நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/புதிய நிர்மாணம்

1. புதிய நிர்மாணம்

ன்பார்ந்த ராமு, என் கண்கள் தெளிவடையவில்லை - அறிவுக் கண்களைத்தான் குறிப்பிடுகிறேன். வாழ்க்கை, விடுவிக்க முடியாத சிக்கல்கள் நிறைந்த பெரும் புதிராகக் காண்கிறது.

எனக்கு உங்களிடத்தில் ஏதோ ஒருவிதமான நம்பிக்கை. அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. அது எவ்விதமானது என்பதை உணர்ந்து கொள்ளவும், என்னால் முடியவில்லை. எது எனக்குத் தெரிந்து, தெளிய முடியாததாயிருக்கிறதோ அதைத்தான் நான் புதிர் என்று குறிப்பிடுகிறேன். இப்படி நீங்களும் எனக்கு ஒரு புதிராக இருப்பதனால் தானோ என்னவோ, எனக்கு விளங்காத புதிர்களை எல்லாம் உங்களிடம் தங்கு தடையின்றி என் உள்ளத்தைத் திறந்து காண்பிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

என் மனதில் சிந்தனைகள் குவிகின்றன, கலைகின்றன. எவ்வளவோ எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் மறைந்தும் விடுகிறது. தோன்றி மறைவதாகிய இந்த வாழ்க்கையில் எண்ணற்ற மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மறைந்து கொண்டும் இருக்கின்றனர். பல தரப்பட்ட வாழ்க்கைகளின் ஒட்டமே காலத்தோடு பின்னப்பட்டு சரித்திரம் ஆகிறது என்பது என் துணிபு. என் துணிபு என்று நான் குறிப்பிடுவதன் காரணம், இன்று நமக்குக் கற்பிக்கப்படும் கல்வியில் சரித்திரம் என்ற ஒரு பகுதியும் இருக்கிறதல்லவா..? நீங்கள்தான் அடிக்கடி சொல்வீர்கள், “பள்ளியில் படிப்பு நமக்கு எதை அளிக்க வேண்டுமோ, அதை அளிக்கவில்லை. படித்து வெளியேறும் மாணவர்கள் மனிதப் பண்பு முற்றிய 'மனிதர்களாய் வாழ்வதற்கும் கூட அது உதவுவதில்லை” என்று. நீங்கள் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு நடைமுறை வாழ்வில் இறங்கி விட்டீர்கள். கல்லூரியில் பி.ஏ. வகுப்பின் படி மேல் காலை வைத்துக் கொண்டுதான் இதை உணர்கிறேன்.

திடீரென்று ஒரு நாள், ‘இதுவரை நாம் கற்றது என்ன?’ என்று என்னையே கேட்டுக் கொண்டேன். ‘கர்வம் ஒன்று, அசட்டை அடுத்தபடியாக, சோம்பேறித்தனம் மூன்றாவதாக, தன்நம்பிக்கையின்மை அதற்கு மேலாக...’ என்று என் மனசாட்சி பதில் சொல்லிக் கொண்டே போயிற்று. என்னால் சகிக்க முடியவில்லை. உதாரணமாக சரித்திரத்தையே எடுத்துக் கொண்டாலும், அது ஏதோ சென்ற காலங்களின் ‘காலண்டர்’ மாதிரி இருக்கிறதே அன்றி மனித சமுதாயத்தின் வளர்ச்சியையும், பண்பையும் கூறவே இல்லை.

கலாசாலைப் படிப்பிலிருந்து விலகிவிடுவதென்று தீர்மானித்து விட்டேன். கலைத் துறையில் அது கற்பதன் மூலம் எதை அளிக்குமோ அதைச் சொந்த முயற்சியிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை எனக்குப் பிறந்துவிட்டது. என் நண்பர்களில் பலர் அது என் எதிர்காலத்தை ரொம்பவும் பாதிக்கும் என்று கூறி என்னை, மேலும் படிக்கும்படி தொந்தரவு செய்கிறார்கள். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. நான் முடிவு செய்துவிட்டேன்.

