நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/பச்சைக் குழந்தைகள்
49. பச்சைக் குழந்தைகள்
“வாங்கிக் கொண்டு வந்த விறகு அத்தனையும் ஈரம். கண் அவிகிறது. சோறு அவிய மாட்டேன் என்கிறது. வேறு ஏதாவது வழி செய்யுங்கள். இல்லாவிட்டால் ஓட்டலில் சாப்பிட்டு விட்டுப் புறப்படுங்கள்.”
“சந்திரமதி பச்சை வாழை மட்டையை வைத்து எரித்தாளாமே! கேவலம் ஈர விறகை எரிக்கக்கூட…”
என் வேடிக்கை அவளுக்குப் பிடிக்கவில்லை. முகத்தைச் சுளித்தாள். “நீங்கள் ஒன்றும் அரிச்சந்திரன் இல்லை. நானும் சந்திரமதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. வாங்கிப் போடத் தெரியா விட்டாலும் வாய் இருக்கிறது.”
“பொறு, தாயே! போர் முரசு கொட்டாதே. இதோ உனக்கு வழி செய்கிறேன்” என்று மேலே பரணில் ஏணியைச் சாத்தினேன். நாற்காலியின் ஒடிந்த 'கைகள்’, தட்டு முட்டு மரச் சாமான்கள், பார்சல் வந்த சாதிக்காய்ப் பெட்டி உடைசல்கள்- போன்றவை பரணில் குவிந்து கிடக்கின்றன. இந்த மாதிரி அவசர நேரத்துக்கு விறகாகப் பயன்படுவதைத் தவிர அவற்றுக்கு வேறு என்ன நல்ல உபயோகம் இருக்க முடியும்?
“எங்கள் வீட்டைஎன்னவென்று நினைத்தாய்? எந்த அவசரத் தேவைக்கும் இங்கே சாமான் அகப்படும். இந்தப் பரண் இருக்கிறதே இது ஒரு பெரிய பொக்கிஷம் மாதிரி. பல் தேய்ந்து போன தேங்காய்த் துருவியிலிருந்து, நான் படித்துக் கிழித்த ஆக்ஸ்போர்ட்டு ‘அட்லாஸ்’ வரையில் எல்லாம் இதற்குள் அடக்கமாக்கும்” என்று பெருமிதத்துடன் கூறிக் கொண்டே அன்றைய அடுப்புக்குப் போதுமான விறகைக் கீழே தள்ளினேன்.
‘இரண்டு மூன்று நாற்காலிக் கைகள், ஒரு சாதிக்காய்ப் பெட்டி உடைசல்’ இவைதான் அன்றைய விறகுக்கு அகப்பட்டவை.
“இன்னும் கொஞ்ச நாட்கள் காரியம் பார்த்து இப்படி அடுப்பில் அவிந்தால், என்னையும் அந்தப் பரணில் தூக்கிப் போட வேண்டியதுதான்” என்று அலுத்தபடியே அந்த அவசர விறகை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் துணைவி.
பரணிலிருந்து கீழே இறங்கு முன் காலில் ஏதோ இடறியது. ஒற்றைக் கை ஒடிந்த பழைய மரப்பாச்சி. மூக்கு முழி தேய்ந்த பழுக்காப் பொம்மை.
காலில் இடறி ஏணிக்குப் பக்கத்தில், கீழே விழுந்தது மரப்பாச்சி. அந்த மரப்பாச்சியோடு என் மனமும் கீழே போய் விழுந்தது. வீடு, அடுப்புப் புகை, அப்போதைய சூழ்நிலை எல்லாம் மறக்கத் தொடங்குகிறது. அப்படியே பரணில் ஒரு காலும் ஏணியில் ஒரு காலுமாக உட்கார்ந்துவிடுகிறேன். அந்த மரப்பாச்சியைப் போலவே உருத் தெரியாமல் மனத்தினுள் ஒடிந்தும் தேய்ந்தும் மூளியாகிப் போயிருந்த மொட்டைநினைவுகள் தளிர்க்கின்றன. நான் என்னுடைய புலன்களோடு நத்தைபோல் என்னுள்ளேயே ஒடுங்குகிறேன். என்னுள் ஏதோ மணக்கிறது. என்னுள் ஏதோ தவிக்கிறது. என்னுள் எதையோ உணர்கிறேன். தண்ணீர்ப் பரப்பில் கோடு கோடாய்க் கோலம் கோலமாய் இழுத்து வரைந்து வரைந்த வேகத்தில் அழிக்கும் நீர்ப்பூச்சி போல் என் மனம் அழிவின் கோடுகளை, அழியும் கோடுகளை இழுக்கிறது. அழித்த கோடுகளை அதே இடத்தில் மறுபடியும் போட்டுப் பார்க்கும் ஆசை எனக்கு உண்டாகிறது. ஏன் உண்டாகிறதோ?
பொய்களை அடுக்கடுக்காகத் தொடுத்து வைத்த தொடுப்புக்குத்தான் வாழ்க்கை என்று பேரோ? நேற்றும், இதற்கு முன் தினமும், நடந்தனவெல்லாம் இன்று பொய்கள் தாமா? இல்லாவிட்டால் அந்தப் பழைய நாட்களை இத்தனை காலத்துக்கு இப்படி மறந்திருப்பேனா?
‘மாயா' இன்று எங்கு எந்தக் கிருகத்துக்கு இலட்சுமியாக விளங்கிக் கொண்டிருக்கிறாளோ? அவள் எந்தக் கிருகத்திலிருந்தாலும் இலட்சுமியாக இருப்பாள்.அவள் இருக்கிற கிருகத்தில் இலட்சுமிகரம் பொங்கி வழியும்.செளந்தரியம் கதிர் பரப்பிக் கொண்டிருக்கும். 'மாயா' என்று என்ன காரணத்துக்காக, என்ன அர்த்தத்துக்காக அவளுடைய பெற்றோர்கள் அவளுக்குப் புதுவிதமாகப் பெயர் சூட்டினார்களோ?
