நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/உயிர் என்ற எல்லை

132. உயிர் என்ற எல்லை

றை வாசலில் நிழல் தெரிந்தது. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தலையைப் பின்புறமாகத் திருப்பினேன். ராஜம் தலையைக் கோதி முடிந்தவாறே நின்று கொண்டிருந்தாள். அவள் நின்று கொண்டிருந்த குறிப்பைப் பார்த்தால், எதையோ சொல்ல வந்தவள் மாதிரித் தோன்றியது.

“என்ன ராஜம்!”

“ஒன்றுமில்லை! இன்றைக்குக் கார்த்திகை சோமவாரம்.”

“இருக்கட்டுமே! அதற்கென்ன?”

“திருப்பரங்குன்றம் வரை போய் விட்டு வரலாமென்று?”

“ஏது திடீரென்று இப்போது முருக தரிசனத்திற்கு ஆசை வந்து விட்டது?”

“ஆசை என்ன ஆசை வேண்டிக் கிடக்கிறது? குழந்தையா குட்டியா? ஒன்றுமில்லாமல் இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால், ஏதாவது தோன்றுகிறது!”

“நீயும் நானுமடி எதிரும் புதிருமடி என்று ஏதாவது உட்கார்ந்து அரட்டையடித்தால் போயிற்று...”

“ஏன் பேச்சை வளர்த்துகிறீர்கள்? மூன்றும் மூன்றும் ஆறேயணா-பஸ் சார்ஜு! நிம்மதியாகப் போய் விட்டு வந்து விடுவோம்! வரச் சம்மதமா? இல்லையா?”

“நான் வருகிறேன். மாட்டேனென்று சொல்லவில்லை. இன்னும் பழைய அசடாகவே இருக்கிறாயே என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது!”

“நான் அசடுதான்! அசடாகவே இருந்து விட்டுப் போகிறேன். நீங்கள் நல்ல சமர்த்தாக இருங்கள். இப்போது வர முடியுமா, முடியாதா?”

“இந்தப் பெரிய மதுரையிலே எத்தனை சினிமாவில் இன்றைக்கு ‘மாட்டினி’ நடக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு டவுன் பஸ்ஸுக்குக் க்யூவில் நின்று திருப்பரங்குன்றமா போக வேண்டுமென்று சொல்கிறாய்?”

ராஜம் என்னை முறைத்துப் பார்த்தாள். உண்மையில் அவள் போக்கு இந்த ஆறு வருஷங்களாக எனக்குப் பிடிபடாத ஒன்றாகவே இருக்கிறது. நல்ல அழகி. இளம் பெண்தான்.ஆனால், அந்த இளமைக்கும், அழகுக்கும் உரிய கிளர்ச்சியோ, எழுச்சியோ சிறிதும் இல்லை. ‘குழந்தை குட்டிகள் இல்லையே’ என்ற ஏக்கமா? அப்படி அந்த ஏக்கத்தாலும் அவள் அதிகம் உருகுவதாகத் தெரியவில்லை. அழகு என்னவோ சொக்குப் பொடி போட்டு ஆளை மயக்குகிற மாதிரி அந்த உடலில் கிளுகிளுத்துக் கொண்டிருந்தது.சண்பகப்பூவின் இதழ் நுனியைப்போல் அவளுக்கென்றே அமைந்த ஒரு நிறம். எச்சில் விழுங்கினால் கழுத்தில் தெரியும்.

ஆனால்,கோவில் குளம், தீர்த்தம் என்று அவள் வழி ஒரு தினுசாயிருந்தது. சினிமா, சபா, டாய்லெட் ஸெட், ஜார்ஜெட் புடவை என்று அவளை நாகரீக போதையில் மூழ்கச் செய்து, அதன் வெறியை நான் ரஸிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் அவளோ, என்னையும் தன் வழிக்கு இழுத்துச் சென்றுகொண்டிருந்தாள். அப்ஸரஸைப்போல ஒரு மனைவியும் வாய்த்துக் குழந்தை குட்டி என்று பிடுங்கல் எதுவுமின்றி அமுதகலசம் போலக் கெடாத உடலும் இருந்துவிட்டால் ஒரு வகையில் கணவனுக்கு அது பாக்கியம்தான். ஆனால், அத்தகைய மனைவி ஒரு வைதிகக் கட்டுப் பெட்டியாக மட்டும் இருந்துவிடக் கூடாது. கணவன் ‘லிப்ஸ்டிக்’ தடவிக் கொள்ளச் சொன்னால், அவன் திருப்திக்காக உடனே அதைச் செய்யக் கூடியவளாக இருக்க வேண்டும்.

