நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை

127. இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை

‘காவிய கங்கை’ என்னும் அந்த மலையடிவாரத்துத் தோட்டம் நிலா ஒளியில் ஒரு சொப்பன உலகம் போல் அத்தனை அழகாக இருந்தது. அந்தத் தோட்டத்தின் கழுத்திற்கு மாலையிட்டது போல் அதன் வலது பக்கம் ஒன்றும், இடதுபக்கம் ஒன்றுமாக இரண்டு காட்டாறுகள் மலையிலிருந்து கீழிறங்கிச் சமவெளியில் சிறிது தொலைவு வரை ஓடிப் பின் ஒன்று சேர்ந்தன. மலைச் சரிவில் வெயில் உள்ளே நுழைய முடியாதபடி மரஞ்செடி கொடிகளால் அடர்ந்த அந்தத் தோட்டம் அமைந்திருந்தது. ஒரு மதிப்பீட்டில் ஐம்பது ஏக்கர் அல்லது அதற்கு மேலும் பரப்பு இருக்கலாமென்று தோன்றியது. தோட்டம் முழுவதும் எங்கே திரும்பினாலும், புள்ளி மான்கள் மேய்ந்துகொண்டிருக்கிற அழகையும் அங்கே காண முடிந்தது. பூக்கள், பசுமை, பாக்கு மரங்களின் பாளைகள் இவற்றின் ஒருங்கிணைந்த வாசனை வேறு. தோட்டத்தில் மயில்கள் தோகை விரித்தாடிக்கொண்டிருந்தன.

நான் மாலை இரயிலில் அந்த மலைப்பகுதிக்கு அருகே இருந்த சமீபத்து இரயில் நிலையத்தில் போய் இறங்கி, அங்கிருந்து ஒரு வாடகைக் காரில் பயணம் செய்து இருட்டத் தொடங்குகிற சமயத்துக்குக் ‘காவிய கங்கை’யில் நுழைந்திருந்தேன்.’காவிய கங்கை’யின் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று, ஏற்கெனவே எங்கள் பத்திரிகையின் சார்பில் அவர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தை நினைவூட்டி என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். அவர்கள் அன்போடு வரவேற்றார்கள்.

“இன்றிரவு நீங்கள் அவரைப் பார்க்க முடியாது. நாளை அவருடைய தொண்ணூறாவது பிறந்த தினம். நாளைக்கு முழுவதும் நீங்கள் அவரோடு இருந்து கவனித்து உங்களுக்கு வேண்டியதை எழுதிக் கொள்ளலாம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறேன்” என்று கூறிய அலுவலகப் பொது உறவு அதிகாரி, நான் அங்கே தங்கிக் கொள்ள விருந்தினர் விடுதியில் ஓர் அறையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.அதை ஓர் ஆசிரமம் என்பதா அல்லது சாந்தி நிகேதனத்தைப் போல ஒரு புதுமைச் சர்வ கலாசாலை என்பதா? எப்படிச் சொல்வதென்று என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்தப் பகுதி முழுவதற்கும் சேர்த்து மொத்தமாகக் ‘காவிய கங்கை’ என்று பெயர் சூட்டியிருப்பதில் கூட அவருடைய கவித்துவத்தின் ஆழமான சாயல் தெரிந்தது. பொருள் ஆழமும் அந்தப் பெயரில் இருந்தது.

தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த புள்ளி மான்களை விட அழகான இளம் பெண்கள் மாவிலைத் தோரணங்கள் கட்டுவதும், வண்ணக் கோலங்கள் போடுவதுமாக இருந்தார்கள். ஒரு கோலாகலமான விடியற்காலையை எதிர்பார்க்கும் சுறுசுறுப்பான முந்திய இரவாக இருந்தது அது. காவிய கங்கையின் உணவு விடுதியில் இரவு உணவை முடித்துக் கொண்டு இஷ்டம் போல் சுற்றிப் பார்க்கலானேன். ஒரு பக்கம் பெண்கள் கோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சில இளைஞர்களும், குரலழகு மிக்க பெண்களும் சேர்ந்து கவி குமுத சந்திரரின் கவிதைகளை இனிதாக இசைத்துக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பக்கம் மாமரத்தடியில் பெண்கள் கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மூலையிலிருந்து புல்லாங் குழலிசை காற்றில் மிதந்து வந்தது. நாதஸ்வர இசையும் ஒரு பக்கத்திலிருந்து ஒலித்தது. அந்த மலைச்சாரலின் மந்தமாருதமே ஒலியுருப் பெற்றாற் போல் யாரோ வீணையும் வாசித்துக் கொண்டிருந்தார்கள். சில மாதங்களுக்கு முன் வேறு ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் காவிய கங்கையை ‘கார்டன் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்று வர்ணித்திருந்தது எனக்கு நினைவு வந்தது. உண்மையில் அது ஒரு கலைத் தோட்டமாகத்தான் இருந்தது.

மகா கவி குமுத சந்திரர் ஓர் அபூர்வமான கவிஞர். அவருடைய கவிதைகள் தேசத்தின் சொத்துக்களாக விளங்கின. தமிழிலிருந்து உலகின் பல மொழிகளில் அவர் மொழி பெயர்ப்பாகி இருந்தார். தேசத்தின் சுதந்திரப் போராட்டம் என்ற மாபெரும் வேள்வியில் ஈடுபட்ட போது அவருக்குக் கிடைத்த துணைப் பயன்களில் கவிதையும் ஒன்று. அவருடைய கவிதைகள் ஆங்கிலத்தில் மட்டும் பிறரால் மொழி பெயர்க்கப்படவில்லை. அவராலேயே எழுதப்பட்டன. கூடிய வரை அதனால் உணர்ச்சி வேகம் குன்றாமல் இருந்தன.

