நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/வாத்தியங்களும் விரல்களும்
101. வாத்தியங்களும் விரல்களும்
“வெய்ட்டிங் ஃபார் ரிஸல்ட்” என்று அப்ளிகேஷன் போட்டதும், ரிஸ்ல்ட் வந்ததும் அவசர அவசரமாகப் பாஸாகி விட்டதைத் தெரிவித்ததும் எவ்வளவு வேகமாக நடந்தனவோ அவ்வளவு வேகமாக “ஆர்டர்” வந்ததும் ஆச்சரியமாகவே இருந்தது. டெம்பரரியாக ஒரு வருஷத்துக்குத்தான் ஆர்டர் போட்டிருந்தார்கள் என்றாலும், அதுவாவது கிடைத்ததென்பதே அவனைப் பொறுத்த வரை பெரிய விஷயம்தான். சமஸ்கிருதம் உள்ள பள்ளிகளே குறைவு. அதிலும் ஒரு முழு நேர ஆசிரியர் போடுகிற அளவு சமஸ்கிருத மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்கள் நாளுக்கு நாள் குறைந்து வந்தன. அதனால் நாற்பது மைல் தள்ளி உள்ள கிராமமென்பதை அவன் ஒரு குறைவாக எண்ணவே இல்லை. ஒப்புக் கொண்டு மறுதினத்தன்றே புறப்பட்டு மாலையில் போய்ச் சேர்ந்தான். -
மறுநாள் விடிந்ததும் அந்தக் கிராமத்தின் விடிகாலை நேர வனப்புகள் எல்லாமே அவன் மனத்தைக் கவர்ந்தன. ஸ்கூல் ப்ரேயர் நடந்து கொண்டிருந்தது. கைக்கெட்டுகிற தூரத்தில் வரிசை வரிசையாகப் பட்டுப் பூச்சிகள் போல அணி வகுத்து நின்று கொண்டிருந்த பெண்களின் கூந்தல் மல்லிகை கம்மென்று பாய்ந்து வந்து நாசியை நிறைத்தது. ப்ரேயர் பாடலின் தேன் நெகிழ்வது போன்ற குரலினிமை, புஷ்பங்களின் எல்லையற்ற வாசனை, காலை நேரத்தின் சுகம், வேப்ப மரங்களின் மெல்லிய இலையசைவு, தொலைவில் சாம்பல் பூத்த நிறத்தில் தெரியும் சில மலைகள் எல்லாம் சேர்ந்து சுந்தரராஜனின் மனத்தைக் கவ்வி எதையோ தூண்டின. முந்தாநாள் “அப்பா யிண்ட்மெண்ட் ஆர்டர்” கிடைத்து, நேற்று மாலையில் கலாசாலை மூடுவதற்கு முக்கால் மணி நேரம் இருக்கும் போது பஸ்ஸில் நாற்பது மைல் பிரயாணம் செய்து வந்து அவசர அவசரமாக ”ஜாயினிங்ரிப்போர்ட்” எழுதிக் கொடுத்து விட்டு ‘புது சான்ஸ்கிரிட் பண்டிட்’ என்ற பெயருடன் இன்று காலையில்தான் அந்தப் பள்ளிக் கூடத்தின் முதல் முழு நாளைச் சந்திப்பதற்கு உள்ளே வந்திருந்தான் சுந்தரராஜன்.