என் ராஜம் அப்படி இல்லை, ஆளைக் கிறங்கச் செய்கிற அழகுக்கு உள்ளே அண்ட முடியாத ஒரு தனித்தன்மை மறைந்து கிடந்தது. மஞ்சள், குங்குமம் தவிர, வேறெந்த ஆடம்பரப் பொருள்களையும் அவள் தொடுவதே இல்லை.

"என்ன, இப்படி உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்தால் எப்போது புறப்படுகிறதாம்? இருட்டுவதற்குள் திரும்பிவிடவேண்டுமே?...”

"இதோ வந்துவிட்டேன்! கொஞ்சம் இரு.”நான் எழுந்து முகங்கழுவிக்கொள்ளச் சென்றேன்.

எதை எதையோ பாக்கியம் என்கிறார்களே! அழகான மனைவி அருகிலே வர நடந்து செல்லும் பாக்கியத்தை விடச் சிறந்தது வேறொன்று இருக்கிறதா? தென்றல் வீசுவதுபோல் மனத்தில் நிலவும் இப்படிப்பட்ட ஒருவகைப் பெருமிதத்திற்கு ஈடு இணை உண்டா?

ராஜம் வலப்பக்கம் நடந்து வந்து கொண்டிருந்தாள். என் உயரத்துக்குச் சரியான உயரம். நேரே எதிர்ப்புறம் நிமிர்ந்து பார்க்கத் தயங்கும் பார்வை. பூங்கொடி அசைவது போல அவளுக்கென்றே அமைந்த ஒருவகை நடை குழந்தை குட்டிகளைப் பெறுகின்ற பாக்கியம் இல்லாவிட்டால்தான் என்ன? இப்படி ரதியைப்போல ஒரு மனைவி இருந்தால் போதாதா? கணவனுக்கு மனைவி குழந்தை, மனைவிக்குக் கணவன் குழந்தை! பரஸ்பரம் குழந்தையாகிவிட்டால், பின் வேறு குழந்தை எதற்கு?

“உங்களைத்தானே! பஸ்ஸுக்குக் கூட்டம் அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே?”

“பின் என்ன கூட்டமில்லாமலா இருக்கும்! சொன்னால் நீ கேட்கிறாயா, என்ன? எப்படியும் போய்த்தான் ஆகவேண்டும் என்கிறாய்! என்ன செய்வது? கூட்டத்தோடு கூட்டமாக முண்டியடித்துக் கொண்டுதான் போக வேண்டும்.”

அவள் ஒரக்கண்ணால் ஒரு வெட்டு வெட்டினாள். என் பேச்சு ‘கப்’பென்று நின்றது. ஆண் வாயைத் திறந்து வார்த்தைகளைச் சொல்லித் தடை செய்ய வேண்டியதைப் பெண் தனது கண்ணின் ஒரத்தை ஒரு சுழற்றுச் சுழற்றுவதனாலேயே தடுத்து நிறைவேற்றிக் கொண்டு விடுகிறாள்.

சிற்பியின் கைகளில் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை போன்ற அந்தப் பாதங்கள் தார் ரோடில் நடந்து லேசாகக் கன்றிச் சிவந்திருந்தன.

“செருப்பு வாங்கிக்கொள் என்று படித்துப் படித்துச் சொல்றேனே. நீ கேட்கிறாயா? தார் ரோடில் வெறுங் காலோடு நடந்து, காலைக் குட்டிச் சுவராக்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது!”

