நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/வாழ்வில் நடவாதது

18. வாழ்வில் நடவாதது

ரத வித்யா பவனத்தின் கலாசாலைக் கட்டடங்களுக்கு மேல் குடை பிடிப்பது போல் தென்னை முதலிய மரங்கள் பசுமைச் சூழலை உண்டாக்கியிருந்தன. யுவதிகளுக்கும், இளைஞர்களுக்கும் நாட்டியக் கலையின் பல்வேறு அம்சங்களையும் இசையையும் கற்பிக்கும் கலாசாலைதான் அது. நந்தகுமார் என்று ஒரு இலட்சியவாதி, தம்முடைய உடல், பொருள், ஆவி, கலைத்திறன் ஆகிய எல்லாவற்றையும் செலவிட்டு அந்தப் பரத வித்யா பவனத்தின் கலாசேவைக்கு ஆதார சுருதியாக இருந்து கொண்டிருந்தார். எல்லைக்கு உட்படாத கலையின் பிரவாக சக்திக்குக் கலாசாலை என்ற பெயரில் உன்னதமான இலட்சிய எல்லையைக் கோலி வளர்த்து வந்தார் அவர். இயற்கையழகு மிக்க கேரள தேசத்தில், மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கிலுள்ள வளமான கிராமம் ஒன்றில் பரத வித்யா பவனம் அமைந்திருந்தது.

மனோரம்மியமான ஒரு மாலைப் பொழுது. திருமணம் நடக்கிற போது கள்ளத்தனமான ஒரக் கண்களால் கணவனை நோக்க முயலும் மணமகளின் விழிகளைப் போலக் கதிரவன் மேக முகமூடியில் மறைந்து உலகத்தைக் கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். மலைச் சாரலின் குளிர்ந்த பூங்காற்று உல்லாசம் நிறைந்த எண்ணங்கள் போலப் புறத்தே வீசிக் கொண்டிருந்தது. எங்கும் குளிர்ந்த சூழ்நிலை. வித்யாபவனத்தில் ‘பரதநாட்டிய வகுப்பு முடிந்து, மாலைக் கால மணி அடித்து வெகு நேரம் ஆகி விட்டது. மரகதக் கம்பளத்தின் மேல் பட்டுப் பூச்சிகளைப் பறக்க விட்டாற் போல, இளைஞர்களும், யுவதிகளும் தத்தம் சிநேகிதர்கள், சிநேகிதிகள் கோஷ்டியோடு உலாவப் புறப்பட்டு விட்டார்கள்.

வாணி, அச்சன் ஓடைக் கரையில் உட்கார்ந்திருந்தாள். தில்லைநாதன் இன்னும் வரவில்லை. கரையோரத்து மகிழ மரத்திலிருந்து உதிர்ந்த மகிழங் கொட்டைகளை எடுத்து, ஒவ்வொன்றாக ஓடை பரப்பில் எறிந்தாள். அது ஒரு வேடிக்கையான விளையாட்டாக இருந்தது அவளுக்கு. தில்லைநாதன் வந்து சேர்கின்ற வரை தனிமையை எப்படியாவது கழிக்க வேண்டுமே? அது இந்த விளையாட்டின் மூலம் இனிமையாகக் கழிந்து கொண்டிருந்தது. தண்ணிரில் ‘குபுக்’கென்று விழுந்த மகிழங்கொட்டை வளையம் வளையமாகச் சுழன்று விரியும் தரங்கங்களைத் தோற்றுவித்தது. தரங்கங்கள் விரிந்து விரிந்து இறுதியில் குறுகிக் குறுகி, தோன்றிய இடத்திற்கே வந்து ஒடுங்கின, மூலத்திலே தோன்றி முடிவில் மூலத்திலேயே ஐக்கியமாகும் பிரகிருதியைப்போல.

மகிழங்கொட்டைகளை ஒவ்வொன்றாக மெல்ல லய சுகத்தோடு அவள் வீசி எறிந்து கொண்டிருந்த போது பின்னாலிருந்து ஒரு பெரிய கல் தண்ணீரில் வந்து விழுந்தது. வாணி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். ‘தில்லை’ பின்புறம் கலகல வென்று சிரித்துக் கொண்டு நின்றான்.

வாணியும் சிரித்தாள். “கலாசாலை அப்போதே முடிந்துவிட்டதே! உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு நேரம்” என்று கேட்டாள்.

"நீங்களெல்லாம் மாணவர்கள்! கலாசாலை முடிந்ததும் நினைத்த இடத்திற்கு ஓடிவந்துவிடலாம். நான் ஆசிரியன். என் பொறுப்புக்களை முடித்து விட்டுத்தானே வரவேண்டும்? மேலும் இன்று கலாசாலை அதிபர் வந்திருந்தார்.”

“யார்? நந்தகுமாரா..?”

"ஆமாம் வாணி அவர்தான் வந்திருந்தார்.”