ஒரு பெரிய நகரத்தின் நாற்பதாவது மைலில் சுற்றிலும் பல மைனர் பஞ்சாயத்துக் கிராமங்களையும், மலையடிவாரத்துச் சிற்றூர்களையும் கொண்ட மேஜர் பஞ்சாயத்து ஊர் ஒன்றில் ஒரு பள்ளி ஆசிரியருக்குப் பிரமுகரின் அந்தஸ்து என்பது எட்ட முடியாத விஷயம் ஒன்றுமில்லை. ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைப்பதை விடக் குறைவான வாழ்க்கை வசதிகளையும், அதிகமான அல்லது அநாவசியமான அந்தஸ்தையும், வேண்டாமென்றாலும் கேட்காமல் ஓர் ஆசிரியனுக்குத் தந்து விடுவது கிராமங்களில் தவிர்க்க முடியாதது. ஒரியண்டல் காலேஜில் ஐந்து வருஷம் படித்து விட்டு ரிஸ்ல்ட் வந்தவுடன் கிடைத்த முதல் உத்தியோகமாகையினால் ஊரைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அதற்கு ஒப்புக் கொண்டான் அவன். ரா கிராஜுவேட்டாகக் கல்லூரியிலிருந்து வெளி வரும் ஒரு அன்-ட்ரெயின்ட் டீச்சருக்கு இந்த நாட்களில் வேலை கிடைப்பதிலுள்ள சிரமங்கள் எல்லாம் அவனுக்கும் தெரியும், இதையெல்லாம்விடப் பெரிய விஷயம், அரு ஒரு கோ - எஜுகேஷனல் ஸ்கூல். வயது முதிர்ந்த சமஸ்கிருதப் பண்டிதர் ஒருவரையே அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். கிடைக்காத காரணத்தால்தான் தன்னைப் போல் ஓர் இளைஞனை ‘அப்பாயின்ட்’ செய்ய சேர்ந்தது என்பதும் அவனுக்குத் தெரியும். வயது முதிர்ந்தவர் கிடைத்தால், தன்னைத் தூக்கி விடுவார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும்.
அந்த ஊர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த ஊரின் ஆற்றங்கரையும், மாந்தோப்பும், கால்களில் கொலுசு அணிவதை இன்னும் அநாகரிகமாகக் கருதாத பேதைமை நிறைந்த பெண்களும், அவர்களின் பேசுவது போன்ற பார்வையும், பார்ப்பது போன்ற புன்னகையும், புன்னகை போன்ற நோக்கும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.
அவனுடைய பொழுது போக்கு பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதுவது. அந்தக் காரியத்திற்கு இந்த ஊர் மிகவும் பொருத்தமாயிருக்கும் போலத் தோன்றியது. எந்த இடத்தில் பூக்களின் மணம் மனத்துக்குள்ளே மறைந்து கிடக்கும் வேறு பல்லாயிரம் மணங்களைக் கிளறச் செய்கிறதோ, எந்த இடத்தில் கேட்கும் இசை மனதிற்குள் கேளாமலிருக்கும் வேறு பல இசைகளைச் சுருதி கூட்டி மீட்டுகிறதோ, அந்த இடத்தில் பிறவாத கற்பனை வேறெந்த இடத்தில்தான் பிறக்கப் போகிறது?
ஃபோர்த் பாரம், பிஃப்த் பாரம், எஸ்.எஸ்.எல்.சி.ஆகிய மூன்று உயர் வகுப்புகளில் மொத்தம் பதினேழு பேர். மாணவர்களும், மாணவிகளுமாக சமஸ்கிருதம் எடுத்திருந்தார்கள். ஃபோர்த் பாரத்தில் மூன்று பேர், பிஃப்த் பாரத்தில் ஆறுபேர், எஸ்.எஸ்.எல்.சியில் எட்டுப் பேர். இவ்வளவுதான் அந்தப் பள்ளியில் சமஸ்கிருத மாணவிகளின் எண்ணிக்கை. அவன் வேலை மிக மிகக் குறைவுதான்.
நாலாவது பாரத்தில் இருவர் பையன்கள், ஒருத்தி பெண். ஐந்தாவது பாரத்தில் நாலு பையன்கள், இரண்டு பெண்கள். எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் சமஸ்கிருதம் எடுத்திருந்த எட்டுப் பேருமே பெண்கள்.
நாலாவது பாரம் அவனுக்கு ருசிக்கவில்லை. மொத்தம் மூன்று பேர். அதில் இரண்டு பையன்களும் நோட்ஸ், நோட்ஸ் என்று பரீட்சைக்கு நோட்ஸ் கேட்பதிலேயே கண்ணாயிருப்பவர்கள்.ஒருத்திபெண். அவளும் ஊமைக் கோட்டான். பேசவே மாட்டாள். ஐந்தாவது பாரத்தில் பையன்கள் நாலு பேரும் சுமார். பெண்கள் இருவரும் படு அரட்டைகள். விஷயங்களின் நயங்களை ரசித்து ஆசிரியருக்குச் சொல்லித் தருவதில் ஊக்கம் தருவதற்கோ, ஹாஸ்யத்தில் ஈடுபட்டுச் சிரிப்பதற்கோ கூடப் பயப்படும் வயது அவர்களுக்கு. ஆகவே அந்த வகுப்பிலும் சுந்தரராஜன் என்ற வாலிப வயது ஆசிரியனுக்கு உற்சாகமில்லை.
