நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/மல்லிகையும் மருக்கொழுந்தும்
135. மல்லிகையும் மருக்கொழுந்தும்
வைகறைப் பனியின் பூங்காற்று மெல்ல வீசிக்கொண்டிருந்தது. கீழ் வானம் இளஞ்சிவப்பில் முழுகி நீராடி மேலெழுந்தது போல விளங்கிற்று. காலை நேரத்தின் சக்தி அற்புதமானதாகத் தோன்றியது ரங்கநாதனுக்கு. அதுவும் அந்தக் கொள்ளிடங் காவேரிக் கரையில் நேரமும், இடமும் சேர்ந்து அவன் மனத்தில் மன நிம்மதியையும், சந்துஷ்டியையும் உண்டாக்குவதை நாள் தோறும் அவன் உணர்ந்துதான் இருந்தான். காலை நேரத்தில் பூக்கள் மலருவது போல மனங்களும் நாள் தோறும் மலரும்படியான மகத்துவம் இருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் மனம், காலத்தின் சுவடுகளில், நாட்கிளையின் அரும்பு போன்ற காலை நேரத்தைப் பற்றி இப்படி எண்ணுவதற்குக் காரணம் இருக்கத்தான் இருந்தது. அந்தக் காரணம்தான் அவனுடைய சொந்த வாழ்க்கை அனுபவம்.
மார்கழி மாதத்துப் பனியில் இப்படி அவனை நாள் தோறும் கொள்ளிடக் கரைக்கு வந்து போகச் செய்தது ஜானகியால் வந்த வினை என்றுதான் சொல்ல வேண்டும். அவன் மனமும் அவளைப் பொறுத்த வரையில் அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்திற்குத்தான் வந்திருந்தது. இவ்வளவு ஏன்? அவனை ஏகாங்கியாக்கி விட்டுத் துணிந்து சென்ற நெஞ்சுரம் அவளைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்?
அன்று தன் தகப்பனார் ஜகந்நாதாச்சாரியார், தானும் ஜானகியும் காதல் மணம் செய்து கொள்ளப் போவதை மறுத்து ஆத்திரத்தோடு பேசிய பேச்சு இப்போது கூட அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறார் போல இருந்தது. ஆனால், ஒரே ஒரு வேறுபாடு. அன்று அந்தப் பேச்சு, காதல் புரியும் இளம் ஆண் பெண்களைப் பயமுறுத்துவதையே கடமையாகக் கொண்ட தகப்பனார் வர்க்கத்தின் கொடிய சொற்களாக அவன் காதில் விழுந்தது. இன்றோ..? தகப்பனாரின் அந்த வார்த்தைகளில் விவரித்து உரைக்கத் தக்க அனுபவ உண்மைகள் கலந்திருப்பதாக அவனுக்கே தோன்றுகிறது. அன்று அவரை எதிர்த்தும், இரைந்து பேசியும் தான் கொண்டு விட்டதாகக் கருதியிருந்த வெற்றி மனக் கோட்டை இன்று தனக்கே முழுத் தோல்வியாக இடிந்து போனதை அவன் காண்கிறான்.
ஜானகி இப்படி மாறுவாள் என்று கனவில் கூட அவன் நினைத்தது இல்லை. ‘பி.ஏ. படித்த ஒரு பெண்ணிடம் காதலும், பெண்மையும் இருப்பதை விடச் சுதந்திர உணர்ச்சியும், அடங்காத இயல்பும் இவ்வளவு தூரம் அளவு கடந்து இருக்கும் என்று அன்றே தோன்றியிருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?’ என்று இப்போது அவன் எண்ணினான். “ரோஜாப் பூ அதன் செடியில் மலராக இருக்கும்போது காட்சிக்கும், நாசிக்கும் அளவுக்கு உட்பட்ட கவர்ச்சியைத் தருகின்றது.ஆனால், அதே ரோஜாப் பூவை அத்தராக மாற்றி நுகரும்போது மனத்தை வரம்பு கடந்த போதைக்கு ஆளாக்கி விடுகிறதல்லவா? படித்த பெண்களின் காதலும், காதலுக்குப் பின்னுள்ள வாழ்வும் அத்தகையதுதான் போலும்” இந்தத் தத்துவ உணர்ச்சி அவனுக்கு இன்று ஏற்படுகின்றது.
அன்று காலேஜில் படித்தபோது மாலை நேரத்தில் எத்தனையோ நாட்கள் அவன் ஜானகியோடு அதே காவேரிக் கரைக்கு வந்திருக்கிறான்.அப்போது அவள் உள்ளத்தில் மலரின் மென்மையும் அன்பு மணமும் இருப்பது கண்டு அவன் வண்டானான். பால் பொழியும் எண்ணற்ற வெண்ணிலாக்கள் அவர்களை அந்த மணல் வெளியில் எத்தனை எத்தனையோ காதல் பேச்சுக்களைப் பேசச் செய்திருக்கின்றன. சலசலவென்று ஒடும் தண்ணிரின் ஜலதரங்க நாதத்தோடு அவர்களுடைய அளவற்ற ஜோடிச் சிரிப்பொலிகளையும்.கேட்டு மகிழ்ந்த இரவுகளும் பல. இப்போதோ, அவை யாவும் வெறும் கனவுகளாயின.