என்னுடைய வாழ்வில் அவள் மாயையாய்த் தான் விளையாடி விட்டுப் போயிருக்கிறாள். அவளே ஒரு பெரிய மாயைதான். உலகத்திலேயே மாயைக்குத்தான் அதிக அழகும், அதிகக் கவர்ச்சியும் உண்டென்று வேதாந்திகள் சொல்லுகிறார்களே, அது பொய்யன்று.
மாயாவின் முகம், மாயாவின் கொள்ளையழகு, குலவி நிற்கும் கோல விழிகள், மாயாவின் சிரிப்பு, மாயாவின் எழில் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு மாயம் இருக்கத்தான் செய்தது. ஒரு பெரிய காவியத்தின் நாயகியாகத் துலங்க வேண்டிய அழகு அந்த ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத் தேடிக் கொண்டு வந்து குடியிருந்தது.
பொன் நிறமும், மஞ்சள் நிறமும் கலந்து இணைந்தாற் போலக் கண்ணில் பளீரென்று படுகிற மாதிரியில் சண்பகப் பூக்களுக்கு ஒர் அபூர்வ நிறம் வாய்த்திருக்குமே; அப்படி நிறம் மாயாவுக்கு. அவளுடைய சுட்டுவிரலை மட்டும் தனியே நீட்டச் சொல்லிப் பார்த்தால் சண்பகப் பூவைச் சுருக்கம் படாமல் சுருட்டின மாதிரி இருக்கும்.
வெண்சங்குக் கழுத்தில் கறுப்புப் பட்டுக் கயிற்றில் முடிச்சு முடிச்சாகப் போட்டு ஏதோ இரட்சைக் கயிறு என்று கட்டிக் கொண்டிருப்பாள். கோடி கோடிப் பொற் சங்கிலிகளும், காசு மாலைகளும், நெக்லெஸ்களும், போட்டாற் கூட என் ‘மாயா'வின் கழுத்துக்கு அத்தனை அழகு கிட்டாது. முத்துமுத்தாக முடிச்சிட்ட அந்த ஒரே ஒரு கறுப்புக்கயிறு வெண்சிவப்புக் கழுத்துக்கு இணையிலாப் பேரெழில் கூட்டிக் காட்டும் வண்ணம் பெண்ணாய்ப் பேரமுதாய்ப் பெருங்கனவாய் வந்து நிற்பாள் அவள்.
உலகத்தில் எல்லாப் பெண்களுக்கும் விதவிதமாக நிறம் நிறமாகக் கண்ணாடி வளையல்கள் கிடைக்குமென்றால் மாயாவின் கைகளுக்கென்று எங்கிருந்தோ அந்தக் கரிவளையல்கள் கிடைக்கும். ஒரு வேளை அந்த எளிய கரிவளையல்களினால் தான் அவளுடைய கைகளில் அரிய அழகு உண்டாகித் தோன்றிக் கொண்டிருந்ததோ? ஜோடி மூன்று ரூபாய்க்கு மலிவாகக் கிடைக்கக்கூடிய கல் வெள்ளிக் கொலுசுகளை அணிந்திருப்பாள் பாதங்களில், தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல் அத்தனை ஒழுங்காக அத்தனை சுகமாக அவளுக்கென்று வாய்த்த பாதங்கள் போலும் அவை!
மலைச்சரிவுகளில் அருவி இறங்குகிறமாதிரி ஒரு பக்கமாக அசைந்தசைந்து தென்றல் கொஞ்சிக் கொண்டு வருகிறாற்போல் நடப்பாள் மாயா. அவள் அருகில் இருக்கிறபோது அவளைத் தவிர வேறெதன் மேலும் கவனம் செலுத்திப் பார்க்கவிடாமல் பண்ணிவிடுகிற எழிலைக் கொண்டிருந்தவள் மாயா.
இதோ இந்த வீட்டின் மேல் வீட்டு வாசலில் அந்த வேப்ப மரத்தின் அடியில் சொப்புகளும் கையுமாகப் பாவாடை கட்டின சிறுமியாக வந்து நின்றுகொண்டு 'அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாம்' என்று இந்த விநாடிகூட அழைத்துக் கொண்டிருப்பதுபோல் ஒரு பிரமை உண்டாகிறதே எனக்கு. தீப்பெட்டிப் படம், உடைந்த சாக்கட்டி, சிலேட்டுக்குச்சி இவைகளைச் சேர்த்துப் பெருமையடித்துக் கொள்வதில்தான்.அந்த நாளில் எனக்கும், அவளுக்கும் எவ்வளவு போட்டி உண்டாகும்?
பொல்லென்று மல்லிகை அரும்புகள் ஒவ்வொன்றாக மலர்ந்து தாமே சரம் கோத்துக் கொண்ட மாதிரி இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒர் அழகோடு சிரிப்பாள் மாயா.மின்சார விளக்கேற்றிக் கொள்கிற விரைவு அந்தச் சிரிப்பு உண்டாகி மறைகிற அவசரத்துக்குச் சரியான உதாரணமாக இருக்கலாம். சரிதானே?