அவனுடைய உற்சாகமெல்லாம் எஸ்.எஸ்.எல்.ஸி. வகுப்பில்தான். அந்த வகுப்பில் எல்லோருமே நினைவறிந்த “பெரிய” பெண்கள். அவர்களின் விழிப் பார்வை, புன்னகை, கலீர் கலீர் என்று ஹாஸ்யத்துக்குச் சங்கீதமாய் நகைக்கும் ரசிகத் தன்மை. எல்லாமே அந்த வகுப்புக்கு எப்போது போவோம், எப்போது போவோம் என்று அவனையே, எண்ணி ஏங்கச் செய்தன.
எஸ்.எஸ்.எல். ஸி. வகுப்பிலிருந்த எட்டுப் பெண்களில் இருவர் மிகவும் சிறியவர்கள். பாவாடை, சட்டை தாண்டாத வயது. நாலு பேர் தாவணி போடுகிற பருவத்தினர். இருவர் ஆறு கெஜம் புடவை, ஜாக்கெட் அணிகிற அளவு செழிப்பான இளமையின் எல்லையில் வந்து நிற்கிறவர்கள். அவர்களில் ஒருத்தி புவனேஸ்வரி.ஒவ்வொரு நாளும் ஒரு தடவையாவது அவளைப் பார்த்து விட வேண்டும் என்று அவனை அந்தரங்கமாகத் தவிக்கச் செய்தவள் அவள். இவ்வளவு அழகான பெண்ணை இது வரை வாழ்க்கையில் அவன் பார்த்ததில்லை. அவனுக்குக் கற்பிக்கப்பட்ட காவியங்களில் மட்டுமே பார்த்திருந்தான். இப்போதுதான் முதன் முதலாக வாழ்வில் பார்த்தான்.
அவன் அந்தப் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதமாகியும், புது வாத்தியார்’ப் பட்டம் மட்டும் அப்படியே இருந்தது.
நாலாவது மாதம் ‘குவார்டர்லீ’ பரீட்சை முடிந்து மறுபடி பள்ளிக்கூடம் திறக்க முதல் தினத்தன்று ஐந்தாவது பீரியடு சமஸ்கிருத வகுப்பில் எஸ்.எஸ்.எல்.ஸியைச் சேர்ந்த பெண் ஒருத்தி முற்றிலும் எதிர்பாராத ஒரு கேள்வியை அவனிடம் கேட்டு அவனையும், வகுப்பையும் ஒரே வேளையில் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தாள்:
“சண்பகம் என்ற இலக்கியப் பத்திரிகையில் எஸ்.ராஜன் என்கிற பெயரில் கதைகள் எழுதுவது நீங்கள்தானா சார்?” .
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுமுன் புவனேஸ்வரியின் அழகிய முகத்தையும், கவர்ச்சி நிறைந்த கண்களையும் பார்த்தான் அவன். அந்தக் கண்களில் ஆவல் ததும்பி நின்றது.
அவன் சிரித்துக் கொண்டே பதில் கூறினான் :
“ஆமாம்! நான்தான்.”