காவியம், கவிதை, கலைகள் இவைதான் அவரது குடும்பம். வேறு குடும்பம் அவருக்கு இல்லை. நைஷ்டிகப் பிரம்மசாரி, கவிதைத் திறமையால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் காவிய கங்கையை உருவாக்குவதில் செலவிட்டிருந்தார். சில வெளிநாட்டு இளைஞர்கள் கூட அங்கே தங்கி அவருடைய கவிதைகள் பற்றியும் இந்தியக் கவிதை இயல் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். நாளடைவில் காவிய கங்கை பல வெளிநாட்டு மாணவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் கவரத் தொடங்கியது. தென்னாட்டில் அது அமைந்திருந்த இயற்கைச் சூழலும், அதன் நூறு சதவிகித ஆசிரம வாழ்வை ஒத்த நடைமுறைகளும், அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததுதான் காரணம். சராசரி இந்தியப் பல்கலைக் கழகங்களில் இருந்த அர்த்தமற்ற முரண்பாடுகளும், ரெட் டேப்பிஸமும் ‘காவிய கங்கை’யில் இல்லை. ஒரு செடியில் அரும்பிப் பின் மெல்ல மலரும் பூவின் மலர்ச்சியைப் போல்தான் அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அங்கு இருந்தன. கவிதையையோ, கலைகளையோ அது பாடங்களாக மட்டும் சொல்லித் தரவில்லை. இரசிக்கும்படி அங்கே வருகிறவர்களை அதில் தோய வைத்தது. தன் மாணவர்களை விண்ணப்பம் போட வைத்து, அதன் பின் தேர்ந்தெடுக்கும் வழக்கம் அங்கு இல்லை. மாணவர்கள் என்போர் வயது சாதி மத வித்தியாசமின்றி, பால் இன வித்தியாசமின்றி இந்தியக் கவிதையியல் அல்லது கலையியலைக் கற்கும் இடமாகத் தாங்களே அதனைத் தேர்ந்தெடுத்தனர். “காவிய கங்கை காலகேந்திரத்திற்கு இங்கே இறங்கவும்” - என்று சமீபத்து இரயில் நிலையத்தில் போர்டு இருக்குமளவு அது தென்னிந்திய இரயில்வே வரைபடத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தது. அந்த அளவிற்கு அதன் புகழ் நிலை பெற்றிருந்தது.

இரவு பத்து மணி சுமாருக்கு நான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பிய போது காவியகங்கையின் பொது உறவு அதிகாரியிடமிருந்து அனுப்பப்பட்ட ‘கவர்’ ஒன்று எனக்காகத் தயாராகக் காத்திருந்தது. அறைக்கதவைத் திறந்து விளக்கைப் போட்டுக் கொண்டு அந்த உறையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். விவரங்கள் தமிழில் சுத்தமாக டைப் செய்யப்பட்டிருந்தன. மறுநாள் நான் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் விளக்கிக் கூறப்பட்டிருந்தன.

“நாளைக் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காவிய கங்கையில் நிகழும் கவி சிரேஷ்டரின் தொண்ணூறாவது ஜன்ம தினம் முழுவதையும் உடனிருந்து காணவும், புகைப்படங்கள் எடுக்கவும் இதன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

கவி சிரேஷ்டர் குமுத சந்திரரின் தளர்ந்த உடல் நிலை காரணமாக அவரிடம் நேரடியாக எதுவும் கேள்விகள் கேட்பது தவிர்க்கப்பட வேண்டும். பொதுவாக, அவரது ஒவ்வொரு பிறந்த நாளும் ‘செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்’ நிறைந்தது. அவருக்கு நாளைய தினமும் அப்படியே. கடந்த காலங்களில் அவர் உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு அளித்திருக்கும் எல்லாப் பேட்டிகளிலும் தவறாமல் ஒரு விஷயத்தை வற்புறுத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

“எனது மெளனங்களிலும் தனிமைகளிலும் நான் இதுவரை எழுதாத ஒரு புதிய கவிதைக்குத் தயாராகிறேன். நான் எல்லாவற்றையும் அற்புதமாக எழுதி முடித்துத் தமிழை வளப்படுத்தி விட்டதாகச் சொல்லுகிறார்கள். எழுதியவற்றை மறந்து விடுவதும், எழுதப்பட வேண்டியவற்றுக்காக ஏங்குவதும், எழுதப்பட முடியாமல் நழுவுகிறவற்றுக்காகத் தவிப்பதும் ஒவ்வொரு சிரஞ்சீவிக் கவிஞனும் அடைகிற வேதனைகளே” என்பது கவி சிரேஷ்டர் குமுத சந்திரரின் கருத்து.

ஆகவே, அவருடைய மெளனத்தையும், அந்த மோனத்தின் மூலம் அவர் புரியும் கவிதைத் தவத்தையும் கலைக்கக் கூடாது. இந்தப் பிறந்த நாள் விழாக் கூடக் காவிய கங்கை நிர்வாகம் விரும்பிக் கொண்டாடுகிறதே ஒழிய, விழாக்களும், ஆரவாரங்களும், பரபரப்பும் அவரை ஒரு போதும் பாதிப்பதில்லை. அவர் அவைகளுக்கு அப்பாற்பட்டவர்.