மேலப்பக்கத்து வீட்டில் ஏழு குடித்தனங்களுக்கு நடுவில் ஒர் அறைக்கு வாடகை கொடுத்துக் கொண்டு கஷ்டஜீவனம் நடத்தி வந்தாள் மாயாவின் தாய். ஏதோ சுண்டல், முறுக்கு விற்று வருகிற காசில் வயிறு கழுவ முடிந்தது. அப்பளம் இட்டு விற்பதும் உண்டு. மாயாவுக்கு இரண்டு தங்கைகள், கிழட்டுத்தாய் மூன்று பெண்களையும் வைத்துக் கொண்டு நகர வாசம் செய்வதில் எத்தனை சிரமங்கள் இருக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதேயில்லை. மாயா குடியிருந்த மேற்புறத்து ஸ்டோர் வாசலில் அந்த வேப்பமரத்தடியில்தான் எங்கள் உறவு தளிர்த்தது. வளர்ந்தது, தளர்ந்தது, வாடிற்று. ஆனால் அந்த வேப்பமரம் இன்னும் வாடாமல் தளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மரத்தின் கீழே மண்பரப்பில் 'அப்பா அம்மா விளையாட்டுக்காக' மாயா தோண்டிய அடுப்பு, கிணறு எல்லாம் வடுக்களாகத் தங்கி இருக்கும். மண் எந்த வடுக்களையும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் மனத்தினால் அப்படி நினைவு வைத்துக் கொள்ளாமல் இருக்க முடிவதில்லையே!குன்றிமணியின் கறுப்புப்போல் வலது கன்னத்தில் புள்ளியாய் வட்டமாய் ஒரு கருப்பு மச்சம் உண்டு மாயாவுக்கு. அவள் சிரிக்கிறபோது அந்த மச்சத்துக்கு எங்கிருந்தோ தனி அழகு வந்துவிடும்.
“ஏண்டா ராஜு! எதுக்குடா இப்பிடி முழுங்கிடறாப் போல என் முகத்தையே பார்க்கிறே? உனக்கு வெட்கமா இல்லையோடா? பெண்டு செட்டி மாதிரி என்னையே எப்பவும் சுத்திண்டிருக்கையே?’ என்று கேலி செய்வாள் மாயா.
“பெண்டு செட்டின்னா என்னடிமாயா? சொல்லேன்” என்று மடக்குவேன் நான்.
“போடா நீ ஒத்தன்! எனக்கு அதெல்லாம் சொல்ல வராது. பெரியவங்க இப்பிடிப் பேசிப்பாங்க கேட்டிருக்கிறேன். அதான் நானும் சொன்னேன்.”
"நீதானடி சொன்னே விளையாட்டிலே நீஅகத்துக்காரி,நான் அகத்துக்காரர்னு?”
"அதுக்காக”
“அகத்துக்காரர்னா அகத்துக்காரி முகத்தைத்தானே பார்க்கணும்?”
“போடா விளையாட்டுக்காக ஒரு இதுக்கு அப்டி வச்சிண்டா, அதுக்காக இப்படித்தான் என்னையே சும்மா பார்த்திண்டிருக்கனுமாக்கும்?”
"நீ ரொம்ப அழகாயிருக்கேடி மாயா! அதனாலேதான் உன்னையே பார்த்திண்டிருக்கேன்”
“நீ கூடத்தான் ரொம்ப அழகாயிருக்கேடா. அதுக்காக நான் உன்னையேவா பார்த்திண்டிருக்கேன்” .
"நான் அப்படித்தான் உன்னைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்."
"நன்னாப்பார்த்துக்கோ.எனக்கென்ன? வவ்வவ்வே.” என்று முகத்தைக் கோணிக் கொண்டு அழகு காட்டுவாள் மாயா.
“இப்படி அழகு காட்டினா நாளையிலேருந்து அப்பா அம்மா விளையாட்டில் நான் அப்பாவா இருக்கமாட்டேண்டி பப்ளிமாஸ் மூஞ்சியும் சோழிப்பல்லுமா இருக்கானே அந்தக் குண்டுராமு, அவனைத்தான் நீ அகத்துக்காரனாவைச்சுக்கணும். நான் உன்னோட விளையாடவே வரமாட்டேன்.”
“வேண்டாண்டா, நீ என்ன வேணாச் சொல்லு பொறுத்துக்கிறேண்டா ராஜு. நீதான் எனக்கு அகத்துக்காரனா இருக்கணும், எத்தனை நாள் விளையாடினாலும் நீதான். எவ்வளவு நாழி வேணுமானாலும் நீ என் மூஞ்சியைப் பார்த்திண்டிரு. நான் உன்னை ஒண்ணும் சொல்லலை” என்று கெஞ்சுவாள் மாயா. அப்படிக் கெஞ்சுகிறபோது அந்தக் கரிவளையல்கள் குலுங்கும் கைகளால் என் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுவாள். பாதி விளையாட்டில் நான் கைவிட்டு ஓடிவிடுவேனோ என்று அவளுக்குப் பயம். ஆனால் இன்று நினைக்கும்போது தெரிகிறது; அவள்தான் இந்த விளையாட்டைப் பாதியில் விட்டு ஒடிவிட்டாள்.அவள்தான் இந்தக் கனவைப் பாதியில் கலைத்துவிட்டு ஒடிப் போய்விட்டாள்! ஆம்! அவளேதான் கலைத்துவிட்டாள்.
குஞ்சும், குளுவானுமாக, விளையாட்டுக்கு வருகிற தெருக் குழந்தைகளையெல்லாம் எங்களுக்குக் குழந்தைகளாக்கிக் கொண்டு அவள் மனைவியாகவும், நான் கணவனாகவும், அப்பா, அம்மா விளையாட்டு விளையாடிய நாட்கள்தான் கணக்கில் அடங்குமா? வேப்ப மரத்தடியில் விளையாட்டுக்காகக் கூடும் குழந்தைகளுள் பெண்ணில் பெரியவள் மாயா. ஆணில் பெரியவர்கள் நானும், பப்ளிமாஸ் மூஞ்சிக் குண்டு ராமுவும்.
விளையாட்டுக்கு ‘மாயா' தான் சர்வாதிகாரி. அவள் அங்கே ஒரு நாளாவது விளையாட்டில் தன்னைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கவில்லையே என்று குண்டு ராமுவுக்கு ஒரே ஆத்திரம்.குறுகுறுவென்று அலைபாயும் கண்களும், சிரிப்பும், நிறமும், அழகுமாக உலா வரும் மாயாவுக்குக் கணவனாக விளையாட்டிலாவது இருந்து பார்த்துவிட வேண்டுமென்று பப்ளிமாஸ் பயலுக்கு ஆசை.