உடனே வகுப்பு முழுவதும் ஒருவருக்கொருவர் வியந்து பேசும் மெல்லிய குரல்கள் பூத்து நிறைந்தன. ஒரு பேருண்மையைக் கண்டு பிடித்தது போன்ற மலர்ச்சி அங்கே பிறந்தது. அபூர்வமான மனிதர் ஒருவரைத் தங்களிடையே திடீரெனக் கண்ட ஒரு கூட்டத்தின் வியப்பும், பரபரப்பும் அந்த எட்டுப் பேரடங்கிய சிறிய வகுப்பறையில் உண்டாயிற்று. அந்தப் பரபரப்பு அவனது எழுத்தாள மனத்துக்குப் பிடித்தாலும், வாத்தியார் மனத்துக்குப் பிடிக்கவில்லை. -
“ஸைலன்ஸ்” என்று குரல் கொடுத்தான் சுந்தரராஜன். வகுப்பில் அமைதி நிலவியது. உடனே ரகு வமிசம் - இந்துமதியின் சுயம்வரம் பாடம் விளக்கப்பட்டது. மாணவிகளிடையே மறுபடி அமைதி பிறந்தது.
“இந்துமதி ஒவ்வோர் அரசனையும் கடந்த போது இருண்ட வீதி ஒன்றில் கொண்டு போகப்படும் தீபமானது, பின்னால் இருளைப் பரவ விட்டு அடுத்து எதிர் வரும் பகுதிகளில் எல்லாம் ஒளியைப் பரப்புவது போல, அவள் மாலையிடாமல் பின்னடைய விட்ட அரசர்கள் முகத்தில் இருளையும், நமக்கு அணிவிப்பாள் என்ற மகிழ்ச்சியில் மீதமிருந்த எதிர் வரும் அரசர் முகங்களில் ஒளியையும் தோற்றுவித்தாள்” என்று கூறியபடியே புவனேசுவரியின் முகத்தைப் பார்த்தான் சுந்தரராஜன். அவளை நேராகவோ, திருட்டுத்தனமாகவோ பார்த்தால் கூட உடனே அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
அவன் காவியத்தில் படித்த இந்துமதி அங்கே புவனேஸ்வரியாக அமர்ந்திருந்தாள். அவள் கவனித்துக் கேட்கிறாள் என்பதற்காகவே அப்பகுதியைப் பிரமாதமாக வருணித்தான் அவன். அப்போது அவள் அவனது தூண்டுதலாயிருந்தாள்.
அவளுடைய குரலை அன்றும் ஒருமுறை கேட்கும் ஆசையோடு அவளையே ஒரு கேள்வியும் கேட்டான் அவன்.
புவனேஸ்வரி எழுந்து பதில் கூறினாள். அவளுடைய சங்கீதக் குரல் அவனுள் உறைந்திருந்த சங்கீதங்களை மீட்டியது. “போங்க சார்! நீங்க எப்பக் கேள்வி கேட்டாலும் புவனாவை மட்டுமே கேட்கிறீங்களே?” என்று மற்றொரு மாணவியிடமிருந்து பொறாமை வெடித்தது.
அவளையும் ஒரு கேள்வி கேட்டுச் சமாதானப்படுத்தினான் சுந்தரராஜன். வகுப்பு முடியப் பத்து நிமிஷங்கள் மீதமிருந்தன. தன்னுடைய கதைகளில் எதையாவது ‘சண்பகத்’தில் புவனேஸ்வரி படித்திருக்கிறாளா என்று தெரிந்து கொள்ள அவனுக்கு ஆசையாயிருந்தது. ஆனால் அதை நேருக்கு நேர் அவளிடம் மட்டுமே கேட்க அவனுக்கு வகுப்பில் தயக்கமாயிருந்தது. துணிந்து முதலில் கேள்வி கேட்ட பெண்ணிடமே, அந்த வினாவைத் தொடங்கினான் அவன். அவள் பதில் கூறினாள்:
“எனக்குத் தெரியாது சார்! கதை எழுதறது. நீங்க தானான்னு உங்களைப் புவனாதான் கேட்கச் சொன்னா சார்” என்று பதில் சொன்னாள் அந்தப் பெண்.
“அவளே கேட்டால் என்ன? அவளுக்காக நீ கேட்டது ஏன்?”
“அவ உங்க கிட்டக் கேட்கப் பயப்பட்டா சார்!”
