நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/1. களப்பிரர் சூழ்ச்சிக் கூடம்
மதுரை மாநகரக் கோட்டைக்குள் அரண்மனையைச் சுற்றி இயல்பை மீறிய பரபரப்பும், பாதுகாப்பும் தென்பட்டன. அரண்மனையில் உட்கோட்டையைச் சுற்றியிருந்த இரண்டாவது சுற்று அகழியைச் சூழப் பூதபயங்கரப் படை வீரர்கள் உருவிய வாளுடன் காவலாக நின்று கொண்டிருந்தனர். முதற்கோட்டை வாயிலுக்கும் இரண்டாம் கோட்டை வாயிலுக்கும் நடுவே உள்ள பகுதியில் இருந்த சிறைக் கோட்டத்தின் வாயிலில் யவனக் காவல் வீரர்கள் செதுக்கி மெருகிட்ட செப்புச் சிலைகள் போல் வேல்களோடு காவலாக நின்றிருந்தனர். பாண்டியர்களின் பரம்பரைக் கோட்டைக் காவலர்களாக இருந்த சில யவனர்களும் கூடக் களப்பிரர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் அவர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தனர்.
அன்று கோட்டையிலும், கோட்டையைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் இயல்பை மீறிய பரபரப்பு இருந்ததற்குக் காரணம் களப்பிர மன்னனான கலியன் ஓர் அந்தரங்கமான மந்திராலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்ததுதான். அவிட்ட நாள் விழாவன்று பிடிபட்ட ஒற்றர்களைப் பற்றியும், ஆட்சியைச் சூழ்ந்திருக்கும் பிற அபாயங்களைப் பற்றியும் அந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் பேசுவதற்கு இருந்தார்கள். அங்கு பேசப்படுகிற எதுவும் வெளியேறிப் பரவி விடக் கூடாது என்பதற்காக, மந்திராலோசனை மண்டபத்திலும், அதனைச் சார்ந்துள்ள இடங்களிலும் ஏவலாளர், காவல் இளைஞர், ஓவியச் சுற்றம், உட்படு கருமத்தார் ஆகியோரில் தமிழர் யாரும் இருந்து விடாதபடி தவிர்த்திருந்தனர் களப்பிரர். உட்படு கருமத்தார் தெரிந்து கூறிய செய்திகளிலிருந்து மன்னனும், அமைச்சரும் பதறிக் கலங்கிப் போயிருந்தனர். பல்லாண்டுகளாக அடிமைப்படுத்தி ஆண்டு வரும் பாண்டிய நாடு தங்களிடமிருந்து கை நழுவிப் போய் விடுமோ என்ற பயமும், தாங்கள் துரத்தப்பட்டு விடுவோமே என்ற பயமும் என்றும் இல்லாதபடி இன்று அவர்களுக்கு வந்திருந்தன.
இழந்ததை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பவன் வீரன். பெற்றதை மீண்டும் இழந்து விடுவோமோ என்று பயந்துகொண்டே இருப்பவன் கோழை. அவன் பெற்றதையும் இழப்பான்; வீரத்தையும் இழப்பான். பயம் அதிகமாக, அதிகமாகக் களப்பிரர்களிடம் வீரம் குன்றி முரட்டுத்தனமும், பாண்டியர்களுக்கு ஆதரவான குடிமக்களை அழித்து விட வேண்டும் என்ற வெறியுமே மிகுந்தன.