“எதிர்காலம்” என்று அவர்கள் எந்த அர்த்தத்தில் கூறுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். “கல்யாண மார்க்கெட்டில் தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது, ஏதாவது ஒரு உத்தியோகத்தில் ஒட்டிக் கொள்வது. இவ்வளவுதான்” அவர்கள் குறிப்பிடும் எதிர்காலத்திற்கு அர்த்தம் எனக்கு இந்த இரண்டிலும் விருப்பம் இல்லை. காலத்தின் நெஞ்சிலே காலை வைத்து நடக்க வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது. மனித வாழ்விலே மடியாமை பெற்று மக்கள் மனத்திலே என்றும் விளங்கும் பெரிய காரியம் ஏதாவது செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நண்ப, அரசியலிலே பிரவேசிக்க எனக்கு ஆர்வம் இல்லை. அது பிளவுகளையும் வேற்றுமைகளையும் பெருக்கிக் கொண்டுதான் இருக்கிறது என்று எண்ணுகிறேன்.என் முழுமுயற்சியையும் கலைத்துறையில் திருப்ப வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு கவிஞனாக வேண்டும் என்று கனவு காண்கிறேன். சிந்தனையில் மின்னொளி கண்டு மக்கள் மனத்தினிலே ஒளி ஏற்றி வைக்க வேண்டும் என்று துடிக்கிறேன். இதற்காகக் கற்பதிலும் கவிதை நெஞ்சோடு பழகுவதிலும் ஈடுபட்டிருக்கிறேன்.

இந்த நிலையில் உங்கள் உதவியை ரொம்பவும் எதிர் பார்க்கிறேன். என் மனம் ஏனோ உங்கள் முன்னால் கட்டுப்படுகிறது எனக்கு நீங்களே யோசனை கூற முடியும் என்று நம்புகிறேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வணக்கம். அன்புடைய நண்பன்,

கணபதி


கணபதிக்கு ராமு பதில் எழுதினான். ரொம்பவும் சுருக்கமாக:

நண்பா,

தங்கள் முயற்சிகளை நான் வரவேற்கிறேன். மக்களுக்கு எது தேவையோ அதைக் காலத்தையும் பண்பையும் அனுசரித்து அளிப்பது தான் கலைஞர்களின் லட்சியமாக இருக்க வேண்டும். இது ஒன்றை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டால் போதும் உன்னத வாழ்வை எட்டிப் பிடித்துவிடலாம்.

அடுத்தபடியாக செய்யும் காரியங்களில் தெளிவு வேண்டும்.அவையும் புதிர்களாக இருக்கக்கூடாது. அதற்கு மனதில் தூய்மை வேண்டும். தூய்மை ஒழுக்கத்தின் பயன் ஆகும்.

மனதின் தூய்மையில் மலரும் ஒளியில் அறிவின் சுடர் பிரகாசிக்குமேயானால் அது மனித சமூகத்திற்குப் புதிய உயிர்ப்பையும், விழிப்பையும் அளிக்குமானால் தங்கள் லட்சியம் கைகூடும். கலைத் தேவி அருள் புரிவாளாக .

வணக்கம்.

ராமு

சில நாட்களில் கணபதி சினிமாக் கம்பெனி ஒன்றில் வசனம் எழுதும் வேலையில் பெரிய மனிதர் ஒருவரின் உதவியால் சேர்ந்து கொண்டான் என்பதை ராமு அறிந்தான். அதோடு கணபதி எழுதிய கடிதத்தில் பணத்தை அடைந்தவர்களாலேயே உலகில் எதையும் சாதிக்க முடிகிறதென்றும், சமூக நன்மைகள் செய்வதையே மேற்கொண்டாலும் அதற்கும் பணம்தான் பிரதானமாக இருக்கிறதென்றும், அதனால் பணவருவாயைக் குறிக்கோளாகக் கொண்டே சினிமாக் கம்பெனியில் சேர்ந்திருப்பதாகவும் எழுதியிருந்தான் ராமு. கூடுமான வரையில் உயர்ந்த கருத்துக்களைக் கலையின் மூலம் பரவச் செய்வதே சிறந்த முறை ஆதலால், சினிமாத் துறையிலும் லட்சிய வழி செல்ல முயற்சிக்கும்படி பதில் எழுதினான்.