சிந்தனையிலிருந்து விடுபட்ட ரங்கநாதன், நன்றாக விடிந்து விட்டதைக் கண்டு அவசர அவசரமாகக் குளித்து விட்டுப் புறப்பட்டான்.அரையிலும் தோளிலும் இருந்த ஈரத் துணிகள் குளிரின் மிகுதியால் உடலை ‘வெடவெட’ என்று நடுக்க, வடக்கு அடையவளைந்தானை நோக்கி நடந்தான் அவன். சரியாக மணி பத்துக்கு அவன் காலேஜில் இருக்க வேண்டும். அதற்குள் அடுப்புடனே போராடிச் சமையலை முடித்துச் சாப்பிட அன்று நேரம் காணாதுபோல இருந்தது.காலேஜுக்குக் கொஞ்சம் நேரம் தாமதித்துச் சென்றால் அந்த பிரின்ஸிபால் முகத்தைப் பொறித்த அப்பளம் மாதிரிக் கடுகடு என்று வைத்துக்கொண்டு ‘புரொபஸர்களுடைய ஸ்டாஃப் ரூம் வாசலில் தயாராக வந்து நின்று கொண்டிருப்பார். இரண்டொரு நாள் தீராத குறையாக அவன் தாமதித்துச் சென்ற குற்றத்திற்காக, முதல் ‘பீரியடு’ ‘லீஷராக’ இருந்த அவன் டயம்டேபிளை மாற்றி முதல் பீரியடில் சீனியர் இண்டர் பொயடரி வகுப்பை அவன் தலையில் ஏற்கெனவே சுமத்தியிருந்தார் அவர் ஒன்பதே முக்காலுக்குள் காரியங்களை எல்லாம் முடித்துக்கொண்டு அவன் பஸ் ஸ்டாப்பிற்கு ஓடினால் சில சமயங்களில் பஸ்ஸில் இடம் பிடிப்பதற்குள்ளே தாமதம் ஆகிவிடுகிறது. அன்று தன் ஏகாங்கியான வாழ்க்கையின் நிலையைப் பற்றியும், ஜானகி தன்னை இந்தக் கதிக்கு உள்ளாக்கிச் சென்றதையும் பற்றிய எண்ணங்களினால் பீடிக்கப்பட்டுக் காவேரிக் கரையில் வழக்கத்தை விட அதிக நேரம் தங்கிவிட்டான் அவன்.
2
அடுப்பிலே சமையலுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அன்று நடத்த வேண்டிய லெக்சர்களுக்கு முன்னோட்டமாக ஒருமுறை புஸ்தகங்களைப் புரட்டினான், முதன் முதலாக அவன் கையெடுத்துப் பார்த்த பக்கத்திலேயே, “வாழ்க்கை என்பது இரண்டு கரைகளுக்கு அடங்கி ஒடும் ஒர் ஆறாக இருந்தால் வெள்ளமில்லாத காலத்தில் அதிலுள்ள மேடுபள்ளங்களை முன்பே அறிந்து கொள்ளலாம்; வெள்ளம் வருவதற்கு முன்பும் அறிகுறிகள் தெரியும். ஆனால், வாழ்க்கை கரைகளற்ற அலை பாயும் ஆழ் கடலாக அல்லவா இருக்கிறது? நீர் வற்றவோ, குறையவோ செய்யாத அந்தக் கடலுக்குள் நுழைந்த பிறகுதான் அதிலுள்ள இன்ப துன்ப அனுபவங்களைப் பிரத்தியட்சமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது” என்ற பொருளுக்குரிய அந்த ஆங்கிலக் கவிதை ரங்கநாதனின் கண்களில் பட்டது. ‘புரொபஸர் ரங்கநாதன் எம்.ஏ.’ என்ற திறமைக்கு இருப்பிடமாகிய பெயர் பெற்ற அவன், இந்தப் பாடலை வைத்துக் கொண்டு ஒன்றரை மணி நேரம் மாணவர்கள் பிரம்மிக்கும்படி பேசிவிடமுடியும். ஆனால், இன்று அப்படி முடியாது. வாழ்க்கையைப் பற்றி அந்தப் பாடல் கூறும் கருத்து அவனுடைய சொந்த அனுபவத்தில் மறு பிரதியாக இருந்ததுதான் அதற்குக் காரணம்.
