நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஒருமைப்பாட்டைக் காக்க ஒரு மாநாடு
157. ஒருமைப்பாட்டைக் காக்க ஒரு மாநாடு
திடீரென்று அரசாங்கத்துக்கு அவசர அவசரமாகப் புத்தி வந்து விட்ட மாதிரி இருந்தது. வருமுன் காப்பது என்கிற விவகாரமே அரசாங்க மூளையில் எந்தக் காலத்திலும், எந்த விஷயத்திலும் இடம் பெற்றதாக வரலாறே கிடையாது. பெரும்பாலும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்துக்கு ஏற்பாடு செய்வதுதான் வழக்கம். ஆனால், இம்முறை ஒரு சிறு வித்தியாசத்தோடு, காரியம் நடந்திருந்தது. அதாவது கண் கெட்ட பிறகு என்பதற்குப் பதில் கொஞ்சம் முன்கூட்டியே, அதாவது கண் கெடத் தொடங்கிய போது, அல்லது கெட்டுக் கொண்டிருக்கும் போது சூரிய நமஸ்காரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நாட்டின் மாநிலங்களுக்கு இடையே மொழி ரீதியாகவோ, நதி நீர்ப் பிரச்னையாலோ, இன ரீதியாகவோ, வேறுபாடுகள் தோன்றுவதைத் தடுக்க ஆவன செய்யும்படி ஒரு கமிட்டியை அரசாங்கமே நியமித்திருந்தது. கமிட்டியில் எல்லா விதமான இன-மொழி-பிரதேச உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர். ஆறு வாரக் காலத்துக்குள் கமிட்டி தன் சிபாரிசுகளை எழுத்து மூலம் அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று அவசர உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கமிட்டியின் உச்ச கட்ட மகாநாடு விரைந்து உடனே கூட இருந்தது.
முதல் கூட்டம் சிம்லாவில் கூட வேண்டும் என்று ஏற்பாடாகியிருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்ம கர்லேகர் அக்கமிட்டியின் தலைவராகவும், ஹரியானாவைச் சேர்ந்த ஹரி கேசவ லால் காரியதரிசியாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். மாநிலத்துக்கு மாநிலம் மொழிக் கலவரங்கள், இனக் கலவரங்கள், எல்லைத் தகராறுகள் பூதாகரமாக உருவெடுப்பதைத் தடுக்க அவசரமாக கமிட்டியோசனை கூறியாக வேண்டுமென்பது அரசாங்கக் கட்டளையாயிருந்தது. அக்கமிட்டிக்காக அரசு பல லட்சம் ஒதுக்கியிருந்தது.
அடுத்த நிதியாண்டின் முதல் நாளாகிய ஏப்ரல் முதல் தேதி சிம்லாவில் கூட்டத்துக்கு ஏற்பாடு ஆயிற்று. கோடையின் தொடக்கமாதலால் சிம்லா என்கிற இடக்கவர்ச்சி பெரிதாயிருக்கும் என்று நம்பினார்கள். பிரதேச உறுப்பினர்களைத் தங்க வைப்பதிலிருந்து எல்லா ஏற்பாடுகளிலும் ஒருமைப்பாட்டைப் புகுத்தியிருந்தனர். மகாநாடு நடக்க இருந்த அரசாங்க விருந்தினர் விடுதி அறைகளில் வேறு வேறு பிரதேசங்களைச் சேர்ந்த வேறு வேறு மொழிகள் பேசும் இருவரை ஒவ்வோர் அறையிலும் இணைத்துப்போட்டிருந்தனர். ஒன்றுபட அது உதவும் என்று கருதினர்.
நாட்டின் எல்லா மொழிகளையும், எல்லாப் பிரதேசங்களையும், எல்லா நதிகளையும் சிலாகித்து வாழ்த்துகிற தாகூரின் பாடல் ஒன்றை மகாநாட்டின் தொடக்கத்தில் பாட ஏற்பாடாகியிருந்தது. ‘சர்வே ஜனோ சுகினோ பவந்து’ எல்லா மக்களும் நன்றாயிருக்கட்டும் - என்பது மகாநாட்டின் முத்திரை வாக்கியமாக மோட்டோவாக இருந்தது. உணவில் கூட ஒருமைப்பாட்டு ஏற்பாடு இருந்தது. ஒரு நாள் தமிழ்நாட்டுக் காலைச் சிற்றுண்டியாக இட்லி, இடியாப்பம், மறுநாள் பகலுணவுக்குக் கன்னட வகை, அன்று இரவு உணவுக்குப் பஞ்சாபி ஏற்பாடு. அடுத்த நாள் காஷ்மீரி கபாப்-புலவு என்றெல்லாம் ஒழுங்கு செய்திருந்தார்கள். மகாநாட்டுக் கூடத்தில் எல்லாப் பிரதேசத்துக் கலைஞர்கள், கவிஞர்களின் படங்களையும் கலந்து வைத்திருந்தார்கள். ஆனாலும் என்ன? பிரதிநிதிகள் தங்கும் போதே தகராறு ஆரம்பமாகி விட்டது. சர்ச்சை கிளம்பி விட்டது.