அவன் அவள் அருகில் உட்கார்ந்தான். தெளிவாக இருந்த அச்சன் ஓடை நீர்ப்பரப்பில் அவர்களுடைய ஜோடி நிழல் ஆடி அசைந்தது.

தில்லை, நந்தகுமாரின் பரதவித்யாபவனத்தில் ஒர் நடன ஆசிரியன். நடனத்திற்கு என்றே படைக்கப்பட்டது போன்ற மன்மத சரீரம் அவனுக்கு. இருபத்தைந்து அல்லது இருபத்தாறு வயது இருக்கும். பெண்மையின் நளினமும் ஆண்மையின் கம்பீரமும் கலந்த சுந்தரபுருஷன். நல்ல இதயமும், இனிய குரலும், அன்பாகப் பழகும் சுபாவமும் அவனிடம் அடைக்கலமாகியிருந்த நற்குணங்கள்.

வாணி, தென் கேரளத்தில் உள்ள ஜனார்த்தனம் என்ற ஊரில் பிறந்தவள். தாயை இழந்து தந்தையின் ஆதரவில் படித்துக் கொண்டிருந்தபோது, தந்தையையும் பறி கொடுத்து அனாதையானாள். அவளுடைய தாய்மாமன் ஒருவர் எங்கெங்கோ சிபாரிசுகள் பிடித்து நந்தகுமாரின் பரதவித்யா பவனத்தில் கொண்டு வந்து சேர்த்துவிட்டுப் போனார். வித்யாபவனத்தில் கற்பிக்கப்படும் கலைகளில் அவளுக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் ஆசிரியர்கள் பாராட்டியதனால் தொடர்ந்து அங்கே வசதிகளைப் பெற்றுக் கற்கும் வாய்ப்பும், ஊக்கமும் அவளுக்கு ஏற்பட்டன. இந்த வாய்ப்பையும், ஊக்கத்தையும் அவளுக்கு ஏற்படுத்தியதில் முக்கியத்துவம் தில்லைநாதனுக்கு உரியது.

கேரள தேசத்துக்கென்றே அமைகின்ற வாளிப்பான சரீரமும் உயரமும் பெற்ற வாணி, அந்த இளம் நடன ஆசிரியனின் உள்ளத்தில் அழியா இடம் பெற்றுவிட்டாள். கலைத்துறையில் அந்தப்பெண்ணுக்கு நடனம் கற்பிப்பதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதினான் அவன். வித்தியா பவனத்தில் இருபத்தைந்து யுவதிகள் அவனிடம் நடனம் கற்று வந்தனர். அத்தனை பேரிலும் அவன் இதயத்தில் நடனம் ஆடியவள் வாணி ஒருத்திதான்.வாணியின் இதயத்திலோ அந்த இளம் நடன ஆசிரியனைப் பற்றிய இனிய எண்ணங்கள் குடலைக்குள் இட்டுவைத்த சண்பகப் பூக்களைப்போல வாசம் மண்டிக் கிடந்தன.

தில்லைநாதன் வாணியின் மேலும் வாணி தில்லைநாதன்மேலும் கொண்ட கலைக் காதல், குணங்களின் சங்கமத்தில் தோன்றிய தெய்வீகக் காதல். தொடக்கத்தில் கலாசாலையில் நடன வகுப்பு நேரங்களில் மட்டும் பழகிய அவர்கள், தனித்துப் பழகவும், நெருக்கம் உண்டாக்கியது ஒரு சந்தர்ப்பம்.

இந்திய சர்வ கலாசாலைகளின் பிரதிநிதிகள் அடங்கிய தூது கோஷ்டி ஒன்றைத் தமது வித்தியா பவனத்தைப் பார்வையிடுவதற்காக அழைத்து வந்திருந்தார் நந்தகுமார். அவருடைய வேண்டுகோளின்படியே கலாசாலை ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளும் தூது கோஷ்டியினர் கண்டு மகிழ்வதற்காகச் சில நாடக, நாட்டிய, இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

தில்லைநாதன் தன்னுடைய நடன வகுப்பின் சார்பாக உத்தரராம சரிதத்தில் சில நிகழ்ச்சிகளை நாட்டிய வடிவில் சித்திரித்துக் காட்ட எண்ணியிருந்தான். நடன வகுப்பில் பத்துப் பன்னிரண்டு இளைஞர்களும் படித்து வந்தனர். அவர்களிலே ஒருவனை ராமனாவும், பெண்களில் வாணியைச் சீதையாகவும் நடிக்கச் செய்து ஒத்திகை பழக்கி வந்தான் அவன்.

