நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/26. எதிர்பாராத அபாயம்
தயக்கமும், எச்சரிக்கையும், மாறி, மாறி நிலவும் மனநிலையோடு அழகன் பெருமாள் முதலிய நண்பர்கள் காம மஞ்சரி காட்டிய நிலவறை வழியே வெளியேறி, அதன் மறு முனையாகிய மதுரை மாநகரத்து நடுவூர் வசந்த மண்டபத்து நந்தவனத்தை அடைந்து விட்டனர். மறுமுனையில் தங்களுக்கு முன் அதே வழியாகத் தப்பிய தென்னவன் மாறனும், திருமோகூர் மல்லனும் தங்களை எதிர்பார்த்து மறைந்து, அங்கே காத்திருக்கக் கூடும் என்று அழகன் பெருமாள் எதிர்பார்த்தான். அவனும் நண்பர்களும் நினைத்தபடி, தென்னவன் மாறனையோ, மல்லனையோ அங்கே காணமுடியவில்லை. தவிர அந்த நந்தவனப் பகுதி அப்போது இயல்பை மீறிய அமைதியில் ஆழ்ந்திருந்தது. மனிதர்கள் அதிகம் பழகாத இயற்கை வளமே உள்ள இடத்தினது அழகின் அமைதியாக அது இல்லை. இந்த அமைதி வேறுபாடு உடையதாகவும் சந்தேகத்துக்கு உரியதாகவும் இருந்தது. காரி, குறளன், கழற்சிங்கன் முதலியவர்களும் கூட இந்த அமைதியைப் பற்றி ஐயப்பாடு கொண்டனர். அழகன் பெருமாளுக்கு இன்னதென்று காரணம் புரியாமலே, மனத்தில் ஏதோ இடறியது. பேசாமல், கொள்ளாமல் வந்த வழியே திரும்பி நிலவறையில் இறங்கி உள்ளேயே போய்விடலாமா என்று கூடத் தோன்றியது. அடர்த்தியான அந்த நந்தவனத்தில் எங்கே போய், எப்படி வெளியேறி, எவ்வாறு தப்புவது என்றும் அவர்களுக்கு உடனே விளங்கவில்லை. ஒரே குழப்பமாயிருந்தது.
அப்போதுதான் எதிர்பாராதபடி அந்த அபாயம் நடந்தது. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று நாற்புறமும் புதர்களிலிருந்து நூற்றுக்கணக்கான பூத பயங்கரப் படை வீரர்கள் வெளிப்பட்டு ஆயுதபாணிகளாகப் பாய்ந்தனர். அழகன் பெருமாள் முதலியவர்கள் எப்படித் தப்புவது, என்ன செய்து தப்புவது என்று விழிப்படையும் முன்பாகவே மீண்டும் சிறைப் பிடிக்கப்பட்டு விட்டனர். கண்மூடித் திறப்பதற்குள் இது நடந்து முடிந்து விட்டது. யாரும் எங்கும் ஒடித் தப்ப வழியில்லை.
அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும், சிறைப்பட்டு விட்ட தங்களுடைய எண்ணிக்கையில் ஒன்று குறைவதை அழகன் பெருமாள் தெளிவாக உணர்ந்தான். உருவத்தில் மிகவும் சிறியவனாகிய குறளன் மட்டும் மின்னல் வேகத்தில் தப்பியிருந்தான். அந்த வினாடியில் பூத பயங்கரப் படையினரும் அதைக் கவனிக்கவில்லை என்று தெரிந்தது. தங்களில் ஒருவர் தப்ப முடிந்ததனால் தொடர்புள்ள மற்றவர்களுக்கு வெளியே போய், நடந்ததை அறிவிக்க முடியும் என்பதையும், மீட்பதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என்பதையும் எண்ணி மகிழ்ந்தான் அழகன் பெருமாள். அப்போது மற்றும் நால்வர் வேறொரு புதரிலிருந்து வெளிப்பட்டனர். பூத பயங்கரப் படைத் தலைவனும் மாவலி முத்தரையரும், அவர்களோடு, கை கால்கள் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில், தென்னவன் மாறனும், மல்லனும் தென்பட்டனர்.
சிறையிலிருந்து வெளியேற முயன்ற அனைவருமே, திட்டமிட்டுப் பிடிக்கப்பட்டு விட்டதை அழகன் பெருமாள் புரிந்து கொண்டான். அந்த நிலையில் குறளன் மட்டும் தப்ப முடிந்ததை ஒர் அதிசயமாகத்தான் நினைத்தான் அவன்.
