நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/மண்புழுக்கள்
38. மண் புழுக்கள்
கொளுத்து கொளுத்தென்று காய்கின்ற உச்சி வெய்யிலில் மாடாக உழைத்துக் கொண்டிருந்தான் வேலையன். கரணை கரணையாகச் சதை வைத்த தோள்களிலும், மார்பிலும், வேர்வை வழிந்து வெய்யிலில் மின்னிற்று. இரண்டு கைகளாலும் மண்வெட்டியைத் தலைக்கு மேலே தூக்கி ஓங்கி மண்ணில் பாய்ச்சுகிற போது அவனுடைய தோள்கள் புடைப்பதில் ஒரு தனி அழகு இருந்தது. ஹெர்குலிஸ் சிலை மாதிரி மேலே அகன்று இடையில் ஒடுங்கிய ஆண்மை லட்சணமுள்ள மார்பு அவனுடையது. தலையில் ஒரு அழுக்குத் துணி முண்டாசு. அதையும் துளைத்துக் கொண்டு உறைத்தது வெய்யில். இடுப்பில் முழங்காலுக்கு மேல் வரிந்து கட்டிய வேட்டியில் அழுக்கு மண்டிய மண் கறைகள்.
ஒவ்வொரு முறையும் மண்வெட்டி பாய்ந்து மண்ணைப் புரட்டிப் பிளந்து மேலே தள்ளும் போதும் கும்மென்று கிளம்பும் ஈர வாடையோடு மேலெழுந்து பரவிற்று மண்ணின் மணம்.
அந்த மண்ணின் மணம் தன் மூச்சுக் காற்றோடு இழைகிற போதெல்லாம் தன் உழைப்பே அப்படி மணப்பது போல் வேலையனுக்கு ஒரு பெருமிதம், ஒரு பூரிப்பு உண்டாயிற்று.
மண்ணைக் கிளறிக் கொண்டே மண்ணைப் பற்றிச் சிந்திப்பது உற்சாகமாக இருந்தது வேலையனுக்கு. அந்த ஐந்து செண்டு நிலத்தை வெட்டிக் கொத்திப் பாத்தி பிரிப்பது அவனுக்குச் சிரமமான காரியமேயில்லை. இன்றைக்கு ‘வெட்டு வேலை’ முடிந்து விட்டால் எப்படியும் நாளை ஒரு நாளைக்குள் கட்டிகளை உடைத்துச் சமப்படுத்திப் பாத்தி பிரித்து விடலாம். வாய்க்காலும் வகுத்துக் கொள்ளலாம்.
ஈரம் கசிந்த களிச்சத்துள்ள நல்ல மண் அது. கீரையும், தக்காளியும், நான் நான் என்று போட்டி போட்டுக் கொண்டு உண்டாகும்.
பெரிய நிலங்களுக்கு நடுவில் ‘நத்தம் புறம்போக்கு’ப் போல் இருந்தது வேலையனின் ஐந்து செண்டு. சிறிது மேடுபள்ளமாகச் சமமின்றி நன்செய்ப் பயிருக்கும் தகுதியில்லாமல், புன்செய்ப் பயிருக்கும் தகுதியில்லாமல் இரண்டுங் கெட்டானாகக் கிடந்தது அவனுடைய துண்டு நிலம். நீண்டநாள் சிந்தனைக்குப் பிறகு அதில் காய்கறி கீரை பயிர் செய்து பார்க்கலாமென்ற முடிவுக்கு வந்தான் வேலையன்.
நான்கு புறமும் பெரிய பண்ணையார்களுக்கு நடுவே அந்தச் சிறிய ஐந்து செண்டு நிலம் தனித்து இருந்த காட்சி, பச்சைப் பட்டுப் புடைவையும், பகட்டான நகைகளும் அணிந்த நான்கு பணக்காரப் பெண்களுக்கு நடுவே வெறும் கைத்தறிப் புடைவை அணிந்து நகைகளில்லாத மூளி உடம்போடு ஏழைப் பெண்ணொருத்தியும் நிற்பது போலிருந்தது. வடபுறம் புலி வலம் வந்த நல்லூர்ப் பெரிய பண்ணையின் நிலம் ஐம்பது ஏக்கர் ஒரே தாக்காக இருந்தது. தெற்கே மாடிவீட்டு ரங்க நாராயண ஐயரின் பதினைந்து ஏக்கர் முதல் தரமான நன்செய்; பேயனாற்றுக்கால் தலைப்பாசன நிலம். கிழக்கே வீரபத்திரவாண்டையாரின் வாழைத் துரவு; கண் பார்க்க முடிந்த தொலைவு மட்டும் தூண் கொண்டெழுந்த பசுமைப் பரப்பாய் ஒரே வாழைமரக் காடு, மேற்கே முக்காணிமங்கலம் முகுந்தராஜ முதலியாரின் கரும்புத் தோட்டம், எழுபத்திரண்டு ஏக்கர் செங்கரும்புப் பயிர் காற்றில் தோகைகள் சுழல அற்புதமாய்க் காட்சியளிக்கிறது.