“எங்களுக்குக் காவிரி நீரைப் போதுமான அளவு தர மறுக்கும் கன்னடப் பிரதேசப் பிரதிநிதியோடு ஓர் அறையில் நான் இணைந்து தங்குவதென்பது நடவாத காரியம். எனக்குத் தனி அறை வேண்டும்” என்றார் தமிழ்நாட்டுப் பிரதிநிதி கணியூர் மணிமாறன்.
சரி, தொலையட்டும்; மராத்தியப் பிரதிநிதியையும் கன்னடப் பிரதிநிதியையும் சேர்த்துத் தங்க வைக்கலாம் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
‘கர்நாடக - மகாராஷ்டிர எல்லைப் பிரச்னை தீாந்து ‘பெல்காம்’ யாருக்கு என்பது முடிவானால் ஒழிய நான் மராத்தியரோடு தங்குவது முடியாத செயல்’ எனச் சவால் விட்டு ஒதுங்கி விட்டார் கன்னடப் பிரதிநிதி புல்லூர் புட்டப்பா.
பஞ்சாப்-ஹரியானா பிரதிநிதிகள் ஒருவரோடொருவர் சேர்ந்து தங்கவே பயந்து நடுங்கினார்கள், ஒதுங்கினார்கள்.
காஷ்மீர்-இமாசலப் பிரதேசப் பிரதிநிதிகளும் அவ்வாறே விலகினார்கள். கடைசியில் ஒவ்வொரு பிரதிநிதியையும் தனித்தனியாகவே தங்க வைப்பது என்று முடிவாயிற்று. முதல் முயற்சியே இப்படி ஆகி விட்டது. அடுத்து ஒவ்வொன்றிலும் கூட இப்படியே ஆயிற்று.
மூன்று நாள் மகாநாட்டின் முதல் நாள் தொடக்கத்தின் போதே தாகூரின் பாட்டைப் பாடியதும், தமிழ்ப் பிரதிநிதி அதைக் கடுமையாக எதிர்த்தார்.
“இந்தித் திணிப்பை இந்தப் பாட்டு உறுதிப்படுத்துகிறது. இதைத் தமிழகம் ஒரு போதும் ஏற்காது-ஏற்க முடியாது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையே இம்மாநாட்டின் தொடக்கப் பாடலாக ஏற்க வேண்டுகிறேன்” என்று தமிழில் அவர் முழங்கியதை யாரும் சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ளவில்லை. மலையாளப் பிரதிநிதிக்கு மட்டுமே அது இலேசாகப் புரிந்தது. அவர் உடனே தமிழ்ப் பிரதிநிதியிடம் “இப்போது பாடிய பாட்டு இந்தி இல்லை! வங்காளி” என்றார். இந்திக்கும் வங்காளிக்கும் கூட வித்தியாசம் புரியாதவராகத் தமிழ்ப் பிரதிநிதி இருப்பது அவருக்கு அதிர்ச்சியளித்தது.”சரி அதுதான் தொலையட்டும். ‘சர்வே ஜனோ சுகினோ பவந்து’ என்று மகாநாட்டின் கொள்கை வாக்கியத்தை இந்தியில் எழுதியிருக்கிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள்” என்று சீறினார் கணியூர் மணிமாறன் .“அது இந்தியில்லை, சமஸ்கிருதம் மிஸ்டர் மணியூர் கணிமாறன்!”
