோ பாத்ரா ஸீஸரை வெற்றி கொள்ளப் புறப்பட்டாற்போல அழகுத் தேவதையாகப் புறப்பட்டிருந்தாள் வசந்தா. இதன் காரணமும் கொச்சம்மணிக்குப் புரியவில்லை. ‘இந்தப் பெண் சுதாகரனைத் தான் பார்க்கவேண்டுமென்று வருகிறாளா, அல்லது சுதாகரன் தன்னைப் பார்க்க வேண்டுமென்று வருகிறாளா?’ என்று புரியாமல் மருண்டாள் அவள். மனம் எதற்காகவோ கஷ்டப்பட்டது அவளுக்கு. வசந்தா சுதாகரனுடைய அறைக்குள் நுழைந்ததும் தான் யாரென்று அறிமுகம் செய்து கொள்ளாமலே அவரது கட்டிலின் விளிம்பை ஒட்டினாற்போல் ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டுவிட்டாள். கதவோரமாகப் பணிவோடு தயங்கி நின்ற கொச்சம்மணிக்கு இதுவும் பிடிக்கவில்லை. “எங்கள் டாக்டரின் மகள்” என்று கொச்சம்மணி அவருக்கு வசந்தாவை அறிமுகம் செய்து வைத்தாள். வசந்தா வணங்கியதற்குப் பதிலாகச் சுதாகரன் கைகூப்பினான். அடுத்த விநாடி பாதி ஆங்கிலமும் பாதி மலையாளமும் கலந்து வசந்தா சுதாகரனிடம் கேட்கத் தொடங்கிய கேள்விகளைக் கண்டு கொச்சம்மணி தன் மனத்தில் மிகவும் வேதனையடைந்தாள்.

“நீங்கள் ‘கோல்ட்ஸ்மித்’ ஏதாவது படித்திருக்கிறீர்களா?”

“இல்லை” சுதாகரனின் பதில் இது.

“பைரன்... ஷெல்லி...?”

“இல்லை”

“கலில்ஜிப்ரான்?”

“இல்லை.”

“நீங்கள் விரும்பித் தோய்ந்து படித்த புத்தகம்?”

“வாழ்க்கை! பாரதப்புழையின் கரையில் சிறிதும் பெரிதுமாயுள்ள மலையாளத்து ஊர்களின் வறுமையும், வளமும், ஏக்கமும், இன்பமும் எனக்கு மனப்பாடம்.”

“உங்கள் கவிதைகளுக்கு... பத்திரிகையில் என்ன கொடுக்கிறார்கள்?”

“சில பேரிடமிருந்து இப்படிக் கேள்விகளை எதிர்பார்க்கும் துர்ப்பாக்கியத்தைத் தவிர வேறு ஒன்றும் கொடுப்பதில்லை” என்று சுதாகரனிடமிருந்து சுடச் சுடப் பதில் வந்தது.

“நீங்கள் எங்கள் கல்லூரியில் ஒரு நாள் வந்து பேசுங்களேன்.”

“செளகரியப்படாது! இதுமாதிரி அசட்டுக் கேள்விகளையெல்லாம் உங்களைப் போலவே இன்னும் ஆயிரம் பேர்கள் கேட்க ஒரு வாய்ப்புத் தர எனக்கு விருப்பமில்லை.”

“நீங்கள் முன்கோபக்காரராக இருக்கிறீர்கள். இப்படி இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறிக்கொண்டே விருட்டென்று எழுந்திருந்து வெளியேறிப் போய்விட்டாள் வசந்தா.

அவள் தலை மறைந்ததும், பயந்து நடுங்கிக் கொண்டே பேதைத் தன்மையின் பிரதிநிதியாய்க் கதவோரம் நின்று கொண்டிருந்த கொச்சம்மணியை நோக்கிச் சுதாகரன் சிரித்தான். பின்பு பேசினான்:

“டாக்டர் தன்னுடைய ‘பேஷண்டு’களை விசாரிக்கிற மாதிரியே மகளும் விசாரித்ததைக் கவனித்தீர்களா?”

“பாவம்: வசந்தாவுக்கு நாகரிகம் தெரியாது. அசட்டுப் பிசட்டென்று ஏதோ கேட்டுவிட்டாள். அதற்காக நீங்கள் இவ்வளவு சூடாகப் பதில் சொல்லியிருக்கவேண்டாம்.”