இவை தவிர, வேறு விவரங்கள் தேவையானால் காவிய கங்கையின் பொது உறவு அதிகாரியை அணுகி அறிந்து கொள்ளவும்” என்று குறிப்பிட்டிருந்தது. கவி குமுதசந்திரரின் தொண்ணூறாவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பற்றிய அச்சிட்ட விவரமும் இணைக்கப்பட்டிருந்தது. மறு நாள், அதற்கடுத்த நாள் ஆகிய இரண்டு தினங்களுக்குமான உணவு விடுதிக் கூப்பன்களும் உறைக்குள் வைக்கப்பட்டிருந்தன. ‘காவிய கங்கை’ காம்பஸின் விவரமான வரைபடமும் கவி சிரேஷ்டரின் புகைப்படம் ஒன்றும் உறையிலிருந்தன. கையோடு ஊரிலிருந்து எடுத்து வந்திருந்த கவி குமுதசந்திரரின் எல்லாக் கவிதைகளும் அடங்கிய தொகுப்பை எடுத்துப் புரட்டினேன். பல நூறு பதிப்புக்கள் விற்றிருந்த அந்தப் புத்தகத்தின் எல்லாப் பிரதிகளிலும் முதல் பக்கம் முதல் கவிதை இருக்க வேண்டிய இடம் ‘இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை’ என்ற தலைப்புடன் காலியாக விடப்பட்டிருந்தது. இதை அவரிடமே நேரில் கேட்டு விடுவது என்று எண்ணிக் கொண்டு வந்திருந்தேன் நான்.

ஆனால், இப்போது காவிய கங்கையின் பொது உறவு அதிகாரி விதித்திருக்கும் நிபந்தனைப் படி கவி குமுதசந்திரரிடம் நேருக்கு நேர் அதைக் கேட்டறிய வாய்ப்பில்லை.

எல்லாக் கவிதைப் புத்தகங்களிலும் முகப்பில் அழகிய வண்ணத்தாளில் கவி குமுதசந்திரரின் புகைப்படம் அச்சிடப் பட்டிருந்தது. தாடி மீசையோடு கூடிய அந்த முகத்தை அரவிந்தரின் முகத்துடனோ, இரவீந்திரநாத் தாகூரின் முகத்திடனோ ஒப்பிட முடியாது. இந்த இருவரையும் விட அதிக கம்பீரமும், ஆண்மையும் ஒளிரும் முகமாக இருந்தது அது. அந்த முகத்தின் முதிர்ச்சியில் தெரிந்தது கிழட்டுத்தனமாக இல்லை. முதுமைக் கனிவாக இருந்தது. கண்களின் ஒளியும், கூர்மையும் சிறிது கூடக் குறையவில்லை.

எப்படியும், இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டுப் பத்து வருடங்களாவது ஆகி இருக்க வேண்டும். இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பதை நாளைக்கு நேரிலேயே பார்த்து விடலாமே. காலையில் ஞாபகமாகக் காமிராவில் ஃபிலிம் லோட் செய்து கொள்ள வேண்டும். ‘காவிய கங்கை’யைப் பொறுத்த வரை முந்திய இரவிலேயே விடியப் போகிற நாளின் கோலாகலங்கள் தொடங்கி விட்டாற் போலக் கலகலப் பாக இருந்தது. திருவிழாவிற்கு முந்திய கொடியேற்ற நாள் போல விளங்கியது அன்று.

மகாகவி குமுதசந்திரரைப் பொறுத்த வரை எனக்கு இரண்டு விஷயங்கள் புரியாத புதிராக இருந்தன. அந்த இரண்டு விஷயங்கள் மட்டும் தெளிவாகி விட்டால் கூடநான் எங்கள் பத்திரிகைக்குக் ‘காவிய கங்கை’யைப் பற்றிய அற்புதமான கட்டுரை ஒன்றை உருவாக்கி அளித்து விட முடியும். ஆனால், இரண்டு விஷயங்களும் தெரிந்தாக வேண்டுமே?

ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியிருக்கும் அவர் ஏன் இன்னும் தனது முதல் கவிதையை எழுதவே இல்லை என்கிறார்?

பெண்களையும், அவர்கள் அழகு, நளினம், இயல்புகள் எல்லாவற்றையும் இத்தனை

சிறப்பாகப் பாடியுள்ள அவர் ஏன் இன்னும் நைஷ்டிகப் பிரம்மசாரியாக வாழ்கிறார்?

என் மனத்தில் ‘காவிய கங்கை’யையும், கவி குமுத சந்திரரையும் பற்றி நினைக்கும் போதெல்லாம் கடந்த பல ஆண்டுகளாக உறுத்தும் இரு கேள்விகள் இவை. இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால், அந்த மகா கவியைப் பற்றிய புது உண்மைகள் உலகுக்குத் தெரியலாம். கவித்துவத்தாலும், செல்வாக்கினாலும் உருவாகிய மாபெரும் கலாகேந்திரமாகிய காவிய கங்கையை உருவாக்கியவர் என்ற முறையில் இன்று உலகம் அவரைப் பற்றி அறிய, அதிக ஆவலுடன் காத்திருக்கிறது. அதிக மரியாதையோடும் எதிர்பார்த்திருக்கிறது.

மறுநாள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்பதால் இரவு நெடு நேரம் கண் விழிக்க விரும்பாமல், உறங்கி விட்டேன் நான்.