இராமன் பிரிவு தசரதனைத் துன்பங் கொள்ளச் செய்த நிலையைக் கவிகள் நூற்றுக்கணக்கான உவமை உருவகங்களால் வர்ணித்துப் பாடுவதும், மேடைப் பேச்சாளர்கள் அந்தப் பாடல்களில் இரண்டொன்றை வைத்துக்கொண்டே மூன்று மணி நேரம் மூச்சு விடாமல் பேசுவதும் சாத்தியம்தான். ஆனால், தசரதனே அந்தத் துன்பத்தை அப்படி வாய் திறந்து பேசுவதுதான் சாத்தியமில்லை. உண்மைத் துன்பம் என்பது உள்ளத்தோடும் உணர்வுகளோடும் ஒடுங்குவது. அது மென்மையும் தனிமையும் கலந்த முறையில் தன்னில் மட்டும் வெளிப்படும். கொந்தளிக்கும் கடலில் ஒரு சிறு படகை நம்பிக் கரையிலிருந்து துணிவோடு புறப்பட்டுவிட்டது போல ஜானகியின் காதலை நம்பிப் பெற்றோர்களின் உறவை அறுத்துக்கொண்டது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது அவனுக்குத் தெரிகிறது. இதே உண்மை அன்று ஜானகியை ரிஜிஸ்தர் கலியாணம் செய்துகொள்ளும் போது சிறிதளவும் மனத்தில் தோன்றாமலிருந்துவிட்டது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. இளமை நெஞ்சத்திற்குச் சிந்திப்பதில் வேகம் இருப்பதுபோல மோகத்திற்கு அடிமைப்படுவதிலும் வேகம் இருக்கும் போலும்.
"ஜானகியோடு ரிஜிஸ்தர் மணம் செய்துகொள்ளப்போகும் செய்தி காதில் விழுந்த உடனேயே பரம வைதிகரான ஜகந்நாதாச்சாரியார்,“இனி இந்த வீட்டு வாயிற்படியில் காலை வைக்கக்கூடாது. உன் முகத்தில்கூட விழிக்க மாட்டேன். உன் மேல் படிப்பிற்காக என்னிடமிருந்து ஒரு சல்லியும் எதிர்பார்க்கக் கூடாது” - என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அவன் தாய் அவனுக்காக எவ்வளவோ பரிந்து பேசியும் பயனில்லாமற் போயிற்று. இவ்வளவிற்கும் தன் மனம் கலங்காமல் துணிவோடு இருக்குமாறுசெய்த அவ்வளவு தூரம்அல்லவா, ஜானகி நம்மைக் கவர்ந்து நம் மனத்தில் மோகத்தை விதைத்திருந்தாள்!.பி.ஏ. இரண்டாம் வகுப்பில் தேறியிருந்த நாம் காலை மாலை நேரங்களில் ஒரு டியூடோரியல் காலேஜில் டியூடராக இருந்து அப்போதும் ஜானகியோடு வாழ்க்கையை நடத்தினோமே.இதே வீட்டில் அந்தப் புது வாழ்விலிருந்த இன்பம் இப்போது எங்கே போயிற்று? பகல் நேரங்களில் ‘எம்.ஏ.’ வகுப்பில் காலேஜுக்கு ஆஜராகியும், காலை மாலைகளில் டியூடராகியும் நாம் சம்பாதித்துக் கொண்டே மேல் படிப்புப் படிக்கும் அளவிற்கு அவள் அன்று துணிவைக் கொடுத்திருந்தாள்!”
ஆனால் . ஆனால் இன்றல்லவா தெரிகிறது. காதல் என்ற அந்தப் புது மணமலர் உதிர்ந்து காய்ந்து போகவும் முடியும் என்ற பயங்கர உண்மை புத்தம் புதிய வார்ப்பில் உருவாகிய நாதக் கட்டு மிக்க வெண்கல மணியாக இருந்தது அன்றைய வாழ்க்கை இன்றோ? அதன் ஒரு பகுதி கீறிப் பிளவுபட்டுவிட்டது.இப்போது அதில் பழைய நாதலாவண்யம் இல்லை. அடித்தால் நாராசம்போலக் கடுமையாக ஒலிக்கிறது. வாழ்க்கையின் நாதத்தில் லயசுகம் கெட்டுப்போகும்படி செய்துவிட்ட அந்தச் சம்பவம் கோடை விடுமுறை முடியும் தருணத்தில் நடந்தது. தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவள் அப்படி ஏற்பாடு செய்து கொண்டதைக் கூட அவன் பொறுத்து மன்னிக்கத் தயாராக இருந்தான். ரங்கநாதன், காதலைக் கவிகளின் காவியத்தில் படித்தது போலவே தன் வாழ்க்கையிலும் நம்பி எதிர்பார்த்தது அவனுடைய முழுப் பெருங்குற்றம் என்பதை நிரூபித்துவிட்டாள் ஜானகி. சகுந்தலையும் துஷ்யந்தனும், சாருதத்தனும் வசந்த சேனையும், ரோமியோவும் ஜூலியட்டுமாக, ரங்கநாதனையும் ஜானகியையும் எதிர்காலத்தில் அவன் எண்ணிப் பார்த்து மயங்கிவிட்டது அவளுடைய குற்றமில்லை; தன் குற்றம்தான் என்பதை ரங்கநாதன் புரிந்து கொண்டான். அதை அவனுக்குப் புரிய வைத்த நிகழ்ச்சி!...