நாட்கள் இயற்கையின் உருவில் வனப்பும் வளர்ச்சியும் முதிர்ச்சியும், பயனும் எழுப்பிக் கொண்டே ஒடிக் கொண்டிருந்தன. ராமு பல நாட்களை சிந்தனையிலேயே கழித்துக் கொண்டிருந்தான். ஏழ்மை! குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பும் அவன் தலையிலேயே சுமத்தப்பட்டிருந்தது. இளம் சிறுவர்களான அவன் சகோதரர்கள் படிக்க வேண்டும். தந்தை இறக்கும் பொழுது மனைவி மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில், வைத்தியம் பார்க்கச் செலவு செய்து பட்ட கடனை அடைக்க வேண்டி இருந்தது. அன்றாடத் தேவைகளுக்கும் சம்பாதித்தே ஆக வேண்டும். சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் முடியுமா?

அவன் மனதில் தீக்கொழுந்து சுடர் விட்டுக் கொண்டிருந்தது. நான் பிறந்த இந்த நாட்டுக்காக நாட்டின் மக்களுக்காக. ஏதாவது செய்ய வேண்டும். என் உடன் பிறந்த மக்கள் மனித வாழ்வில் இன்பமும் அன்பும் தழைத்துப் பதிய பொருளும் பயனும் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று அவன் சிந்தித்தான்.

சில நாள் உத்தியோகம் பார்த்து வந்தான். அது அடிமைத்தனத்தின் சிறைக்கூடமாகப்பட்டது அவனுக்கு ‘கடமை என்ற பொறுப்பும், கண்ணியமும் சுயேச்சையும் உள்ளதல்லவோ தொழில். அது அல்லவோ மனிதனுக்கு மனித உணர்வுகளை வழங்கக்கூடியது’ என்று அவன் அறிவு சொல்லிற்று. இடையில் அவன் சிந்தனைகள் தழைத்துப்படர்ந்து மலர ஆரம்பித்தன.இந்த நிலையில் கணபதியின் யோசனை அவன் மனதில் படவே, தன் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து கட்டுரைகளாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும் தொடுக்க ஆரம்பித்தான். அவை புது மணம் கமழ இலக்கிய உலகிலே புகழுடன் பரவ ஆரம்பித்தன.

ஒவ்வொரு நாளும் புதிய புதிய சிந்தனைகள், புதிய கற்பனைகள். மனித வாழ்வு இப்படி ஆக வேண்டும், அப்படி மாற வேண்டும், இந்த விதமாக உயர்ந்து ஒவ்வொரு மனிதனும் பூரணத்துவம் பெற வேண்டும். சத்தியப் புகழ் சாத்தியப்பட வேண்டும். எல்லோரும் ஒரு இனம், ஒரு நிறை, ஒரு நிலை என்றாக வேண்டும். என்றெல்லாம் அவன் நினைத்தான். அந்த நினைவுகள் வாழ்க்கைச் சித்திரங்களாக மாறின. அவை படித்தவர் உள்ளத்தைத் தொட்டன. பண்பை விளைத்தன. புரட்சிகரமான புது எழுத்தாளனாக, ஆசிரியனாக அவன் வளர்ச்சியடைந்தான். ஆனால்...!