காலையில் நான் கண் விழித்த போது கவி சிரேஷ்டரின் புகழ்பெற்ற உதய கீதம் மரஞ்செடி கொடிகளின் அடர்த்தியினிடையே ஒலித்துக் கொண்டிருந்தது. ‘கீழ்வானத்தில் குங்கும ரேகைகள் படர்கின்றன. கால தேவன் இன்னொரு புதிய கவிதையை எழுதத் தொடங்கி விட்டான். கேட்பதற்காக உங்கள் துயிலெழலை எதிர்பார்த்திருக்கின்றான். நீங்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே?’ என்பது போன்ற பொருளுடன் தொடங்கும் பாட்டு அது.

வேறு துணைக் கருவிகளே இல்லாமல் வீணை ஒலியுடன் பூபாளத்தில் ஒலித்த இந்த உதய கீதப் பாட்டுடனேதான் கவி சிரேஷ்டரின் 90வது ஜன்ம தினக் கொண்டாட்டம், ‘காவிய கங்கை’யில் தொடங்கியது என்று சொல்ல வேண்டும்.

நான் எழுந்திருந்து நீராடி, உடை மாற்றிக்கொண்டு தயாரானேன். காமிராவில் ஃபிலிம் அடைத்து, எதற்கும் சில சமயங்களில் தேவைப்படலாம் என்ற எண்ணத்துடன் ‘பிளாஷ்-அட்டாச்மெண்ட்’டைச் சரி செய்து கொண்டு புறப்பட்டேன். காவிய கங்கை திருவிழாக் கோலத்தில் பொலிந்தது. எங்கு பார்த்தாலும், அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. காவிய கங்கையின் நெசவுப் பகுதியில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற டிசைனுடன் கூடிய அழகிய வண்ணக் கைத்தறிப் புடவைகளை அணிந்து, கைகளில் தாமரை மலர்களுடன் பெண்கள் ‘கியூ’ வரிசையில் நின்றார்கள். கவி சிரேஷ்டரின் வாசஸ்தலமான குடிலை நோக்கி அந்தக் கியூ வரிசை நீண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஆண்களின் வரிசையும் கைகளில் தாமரைப் பூக்களோடு காத்திருந்தது. அந்த இடத்திலும், அதன் சுற்றுப் புறங்களிலும் தாமரைப் பூக்களுக்குப் பஞ்சமேயில்லை. திரும்பிய பக்கமெல்லாம் தாமரைத் தடாகங்கள். எல்லாத் தடாகக் கரைகளிலும் தாமரைப் பூக்கள் கொய்து குவிக்கப்பட்டிருந்தன.

காபி, சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நானும் கவி சிரேஷ்டரின் குடில் வாயிலில் போய்க் காத்திருந்தேன். எனக்கும் தாமரைப் பூக்கள் கிடைத்தன.

குடிலின் முன்புறம் சரியாக ஆறு மணியாவதற்கு ஐந்து நிமிஷம் இருக்கும் போது படுக்கை போல் தணிவான மெத்தை இணைத்த சாய்வு நாற்காலி ஒன்று கொண்டு வந்து போடப்பட்டது. அதையடுத்து ‘காவிய கங்கை’ வாசிகளான இரண்டு பெண்கள் ஆள் உயரக் குத்து விளக்குகள் இரண்டைப் பக்கத்திற்கு ஒன்றாகக் கொண்டு வந்து வைத்து ஏற்றினர். விளக்குகள் பளீரென்று துலக்கப்பட்டிருந்தன.

குடிலின் கடிகாரம் மணி ஆறு அடிப்பதற்கும், அதே பெண்கள் கைத்தாங்கலாக மெல்ல நடத்தி வந்து கவி சிரேஷ்டரை அந்தச் சாய்வு நாற்காலியில் அமரச் செய்வதற்கும் சரியாயிருந்தது. முதுமை காரணமாய்ச் சற்றே மலர்ந்து கசங்கிய ரோஜாப் பூ போன்ற சிவந்த முகம். அந்த முகத்தின் கீழ்ப் பகுதியை வெண் மேகம் போன்ற தாடி மறைத்தது. புருவங்களும், இமைகளும் இறங்கித் தொங்கித் தொய்ந்து போயிருந்தன. அவற்றுக்குள் தேஜஸ் கனிந்த கண்கள். அருள் ஒழுகும் நோக்கு. சிரித்துக் கொண்டே இருப்பது போன்ற முகம்.

பூக்களைச் சமர்ப்பித்த பின் அவரை வணங்கி விட்டு நான் என்னுடைய முதல் புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன். வரிசைகளில் காத்திருந்தவர்கள் ஒவ்வொருவராக முன் வந்து அவருடைய பாதங்களின் கீழ் தாமரைப் பூக்களை வைத்து வணங்கினார்கள். இதே பாத பூஜை நிகழ்ச்சி நீண்ட நேரம் தொடர்ந்தது. ‘காவிய கங்கை’ வாசிகளை விட அதிகமாக உலகெங்குமிருந்து கவி சிரேஷ்டரின் ரசிகர்கள் அன்று அங்கு வந்திருந்தார்கள். அதனால் பகல் உணவு நேரம் வருகிறவ ரை பாத பூஜையிலேயே கழிந்து விட்டது.

சிலர் பாத பூஜை நேரத்தின் போதே கவி சிரேஷ்டரின் கவிதைகளை இசைத்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் ‘காவிய கங்கை’யை நோக்கி வந்திருந்த கூட்டம் முழுவதுக்கும் அங்கே தங்க இடவசதி போதாத காரணத்தால் பலர் வந்து இறங்கியதும் அப்படியே பக்கத்தில் மலையடிவாரத்து அருவியில் நீராடி, உடை மாற்றிக் கொண்டு வந்து கவி சிரேஷ்டரை வழிபட்டு விட்டு உடனே ஊர் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பிறந்த தின வைபவத்துக்காகவே வந்த யாத்ரீகர் கூட்டம் அன்று அதிகமாகவே இருந்தது.