கடைசி ‘ரிஹர்சல்’ அன்று நந்தகுமார் நேரில் வந்து பார்வையிட்டார். சீதையாக நடித்த வாணியின் நடிப்பு அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. ராமனாக நடித்த மாணவனின் நடிப்பு அவ்வளவாக அவருக்குப் பிடிக்கவில்லை. “தில்லைநாதன்! தயவுசெய்து ஒரு சிறு மாற்றம் செய்து கொள்ளுங்கள். இந்தப் பெண்ணின் நடிப்பும், நடனமும் அற்புதமாக இருக்கின்றன. ஆனால், இந்த மாணவனின் நடிப்பு சோபிக்கவில்லை. அதனால் இந்த மாணவனுக்குப் பதிலாக நீங்களே இந்தப் பெண்ணோடு ராமனாக நடித்துவிடுங்கள். இனிமேல் வேறு மாணவர்களைத் தயார் செய்யவும் நாள் கிடையாது. நீங்களே நடிப்பதானால் பயிற்சி உங்களுக்குத் தேவையில்லை” என்றார்.

மாணவர் யாரேனும் நடிப்பதையே தில்லை விரும்பினான். ஆனால் அதிபரின் யோசனையை எதிர்க்கத் தயங்கியதால், அதை ஏற்றுக் கொண்டான்.

சர்வகலாசாலைத் தூது கோஷ்டியினர் முன்னால் தில்லைநாதனும், வாணியும் நடித்துக் காட்டிய உத்தரராம சரிதக் காட்சிகள் அன்றைய நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சிகரம் வைத்ததுபோல அமைந்துவிட்டன.ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொல்வது, தீக்குளிக்கும்போது பூமி பிளந்து, சீதையைத் தன் மடியில் தாங்கிக் கொள்வது ஆகிய நிகழ்ச்சிகளைத் தில்லைநாதனும் வாணியும் நடித்துக் காட்டியபோது பார்த்தவர்களுக்கு மெய் சிலிர்த்துவிட்டது. அரங்கத்தில் யாரோ ஒரு ஆணும் பெண்ணும் நடிக்கிறார்கள் என்பதை மறந்து, பவபூதியின் காவியம் கண்முன் தத்ரூபமாக நிகழ்வது போன்ற உணர்வை அடைந்துவிட்டனர், ரசிகர்கள். இந்தச் சம்பவத்திலிருந்துதான் தில்லைநாதன் வாணி இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள். அன்பு, உணர்ச்சியின் எல்லைக்கு வந்து பழக்கமாக மாறியிருக்கும் நிலையில் இருந்தன அவனும் அவளும் .

"ஏன்? இன்றைக்கு இவ்வளவு மெளனம்?” - ஒடைத் தண்ணீரைக் காலால் அளைந்து கொண்டே அமைதியாக உட்கார்ந்திருந்த தில்லைநாதனைப் பார்த்துக் கேட்டாள் வாணி.

“ஒன்றுமில்லை. ஏதோ யோசனை.”

"அந்த யோசனை எனக்குத் தெரியக்கூடாததோ...?”

"அப்படி ஒன்றுமில்லை. அது இருக்கட்டும்! நளினியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“எந்த நளினியைச் சொல்கிறீர்கள்?”

“எத்தனை நளினிகள் இருக்கிறார்கள் இங்கே? ஒன்றும் தெரியாதவள் போலக் கேட்கிறாயே? அவள்தான்... உன்னோடு வகுப்பில் நடனம் கற்கிறாளே..? கலாசாலை அதிபரின் மகள் நளினி...?”

“அந்த நளினியைப் பற்றி நினைப்பதற்கு இப்போது அப்படி என்ன அவசியம் வந்துவிட்டது?”

“இல்லை? அவளுடைய போக்கு எனக்கு ஒரு மாதிரிப் படுகிறது!... நமக்கெல்லாம் படியளக்கும் வள்ளல் நந்தகுமாரின் புதல்வியாயிற்றே என்று பார்க்கிறேன்.”

“என்ன விஷயம்.?”

"உன்னிடம் சொன்னால் நீ வேறு விதமாக நினைத்துக் கொண்டு என் மேலேயே சந்தேகப்பட ஆரம்பித்து விடுவாய். அப்பப்பா! இந்தப் பெண்கள் இருக்கிறார்களே..?” - ஒரக்கண்ணால் வாணியைப் பார்த்துக் கொண்டே கூறினான் தில்லைநாதன்.

“சொல்லாவிட்டால் அதைவிடப் பெரிய சந்தேகம் ஏற்படும். சொல்லியே விடுங்களேன்.”

"வாணி! இந்த உலகத்தில் பிறக்கும்போதே நான் செய்த மாபெருங் குற்றம் அழகான நிறத்தோடும் அழகான உடலோடும் பிறந்ததுதான். நான் யாரை விரும்பவில்லையோ அவர்கள் என்னையும் என் அழகையும் விரும்பினால் அதைவிட எனக்கு வேறு என்ன அபாயம் வேண்டும்?”

"சொல்வதைக் கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லுங்களேன்.”

"இந்த விஷயத்தை நீ புரிந்து கொள்வதைவிடப்புரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆனாலும் சொல்கிறேன். இன்றைக்குக் கலாசாலை முடிந்ததும் நீங்களெல்லாம் போய்விட்டீர்கள் அல்லவா? நான் என் அறைக்குப் போய் நாட்டிய உடைகளையும், கால் சலங்கைக் கொத்துக்களையும் கழற்றி வைத்துக் கொண்டிருந்தேன். நளினி சுற்றும் முற்றும் மிரள மிரளப் பார்த்துக் கொண்டே என் அறைக்குள் நுழைந்தாள்.

“ஏதேதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் சிரித்துப் பேசிக்கொண்டு நின்றாள்.பின்பு சிறிது நேரம் கழித்துப் போய்விட்டாள். அவள் போன பிறகுதான் அவளுடைய தனியான வருகையின் அர்த்தம் எனக்குப் புரிந்தது. என் மேஜைமேல் இந்தக் கடிதத்தை வைத்துவிட்டுப்போயிருக்கிறாள்! இதைப் படித்துவிட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை எனக்கு இந்தா! நீயும் வேண்டுமானால் படித்துப் பார். ஆனால் என் மேல் சந்தேகப்படாதே."

தில்லைநாதன் தன் சட்டைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து வாணியிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கிக் கொண்டாள். ரசம் பூசிய கண்ணாடியில் ஆவி படிந்து ஒளி மங்குவதுபோல நுணுக்கமான மாறுபாடு ஒன்று அவள் முகபாவத்தில் ஏற்பட்டது. வாணி பதில் பேசாமல் மெளனமாக ஆழம் காண முடியாத அமைதியுடன் கடிதத்தை அப்படியே அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.

“ஏன்? படிக்கவில்லையா வாணி?”

"கூடாது! நீங்கள் இந்தக் கடிதத்தை என்னிடம் கொடுத்ததே தவறு. என்னைப் போலவே நளினியும் ஒரு பெண்! உங்களைப் பற்றி அவள் மனத்தில் நிறைந்திருக்கும் உணர்ச்சி வேகங்களை நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. உங்களை நான் உறுதியாக நம்புகிறேன்.”

“என்னை உறுதியாக நம்புகிறவள் என்கிறாய்? இந்தக் கடிதத்தைப் படிப்பதனால் அந்த நம்பிக்கை கெட்டுவிடப் போகிறதா! சும்மா படி, வாணி, ஒரு பெண்ணுக்கு எவ்வளவு அசட்டுத்தனம் இருக்க முடியும் என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு சரியான உதாரணம்.”அவன் கடிதத்தைப் பிரித்துத் திரும்பவும் அவள் கையில் கொடுத்தான்.

வேண்டா வெறுப்பாக அதை வாங்கிப் படித்தாள் வாணி.

"அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான நடன ஆசிரியர் தில்லைநாதர் அவர்களுக்கு; ஆசை வெட்கம் அறியாது என்று பழமொழி சொல்வார்கள். பலநாட்கள் பலமுறை வெட்கத்தை மீறிய ஆசையுடன் உங்களுக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறேன். முடிவில் கடைசி விநாடியில் ஆசையை மீறி எழுந்த வெட்கத்தால் அவற்றை உங்களிடம் சேர்க்காமல் கிழித்துப் போட்டும் இருக்கிறேன். இதோ, இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேனே இந்தக் கடிதம்கூட அப்படி ஆனாலும் ஆகிவிடலாம். என் மனத்திலுள்ளதை வெளிப்படையாகத் திறந்து சொல்வதற்கு நான் ஏன் இவ்வளவு வெட்கப்பட வேண்டும் என்பதுதான் எனக்கே புரியவில்லை!

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உங்களைக் கண்டிருக்கிறேன். என் மனத்தில் உங்களுக்கு ஒர் நிரந்தரமான இடம் ஏற்பட்டுவிட்டது. உங்களிடம் மாணவியாகச் சேர்ந்து நடனம் பயிலத் தொடங்குவதற்கு முன்பே அப்பாவோடு அவர் கலாசாலையைப் பார்வையிட வரும்போதெல்லாம் நானும் வந்திருக்கிறேன். கவர்ச்சிகரமான உங்கள் சுந்தரரூபம் அப்போதெல்லாம் என் மனத்தில் ஒருவிதமான குதுகுதுப்பை உண்டாக்கும். உண்மையைச் சொல்கிறேன். உங்களைப் பார்ப்பதற்காகவே நான் அப்பாவோடு வருவேன். அப்பாவிடம் பிடிவாதம் பிடித்து நடன வகுப்பில் சேர்ந்ததுகூட உங்களோடு பழகலாம் என்ற ஆசையால்தான். ஆசை வெள்ளத்திற்கு அணையாகப் போட்டு அடைத்து வைத்திருந்த வெட்கத்தை உடைத்து, இந்தக் கடிதத்தில் வார்த்தைகளாக வார்த்திருக்கிறேன். வாழ்க்கை என்ற அரங்கத்தில் என்றென்றும் உங்கள் மாணவியாகவே ஆடிக் கொண்டிருக்க விரும்புகிறேன். அந்தப் பாக்கியத்தைக் கவிகள் காதல் என்கிறார்கள் போலிருக்கிறது. கவிகள் சொல்கிற அது எதுவோ? அதை உங்கள்மேல் நான் கொண்டுவிட்டேன். என்னை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. நான் கூடிய சீக்கிரம் அப்பாவிடமே சொல்லி, உங்களை என்னுடையவராக்கிக் கொண்டுவிடலாம் என்றிருக்கிறேன்.

