நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/நாணயம்

21. நாணயம்

க்கீல் ஒரு கட்டுப் பைல்களைத் தூக்கி அவன் கையில் திணித்தார். குமாஸ்தா நாராயணன் அவ்வளவையும் வாங்கிக் கொண்டான்.

“ஏன் நிற்கிறீர்? அவ்வளவுதான், நீங்கள் போகலாம். காலையில் வரும் போது எல்லாக் கேஸ்களின் பைலையும் படித்துச் சுருக்கமாகக் குறிப்பு எழுதிக் கொண்டு வாரும். மறந்து விடாதீர்...” வக்கீல் அவனைத் துரத்தாத குறையாக விரட்டினார்.

“சார்!... வந்து வந்து...”

“என்ன ஐயா? ஏன் குழைகிறீர்? ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், சட்டென்று சொல்லித் தொலையுங்கள்.”

“வீட்டிலே கொஞ்சம் பணமுடை. சம்பளத்திலே முன் பணமாகப் பதினைந்து ரூபாய் கொடுத்தால் நன்றாயிருக்கும்.”

“இதோ பாருங்கள். இன்றைக்குத் தேதி இருபத்தெட்டு, இன்னும் இரண்டு நாட்களில் சம்பளமே உம் கைக்கு வரப் போகிறது. அதற்குள் என்னை எதற்குத் தொந்தரவு செய்கிறீர்? போம் ஐயா, போய் விட்டுக் காலையில் வாரும். இருந்ததைப் பாங்குக்கு அனுப்பி விட்டேன். கைவசம் ‘சில்லறை’யாக இல்லை.”

“அது இல்லை சார்! மிகவும் நெருக்கடியான நிலை”

“ரொம்ப சாரி! இதற்கு மேல் நான் பதில் சொல்ல முடியாது. இப்போது தர மாட்டேன்” வக்கீலுக்குக் கோபம் வந்து விட்டது.இனி மேல் அவரிடம் கெஞ்சினால், வாயில் வந்தபடி பேசுவதைத் தவிர வேறெதுவும் செய்ய மாட்டாரென்று அவனுக்குத் தெரியும். கிழிந்து போயிருந்த கோட்டுப் பையைத் தடவிக் கொண்டே ஏமாற்றத்தோடும், பைல்களோடும் அங்கிருந்து வெளியேறினான் நாராயணன். மாதம் நாற்பத்தைந்து ரூபாய் சம்பாதிக்கும் ஒரு வக்கீல் குமாஸ்தாவின் வாழ்க்கையை இருபது தேதிக்கு மேல் பஞ்சப் பிரதேசமாகப் பிரகடனம் செய்ய வேண்டியதுதான், வேறு வழியில்லை.

மனைவி, நாலைந்து குழந்தைகள், பள்ளிக்கூடம், வீட்டு வாடகை, சமயங்களில் ஆஸ்பத்திரி, இவ்வளவையும் சமாளிக்கிற சக்தி நாராயணனின் நாற்பத்தைந்து ரூபாய்க்குக் கிடையாது.

மேலே உரசி விடுவதுபோல் ஒரு டாக்ஸி அசுர வேகத்தில் வந்தது. நாராயணன் ஒதுங்கிக் கொண்டான்.

“என்ன ஐயா! வீட்டிலே சொல்லிவிட்டு வந்தியா? பார்த்துப் போ”அந்த டாக்ஸி டிரைவர் அவனை விசாரித்து விட்டுப் போனான்.

“கட்டுப்பாட்டை மீறித் தவறான பக்கத்தில் அதிக வேகத்தில் ஓட்டிக் கொண்டு வரும் இந்த மடையன் வீட்டில் சொல்லிவிட்டு வரவேண்டிய தில்லையாம். நான் வீட்டில் சொல்லிவிட்டு வரவேண்டுமாம்!” நாராயணன் சிரித்துக்கொண்டே நடைபாதையில் ஏறி நடந்தான்.

வலது கை தாங்காமல் ஃபைல் கட்டு, அரையில் அழுக்கேறிய நான்கு முழம் வேட்டி, மிதியடி இல்லாத கால்கள், இனிமேல் தைக்க இடமில்லை என்று கூறத்தக்க விதத்தில் அவ்வளவு தையல்களுக்கு ஆளாகிவிட்ட ஒரு கறுப்புக் கோட்டு; களையெடுக்காத பயிர் போல வாரப்படாமல் முன்நெற்றியில் வந்துவிழும் தலைமயிர் நரைத்தும் நரைக்காமலும் விகாரமாகத் தென்பட்டது.