நடுவே ஒரு முறை நான் பொது உறவு அதிகாரியை அணுகி, “கவி சிரேஷ்டரிடம் இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் கேட்க அனுமதியுங்கள். அதற்கு மேல் ஒரு சிறு தொல்லை கூட என்னால் அவருக்கு ஏற்படாது” என்று கெஞ்சினேன்.

“நிச்சயமாக முடியாது. கவி சிரேஷ்டருடைய உடல் நிலையையும், வயதையும் நினைத்துப் பாருங்கள்! நீங்கள் கோருவதைப் போலவே ஒரு நிமிஷம் பேசினால் போதும் - அரை நிமிஷம் பேசினால் போதும் என்று - வெளி நாட்டிலிருந்து வந்திருக்கும் சில இரசிகர்களும் கூட கோருகிறார்கள். அவர்களிடமும், உங்களிடமும் மட்டும் பேசுவதற்காகவே ஒதுக்கினால் கூட அவருடைய இரண்டு முழு நாட்களும் உடல் நலமும் கெட்டு விடும். ஆகவே, தயவு செய்து மறுபடி கேட்காதீர்கள். அது சாத்யமில்லை” என்று கண்டிப்பாக மறுத்து விட்டார் பொது உறவு அதிகாரி.

என் சொந்த ஆர்வம் காரணமாக நான் ஆசைப்பட்டிருந்தாலும், அந்த அதிகாரி சொன்ன பதில் என்னவோ எனக்கு நியாயமானதாகவே பட்டது.

பிற்பகல் இரண்டு மணிக்குக் ‘காவிய கங்கை’யின் ஒரு மூலையிலிருந்த பாழ்மண்டபம் ஒன்றில் அதே சாய்வு நாற்காலியோடு அப்படியே பல்லக்குப் போலத் தூக்கிச் சென்று கவி சிரேஷ்டரை அமர்த்தினார்கள். அவர் பார்வையில் படுகிறார் போல எதிரே தூண் ஒன்றில் சார்த்திக் கையில் கஞ்சிக் கலயத்துடன் நிற்கும் கட்டழகு மிக்க மலைப் பளிஞர் குலப் பெண் ஒருத்தியின் ஓவியத்தையும் அங்கே வைத்தார்கள். அதன் பின் மாலையில் இருட்டுகிற வரை அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாதென்று அறிவித்து விட்டு எல்லோரையும் அங்கிருந்து கலைந்து போகுமாறு வேண்டிக் கொண்டார்கள்.

என் மனத்தில் ஏற்கெனவே நான் அவரைக் கேட்கக் கருதியிருந்த இரண்டு கேள்விகளோடு இப்போது மூன்றாவதாக ஒரு கேள்வியும் தோன்றியது. இந்தப் பாழ் மண்டபத்தில் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இந்தப் பாழ் மண்டபத்திற்கும், கடைந்தெடுத்த சிற்பம் போன்ற தோற்றத்தோடு ஓவியத்தில் இருக்கும் பளிஞர் நங்கைக்கும் கவி சிரேஷ்டருக்கும் வாழ்க்கையில் ஏதோ மறக்க முடியாத தொடர்புகள் இருக்க வேண்டும். அவற்றின் அந்தரங்கம் கவி சிரேஷ்டரின் இதயத்திற்கு மட்டுமே தெரியும் போலும். மறுபடியும் நான் அடக்க முடியாத ஆவலோடு பொது உறவு அதிகாரியை அணுகினேன். எனது சந்தேகத்தையும், அநுமானத்தையும் சொல்லி வினவினேன்.

“உங்களுடைய ஆவலும், ஆர்வமும் எனக்குப் புரிகிறது. ஆனால், இன்று உங்களோடு ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து பேசவும் எனக்கு நேரமில்லை. கவி சிரேஷ்டருடைய வாழ்க்கையின் பல அபூர்வ சம்பவங்களை வெளியிடவேண்டிய கேள்விகளை நீங்கள் கேட்கிறீர்கள். இவற்றுக்கெல்லாம் விவரித்துப் பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய உடல் நிலையில் அவர் இப்போது இல்லை. இவற்றில் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூடிய நிலையில் அவர் உடல் இருந்தாலும், இந்த வயதில் இந்தக் கேள்விகளும் விசாரணைகளுமே அவர் உடல்நிலையைப் பாதிக்கலாம். உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமடையாமல் இவற்றுக்குப் பதில் சொல்ல முடியாது. அப்படி உணர்ச்சி வசப்படும் போது அவருக்கு இரத்த அழுத்தமோ இரத்தக் கொதிப்போ ஏற்பட நேரலாம். காவிய கங்கையின் மூலகங்கோத்ரியை - விலை மதிப்பற்ற செல்வத்தை அப்படிப்பட்ட துன்பத்துக்கெல்லாம் ஆளாக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கேள்விக்கெல்லாம் நானே பதில் சொல்கிறேன். நாளைக் காலை வரை தயவுசெய்து பொறுத்திருங்கள்” என்றார் அந்த அதிகாரி.

நான் அதற்கு இணங்குவதைத் தவிர எனக்கு வேறு வழி இருப்பதாகப் படவில்லை.