“டேய் ராஜு! நீ மனசு வைச்சால் முடியும்டா, தினம் தினம் விளையாட்டிலே நீயே அப்பாவா வறியே, ஒரு நாளாவது நான் வரவிடப்படாதா?’ என்று பப்ளிமாஸ் என்னிடம் வந்து கெஞ்சினான். “அதுக்கு நான் என்னடா பண்றது? மாயாவுக்கு உன் மூஞ்சியைக் கண்டாலே பிடிக்கலையேடா, நீ கொஞ்சம் அழகாகப் பிறந்து தொலைச்சிருக்கப்படாதோ?” என்றேன்.
பப்ளிமாஸ் அழுதுவிட்டான். குண்டு மூஞ்சியின் கன்னங்களும், உதடும், ஏறி ஏறி இறங்கி விக்கி அழுதான். இந்த விஷயமாக அவன் மனத்தில் இத்தனை ஏக்கம் சேர்ந்து கனத்துப் போயிருக்குமென்று நான் நினைத்திருக்கவில்லை. எனக்கே அவன்மேல் இரக்கம் உண்டாகிவிட்டது.
“டேய்! லூஸ் மாதிரி அழாதே. அழுதால் எனக்குப் பிடிக்காது. உனக்காக நான் என்ன செய்யணும்கிறதை மட்டும் சொல்லிடு செய்துடறேன்.”
பப்ளிமாஸ் அழுவதை நிறுத்தினான். கண்களைத் துடைத்துக் கொண்டான். சோழிப் பல்லைக் காட்டினான். பயலுக்குச் சிரிப்பதாகத்தான் நினைப்பு. மகா கோரமாக இருந்தது. “நீ நாளைக்கு விளையாட்டுக்கு வரப்பிடாது. நீ வராமே இருந்துட்டால் எனக்குத்தான் "சான்ஸ் அடிக்கும்.”
"அவ்வளவுதானேடா?”
“அவ்வளவுதாண்டா, ராஜு:”
“சரிடா நான் நாளைக்கு வரலை நீயே அப்பாவாக இருந்து தொலை”
"இந்த உபகாரத்தை என்னிக்குமே மறக்கமாட்டேண்டா” என்று பப்ளிமாஸ் நன்றி சொல்லிவிட்டுப் போனான்.அவனுக்கு வாக்குக் கொடுத்தபடியே மறுநாள் நான் வேப்பமரத்தடி விளையாட்டுக்குப் போகவில்லை. பாப்பா மலர்ப் பத்திரிகை எடுத்து வைத்துக் கொண்டு ரொம்ப அக்கறையாகக் கதை படிக்கிறவனைப்போல் வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டுவிட்டேன். ஆனால் என்னுடைய மனம் என்னவோ வேப்ப மரத்தடியிலேயே இருந்தது. ‘இன்று பப்ளிமாஸை அகத்துக்காரனாக வைத்துக்கொண்டு மாயா எப்படித் திணறப் போகிறாள்?’ என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன்.அதே சமயத்தில் என்னுடைய உரிமையை அந்தப் பயலுக்கு விட்டுக் கொடுத்ததற்காக வருத்தமும் என் மனத்தில் உண்டாகிக் கொண்டிருந்தது.‘மாயாவின் தங்க நிறக் கைகளைப் பிடித்துக்கொண்டு பெண்டாட்டி உரிமை கொண்டாடி விளையாடுவதற்கு இந்தக் கரித்தடியனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவனை அவளுக்குப் பக்கத்தில் நிறுத்தினால் அவளுடைய அழகுக்குத் திருஷ்டிப் பொம்மை நிறுத்தி வைத்த மாதிரி அல்லவா இருக்கும் என்னவோ, அழுது உபத்திரவம் செய்தானே' என்பதற்காகப் போனால் போகிறதென்று விட்டுக் கொடுத்தேன். இனிமேல் இந்தப் பயலுக்கு இப்படி இரக்கப்படக்கூடாது' என்று தவிப்போடு நான் உட்கார்ந்திருந்தபோது புயல்போலச் சீறிக் கொண்டு மாயாவே வந்து விட்டாள். அவள் எழில் நயனங்களில் நீர் கோத்திருந்தது. முகம் சிவந்திருந்தது. ரோஜாமொட்டுக்கள் காற்றில் படபடப்பதைப் போலச் சிவந்த உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றிக் கொண்டு விறைப்பாக எனக்கு முன் நின்றாள். நான் செய்த தப்பிதம் என்னவென்று புரியாமலும், ஆனால் ஏதோ தப்புச் செய்துவிட்டதாகவும் உணர்ந்து மெல்லத் தலையைத் தாழ்த்திக் கொண்டேன். வெண்தாமரை இதழ்போல் நீண்டகன்ற வெள்ளை விழியில் கறுப்புத் திராட்சை உருள்வதுபோல் கருவிழி புரள அவள் இமையாமல் பார்த்த பார்வையில் நான் பயந்துவிட்டேன்.
“முழிக்கிறதைப் பார். ஆடு திருடின கள்ளன் மாதிரி. நான் இன்னிக்கோடே விளையாட்டை நிறுத்திடப் போறேன்.”
“ஏனாம்?”
"ஏன்னா கேட்கிறே! கேட்பே, கேட்பே. ஏன் கேட்கமாட்டே? உன்னை என்னமோன்னு நினைச்சிண்டிருந்தேன். நீ பெரிய திருட்டுத் தடியன்.” சொற்கள் உடைந்து அழுகையாய்ப் பொங்கிற்று. நெஞ்சு விம்ம உள்ளம் பொரும நின்றாள் மாயா.