ஆடம்பர வெள்ளம் நாகரிகக் குமிழியிட்டு ஓடும் அந்த மாபெரும் தெருவில் தன்னைப்போல ஒருவன் நடந்து செல்வதே அசிங்கமாக இருப்பதுபோல நாராயணன் மனத்தில் ஒரு பிரமை தட்டியது.

ஜவுளிக் கடைகள், பூக்கடைகள், காப்பி ஹோட்டல்கள், தெரு ஓரத்து ரிப்பன் வியாபாரிகள், பத்திரிகை விற்கும் பையன், ஒவ்வொன்றாக, ஒவ்வொருவராக, அவனைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். இல்லை, தவறு அவன்தான் அவைகளைக் கடந்து முன்னேறிக் கொண்டிருந்தான்.

ரேடியோ சங்கீதம், பஸ் கண்டக்டர்களின் விசில், பேச்சுக் குரல், வியாபாரிகளின் பேரம், தெருவெல்லாம் அமர்க்களமாகத்தான் இருந்தன, அந்த மாலை நேரத்தில்.

“மிஸ்டர் நாராயணன்!... சார் உங்களைத்தானே?”

யாரோ இரண்டு கைகளையும் தட்டிக் கூப்பிடும் ஓசை கூட்டம் நிறைந்த தெருவில் இப்படிக் கை தட்டிக் கூப்பிட்டால் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். இப்போதும் அப்படித்தான் நடந்தது.

நாராயணன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய பழைய நண்பன் அரட்டைக் கல்லி என்று பேர் எடுத்த ராகவன் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

“என்ன ராகவன்? செளக்கியமா?”

“செளக்கியத்துக்கு என்ன குறைவு?”

“எங்கே இப்படி? இந்தப் பக்கமாக...”

“சும்மாத்தான் வந்தேன்.”

“இப்போது எங்கேயாவது வேலை பார்க்கிறாயா? அல்லது சுதந்திரப் பிரஜைதானா?” இப்படிக் கேட்டுவிட்டு நாராயணன் சிரித்தான். ராகவனைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்கள் மட்டும்தான் அந்தச் சிரிப்பைச் சிரிக்க முடியும்.

“வேலையாவது ஒன்றாவது! எந்த முட்டாள் தரக் காத்துக் கொண்டிருக்கிறான் எனக்கு?”

“சரி! நான் வரட்டுமா? ஏகப்பட்ட ஃபைல்கள். இரவுக்குள் பார்த்து முடிக்க வேண்டும்.”

“நாராயணன்! ஒரு முக்கிய விஷயம்.”

“என்ன?”

“உன்னிடம் ஒரு இரண்டனா இருக்குமா? காப்பிக்கு வேண்டும்.” ராகவனுடைய குரல் தணிந்து தாழ்ந்து உலகத்திலுள்ள நைச்சிய மெல்லாம் ஒன்று சேர்ந்து வெளி வந்தது.

நாராயணனுக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. சிறிதுநேரம் பேசாமல் நின்றான். ஒரு புன்னகை பூத்தான். “ராகவன்! இன்றைக்குப் பர்ஸ் கொண்டு வர மறந்துவிட்டேன். வேண்டுமானால் வீட்டுக்கு வா, பார்க்கலாம்.” சாதுரியமாகப் புளுகியது அவன் வாய். வீட்டில் செப்பால் அடித்த சல்லிகடிடக் கிடையாதென்று அவன் மனத்துக்குத் தெரியாதா, என்ன?

“வேண்டாம், நான் இங்கேயே பார்த்துக் கொள்கிறேன். குட் பை, போய்விட்டு வா!”

அப்பாடா! நாராயணனுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது. ராகவனிடம் விடைபெற்றுக் கொண்டு நடந்தான்.

“சாமி! பூ வாங்கலியா... கொடை மல்லிகைச்சரம்...” பூக்காரிக்குப் பதில் சொல்லாமல் ஒதுங்கி நடந்தான்.

“எதை எடுத்தாலும் ஓரணா சார் எதை எடுத்தாலும் ஓரணா! ஒரே அணா!” ―நடைபாதையிலிருந்த கூட்டத்தை வகிர்ந்து கொண்டு மேலே நடந்தான் நாராயணன்.

வீட்டில் எத்தகைய வரவேற்பு காத்திருக்கும் என்பதை முன்கூட்டியே சிந்திக்கத் தொடங்கியது அவன் மனம்.