சுந்தரராஜன் புவனேஸ்வரியைப் பார்த்தான். நாணமும், நகையும் குழம்பி அவள் முகம் சிவந்தது. அவள் அவனை நேரே பார்க்கத் தயங்கி இருந்தாள்.அவ்வளவில் மணி அடித்தது. சம்ஸ்கிருத வகுப்பும் கலைந்தது. சுந்தர ராஜனின் மனத்தில் பூக்கள் மணத்தன. இசைகள் சுருதி கூட்டி ஒலித்தன. அன்று மாலை ஸ்கூல் விட்டதும் அறைக்குப் போய் அவன் ஒரு கதை எழுதினான். துணிந்து அந்தக் கதையில் வரும் பெண்ணுக்குப் புவனேஸ்வரி என்றே பெயர் வைத்தான் - எங்கோ இருக்கும் வாத்தியத்தை அவன் மனம் பாவனைகளில் மிருதுவாக மீட்டியது. அது மிகவும் சுகமாக இருந்தது. கதையைத் தபாலில் சேர்ப்பித்த பின் பெயர் விஷயம் அவனுக்கு மறந்து விட்டது. மேலும் இரண்டு மூன்று வாரத்தில் அந்தக் கதை எப்போது வெளிவரும் என்பதைக் கூட அவன் ஞாபகம் வைத்துக் கொள்ளவில்லை. மெல்ல மெல்ல அதை மறந்துவிட்டான்.
★★★
அரைப் பரீட்சைக்கு முன்பு ஒரு வாரம் இருக்கும் போது திடீரென்று சம்ஸ்கிருத வகுப்பில் முன்பு கேள்வி கேட்ட அதே பெண் எழுந்திருந்து அவனை ஒரு கேள்வி கேட்டாள்:
“இந்த மாத 'சண்பகம்’ பத்திரிக்கையிலே உங்க கதை ரொம்ப நல்லாயிருக்கு சார்! கதையிலே வர்ர பெண்ணுக்குக் கூடப் புவனேஸ்வரின்னு பேர் வைச்சிருக்கீங்களே...?”
“சண்பகம், எப்போது வந்தது? எனக்கு இன்னும் கிடைக்கலியே? தபாலில் தவறி விட்டதா?” என்று பேச்சை மாற்ற முயன்றான் சுந்தரராஜன். உண்மையிலேயே அவனுக்கு அந்த மாதச் 'சண்பகம் தபாலில் கிடைக்கவில்லை. எனவே கதை வந்திருந்ததும் அவனுக்குத் தெரியாது. அந்தப் பெண் ஸ்கூல் லைப்ரரியில் அதைப் படித்திருக்கிறாள். அந்தக் கதை வெளி வந்ததை அறிந்து அவனுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.
“நீ அதுக்குள்ளே படிச்சாச்சா?” - என்று அந்தப் பெண்ணையே மேலும் கேள்வி கேட்டு, வாயைக் கிளறினான் அவன்.
“நிஜமாச் சொல்றதா இருந்தா, நான் அதை முதல்லே படிக்கலே சார்! முதல்லே படிச்சது புவனாதான். ஆனா...”
“ஆனா. என்ன…? சும்மாச் சொல்லேன்.”
“முதல்லே தான் படிச்சதாக உங்ககிட்டச் சொல்லப்பிடாதுன்னு அவதான் என்னைப் பயமுறுத்தினாள்.”
“இதிலே பயம் என்ன?”
“அவளுக்குப் பயம்தான்.”
அவன் புவனாவைப் பார்த்தான். மேகத்தில் மறையும் சந்திரனைப் போல் அவள் முகம் கருங்கூந்தலோடு மெல்லக் கீழே குனிந்தது. இதழ்களில் நாணம் மூடி மறைக்க முயன்றும், மலர்வது தவிராத நகை இழையோடிக் கொண்டிருந்தது. முதலில் கேள்வி கேட்ட பெண் படு வம்புக்காரியாக இருந்தாள். மீண்டும் அவளுடைய கேள்வியே தொடர்ந்தது.
“புவனா மேலே எப்பவுமே உங்களுக்குக் கொள்ளைப் பிரியம் சார்! இல்லையா?”
“கதையிலே பேர் வச்சால் பிரியம்னு ஆயிடுமா? உலகத்திலே இவ ஒருத்திதான் புவனாவா? எத்தனையோ பேருக்குப் புவனேஸ்வரின்னு பேர் இருக்கே? அந்தப் பேரு இவளுக்கு மட்டுமே சொந்தமா, என்ன?”
