நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/24. வழியும் வகையும்
அந்தப் பெண் காம மஞ்சரிக்கு ஆறுதலாக ஏதேனும் இரண்டு நல்ல வார்த்தைகள் கூறி விட்டுப் படியில் இறங்க விரும்பினான் அழகன்பெருமாள். அவளோ அவனையும், மற்றவர்களையும் விரட்டாத குறையாக விரைவு படுத்தினாள்.
“மேலேயுள்ள சிறையிலிருந்து உங்களையும், கீழே இந்தப் பாதாளச் சிறையிலிருந்து அவர்கள் இருவரையும், கொலைக் களத்துக்கு இழுத்துச் செல்ல ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு கணம் தாமதித்தால் கூட ஆபத்து.”
“இந்தப் பேருதவிக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை அம்மா?” என்று அவன் கூறத் தொடங்கு முன்பே அவனைப் படிக்கட்டில் இறங்குமாறு கரங்களைப் பற்றிக் கொண்டு இறைஞ்சத் தொடங்கி விட்டாள் காம மஞ்சரி.
அழகன் பெருமாளைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் அந்த நிலவறை வழியில் இறங்கினார்கள். அவர்கள் சிறிது தொலைவு நடந்ததும், அந்த நிலவறை வழி மேற்புறமாக மூடப்பட்ட ஓசையும், அதையடுத்து ஒரு மெல்லிய பெண் குரல், விசும்பி விசும்பி அழும் ஒலியும் தெளிவாகக் கேட்டன.
“வாழ்க்கை எவ்வளவு விநோதமானது பார்த்தாயா? உதவி செய்கிறவர்கள் எங்கே, எப்படி, எப்போது எதிர்ப்படுவார்கள் என்று தெரியாமல், எதிர்ப்படுகிற விநோதத்தை எப்படி வியப்பதென்றே தெரியவில்லை செங்கணான்?” என்று தேனூர் மாந்திரீகனிடம் கூறிக் கொண்டே இருளில் நடந்தான் அழகன்பெருமாள். ‘இவ்வளவு மென்மையான மனமுள்ள பெண்ணையா அன்று பயமுறுத்தினோம் நாம்?’ என்று எண்ணியபோது அழகன் பெருமாளுக்கு இதயம் கூசியது.
இருளில் கைகோர்த்த படி ஒருவர் பின் ஒருவராக நெடு நேரம் நடந்தார்கள் அவர்கள்.
“ஐயா! அவள் கூறியதிலிருந்து நம் தென்னவன் மாறனும், மல்லனும் கூடச் சிறிது நேரத்திற்கு முன்பே, இந்தப் பாதை வழியாகத் தப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. நாம் விரைந்து நடந்தால், பாதை முடிந்து வெளியேறுகிற மறு முனையில் அவர்களைச் சந்தித்து விடலாம் அல்லவா?” -என்று அழகன் பெருமாளைக் கேட்டான் கழற்சிங்கன். அவர்களைச் சந்திக்க முடியுமா, முடியாதா என்பது பற்றி அழகன் பெருமாளால் அதுமானிக்க முடியாமல் இருந்தது. ஆயினும் “சந்திக்க முயல்வோம்” என்று நம்பிக்கையோடு கழற்சிங்கனுக்கு மறுமொழி கூறியிருந்தான் அழகன் பெருமாள். காம மஞ்சரி செய்திருக்கும் உதவியையும், தியாகத்தையும் பற்றிய சிலிர்ப்பு இன்னும் அவன் மனத்தில் இருந்தது.
‘அன்பு என்பது பெண்ணின் இதய ஊற்று! அவள் களப்பிரப் பெண்ணாயிருந்தால் என்ன? தமிழ்ப் பெண்ணாயிருந்தால் என்ன? அவள் பெண்ணாயிருப்பதை நிரூபித்துக் கொள்ள அன்புதான் ஒரே அடையாளமாயிருக்கிறதே தவிர மொழியும், இனமும், குலமும் அடையாளங்களாவதில்லை. எங்கே அன்பு முதிர்கிறதோ, அங்கே விளைகிறாள். கனிகிறாள். பெண்ணாகிறாள். எப்படியோ இருந்த இந்தக் காம மஞ்சரி என்ற அரண்மனைக் கணிகையை, நம்முடைய முரட்டுத் தென்னவன் மாறன் பாகாய் உருகிப் பணிய வைத்து விட்டானே? இவன் அவளை வெறுத்தும், அவள் இவனுக்காக உயிரை விடத் துடிக்கிறாளே; இந்த அன்பை என்னவென்று வியப்பது அரசர்களின் பகை இதயங்களின் கனிவைத் தடுக்கக் கூட முடியவில்லையே? இது பெரிய விந்தைதான்...’ என்று எண்ணி வியந்தபடியே இருளில் நடந்து கொண்டிருந்தான் அழகன் பெருமாள்.