3
கோடை விடுமுறை முடிவதற்கு இன்னும் பதினைந்துநாட்களே சரியாக இருந்தன. ‘குற்றாலத்தில் நல்ல ‘சீஸன்’ ஆரம்பமாகியிருக்கிறது’ என்று அன்றைய காலைப் பத்திரிகையில் தான் படித்ததைச் சாப்பிடும்போது ஜானகியிடம் ரங்கநாதன் மகிழ்ச்சியோடு கூறினான். ‘குற்றாலம்’ என்று கூறினவுடனே வழக்கமாக அவள் காட்டும் ஆவலுக்கு மாறாக அன்று அசுவாரஸ்யமான மெளனத்துடன் இருந்துவிட்டாள்.இரண்டோர் நாட்களாகவே ஜானகி தன்னோடு அதிகம் பேசாமல் இருப்பதையும், ஏதோ பறிகொடுக்கமுடியாத பறிகொடுக்கக் கூடாத ஒன்றைத் தான் பறிகொடுத்து விட்டதைப்போல அடிக்கடி ஏங்கிப் பெருமூச்சு விடுவதையும் அவன் கண்டிருந்தான். அவள் சாதாரணமாகத் தன் மனைவி என்ற அளவிற்கு மட்டும் ரங்கநாதன் அவளைக் குறைவான மதிப்பீடு செய்ததில்லை.“பி.ஏ.வரை படித்த பெண், தன் ஆருயிர்க் காதலி” - என்ற பெருமிதத்தை அவள் வரையில் அவன் கொண்டிருந்ததனால் “இரண்டோர் நாளாக அவள் இப்படி இருப்பதற்குக் காரணம் என்ன?” - என்று வெளிப்படையாக அவளை வாய்விட்டுக் கேட்க விரும்பவில்லை. குற்றாலத்திற்குப் புறப்படும் ஆவலைச் சொல்லியாவது அவளது இந்தப் புதிர் நிலையை விடுவிக்க முயன்றுவிடலாம் என்று அவன் முடிவு செய்திருந்ததும் ஏமாற்றத்தையே அளித்தது. அவள் அதே ஏக்கமும் மெளனமும் திகழவே இருந்தாள். ரங்கநாதன் திகைத்தான். ‘துயரம் படிந்துள்ள அவள் நிலையின் காரணம் என்ன சூட்சுமத்தை உண்டுபண்ணி விடமுடியும்?’ அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.“தனக்கு அன்புடையவர்களை நெஞ்சு கலங்கவைக்கும் சக்தி மெளனத்திற்கு எவ்வளவு துரம் இருக்கின்றது” என்று சிந்தித்து ஏதும் தெளிவாகாமல் மயங்கினான் ரங்கநாதன். சாப்பாடுமுடிந்ததும்,விடுமுறையானாலும் காலேஜ் வரை சென்று வரவேண்டிய காரியம் அன்று அவனுக்கு இருந்தது.டிரெஸ் செய்துகொண்டு காலேஜுக்குப் புறப்பட வாசற்படியில் காலை வைத்த ரங்கநாதன் எதிரே தபால்காரன் கவருடன் வருவதைக் கண்டு அப்படியே நின்றுகொண்டான்.ஜானகியின் பேருக்கு வந்திருந்த அந்தக் கவரை வாங்கி உறையைக் கவனித்தபோது அது அவனுடைய வியப்பை மேலும் வளரச் செய்தது. பெண்கள் கல்லூரி ஒன்றின் பிரின்ஸிபாலிடமிருந்து வந்திருந்தது அந்தத் கவர். அதை அங்கேயே உடைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அடக்க முடியாமல் எழுந்தும்கூடச் சட்டைப் பையிலே வைத்துக்கொண்டு காலேஜுக்குப் புறப்பட்டுவிட்டான் அவன்.
‘ஜானகியின் அந்த ஏக்கங் கலந்த மெளனப் புதிரை விடுவிக்கும் உண்மை ஏதாயினும் இந்தக் கவ்ரில் இருக்காதா?’ என்ற ஆவலோடு தான் ரங்கநாதன் அந்தக் கவரைக் கையோடுகொண்டுபோனான்.வேறு தவறான நோக்கம் எதுவும் அவனுக்குக் கிடையாது. பின்னால் அவள் அதையும் ஒரு குற்றச்சாட்டாக அவன் மேல் சாட்டியபோதுதானே அதை அவன் தெரிந்துகொள்ள முடிந்தது?
காலேஜுக்கு வந்த காரியம் பிரின்ஸ்பாலைச் சந்தித்த சற்று நேரத்திற்கெல்லாம் முடிந்துவிட்டது. வந்த காரியம் முடிந்ததும் அங்கேயே தனியாக ஓரிடத்தில் அமர்ந்து ஜானகிக்கு வந்திருந்த அந்தக் கவரை ரங்கநாதன் உடைத்தான். ஏதோ ஒரு பெரிய மறைந்த உண்மையைப் புரிய வைத்துக்கொள்ள முயலும் ஆராய்ச்சியாளனை ஒத்திருந்தது துடிதுடிக்கும் அவன் மனநிலை.