“தவறு! கணியூர் மணிமாறன் என்று சொல்ல வேண்டும்” என்று தம் பெயரைச் சரியாகச் சொல்லும்படி மலையாளப் பிரதிநிதியைத் திருத்தினார் மணிமாறன், மகாநாட்டை ஆங்கிலத்தில் நடத்துவதா, இந்தியில் நடத்துவதா என்ற சர்ச்சை எழுந்த போது வட இந்திய மாநிலங்கள் ஒரே குரலில் ஆங்கிலம் கூடாது என்று முரண்டு பிடித்தன. இந்தி கூடவே கூடாது என்றன தென்னிந்திய மாநிலங்கள். உடனே போர் மூண்டது.
“மாநாட்டை இந்தியில் நடத்தினால், அதை எதிர்த்து இன்றே இங்கேயே இப்போதே தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன்” என்றார் தமிழ்ப் பிரதிநிதி. இந்தியிலும் கூடாது, ஆங்கிலத்திலும் கூடாது என்றால் எப்படித்தான் மகாநாட்டை நடத்துவது என்று திணறிய பின், “எல்லா மொழிப் பிரதேசங்களையும் சமமாக நடத்துவதுதான் இந்த மகாநாட்டின் நோக்கம். ஆகவே, அவரவர்கள் தாய் மொழியில் அவரவர்கள் விரும்பியபடி பேசலாம்” என்று ஒருவர் கூறிய யோசனை ஏற்கப்பட்டது. அதன்படி தலைவர் நரசிம்ம கர்லேகர் மராத்தியில் பேசினார். காரியதரிசி ஹரி கேசவலால் இந்தியில் பேசினார். கணியூர் மணிமாறன் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தது தமிழ்! அது உலக மொழி. அதற்கு இணையான மொழிகளே இல்லை. காதலையும், வீரத்தையும் போற்றியது தமிழ். அதை எதிர்ப்போர் ததூசுதூசாகப் போய்விடுவது திண்ணம்” என்று தமிழில் முழங்கினார்.
“வெகுமானப்பட்ட அத்யட்சகருக்கும், சோதரன்மாருக்கும் என்ட நமஸ்காரம்” என்று மலையாளத்தில் ஆரம்பித்ததார் கேரளப் பிரதிநிதி.
“ஒரு ஹரியானாக்காரரை பொதுக் காரியதரிசியாக நியமித்ததன் மூலம் பஞ்சாபியர்களை இம்மாநாடு அவமதித்து விட்டது” என்று சீறிப் பாய்ந்தார் பஞ்சாப் பிரதிநிதி.
“ஒரு மராத்தியரைத் தலைவராகக் கொண்ட இக்குழுவிலிருந்து கன்னடியர்களுக்கு நியாயம் எதுவும் பிறக்க முடியாது” என்பதைக் கன்னடப் பிரதிநிதி முழங்கினார்.
மொழி பெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஒருவர் பேசியது முழுமையாக மற்றவருக்குப் புரியவில்லை.
பஞ்சாப் நதிகளின் நீரைப் பங்கிடும் விஷயத்தில் ஹரியானா மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாக ஹரியானாப் பிரதிநிதி குறைப்பட்டுக் கொண்டார்.
காஷ்மீரைப் பாரதத்தின் மற்ற மாநிலத்தினர் சந்தேகக் கண்களோடு பார்ப்பதைக் கைவிடவேண்டும் என்று கடுமையாகச் சொன்னார் காஷ்மீரப் பிரதிநிதி.
தகராறுக்கிடம் இல்லாமல் உணவு மேஜையருகே கூடும் போதுதான் எல்லா மாநிலப்பிரதிநிதிகளும் ஒத்துப்போனார்கள். எந்த விமர்சனமும் எழவில்லை.பஞ்சாப் பிரதிநிதி, தமிழக இட்லியைப் பிரமாதமாக இரசித்தார். தமிழகப் பிரதிநிதி காஷ்மீர் ‘காப்’பை விரும்பி உண்டார். உ.பி. பிரதிநிதி கன்னட பிஸி பேளிஹோளா பாத்தை ஏற்றுச் சுவைத்தார்.
மூன்று நாள் கூட்டத்துக்குப் பின்னரும் எந்த உருப்படியான யோசனையும் உருவாகவில்லை. மறுபடி அடுத்த கூட்டத்தை எங்கே கூட்டுவது என்ற பிரச்னை தான் எழுந்தது.
முடிவில் அதை ஒட்டிப் பெரிய சர்ச்சையே மூண்டது. “எந்த மாநாடானாலும் அதை வடக்கே தான் கூட்டியாக வேண்டுமா என்ன? வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ்நாடு தெற்கே இருப்பதை மறைப்பானேன்? வடக்கே தொடர்ந்து வாழ்வதா? தெற்குத் தேய்வதா?” என்றார் கணியூர் மணிமாறன்.