"மாயா! தெரியாத்தனமாக இப்படிச் செஞ்சிட்டேண்டி என்னை மன்னிச்சிடுடி அந்தப் பப்ளிமாஸ் வந்து அழுது ஆகாத்தியம் பண்ணித்து, பரிதாபமாக இருந்தது. அசட்டுத்தனமாச் சரின்னுட்டேன். இனிமே எப்பவும் இப்படிச் செய்யமாட்டேண்டி கடவுள் சத்தியமாச் சொல்றேன். உன் கையை நீட்டுடி அதுமேலே அடிச்சுச் சத்தியம் வேணுமானாலும் பண்ணிடறேன்.”
விசுக்கென்று கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் மாயா. அப்பப்பா! அந்தப் பேதை பருவத்துச் சிறுமிக்குக் கோபதாபங்கள் எத்தனை கவர்ச்சியாயிருந்தன!இன்னிக்கு ராஜு விளையாட்டுக்கு வரமாட்டான். நான்தான்.அப்பா. நீதான் அம்மா'ன்னு அந்தக் கரிமூஞ்சி அசத்து வந்த பல்லை இளிச்சிண்டு நின்னுது. 'நீதான் அப்பாவா? அப்படியானால் இந்தா, இதை வாங்கிக் கோ'ன்னு பளீர்னு ஒண்ணு விட்டேன் கன்னத்திலே பப்ளிமாஸ் மூஞ்சி ஒரு பக்கத்திலே வீங்கிட்டுதுடா ராஜு!”
“நெஜமாவா? நீ எதுக்குடி அவனை அடிச்சே?” என்று கேட்டேன்.
“தப்புத்தாண்டா. அவனை விட்டுப்பிட்டு இப்படிச் செஞ்சதுக்காக இங்கே வந்து உன்னை அடிச்சிருக்கணும்.” நீ பெரிய வாய்க் கொழுப்புக்காரிடீ மாயா!
'நீ மட்டும் இலேசுப்பட்டவனோ? கல்லுளி மங்கனா இருக்கிறது. திடீர்னு இந்த மாதிரித் தத்துப்பித்தென்று ஏதாவது பண்ணி வைக்கிறது. நான் உன்னோட 'டூ’ விட்டுட்டுப் போகலாம்னு தான் இப்ப வந்திருக்கேன்”
“வேண்டாண்டி! இந்த ஒரு தடவை மன்னிச்சுப்பிடு, உன் காலைப் பிடிச்சுக் கேட்டுக்கிறேன்.”
திண்ணையிலிருந்து கீழே குதித்து அவள் காலைப் பிடித்து விட்டேன்.
“சீ. அசடு எழுந்திருடா, யாராவது பார்த்தாச் சிரிக்கப் போறா. அகத்துக்காரி காலை யாராவது பிடிப்பாளோ? பைத்தியம்டா நீ. காலை விடுடா, பெரிய வம்பாப் போச்சு உன்னோடே நான் டூ விடலை சேர்த்திதான். காலை விட்டுடு”
“பட்டுப்போல உன் கால் எப்பிடிடீ இத்தனை அழகாயிருக்கு?”
“பொம்மனாட்டி காலோ இல்லியோ, அப்பிடித்தான் இருக்கும்! உன்னை மாதிரியா அவுத்துவிட்ட கழுதையைப் போல ஊரெல்லாம் சுத்தறேன் நான்? வீட்டோட இருக்கேன். அலையறதில்லை. அதான் கால் இப்படி அழகா இருக்கு”.
"வாயை அடக்குடி ரொம்பத்தான் அதிகமாகப் பேசிண்டு போகாதே!'
"இவர் பெரிய ராஜா இல்லியோ? இவரை ரொம்பப் பேசப்படாது.”
"நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் ராஜாதாண்டி’'.
"அப்படியானால் நான் ராணி தாண்டா.
“ஏ ராணியம்மா!”
"ஒய் ராஜா சாகப்!”
“வவ் வேவ்வே!”
“வவ்வவ்வே!”.
“நான் வரேண்டா இன்னிக்கு விளையாட்டு இல்லே. 'சரியான அப்பா, இல்லை. அதனால் விளையாட்டுக் கிடையாது’ன்னு சொல்லி எல்லாக் குழந்தைகளையும் திருப்பி அனுப்பிச்சுட்டேன். நாளைக்காவது வந்துடு. நீ அப்பாவா வந்தால் தான் நான் அம்மா. இல்லாட்டா இல்லை. நாளைக்கும் அந்தப் 'பப்ளிமாஸை' அனுப்பிச்சியோ நேரே இங்கே வந்து உன் கன்னத்தைத் திருகிப்பிடுவேன்.”
"திருகினா என் கை ஒண்ணும் புளியங்காய் பறிக்கப் போயிருக்காதுடீ அம்மா!”
"நீயும் பதிலுக்கு என் கன்னத்தைத் திருகுவியோ?”
"ஆமாம்”
"திருகுவே! திருகுவே!"
"திருகுகிறேனா இல்லையான்னுதான் பாரேன்!
“பார்க்கலாம்!”
மாயா வீட்டுக்குப் போய்விட்டாள். நான் மறுபடியும் பாப்பா மலரில் ‘சுண்டெலிக் கதை' படிக்க ஆரம்பித்தேன்.
சைக்கிள் டயர் பஞ்சர் ஆன மாதிரி 'மூஸ் மூஸ்' என்று விசும்பிக் கொண்டே பப்ளிமாஸ் வந்து சேர்ந்தான்.
“என்னடாது? அப்பம் மாதிரி ஒத்தக் கன்னம் மட்டும் வீங்கியிருக்கு? அப்பா அம்மா விளையாட்டிலே சமையல் பண்றபோது மாயா இன்னிக்கு அப்பம் பண்ணிக் கொடுத்தாளாக்கும்?” என்று சிரித்துக் கொண்டே ஒன்றும் தெரியாதவன்போல் கேட்டேன்.
