நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/தேய்மானம்

160. தேய்மானம்

முத்துரங்கத்தை நான் முதன் முதலாகச் சந்தித்தது பாண்டிபஜாரில் ஒரு வெற்றிலை பாக்குக் கடைஅருகில். ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து ஒரு மாலைத் தினசரி வாங்கிக் கொண்டு, நான் கடைக்காரனிடம் பாக்கிச் சில்லறைக்காகக் காத்து நின்ற போது, “வணக்கம், சார். எப்படியிருக்கீங்க? இப்ப ‘மணிமலர்’ல வர தொடர்கதை ரொம்ப நல்லாயிருக்கு சார்” என்று புன்முறுவலோடு அருகே வந்தார், அந்த நடுத்தர வயது மனிதர். பாகவதர் கிராப். படர்ந்த முகம். நெற்றியில் குங்குமப் பொட்டு.

எனக்கு முதலில் குழப்பம். அப்புறம் தயக்கம். “வணக்கம்! நீங்க யார்னு தெரியலியே? ‘மணிமலர்’ல நான் இப்போ தொடர்கதை எதுவும் எழுதலியே!”

“நீங்க எதிலே எழுதினாலும், உங்க கதைகள்னா எனக்கு உசிர் சார்”

“அது சரி! நீங்க யார்னே சொல்லலியே?”

“நடிகமணி முத்துரங்கம்னு கேள்விப்பட்டிருப்பீங்களே? சின்ன வயசிலே பாஸ்கர தாஸ் பால விநோத சபா நாடகக் கம்பெனியிலே இருந்தேன். அப்புறம் சினிமாத் துறைக்கு வந்து கே.கே.வி. நிறுவனப் படங்களிலே சில்லறை வேஷங்களைப் பிரமாதமாப் பண்ணினேன்.”

“அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி”

“இப்பக் கூட ஏழரை மணிக்குத் தரணி ஸ்டூடியோவில படப்பிடிப்பு இருக்கு. நான் போயாகணும்”

மனிதர் விடாமல் கூடவே நடக்கிறார். மணிபர்சை மூடுகிறேன் நான்.

“அடடே மணியாச்சே?”

“அப்போ நாம இன்னொரு நாள் பார்க்கலாமா?”

“ஒரு சின்ன உதவி. ஒரு கலைஞனோட கஷ்டத்தை இன்னொரு கலைஞன் தான் புரிஞ்சிக்க முடியும்/”

“சொல்லுங்கோ.”

“நான் இப்போ வீட்டிலே இருந்தேன்னா, பட நிறுவன வண்டி வந்து அழைச்சிண்டு போகும். இப்போ இங்கே இருக்கிறதாலே என் செலவில, நான்தான் போயாகணும். நம்மாலே படப்பிடிப்பு நின்னுடப்படாது.”

“நியாயந்தான்.”

 "ஒரு பத்துருபாய் குடுத்தீங்கன்னா ஆட்டோவில் போயிடுவேன். வீட்டிலேருந்து கிளம்பறப்போ எடுத்துக்க மறந்துட்டேன்.கலைஞர்களுக்கு ஞாபகமறதி கூடவே பிறந்த வியாதி. நீங்களும் அனுபவப்பட்டிருப்பீங்களே?” “பக்கத்திலே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கடையிலே டெலிஃபோன் பண்ணிப் பேசி நீங்க இங்கே இருக்கிற தகவலைத் தெரிவிச்சுக் கார் அனுப்பச் சொல்லலாமா?” "அது கஷ்டம் சார்: டைரக்டர், தயாரிப்பாளர், மானேஜர்லாம் செட்ல இருப்பாங்க. அங்கே போன் கிடையாது.” “டாக்ஸியிலே போய் ஸ்டுடியோவில அவங்களையே டிஸ்போஸ் பண்ணி வாடகை குடுக்கச் சொல்லிவிடலாமே!” - “அது நல்லா இருக்காது சார்” நான் தயங்கி நின்றேன். - "நீங்க நாளைக்குச் சாயங்காலம் பேப்பர் வாங்க வரப்ப ஒரு பத்து ரூபா நோட்டோடு இங்கே காத்திண்டிருப்பேன்.”