அத்தனையும் பணம்! நெல், வாழை, கரும்பு, மட்டுமல்ல! உடைமைக்காரர்களுக்குப் பணமாகவே விளைந்த நிலங்கள் அவை. புலிவலம் வந்த நல்லூர்ப் பெரிய பண்ணையாரும், மாடிவீட்டு ரங்க நாராயண ஐயரும், வீரபத்திர வாண்டையாரும், முகுந்த ராஜமுதலியாரும், வண்டி கட்டிக்கொண்டு வந்துதான் நிலத்தைப் பார்வையிடுவது வழக்கம். எவ்வளவு பெரிய நிலம்? நடந்து சுற்றிப் பார்த்தால் கட்டுபடியாகுமா? மண்ணில் இறங்கி நடந்து விட்டால் கெளரவம் "ஸ்டேட்டஸ்' எல்லாம் என்ன ஆவது? நடத்தை கெட்டவளானாலும் தெருவில் உடம்பை மூடிக்கொண்டு தானே நடக்க வேண்டும்? பணக்காரர்களுக்கு 'அந்தஸ்து’ என்கிற விவகாரமும் இப்படித்தான் இருக்கிறதோ இல்லையோ, வெளியில் 'அந்தஸ்தை' நடித்துக் காட்டினால்தான் பணக்காரர்களுக்குப் பெருமை; பணத்துக்கும் மதிப்பு!
அந்தப் பெரிய பெரிய மிராசுகளுக்கு நடுவே தன்னுடைய 'உள்ளங்கையகல நிலம்’ ஓர் அவமானம் போல் தோன்றினாலும் அதை அப்படியே தரிசாக விட்டுவிட மனமில்லை வேலையனுக்கு. கீரையும், காய்கறியும், பயிர்செய்து விற்றால் நாள் ஒன்றுக்கு ஒன்றரை ரூபாய்க் காசு கூடவா சம்பாதிக்க முடியாது?’ என்று நினைத்து ஒரு முடிவுக்கு வந்தபின்பே இப்போது அந்த நிலத்தை வெட்டிக் கொத்திக் கொண்டிருந்தான் அவன். மனிதன் சும்மா இருக்கிறவரை யாருமே அவன் பக்கமாகத் திரும்பிக் கவனிப்பதில்லை. நல்லதோ, கெட்டதோ, அவன் எதையாவது செய்ய ஆரம்பித்து விட்டால் எல்லோருடைய கவனமும் அவன் பக்கம் திரும்பிவிடுகிறது. வேலையனுடைய ஐந்து செண்டு நிலம் கரடுதட்டிப் போய்க் குண்டும், குழியுமாய்ச் சும்மா கிடந்தவரை 'முக்காணி மங்கலமும்,' 'புலிவலம் வந்தநல்லூரும்' அதைப் பற்றி நினைக்கவே இல்லை.
ஒரு நாளுமில்லாத திருநாளாய் அன்றைக்கு அந்தப் பள்ளத்துக் கரட்டில் மண்வெட்டி இறங்கும் ஓசையைக் கேட்டபோது புலிவலம் வந்த நல்லூர் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கிப் பார்த்தார்.
“ஏலே வேலு! என்னடாது; திடீரென்று இந்தக் காட்டு மேலே இத்தனை அக்கறை? வைரக் கடுக்கன்களும், வலது கையில் சுழன்ற வெள்ளிப் பூண்பிடித்த பிரம்பும் வெய்யிலில் மின்ன மேட்டில் தம் நிலம் முடிகிற இடத்தில் நின்று கொண்டு மிடுக்காக அவனைக் கேட்டார் புலிவலம்வந்த நல்லூர். நெற்றி வேர்வையை வழித்து உதறிவிட்டு நிமிர்ந்தான் வேலையன்.