ஆனால்...! அவன் மனம் அமைதி அடையவில்லை. சலனப்பட்டுக் கொண்டிருந்தது பல படங்கள், பல விதங்களில்... அவன் சொல்லிக் கொண்டான். ‘நான் அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், எழுதுகிறேன்; ஆனால் நானாக எதையும் செய்து காட்ட முடியவில்லை. எனக்கு ஆக்கும் சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தும் எதையும் ஆக்கிக் காட்ட முடியவில்லை...’ என்று.

மனதிற்கு ஒவ்வாத தனக்கென்றும் ஏதும் உரிமை இல்லாத உத்தியோகத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற தாகம் அதிகரித்தது. அடிமைத் தொழிலை விட்டான். இயற்கை வாழ்வை ஏற்றுக் குடிசைத் தொழிலைக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டாயிற்று. அடுத்த நாளே அவன் பொதுமக்களில் ஒருவனாக மாறிவிட்டான்.

சாதாரண ஏழைத் தொழிலாளிகள் தாங்களாகச் செய்த தொழில்களில் போதிய வருமானம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர். மூலதனம் இல்லாத குறை, விற்பனைப் போட்டி, செய்த பண்டங்களைத் தேவை அதிகம் உள்ள பட்டணப் பிரதேசங்களுக்குக் கொண்டு போய் விற்க முடியாமை... ஆகிய காரணங்களால் தொழில்கள் வளம் குன்றி நலிந்து கொண்டிருந்தன. கிராமங்கள் பெருமை இழந்து, பொலிவு குன்றி வறண்ட இடங்கள் ஆயின. கிராம வாசிகளை உயிர் பெறச் செய்ய புதிய நிர்மாணம் தேவை. புதிய வழி ஒன்று தேவை என்று அவன் மனம் இடைவிடாமல் கூறிக் கொண்டிருந்தது.இந்த நாட்டின் நமது இந்திய நாட்டின் உயிர் கிராமங்கள். நமது மதத்தின் வேர் கிராமங்கள்.நமது வாழ்வின் நலன் கிராமங்கள்.நமது சமுதாய அமைப்பின் இயற்கைத் தத்துவத்தின் இலக்கணம் கிராமங்கள். நமது இயற்கை, வாழ்வின் பொழிவு, விளக்கம், மாண்பு எல்லாம் கிராமங்களிலே. இந்திய கலாசாரம், இந்திய இரத்த ஒட்டம், இந்திய மனம் கிராமவாசியின் உடலிலே உள்ளத்திலே காணக்கிடப்பவை.

கிராமம் உயிர் பெற்றால் இந்திய வாழ்வு உயிர் பெறும். இதற்கு வழி என்ன என்று இரவு பகலாக அவன் சிந்திப்பான்.

உண்மையும், உறுதியும் படைத்த அவன் உள்ளத்திலே தொழில்களைக் கூட்டுறவு முறையில் வளர்க்கும் யோசனை அபூர்வமாகத் தோன்றியது. தொழிலாளிகளின் தொழில் வாரியாக ஒன்று திரட்டினான். கிராமவாசிகளை ஐக்கியப்படுத்தினான். அறிவுப் போதனையால் ஆயிரம் சாதிகளின் கூண்டுகளிலே அடைப்பட்டுக் கிடந்த மக்களை ஒன்று திரட்டினான். எல்லோரும் ஒன்றை நினைப்போம், ஒன்றையே செய்வோம், அது எல்லோரும் ஒன்றாக இருப்பதற்காக.. என்பதே அவன் நிர்மாண கோஷமாக மாறியது. கிராமவாசிகள் அனைவரும் ஒன்றாயினர்.