உங்கள் அடியாள்,

நளினி”

கடிதத்தைப் படித்துவிட்டு வாணி தில்லையைத் திரும்பிப் பார்த்தாள்."இனிமேல் உங்களுக்கென்ன கவலை? ஐசுவரியமே உங்களைத் தேடி வருகிறது. கலாசாலையின் அதிபரே தம்முடைய ஒரே புதல்வியை மணந்து கொள்ளச் சொன்னால், வேண்டாம் என்றா மறுத்துவிடுவீர்கள்?"

“கனவில்கூட நினைக்காதே வாணி! இதோ! இந்தக் கடிதத்திற்கு நான் செய்யும் மரியாதையைப் பார்!” - அவள் கையிலிருந்த கடிதத்தைப் பறித்துச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து, அச்சன் ஒடையில் எறிந்தான் தில்லை. மல்லிகை அரும்புகளைத் துரவியதுபோல் நீர்ப்பரப்பில் கிழிந்த காகிதத் துணுக்குகள் மிதந்தன. “நன்றாக இருக்கிறது உங்கள் காரியம்! அதற்காகக் காகிதத்தை இப்படியா கிழிப்பார்கள்?.என்ன ஆத்திரம் உங்களுக்கு?.”

“காகிதத்திற்கு மட்டுமில்லை வாணீ! அவள் இதயத்தில் என்னைப் பற்றிக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் இதே கதிதான் நேரப் போகிறது:”

"நான் அனாதை ஏழை! அன்பைத் தவிர வேறு எதையும் உங்களுக்குக் கொடுக்க முடியாதவள். அவளோ உங்களைக் கலைஞராக வளர்த்துக் கலைஞராக வாழ வைத்துக் கொண்டிருக்கும் வள்ளலின் மகள்!... எனக்காக உங்கள் வசதிகளை இழக்கக்கூடாது!”

"வாணீ! நம்மை ஒன்றுபடுத்துவதற்கு ஒரு புனிதமான சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுத்ததே, பவபூதியின் மகாகாவியம் - அதன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்! என் உடலும் உள்ளமும் உன் ஒருத்திக்குத்தான் சொந்தம்.”

“வாணீ அவனை இமைக்காமல் பார்த்தாள். ஊடுருவும் அந்த விழிக்கூர்மை அவன் உடலைப் பார்த்ததோ? அல்லது உடல் வழியே உள்ளத்தைப் பார்த்ததோ?”

நேரமாகி விட்டதை உணர்ந்து இருவரும் எழுந்து நடந்தனர். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் இருவருடைய வழியும் நடையும் தனித்தனியே பிரிந்தன.

அந்த வருடம் வித்யாபவனம் கோடைவிடுமுறைக்காக மூடப்பட்டபோது தில்லைநாதன் வெளிநாடு சென்று திரும்ப வேண்டிய அவசியம் நேர்ந்தது. இந்தியாவிலிருந்து கலாசாரத் தூது கோஷ்டி ஒன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டது. நந்தகுமாரின் பெருமுயற்சியால் நாட்டியக்கலையின் சார்பில் தில்லைநாதனுக்கும் அதில் ஓர் இடம் கிடைத்தது. தில்லைநாதன் அதற்கு ஆசைப்படவுமில்லை. அதை விரும்புவமில்லை. ஆனால், தம்முடைய கலாசாலையின் சார்பில் அவன் கண்டிப்பாகப் போய்த்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார் நந்தகுமார். அவனால் மறுக்க முடியவில்லை. அமெரிக்கா போக ஒப்புக் கொண்டான். ‘வாணி என்ன சொல்வாளோ? என்று அஞ்சியே முதலில் அவன் நந்தகுமாரிடம் மறுத்துப் பார்த்தான். வாணியைத் தனியே சந்தித்தபோது, “மூன்று மாதச் சுற்றுப் பிரயாணம்தானே? நான் எப்படியும் இந்தப் பிரிவைப் பொறுத்துக் கொள்கிறேன். உங்களுக்குப் பேரும் புகழும் ஏற்பட்டால் அதில் எனக்கு மட்டும் பெருமையில்லையா? இங்கே ஒரு ஏழைப் பெண்ணின் இதயம் உங்களுக்காகத் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.இந்த அச்சன் ஓடையையும் இதன் பரிசுத்தமான தண்ணீரையும் போல என் ஆத்மாவை உங்களுக்காகச் சமர்ப்பிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.சந்தோஷமாகப் போய்வாருங்கள்” என்று உருக்கமாகவேண்டிக் கொண்டாள். இதனால் தான் அவன் நந்தகுமாரிடம் சம்மதம் தெரிவித்தான்.