இப்படி வகையாக மாட்டி வைப்பதற்காகவே ஒரு நீலிக் கண்ணீர் நாடகமாடினாளோ என்று காம மஞ்சரியைப் பற்றியே இப்போது சந்தேகம் வந்தது அவனுக்கு. ஆனால், அடுத்த கணமே, மாவலி முத்தரையர் பேசிய பேச்சிலிருந்து அந்தச் சந்தேகம் நியாயமற்றது என்பதை உணர்ந்து அப்படி நினைத்ததற்காகத் தன்னைத் தானே கடிந்து கொண்டான் அழகன் பெருமாள். மாவலி முத்தரையர் இடிக் குரலில் கூறினார்;
“எவ்வளவுதான் நடித்தாலும், நீங்கள் எல்லோரும் யாரென்பது இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது. இனி நீங்கள் தப்ப முடியாது. உங்களுக்கு உதவி புரிந்த அந்தக் கேடு கெட்ட காம மஞ்சரியும் தப்ப முடியாது. நீங்களே உங்களைத் தெளிவாக அடையாளம் காட்டிக் கொண்டு விட்டதற்கு நன்றி.”
அழகன் பெருமாள் முதலியவர்களும், தென்னவன் மாறனும், மல்லனும் இதைக் கேட்டு குனிந்த தலை நிமிராமல் நின்றார்கள். அந்த நிலையில் அவர்களிடம் மேலும் மாவலி முத்தரையரே பேசலானார்;
“இப்போது கூட ஒன்றும் குடி முழுகி விடவில்லை! எனக்குத் தெரிய வேண்டிய ஒரு பெரிய உயிர் நிலைச் செய்தி உங்களிடமிருந்து தெரியுமானால் மற்ற எல்லாத் தவறுகளையும் மறந்து, உங்களை நான் விட்டு விட முடியும். அந்த மதுராபதி வித்தகன் எங்கே இருக்கிறான் என்பதை மட்டும் சொன்னால் போதுமானது. இடத்தைச் சொல்ல முடியாவிட்டால், ஊரைச் சொல்லுங்கள். ஊரைச் சொல்ல முடியாவிட்டால் திசையைச் சொல்லுங்கள்." தமது இந்த வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களில் உயிர்ப் பயமும், விடுதலையாகும் வேட்கையும் உள்ள யாராவது ஒருவனாயினும் முன் வருகிறானா என்று, அழகன் பெருமாள் முதலிய ஒவ்வொருவர் முகமாக ஏறிட்டுப் பார்த்தார் மாவலி முத்தரையர். யாருடைய முகத்திலும் இசையும் சிறு அடையாளம் கூடத் தென்படவில்லை. இந்த முயற்சியைக் கனிவாகவும், கடுமையாகவும், பயமுறுத்தியும் தொடர்ந்து சிறிது நேரம் வரை செய்து பார்த்தார் மாவலி முத்தரையர். எந்தப் பயனும் விளையவில்லை. முடிவில் குரூரமும், வெறுப்பும் நிறைந்து வெடிக்கும் கடுமையான குரலில் தென்னவன் மாறன் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டி, ‘இந்தப் புலித்தோல் அங்கிக்காரனைத் தவிர மற்றவர்களை ஒளியே நுழைய முடியாத இருட்டறையில் கொண்டு போய்த் தள்ளுங்கள். பல ஆண்டுகள் சிறையில் கிடந்து ஒவ்வொருவராகச் செத்துத் தொலையட்டும்” என்றார் அவர். உடனே பூத பயங்கரப் படைவீரர்கள் பாய்ந்து சிறைப்பட்டவர்களை இழுத்துக் கொண்டு சென்றனர். தென்னவன் மாறனை மட்டும் பூத பயங்கரப் படைத் தலைவனும், மற்ற இரு வீரர்களும் வேறு திசையில் இழுத்துச் சென்றனர். கால்களில் தளரத் தளர இடம் விட்டுப் பிணைக்கப் பட்டிருந்த இரும்புச் சங்கிலியின் காரணமாக, தள்ளாடித் தள்ளாடி இயல்பாக எட்டு வைத்து நடக்க முடியாமல், சிரமப் பட்டுச் சென்றான் தென்னவன் மாறன். மாவலி முத்தரையர் களப்பிரக் கலியரசனைக் காணச் சென்றார். அப்போது உடனே அரசனைக் கண்டு, தென்னவன் மாறனையும், காம மஞ்சரியையும் கடுமையாகத் தண்டிக்குமாறு வற்புறுத்த வேண்டியிருந்தது அவருக்கு.