தயங்கித் தயங்கி ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்டு நன்றி சொல்லி வணங்கி விட்டுப் புறப்பட்டார் அவர். அதற்குப்பின் சொல்லியபடி மறுநாள் அந்தப் பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுக்க அவர் வரவுமில்லை. அவர் வரவுக்காக நான் காத்திருக்கவுமில்லை. நாளடைவில் எனக்கு அது மறந்து போயிற்று. - . . . ஆறு மாதம் கழித்து உஸ்மான் ரோடில் சிவாவிஷ்ணு கோயில் எதிரே ஒரு சீவல் கடையில் நான் வெற்றிலை சீவல் வாங்கிக் கொண்டு நின்றபோது, "அண்ணா, வணக்கம். முந்தாநாள் உங்களை டி.வியிலே பார்த்தேனே? செய்திமலர்லே ராஜபார்ட் மாதிரி ஜம்னு பேசினீங்களே?” என்று பின்புறம் ஒரு குரல் ஒலித்தது. திரும்பினால் முத்துரங்கம்.

“உங்க தயவுலே ஐம்பது கிராம் சீவலும் எட்டணாவெத்திலையும் வாங்கிக்கறேன்” என்று என் இசைவுக்குக் காத்திராமலே மேற்படி அயிட்டங்களைக் கடைக்காரனிடம் வாங்கி முடித்துவிட்டார் முத்துரங்கம்.கேட்டதைவிட அதிகப்படியாக ஒருபாக்கெட் பன்னிர்ப் புகையிலையும் வாங்கிக் கொண்டிருந்தார்.

"என்ன, ரொம்ப நாளாய்த் தட்டுப்படவே இல்லையே, வெளியூர் போயிருந்தீங்களா?” . -

“அதையேன் கேட்கறிங்க அண்ணா? ஒரே வெளிப்புறப் படிப்பிடிப்பு மயம் ஏழெட்டுப் படத்தில் மாட்டிக் கிட்டிருக்கேன். முந்தா நாள் ஊட்டி, நேத்து செஞ்சிக்கோட்டை நாளைக்கி வைகை டாம்னு அலைச்சல்

இத்தனை வெளியாகிற படங்களிலே நடித்தும் இந்த மனிதருக்கு ஏன் இத்தனை பண வறட்சி என்ற திகைப்பு ஏற்பட்டது. நான் சினிமாபார்க்கிற ஆள் இல்லை. சினிமா இதழ்களையும் அதிகமாக இலட்சியம் செய்து படிக்கிற பழக்கமும் எனக்குக் கிடையாது. அந்த வகையில் நான் ஒரு ஞான சூன்யம்

அதனால் முத்துரங்கம் ஏற்கனவே நடித்ததாகக் கூறிய பழைய படங்களையும் நான் பார்த்திருக்கவில்லை. நடிக்கப் போகிற புதிய படங்களையும் பார்க்க. நேரப் போவதில்லை. ஆனால், மனிதர் ஏன் கொஞ்சமும் சுயமரியாதையோ மானரோஷமோ இன்றித் தெருவில் பிச்சைக்கு அலைகிறார் என்று வியப்பும் ஆத்திரமும் அடைந்தேன். ஒருவேளை பல சினிமாக்காரர்கள், நாடக நடிகர்களைப்போல் இவருக்கும் இரண்டு மூன்று சம்சாரங்களும் ஏகப்பட்ட குழந்தை குட்டிகளும் இருக்குமோ? அவர் மேல் பரிதாபமாகவும் இருந்தது, ஆத்திரமகவும் இருந்தது.

அந்த அந்த நேரங்களில் முத்துரங்கம் என்னைப் பற்றி நல்லதாக இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து சொல்லிவிட்டு ஏதாவது கேட்டால், தட்டாமல் உதவி வந்தேன். பலவீனந்தான்! கடவுளே தோத்திரபிரியர் என்கிறார்கள். பாமர மனிதனான நான் எந்த மட்டும்

மூன்றாவது முறையாக ஆடிக் கிருத்திகைத் தினத்தன்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு நாளிலோ, சரியாக ஞாபகம் இல்லை. அதிகாலையிலிருந்து விரதமிருந்து அன்று மாலை பட்டினியோடு வடபழநி கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு வந்தேன். நாள் முழுவதும் பசியாயிருந்தது. திரும்பும்போது ஒர் ஒட்டலில் புகுந்து இட்லி வடைக்கு ஆர்டர் சொல்லிவிட்டுக் காத்திருந்தபோது முத்துரங்கம், திடீரென்று உதயமாகி எதிர் நாற்காலியில் உட்கார்ந்தார்.