"ஐயா, சும்மாக் கெடக்கறதைக் கொத்தி ஏதோ நாலு காய்கறி, கீரை போட்டுப் பார்க்கலாமின்னு எண்ணமுங்க”
"அடி சக்கை காய்கறித் தோட்டமா? பலே, ஜமாய்த்துத் தள்ளு.”
"தோட்டமாவது, ஒண்ணாவதுங்க. ஏதோ அஞ்சாறு பாத்திக்கு. அவன் முடிப்பதற்குள் புலிவலம் வந்த நல்லூர் வண்டியில் ஏறிவிட்டார். அதிக நேரம் வேலையனிடம் நின்று பேசிக் கொண்டிருந்தால் அவருடைய அந்தஸ்து என்ன ஆவது? .
மறுபடியும் வேலையணின் கைகள் மண்வெட்டியை இயக்கின. மேற்குப் புறத்து மேட்டில் தம் கரும்புக் கொல்லை முடியுமிடத்தில் 'முக்காணிமங்கலம்' வந்து நின்றார்.
“ஏண்டா வேலையா! உன் 'ஜமீன்லே' ஏதோ பெரிய 'ஸ்கீம்லே' சாகுபிடி ஆரம்பிச்சு நடக்கிறது போலிருக்கே? என்ன சமாசாரம்? வாழையா கரும்பா? நெல்லா?” என்று கிண்டலாகப் பேச்சை ஆரம்பித்தார் முக்காணி மங்கலம்.
"ஐயாவுக்குக் கேலியாத் தோணுது. நமக்கென்ன முப்பது ஏக்கரா நாற்பது ஏக்கரா? உள்ளங்கையிலே பாதி நிலம், ரெண்டு கீரைப்பாத்திக்குக் காணாது. வாழையையும், கரும்பையும், நினைக்கக்கூட முடியாதுங்களே?” என்று சொல்லி முறுவல் பூத்தான் வேலையன்.
இன்னும் சிறிதுநேரம் கழித்து வீரபத்திர வாண்டையார் வந்து, “நமக்கும் நிலமிருக்குங்கறதைக் காண்பிக்கிறதுக்காகக் கொத்துப் போட்டுக் கிட்டிருக்கியா?” என்று கேலி செய்துவிட்டுப் போனார். வாழைத்தார் வெட்டிச் சந்தைக்கு அனுப்பத் தினசரி வந்து போவார் வாண்டையார்.
"அடே வேலையா, இதிலே கீரையும், காய்கறியும் நன்னா வரும்டா, பசையுள்ள மண், அதோ பாரு சிக்கு விழுந்த நூல் மாதிரி எத்தனை மண்புழு நெளியறது? மண் புழுக்கள் துளைக்கிற மண் காய்கறிக்கு நன்னா வரும். நிலம் உரம் வாய்ந்ததுங்கிறதை மண்புழு இருக்கறதாலேயே தீர்மானிச்சிண்டுடலாம்!” என்று தெற்குப் பக்கத்து நிலக்காரர் தலைக்கால் பாசனம் ரங்கநாராயண அய்யர் அவனுக்கு சர்டிபிகேட்” கொடுத்துவிட்டுப் போனார்.
‘சாமீ. எல்லாம் உங்க ஆசீர்வாதம்..” என்று விநயமாகப் பதில் சொல்லி அவரை அனுப்பி வைத்தான் வேலையன். தன் நிலத்தில் கீரையும், காய்கறியும் நன்றாக வரும் என்பது அவனே அறிந்ததுதான். 'புருபுரு' வென்று முறுக்கு மாவு பிசைந்த மாதிரிக் கரிசல் நிறத்துக் களிப்பாங்கான மண், அதில் ரப்பர் நூல்கள் போல ஏராளமான மண்புழுக்கள் நெளிகின்றன. 'மண்புழுவைத் தோட்டக்காரனின் நண்பன்' என்பார்கள். அது மண்ணை உரமுள்ளதாக்குகிறது. சத்துள்ளதாகவும் வளமுள்ளதாகவும் செய்து நல்ல விளைவைத் தருகிறது என்று நாள் தவறாமல் வீட்டில் தன் மகன் பள்ளிக்கூடத்து 'ஸயன்ஸ்' புத்தகத்தை நெட்டுருப் போடுவதை வேலையன் கேட்டிருக்கிறான்.'ஸயன்ஸ்' என்கிற இங்கிலீஷ் வார்த்தை இந்த நாட்டில் நுழைவதற்கு முன்பே அவனுடைய முப்பாட்டன் காலத்திலிருந்தும் கர்ண பரம்பரையாகவும் அந்த விஷயம் அவனுக்குத் தெரியும்.