“எனக்கு ஒன்றும் அந்தப் பவிஷு எல்லாம் வேண்டாம்”

“பவிஷு-க்குச் சொல்ல வரவில்லை ராஜம்! தார் ரோடில் செருப்பில்லாமல் நடப்பது எப்போதும் கெடுதல். அதற்காகச் சொல்ல வந்தால்”...

அவள் பதில் பேசவில்லை. பஸ் ஸ்டாப்பை அடைந்து விட்டோம். அவள் பெண்கள் ‘க்யூ’வில் போய் நின்றாள். நான் ஆண்கள் க்யூவில் நின்றேன்.

கண்களில் பார்வைப் புலனை ஒட விட்டதில் வேடிக்கையான ஒரு நினைவு சரம் தொடுத்தது. க்யூவில் நின்று கொண்டிருந்த வரிசை வரிசையான பெண் உருவங்களை மெல்ல விழிக்கடைகளால் நிறுத்தி நிறுத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன். ராஜம் அத்தனைப் பேருக்கும் கடைசியில்தான் நின்றாள்.ஆனால், எனக்குள், என் மனத்தின் எண்ண வளையங்களுக்குள் பெருமிதமான ஒர் பிரமை! வரிசையில் நின்றுகொண்டிருந்த அத்தனைப் பெண்களைக் காட்டிலும் என் ராஜத்தின் அழகு விஞ்சி நிற்கிறார்போல ஒர் உணர்வு. பெங்களுர்ப் பட்டு, நவநாகரிக அலங்காரங்கள், விதவிதமான பட்டுப் பாதரட்சைகள், இவற்றோடு நிற்கும் பெண்களுக்கு இடையே, அரக்குக் கலர் சாதாரணத் துணிப்புடைவையும் பச்சை ரவிக்கையுமாக நிற்கும் என் ராஜம், செளந்தரியத்தின் முடிவுக்கு ஒரு முடிவு காட்டிக் கொண்டிருக்கிறாள்.

“சார், முன்னால் நகருங்கள்! எங்கேயோ பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்களே?... உங்களுக்கு முன்னால் ‘க்யூ’ எவ்வளவு தூரம் போய்விட்டது பாருங்கள்” என்று எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவர் என்னை விரட்டினார்.

சட்டென்று திரும்பி உதட்டைக் கடித்துக்கொண்டே, முன்னேறினேன். கூட்டத்தின் நடுவே உணர்வு வரம்பை மீறிக் கண்களையும் கண்களின் வழியே எண்ணத்தையும் ஒட விட்டுவிட்டதற்காக என்னை நானே கடிந்துகொண்டேன். பொருள் தனக்குச் சொந்தமானது என்பதற்காக அதன் அழகை எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் அனுபவித்துவிட எண்ணலாமா? தப்புத்தான்! அழகான பெண் தனக்கு மனைவி என்று எண்ணுவதிலும், ஒதுங்கி நின்று அதன் உண்மையை ஆராய்ந்து பார்க்க முயலுவதிலும் திருப்திக்காக ஏங்குகிற ஒர் ஆசை இருக்கத்தான் இருக்கிறது! ஆனால், அதற்கு ஒரு கட்டுப்பாடு வேண்டாமா? ‘க்யூ’ முன்னேறியது. நான் பஸ்ஸில் ஏற வேண்டிய நேரம் வந்தது. கண்டக்டர் இரண்டு ஆள்களுக்குத்தான் இடமிருக்கிறது என்றான். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவர் ஏறிவிட்டார்.நான் ராஜத்தைப் பார்த்துத் தயங்கி நின்றேன்.

“என்ன சார் ஏறவில்லையா?” முதலில் ஏறியவர் பஸ்ஸிலிருந்து தலையை வெளியே நீட்டி, என்னைப் பார்த்துக் கேட்டார். நான், “இல்லை! நீங்கள் போங்கள் வீட்டில் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.” என்றேன்.

“அடேடே அப்படியானால் நீங்கள் இருவரும் முதலில் ஏறிக் கொள்ளுங்கள். எனக்கு அவசரமில்லை.நான் அடுத்த பஸ்ஸில் வருகிறேன்”. அவர் இறங்கி விட்டார்.

