நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/நல்ல தீர்ப்பு
81. நல்ல (பாம்பு) தீர்ப்பு
வீரநாராயணன் மனைவி குனிந்த தலை நிமிராது பஞ்சாயத்தாருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தாள். வட்ட வட்டமாக வெள்ளி மெட்டிகளை அணிந்திருந்த அவள் கால் விரல்கள், தரையைக் கீறிக் கொண்டிருந்தன. அவள் பெயர்தான் நீலம்மாள். நிறம் என்னவோ செந்தாழம் பூ நிறந்தான் கருகருவென்று வளர்ந்திருந்த நீண்ட அளக பாரத்தைக் கோணல் கொண்டையாக அள்ளி முடித்திருந்தாள். அப்படி முடிவது குல வழக்கம்.
“என்னம்மா? சும்மா நிற்கிறே! பஞ்சாயத்தார் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லு!”
நாட்டாண்மைக்காரத் தேவர் அவளை விரட்டினார். நீலம்மாள் பதில் சொல்லவில்லை. வழக்கில் வாதியான வேலப்பனும், பிரதிவாதியான வீரநாராயணனும் நாட்டாண்மைக்காரருக்கு இரண்டு புறத்திலும் நின்று கொண்டிருந்தார்கள்.
வீரநாராயணன் வாட்ட சாட்டமான ஆள். ஆறரை அடி உயரம், கம்பீரமான முகம். பெருந்தன்மை ஒளிரும் கண்கள். அந்த முகத்துக்குரியவரின் ஆண்மையை எடுத்துக் காட்டுவது போன்ற மீசை இறுகிப் பரந்த பாறை போன்ற மார்பு, வாளிப்பும் வண்மையும் நிறைந்த கை, கால்கள். வாதியாகிய வேலப்பனைப் பற்றித் தனியாக வருணிக்க வேண்டிய அவசியமே இல்லை. வீரநாராயணனுக்கு நேர் எதிரிடையான தோற்றமும், உயரமும் உடையவர் என்று சொன்னால் மட்டும் போதும்.
ஊர்ப் பஞ்சாயத்தாருக்கு முன்னால், இவர்கள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. வழக்கு நீலம்மாள் சம்பந்தமானதுதான். பஞ்சாயத்தார் வழக்கின் உண்மையை அறிவதற்காக அவள் சாட்சியத்தை விசாரித்தனர்.
ஆனால், அந்தப் பெண் வாயைத் திறந்து பதில் சொன்னால்தானே? பஞ்சாயத்தாரின் பொறுமையைத்தான் சோதித்துக் கொண்டிருந்தாள். நாழிகை ஆக ஆகப் பஞ்சாயத்தார்களுக்கு ஆத்திரம் வளர்ந்து கொண்டே போயிற்று.
“நீ என்னம்மா, பொண்ணு! இத்தனை பேரு பெரியவங்களாகக் கூடி விளையாடவா செய்கிறோம்? நியாயம் தெரியறத்துக்காகக் கேட்டா, ஊமை வேஷம் போடறியே! நீ சொன்னாத்தானே வழக்கு நடக்கும்?” ஆனால், அவள் வாயைத் திறக்கவேயில்லை.
“அவ ஏன் பேசுறா? மாமனும் ,மருமகளுமாகச் சேர்ந்துகிட்டு, என்னை உயிரோட சாக அடிக்கலாமின்னு திட்டமில்ல போடுறாங்க?” வீரநாராயணன் மீசை துடிதுடிக்க, கண்கள் சிவக்கப் பஞ்சாயத்தாரை நோக்கி ஆத்திரமாகப் பேசினான்.
அந்தப் பேச்சைக் கேட்டு நீலம்மாள் முகத்தைச் சுளித்து அருவருப்போடு காதைப் பொத்திக் கொண்டாள். வேலப்பன் நின்று கொண்டிருந்த விதத்திலிருந்து அவன் மனநிலையை அளந்தறிவது கடிதாக இருந்தது. இடித்து வைத்த புளி மாதிரி, அடித்துவைத்த சிலை மாதிரி, ‘உம்’மென்று நின்று கொண்டிருந்தான் அவன். நேரம் கழிந்து கொண்டேயிருந்தது.