காம மஞ்சரி எச்சரித்ததில் ஒரு சிறிதும் மிகையாக இருக்க முடியும் என்று அழகன் பெருமாளுக்குத் தோன்றவில்லை. அன்றிரவுக்குள் எப்படியும் மாவலி முத்தரையர் தங்களையும், தென்னவன் மாறனையும், மல்லனையும் கொன்று விடக் கூடும் என்பது அவனே அநுமானித்திருந்ததுதான். தன்னை அவர் தந்திரமாக வினாவியிருந்த வினாக்களுக்குத் தான் கூறியிருந்த எந்த மறுமொழியும், அவரைச் சந்தேகங்களிலிருந்து விடுவிக்காததோடு அவருடைய சந்தேகங்களை மேலும் அதிகமாக்கி விட்டிருக்கக் கூடுமென்றே அவன் புரிந்து கொண்டிருந்தான். அப்படிப் பார்க்கும் போது, இவள் செய்திருக்கும் உதவி காலமறிந்து செய்த பேருதவி என்பதில் அழகன் பெருமாளுக்கு ஒரு சிறிதும் சந்தேகமே ஏற்படவில்லை. இருளில் அபயம் அளிக்க வந்தது போல் ஒலித்த அவளுடைய சோகக் குரலை மீண்டும் நினைவு கூர்ந்தான் அவன். கோட்டைக்குள் தானும் நண்பர்களும் நுழைந்த போது, சிறைக் கோட்டத்துக்கு அவள் வழி சொல்லிய உதவியை விட இப்போது செய்திருப்பது பெரியதும் அரியதும் ஆகிய உதவி என்று அழகன்பெருமாள் மட்டுமின்றித் தப்பிச் சென்று கொண்டிருந்த நண்பர்கள் எல்லாருமே நினைத்தார்கள்.
நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே காரி ஒர் ஐயப்பாட்டை வினவினான்: -
“ஐயா! இந்த வழி மதுரை மாநகரின் நடுவூர்ப் பகுதியிலுள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தில் கொண்டு போய் விடும் என்று அவள் கூறினாள். அங்கிருந்து அப்புறம் நாம் எங்கே போவது? எப்படிப் போவது? உப வனத்துக்குப் போவதா? இரத்தின மாலையின் மாளிகைக்குப் போவதா? வசந்த மண்டபத்தில் இருந்து நாம் நகரில் பிரவேசிப்பது துன்பங்களைத் தராது என்பது என்ன உறுதி? வசந்த மண்டப வழியாக வெளியேறாமல், இதே நிலவறை வழிக்குள்ளேயே சிறிது நேரம் தங்கலாம் என்றால் சிறைக் கோட்டத்திலிருந்து பூத பயங்கரப் படை இதே வழியில் நம்மைப் பின் தொடர்ந்தால் என்ன செய்வது? இதையெல்லாம் நாம் இப்போதே சிந்தித்துக் கொண்டு விடுவது நல்லது அல்லவா? வருமுன் காத்துக் கொள்வதுதானே சிறப்பு?”
அழகன் பெருமாள் மறுமொழி கூறினான்:
“நீ வினாவிய வினாக்கள் எல்லாமே சிந்திக்க வேண்டியவைதான்! ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். சிறைக் கோட்டத்திலிருந்து தப்பிக் கொண்டிருக்கிற நம்மை இதே வழியாகப் பூத பயங்கரப் படை பின் தொடரும் என்று சந்தேகப்படுகிறாயே; அது மட்டும் நடக்காது. அந்தப் பெண் காம மஞ்சரி நுணுக்கமான அறிவுள்ளவள். பூத பயங்கரப் படையினரின் கவனத்தைத் திசை திருப்ப ஏற்ற விதத்தில் நிலவறை வழியைப் பற்றி அவர்களுக்கு ஒரு சிறிதும் சந்தேகமே எழாத படி வேறொரு வழியைக் கூறி, அந்த வழியாக நாம் தப்பி ஓடியதைத் தான் கண்டதாக விவரிப்பாள் அவள். “இருக்கலாம்! ஆனால், மாவலி முத்தரையர் இவளைப் போல் ஒரு பெண்பிள்ளை கூறுவதற்கு நேர் மாறாகத்தான் முடிவு செய்வார். அவருடைய சாதுரியம், இவளைப் போல் நூறு பெண்களின் பொய்யை நிலை நிறுத்தி முடிவு செய்கிற அளவு கபடமானதாயிற்றே?”
“சிந்திக்க வேண்டிய காரியம்தான்; மாவலி முத்தரையர் வந்து குறுக்கிட்டால், நடப்பது வேறாகத்தான் இருக்கும்.”
“அவர் குறுக்கிடாமல் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை ஐயா.”
காரி, மாவலி முத்தரையரின் பெயரை இழுக்கவும் மிக மிகத் துணிவாயிருந்த அழகன் பெருமாளின் மனத்தில் கூடக் கவலை வந்து சூழத் தொடங்கியது. நடையும் தடைப்பட்டது. எப்படி மறுமுனையில் வெளியேறித் தப்புவது என்பதைப் பற்றியும், ஏற்கனவே வெளியேறியிருக்கிற தென்னவன் மாறனும், மல்லனும் என்ன நிலையை அடைந்திருப்பார்கள் என்பது பற்றியும் அழகன் பெருமாள் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான். வழி தெரிந்தது, ஆனால் வகை தெரியவில்லை.