நானும் ராஜமும் ஏறிக்கொண்டோம். பெண் கூட வந்தால், அதை ஒட்டி ஆணுக்குத் தனிமதிப்புத்தான்.பச்சாத்தாபத்தை வருவிக்கும் சக்தி அப்படி என்னதான் பெண்ணிடம் இருக்கிறதோ?

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை சோமவாரம்! கூட்டம் ஜே ஜே என்றிருந்தது. கூட்டத்தில் நுழைந்து, தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது மணி நாலே கால்.

"அப்படியே பஸ் ஸ்டாப்பிற்குப் போய் பஸ் ஏறி, டவுனுக்குத் திரும்பிவிடவேண்டும்” என்றேன் நான்.

‘வெகுநாளாக எனக்கு ஒரே ஒர் ஆசை.அதை இன்று நிறைவேற்றிக் கொண்டுவிட நினைக்கிறேன். கிரிப் பிரதட்சிணம் செய்வோம்! வாருங்கள்” என்றாள் அவள்.

“அதெல்லாம் இப்போது முடியாது! ஒன்றரை மைல் இரண்டு மைல் நடக்க வேண்டுமே? இன்னொரு நாள் பார்க்கலாம். இன்றைக்கு வேண்டாம்.”

“முடியாது! இன்றைக்கு நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கப் போவதில்லை.செய்வதுதான் செய்யப்போகிறோம்.கார்த்திகை சோமவாரத்தில் கிரிப் பிரதட்சணம் செய்தால், எவ்வளவோ நல்லது. வாருங்கள், அதிகமாகப் போனால் ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் ஆகாது” அவள் பிடிவாதம் பிடித்தாள்.

அவள் இஷ்டத்தைத் தான் கெடுப்பானேன்? கிரிப்பிரதட்சிணத்தை முடித்துக் கொண்டு ஆறரை மணிக்கு ரயிலில் மதுரைக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணினேன். கிரிப்பிரதட்சிணம் முடிகின்ற இடத்தில் மேற்கு ஒரமாகத்தான் ரயில்வே ஸ்டேஷனும் இருந்தது. பஸ்ஸைவிட ரயிலில் சுலபமாக இடம் கிடைக்கும்.

“சரி வா” என்று கூட்டிக்கொண்டு கிழக்குப்புறமாக மலையடிவாரத்திலிருந்து கிரிப்பிரதட்சிணத்தை ஆரம்பித்தேன்.

அந்தப் பழைய பெருமிதம் - ராஜம் பக்கத்திலே தோளோடு தோள் நடந்து வருகிறாள் என்ற கர்வம் - தனிமையையும் துணையாக்கிக்கொண்டு மனத்தில் நிலவியது. சாதாரணமாகப் புதிதாகக் கல்யாணம் செய்து கொண்டவர்களுக்கு இந்த மாதிரி ஒரு கர்வம் இருப்பதும் ஏற்படுவதும் இயற்கை. ஆறு, ஏழு வருஷங்கள் நெருங்கி வாழ்ந்த பிறகும் அந்த உணர்விலிருந்து என்னை நான் விடுவித்துக்கொள்ள முடியவில்லை, அல்லது அவ்வுணர்வு என்னை விடவில்லை என்றாலும் பொருந்தும். மலை அடிவாரத்தை ஒட்டிக் கிழக்குப்புறத்தில் நீர் நிறைந்த கண்மாய். காற்று சிலுசிலுவென்று குளிர்ச்சியோடு வீசிக்கொண்டிருந்தது.

ராஜத்தின் தலைமயிர் புஸுபுஸுவென்று பிரிந்து சுருள் சுருளாக முன் நெற்றியில் விளையாடியது. துவளத் துவள நடந்துகொண்டிருந்தாள்.

“என்ன, கிரிப்பிரதட்சிணம், கிரிப்பிரதட்சிணம் என்று பறந்தாயே ஒழிய நடை ஒடவில்லையே! அதற்குள் தளர்ந்து துவண்டுவிட்டாயே!...”