வழக்கு இதுதான்:-
வீரநாராயணன் மனைவி நீலம்மாள், தன் மாமன் வேலப்பனின் பணக்கார வாழ்வுக்கு ஆசைப்பட்டு, அவனோடு போய்விட்டாள். இந்த மாதிரிப் போவதும் வருவதும் அந்தச் சாதியில் முன் காலத்தில் பெரிய ஒழுக்கக்கேடு இல்லை; சகஜம்தான். ஆனால் முறைப்படி பஞ்சாயத்தாரிடம் சொல்லிப் பழைய கணவனைத் ‘தீர்த்துக் கட்டி’த் தள்ளிய பின்பே, புதியவனோடு போகவேண்டும். ‘தீர்த்துக் கட்டுதல்’ என்றே இந்த வழக்கத்துக்குப் பெயர். குல நடைமுறைப்படி ஆண், பெண் இரு சாராருக்கும் முறையாகத் ‘தீர்த்துக் கட்டி’க் கொள்வதற்கு உரிமை உண்டு. இப்போது அரசியல் சட்ட உரிமைப்படி, விவாகரத்து செய்துகொள்ளலாமல்லவா? இது மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
வேலப்பனுக்கு ஏராளமான நில புலன்களும், கையில் வளமான ரொக்கமும் இருந்தது. கட்டிய மனைவி இறந்துபோனதால், ஓரிரண்டு வருஷம் ஏகாங்கியாகக் காலந் தள்ளினான். நீலம்மாள் அவனுக்கு அக்காள் மகள். ஆனால் அவள் ஏற்கனவே வீரநாராயணனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். ஆனாலும் ஆசை யாரைத்தான் விட்டது? வேலப்பன் நீலம்மாளிடம் பணத்தாசையைக் கிளப்பிவிட்டு, வலையை விரித்தான். வீரநாராயணனோடு உழைத்து, உழைத்து அரை வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்த நீலம்மாள், மெல்ல மெல்ல அவன் வலையில் விழுந்துவிட்டாள்.
முறைப்படி தீர்த்துக் கட்டிக் கொள்ளாமல் வீரநாராயணனின் மனைவியாக இருந்துகொண்டே, வேலப்பனோடு உறவு வைத்துக் கொண்டுவிட்டாள் நீலம்மாள். இது ஊர்முறைக்கும் குலமுறைக்கும் முரணானது. விஷயம் வீரநாராயணனுக்குத் தெரிந்துவிட்டது. அவனுக்கு ஏற்பட்ட கோப்த்தில் வேலப்பனையும், நீலம்மாளையும் அப்படியே கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால் பஞ்சாயத்து முறைக்குக் கட்டுப்பட்டு, அவர்களிடம் புகார் செய்தான்.
வழக்கு விசாரணையில்தான், நீலம்மாள் பஞ்சாயத்தாருக்கு முன்னால் எதுவும் பேசாமல் மெளனம் சாதித்து விட்டாள். நீலம்மாள் உண்மையை ஒப்புக் கொண்டாலொழிய பஞ்சாயத்தாருக்குத் தீர்ப்பு வழங்க நியாயம் கிடைக்காது. வீரநாராயணனுடைய புகாரை உண்மையாகக் கொள்ளலாம். ஆனால் சரியான ருஜு இல்லை. வழக்காடும் இருவர் கூறுவதை மட்டும், சாட்சியமின்றி ஒப்புக்கொள்வது பஞ்சாயத்து வழக்கமில்லை. பஞ்சாயத்தார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து மலைத்தனர். வேறு ஒரு வழியும் தோன்றவில்லை.
கடைசியில் தீராதபட்சம் ஒரே ஒரு வழி உண்டு. பெரும்பாலும் அந்த வழியை அமுல் நடத்துவதில்லை. அது மகாகோரமானதுகூட தலைமுறை தலைமுறையாக அவர்கள் பஞ்சாயத்து முறையில் அது ஒரு வழக்கமானாலும், பத்து வருஷம், இருபது வருஷங்களில் எப்போதாவது ஏகதேசத்தில்தான் அந்த மாதிரிப் பயங்கரம் நிகழும்.
ஒரு சாட்சியமும் கிடைக்காதபோது, தெய்வ சாட்சியை நாடுவது என்று ஒரு வழக்கம். தெய்வ சாட்சியென்றால் சாமானியமானதில்லை. சத்தியத்தோடு உயிரைப் பணயம் வைத்து விளையாடுவதைப் போலத்தான், அதுவும். அந்தச் சாதியாரிடம் இருந்த அந்த வழி வழி வந்த வழக்கத்தை நினைத்தாலே நமக்கெல்லாம் நடுக்கமெடுக்கும்!