அன்று பகல் மூன்று மணிக்கும், ஆறு மணிக்கும் இடையே ஒரு முறை நான் தனியே சென்று காவிய கங்கையின் ஒரு மூலையிலிருந்த அந்தப் பாழ் மண்டபத்தைப் பார்த்தேன்.

சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே எதிர்ப்புறம் இருந்த பளிஞர் மங்கையின் மிகப் பெரிய ஆயில் பெயிண்டிங்கைப் பார்த்துக் கொண்டிருந்த கவி சிரேஷ்டரின் கண்களில் ஈரம் பளபளப்பதையும், அவை நனைந்திருப்பதையும் நன்றாகக் கவனிக்க முடிந்தது.

அந்தக் காட்சியை யாரும் கவனித்து விடாதபடி ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன் நான்.

கவி சிரேஷ்டரைப் பற்றிய என்னுடைய மூன்று கேள்விகளுக்குமான ஒரே பதில் - அந்தப் பாழ் மண்டபத்தில்தான் இருக்கிறது என்பது போல் இப்போது எனக்குத் தோன்றியது.

‘ஒரு மாபெரும் கவிஞரின் மிக முக்கியமான வாழ்க்கை இரகசியங்களை எழுதி வெளியிடப் போகும் முதல் வாய்ப்பை நான் ஒருவன்தான் பெறப் போகிறேன். ஒரு மாபெரும் தேசப்போராட்ட வீரர், ஒரு மாபெரும் கவிஞர், ஞான பீடமாக விளங்கும் ஒரு மாபெரும் கலா கேந்திரத்தை உருவாக்கிய ஞானி, தன்னுடைய முதல் கவிதையை ஏன் இன்னும் எழுதவில்லை என்ற காரணம் என் மூலம்தான் உலகத்துக்குத் தெரியப் போகிறது’ என எண்ணிப் பெருமிதப்பட்டது என் மனம்.

மாலை 6 மணி முதல் 8 மணி வரை கவி சிரேஷ்டர் தம்முடைய குடிலில் ஓய்வு கொண்டார். இரவு 8 மணி முதல் ஒரு மணி வரை அவருடைய கவிதைகளிலிருந்து இசைக் கச்சேரிகள் என்று, நாட்டிய நாடகங்கள் என்று, சொற்பொழிவுகள் என்று, ‘காவிய கங்கை’யில் பிரிவு பிரிவாக விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

மறுநாள் விடிந்த பொழுது விழா நடந்து முடிந்த இடங்களுக்கே உரிய மங்கல அயர்வு காவிய கங்கையிலும் தெரிந்தது. ஆனால், அந்த இனிய அயர்வு அதன் நடைமுறைகளைப் பாதிக்கவில்லை.காவிய கங்கையின் பொது உறவு அதிகாரி எனக்கு வாக்களித்திருந்தபடி அவரிடம் எனது கேள்விகளைக் கேட்கச் சென்றேன். அவருடைய அறையில் என் பார்வையில் படுகிற விதத்தில் அந்த ஆயில் பெயிண்டிங் இருந்தது, பளிஞர் குலப் பெண்ணின் படம்தான்.

மனத்தில் உடனே வந்து பதிந்து விடும் அழகுடன் கூடிய அந்த மலைப் பளிஞர் யுவதி மலையடிவாரத்துப் பாழ் மண்டபத்தில் குறுந்தாடியுடன் கூடிய இளைஞர் ஒருவருக்குக் கஞ்சி வார்ப்பதைப் போல் மற்றோர் ஒவியமும் அறையின் பிறிதொரு பகுதியில் இருந்தது. .

காவிய கங்கையின் பொது உறவு அதிகாரி எனக்குப் பேட்டியளிக்கத் தயாராக வந்து அமர்ந்தார்.

நான் குறிப்பு நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் எடுத்து வைத்துக் கொண்டு அவரைக் கேட்கத் தயாரானேன். அவர் நிபந்தனை போட்டார்:

“இன்றைக்கு நிறைய அலுவலக வேலைகள் காத்திருக்கின்றன. ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் என்னை விட்டு விடவேண்டும்”

“ஒரு மணி நேரம் எதற்கு? அவ்வளவு நேரம் ஆகாது. இதோ எனது முதல் கேள்வி: கவி சிரேஷ்டர் குமுத சந்திரர் ஏன் தமது எல்லாப் பதிப்புக்களிலும் தம்முடைய, முதல் கவிதை இன்னும் எழுதப்படவில்லை என்கிறார்? வெளி வந்திருக்கும் பல நூறு கவிதைகளில் ஏதாவது ஒன்று முதல் கவிதையாகத்தானே இருந்திருக்க வேண்டும்?”

“அப்படியில்லை, தமது முதல் கவிதையை இன்னும் தாம் எழுதவில்லை என்பதை உபசாரத்துக்காகவோ, தன் அடக்கமாகவோ அவர் அப்படிச்சொல்லவில்லை.அதில் மிக உருக்கமான வரலாறு ஒன்று அடங்கியிருக்கிறது.”

“என்ன வரலாறு?”