“நான் ஒன்றும் தளரவில்லை.நீங்கள் ஏதாவது வாயைக் கிண்டி,வம்புபண்ணாமல் பேசாமல் வந்தாலே போதும்”.

உண்மைதான்! அவள் வாயைக் கிண்டி விட்டு, அந்த முகத்தின் நெளிவு சுளிவுகளை அழகு பார்ப்பதில்கூட எனக்குத் தனிப்பட்ட ஒருவகை ஆசை. முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். இல்லையென்றால் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இரண்டும் முடியாதபோது கோபமுண்டாகிற விதத்தில் ஏதாவது பேசிவிடுவேன்.

எனக்கு அது ஒரு ரஸமான பொழுது போக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

“ராஜம்! இந்தக் கண்மாயைப் பார்த்தாயா? கரையை முட்டமுட்ட நீர் தளும்புவதில் ஒரு கவர்ச்சியிருக்கிறது.”

“இந்த மலையின் நிழலும் கோவிலும் கோபுரமும் கூடக் கண்மாய் நீர்ப்பரப்பில் தெரிகிறதே!”

கார்த்திகைச் சோமவாரக் கூட்டம் ஊருக்குள்ளும் கோவிலிலும் நெரிசல் பட்டதே ஒழியக் கிரிப்பிரதட்சணை வழியில் ஈ, காக்காய் கூட இல்லை. தனிமையின் அரசாட்சிதான்.

பேசிக்கொண்டும், பேசிக்கொள்ளாமலும் நடந்தோம். கண்முன்னே நீண்டு கொண்டிருந்த வழியில் மலையின் தென்புறத் திருப்பம் வளைந்தது.

“இந்தத் தென்புறத்து மலையில் ஏதோ ஒரு குகைக்கோவில் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதை மறந்து விடாதீர்கள். கண்டிப்பாக அதற்குள் போய்ப் பார்த்துவிட்டுப் போகவேண்டும்”.

“தேவியின் உத்தரவு எப்படியோ, அப்படியே செய்யக் காத்திருக்கிறேன்".

"இந்தக் கேலிக்கெல்லாம் ஒன்றும் குறை இல்லை...?”

தென்புறம் மலையடிவாரத்துப் பாறைகளில் சரளைக் கற்களை உடைத்துக் குவித்துக்கொண்டிருப்பவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.ஆனால், அன்றைக்கு அதுவுமில்லை. கண்ணுக்கெட்டிய துரம்வரை மனித சஞ்சாரமே இல்லை. தெற்கே கப்பலூர் ஸ்டேஷனை நோக்கிச் செல்லும் ரயில்பாதை, அரக்கு நிறச்சுக்கான் குன்றுகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தது. அதற்கும் அப்பால் மில்காலணியும், திருநகர் பங்களாக்களும் மரக்கூட்டங்களுக்குள்ளே தென்பட்டன. “உன்னைப்போல அசடு கிடையவே கிடையாது ராஜம் எத்தனை ஆயிரம்பேர் சோமவாரத்திற்காக இங்கே வந்திருக்கிறார்கள் யாராவது ‘கிரிப்பிரதட்சினம் செய்கிறேன்’ என்று கிளம்பியிருக்கிறார்களா, பார்!உன் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான்தான் அசட்டுத்தனமாகக் கிளம்பினேன்.”

“கிளம்பினதால் இப்போது என்ன குடிமுழுகிப் போய்விட்டதாம்? இதோ நிம்மதியாகக் காற்று வாங்கிக் கொண்டு காலார நடக்கிறோம்.”

தென்புறத்தில் சரியாக நடுமையத்திற்கு வந்துவிட்டோம். எதிரே மிக அருகில் மலைப்பாறையில் செதுக்கப்பட்ட அந்தக் குகைக் கோவில் தெரிந்தது. அந்தக் குகைக் கோவிலைப் பற்றி ஏதேதோ சொல்வார்கள். ஆதிமுருகன் கோவில் திருப்பரங்குன்றத்தில் இந்தக் குகையில்தான் இருந்தது என்றும், நக்கீரர் பூதத்தினால் சிறையில் வைக்கப்பட்ட போது, இந்த முருகனைப் பாடியே விடுதலை பெற்றார் என்றும் கூறுவார்கள்.