ஊர் மாரியம்மன் கோயிலில், ஒடுங்கிய வாயை உடைய இரண்டு செப்புக் குடங்கள் இருக்கின்றன. பாம்பாட்டியைக் கூப்பிட்டு, இரண்டிலும் இரண்டு நல்ல பாம்புகளைப் பிடித்து உயிரோடு அடைப்பார்கள். வாதியும், பிரதிவாதியும் பஞ்சாயத்தாருக்கு முன்னால் மூன்று முறை குடங்களுக்குள் கையை நுழைக்க வேண்டும். பாம்பு கடிப்பதையும் கடிக்காததையும் பொறுத்து நியாயம் தீர்மானம் செய்யப்படும். குடத்தில் அடைபட்ட பாம்புகளால் விளையும் விளைவையே அவர்கள் தெய்வ சாட்சியாகக் கருதினார்கள். இது வழக்கம்தான். இருக்கிற நிலைமையைப் பார்த்தால் வழக்கு இந்தத் தெய்வ சாட்சி என்கிற பயங்கரமான எல்லையை வந்து அடையும் போலத்தான் தோன்றியது. ஊமை போல நின்ற நீலம்மாளே அப்படி ஒரு தவிர்க்க முடியாத அவசியத்தைத் தீராதபட்சமாக ஏற்படுத்திவிட்டாள். வேறு என்ன செய்வது? பஞ்சாயத்தார்கள் தங்கள் கடமையைச் செய்துதானே ஆகவேண்டும்?
இந்த முறையில் ஒரு வசதியும்கூட இருந்தது. கடைசி விநாடியில், குற்றம் செய்தவன் பாம்புக்குப் பயந்து குடத்துக்குள் கையை விடுவதற்கு முன்பே, நடுங்கி உண்மையை ஒப்புக்கொண்டு விடுவதும் உண்டு! அப்படி நேர்ந்தால் வழக்குக் கஷ்டமின்றி முடிந்துவிடும்.
பஞ்சாயத்தார் இரண்டு மூன்று நாள் அவகாசம் பொறுத்துப் பார்த்தார்கள். நீலம்மாள் எதையும் கூற மறுத்துவிட்டாள்.
மாரியம்மன் கோவில் பூசாரி செப்புக் குடங்களைக் கொண்டு வந்து பஞ்சாயத்தாருக்கு முன்னால் வைத்தான். நாட்டாண்மைக்காரர் பாம்பு பிடிக்கும் பிடாரனை அழைத்துக்குடங்களைக் கொடுத்து,“இரண்டிலும் சரிசமமானதாக, நல்ல பாம்புகளை அடைத்துக் கொண்டு வா” என்று அனுப்பினார்.
தெய்வ சாட்சியை அறியக் குடத்தில் கையை நுழைப்பதற்குப் பூரண சம்மத மென்று வேலப்பன், வீரநாராயணன் இருவருமே துணிந்து இணங்கி விட்டனர். ஆனால் இவ்வளவுக்கும் காரணமான நீலம்மாள் மட்டும் கடைசிவரை வாயைத் திறக்கவேயில்லை.
இரண்டு மூன்று தலைமுறையாக கையாளப்படாத இந்தச் சோதனை நடக்கப் போகும் செய்தி ஊரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. ‘தெய்வம் குடத்தில் உள்ள பாம்பின் மூலமாக, எப்படித் தீர்ப்பு வழங்குகிறது’ என்ற விந்தையைக் காணத் துடிக்கும் ஆவல் எங்கும் நிறைந்திருந்தது. வீரநாராயணனாவது கொஞ்சம் கவலைப்படுவது போல, வாட்டமாகக் காணப்பட்டான். வேலப்பனோ, பாம்பு தன்னை நிச்சயமாகக் கடிக்காது என்று பலரிடமும் சிரித்துப் பேசி வந்ததோடன்றி, உண்மையிலேயே கவலையில்லாமல் குஷாலாகச் சுற்றித்திரிந்து கொண்டுமிருந்தான். அவன் நம்பிக்கை மற்றவர்களை வியக்கச் செய்தது.