“முந்தாநாள் ராஜாஜி ஹால்லே பாரதி விழாவிலே பிரமாதமாப் பேசினிங்க. 'பாரதியைக் காலச் சிமிழில் அடைக்க முடியாது. அவன் நம் தலைமுறைக்கு மட்டுமின்றி வரப் போகிற பல தலைமுறைகளுக்கும் யுகபுருஷனாக விளங்குவான்’னு நீங்க வெண்கலக் குரல்லே முழங்கினப்போ கிளம்பின கரகோஷத்திலே இரண்டு கைகள் என்னோடது ஸார்”

“பாரதி விழாவுக்கு நீர் வந்திருந்தீரா?” - "

அண்ணா பேசறதா தெரிஞ்சதும் நான் எப்பிடி வராம இருக்க முடியும்?”

"இன்னும் ஒரு பிளேட் இட்லி வடை கொண்டு வாப்பா” என்று நானே முந்திக் கொண்டு முத்துரங்கத்துக்காகவும் சேர்த்து ஆர்டர் செய்தேன்.

இட்லிவடையைச் சாப்பிட்டுக்கொண்டே."இந்தஹோட்டல்லேநெய்ரோஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்” என்று என்னிடம் புகழ்ந்துவிட்டு, ஸர்வரைக் கூப்பிட்டு இரண்டு நெய்ரோஸ்ட்டுக்கும் ஆர்டரும் கொடுத்துவிட்டார் முத்துரங்கம்.

சாப்பிட்டு முடித்ததும் பன்னிரண்டு ரூபாய் எண்பது காசு பில் கொடுத்தேன். என்னிடம் இருந்ததே பதினைந்து ரூபாய்தான்.

"அண்ணா மன்னிக்கனும்: உங்ககிட்ட ரெண்டு வார்த்தை நின்னு பேசக்கூட எனக்கு இப்ப நேரம் இல்லே, மூவிடோன் ஸ்டுடியோவில் ரஜனி சாரோட ஒரு ரோல் பண்றேன். அவசரமாய்ப் போகணும். அப்புறம் பார்க்கலாம்” என்று மின்னலாய் மறைந்துவிட்டார் முத்துரங்கம். நல்ல வேளை, ஆட்டோவுக்குப்பத்து ரூபாய் கொடு, என்று கேட்காமல் அந்த மட்டில் விட்டாரே என்ற மகிழ்ச்சியில் நான் படியிறங்க இருந்தபோது, "சார், ஒரு நிமிஷம்" என்று குரல் கேட்டுத் திரும்பினேன். ஹோட்டல் பணப்பெட்டியில் அமர்ந்திருந்தவர்தாம் என்னைக் கூப்பிட்டார்.

திரும்பிப் போனேன்.

“உங்க செல்வாக்கிலே யாரிடமாவது சிபாரிசு பண்ணி இந்த மனுஷனுக்கு ஒரு வேலை வாங்கி வைக்கப்படாதா? இப்படிப் பைத்தியமா அலைகிறானே?”

“யாரைச் சொல்றீங்க?"

“இப்போ உங்க செலவிலே டிபன் சாப்பிட்டுவிட்டுப் போறானே, முத்துரங்கம், அவனைத்தான்.”

“ஏன்? அதான் நிறைய சினிமாவிலே நடிச்சுண்டிருக்காரே?”

‘மண்ணாங்கட்டி! அதை எல்லாம் நீங்க நம்பறீங்களா? சினிமாவும் இல்லை; தெருப்புழுதியுமில்லை; நானும் முத்துரங்கமும் ஒரே நாடகக் கம்பெனியிலேதான் இருந்தோம். கம்பெனி கலைஞ்சு போனதும் இனிமே யோக்கியமா வேற ஏதாவது தொழில் செஞ்சுதான் வாழனும்னு நான் கடனை உடனை வாங்கி இந்த ஒட்டலை வச்சேன். அவன் சினிமாவிலே சான்ஸ் தேடி அலைஞ்சான். இன்னிக்கி வரை எதுவும் கிடைக்கல்லே. ஏமாற்றத்திலும் விரக்தியிலும் மனநோயாளியா' மாறி, இன்னிக்கு அங்கே, நாளைக்கி இங்கே படபிடிப்பு, நேத்திக்கி பெங்களுர் போயிருந்தேன்னு பார்க்கிறவங்ககிட்ட எல்லாம் பொய் சொல்லிக்கிட்டு முடிவிலே, ரெண்டு ரூபா கைமாத்துக் குடுங்க'ன்னு முடிக்கிறது வழக்கம். இப்பல்லாம் பலபேர் இவன் தலையைப் பார்த்தாலே ஒட ஆரம்பிச்சுடறாங்க”