மனைவிக்கு ஜூரம். கஞ்சி போட்டுக் கொடுப்பதற்குப் பார்லி வாங்கி வருவேனென்று அவள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். குழந்தை சுசி வாய்ப்பாடு புத்தகம் வேண்டுமென்று நான்கு நாட்களாக அரித்துக் கொண்டிருக்கிறாள். பெரிய பையனுக்குப் போன மாதம் பள்ளிக்கூடச் சம்பளம் கட்டவில்லை.நாளைதான் கடைசி நாள். வக்கீலிடம் பணம் வாங்கி வருவேன் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். வீட்டு வாடகைக்காரர், அந்த மனிதருக்கு மூன்று மாதம் பாக்கி, கழுகு போல் வந்து காத்துக்கொண்டிருப்பார்.அவர் ஏசும் ஏச்சுக்களை காது கொண்டு கேட்க இயலாது. பால்காரி அவள் உயிரையே வாங்கி விடுவாள்.

‘இப்படியே காலடியில் ஒரு பர்ஸ் வந்து விழுந்தால்? அதில் ஒரு நூறு ரூபாயும் இருந்தால்...’ ― கையாலாகாதவன் மனத்தில்தான் இந்த மாதிரி ஆசை உண்டாகிறது. ‘நூறு ரூபாயாம் நூறு ரூபாய்! ―தரித்திரம் பிடித்த மனம் ஆயிரம், இலட்சம் என்று பெரிதாக நினையேன்!’ நாராயணன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

“கடவுள் அருளால் உனக்கு ஐயாயிரம் ரூபாய் கிடைத்துவிட்டதென்றால் என்ன செய்வாய்? என்று பிச்சைக்காரனிடம் ஒருவன் கேட்டானாம்.”

“தங்கத்தினால் ஒரு திருவோடுசெய்து மறுபடியும் பிச்சைக்குப்போவேன்!” என்று அந்த முட்டாள் பிச்சைக்காரன் பதில் சொன்னானாம்.

இது நாராயணனுக்கு நினைவு வந்தது. தரித்திரனின் மனம் பகற் கனவு கண்டால்கூட அதுவும் அற்பக் கனவாகவே இருக்கிறது. காலடியில் அகப்படுகிற பர்ஸில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அடிக்கவா செய்யும்?

பாழாய்ப் போன மனம் ‘நூறு’ என்று நினைக்கிறதே?

“எங்கே ஐயா? பராக்குப் பார்த்துக் கொண்டே போறே... மேலே இடிச்சுக்கிட்டு”

“ஸாரி மன்னிக்கணும்!”

நாராயணன் இனியும் யார் மேலாவது இடித்துவிடக் கூடாதே என்பதற்காகச் சுதாரிப்புடன் சென்றான்.

பால்காரன், வீட்டு வாடகைக்காரர் எல்லோரையும் ஒவ்வொருவராக சால்ஜாப்புக் கூறி அனுப்பியாகிவிட்டது. மளிகைக் கடைக்காரனைக் கெஞ்சிக் குழைந்ததின் பயனாகப் பார்லி அரிசி கடனாகக் கிடைத்தது. குழந்தை சுசியை ஒரு அதட்டுப் போட்டதில் பயந்து போய் வாய்ப்பாடு புஸ்தகம் கேட்பதையே விட்டுவிட்டாள். பெரிய பையன் விவரம் தெரிந்தவன். சந்தர்ப்பத்தைப் புரிந்து கொண்டு பேசாமல் இருந்துவிட்டான்.

நாராயணன் ஃபைல் கட்டைப் பிரித்தான்.இரவு எட்டேமுக்கால் மணி.அரிகேன் விளக்கின் மங்கிய ஒளியில் ஒவ்வொரு காகிதமாகப் புரண்டது.

பார்த்துக் கொண்டே வந்தவனுக்குத் திடீரென்று தன் கண்களை நம்பமுடியவில்லை. ஃபைல் காகிதங்களுக்கு நடுவே ஐந்தாறு புதிய நூறு ரூபாய் நோட்டுக்கள் மடித்துக் கிடந்தன. நாராயணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஃபைல் முழுவதும் வரிசையாகப் பிரித்துப் பார்த்தான். நன்கு தேடியும் அவற்றில் வேறு நோட்டுக்கள் இல்லை.

அறுநூறு ரூபாய்! எவனோ கட்சிக்காரன் கொண்டு வந்து கொடுத்ததை இரும்புப் பெட்டியில் வைப்பதற்குப் பதிலாக மறந்து போய்ப் ஃபைலுக்குள் வைத்திருக்கிறார் வக்கீல்.