ஆனால் நளினியும் நந்தகுமாருமாகச் சேர்ந்து செய்திருந்த அந்தரங்க ஆலோசனைகளை அவன் கண்டானா? பாவம்!

சென்னை வரை போய் அங்கிருந்து விமானத்தில் புறப்படுவதாக ஏற்பாடு. அங்கு போய்ச்சேர்ந்த மறுநாள்தான் அவனுடைய மதிப்பிற்குரிய பெரியவராக இருந்த அந்த நல்லமனிதர் நந்தகுமாருடைய சூழ்ச்சி அவனுக்குப் புரிந்தது. சென்னையில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் மாடி அறையில் அன்று இரவு அவர் அவனிடம் அதைக் கூறினார். அப்போது நளினியும் அவர் அருகில் இருந்தாள்.

“தில்லைநாதன், என்னிடம் நீ இன்றுவரை கொண்டிருக்கிற நன்றியின் அளவை மீறிய ஒர் விலையை இப்போது உன்னிடம் கேட்கப் போகிறேன்!”

“என்னை வளர்த்துக் கலைஞனாக்கிவிட்ட உங்களுக்கு எத்தகைய காரியத்தையும் செய்யக் கடமைப்பட்டவன் நான்!”

“ஆனால் இன்று நான் உன்னைச் செய்யச் சொல்லுகிற காரியத்தைக் கேட்டவுடன் நீ என்னைச் ‘சூழ்ச்சிக்காரன்’ என்று திட்டாமல் இருந்தால் அதுவே பெரிய காரியம்”

"நீங்கள் செய்கிற சூழ்ச்சி எதுவாக இருந்தாலும் அது நன்மைக்காகத்தான் இருக்கும்.”

“தில்லை! என்னுடைய இதயத்தின் அந்தரங்க வாயிலைத் திறந்து பேசுகிறேன். கோபித்துக் கொள்ளாதே! உனது எதிர்காலத்தின் பிரகாசமான நிலையை எதிர்பார்த்து, நீயே விரும்பாத சில திட்டங்களை நான் உனக்காக வகுத்திருக்கிறேன். இதுவரை உன்னிடம் அவற்றை மறைத்ததற்காக என்னை மன்னித்துவிடு. அத்தோடு என்மேல் நீ வைத்திருக்கும் நன்றி மெய்யானால் என் சொல்லைத் தட்டாதே.”

"சொல்லுங்கள்.”

“அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன் உனக்கும் நளினிக்கும் திருமணம் நடந்தாக வேண்டும். நீ மட்டும் அமெரிக்கா செல்ல எற்பாடு செய்திருப்பதாக உன்னிடம் முன்பு நான் கூறியது வெறும் பொய். வருகிற ஞாயிற்றுக்கிழமை உங்கள் திருமணத்திற்குக்கூட வடபழநியில் ஏற்பாடுகளையெல்லாம் தயாராகச் செய்து வைத்திருக்கிறேன்.”

“உங்கள் வேண்டுகோள் இவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஏற்கனவே வேறொரு பெண்ணுக்கு என்னையும் என் இதயத்தையும் திருப்பிப் பெற முடியாத வகையில் கொடுத்துவிட்டேனே?”

"வாணி உன் இதயத்திலும் நீ அவள் இதயத்திலும் இடம்பெற்று ஒன்றிவிட்டதை நான்அறிவேன் தில்லை! ஆனால் எனக்காக நீ அவளைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்! எனக்குப் பின் என் மகளின் கணவனாக வாய்க்கிறவன் எவனோ அவன்தான் என் இலட்சியங்களையும் கலாசாலையையும் கொண்டுசெலுத்தமுடியும்! அந்த மகத்தான பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கக் கனவு கண்டேன்.”

“தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். அந்த உயரிய இலட்சியங்களை நிறைவேற்றும் பாக்கியம் இந்த ஏழைக்கு வேண்டாம்!”- தில்லைநாதன் அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான். நந்தகுமாருக்குக் கோபம் வந்துவிட்டது.

“நீவிரும்பும் அந்த வாணியே உன்னிடம் வந்து ‘நான் உங்களைக் காதலிக்கவில்லை, என்னை மறந்துவிடுங்கள்’ என்று சொன்னால் நீ என்ன செய்வாய்?”

"வாணியை அங்கம் அங்கமாகச் சித்ரவதை செய்தாலும் அவள் இப்படிச் சொல்லவே மாட்டாள். சொன்னால் அப்புறம் நீங்கள் சொல்கிறபடி செய்யத் தில்லைநாதன் தயாராயிருக்கிறான்!” பந்தயம் இடுவது போலப் பேசினான் அவன்.