அடுத்த கூட்டத்தைக் கோவாவில் கூட்ட வேண்டும் என்றார் கொங்கணிப் பிரதிநிதி,
“பீகார் தான் பிற்பட்ட மாநிலம். அங்கே கூட்டுவது தான் சரி” என்றார் பீகார்
பிரதிநிதி.
இப்படி ஒவ்வொரு மாநிலத்துப் பிரதிநிதியும் அடுத்த உச்சக் கட்ட மகாநாடு, தம் மாநிலத்திலேயே கூட்டப் பட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள். மகாநாட்டுத் தலைவரால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.
மகாநாட்டை முடித்த பின் அவர் முன் இரு முக்கிய பிரச்னைகள் இருந்தன. ஒன்று, மூன்று நாட்களாக சிம்லாவில் கூடி என்ன செய்தோம் என்று உள்துறை அமைச்சகத்துக்குச் சொல்வதற்கு எதுவுமே இல்லை. இரண்டாவது, அடுத்த மகாநாட்டை எங்கே கூட்டுவது என்பது பற்றிய கடுமையான சர்ச்சை,
பிரதிநிதிகளை வழியனுப்பிய பின் சுலபமாகப் பிரச்னைக்கு முடிவு ஒன்று காண வழி பிறந்தது. இந்த மூன்று நாள் உச்சகட்ட மகாநாட்டின் செலவே பிரதிநிதிகளின் TA, D.A. உள்பட ஆறு லட்ச ரூபாய்க்கு மேல் ஆகியிருந்தது. ஆறு அங்குலம் கூட ஒருமைப்பாடு வளரவில்லை. திரும்பத் திரும்ப யோசித்த போது மகாநாட்டை ஏப்ரல் முதல் தேதி கூட்டியதால் தான் இப்படி ஆகி விட்டதோ என்று கூடத் தோன்றியது. எந்த மாநிலமும், மொழி, இன, ஆணவங்களையும் பிரதேச ஈகோவையும் விட்டுக் கொடுத்து ஒற்றுமைக்கு முன் வரத் தயாராயில்லை. விரக்தியிலும், எரிச்சலிலும் கமிட்டியின் தலைவர் பின் வரும் சிபாரிசை அரசாங்கத்துக்கு எழுதி அனுப்பினார்.
“ஒருமைப்பாட்டை இப்போது இருக்கிற அளவிலாதுகாப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அதைப் பற்றி மேலும் விவாதிக்கவோ, கலந்து பேசவோ செய்யாமல் அதை அப்படியே விட்டு விடுவது நல்லது. நாம் ஒருமைப்பாட்டை வளர்க்க எடுக்கும் எந்த முயற்சியும், ‘கவுண்டர் புரடக்டிவ்’ ஆக நேர் எதிரான விளைவையே தருகிறது. ஒருமைப்பாட்டைப் பற்றிப் பல வேறு மொழி இன மக்கள் சேர்ந்து அமர்ந்து பேச ஆரம்பிக்கும் போதே வேற்றுமைகள்தான் தலை தூக்குகின்றன. ஒவ்வொரு மொழி இன-பிரதேச-மக்களும் விலகி இருக்கிற நேரங்களை விட நெருங்கி இருக்கிற நேரங்களிலேயே அதிகம் வேறுபடுகின்றனர். நெருங்கி உட்காரும் போதே முதலில் வேற்றுமைகள்தான் தலை தூக்குகின்றன.
எனவே, குற்றுயிரும் குலையுயிருமாக மீதமிருக்கும் ஒருமைப்பாட்டைக் கொல்லாமல் காப்பாற்ற வேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் இந்தக் கமிட்டியை உடனே கலைப்பதுதான்”.
என்று துணிந்து எழுதிக் கையொப்பமிட்டு ‘கான்ஃபிடென்ஷியல்’ என்று சீல் வைத்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் கமிட்டியின் தலைவர்.
'’ன் செய்தது சரிதானா’ என்று உறுத்தல் அவருள்ளேயே எழுந்தது. சரியில்லையானாலும் அது தவறில்லை என்றும், அவருக்கே உறுதியாகத் தோன்றியது அப்போது,
(கல்கி, விடுமுறை மலர் - 1984)