கவருக்குள் இருந்தது அவன் எதிர்பார்த்தபடியே, மிகவும் வியப்பிற்குரிய செய்திதான். அவன் கனவில்கூட எதிர்பார்த்திராதது அது! ‘அப்ளிகேஷன்’ கூட அவனைக் கேட்காமலே போட்டு விட்டாள். அவளுடைய அப்ளிகேஷனை ஏற்றுக் கொண்டு லெக்சரராக ஆர்டர் அனுப்பியிருந்தாள் பிரின்ஸிபால் அம்மாள். ஒரு வாரத்திற்கு முன் மாலையில் சாவகாசமாக அன்றைய ஹிந்து பத்திரிகையைப் புரட்டினபோது ‘எஜுகேஷனல் வாண்டட்’ காலத்தில் ஒரு சிறு பகுதி கத்திரிக்கப்பட்டிருந்ததன் காரணம் இப்போது ரங்கநாதனுக்கு நினைவு வந்தது.
‘எனக்குச் சிறிதும் அறிவியாமல் அவள் இவ்வளவு பெரிய காரியத்தை ரகஸ்யமாகச் செய்வானேன்? ஜானகி லெக்சரராகிச் சம்பாதிக்க வேண்டும் என்று என்ன குறை இப்போது நமக்கு வந்துவிட்டது? தனக்கு இப்படிப்பட்ட நோக்கம் இருக்கிறது என்பதனை இது நாள் வரை குறிப்பாகக் கூட அவள் என்னிடம் சொன்னதில்லையே? பி.ஏ. பட்டம் பெற்றபின் இரண்டரை வருடங்களாக இல்லாத ஆசை இப்போது திடுதிப்பென்று இவளுக்கு எப்படி வந்தது? அப்படித்தான் இவள் லெக்சரராகி எந்தப் பெரிய காரியத்தைச் சாதித்துவிடப் போகிறாளாம்? என்னிடம் கூட மறைக்கும் படியான உண்மைகள் இவள் உள்ளத்தில் நிறைந்திருக்கின்றனவே? வரட்டும். வீட்டிற்குப் போய்க் கேலி செய்யலாம்.’
வியப்போடு சிரித்துக்கொண்டே ஆர்டரைக் கவருக்குள் செருகிப் பையில் வைத்துக்கொண்டு எழுந்தான் ரங்கநாதன்.ஜானகியின் இந்த மெளன வேதனையோடு கூடிய துயர நாடகத்திற்கு இந்த ஆர்டர் ஒன்று மட்டும் முழுக் காரணமாக இருக்க முடியாது. அதன் காரணங்களில் வேண்டுமானால் முக்கியமான ஒன்றாக இதுவும் இருக்கலாம்.ஆனால், இதைத் தவிர வேறு சிலவும் உண்மைதான். இவ்வாறு எண்ணிக் கொண்டே பிரின்ஸிபாலிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான் ரங்கநாதன்.
4
ரங்கநாதன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது பகல் ஒரு மணி ஆகியிருந்தது. ஜானகி அவனுடைய அறையிலேயே நாற்காலியில் அமர்ந்து ஒரு புஸ்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். படிப்பில் மிகுதியான சுவாரஸ்யத்தோடு ஈடுபட்டிருந்த அவள் அவன் வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை. வேண்டுமென்றே கவனமின்றி இருக்கின்றாளோ என்று எண்ணினான்ரங்கநாதன்.அன்று வெள்ளிக்கிழமை. அவள் எண்ணெய் தேய்த்துக் குளித்திருந்ததனால் ஈரக் கூந்தல் மேகக் கூட்டம் போல நாற்காலியின் பின்புறம் அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. வைரத்தோடு, மூக்குத்திகளைக் கழற்றியிருந்தும் பெளர்ணமிச் சந்திரன்போல் விளங்கும் அவள் முகத்தில் அமைதி நிறைந்த ஒருவித அழகை ரங்கநாதன் கண்டான். புஸ்தகத்தையே இமையாமல் நோக்கிக் கொண்டிருக்கும் அந்த ஒரு ஜோடிமலர் விழிகள் கூட இன்று அவனுக்குப் பழைய காவியமொன்றின் புதிய பொருள் நயம் போலக் காட்சி அளித்தன.
கனைத்துக்கொண்டே புன்னகை தவழஅறைக்குள் நுழைந்தரங்கநாதனைத் தலை நிமிர்ந்து பார்க்காவிட்டாலும் ஜானகி பரபரப்போடு எதையோ மறைக்க முயலுபவளைப் போலப் புஸ்தகத்தை மூடினாள். அவள் மூடின வேகத்தில் புஸ்தகத்தில் இருந்து பறந்து வந்த அந்தத் துண்டுக் காகிதம் சொல்லிவைத்தாற்போல ரங்கநாதன் காலருகே வந்து விழுந்தது. அவன் குனிந்து எடுக்க யத்தனிப்பதற்குள் ஜானகி விருட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து அதைக் கையில் எடுத்துக் கொண்டாள். எடுத்ததை மீண்டும் புஸ்தகத்திற்குள்ளேயே வைத்துக் கொண்டு அவள் அறையிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டாள். காகிதத்தை எடுத்துப் பார்க்க முடியாவிட்டாலும், அது ‘அந்த ஹிந்துப் பத்திரிகை’ விளம்பரக் ‘கட்டிங்’ என்பதும் அதன் ஒரத்தில் தான் அப்ளிகேஷன் அனுப்பிய தேதியை ஜானகி குறித்திருந்ததையும் ரங்கநாதன் கண்டு கொண்டான்.