இரண்டு மூன்று வருஷங்களில் கிராமம் புதிய ஒளியுடன் மலர்ந்தது. இந்த சாதனை கண்டு யாவரும் வியந்தனர். அரசியல்வாதிகள் புதுமைக் கண்களுடன் பார்த்தனர். ஒவ்வொரு கிராமத்தையும் இந்த முறையில் ஒன்றுபடுத்த வேண்டும். நமது சமுதாய வாழ்வைக் காட்ட வேண்டும் என்ற பிரசாரம் பத்திரிகைகளின் வாயிலாக வலுத்தது. அநேகப் பத்திரிகைகள் அவன் உருவத்தை முகப்புப் படமாகப் போட்டன. அந்தக் கிராம வளர்ச்சியைப் பற்றிப் பத்தி பத்தியாகக் கட்டுரைகள் எழுதின.

“இதை எப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டவர்களுக்கு அவன் அளித்த விடை இவ்வளவுதான். “உண்மை என் மூலதனம், அதுதான் வித்து. தன்னலமற்ற என் மனம், இதன் வளர்ச்சிக்கான நீர்... உரமோ... உழைப்புத்தான்.”

திடீரென்று ஒரு நாள் கணபதி அவன் முன் நின்றான். அவன் கண்களில் அசாதாரண வெறுப்பும் தோல்வியின் அலுப்பும் வழிந்துகொண்டிருந்தன. ராமு அவனை ஆர்வத்துடன் வரவேற்று அமரச் சொன்னான். கணபதியின் உருவத்திலே ஒரு புதிய மாற்றம் இருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு அலுப்புடனும் ஏக்கத்துடனும் அவன் காணப்பட்டானோ அவ்வளவுக்கவ்வளவு அழகுடன் தளதளப்பாக இருந்தான். அவன் உடலில் ஒரு பொன்நிறம் ஊறி இருந்தது. அதை எடுத்துக் காட்டும் படியாக அழகான சில்க் உடைகளை அணிந்து கொண்டிருந்தான். விரல்களிலே வைரமும், பச்சையும், நீலமும் பதித்த மோதிரங்கள். இடது கையில் வைரங்கள் இழைத்த சங்கிலியில் மாட்டிய ‘ரிஸ்ட் வாட்ச்’.

ராமு ஆச்சர்யத்துடன் கேட்டான்."காலத்தின் நெஞ்சிலே காலை வைத்து நடக்கக் கற்றுக் கொண்டாயா?"என்று.

கணபதி சொல்லத் தொடங்கினான், “ராமு... தோல்விகளிலே மனம் உடைந்து போன நான், என்னுடைய உயர்ந்த உள்ளத்தைப் பணவெறிக்கு அடிமைப் படுத்தினேன். என் லட்சியங்களை எட்டிப் பிடிக்கப் பணம் ஒன்றே குறுக்குப் பாதை என்று உறுதியாக நம்பினேன். ஆனால் ஏமாந்தேன். எவ்வளவுக்கெவ்வளவு நான் பொருளைக் குவித்துக் கொண்டேபோனேனோ அவ்வளவுக்கவ்வளவு என் ஆசையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. என் லட்சியங்கள் எப்போதோ குழந்தைப் பருவத்தில் கண்ட காலைக் கனவுகளாக மங்கி மறைந்து போயின.

"ஐயோ. ராமு. நீங்கள் அளித்த ஒவ்வொரு போதனையையும் மறந்தேன் நான். அறிவை நட வேண்டிய உள்ளத்திலே ஆசைகளை நட்டேன். தூய்மை துளிர்க்க வேண்டிய இடத்திலே காமக்கணைகள் படை எடுக்க விட்டேன். உள்ளத்தை மெருகேற்றுவதற்குப் பதிலாக உடலுக்கு அழகூட்ட மருந்துகள் வாங்கினேன். மக்கள் நலன் பெற எண்ணுவதற்குப் பதிலாக மோகக் களி ஆட்டங்களில் கிடைக்கும் இன்பத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். என்ன சொல்ல? பாவியானேன்!