“போடா உனக்கு எப்பவும் வேடிக்கைதான். மாயா அடிச்சுட்டாடா ராஜு! 'ராஜுதான் இன்னிக்கு என்னை அப்பாவா இருக்கச்சொல்லி அனுப்பினான்'னுேகூடச் சொல்லிப் பார்த்தேண்டா. அவள் கேக்கலைடா. 'ஒரு அகத்துக்காரிக்கு ஒரு அகத்துக்காரர்தான் இருக்க முடியும்னு அந்த ராஜு கிட்டப் போய்ச் சொல்லுடா'ன்னு பலமா அறைஞ்சுட்டா'.'
"அப்புறம்”
“போடா! நான் அடிபட்டு வந்து நிக்கறேன். உனக்குக் கதை கேட்கிற மாதிரி இருக்கு வேணும்னு நீயே அடிக்கச் சொன்னாலும் சொல்லியிருப்பே!
“சே! சே! அப்படியெல்லாம் இல்லைடா குண்டு! உன்னை நான் அப்படிச் செய்வேனா? கட்டாயம் இன்னொரு நாள் உன்னை அப்பாவாக்கிடறேன். இன்னிக்கு நீ போயிட்டு வா”
குண்டு பப்ளிமாஸ் விசும்பிக் கொண்டே நகர்ந்தான். இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முடியாமல் சிரித்தேன் நான்.
‘விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சலம் மாதிரி உனக்கு மாயா வேணுமாடா தடி ராஸ்கல்! வீட்டுக்குப் போய்க் கண்ணாடியிலே உன் முகத்தைப் பார்த்துக்கோடா, அப்போ தெரியும் உன் அழகு!'
மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன்.ஒரு நாள் இராத்திரி ஏழு மணி இருக்கும். மழை தூறிக் கொண்டிருந்தது. அமாவாசை இருட்டு. நான் வாசல் திண்ணையில் உட்கார்ந்து சிலேட்டுப் பலகையில் பாடம் எழுதிக் கொண்டிருந்தேன்."உஷ் என்று திண்ணைக்குக் கீழே இருட்டிலிருந்து பழக்கமான குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். “உஷ்- உன்னைத்தாண்டா ராஜு" சத்தம் போடாமல் என் பின்னோட வா.சொல்றேன்” என்று மாயா தலையை நீட்டிக் கூப்பிட்டாள்.
“இந்த மழையிலே எங்கேடி கூப்பிடறே? பாடம் எழுதிக் காண்பிக்காட்டா அப்பா தேலை உரிச்சிடுவேன்னு சொல்லிவிட்டுப் போயிருக்காரேடி!'
“எல்லாம் பெரிய பாடம்தான், தெரியும் அப்புறம் எழுதிக்கலாம்; முதல்லே எழுந்திருந்து வாடா!
அவள் கெஞ்சிக் கொண்டு சொல்லும்போதே எதையும் மறுக்க முடிவதில்லை. என்னவோ வசியம் பண்ணி, ஏதோ சொக்குப்பொடி போட்டு என்னை அப்படித்தன் கைப்பாவையாகப் பழக்கி வைத்திருந்தாள் அந்த மாயாக் கடன்காரி. அவள் என்னை ரொம்பப் பிரியத்தோடு கடிந்து கொள்கிற வார்த்தை, அட, தடிக்கடன்காரா!' என்பதுதான். நான் அவளைப் பிரியமாக அழைத்துக் கடிந்து கொள்கிற வார்த்தை கடன்காரி என்பதுதான்! 'உண்மையில் யார் யாருக்கு எந்த விதத்திலும் எவ்வளவு "கடன்பட்டிருந்தோம்' என்பது அந்த வாலை வயதில் எங்களுக்குத் தெரியாது.
எதற்காகக் கூப்பிட்டாளோ என்று அந்த இருட்டில் அவளோடு போய்ப் பார்த்தால் வேப்ப மரத்தடி வரை இழுத்துக் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு, ‘ராஜூ! இன்னிக்கு விற்கிறதுக்காகப் போட்ட முறுக்கிலே நாலு மிஞ்சிடுத்துடா, அதுலே ஒண்ணை' 'நீ சாப்பிடுடீ'ன்னு அம்மா எங்கிட்டே கொடுத்துட்டா. அதை நாம் ரெண்டு பேருமா சேர்ந்து சாப்பிட்டுடலாம்” என்றாள்.
“ஏண்டி! இதுக்காகவா இவ்வளவு தூரம் இந்த இருட்டிலே என்னை இழுத்தடிச்சே முறுக்குத் தந்தால் அதை நீயே சாப்பிடப் படாதோ? அந்த இத்தனூண்டு முறுக்கிலே எனக்குப் பங்கு தராட்டா என்ன குடிமுழுகிப்போயிடும்? நீ அசடுடீ"
"நீதான் அசடன்! இதைப் பாவாடையிலே மூடிக் காக்காக் கடி கடிச்சி இரண்டாக்கித் தாரேன். நீ பாதி எடுத்துக்க?
“ஐயய்யோ! எச்சில் இல்லியோ?”
“போடா முட்டாள் காக்காக் கடிக்கு ஒண்ணும் எச்சில் கிடையாது. வேணும்னா நீயே கடிச்சு ரெண்டாக்கிக் கொடு. நான் சாப்பிடறேன்.”
“வேண்டாம்டீ! நீயே கடிச்சுத் தந்துடு நான் பாதி எடுத்துக்கறேன்.”
"கடக் கடக்...”
"மெல்லடி பல்லை உடைச்சிக்காதே!."“முறுக்கு ரொம்ப நன்னாயிருக்குடி!”
***
இப்படி எத்தனை பசுமைச் சம்பவங்கள்! ஒன்றா இரண்டா எண்ணிச் சொல்வதற்கு?
கடைசியில் இந்தச் சம்பவங்களுக்கு ஒரு முடிவு காலமும் வந்தது. ஒருநாள் காலை மூஞ்சியை 'உம்'மென்று தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள் மாயா,
“என்னடி மாயா, என்னவோ மாதிரி இருக்கே?”