அறையை விட்டு வெளியே சென்ற ஜானகியைப் பின்பற்றி அவனும் சமையலறைக்குச் சென்றான்.பையிலிருந்து கவரை வெளியே எடுத்துக் கொண்டு, ஒரு விஷமச் சிரிப்புடனே, “ஏதேது! காலேஜ் ‘லெக்சரர்’ ஆவதற்கு ஏற்பாடுகள் எல்லாம் பிரமாதமாக நடக்கிறது போலிருக்கிறதே? ஆமாம். இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு அடியேனுக்கு உரிமை கிடையாதோ?” என்று கூறியவாறே கவரை அவளிடம் நீட்டினான். அவள், தனக்குத் தெரியாமல் வேலைக்கு மனுச் செய்தது, தன்னிடம் பாராமுகமாக நடந்து கொள்வது, இதையெல்லாம் எண்ணி வருந்துவது ஒரு புறம் இருந்தாலும், மகிழ்ச்சியுடனேயே அவன் அதை அவளிடம் கொடுத்தான். அவளுக்கு காலேஜ் ‘லெக்சரராவதில்’ ஆர்வம் இருக்கும் பட்சத்திலே அதைத் தடுக்க வேண்டும் என்று அவன் நினைத்தது கூட இல்லை.
ஆனால், கவரை வாங்கிக்கொள்ளும்போது எரித்துவிடுவதுபோல அவனை அவள் பார்த்த அந்தச் சினங்கவிந்த பார்வையும், “எம்.ஏ.படித்துக் காலேஜில் புரொபஸராக இருக்கும் ஒருவருக்கு மற்றவர் கடிதத்தை வாங்கிச் செல்லும் அளவிற்கு உரிமை இருக்கும்போது.இது இருக்கக்கூடாதா என்ன?“”” என்று மூன்றாம் மனிதரிடம் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவதுபோல வெடுக்கென்று அவள் பேசிய வார்த்தைகளும் அவன் ஆத்திரத்தைச் சட்டென்று தூண்டி விட்டன. ஆயினும் அவன் தன்னை அடக்கிகொண்டான்.
படித்த பெண்களைப் பற்றிய இரண்டு நிலையான உண்மைகளை ரங்கநாதன் நன்கு அறிந்திருந்தான், ‘அந்த உண்மையில் ஒன்று நிகழவேண்டிய சந்தர்ப்பம் அப்போது தன் வாழ்விலும் வந்து கொண்டிருக்கிறதோ?’ என்று எண்ணிப் பார்க்கும்போது அந்த எண்ணமே கசப்பு நிறைந்த உணர்வை அவனிடம் உண்டாக்கியது. “வாழ்க்கையில் ஈடுபட விரும்பாமல் படிப்பின் வழியிலே துடிதுடிப்போடு முன்னேறும் படித்த பெண் என்றாவது ஒரு நாள் திடீரென்று எதிர்பாராத் விதமாக வாழ்க்கையில் வந்து விழுந்துவிடுகிறாள். படிப்பில் தேர்ச்சி பெற்றும் வாழ்வில் ஈடுபட்ட படித்த பெண், என்றாவது அதிலிருந்து சலிப்புக் கொண்டு விலகி விடுகிறாள்.” - இந்தப் பயங்கர உண்மை ஜானகியின் விஷயத்தில் உண்மையாகவே முடியும் என அன்றைக்கு அவன் நம்பியிருக்கவில்லை. வெறுமனே சந்தேகித்தான் அவ்வளவுதான். ஆனால் இன்றோ?...
அன்று மாலை ஜானகிக்குத் தெரியாமல் அவள் கையிலிருந்து புஸ்தகத்தை எடுத்துப் புரட்டிய ரங்கநாதன் அவளுடைய மெளன ஏக்கத்திற்கும் அந்தப் பெருமூச்சிற்கும் மறைமுகமான இந்த முயற்சிகளுக்கும் என்ன காரணம் என்பதனைப் புரிந்துகொண்டான்."படித்த பெண்களும் சமூகமும்” என்ற பெயரையுடைய அந்தப் புஸ்தகத்தில் அவள் அடையாளம் செய்திருந்த பகுதிகள் அவளது அப்போதைய நெஞ்சத்தைத் திறந்து அவனுக்குத் தெளிவாகக் காட்டிவிட்டன.
"படித்த பெண்கள் இன்றைய சமூகத்தில், சாறு பிழிந்த கருப்பஞ் சக்கையைப் டோலப் பயன்பட்டுத் தங்கள் படிப்பை வீணாக்கி விடுகிறார்கள். காதல் என்பது எத்தனையோ படித்த பெண்களைக் கவர்ந்துவிடுகிறது. அது வெறும் கவர்ச்சி வலை என்பதை அறிந்துகொள்ள முடியாமல் அகப்பட்டுக்கொண்டு வாழ்வை வீணாக்கி விடுவது பல படித்த பெண்களுக்குப் பெரும்பாலும் ஒரு வழக்கமாகிவிட்டது.