“ஐயையோ, அப்படீன்னா இவரோட குடும்பம்”

"குடும்பமா? இவனுக்கு ஏது குடும்பம்? தனிக்கட்டை சார்! அந்த நாளிலே நாடகக்காரனை நம்பி எவன் பெண் கொடுத்தான்” -

“நீங்களே இங்கே இந்த ஒட்டல்லே ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்து உட்கார்த்தி வைக்கப்படாதோ?”

“அதெல்லாம் ஏற்கனவே செய்து பார்த்தாச்சு. இங்கேயே உட்கார்த்திப் பார்த்தேன். வர்ற வாடிக்கையாளரை எல்லாம் நிறுத்தி வச்சு,'உங்களுக்குத் தெரியுமோ, சினிமாவிலே கேரெக்டர்ரோல் எல்லாம் பண்ணியிருக்கேன். இதோ இப்பக்கூட தரணி ஸ்டுடியோவில் படப்பிடிப்புஇருக்கு உடனே போயாகணும்னு சொல்லுவான் தொந்தரவு தாங்காமப் போச்சு முத்துரங்கம் நல்ல கலைஞன்தான். ஆனா விரக்தியும் ஏமாற்றமும் அவனை மனநோயாளியாவே ஆக்கிடிச்சு" "அவரைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சும் என்னைக் கூப்பிட்டு அவருக்கு வேலை கொடுக்கச் சொல்றீங்களே?”

“ஒரு நல்ல வேலையாப் பார்த்துக் கொடுத்து, உங்களை மாதிரி ஒருத்தர் படிப்படியா அறிவுரை கூறி மெல்ல மெல்ல மனசை மாத்தினிங்கன்னா, முத்துரங்கத்தோட பைத்தியத்தைத் தெளியப் பண்ணிடலாம்னு நெனைக்கிறேன்.

"அவர் எவ்வளவு காலமா இப்படி இருக்கார்?"

"பத்து வருஷத்துக்கு மேலேயே இருக்கலாம். சொந்தமாப் பாடத் தெரியும். நடிப்போடு சங்கீத ஞானமும் உண்டு.”

"பத்து வருஷ காலமாகத் தேய்ந்துபோன ஒரு கலையுணர்ச்சியை இனிமேல் சரிப்படுத்த முடியுமான்னு எனக்கே சந்தேகமாகத்தான் இருக்கு

"நீங்க படித்தவர் எழுத்தாளர். மனித மனங்களின் நுணுக்கங்களை அறிந்தவர். உங்க முயற்சி ஒருவேளை பயன் அளிக்கலாம். என்னாலே முடியாதது ஒருவேளை உங்களாலே முடியலாம். ஒரு நல்ல கலைஞன் வீணாப் போயிடக் கூடாதுங்கறதுதான் என்னோட கவலை”

"பார்க்கலாம், முயற்சி செய்யறேன்” என்று அவருக்கு உறுதி கூறிவிட்டுத் திரும்பினேன்.

என் அதிர்ஷ்டமோ, அல்லது துரதிர்ஷ்டமோ தெரியவில்லை. பனகல் பூங்கா அருகே அடுத்த வாரமே முத்துரங்கத்தை நான் சந்திக்க நேர்ந்தது. சாலையோரத்துக் கரும்பு ஜூஸ் வியாபாரியிடம் கரும்புச்சாறு கேட்டுவிட்டு, அவன் பிழிந்து தருவதற்காகக் காத்திருந்தபோது, "அண்ணா வணக்கம்! பூம்பொழில்லே அந்தச் சிறுகதை, ஜமாய்ச்சிருக்கீங்க” என்ற குரலுடன் முத்துரங்கம் உதயமானார்.