அவ்வளவுதான்! அன்றிரவே புறப்பட்டுப் போய் மறுநாள் காலை வானியைச் சென்னைக்குக் கூட்டிக் கொண்ட வந்துவிட்டார் நந்தகுமார். என்ன சொல்லி அவள் மனத்தை மாற்றினாரோ தெரியவில்லை! வாணி சென்னைக்கு வந்தாள்.நளினியையும் நந்தகுமாரையும் அருகில் வைத்துக்கொண்டே, “என்னை மறந்துவிடுங்கள்! உங்களை நான் காதலிக்கவில்லை. தப்பித்தவறி எப்போதாவது காதலிப்பதுபோல நடந்து கொண்டிருந்தேனானாலும் அது பொய்!” என்று குமுறி வரும் அழுகைக்கு இடையே தில்லையிடம் கூறி விட்டு, அங்கே தாமதிக்காமல் உடனே புறப்பட்டுப் போய்விட்டாள்.

இடிவிழுந்து எரிகின்ற பச்சைமரம் போல உடைந்து போய்ப் பற்றி எரிந்தது தில்லைநாதனின் இதயம். ‘வாணி இப்படி மோசம் பண்ணுவாள்’ என்று அவன் கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராதது - நடவாதது - வேகமாக நடந்தேவிட்டது. கப்பல் உடைந்து கடலில் விழுந்தவன் எது கிடைத்தாலும் அதை ஆதாரமாகப் பற்றிக் கொள்வதுபோலத் தில்லைநாதன் தன்னையும் தன் உள்ளத்து ஆசைகளையும் உயிரோடு அவருக்கு மலிவான விலையில் நன்றி என்ற பேரில் அர்ப்பணம் செய்துவிட்டான்.

ஞாயிற்றுக்கிழமையன்று வடபழநியில் நளினிக்கும், தில்லைநாதனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா செல்லும் கலாசாரத் தூது கோஷ்டியுடன் புதுமணத் தம்பதிகளாகவே இருவரையும் விமானம் ஏற்றி அனுப்பினார். எல்லாத் திட்டத்தையும் வெற்றிகரமாக நடத்திவிட்ட பெருமையோடு ஊர் திரும்பினார்.

அமெரிக்காவில் சுற்றுப்பிரயாணத்தின்போது ஆங்காங்கே நளினியும், தில்லைநாதனும் ஆடிக் காட்டிய நடனங்கள் மிகச் சிறப்பாக அமைந்தன. அந்நாட்டுப் பத்திரிகைகளும் பிரமுகர்களும் அதைப் பெரிதும் புகழ்ந்தனர். அதையொட்டி இந்தியாவிலும் அவர்கள் புகழ் பரவியது. புதிய சூழ்நிலைகளும் கியாதியும் (மேன்மையும்) தில்லைநாதனுடைய மனத்தில் கவலையை மாற்றிவிட்டன.

அவர்களுக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட புகழையும் வரவேற்பையும் பத்திரிகைகளில் படித்துப் படித்துப் பெருமிதம் அடைந்தார் நந்தகுமார். அவர் படித்ததுபோலவே அந்த அபாக்கியவதி வாணியும்தான் அவற்றையெல்லாம் படித்துப் பெருமிதப்பட முயன்றாள். ஏக்கம்தான் குமுறியது. ‘எல்லாம் தான் ஒருத்தி செய்த தியாகத்தால் வந்த பெருமை’ - என்பது அவளுக்குத் தெரியும். இருந்தாலும் அதைப் பெருமையாக அவளால் உணர முடியவில்லை. ஏங்கி ஏங்கி உடல் இளைத்துக் களையிழந்து கொண்டிருந்தாள் அவள். தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தனக்காக இழக்க முடியாததை இழக்க முன் வந்த அந்தப் பெண் தெய்வம் ஏக்கம் தாளாமல் தற்கொலை முயற்சியில் இறங்கிவிடக்கூடாதே என்பதற்காகக் கலாசாலைக் கட்டடத்திற்குள்ளிருந்து வெளியேற விடாது அவளுக்கு வசதிகள் செய்து காத்து வந்தார் நந்தகுமார். ஆனால் பாவம்! அவள் இதயம் என்றோ செத்துவிட்டது என்பது அவருக்கு எப்படித் தெரியும்?

விதி, மனிதர்களுக்குப் புரியாதது மட்டுமல்ல! மனிதர்களைவிட பயங்கரமானதும்கூட! நியூயார்க்கில் தங்கியிருந்தபோது, ஒருநாள் ஜூரம் என்று சுருண்டு படுத்தாள் நளினி. தில்லைநாதன் பதறிப் போனான். பெரிய டாக்டர்கள் வந்து மருந்து கொடுத்தனர். நோயாயிருந்தால் அல்லவா மருந்துக்கு அழியும்? அதுதான் விதியின் பயங்கரமான அவஸ்தை யாயிற்றே? மூன்று நாள் ஜுரத்தோடு போராடிவிட்டு, அவனையும் உலகத்தையும் விட்டு, அவனும் உலகமும் பின்தொடர முடியாத இடத்துக்குப் போய்ச்சேர்ந்துவிட்டாள் நளினி.