“மண்புழு நிறைய இருந்தால் நெலத்துலே ஐசுவரியம் பொங்கும்டா” என்று அவனுடைய தாத்தா அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் கொண்டே இருப்பார். அதே செய்தியை இப்போது ரங்கநாராயண ஐயரும் கூறக்கேட்டபோது அவனுக்குப் பெருமையும், திருப்தியும் உண்டாயின. தன்னுடைய சொந்த முயற்சியில் உருவாக இருக்கும் காய்கறித் தோட்டத்தில் ஐசுவரியம் பொங்கப் போவதை நினைத்து அவன் மனம் பூரித்தது.
அன்று பொழுது சாய்வதற்குள் 'வெட்டு வேலை' முடிந்து விட்டது. மறுநாள் கட்டிகளை உடைத்துச் சமன் செய்து பாத்தியும், வாய்க்காலும் வகுத்துவிட்டான். மூன்றாம் நாள் விதைத்து நீர்பாய்ச்சி விட்டான். மூன்று பாத்தி அரைக்கீரை, இரண்டு பாத்தி தக்காளி, இரண்டு பாத்தி முளைக்கீரை, ஒரு பாத்தி கொத்துமல்லி, நாலு பாத்தி வெண்டைக்காய். இருக்கிற நிலத்தை நிரந்து பன்னிரண்டு பாத்தியாகப் பிரித்திருந்தான்.
அது நல்ல ஈரச்சத்துள்ள உரமண்! விதைத்த மூன்றாவது நாளில் கீரைப்பாத்திகளில் பொட்டுப் பொட்டாகப் பசுமை தெரிந்தது. ஏழாவது நாளில் வெண்டையும், தக்காளியும் முளை கிளம்பின. பின்பு கொத்துமல்லியும் வெந்தயமும் பொல்லென்று பூத்த பசுமையாய்ப் பாத்திகளை நிறைத்தன. வேலையணின் ஐந்து செண்டு நிலத்தில் ஒரு பசுமைக் கனவு உருவாகி மிளிர்ந்தது.
கீரைகள் அடர்ந்து பசுமை கொழித்து மேலெழும்பி வளர்ந்தன. வெண்டை பூத்தது. தக்காளியும் தன்னுடைய மஞ்சள் நிறப் பூக்களால் மென்னகை புரிந்தது. கொத்து மல்லி பச்சைப் பாசிமணி போல் காய்த்துக் கதிர் வாங்கி மணம் பரப்பியது.
“கொடுத்து வைத்த பயல்டா நீ என்று அவனது காய்கறித் தோட்டம் வாய்த்த விதத்தை வியந்தார் ‘புலிவலம் வந்த நல்லூர்:
“பொட்டல் காட்டிலே என்னமோ செய்து அற்புதம் பண்ணிப்பிட்டியேடா’ என்றார் வாண்டையார்.
"இந்த மாதிரி வெண்டை விதை எங்கேடா கிடைச்சது உனக்கு? கொத்துக் கொத்தாய்க் காய்ச்சுத் தள்ளியிருக்கே யோகக்காரண்டா நீ” என்று கண் வைத்தார் முக்காணி மங்கலம்.
“நான் அன்னிக்கே சொன்னேனோல்லியோ மண்புழு இருந்தாக் காய்கறித் தோட்டத்துக்குப் பேஷாவரும்னு பெரியவா தெரியாமேயா சொன்னா? படு ஜோரா வந்திருக்குடா உன் காய்கறித் தோட்டம்” என்றார் ரங்க நாராயண அய்யர். நீலப் பசும் மலைச் சிகரங்களிலிருந்து தொலைவில் தெரியும் நெருப்புப் புள்ளிகளைப் நிறைந்த பாத்திகளுக்கு நடுவே சிவப்புக்கள் தெரிந்தன. தக்காளி பழுத்தது. அந்த முண்டும் முடிச்சுமான சிவப்பு நிறப் பழங்களுக்குத்தான் எத்தனை கவர்ச்சி?
அந்தச் சிறிய காய்கறித் தோட்டத்தில் பாத்திகள் அமைந்திருந்த விதத்தில் ஒரு ஒழுங்கு இருந்தது. தெற்கே தக்காளிச் செடிகள், வடக்கே வெண்டைச் செடிகள், கிழக்கே வெந்தயம், கொத்துமல்லி - மேற்கே கீரை வகைகள். இன்னும் இரண்டொரு நாளில் விற்பனைக்குப் பறித்துக்கொண்டு போகலாம் என்று தீர்மானித்திருந்தான் வேலையன்.