அன்று நடைபெற்ற மந்திராலோசனைக் கூட்டத்துக்கு வரும் போது, கலிய மன்னனின் முகம் இருண்டிருந்தது. கண்களில் ஒளி இல்லை. உயரமும், பருமனும் உருவத்தை எடுத்துக் காட்டும் வளங்கெழு மீசையும், வசீகரமான மணிமுடியும் அவனது ஒளியிழந்த முகத்தோடு ஒட்டாதவை போலத் தோன்றின. மந்திராலோசனைக் கூட்டம் பாலிமொழியில் நடைபெற்றது. அமைச்சர்களும், உட்படு கருமத் தலைவர்களும், யானைப் படை, தேர்ப் படை, காலாட் படைத் தலைவர்களும், பூத பயங்கரப் படையின் தலைவனும், கலிய மன்னனின் அரச குருவும், ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
கலிய மன்னன் பொறுமையிழந்து போயிருந்தான். நிதானம் அறவே பறி போயிருந்தது. அவன் குரல் குரூரமாக ஒலிக்கத் தொடங்கியது. “இவ்வளவு காலத்துக்குப் பின் இந்நாட்டு அடிமைகளின் கூட்டத்திலிருந்து வீரர்கள் தோன்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறீர்கள். பல காத தூரம் கடந்து வந்து கைப்பற்றிய பேரரசை யாரும் அசைக்க முடியாதபடி பிடித்து விட்டதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அசைத்துக் கொண்டிருப்பவர்களில் நால்வரையோ, ஐவரையோ சிறைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டோம் என்கிறீர்கள்! எதிரிகளை உயிரோடு பார்ப்பது எனக்குப் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியும். எனக்குப் பிணங்களாகக் காட்ட வேண்டியவர்களை நீங்கள் இன்னும் உயிருள்ளவர்களாகச் சிறை வைத்திருக்கிறீர்கள்! இல்லையா?” என்று கூறிக் கொண்டே தன் வலது கையை மடக்கி, இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்தினான் கலியன்.
அப்போது பூத பயங்கரப் படையின் தலைவன் எழுந்து மறுமொழி கூறலானான்:-
“வேந்தே! உயிர் அவர்கள் உடலிலிருந்து போய் விட்டால், சித்திரவதையை அவர்கள் உணரவும், அனுபவிக்கவும் முடியாமல் போய்விடும். சித்திரவதைகளை உணரவும், அனுபவிக்கவும் வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களைப் பிணங்களாக்கி விடாமல் இன்னும் நடைப் பிணங்களாகவே வைத்திருக்கிறோம்.”
“உன் வீரப் பிரதாபங்களால் நீ அவர்களை நடைப் பிணங்களாக வைத்திருப்பது பற்றித் தெரிவதை விட அவர்களிடமிருந்து நீ அறிந்த வேறு செய்திகள் என்ன என்ன என்பதைக் கூறினால் நன்றாயிருக்கும்!” என்று குறுக்கிட்டார் அது வரை அமைதியாக இருந்த அரச குரு.
“பொறுத்தருள வேண்டும் அரச குருவே! அவர்களிடமிருந்து எதையும் அறிய முடியவில்லை. சித்திரவதை செய்தும் பயன் இல்லை! அவர்களின் மன உறுதி வியக்கத் தக்கதாக இருக்கிறது.” “எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனில்லை! பாண்டியர்களைக் கலகத்துக்குத் தூண்டும் மூல சக்திகள் எங்கு இருக்கின்றன என்று கண்டு பிடித்து அழிக்க வேண்டும். அதைச் செய்யாத வரை நம்முடைய பூத பயங்கரப் படையின் திறமையை நான் போற்ற முடியாது” என்றான் கலிய மன்னன். இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அரசனின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிப்பதையும் கண்கள் இரண்டும் நெருப்புக் கோளங்களாகக் கனல்வதையும் கண்டு பூத பயங்கரப் படைத் தலைவனின் முகம் இருண்டது. குறை முழுமையும் தங்களைச் சேர்ந்தது என அரசன் ஒரேயடியாகத் தங்கள் மேல் குற்றம் சுமத்தியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆயினும், அரசனுடைய கோபத்துக்கு அஞ்சி அவன் அந்தக் குற்றத்தை ஏற்றுக் கொள்வது போல் வாளாவிருந்தான்.