“இதைவிடச் சூடாகப் பதில் சொல்ல முடியாமற் போயிற்றே என்றுதான் எனக்கு வருத்தம். பிரம்மாவுக்கு முன்னால் போய்ப் படைப்புத் தொழிலைச் செய்வதற்கு நீ என்ன புத்தகம் படித்திருக்கிறாய் என்று கேட்பது உண்டோ? அல்லது அந்தத் தொழிலுக்கு நீ என்ன சம்பளம் பெறுகிறாய் என்று கேட்பதுண்டோ? சில பேர் இப்படி எல்லாம் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட அசட்டுக் கேள்விகளைச் சந்திக்கும் விநாடிகளில் எங்களுடைய கண்களுக்கு முன்னால் எல்லாமே இருண்டு போகிறது. எங்களுடைய எண்ணங்களின் உயரத்திலிருந்து நாங்கள் கீழே உருண்டு விடுகிறோம். இந்த வேதனை புரியாமல் சிலர் திரும்பத் திரும்பக் கேள்வி அம்புகளால் எங்களைப் புண்ணாக்கி விடுகிறார்கள். எந்தக் குரல் சத்தியத்தை ஒலிக்க விரும்புகிறதோ அது இப்படிப்பட்ட எதிரொலிகளை வெறுக்கிறது.”

“தப்புத்தான்! அவள் அசட்டுத்தனமாகக் கேட்டுவிட்டாள்.”

பெண்ணே! எங்கள் பரம்பரை தன்னுடைய முதல் இரசிகனைச் சந்தித்த நாளிலிருந்து இந்த விநாடி வரை தெரிந்து கொள்ளத் தவிக்கிற விஷயம் இதுதான். எதிரே வந்து வாய் நிறையப் புகழ்ந்து கொண்டு நிற்கிறவர்களுடைய குரல்களிலிருந்து எந்தக் குரல் சத்தியமயமாகப் பிறந்து சத்தியத்தின் பிரதிநிதியாய் ஒலிக்கிற குரல் என்று பிரித்துப் புரிந்து கொள்கிற வரை வேதனைதான்! உலகத்தில் முதல் காவியமும் முதல் கவிஞனும் பிறந்ததிலிருந்து இந்த வேதனை உண்டு.”

“நீங்கள் அப்படி எந்தப் புகழ்ச்சியிலாவது சத்தியத்தின் குரலைக் கேட்டிருக்கிறீர்களோ?”

“நேற்று வரை இல்லை! இன்று காலையில் இந்த வார்டு தேடி வந்து ஒரு வேலைக்காரப் பெண் நான் இன்னாரென விசாரித்துத் தெரிந்து கொண்டு கண்களில் பயபக்தி மலரப் புகழ்வதற்குச் சொற்களே கிடைக்காமல் என் எதிரே நின்றாள். அப்போது அவளுடைய கண்களில் மட்டும் சத்தியத்தைப் பார்த்தேன். இப்போதும் என் எதிரே அதே கண்களைப் பார்க்கிறேன்” என்று சுதாகரன் புன்னகையோடு கூறியபோது கொச்சம்மணி நாணித் தலை குனிந்தாள்.

அந்தக் கணத்தில் - ஒரே ஒரு கணத்தில் பாரதப்புழை தான் ஓடிக்கொண்டிருந்த இடத்திலிருந்து நானூறு மைல்களைக் கடந்து வந்து அவள் மனத்தில் மட்டுமே பிரவாகமாகப் பெருகி ஓடியது. அது ஒரு விசித்திரமான அநுபவம். அதைச் சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை. அவள் அந்தக் கவிஞனை நோக்கித் தன் கைகளைக் கூப்பி வணங்கினாள். அவருடைய எதிரே நின்று வணங்குவதற்குக் கூடப் பயமாகவும் நாணமாகவும் இருந்தது அவளுக்கு கொச்சம்மணிக்கு மனத்தத்துவம் தெரியாது. அவ்வளவு பெரிய வார்த்தையை அவள் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் அவளுடைய நாவுக்கு எப்படியோ ஒரு பொது நாகரிகம் தெரிந்திருந்தது. அதை அவள் எங்கும் யாரிடமும் தேடிப்போய்க் கற்றதில்லை. இரத்தத்தைப் போல் உடம்பிலேயே ஓடிக்கொண்டிருந்தது அந்த நாகரிகம். எது புத்திசாலித்தனம், எது அசட்டுத்தனம் என்று பிரித்துப் படிக்காமல் எது புத்திசாலித்தனமோ அப்படியே நடந்துகொண்டு விடுகிற பேதைகளையும்.அப்பாவிகளையும் சுதாகரனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கள் அவன் கவிக்கு விஷயங்கள்.

“ஒவ்வொரு இந்தியனுடைய உள்ளத்தையும் நினைவுகளையும் கங்கை மானசீகமாக நனைத்துக் கொண்டிருப்பதைப் போலத் தன் கரையில் பிறந்த ஒவ்வொரு மலையாளியின் மனத்தையும், நினைவுகளையும் அவன் எங்கிருந்தாலும் பாரதப்புழை நனைத்துக் கொண்டிருக்கிறது” என்ற வரிகளை அவள் மட்டும் கேட்க முடிந்த மெல்லிய குரலில் அவளுக்காகவே பாடிக் காட்டினான் சுதாகரன். அந்தக் குரல் நலிந்திருந்தாலும் சத்தியத்தின் பிரதிநிதியாய் ஒலித்தது.

(கல்கி, 11.3.1962)