“ஒவ்வொரு படித்த பெண்ணும் தன் போன்ற படித்த பெண்களின் சமூகத்தை வளர்க்கும் பணியில் தன்னைப் பங்கு கொள்ளச் செய்யவேண்டும். படித்த பெண் காட்டுப் பூவாக யாரும் காணாமல் நுகராமல் வாழ்விலோ, காதல் வலையிலோ சிக்கி அழிந்துவிடக்கூடாது. அவள் சமூகக் கோவிலின் கோபுர விளக்காகக் குன்றாத ஜோதியுடன் விளங்கவேண்டும்.”
இப்படி எத்தனையோ பகுதிகளை அடையாளமிட்டு வைத்திருந்தாள் ஜானகி. ரங்கநாதனே அந்த வாக்கியங்களைப் படிக்கும்போது அதுவிளைவிக்கும் உருக்கம் மிகுந்த உணர்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், ஒருபெண் அதுவும் படித்த அதே அனுபவத்திற்கு ஆளான பெண், அந்த உருக்கத்தில் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தோய்ந்து போயிப்பாள்? அவளை அந்த நிலையில் வைத்து ஆழமாகச் சிந்தித்து அவளுடைய மனம் செல்லும் வழியை ஓரளவு ஊகித்துக்கொள்ள ரங்கநாதனால் முடிந்தது. அவள் அவனிடமே விண்டு சொல்லியிருந்தால் உள்ளுர்ப் பெண்கள் காலேஜ் ஒன்றில் ஏற்பாடு செய்து மகிழ்வித்திருப்பான். அவளைப் பிரைவேட்டாக ‘எம்.ஏ’.க்குத் தயார் செய்ய வேண்டுமென்று வெகுநாளாக அவனுக்கே இருந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளத் தொடங்கியிருப்பான். அப்படியெல்லாம் சொல்லாமல் மறைமுகமாக அவள் செய்து வந்த இம்முயற்சிகளினால், ‘எதிர்பாராமல் அன்பு பொண்டு இணைந்ததைப் போலவே இன்றும் எதிர்பாராமலே அவள் தன்னிடமிருந்து அணுஅனுவாக விலகிக் கொண்டிருப்பது’ அவன் உணர்வில் மலர்ந்து தெரிந்தது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த அன்றிலிருந்து தகராறுகள் வாக்குவாதங்கள் அவர்களுக்குள் சர்வ சாதாரணமாயின. ரங்கநாதன் அவள் நன்மைக்காக என்று எண்ணிச் சொன்னவைகளை எல்லாம் சூழ்ச்சி என்று எண்ணிக்கொண்டாள் ஜானகி. ஜானகி தன்னை அளவுமீறி வெறுப்பது போன்ற ஒரு பொய்யுணர்வைத் தனக்குள் வளர்த்துத் தழும்பேறவிட்டுவிட்டரங்கநாதனும் சில சமயங்களில் பழைய அன்பையும் பொறுமையும் மீறி ஏதாவது ஆத்திரத்தோடுசொல்லிவிடுவது சகஜமாகிவிட்டது.ஒரு சாதாரணப் புத்தகத்திலுள்ள அச்செழுத்துக்களை நம்பி ஜானகி வழி விலகுவதை அவன் மறைமுகமாக எதிர்ப்பது அவனுடைய வார்த்தைகளாலேயே புலப்பட்டு விட்டது. அவன் தன்னை வேண்டுமென்றே அடக்கி ஒடுக்குவதாக எண்ணிக் கொண்ட அவள் தன் பிடிவாதத்தைப் பெருக்கிக் கொண்டே போனாள்.
இறுதியில் ஒரு நாள் அவன் எதிர்பார்த்த அதுவே நடந்துவிட்டது "என்னைக் கொஞ்ச நாள் என் போக்கில் விடுங்கள்! என்றைக்காவது நம்முடைய இரண்டு மனங்களும் பழையபடி ஒன்றுபட்டால் நாமும் ஒன்று படுவோம். அதுவரை நான் இந்தக் காலேஜ் வேலையை ஏற்றுக்கொண்டு சமூகப் பணி செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு அவள் அந்த லெக்சரர் வேலையை ஒப்புக்கொள்ளப் புறப்பட்டு விட்டாள். விளையாட்டுப் போல எல்லாம் கனவேகமாக நடந்துவிட்டது. அவளைத் தடுத்து நிறுத்தவோ, எதிர்த்து அடக்கவோ அப்போது ரங்கநாதனால் முடியவில்லை. அவளை அவள் சொன்ன மாதிரி விட்டுவிட்டான். உள்ளூரிலேயே தாய் தந்தையர் இருந்தும் ஜானகியைக் காதல் மணம் செய்துகொண்ட குற்றத்தால் வளர்ந்திருந்த பகை அவனுக்கும் அவர்களுக்கும் இடையே இருந்தது. ஏகாந்த வாழ்க்கை ரங்கநாதனுடைய தலையில் விழுந்தது. விரக்தியோடு அவன் அதை மேற்கொண்டான்.