குகைக்குள் பகலிலேயே இருட்டு மண்டிக் கிடக்கும். உட்புறம் சுவர்போலத் தாங்கிக்கொண்டிருந்த மலைப்பாறையின்மேல் முருகன் சிலை செதுக்கப்பட்டிருந்தது. வெளிப்பக்கத் தோற்றத்தில் குகை துண்களோடு கூடிய ஒரு மண்டபம். இந்த மண்டபத்தில் தற்கொலை, சூதாட்டம், கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், என்று அசம்பாவிதமான செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வந்தவண்ணம் இருந்தன.

“இந்த மண்டபத்துக் குகைக்குள் போக வேண்டும் என்றா சொல்கிறாய்?”.

“போய்விட்டுத்தான் வருவோமே? இத்தறுவாய்க்கு நீங்கள் கூட வரும்போது பயமா என்ன?”

“அஜந்தா குகை பாழ்போகிறதா என்ன? உள்ளே போக வேண்டாம். வெளியிலிருந்தே பார்த்துவிட்டுப் போய்விடலாம்.”

“முடியாது! நீங்கள் வேண்டுமானால் வெளியே நின்று கொள்ளுங்கள். ஆதிமுருகன், வரப்பிரசாதி. நான் பார்க்காமல் வரவே மாட்டேன்.” ராஜத்தின் பிடிவாதத்திற்குக் கேட்கவா வேண்டும்?

மண்டபத்தில் ஏறிக் குகை வாசலை நெருங்கினோம். குகைக்குள் மங்கலாக இருள் பரவியிருந்தது. நான் முன்னால் நடந்தேன். ராஜம் என் வலது கையைப் பிடித்துக் கொண்டு என்னைப் பின்பற்றினாள்.

பாதி தூரம்கூட வந்திருக்கமாட்டோம். திடீரென்று ‘ஐயோ! என் கழுத்துலே கைபோடறானே பாவி!” - என்று ராஜம் பயங்கரமாக அலறினாள். நான் பின்புறம் திரும்புவதற்குள் வலிமை வாய்ந்த முரட்டுக் கை ஒன்று என் வாயை இறுக்கிப் பொத்தியது. வேறு இரண்டு கைகள் உடும்புப் பிடிபோல என் இடுப்பை வளைத்துப் பிடித்தன. நான் அசைய முடியவில்லை. அவள் கழுத்திலிருந்து சங்கிலியையும் கையிலிருந்து வளையல்களையும் கழற்றிக் கொள்வதை என் கண்கள் இரண்டும் இருளில் கூர்ந்து நோக்கின. ஆனால், நான் என்ன செய்ய முடியும்! ராஜத்தின் வாயையும் யாரோ ஒரு முரடன் இறுக்கிப் பொத்திக்கொண்டிருந்தான்.பின்புறமாகத் திருகி அவள் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டே, அவற்றில் இருந்த வளையல்களைக் கழற்றிக் கொண்டிருந்தான் இன்னொருவன்.நான் திமிறிக்கொண்டு பாய முயன்றேன். மின்னல் கீற்றுப்போல இருளில் பளபளக்கும் கத்தி ஒன்று என் நெஞ்சுக் குழிக்கு மிக அருகில் காட்டப்பட்டது. நான் அசையாமல் நின்றேன். ஓர் அங்குலம் முன்னுக்கு நகர்ந்தாலும் அந்தக் கத்தி என் நெஞ்சில் புகுந்துவிடும்.

அலங்கோலமான நிலையில், பூவைக் கசக்கி அத்தர் எடுப்பது போலத் திமிறவிடாமல் கையையும் கால்களையும் வாயையும் கட்டிப்போட்டு, ராஜத்தின் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள்.

வேலை முடிந்தது. என்னை இறுக்கியிருந்த கைகள் விலகின. ராஜம் துவண்டு போய்க் கீழே விழுந்தாள். குகைக்கு வெளியே தடதடவென்று காலடிகள் பதிய ஆட்கள் ஒடும் ஒசை.