அன்று வெள்ளிக்கிழமை. மாலை ஆறு நாழிகைக்குத் தெய்வ சாட்சியைப் பரிசோதிப்பது என்று பஞ்சாயத்தார் முடிவு செய்திருந்தனர். நாலரை நாழிகை வரை எதிர்பார்த்தனர். இருவரில் யாராவது ஒருவர் பாம்புக்குப் பயந்து கொண்டு, குற்றத்தைத் தாமாக வலுவில் ஒப்புக் கொள்ளலாம் என்று எதிர்பார்த்தது வீணாயிற்று. வேலப்பன் கடைசிவரை ‘கல்லுளி மங்கனாகவே’ நடித்துவிட்டான். வீரநாராயணன் என்ன செய்வான், பாவம்? குற்றம் செய்திருந்தால்தானே அவன் குற்றத்தை ஒப்புக் கொள்ள முடியும்? ஐந்து நாழிகைக்குப் பஞ்சாயத்தார் நாட்டாண்மைத் தேவர் தலைமையில் மாரியம்மன் கோவிலின் முன் மண்டபத்தில் கூடினர். மண்டபத்தில் எள் போட்டால் விழ இடமில்லை. இந்த அதிசயத்தைப் பார்க்க ஊரே கூடியிருந்தது. ஆனால் இத்தனை வம்புக்கும் காரணமான நீலம்மாள் மட்டும் அங்கு வரவேயில்லை.
பாம்புப் பிடாரன் செப்புக் குடங்களை ஆடாமல் அசையாமல் எடுத்துக்கொண்டு வந்து பஞ்சாயத்தாருக்கு முன்னால் வைத்துவிட்டு ஒதுங்கி நின்றான். அவன் கையில் மகுடியும் வேரும் இருந்தன. பாம்பு குடத்தில் தங்காமல் ஓட முயன்றாலோ அநாவசியமாக வழக்கில் சம்பந்தப்படாதவர்களைக் கடிக்க முயன்றாலோ, அவன் அவற்றை உபயோகப்படுத்துவது வழக்கம். அந்த முன்னெச்சரிக்கைக்காகவே அவன் அவற்றைக் கையில் வைத்துக் கொண்டிருந்தான்.
வீரநாராயணனும் வேலப்பனும் பஞ்சாயத்தாருக்கு முன்னால் குடங்களுக்கு அருகே வந்து நின்றனர்.மாரியம்மன் கோவில் பூசாரி வழக்கப்படி, இருவர் கழுத்திலும் இரண்டு செவ்வரளி மாலைகளைக் கொண்டுவந்து போட்டு, நெற்றியில் குங்குமப் பொட்டுக்களை இட்டான்.வாழ்வோ, சாவோ தெய்வத்தை நம்பி அதன் துணையோடு துணிந்து இறங்கும் பண்பட்டமுறை அது. அந்த மாலைக்கும் பொட்டுக்கும் ‘தடை காப்பு’ என்பது அவர்கள் பஞ்சாயத்தில் வழங்கும் பெயர். குற்றம் செய்யாதவனைக் குடத்துக்குள்ளே இருக்கும் பாம்பு கடிக்காமற் தடுப்பதற்காகவே அம்மன் இடுகின்ற அரளி மாலையும் குங்குமப் பொட்டும் அமைவதினாலேயே ‘தடை காப்பு’ என்ற பெயர் ஏற்பட்டிருந்தது.
“என்னப்பா பிடாரன்! அம்மன் சாட்சியா ரெண்டு குடத்திலேயும் சாதி நல்ல பாம்புதானே இருக்குது?” நாட்டாண்மைக்காரர் விசாரித்தார். பிடாரன் ‘ஆமாம்’ என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டினான்.
“ஊராருக்கு ஒரு வார்த்தை எல்லாரும் நல்லதை எண்ணி அம்மனைக் கும்பிடுங்க. நீலம்மா விஷயமா, இவங்க ரெண்டு பேருக்கு ஏற்பட்ட வழக்குக்கு மகமாயி பத்திரகாளி, மாரியம்மா தீர்ப்பு வழங்கப்போறா நியாயம் தெரியப் போகுது. நீதி வெளிவரப் போகுது.”
மண்டபத்தில் சூன்ய அமைதி. கூடியிருந்தவர்கள் மூச்சுவிடும் ஓசைகூடக் கேட்கவில்லை. எல்லா விழிகளும் செப்புக் குடம், அவற்றருகில் நீதிக்காக உயிரைப் பணயம் வைத்து நின்றுகொண்டிருப்போர் மீதே நிலைத்திருந்தன.