“இதோ இந்த ஒவியத்தைப் பாருங்கள்! இதில் உள்ள மலைப் பளிஞர் பெண் மட்டும் இல்லை என்றால், கவி குமுதசந்திரரின் கவிதைகள், காவிய கங்கை எதுவுமே இல்லை.”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, வெளியேறித் தானும் தன்னை ஒத்த சில தோழர்களும் சேர்ந்து தேசபக்திப் புரட்சிச் சங்கம் ஒன்று அமைத்தார் குமுத சந்திரன், துப்பாக்கி சுடும் பயிற்சி முதலிய இரகசியப் பயிற்சிகளை அடைந்து - இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிரிட்டிஷ்காரர்களைச் சுட்டுத் தள்ளுவது அதன் நோக்கம். அந்த நோக்கத்தின்படி முதல் பிரிட்டிஷ் ஆளாக அவர்கள் தேர்ந்தெடுத்த உள்ளூர் கலெக்டர் துரையைச் சுட்டு முடித்ததுமே, சதித் திட்டம் எப்படியோ வெளியாகி விட்டது. புரட்சிச் சங்கத்தில் குமுத சந்திரனைத் தவிர அனைவரும் போலீஸில் பிடிபட்டுச் சிறையிலடைக்கப்பட்டு விட்டனர்.

குமுத சந்திரன் மட்டும் தலைமறைவாகி, இதோ இப்போது காவிய கங்கையாக உருவாகியிருக்கிறதே - இந்த மலையடிவாரத்துக் காட்டுப் பகுதியில் ஒரு பாழ்மண்டபத்தைப் புகலிடமாகக் கொண்டு வசித்து வந்தார். அப்போது அவரை ஆதரித்து- அவர் மறைந்து வாழ உதவி செய்து அவருடைய உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தவள் இந்தப் பளிஞர் யுவதிதான், இவள் இல்லாவிடில், அவர் தலைமறைவாக வாழ்ந்திருக்க முடியாது. நல்ல மன வளர்ச்சி மிக்க பருவத்தில், தேசபக்தி எழுச்சியும் இயற்கை எழில் மிக்க மலைச்சாரல் சூழலும், தலைமறைவு வாழ்க்கையுமே அவரைக் கவிஞராக்கின.

ஒரு மழைக் கால இரவில் அவருக்காக உணவு தேடி வரச் சென்ற அவள் வருகிற வழியில் காட்டாற்றில் அளவற்றுப் பெருகிய வெள்ளம் காரணமாக அடித்துப் போகப்பட்டாள்.

‘ஒளி திரும்பாத இரவு’ - என்று அன்று அவர் எழுத எண்ணிய கவிதை துயர அழுத்தத்தால் வெகு நாள் உருப் பெறவே இல்லை. முதலில் அவர் எழுத முயன்ற, எழுதத் தவித்த கவிதை அதுதான். ஆனால், அது இன்று வரை எழுதப்படவே இல்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவர் அந்த மலையடிவாரத்தை விட்டே வெளியேறிப் பிரிட்டிஷ் அதிகாரம் செல்லுபடியாகாத பிரெஞ்சுப் பகுதி ஒன்றிற்குப் போய்ப் பல வருஷங்கள் இருந்தார். நிறையக் கவிதைகள், நூல்கள் எழுதினார். புகழ் பெற்றார். உலகப் பிரசித்தி பெற்ற பரிசுகள் கிடைத்தன. பொருள் சேர்ந்தது.

பின்னால் ‘காவிய கங்கை’யை அமைக்க முடிவு செய்த போது ஞாபகமாகத் தம்மைத் தமது பழைய தலை மறைவு வாழ்க்கைக் காலத்தில் கவியாக்கிய இதே இடத்தைத் தேர்ந்தெடுத்தார் கவி சிரேஷ்டர் குமுத சந்திரர்”

“எல்லாம் சரி. ஆனால், ‘ஒளி திரும்பாத இரவு’ என்ற அந்த ஒரு கவிதையை எழுதாததற்காக இத்தனை ஆண்டுகளாக அந்த முதல் இடத்தைக் காலியாகவே விட வேண்டுமா?”

“தமக்குத் தொண்டு செய்து, தம்மைக் காப்பாற்றிய அந்த மலைப் பளிஞர் யுவதியின் ஞாபகத்துக்கு அவர் செய்யும் மரியாதை அது. அதில் குறுக்கிட நாம் யார்?”

“இன்னும் எழுதப்படாத ஒரு முதற் கவிதைக்காக இத்தனை ஆண்டுகள் தவமா?”

“தவம் என்றுதான் அவர் சொல்லுகிறார்! ஒரு ஜோடி கிரேளஞ்சப் பறவைகளில் ஒன்றின் மரணத்தால், மற்றொன்று தவித்து அழிய நேர்ந்ததைக் கண்டு மாறிக் கிராதக உள்ளத்தினனான வேடன் மகாகவி வால்மீகியானான். ஒவ்வொரு கவியும் பிறக்கிறான். பெளதீகப் பிறப்பு எடுத்த பின்னும் மறுபடி ஞானப் பிறப்பு எடுக்கிறான். இந்த ஞானப் பிறப்பே அவனது கவிதை வடிவம். கவி குமுத சந்திரரின் ஞானப் பிறப்புப் பல ஆண்டுகளுக்கு முன் வனாந்தரமாக இருந்த இந்தப் பிரதேசத்தில்தான் நேர்ந்தது. அவருடைய காவிய சரஸ்வதி இநதப் பளிஞர் குலப் பெண்தான். எழுதப் படிக்கத் தெரியாத இந்தச் சரஸ்வதியின் கடாட்சம்தான் அவரைக்கவியாக்கியது என்று அவரே நினைக்கிறார்.”

“நீங்கள் சொல்லுகிற இந்தக் கருத்துக்கள் எல்லாம் அவருடைய அங்கீகாரம் பெற்றவைதாமா?”

“இதில் அங்கீகாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவருடைய சுய சரிதம் முதல் முறையாக இப்போது அச்சாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் வெளி வந்து விடும். அதில் உள்ள விவரங்களைத்தான் இப்போது நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.”