நாராயணன் மனத்தில் சபலம் தட்டியது. ஃபைலை மூடி வைத்துவிட்டுத் திரும்பத் திரும்ப நோட்டுக்களை எண்ணினான். ஆறு நூறு ரூபாய் நோட்டுகளை ஒரே சமயத்தில் கையில் வைத்துப் பார்த்தபோது திடீரென்று குபேரசம்பத்துக் கிட்டியது போலிருந்தது.

குழந்தை சுசி பின்புறமாக வந்து நாற்காலியைக் கட்டிக் கொண்டு நின்றாள்.

“அப்பா திருடினால் பாவம்தானே” - அவன் நெஞ்சில் சவுக்கடி விழுந்த மாதிரி இருந்தது.

“ஏன் கண்ணு! யார் சொன்னா அப்படி உனக்கு!”

“இன்றைக்குப் பள்ளிக்கூடத்திலே பக்கத்துப் பையன் என் பென்சிலை எடுத்துக் கொண்டுவிட்டான் அப்பா!”

“ஊம்! அப்புறம்…?”

“வாத்தியாரிடம் போய்ச் சொன்னேன்! அவர் அவனைக் கூப்பிட்டுப் பிரம்பாலே அடிச்சார் அப்பா!”

“………”

“ஏம்ப்பா! ஒண்ணு கேக்கறேன், பதில் சொல்லுவியோ?”

“என்ன, கேளேன்?”

“திருடறதுன்னா என்னப்பா?”

“திருடறதுன்னா இன்னொருத்தர் பொருளை அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொள்கிறதுதான், அம்மா!”

“அப்படிச் செய்தால் சுவாமி கண்ணை அவிச்சிடுமா?”

“………”

“திருடினா சுவாமி அவிச்சிடும்னு வாத்தியார் சொன்னாரே, அப்பா!”

“சுசி! நீ சமர்த்துக் குழந்தை இல்லையா? போ… நாழியாகிறது. போய்த் தூங்கு. எனக்கு இதெல்லாம் பார்த்து எழுதணும்!”

“அப்பா அன்றைக்கு ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் வந்தானே, அவன் பொய் சொன்னானா அப்பா?”

“ஏன்?”

“இல்லேப்பா! அதனாலேதான் அவனுக்குக் கண் போச்சு!”

“சுசி! உனக்கு உதை கேட்கிறதா? நீ போய்த் தூங்கமாட்டே?”

“இதோ போய்விட்டேன், அப்பா!”

குழந்தை படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டாள். வெளியே மழை வேறு அப்போதுதான் ஆரம்பித்திருந்தது.

‘முழுசாக ஆறு பச்சை நோட்டுக்கள். எல்லாக் கடனையும் அடைத்துவிடலாம். தெய்வமே அவன் கஷ்டத்தைச் சகிக்காமல் வக்கீல் கை தவறி வைக்கும்படி செய்திருக்கிறது. இல்லையானால் மகா கருமியான அந்த வக்கீல் அன்று மட்டும் கைதவறுவானேன்?’

‘சே! என்ன இருந்தாலும் திருட்டுத்தானே? திருடிய கை உருப்படுமா? இன்றைக்கு சிறு திருட்டு, நாளைக்குப் பெரிய திருட்டு.அப்புறம் கொள்ளை கொலை, சிறைவாசம் தூக்குத் தண்டனை’ - ஒரு மனம் இடித்துக் காட்டியது.

‘எவன்தான் திருடவில்லை? சமூகத்தில் ஒவ்வொருவனும் தான் திருடுகிறான். மனித சமூகத்தில் உடல் பலவீனத்தைக் காரணமாக வைத்து டாக்டர்கள் திருடுகிறார்கள். மனம் பலவீனத்தால் வக்கீல்கள் திருடுகிறார்கள். என்னைப் போல் ஒரு ஏழை உடம்பைச் செருப்பாக்கி உழைக்கிறவன் இதைத் திருடினால் என்ன?’ என்று மற்றோர் மனம் அவனுக்குத் துணிவு ஊட்டியது.

‘வயிற்றை நிரப்பும் நாணயம் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். பரம்பரை பரம்பரையாக ரத்தத்தில் ஊறி வந்த பண்பாடு தந்த இந்த நாணயம் இழந்தால் கிட்டுமா? ஆத்மாவையே ஈடாக வைத்தாலும் கிடைக்குமா? சேசே! இந்த வெறும் நாணயத்துக்காக அந்த நாணயத்தை இழக்கலாமா?’ அவன் குழம்பினான். அவன் மனத்தைப் போலவே வெளியே இடியும் மழையும் பிரளயமாடிக் கொண்டிருந்தது இயற்கை. குழந்தைகள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தன. நோயாளியான மனைவி ‘லொக்கு லொக்’கென்று இருமிக் கொண்டிருந்தாள். விளக்கின் மங்கலான ஒளியில் குழந்தை சுசியின் முகத்தைப் பார்த்தான் நாராயணன்.

தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள் குழந்தை ‘உலகத்திலுள்ள சத்தியத்தின் ஒளி எல்லாம் இங்கே இருக்கிறது’ என்று அந்த முகத்தில் எழுதி ஒட்டியிருப்பது போல் தோன்றியது.

“அப்பா திருடறதுன்னா என்னப்பா?”

“திருடினால் கண் அவிஞ்சிடுமா?” ― மழலை மாறாத குரல் இன்னும் நாராயணன் காதுகளை விட்டு நீங்கவில்லை. அவன் யோசித்தான் ― யோசனைக்குப் பின் வேகமாக எழுந்து வாயிற்கதவைத் திறந்தான்.

“இந்த இருட்டிலும் மழையிலும் நீங்கள் எங்கே கிளம்பிவிட்டீர்கள்?” என்று அவன் மனைவி வியப்புடன் கேட்டாள்.

“ஒன்றுமில்லை! இதோ வந்துவிடுகிறேன்? நீ தூங்கு!” என்று நாராயணன் தெருவில் இறங்கி மழையில் நனைந்து கொண்டே ஓடினான். மணிக்கூண்டில் பதினொன்று அடித்தது. மழை ஓசையில் அதன் ஓசை அடங்கி அமுங்கிப் போய்விட்டது.

“சார், சார் கதவைத் திறவுங்கள்!”

வக்கீல் வீட்டில் எல்லோரும் விளக்கை அணைத்துப் படுக்கைக்குச் சென்றுவிட்டனர்.

நாராயணன் கதவை மறுபடியும் தட்டினான்.“சார்! அவசரம்!”

கதவைத் தட்டும் ஓசை வீடு முழுவதும் எதிரொலித்தது. இப்படிப் பல முறை தட்டிய பிறகு வக்கீல் முணுமுணுத்துக் கொண்டே எழுந்து வந்தார்.

“யாரையா இது? நடு ராத்திரியில் வந்து உயிரை வாங்குகிறது? தூங்கவிடமாட்டீர்களா?” என்று வக்கீல் கதவைத் திறந்தார்.

“நான்தான் குமாஸ்தா நாராயணன், சார்” என்று இழுத்தான்.

“என்ன ஐயா தலை போகிற காரியம்? இந்த அர்த்த ராத்திரியில்?”

“நீங்கள் கொடுத்த ஃபைல் கட்டில் இந்த அறுநூறு ரூபாய் இருந்தது. கைதவறி அதில் வைத்துவிட்டீர்கள் போலிருக்கிறது. அதை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்.”

வக்கீல் நனைந்து போயிருந்த நோட்டுகளை கையில் வாங்கிக் கொண்டார். நன்றி கூடச் சொல்லவில்லை. வந்தவன் சொட்டச் சொட்ட நனைந்து போயிருப்பதையும் கவனிக்கவில்லை.

“என்ன ஓய், சுத்த அசட்டு மனிதராக இருக்கிறீரே! காலையில் கொண்டு வந்து கொடுத்தால் குடி முழுகியா போய்விடும்! தூக்கத்தைக் கெடுத்துவிட்டீரே!” என்று அலுத்துக் கொண்டே கதவைச் சாத்தினார் அவனுடைய எஜமானர்.

‘என் மாதிரி அசடர்களுக்காகத்தான் இந்த உலகத்தில் மழை பெய்கிறது; வெய்யில் அடிக்கிறது; பயிர் விளைகிறது; காற்று வீசுகிறது’ என்று நினைத்துக் கர்வப்பட்டுக் கொண்டே நடந்தான் அந்தக் குமஸ்தா.

இந்த வறட்டுக் கர்வத்தைத் தவிர அவனுக்கு வேறென்ன மிச்சமிருக்கப் போகிறது? அங்கே அந்தக் கர்வக்காரனின் வீடு மழைக்கு ஒழுகித் தெப்பமாகிக் கொண்டிருந்தது. நாணயத்தைக் காப்பாற்றிவிட்ட பெருமையில் சத்தியத்தின் பிரதிநிதியாய் இறுமாந்து நடந்து கொண்டிருந்தான் அவன்!

(கல்கி, 8.9.1957)