தில்லைநாதன் கதறினான். தூது கோஷ்டியினர் வந்து ஒன்றரை மாதம்கூட ஆகவில்லை. மன ஆறுதலைப் பெற வேண்டும் என்பதற்காகத் தில்லைநாதனுக்கு மட்டும் ஒரு தனி விமானத்தை ஏற்பாடு செய்து இந்தியாவுக்கு உடனே திருப்பி அனுப்பியது அமெரிக்க அரசாங்கம்.

நந்தகுமாருக்கு இந்தச் செய்தி தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை விமானநிலையத்தில் கண்ணீர் வெள்ளத்திடையே தில்லைநாதனை எதிர் பார்த்து, நொந்துபோய் நின்று கொண்டிருந்தார். விமானம் வந்தது; அவன் இறங்கி வந்து அவரைக் கட்டிக் கொண்டு ‘கோ’ வென்று கதறியழுதான்.

“தில்லை! விதி எனக்குச் சரியான பாடத்தைக் கற்பித்துவிட்டதப்பா... நான் ஒர் அனாதைப் பெண்ணிடமிருந்து உன்னைத் தட்டிப் பறித்து என் பெண்ணிடம் கொடுத்தேன்.ஆண்டவன் என் பெண்ணையே தட்டிப்பறித்துக்கொண்டான்!' அவர் ஏதேதோ அலறினார். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறமுடியாத நிலையில் வித்தியாபவனத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

ஒருநாள் மாலை நேரம் விதவையின் திலகமற்ற முகம் போல வானம் கதிரவனை இழந்து இருண்டு கொண்டிருந்தது. அடையாளம் தெரிந்து கொள்ள முடியாதபடி இளைத்துப் போன வாணி, அச்சன் ஒடைக்கரையில் உட்கார்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தில்லைநாதன் தலைகுனிந்து பின் தொடர நந்தகுமார் அங்கே வந்தார். வாணியின் வெறித்த பார்வை கலையவில்லை. அவர்கள் வந்ததை அவள் கவனிக்காததுபோல் இருந்தாள்.

"வாணீ... அம்மா... உன்னைத்தான் கூப்பிடுகிறேன்!” நந்தகுமார் சிறு குழந்தையை அழைப்பதுபோல அவளை அழைத்தார். சலனம் அற்ற முகபாவத்தோடு அவர் பக்கம் மெளனமாகத் திரும்பினாள். தில்லைநாதன் தலையை இன்னும் அதிகமாகக் குனிந்து கொண்டான். அவன் கண்கள் அவளைக் காணக் கூசின.

"அம்மா! நீ பராசக்தி தெய்வம்! உனக்கு இழைத்த துரோகத்திற்கு விதி என்னைச் சரியானபடி தண்டித்துவிட்டது. இதோ இந்த இளங்கலைஞன் நிரபராதி; இவன்மேல் சந்தேகப்படாமல் இவனைப் பழையபடி ஏற்றுக்கொள்! உன்னைக் கைகூப்பி வணங்குகிறேன்!” என்றார் நந்தகுமார்.

“....”

பதில் இல்லை. அவள் விழிகள் அனல்கீற்றுக்களைப் போல மின்னின.

"அம்மா! நீ உத்தரராம சரித நாடகத்தில் இவரோடு நடிக்கவில்லையா? அதில் சோதனைக்குப் பின்பு ராமர் சீதையை ஏற்றுக்கொள்வது போல.”

நெருப்புத் துண்டத்தில் விழுந்த நெற்பொரிபோல அவள் விழிக் கடைகளில் உணர்ச்சி முத்துக்கள் திரண்டன.

"அம்மா! என் கலாசாலையும் இலட்சியங்களும் பாழ்போகாமல் வாழ வேண்டுமானால் இவரை ஏற்றுக்கொள்! மகாகவி பவபூதியின் வாக்கின்மேல் ஆணையாக ஏற்றுக் கொள்.”

அவளுடைய வலது கைச் சுட்டுவிரல் ஒடைக்கரையின் ஈரமணலில் ஏதோ அட்சரங்களைக் கிறுக்கியது. இருளில் பேசாமல் எழுந்து நடந்தாள் அவள். அவர்கள் மணற்பரப்பைப் பார்த்தனர்:

“காவியம், ஒவியத்துச் சந்திரன்! அதற்கு வளர்ச்சியும் தேய்வும் இல்லை. வாழ்வு பிரத்யட்சம்! அதனால் வளர்ச்சியும் தேய்வுமுண்டு. காவியத்தில் நடப்பதெல்லாம் வாழ்வில் நடக்க வேண்டுமென்பதில்லை. பவபூதிக்கு இன்னும் ஒரு உத்தரராம சரிதம் எழுத நான் வாய்ப்புக்கொடுக்கமாட்டேன்.”

மணலில் எழுதியிருந்ததை அவர்கள் படித்தனர். தொலைவில் பிரபஞ்சத்தின் இருள் வாணியை விழுங்கி மறைத்துக் கொண்டிருந்தது.

(ஆனந்த விகடன், டிசம்பர், 1957)