ஃஃஃ
இப்பால் அழகன் பெருமாள் முதலியவர்களை இழுத்துச் சென்ற பூத பயங்கரப் படை வீரர்கள் முன்னை விடக் கொடுமையானதும் இருட்குகை போன்றதும் ஆகிய ஒரு பயங்கரச் சிறைக் கூடத்தில் அவர்களைத் தள்ளி அடைத்தார்கள். அப்போது தங்களை அடைத்த வீரர்களில் ஒரு பூத பயங்கரப்படை வீரனிடம் தனக்குத் தெரிந்த அளவில் பாலி உச்சரிப்போடு, “ஏனப்பா, அந்தப் புலித்தோல் அங்கி வீரரை எப்போது இங்கே கொண்டு வந்து எங்களோடு அடைப்பார்கள்?” என்று வினாவினான் அழகன் பெருமாள். இதற்கு, முதலில் அந்த வீரன் பதில் கூறவில்லை. வஞ்சகம் தோன்றச் சிரித்தான். பின்பு சிறிது நேரம் கழித்துப் போகிற போக்கில் மிகவும் சுருக்கமாக, ‘எப்போதும், எங்கும் திரும்பி வர முடியாதவர்களைப் பற்றி விசாரித்து உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிராதே அப்பனே!’ என்று பாலியிலேயே பதில் சொல்லி விட்டுப் போனான் அந்த வீரன். இந்த மறுமொழியைக் கேட்டு அழகன் பெருமாளும் நண்பர்களும் துணுக்குற்றனர். தென்னவன் மாறனை உயிர் மீட்கும் காரியத்தை மேற்கொண்டு, அதன் பொருட்டே கோட்டைக்குள்ளே வந்த தாங்கள் அதை நிறைவேற்ற முடியாமற் போகிறதே என்று துடிதுடித்துத் தவித்தார்கள் அவர்கள். தாங்கள் தலைவணங்கும் குலக்கொழுந்து ஒன்று கருகுவதை அழகன் பெருமாளால் எண்ணிப் பார்க்கவும் முடியாமல் இருந்தது. பெரியவர் தங்களுக்கு ஒலை மூலம் அனுப்பிய கட்டளையை இன்று தாங்கள் நிறைவேற்ற முடியாமற் போய் விட்டதே என்ற துயரத்தின் சுமை அவன் நெஞ்சை அழுத்தியது.
“எக்காரணத்தைக் கொண்டும் திருக்கானப்பேர் நம்பியைத் தென்னவன் மாறனை மீட்கும் பணிக்காகக் களப்பிரர் அரண்மனைக்குள்ளோ, கோட்டைக்குள்ளோ போக விடக் கூடாது” என்று பெரியவர் வற்புறுத்தித் தடுத்திருந்ததன் பொருள் இப்போது அழகன் பெருமாளுக்குப் புரிந்தது. அந்த எச்சரிக்கையின் பயன் இமய மலையளவு பெரிதாகித் தோன்றியது இப்போது. ஒரு குலக் கொழுந்தைக் கருக விடாமல் காப்பாற்றிக் கொண்டு வரும் பணியில் ஈடுபட, இன்னொரு குலக் கொழுந்தை அனுப்புவதன் மூலம் அந்த இரண்டு குலக் கொழுந்துகளையுமே பகைவர் கருக்கி விடக் கூடாது என்ற கவலையும் முன்னெச்சரிக்கையும் கவனமும் கொண்டு, பெரியவர் காரியங்களைத் திட்டமிட்டிருக்கும் திறனை இந்த வேதனையான சூழ்நிலையிலும் அழகன் பெருமாளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. தங்களோடு சிறையிலிருந்து விட்டுத் தப்பிப் போயிருக்கும் குறளன், இளைய நம்பியையோ, பெரியவரையோ போய்ச் சந்தித்து, எல்லா விவரங்களையும் கூறுவான் என்ற ஒரே நம்பிக்கைதான், அவ்வளவு இருளின் நடுவேயும் அவன் முன் ஒளியாக இருந்தது. இந்தப் புதிய சிறையில் ஒளியோ, பகல் இரவோ, உலகத் தொடர்போ இல்லாத காரணத்தால் இனிமேல் காலம் நகர்வது கூடத் தெரியாமற் போய்விடும் போலிருந்தது. சிறையின் பெரிய இரும்புக் கதவில் கையும் பாத்திரமும் நுழைகிற அளவு துவாரம் இருந்தது. அந்தத் துவாரத்தின் வழியே வெளிப்புறம் இருந்து குரல் வந்தால், காலையோ மாலையோ உண்பதற்கு ஏதோ கொடுக்க வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்தத் துவாரத்தில் உணவுக்காக அழைக்கும் குரலை வைத்துத்தான் கால ஒட்டமே அவர்களுக்குத் தெரிகிற அளவு உலகம் அவர்களைப் பொறுத்தவரை ஒடுங்கி விட்டது. மறுபடி உயிரோடு வெளியேறிக் காற்றையும், கதிரவன் ஒளியையும், வையையாற்றையும் கூடல் கோநகரையும் இப்பிறவியில் இனிமேல் கண்ணாரக் காண முடியுமா என்ற சந்தேகத்தை அநேகமாக அவர்கள் எல்லாருமே அடைந்திருந்தனர்.