“கலையின் மூலம் அறிவைப் பரப்ப முயற்சிக்கும்படி நீங்கள் யோசனை கூறினீர்கள். ஆனால் நானோ. அழகழகான, மனத்தை மயக்கத்தில் ஆழ்த்தக்கூடிய, போதை நிறைந்த காமலாகிரிச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கலையை அழகு பெறச் செய்ய முயன்றேன். அதுதான் என் தொழிலாக ஆக்கப்பட்டிருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு நான் என்னைக் கெடுத்துக் கொண்டேனோ அவ்வளவுக்கவ்வளவு நான் புகழப்பட்டேன். என் காமக்கலையை விருத்தி செய்து கொள்வதற்காக அனுபவத்தில் ஈடுபட எண்ணி. அதை எல்லாம் ஏன் கேட்கிறாய். நான் பாவி ஆகி, மற்றவர்களையும் பாவ வழியில் தூண்டுபவற்றைச் செய்து கொண்டிருந்ததற்காக நான் பொருளும் புகழும் பெருமிதமும் அடைந்தேன்.

"நீங்கள் இவ்வளவு பெரிய எழுத்தாளரும், கவிஞரும் ஆகி இருப்பீர்கள் என்று எண்ணவில்லை. ஆச்சரியகரமான சமூக முன்னேற்ற வழியும் அரசியலில் செயல் முறையில் சில சாதனைகளும் செய்து காட்டியதற்காக நீங்கள் புகழப்படுகிறீர்கள், போற்றப்படுகிறீர்கள் என்று எண்ணினேன்.ஆனால், ‘தூய்மை’ பத்திரிகையில் தங்கள் ‘விடுதலை’ என்ற கவிதையைக் கண்டதும் என் மனம் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய்விட்டது. விடுதலை என்றால் என்ன? தேவைகளில் விடுதலை நினைக்க, பேச, தொழ, விருப்புடன் வாழ போதுமான உரிமைகள்- இவை தாம் விடுதலை. இவற்றில் ஒவ்வொன்றையும் எடுத்தெடுத்துக் கூறி தமிழன்னை ஒருத்தி பாடி வரும் பாட்டு. அந்தக் கவிதை என் உள்ளத்தில் புதிய விழிப்பையே உண்டு பண்ணிவிட்டது என்று சொல்லவேண்டும்.அப்பொழுதுதான் என் பழைய லட்சியங்களைப் பற்றியும் உங்கள் புதிய வாழ்வு எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் சிந்தனைகள் என் மனதில் துளிர்த்தன. கேவலமான என் வாழ்வின் நிலை கூரிய பாணங்களைப் போல் என் நெஞ்சைத் துளைத்தது. ஒடி வந்தேன்.

"இழந்து போன லட்சிய வாழ்வை எனக்கு நீங்கள் தான் மீட்டு அளிக்க வேண்டும்” என்றான் கணபதி.

அடுத்த மாதத்தில் அங்கே 'சர்வகலா நிலையம்’ தோன்றியது. கலையின் மூலம் அறிவைப் பரப்ப புதுமைக் கலையை உயிர் பெறச் செய்வதே லட்சியமாக அமைந்தது சர்வகலா நிலையம். அங்கே வாழ்வை சித்தரிக்கும் நாட்டியம், நாடகம், படிப்பு, கதை, சித்திரம், சிற்பம் எல்லாம் மலர்ந்தன.

கவிஞர் ராமுவின் புதிய நிர்மாணத்திலே வாழ்வின் விடுதலை முழுதும் பொலிந்து விளங்குவதைக் காணலாம். அங்கே எல்லோரும் ஒன்றையே நினைக்கிறார்கள். ஒன்றையே செய்கிறார்கள். அந்த ஒன்று எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே...

அங்கே ஒவ்வொரு மனிதனும் மன்னன். ஒவ்வொருவன் வாழ்வும் இன்பம். ஒவ்வொரு வீடும் கலைக்கூடனம்.

அவ்வளவிற்கும் வித்து உண்மை, தன்னலமற்ற பொன் உள்ளம்தான் வளர்க்கும் தண்ணீர்.

(குமரி மலர், நவம்பர், 1946)