“ஐயையோ! அப்பிடீன்னா நீங்க நம்ம புவனேஸ்வரி பேரை எழுதலியா சார்?”
“இல்லை! இல்லை கற்பனைக்கும் நிஜத்துக்கும் சம்பந்தமே படுத்தக் கூடாது.”வகுப்பினரிடமிருந்து தன் ஆசிரியத் தன்மையின் கெளரவத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகக் கண்டிப்பான குரலில் இப்படிப் பதில் கூறினான் அவன். வகுப்புத் தொடர்ந்தது.
ஐந்து நிமிடத்திற்குள் வகுப்பில் திடீரென்று யாரோ விசும்பி அழும் மெல்லிய ஒலி கேட்டது.
“சார்! புவனா அழறா சார்!”
“ஏன்? அவளுக்கு என்னவாம்?”
“தெரியலே சார்!”
“எதுக்காக அழறே? கிளாஸ்லே அழுதா எப்பிடிப் பாடம் நடத்தறது…?”
பதில் பேசாமல் எழுந்து தலைகுனிந்து நின்றாள் புவனேஸ்வரி.
“ஏன் அழுதாய்?”
“----“
“பதில் சொல்லித் தொலையேன்?”
“----“
“பதில் சொல்லாட்டா இப்படியே நிற்கவேண்டியதுதான்.” அவள் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டே இருந்தாள். பரிதாபமாகவும் இருந்தது. அவளை நிற்க வைத்து விட்டு வகுப்பைத் தொடரவும் அவனுக்கு மனமில்லை. வயது வந்த பெண் வகுப்பில் கண்ணீர் விட்டு அழுவதையும் பொறுக்க முடியவில்லை. ஹெட்மாஸ்டர் வேறு திடீரென்று ‘ஸுபர்விஷனுக்’கு வந்தால் பெரிய வம்பாகி விடும். நிறுத்தி வைத்திருந்தாலும், வயது வந்த பெண்ணை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று அவர் சுந்தரராஜனைக் கூப்பிட்டுக் கேட்கலாம். அழுதுகொண்டே இருந்தாளானால் ‘ஏன் அழுகிறாள்’ என்று ஹெட்மாஸ்டர் கேட்கக் கூடும்.
“நீ கிளாஸில் இருக்க வேண்டியதில்லை. அழுவதானால், வீட்டில் போய் அழலாம்.” . -
அவள் தயங்கித் தயங்கிப் புத்தகக் கட்டை மார்பில் அணைத்தவாறே வகுப்பை விட்டு வெளியேறினாள். வகுப்புத் தொடர்ந்தது. பாடம் நடத்துவதில் அவனுக்கு மனம் செல்லவில்லை. பாடத்தில் ஒரிடத்திலே “சீதையும், ராமனும் கோதாவரி நதிக்கரையில் இருந்த போது” என்று சொல்வதற்கு பதில் “புவனேஸ்வரியும், ராமனும் கோதாவரி நதிக் கரையில் இருந்த போது” என்று வாய் தவறி உளறி விட்டான். வகுப்பில் எல்லாப் பெண்களும் உடனே சிரித்து விட்டார்கள்.
அன்று முழுவதுமே அவனுக்கு வேதனையாயிருந்தது. ஏதோ விளையாட்டாக ஆரம்பித்து அநாவசியமாக ஒரு பேதை மனத்தைப் புண்படுத்த நேர்ந்து விட்டதே என்று அவன் மனம் வருந்தியது.
மறு நாள் காலையிலும் அவள் வகுப்பிற்கு வரவில்லை. இடைவேளையின் போது அவளுடைய தோழி ஒரு கடிதத்தை அவனிடம் அக்கம்பக்கம் பார்த்துக் கவனமாகத் தனியே இருக்கும் போது கொண்டு வந்து கொடுத்தாள். சுந்தர ராஜன் முதலில் அதை வாங்கத் தயங்கினான்.