இப்படி அவர்கள் இந்தப் புதிய காராக்கிருகத்தில் அடைக்கப்பட்ட மறு தினமே திடுக்கிடத்தக்க ஒரு துயரச் செய்தி கிடைத்தது அவர்களுக்கு,
மறுநாள் துவாரத்தின் வழியே உணவை நீட்டியவனிடம்-
“எங்களில் ஒருவராகிய அந்தப் புலித்தோல் அங்கியணிந்தவர் ஏன் இன்னும் இங்கே கொண்டு வந்து அடைக்கப்படவில்லை? அவர் என்ன ஆனார்? எங்கே போனார்?” என்று கேட்டான் அழகன் பெருமாள்.
வெளியே சிரிப்பொலிதான் ஏளனமாகக் கேட்டது. வேறு பதில் வார்த்தைகள் இல்லை. மறுநாள் மாவலி முத்தரையர் தீப்பந்தங்களோடும், ஐந்தாறு பூத பயங்கரப் படை வீரர்களோடும் சிறைக்குள் வந்தார். அழகன்பெருமாளை அடையாளம் கண்டு அவர் நேரே அவனருகே வந்து,
"அப்பனே! நேற்று உங்களில் யாரோ ஒருவன் இங்கே உணவு கொடுக்க வந்தவனிடம் அந்தப் புலித்தோல் அங்கிக் காரனைப் பற்றி விசாரித்தீர்களாம். பாவம்! இனி அவனைப் பற்றியும், அந்த நன்றி கெட்ட கணிகை காம மஞ்சரியைப் பற்றியும் விசாரித்து ஆகப் போவது ஒன்றுமில்லை. இருவருமே இப்போது இந்த உலகில் இல்லாதவர்களாகி விட்டனர். இதோ பார்?” என்று இரத்தக்கறை படிந்து, நிணம் நாறும் புலித்தோல் அங்கியின் கிழிந்த பகுதிகளை அவர்கள் எல்லார் முன்பாகவும் எடுத்துக் காட்டினார். வயிறெறிந் தார்கள், குருதி கொதித்தது. அவர்களால் சகித்துக் கொள்ள முடியாத மரணத்தைப் பற்றி மிகவும் அலட்சியமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டார் மாவலி முத்தரையர்.
அன்று அவர் சென்ற பின் சூழ்ந்த இருளுக்குப் பின் நெடுங் காலம் அந்தச் சிறையில் உள்ளவர்களுக்கு விடிவே பிறக்கவில்லை. தென்னவன் மாறன் என்ற வலிய இரும்பு மனிதனை ஒரு ஈயை நசுக்குவது போல் களப்பிரர்கள் நசுக்கிக் கொன்று விட்டதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தென்னவன் மாறனோடு நெருங்கிப் பழகிய திருமோகூர் மல்லன் பல மாதங்கள் அந்த இருட்சிறையில் மெளனமாக மலை அமர்ந்து அழுவது போல் ஒரு மூலையில் அமர்ந்து கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தான். அழகன் பெருமாள் மனம் ஒடிந்து போனான். இடையிடையே அவர்களில் ஒருவனாவது, மதுராபதி வித்தகர் இருக்கும் இடத்தைப் பற்றி உளவு சொல்ல மாட்டானா என்ற ஆசையில் மாவலி முத்தரையர் அடிக்கடி வந்து பயமுறுத்திப் பார்த்துத் தோல்வியோடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் உயிரை இழக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே ஒழியத் தங்களுடைய மாபெரும் வழிகாட்டியின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கச் சித்தமாயில்லை. காலம் ஓடியது. கோடையும், மாரியும் மாறின. முன்பனியும், பின்பனியும் வந்து, வந்து போயின. ஏறக்குறைய அந்தச் சிறைக் கோட்டத்திலேயே தங்கள் வாழ்வு முடிந்து விடுமோ என்று அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஆனால் நம்பிக்கையை அவர்கள் இழந்து விட்டார்களே ஒழிய, நம்பிக்கை அவர்களை இழக்கவில்லை என்பது நிரூபணமாகும் நாள் அவர்களையும் அறியாமலேயே விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தது.