"நான் பூம்பொழில்லே கதை எதுவுமே எழுதலியே முத்துரங்கம்”

"நீங்க எதிலே எழுதினாலும் எழுதாவிட்டாலும் உங்க கதைன்னா எனக்கு உசிர் சார்” - இன்னொரு கிளாஸ் கரும்புச் சாறுக்குச் சொல்லிவிட்டு அருந்தி முடித்தபின், “முத்துரங்கம், உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும். எங்கூட ஒரு பத்து நிமிஷம் பார்க்குக்கு வர முடியுமா? அவசரம் ஒண்ணும் இல்லியே உங்களுக்கு?” என்று ஆரம்பித்தேன்.

"அவசரந்தான். பார்க்கவி ஸ்டுடியோவில் நவபாரதி மூவிஸாரின் படத்திலே தகப்பனாரா நடிக்கிறேன். மகன் யார் தெரியுமா? சிவாஜிதான். அதாவது படத்திலே பரவாயில்லே, வாங்கோ, உங்களோட பேசிட்டு அப்புறமாப்போறேன்.”

பார்க்கில் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு மூலை பெஞ்சாகப் பார்த்து அமர்ந்தோம். நான் இதமான குரலில் ஆரம்பித்தேன். "இதோ பாருங்கள், முத்துரங்கம்! உங்களுக்கு வயசாச்சு. நீங்க இன்னும் சின்னக் குழந்தை இல்லே. இப்படிச் சுத்தறது உங்களுக்கே நல்லா இருக்கா? உங்களுக்குத் தெரிஞ்ச சங்கீத ஞானத்தில நாலு குழந்தைகளுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்தாக்கூட மாசம் நானூறு ஐந்நூறு சம்பாதிக்கலாம். சினிமா உங்களைப் பைத்தியமாக ஆக்கி விட்டதைப் பத்தி நீங்களே வருத்தப்படனும் நீங்க மனசு மாறி நல்லபடி வர்றதா இருந்தா, நானே நாலு டியூஷனுக்கு ஏற்பாடு பண்றேன்.”

“என் மேலே பொறாமையிலே, யாரோ என்னைப் பத்தி உங்ககிட்ட தப்பாச் சொல்லியிருக்காங்க. டியூஷனாவது ஒண்ணாவது? எனக்கு அதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு? இன்னிக்கி நவபாரதி மூவிஸ்ல படப்பிடிப்பு இருக்கு.நாளைக்கி சாந்தி சினிடோன்ல, நாளன்னிக்கி ஆர்.கே.வி. பிக்சர்ஸ்ல ஒரு நிமிஷம்கூட மிச்சமில்லே. இதோ பார்க்கவி ஸ்டுடியோவுக்குக் கிளம்பிண்டேயிருக்கேன்” என்று எழுந்திருந்தார் முத்துரங்கம்.

“இந்தாங்க, இதை வச்சுக்குங்க. ஆட்டோவுக்குத் தேவைப்படும்” என்று அவர் கேட்பதற்கு முன் நானாகவே பத்து ரூபாயை எடுத்து நீட்டிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். வழக்கம் போல் முதலில் ஆத்திரமும் பின்பு பரிதாபமும் ஏற்பட்டன.

என்றுமே இனிமேல் திருத்த முடியாத மனத்தளவுக்குத் தேய்ந்து போனபின் ஒரு கலைஞனின் மனத்தை மீண்டும் மறுமலர்ச்சியும் முழுமையும் பெறச் செய்ய முடியாதென்று என்னுள் ஒரு தீர்மானமான முடிவே ஏற்பட்டிருந்தது. கொஞ்சம் நஞ்சம் இல்லை. பல வருஷத் தேய்மானம்.

முத்துரங்கத்தை அவருடைய சொந்தக் கற்பனைகளிலும் சுகமான பொய்களிலுமே தொடர்ந்து வாழவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவருடைய நண்பரான வடபழநி ஒட்டல் உரிமையாளருக்கு டெலிபோன் செய்து கூறினேன்.

எந்தப்படத்திலுமே நடிக்காத முத்துரங்கம் என்னளவில் இன்னும்கூட ஒரு சூப்பர் ஸ்டாராகவே தோன்றினார். (கலைமகள், தீபாவளி மலர், 1984)