“நாங்க ஒழிச்சுண்டு வேறே ஊருக்குப் போறோம்டா ராஜா!”
அவள் கண்களில் நீர் மல்கியது. “ஏண்டீ? எதுக்காக வேறே ஊருக்குப் போகணுமாம்?”
“இந்த ஊர்லே இந்தச் சுண்டல் முறுக்கு வியாபாரத்திலே கிடைக்கிறது போறலையாம். கொஞ்சநாளாப் போட்ட சரக்கெல்லாம் விற்காமே அப்படி அப்படியே மிஞ்சுடறது.டா! தெருக்கோடியிலே 'ஸ்வீட் ஸ்டால்’னு ஒருத்தன் வைச்சுட்டான். ஜனங்கெல்லாம் அங்கேதான் குவியறா. எங்க வியாபாரம் படுத்துப்போச்சு. அம்மா பக்கத்து டவுண்லே ஒரு பெரிய மனுஷர் வீட்டிலே சமையலுக்கு வரதாக ஒப்புக் கொண்டிருக்கா. நானும் அவர் வீட்டிலே தெளிச்சிப் பெருக்கி எடுபிடி வேலையெல்லாம் செய்வேன். ரெண்டு பேருக்குமாச் சேர்ந்து மாசம் மாசம் ஏதோ கிடைக்குமாம். அதை வச்சுண்டு நாங்க பிழைச்சுப்போம்.”
“ஏண்டி மாயா,இந்த ஊரிலேயே அந்த மாதிரி வேலை உங்கம்மாவுக்கும் உனக்கும் கிடைக்காதா?”
"இந்த ஊரிலே அப்படிச் சமையல்காராள் வச்சிக்கறாப்பலே யாருடா இருக்கா? வச்சிண்டா உங்கப்பாதான் வச்சுக்கலாம். பெரிய மிராசுதார், பணக்காரர்.”
"நீ சொல்றது சரிதான். ஆனால் தொந்தியும் தொப்பையுமா எங்க வீட்டிலேயே யானை மாதிரி ஒரு சமையற்காரர் இருக்காரேடி? அப்பாவுக்கு அந்த ஆள் சமையலில் கொள்ளைப் பிரியமாச்சே!”
"வேறென்ன செய்யறது? அதான் அம்மா வெளியூரிலே வேலை ஒப்புக் கொண்டுட்டா, நாங்க போறதுன்னு உறுதி பண்ணிண்டாச்சு. இருக்கிற கடனலெல்லாம் அடைக்கிறதுக்காக அம்மாகூட நேத்துப் பழைய சிவப்புக்கல் தோட்டை வித்துட்டு வந்துட்டாள்.”
“என்னிக்கு நீங்க புறப்படப் போறதாகத் தீர்மானம்?”
“வெள்ளிக்கிழமை போறோம்.”
“போனா இங்கு வரவே மாட்டியா?” - எனக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டது. பேச்சு வரவில்லை.அழுகை பீறிக் கொண்டு வந்தது."நீ எதுக்குடா அசடு மாதிரி அழறே?”
“இனிமே உன்னைப் பார்க்க முடியாதேடி, மாயா?”
“அதுக்கென்ன செய்யறதுடா?”
“இன்னிக்கு விளையாட்டு உண்டோ இல்லையோடி?'’
“உண்டு! கடைசியா இன்னிக்கு அப்பா அம்மா விளையாட்டு விளையாடிவிட்டுச் சொப்பெல்லாம் பிரிச்சுண்டுடலாம்னு நினைக்கிறேன். என்னோட சொப்பு உங்கிட்ட ஒண்ணும் கிடையாது. உன்னோடதுதான் எங்கிட்ட வண்டி வண்டியாகக் குமிஞ்சி கிடக்கு. அதையெல்லாம் பிரிச்சு உங்கிட்ட ஒப்படைச்சிடணும் என்னோடதுன்னு ஒண்ணுமே இல்லைடா. ரெண்டே ரெண்டு மரப்பாச்சிதாண்டா இருக்கு. ஒண்ணுதான் முழுசு, இன்னொன்னு கையொடிஞ்சது. மத்ததெல்லாம் உன்னோடதுதான்” என்று ஏக்கம் பொங்கச் சொன்னாள் மாயா.
அன்றைய விளையாட்டு ஆரம்பமாயிற்று. பொய்யாக அடுப்பு மூட்டிப் பொய்ச் சமையல் பண்ணிப் பொய் இலை போட்டுப் பொய்யாகப் பரிமாறிப் பொய்யாகச் சாப்பிடுவது போல் பாவனை பண்ணுவதுதான் வழக்கமான விளையாட்டு. அன்றும் அப்படி நினைத்துக் கொண்டுதான் இலையில் (இலை என்று மாயா காட்டின இடத்தில்) உட்கார்ந்து கொண்டேன்.
மடியிலிருந்து ஒரு லட்டு உருண்டையை எடுத்துக் 'காக்காய்க் கடி' கடித்துப் பாதியை என்னிடம் நீட்டினாள் மாயா.
"இதென்னடீ இன்னிக்கு விளையாட்டுப் புது மாதிரி இருக்கிறது. பொய்யாகச் சாப்பிடுவதுபோல் நாக்கைச் சப்புக் கொட்டச் சொல்லி என் உயிரை வாங்குவாய். இன்றைக்கென்னவோ நிஜமாகவே சாப்பிடச் சொல்றயே?”
“இன்னிக்கு இப்படித்தான் சாப்பிடு!” அவள் கெஞ்சினாள் நான் சாப்பிட்டேன்.