அப்படியிருக்கும்போது அன்று பொழுது விடிந்ததும், தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அவனுக்கு அங்கே ஒர் அதிர்ச்சி காத்திருந்தது.
வெண்டைச் செடிகளில் வெண்டைக்காய் திருடு போயிருந்தது. தக்காளிப் பாத்தியில் தக்காளிப் பழங்கள் திருடு போயிருந்தன. கீரைப் பாத்தியில் கீரை குறைந்திருந்தது. வெந்தயக் கீரையும், கொத்துமல்லிக் கீரையும் யாரோ பாத்தியில் இறங்கிக் கொஞ்சம் பறித்துக் கொண்டு போயிருந்தார்கள். வேலையன் திகைத்தான். அத்தனை நாளுமில்லாமல் அன்று திருடுபோக ஆரம்பித்த காரணம் அவனுக்கு விளங்கவில்லை. இயற்கையாகவே அவன் நிலத்துக்குப் பாதுகாப்பும், காவலும், அதிகம். நான்கு புறமும் பெரிய பண்ணையார்களின் நிலங்கள். அவர்களுடைய நிலத்தைக் காவல் செய்ய ஏராளமான காவல் ஆட்கள் உண்டு. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, எந்தப் பக்கத்திலிருந்து அவன் காய்கறித் தோட்டத்திற்குத் திருட வரவேண்டுமானாலும் காவலைக் கடந்துதான் வர முடியும்! பெரிய பண்ணையார்களின் வாழைத் தோட்டத்தையும், கரும்புக் கொல்லையையும், நெல் வயல்களையும் கடந்து வந்து அவனுடைய காய்கறித் தோட்டத்தில் சேகாரம் செய்து கொண்டு போவதென்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அவ்வாறிருக்கும் போது காய்கறிகளும், கீரையும், எப்படித் திருடு போயிருக்க முடியுமென்று அவனுக்கு விளங்கவில்லை.
அன்று இரவு முழுவதும் அங்கேயே காவல் இருந்து அந்தத் திருட்டைக் கண்டு பிடிக்க விரும்பினான் அவன். அவனது ஐந்து செண்டு நிலத்தில் ஒரு கோடியில் அடர்ந்து வளர்ந்த மஞ்சள்நாறி மரம் ஒன்று இருந்தது. இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டுகையில் பூண்பிடித்த கிளுவைக் கம்புடன் வயலுக்குப்போய் அந்த மஞ்சள் நாறிமரத்துக் கிளையில் ஏறி மறைந்து உட்கார்ந்து கொண்டான். கிளைகளை அடர்ந்து தழுவியிருந்த பசுமை அவன் உட்கார்ந்திருப்பது கீழே தெரியாமலும், கீழே அவன் காணமுடிந்தபடியும் வகையாக அமைந்திருந்தது. நல்ல நிலாக் காலம். பாற்கடலில் நனைத்துப் பரப்பிய ஒவியம்போல் வயல் வெளிகளும், வாழைக்காடும், கரும்புக் கொல்லையும், மரங்களும், அழகாகத் தெரிந்தன.வேலையன் மரத்திலேயே இருந்து விழிப்பாகக் கண்காணித்துக் தொண்டிருந்தான். நாழிகைகள் ஒவ்வொன்றாய் நழுவிக் கொண்டிருந்தன.
விடிவதற்குச் சிறிது நாழிகைக்கு முன் வாண்டையாரின் குரல் வாழைத் தோட்டத்தருகே கேட்டது. அவரும் அவருடைய வாழைத்தோப்புக் காவல்காரன் பக்கிரியும் பேசிக் கொண்டே நடந்து வருவதை மரத்திலிருந்தபடியே கவனித்தான் வேலையன். அவர்கள் இருவரும் அவன் ஏறியிருந்த மஞ்சள் நாறி மரத்தடியிலே வந்து நின்றனர். "டேய், பக்கிரி இந்தப் பாத்தியிலே இறங்கி, ஒரு கட்டுக் கொத்து மல்லிக் இரையும், வெந்தயக் கீரையும் பிடுங்கிக் கொண்டா. எப்படியிருக்குன்னு பார்க்க, நேற்றுக் கொஞ்சம் கொண்டு போனேன். நல்ல ருசி.” என்று தம் காவல்காரப் பக்கிரிக்கு ஆணையிட்டார் வாண்டையார்.