நான் அலறினேன். என் அலறலும் கூப்பாடும் குகைப் பாறைகளில் முட்டிமோதி வெளியேறும் ஆற்றலின்றி, அங்கேயே மடித்துவிட்டன.ராஜம் விக்கி விக்கி அழுதாள். ‘நீங்கள் அப்போதே சொன்னர்களே! நான் கேட்டேனா? பாவி எனக்கு நன்றாக வேண்டும். இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.’

நான் அவளை எதிர்த்துத் திட்ட வேண்டுமென்று குமுறிக் கொண்டிருந்தேன். ஆனால், அவள் அழுகை என் குமுறலைத் தணித்துவிட்டது. என் கைகால்களில் வெடவெடப்பும் நடுக்கமும் இன்னும் ஓயவில்லை. மார்பு கொள்ளை போகிற மாதிரி (கொள்ளைதான் போய் விட்டதே) அடித்துக்கொண்டது.

கைத்தாங்கலாக அவளை மெல்ல நடத்திக் கூட்டிக் கொண்டு குகைக்கு வெளியே மண்டபத்துக்கு வந்தேன். திருடர்கள் போன சுவடே தெரியவில்லை! அந்த மலையடிவாரத்துப் பாறை இடுக்குகளிலும் தோப்புத் துரவுகளிலும் ஒடி ஒளிவதா பிரமாதம்? ராஜம் ஒப்பாரிவைக்கத் தொடங்கிவிட்டாள். அவளை அப்படியே சித்திரவதை செய்துவிடலாம் என்ற அளவுக்கு முறுகிக்கிடந்த என் கோபம், இருந்த இடம் தெரியாமல் மெழுகாய் உருகிவிட்டது. எப்படியாவது ஆறுதல் சொல்லி, இருட்டுவதற்குள் அவளை அங்கிருந்து கிளப்பிக்கொண்டு போனால் போதும் என்றாகிவிட்டது. “இந்தா! ஏன் வீணாக அழுது கதறுகிறாய்? நான்தான் குகைக்குள் போகவேண்டாம் வழியோடு போய்விடுவோம்’ என்று அப்போதே சொன்னேனே! நீ கேட்டாயா? போனது போகட்டும்.ஆறு பவுன் சங்கிலியும் நாலு பவுன் வளையலும் போய்விட்டன. ரயிலையும் தவற விட்டுவிட்டு இங்கே சோற்றுக்குத் திண்டாட வேண்டாம். வா! போவோம்.”

அவள் வேண்டா வெறுப்பாக எழுந்திருந்து நடந்தாள். முன்போலவே என் வலது பக்கம் தோளோடு தோளாகத் தான் நடந்தாள். என் மனத்தில் மட்டும் அந்தப் பழைய பெருமிதம் இல்லை. ஏதோ இனம் புரியாத அருவருப்பு ஒன்றுதான் நிறைந்திருந்தது. பஸ் ஸ்டாப்பில் க்யூவில் நிற்கும்போதும், தெருவில் நடந்து சொல்லும்போதும் கிரிப்பிரதட்சிண ஆரம்பத்தில் கண்மாய்க் கரை ஓரமாக நடந்தபோதும், ‘அழகு! அழகு! அழகின் பிம்பம் நமக்குச் சொந்தமாக அருகில் நடந்து வருகிறது’ என்றிருந்த கர்வம், இப்போது எங்கே போயிற்றோ தெரியவில்லை.

பத்துப் பவுன் தங்க நகைகளைப் பறிகொடுத்தது எனக்கு மறந்துவிட்டது. எனக்குரிய ஸெளந்தரியவதியின் உடம்பை இரண்டு மூன்று முரடர்கள் தொடுவதற்குப் பறிகொடுத்துவிட்ட வேதனைதான் இதயத்தை நிறைத்துக் கொண்டு நின்றது. பஸ் ஸ்டாப்பிலோ, தெருவிலோ, தவறுதலாகக் கூட ஒரு பர புருஷனின் கை அவள் மேல் பட்டிருக்குமானால், அவன் கன்னத்தைப் பழுக்க வைத்திருப்பேன். அது என்னால் முடியும் இப்போதோ...?