“அப்பா, வீரநாராயணா! வேலப்பா! தெய்வத்தை மனசிலே நினைச்சு ஆளுக்கு ஒரு குடத்தில் மூணு தரம் கையை துழைச்சு எடுங்க; பார்ப்போம்.” கூடியிருந்தோர் விழிகளில் ஆவல் தவழ்ந்தது.
நாட்டாண்மையின் உத்தரவு கிடைத்து விட்டது. வேலப்பன் கீழே வைத்திருந்த இரண்டு குடங்களையும் ஓரிரு விநாடிகள் உற்று உற்றுப்பார்த்தான்! பின்பு வடபுறமாக இருந்த குடத்தில், முகம் மலரக் கையை நுழைத்தான்.
வீரநாராயணனோ ஒன்றையும் பார்க்கவில்லை. வேலப்பன் எடுத்ததுபோக, எஞ்சியிருந்த குடத்தில் கவலை நிறைந்த முகத்தோடு கையை நுழைத்தான்.
வீரநாராயணன் மூன்று முறைக்கு மேலும், ஒன்பது பத்துமுறை குடத்தில் கையை நுழைத்து எடுத்து விட்டான்! அவன் குடத்தில் பாம்பு இருந்ததாகவே தெரியவில்லை. வேலப்பன் குடத்தில் கையை நுழைக்கும்போது மகிழ்ச்சியோடு நுழைத்தான். ஆனால், உள்ளே நுழைத்த கையை வெளியே எடுக்கவேயில்லை. குடமும் கையுமாக அலறித் துடித்தான் அவன். உள்ளிருந்து ஏதோ அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.
“எங்கே அந்தப் பிடாரப் பயல்? அயோக்கியன் மோசம் பண்ணிப்பிட்டான் காசு வாங்கிக்கிட்டு ஏமாத்திப்புட்டான். ஐயோ! எத்தனை கடிதான் பொறுப்பேன்? கையை வெளிலே எடுக்க வரலியே? ஏதோ இறுக்கிப் பிடிச்சிருக்கே” - வேலப்பன் குடமும் கையுமாக நெருப்பில் விழுந்த புழுப்போலத் துடித்தான்.
“ஐயோ! சாமீ... நான் ஒண்ணும் மோசம் பண்ணலியே... நீங்க சொன்னபடி ஒங்க குடத்திலே சாரைப் பாம்பைத் தானே அடைச்சேன்! அவர் குடத்திலே தானே ‘நல்லதே’ அடைச்சேன்” பிடாரன் கத்தினான்.
கூடியிருந்த மக்கள், பஞ்சாயத்தார், வீரநாராயணன், யாருக்குமே எதுவும் தெளிவாக விளங்கவில்லை. ஒரு முழுமனிதனை உயிரோடு நெருப்பின் மீது தூக்கிப் போட்டால், அவன் எப்படித் துள்ளி விழுந்து துடிப்பானோ, அப்படித் துடித்துக் கொண்டிருந்தான் வேலப்பன். குடத்திற்குள்ளிருந்து, அவன் வலது கை வெளிவரவேயில்லை. குடத்திற்குள்ளே ‘படபட’வென்று சவுக்கினால் ஓங்கியடிப்பது போன்ற ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
‘விறுவிறு’ வென்று அவன் உடம்பு நீலம் பாரித்தது. உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால்வரை ‘வெடவெட’ வென்று நடுங்கின. கண் பஞ்சடைந்தது. கண்களில் நீர் மல்க வீரநாராயணனை நோக்கியும், அம்மன் சந்நிதியை நோக்கியும் தனியாக ஒரு கையைத் தூக்கி வணங்கினான் வேலப்பன். அவன் கை நுழைந்திருந்த செப்புக் குடத்திற்குள்ளிருந்து ‘படபட’வென்ற ஓசை வருவது மட்டும் நிற்கவில்லை.
இந்த நெருக்கடியான குழப்பம் நிறைந்த சந்தர்ப்பத்தில் பாம்புப் பிடாரன் கூட்டத்தை விலக்கிக்கொண்டுமண்டபத்திலிருந்து நழுவ முயன்று கொண்டிருப்பதை நாட்டாண்மைக்காரர் பார்த்து விட்டார்.