பக்கிரி பாத்தியில் இறங்கித் தாறுமாறாக உழப்பிக் கீரையும், கொத்துமல்லியும் பிடுங்கிக் கொண்டு வந்தான்.
"விலைக்கு வாங்கறதாயிருந்தா நாலும், நாலும், எட்டணாவாவது கேட்பான்! பயல் தோட்டம் போட்டாலும் போட்டான்; நமக்கு யோகம்” என்று கூறிச் சிரித்துக் கொண்டே வாண்டையார் கீரையும் கொத்துமல்லியும் வாங்கி மேல் துண்டில் மறைத்தவாறு நடந்தார். பக்கிரி பின் தொடர்ந்தான்..
சிறிது நேரம் கழித்து 'முக்காணிமங்கலமும்' அவருடைய கரும்புத் தோட்டத்துக் காவலாளும் அந்தப் பக்கமாகப் பேசிக் கொண்டு வந்தார்கள். வேலையன் இன்னும் மரத்தின் மேலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான். .
“டேய்? சாம்பான்; இந்தப் பக்கமாகக் கீரைப் பாத்தியிலே இறங்கி ஒரு கட்டு முளைக்கீரை பிடுங்கு பார்க்கலாம்” என்று தம் காவலாளை ஏவினார் முக்காணி மங்கலம். அவன் இறங்கிப் பிடுங்கிக் கொண்டு வந்தான். அவர்கள் இருவரும் போன சிறிது நேரத்தில் புலிவலம் வந்த நல்லூர் வந்தார். அவர் தனியாகவே வந்ததால் தாமே இறங்கிமேல் வேஷ்டி நிறைய வெண்டைக்காய் பறித்துக் கொண்டு திரும்பினார்.அவர் தலை மறைந்ததும் ரங்க நாராயண ஐயர் வந்து ஒரு துணிப் பை நிறைய அவசர அவசரமாகத் தக்காளிப்பழங்கள் பறித்துக் கொண்டு புறப்பட்டார். பொழுது நன்றாக விடிந்துவிட்டது. வேலையன் மஞ்சள் நாறிமரத்திலிருந்து கிழே இறங்கிக் காய்கறித் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தான். சோரம்போன தோற்றத்தில் அது தாறுமாறாகக் காட்சியளித்தது.அவன் நெஞ்சில் உணர்ச்சிகொதித்தது. கைகள் துடித்தன.தோள்கள் புடைத்தன. ஏழைமையை நினைத்து அடங்கினான். வாண்டையார் வீட்டு வாழைத் தோட்டத்தில் களவு போகாமல் காக்கக் காவலாள் இருக்கிறான். முதலியார் வீட்டுக் கரும்புக் கொல்லைக்கும் காவல். பண்ணையார் வீட்டுநிலத்துக்கும், ஐயர் வீட்டு நெல் வயலுக்கும், எல்லாவற்றுக்கும் கட்டு உண்டு. காவல் உண்டு!
அவன் சொத்து மட்டும் எடுப்பார் கைப் பிள்ளையா? செல்வமும், செல்வாக்கும் இல்லாவிட்டால் மனிதனாகவே பிறக்கக்கூடாது' என்று பிறவியின் மேலேயே அடக்கவும், தாங்கவும் முடியாததொரு வெறுப்பு அவனுக்கு உண்டாயிற்று. வேலையன் கொதிப்பை வெளிக்காட்ட முடியாத ஏலாமையோடு உள்ளேயே கொதித்தான். ஏழையின் கொதிப்பு நீறு பூத்த நெருப்பு!
ரங்கநாராயண ஐயர் தம் நிலத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போவதற்காக அந்தப் பாதையாக வந்தார். அவர் கையில் அந்தப் பையும் இருந்தது. “வேலையா! உன் காய்கறித் தோட்டம் நல்ல பலன் வச்சிருக்குடா, மண் புழு நிறைய இருந்தாக் காய்கறிப் பயிருக்கு யோகம்டாப்பா..” என்றார் தக்காளிப் பழப்பையை முதுகுக்குப் பின்னால் மறைக்க முயன்று கொண்டே
‘சாமி மண்ணுக்கு மேலேயும் புழுக்கள் இருக்குங்க. மண்ணுக்குள்ளற இருக்கும் புழுவைத்தான் நீங்க சொல்lங்க” என்று சொல்லி அவரைப் பார்த்துச் சிரித்தான் வேலையா. அந்தச் சிரிப்புக்குத்தான் எத்தனை அர்த்தங்கள்?
(தாமரை, நவம்பர், 1959)