"படித்த பெண்களின் முதற் காதல், மணமும் கவர்ச்சியும் வெள்ளை நிறமும் உடையதாகிய மல்லிகைப் பூப்போலச் சிறந்ததாக இருந்தாலும், அது ஒரு முறை மலர்ந்தால் அதன்பின் விரைவில் வாடி உதிர்ந்து போகக் கூடியதே. அதன் அழகு, மலர்ச்சி, மணம், வண்ணம் முதலிய யாவும் சாசுவதமானவைகள் அல்ல. குறுகியகால எல்லைக்குள் அழிந்து போகக்கூடியவை. ஆனால்,பெற்றோர்கள் கூட்டிவைத்த காதல் தம்பதிகளோ வாழ்க்கை முழுவதும்கூட ஒன்றுபட்டிருக்கிறார்கள். மருக்கொழுந்துச் செடியில் ஒரு கொழுந்தைக் கிள்ளி விட்டாலும் செடி முழுவதும் மணம் இருந்துகொண்டுதான் இருக்கிறது! மல்லிகையிலோ, அந்த மலரில் தோன்றிய எல்லாம், ஏன்? அந்த மலரே அதோடு அழிந்து போய்விடுகிறது. பெற்றோர் முன்பின் அறியாத ஆண் பெண் உள்ளங்களில் திருமணம் என்ற பெயரால் உண்டாக்கிவிடும் காதல், மருக்கொழுந்துச் செடியைப்போலவே சிதைவுகளுக்குப் பின்னும் நிலைத்த மணத்துடனே தழைத்து வளருகிறது. இளம் நெஞ்சங்கள் தாமாக அடையும் காதல் கவர்ச்சியுடனே விரைவாக வளர்வதுபோலவே விரைவாக அழிந்தும் போய்விடுகிறது. மல்லிகையைப் போலத் தோன்றிமறையும் காதலில் தொடக்க இன்பம் பெரிதாயினும் மருக்கொழுந்துபோல நிலைத்த மணம் இரண்டாவது வகைக் காதலில் மட்டும் தான் இருக்கிறது”.
இந்தப் பேருண்மையை அவள் பிரிவுக்குப்பின்னால்தான் புரொபஸர் ரங்கநாதன் உணர்ந்துகொள்ள முடிந்தது! தகப்பனார் என்ன நோக்கத்தோடு அன்று அவனுடைய காதல் மணத்தை எதிர்த்தாரோ அதை அவன் அறிய மாட்டான். ஆனால், அந்த எதிர்ப்பில் மேற்கண்டமல்லிகைக்கும் மருக்கொழுந்திற்கும் இடையே உள்ள தத்துவ உண்மையும் ஏதோ ஒரு கோடியில் கலந்திருக்க வேண்டும் என்று அவன் அறிந்துவிட்டான் இப்போது!
5
என்ன ஸார், மணி பத்தாயிற்று! இன்னும் நீங்கள் காலேஜுக்குப் புறப்படத் தயாராகவில்லையா?.... அடேடே இதென்ன? ஈர வேஷ்டியோடு நாற்காலியில் உட்கார்ந்து யோசனை? நன்றாயிருக்கிறது நீர் லெக்சருக்கு நோட்ஸ் எடுக்கிற லட்சணம்’ உள்ளே வந்து இப்படிக் கூறிக் கொண்டே, தன் எதிரே உடன் வேலை பார்க்கும் சமஸ்கிருத புரொபஸர் சாம்பசிவ சர்மா நிற்பதைக் கண்டதும், ரங்கநாதன் சிந்தனையை விட்டு மீண்டும் இந்த உலகிற்கு வந்து சேர்ந்தான்.
சமயலறையில் அடுப்பு இதற்குள் அணைந்துபோயிருந்தது. போகும்போது ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்வதைத் தவிர இன்றைக்கு வேறு வழியில்லை என்றெண்ணியவாறே விரைவாக டிரெஸ் செய்துகொண்டு சர்மாவுடன் புறப்பட்டான் ரங்கநாதன்.
ஜானகி அவனை விட்டு உதிர்ந்த மல்லிகைபோலப் பிரிந்து சென்றுவிட்டாலும் காலையில் கொள்ளிடக் கரையிலும், வேறு சில சமயங்களிலும் அவனை நினைவு வடிவாகப் பற்றிக் கொண்டு வருத்தி வருகிறாள்.
அவள் தன் லெக்சரர் வேலையில் கசப்பு ஏற்பட்டு அடுத்தபடியாகரங்கநாதனைத் தேடிவருகின்றபோதாவது, அவர்கள் வாழ்க்கை மருக்கொழுந்தாக இருக்கவேண்டும். மீண்டும் மலர்ந்து உதிர்ந்து வாடும் மல்லிகையாகுமானால் அவள் வரவை எதிர்பார்த்து ரங்கநாதன் இனிமேல் ஆசையுறவே மாட்டான்.