“புவனா கொடுத்தா சார்!” என்றபடி அவன் முன்னே மேஜையில் வைத்து விட்டு ஓடி விட்டாள் அந்தப் பெண்.
அதை எடுத்துப் பிரித்தான் சுந்தரராஜன்.
“மதிப்பிற்குரிய சம்ஸ்கிருத வாத்தியாருடைய பாதார விந்தங்களுக்கு அடியாள் புவனேஸ்வரி கோடி நமஸ்காரம். வகுப்பில் “ஏன் அழுதாய்” என்று நேற்றுக் கேட்டீர்கள். உங்கள் கதையில் என் பெயர் வந்தது பற்றி நான் என் தோழிகளிடம் எல்லாம் சொல்லிப் படித்துக் காட்டிப் பெருமையடித்துக் கொண்டிருந்தேன். நீங்களோ திடீரென்று, “கதையில் பேர் வச்சாப் பிரியம்னு ஆயிடுமா? உலகத்திலே இவ ஒருத்திதான் புவனாவா? எத்தனையோ பேருக்குப் புவனேஸ்வரின்னு பேர் இருக்கே, அந்தப் பேரு இவளுக்கு மட்டுமே சொந்தமா என்ன?”ன்னு கோபமாகக் கேட்டீங்க. எனக்குத் தெரிஞ்சு நம்ம ஸ்கூல்லே புவனேஸ்வரீங்கற பேரு எனக்கு மட்டும்தான் இருக்கு. என் தோழிகளிடம் நான் கதையைப் படித்துக் காட்டிப் பெருமையடித்துக் கொண்டதை எல்லாம் ஒரு நிமிஷத்தில் கேலிக் கூத்தாக்கி, என்னைத் தலை குனிய வச்சாச்சு. இனிமே உங்களைப் பார்க்கவே எனக்குப் பயமாயிருக்கு. நீங்க ரொம்பக் கோபக்கார சார் மாதிரி ஆயாச்சு. நான் கிளாஸுக்கு வரவா, வேண்டாமா? தயவுசெய்து (இக்கடிதம் கொண்டு வரும்) வத்ஸலாவிடம் சொல்லி அனுப்பவும்.
உங்கள்,
சா. புவனேஸ்வரி
ஆறாம் படிவம் ஏ-பிரிவு
ஆர்.பி. போர்டு உயர்பள்ளி
கடிதத்தைப் படித்ததும், சுந்தரராஜனின் மனத்தில் தென்றல் வீசியது. பதினைந்து நிமிஷத்திற்குப் பின், அந்தப் பெண் வத்ஸலா-அவள்தான் புவனாவின் தோழி-மெல்லத் தலையை நீட்டினாள். அவன் முகம் கடுமையாயிருக்க முயன்றது.
“இந்தா! மத்தியான மணி அடிக்க இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. உன் சிநேகிதியை நான் கூப்பிட்டேன்னு கூட்டிக் கொண்டு வா! பரீட்சைக்கு நாள் குறைவாயிருக்கு. ஸெலபஸ் கவராகணும்” என்று அதிகாரத் தோரணையோடு இரைந்து கூறி விட்டு அப்படிக் கூறிய சுவட்டோடேயே புன்னகையுடன், “வத்ஸலா? அவ கிட்டச் சொல்லு; நீ வராட்டா அவருக்குக் கிளாஸ் நடத்தவே பிடிக்கலியாம்னு சொல்லு” - என்று குரலைத் தணித்து விரல்களை அழுத்தாமல் சலனத்திலேயே இசைக்கும் ஒரு நுண்ணிய வாத்தியத்தை மீட்டுவது போல் மிருதுவாகச் சொல்லியனுப்பினான் சுந்தரராஜன்.
வத்ஸலா ஓடினாள்.
புஷ்பங்கள் எல்லையற்று மணந்தன. வேப்பமரங்களில் மெல்லிய இலையசைவில் காற்றுச் சலசலத்தது. தொலைவில் சாம்பல் பூத்த நீல நிறத்தில் மலைகள் தெரிந்தன. பள்ளியில் மத்தியான வகுப்புக்களுக்கு ஆரம்ப மணி அடித்தது.
(தாமரை, ஜூலை, 1967)