“இந்த அவஸ்தைகள், ஆசாபாசங்கள் எல்லாம் உயிருக்கு ஆபத்து வருகின்றவரை தானா? கழுத்துக்கு முன்னால் கத்தியை நீட்டிவிட்டால், அழகு என்ன, எந்தப் பெரிய உரிமையையும் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான் போலும்!”

ராஜம் துவண்டுபோய்த் தளர்ந்து என் கையைப் பிடித்தாள். ஏதோ ஆபாசத்தைத் தொடுவது போலிருந்தது எனக்கு, சடக்கென்று கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டேன்.

“கொஞ்சம் கையைப் பிடித்துக் கொள்ளுங்களேன். ஒய்ந்து போய் வருகிறது”.

அருவருப்போடு கையைப் பிடித்துக் கொண்டேன். ராஜம் கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லமாட்டாளா? என்று ஏங்கிய நாட்கள் எத்தனையோ ஆனால், இப்போதோ மனம் அருவருக்கிறது.

“கொஞ்சம் இப்படியே சரவணப் பொய்கைக்குப்போய்விட்டு,அப்புறம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம்?”

“ஏன்? சரவணப் பொய்கையில் என்ன காரியம்? திருட்டுக் கொடுக்க இன்னும் ஏதாவது மீதமிருக்கிறதா?”

"எனக்குக் குளித்துவிட்டு வரவேண்டும்!”

தெருத் திருப்பத்தை அடைந்துவிட்டோம். மலைவழி பின்னால் மங்கி மறைந்து விட்டது.ராஜம் சரவணப் பொய்கையில் குளித்தாள்.நல்ல காற்று அரை நாழிகையில், ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவதற்குள்ளேயே, ஈரப்புடவை உலர்ந்து காய்ந்து விட்டது.

அவள் உடலைக் கழுவிவிட்டாள்.என் மனத்தில் ஏற்பட்ட அந்தச் சின்னஞ்சிறிய அருவருப்பின் கோர ரூபத்தை நான் எங்கே போய்க் கழுவுவது?

ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற பாதையில் இரண்டு மூன்று சிறுவர்கள் ஒரு செத்த பாம்பின்மேல் கல்லை வேடிக்கையாக விட்டெறிந்து கொண்டிருந்தார்கள். உயிர் இருந்தால் பாம்பு எதிர்த்திருக்கலாம்; எதிர்க்காமல் ஒடியும் இருக்கலாம். இருந்தால்தானே? ராஜம் குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்து கொண்டிருந்தாள். என்னோடு பேச அவளுக்குப் பயம்.அவளோடு பேச எனக்கு அருவருப்பு. மூளிக்கழுத்து, மூளிக்கைகள். அழகு என்னவோ குறைந்துவிடவில்லை. பழைய மோகக் கிறக்கம் அந்த வாட்டத்திலும் கிளம்பிக்கொண்டிருந்தது.

ஸ்டேஷனில் தெரிந்த மனிதர் ஒருவர் எதிர்ப்பட்டார்.

“என்ன சார் ‘அவங்களுக்கு’ எதாவது உடம்பு சரியில்லையா? ஏன் ஒரு மாதிரி இருக்காங்க” என் மனைவி ராஜத்தைக் குறித்துக் கேட்டார் அவர்.

“ஒன்றுமில்லை! சரவணப் பொய்கையில் குளித்தாள். குளிக்கும்போது தவறி விழுந்துவிட்டாள். அந்த அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை போலிருக்கிறது”.

பச்சைப் புளுகுதான். ராஜம் என்னை ஒரு தினுசாக ஏறிட்டுப் பார்த்தாள். நான் துணிந்துதான் புளுகினேன். சமயா சமயங்களில் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்தப் ‘பொய்’ என்ற சாதனம் தான் எவ்வளவு அருமையாகப் பயன்படுகிறது! உயிர்களின் அவஸ்தைக்கு அது ஒரு எல்லையோ?... (1978-க்கு முன்)