அவ்வளவுதான்! ஒரே தாவாகத் தாவி அவன் பிடரியில் கை வைத்து இரண்டு அறை கொடுத்தார். பாம்புப்பிடாரன், “ஆ, அப்பா அடிக்காதீங்க சாமீ” என்று அலறினான்.
“எங்கேடா ஓடறே? இரகசியத்தை எல்லாம் சொல்லிவிட்டு, அப்பறம் ஓடலாம்! இப்ப என்ன அவசரம்? வா இப்படி... முதல்லே குடத்திலே இருக்கிற பாம்புகளிடமிருந்து இந்தப் பய கையை வெளியே எடு. அப்புறம் பாம்புகளை வெளியேற்றிவிட்டு விவரத்தைப் பஞ்சாயத்தாருக்குச் சொல்லு.”
பிடாரன் திருட்டு விழி விழித்துக்கொண்டே நாட்டாண்மைக்காரரின் கட்டளைக்குப் பணிந்தான். கையை இறுக்கிக் கொண்டிருந்த பாம்புகள் விடுவதற்காக குடத்தின் வாயருகே குனிந்து, மகுடியை வாசித்தான். பிடாரன் நீண்டநேரம் மகுடி வாசித்த பிறகு வேலப்பனின் கைநெகிழ்ந்தது.விறைத்துப் போய் இரத்த ஒட்டம் நின்று நீலம் பரவியிருந்த அந்தக் கையை, மெல்ல வெளியே எடுத்ததும் வேலப்பன் தரையில் சாய்ந்தான்.
குடத்தை அடைத்துக்கொண்டிருந்த கை வெளியே வந்ததோ இல்லையோ? அதே வேகத்தில் ‘மூசு மூசென்று’ சீறிக்கொண்டு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவாறே சரிஜோடியான ஒரு நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் வெளியே பாய்ந்தன. சமாளிக்க முடியாத வேகத்தில் யாரும் காணக்கூடாத எக்கச் சக்கமான நிலையில் வெளி வந்த அந்தப் பாம்புகளைக் கண்டு பிடாரன் வெலவெலத்துப் போனான். அவனுக்கே ஒன்றும் புரியவில்லை. எப்படி அவை ஒன்று சேர்ந்தன என்பதை அனுமானிக்க நேரம் இல்லை; கை நடுங்க, உடல் பதற, வியர்க்க, விருவிருக்க மகுடியை ஊதினான். அந்த நிலையில் அவைகளைக் கட்டுப் படுத்துவதற்காக அவன் மகுடி ஊதவில்லை என்றால் அவனுடைய உயிருக்கே ஆபத்து. உடலும் உள்ளமும் தழுவி ‘நல்லதும்’ சாரையுமாக அனுராகச் சேர்க்கையில் ஈடுபட்டு மகிழும் அந்த நிலையில், மனிதர் பார்த்தால் ஓட ஓட விரட்டிக் கடிக்காமல் விடாது. மண்டபத்தில் கூடியிருந்த கூட்டம் பின்னுக்குத் தள்ளி விலகி நின்று கொண்டது. பஞ்சாயத்தார் ஒதுங்கிநின்றார்கள்.வீரநாராயணனும் ஒதுங்கி அவர்களோடுநின்றான்.வேலப்பனின் சடலமும் இரண்டு செப்புக் குடங்களும்தான் நடுவில் கிடந்தன. சடலத்தின் அருகே இரத்தம் பிரவாகிப்பதுபோலக் கிடந்தது செவ்வரளி மாலை.
பாம்புகள் நடுவே பின்னிப் பிணைந்து, தம்மை மறந்த இன்ப வெறியின் போதையில், ஆடித் திளைத்துக்கொண்டிருந்தன. பிடாரனுக்கு ஊதி ஊதி மூச்சே மகுடிக் குழாய் வழியே வெளியேறி, செத்து விடுவான்போல இருந்தது. பாவம்! அவன் உடம்பிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி வடிந்து கொண்டிருந்தன. கன்னங்கள் இரண்டும் ஊதி ஊதி அப்பமாகக் கன்றிவிட்டன. கண்கள் நெருப்புத் துண்டுகளாகச் சிவந்துவிட்டன. பாம்புகள் பிரியவில்லை. ஆட்டத்தையும் நிறுத்தவில்லை.