அப்போது அந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் கலிய மன்னனின் இருக்கைக்கு இரு புறமும், பணிப் பெண்கள் இருவர் வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர். அவர்கள் தமிழ்ப் பெண்கள் என்பதைக் கண்டு கொண்ட அரசனின் சினம் திடீரென்று அவர்கள் மேல் திரும்பியது. கலிய மன்னனின் ஆத்திரத்தைக் கண்டு வெருண்டோடினர் அந்தப் பெண்கள். மீண்டும் பூத பயங்கரப் படையினரின் தலைவன் பக்கமாகத் திரும்பி இரைந்தான் அரசன்;
"இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் களப்பிரர் அல்லாதார் யாரும் இருக்கலாகாது என்று முன்னெச்சரிக்கையாக உனக்குக் கட்டளை இட்டிருந்தும், நீ தவறு செய்திருக்கிறாய்! நாம் பாலியிலேயேதான் உரையாடுகிறோம் என்று நீ சமாதானம் சொல்ல முடியாது. கோநகரிலும், அரண்மனையிலும் உள்ள பெரும்பாலான தமிழர்கள் நன்றாகப் பாலி மொழியைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.”
“தெரியும். ஆனால் இந்தப் பெண்கள் இருவரும் அரண்மனை அந்தப்புரத்து உரிமை மகளிர். இவர்கள் அரண்மனையிலிருந்து எங்கும் வெளியேற முடியாது. யாரையும் சந்திக்கவும் முடியாது.”
“நீ அப்படி நினைக்கிறாய்! நான் அப்படி நினைக்கவில்லை. பல செய்திகள் வெளியேறுகின்றன இல்லையா? அவிட்ட நாள் விழாவன்று யாத்திரீகர்கள் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான கலகக்காரர்கள் அகநகருக்குள் வந்திருக்க முடியாது அல்லவா?”
இவ்வாறு பேசிய மன்னனை எதிர்த்து மறுமொழி கூறும் துணிவு பூத பயங்கரப் படைத் தலைவனுக்கு இல்லை. அவன் பயந்து அடங்கி விட்டான். அந்தக் குழுவில் ஏனைய படைப் பிரிவுகளின் தலைவர்களும் பூத பயங்கரப் படையின் தலைவனுக்குப் பரிந்து கொண்டு வரவில்லை. எல்லாருமே அரசன் என்ன சொல்கிறான் என்பதையே பயபக்தியோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். உட்படுகருமத் தலைவர்களோ, அமைச்சர் பிரதானிகளோ கூட அதிகம் பேசவில்லை. அவர்களுடைய பேச்சு அதிகம் மதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். யாருடைய குரலாவது அரசனுடைய குரலை விட மேலெழுந்து வலிமையாக ஒலிக்க முடியுமென்றால், அது அங்கே அரசனுக்கு மிக அருகே அமர்ந்திருக்கும் அரச குருமாவலி முத்தரையருடையதாகத் தான் இருக்கும் என்பதை அவர்கள் அனைவருமே நன்கு உணர்ந்திருந்தனர். யார் எதைக் கூறினாலும், கலியரசன் இறுதியாக மாவலி முத்தரையர் சொல்படிதான் கேட்பான் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் மற்றவர்கள் நடுவே மாவலி முத்தரையருக்குக் ‘கலிய மன்னனின் சகுனி’ என்பது போல் ஒரு சிறப்புப் பெயரும் இரகசியமாக வழங்கி வந்தது. கலிய மன்னனின் சகுனியாகிய மாவலி முத்தரையர் அந்தச் சூழ்ச்சிக் கூட்டத்தில் என்ன கூறப் போகிறார் என்பதைக் கேட்பதிலேயே அனைவரும் ஆவலாக இருந்தார்கள். கலிய மன்னனும் “நீங்கள்தான் வழி சொல்லவேண்டும், அடிகளே!” என்பதுபோல், இறுதியாக அவரைப் பார்த்தான்.