“தயவு செய்து வெளிவரப் போகும் அந்தச் சுய சரித நூலின் பெயரைச் சொல்ல முடியுமா?”

“இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை.”

“அப்படி ஒரு சுயசரிதத்தை ஏன் இவ்வளவு கால தாமதமாக வெளியிடுகிறீர்கள்?”

“நாங்களாகச் செய்யவில்லை. கவி சிரேஷ்டரின் கட்டளை அப்படி.”

“என்ன கட்டளை அது?”

“நான் எந்த வருடம் பேசுவதை அறவே நிறுத்தி, மெளனத்தில் நிறைந்து விடுகிறேனோ அந்த வருடம் இதை அச்சிட்டு வெளியிடவும் என்று அவரே இந்தச் சுயசரிதைக் கையெழுத்துப் பிரதியின் முதற்பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதன்படி இந்த ஆண்டு இது வெளிவர இருக்கிறது. அவருடைய பிற காவியங்களுக்கு இணையாக இந்தச் சுயசரிதை எழுதப்பட்டிருக்கிறது.”

எங்கள் பேட்டி முடிந்தது. பொது உறவு அதிகாரி எனக்கு விடையளித்து அனுப்பத் தயாரானார். நான் அந்த மலைப் பளிஞர் யுவதியின் ஆயில் பெயிண்ட்டிங்கை ‘குளோஸ் அப்’பாக ஒரு படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டுப் படம் எடுத்துக் கொண்டேன். கவி சிரேஷ்டர் குமுத சந்திரரை அவரது குடிலில் சென்று மெளன விரதத்துக்குப் பங்கமின்றி ஒரு முறை தரிசிக்கவும் படமெடுக்கவும் வேண்டினேன். பொது உறவு அதிகாரியே அழைத்துச் சென்றார். தளர்ந்த ரோஜா மேனியின் காட்சி கிடைத்தது. ‘காவிய கங்கை’யில் நான் பெற்ற அனுபவம் மெய் சிலிர்க்கச் செய்வதாக இருந்தது. அச்சாகிக் கொண்டிருந்த ‘இன்னும் எழுதப் படாத கவிதை’ புத்தகத்தின் பகுதிகள் சிலவற்றைப் பொது உறவு அதிகாரி எனக்குக் காட்டினார்.

அப்புத்தகத்தில் கவி குமுத சந்திரரின் வாக்கியங்களிலிருந்து என் நினைவில் நீங்காமல் நின்றவை பல.

“ஒவ்வொரு கவியும் ஒரு முயற்சிதான். தான் எழுத வேண்டிய ஒரு பரிபூரணமான கவிதைக்காக ஓராயிரம் சாதாரணக் கவிதைகளை அவன் எழுத முயல்கிறான். சிலருடைய வாழ்க்கை முயற்சியிலேயே முடிந்து விடுகிறது. இன்னும் சிலருடைய வாழ்க்கை முயற்சிக்கு முன்பேயும் முடிந்து விடுகிறது.

நானோ பல்லாயிரம் பரிபூரணமான கவிதைகளை எழுதி விட்டேன். ஆனால், எங்கே எந்த வினாடியில் எந்தச் சோகத்தால் நான் கவிஞன் ஆனேனோ, அதை மட்டும் இன்னும் என்னால் எழுத முடியவில்லை. எழுத வரவில்லை. தசரதன் இராமனைக் காட்டுக்கு அனுப்பிப் பிரிந்த சோகத்தை ஊனுருகப் பாடிய கம்பன் தன் சொந்த மகன் அம்பிகாபதியின் சாவுக்கு இரங்கி, அப்படி ஒரு சிறு பாட்டுக் கூடப் பாட முடியாமல் போனது போலத்தான். என்னைப் பாட வைத்தவள் எழுதப் படிக்கத் தெரியாதவள். அவளுக்குத் தெரிந்த மலைப் பளிஞர் மொழி எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த தமிழோ, ஆங்கிலமோ அவளுக்குத் தெரியாது. ஆனால், அவள் வார்த்த கஞ்சி, அவள் பார்த்த பார்வை, அவள் சிரித்த சிரிப்பு எல்லாம் சேர்ந்துதான் என்னைக் கவியாக்கின. மகா கவியாக்கின. ‘காவிய கங்கை’யை ஸ்தாபிக்கச் செய்தன. அவளும், நானும் சந்தித்துக் கொண்ட அந்த வனாந்தரமும் ,பாழ் மண்டபமும் இருந்த அதே பகுதியை வாங்கிக் கலாகேந்திரம் அமைக்குமளவு நான் பெரிய செயல்களைச் செய்ய முடிந்தது. ஓர் அஞ்ஞானியால் நான் ஞானியானேன். அந்த மகத்தான அஞ்ஞானியைச் சித்திரித்துப் பாடமுடியாத முறையின்போது மறுபடி நானும் ஞானஹீனப்பட்டு நிற்பது போல் உணர்வைத் தவிர வேறென்ன செய்வது?”

இவை அவரது சுயசரிதத்தில் நான் படித்தவை.

அந்தச் சுயசரிதமும் இன்னும் முடிக்கப்படாத ஒரு சுயசரிதமாகவே இருந்தது. ஆனால், மிக அருமையான கவிதை நடையில் உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. அந்தச் சுயசரிதத்துக்கு அவர் சூட்டியிருந்த பெயரின் பொருட்கனிவைத் தான் மீண்டும் நினைத்து நினைத்து வியந்தேன் நான்.

(1978-க்கு முன்)