“இந்தாடா ராஜா, கணக்கெல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோ.அப்புறம் என்னைத் 'திருடீ'ங்காதே. எழுவது தீப்பெட்டிப் படம், முப்பது சாக்பீஸ், நூத்தி இருபது குச்சி, பத்துப் பழுக்காச் சொப்பு, உடைஞ்ச சொப்பு நாலு எல்லாம் உன்னோடது, எடுத்துக்கோ, இந்த ரெண்டு மரப்பாச்சி மட்டும் என்னோடது. நான் எடுத்துக்கறேன்.” நான் பதில் சொல்லாமல் அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தேன்.
“ஏண்டா இப்படிச் சிரிக்கிறே?”
“ஒண்ணுமில்லேடீ மாயா. உன்னைப் பார்த்தேன், சிரிப்பு வந்தது. எனக்கு இதெல்லாம் வேண்டாம். உனக்கே எல்லாத்தையும் கொடுத்துடறேன். நீயே வைச்சுக்கோ. அந்தக் கை ஒடிஞ்ச மரப்பாச்சியை மட்டும் எங்கிட்டக் கொடுத்துடு . “நான் அதைத் தரமாட்டேன் போ!”
“மாட்டாட்டா எனக்கு ஒண்ணுமே தர வேண்டாம். எல்லாத்தையும் நீயே எடுத்திண்டு போ. நான் போறேன்” என்று கோபித்துக் கொண்டு கிளம்பினேன்."இல்லேடா இல்லே! கோபிச்சுண்டு போகாதே. நான் பொய்க்காகச் சொன்னேன். இந்தா, இதை நீயே வைச்சுக்கோ” என்று பின்னால் ஓடிவந்து என் கையைப் பிடித்து இழுத்து அந்த மூளி மரப்பாச்சியைத் திணித்தாள் அவள்.
“ஏண்டி இதிருக்கட்டும். உன்னை ஒண்ணு கேக்கறேன், நீ பதில் சொல்லுவியோ?”
கேளேண்டா? என்ன கேக்கப் போறே?”
“புது ஊருக்குப் போறியே, அங்கே அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவியோ, இல்லையோ?”
இந்தக் கேள்விக்குமாயா உடனே மறுமொழி சொல்ல வில்லை. தயங்கினாள்.என் முகத்தைப் பார்த்தாள். கண்கலங்கி நின்றாள்.
"பதில் சொல்லேண்டீ மாயா விளையாடுவியோ இல்லியோ?”
“எப்படிடா ராஜா விளையாடுவேன்? புதுசாப் போகிற ஊர்லே அப்பா இல்லியே!”
"நான் இல்லாட்டா என்னடீம்மா? அங்கே உனக்கு வேறொரு பையன் கிடைக்கமாட்டானா?”
தரையில் உட்கார்ந்து முகத்தை மூடிக் கொண்டு விம்மி விம்மி அழலானாள் மாயா எனக்கு அவளை ஏன் அப்படிக் கேட்டோமென்று வருத்தமாகிவிட்டது.
"நான் கேட்டது தப்பானால் மன்னிச்சுடுடீ!"
"உன்னை மன்னிக்கப்படாதுடா, கடன்காரா! கன்னத்திலே பளிர்னு அறையணும்.”
"அறையேண்டி கடன்காரி!
மாயா சிரித்தாள். நானும் சிரித்தேன்.
***
“என்ன இது? குளித்துச் சாப்பிட்டு ஆபீசுக்குப் போகப் போகிறீர்களா இல்லையா? இப்படியே பரணில் உட்கார்ந்து பச்சைக் குழந்தை மாதிரி மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறீர்களோ?” என்று கீழே இருந்து மனைவி கூச்சல் போட்டாள். நான் என் புலன்களை ஒடுக்க நிலையிலிருந்து வெளிப்படுத்திக் கொண்டு பழைய நினைவுகளிலிருந்து வெளிவருகிறேன். என்னுடைய சொந்த அப்பா அம்மாவியைாட்டு நினைவு வருகிறது. இப்படி அவள் எங்கேயாரிடம் விளையாடிக் கொண்டிருக்கிறாளோ? அந்த விளையாட்டுக்கு நாயகன் யாரோ?
பரணிலிருந்து கீழே இறங்குகிறேன். ஏணியடியில் விழுந்து கிடந்த அந்த மரப்பாச்சியைக் காணவில்லை.
“இந்தா, இங்கே ஒரு மரப்பாச்சி விழுந்து கிடந்ததே. பார்த்தாயோ?” "ஏன்? அதையும் அடுப்புக்குத்தான் போட்டீர்களோ என்று எடுத்துச் சொருவிட்டேன். நன்றாக எரிகிறது.”
“அடி பாவீ! மரப்பாச்சியை யாராவது அடுப்பில் சொருகுவார்களோ?” என்று ஆத்திரத்தோடு கேட்டேன்.
“எல்லாம் காரணத்தோடுதான் சொருகினேன். வாழ்கிற வீட்டிலே மூளி மரப்பாச்சி இருக்கக்கூடாது. வீட்டுக்கு ஆகாது என்பார்கள்.”
நான் அடுப்பங்கரையில் போய்ப் பார்த்தேன். உளுத்துப் புழுக்கூடு வைத்துப் போன அந்தச் செம்மரத்தில் தீ கொண்டாட்டத்தோடு எரிந்துகொண்டிருந்தது.
ஒருகணம் அந்தத் தீயின் ஜ்வாலைகள் ஒருமுகமாக மாறி மாயாவாகத் தோன்றி, 'நீ அப்பாவாக இல்லாவிட்டால் நான் அம்மா இல்லைடா ராஜா. நீ அகத்துக்காரன்; நான் அகத்துக்காரி என்று சிரித்தவாறே என்னிடம் சொல்வதுபோல் எனக்கு ஒரு மயக்கம் உண்டாயிற்று.
சர்வேசுவரா! எங்களைப் பச்சைக் குழந்தையாகவே பிறவி முழுவதும் அந்த வேப்ப மரத்தடியில் விளையாட விட்டிருக்கக்கூடாதோ? எங்களை ஏன் பிரித்தாய்? ஏன் வளர்த்தாய்?