“சரி! காசுக்காக நியாயதுரோகம் செய்த இந்தப் பயல் பிடாரனும் மூச்சுத் திணறிச் சாகத்தான் போகிறான். தப்புவதற்கு வேறு வழியில்லை” என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டு விட்டார் நாட்டாண்மைக்காரர். அத்தனை பேரும் நெஞ்சு படபட என்று அடித்துக் கொள்ள, அந்தக் காட்சியை மிரண்ட நோக்கோடு பார்த்துக் கொண்டிருந்தனர். ‘பிடாரன் செத்தான்’ - என்றே தீர்மானிக்க யாரும் தயங்கவில்லை.
இந்தச் சமயத்தில் ஓர் ஆச்சரியம் நடந்தது! யார் செய்த புண்ணியமோ, அல்லது பிடாரனின் நல்ல காலமோ, அம்மன் கோவில் பூசாரி சூடத்தைக் கொளுத்தி சந்நிதி வாசற்படியில் வைத்தான். மகுடிக்கு அடங்காத பாம்புகள், சத்தியத்துக்காவது அடங்குகின்றனவா பார்ப்போம் என்று, சூடம் கொளுத்தி அம்மனைத் தியானித்தான். ஆடிக்கொண்டிருந்த பாம்புகள் வாயிற்படியில் எரிந்து கொண்டிருந்த சூடச் சுடரை வெறித்து நோக்கின. என்ன விந்தை தெய்வம் இல்லை என்கிறார்களே, ஒரு சிலர்! ஆடிக்கொண்டிருந்த பாம்புகள் தனித்தனியே பிரிந்தன. வாயிற்படியில் எரிந்து கொண்டிருந்த சுடரைக் கடந்து, அம்மன் சந்நிதிக்குள் சரேலென்று பாய்ந்தன. அவை மறுபடியும் வெளியே வந்து விடாமல் இருப்பதற்காகக் கதவை இழுத்து, இறுக்கிச் சாத்தி வெளிப்புறம் தாழ் போட்டான் பூசாரி. பிடாரன் மகுடியைக் கீழே போட்டுவிட்டு நிம்மதியாக மூச்சு விட்டான். யாரோ ஓடிப்போய் கோவில் தோட்டத்திலிருந்து அவனுக்கு இரண்டு இளநீர் வெட்டிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இளநீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான் அவன்.
“ஐயா! சாமி, என்னை மன்னிச்சிடுங்க. இந்தப் பாவி வேலப்பன் பிணமாகக் கெடக்கானே, இவனோட காசுக்கு ஆசைப்பட்டு, என்னென்னமோ செஞ்சிட்டேனுங்க!”
“ஒரு செப்புக் குடத்திலே கழுத்தோரம் சுண்ணாம்பினாலே அடையாளம் பண்ணி, அதுலே மட்டும் சாரைப் பாம்பை அடைச்சிடு ஒனக்கு வேணும்கிறதைத் தரேன்னான். வவுத்துக் கொடுமைங்க; சரின்னிட்டேன். சுண்ணாம்பாலே அடையாளம் போட்ட குடத்திலே சாரையையும் இன்னொரு குடத்திலே ‘நல்லதை’யும் புடிச்சு அடைச்சேன். ஆனாப் பாருங்க... எனக்கும் தெரியாம இது நடந்திடுச்சு. நல்லதும் சாரையும் பக்கத்திலே இருந்தா ஒண்ணை ஒண்னு தழுவிப் பிணையாமப் போவாதுங்க. அது பாம்புக பளக்கமுங்க. எனக்குத் தெரியாமலே, நல்லதும் சாரை இருந்த குடத்திலே போய்ப் பிணைஞ்சிடுச்சிங்க.”
நீலம்மாள் கதை, ‘அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக முடிந்ததே’ என்று வருந்தினர் பஞ்சாயத்தார். நீலம்மாளே விரும்பி வந்தாலும், அவள் தனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டான் வீரநாராயணன். பஞ்சாயத்தார் தீர்ப்புக் கூற இனி என்ன இருக்கிறது? கூற வேண்டியதைத்தான், பாம்புகள் கூறிவிட்டனவே.
பூசாரி மறுபடியும் சந்நிதியின் கதவைத் திறந்து, சூடம் கொளுத்திக் காட்டினான். இரண்டு பாம்புகளும் அம்மனுடைய தலையில் கிரீடம் வைத்ததுபோலப் பிணைந்து ஆடிக்கொண்டிருந்தன. நியாயத்தின் இருப்பிடம் அந்தத் தலைதானோ என்னவோ?
(1963-க்கு முன்)