நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/3. மூல விருட்சம்
மாவலி முத்தரையரின் முகத்தில் அவர் பூண்டிருந்த துறவுக் கோலத்திற்கு ஒரு சிறிதும் பொருத்தமற்ற கொலை வெறியைக் கண்டு, கலிய மன்னன் உட்பட அந்த மந்திராலோசனைக் குழுவில் இருந்த அனைவருமே திகைத்துப் போனார்கள். ‘வையை வளநாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்துத் தென் பாண்டிய மதுராபதி வித்தகனுக்கும், இந்த மாவலி முத்தரையருக்கும் அப்படி என்ன ஜன்மப் பகை இருக்க முடியும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. உடலே கனன்று எரியும் படி அந்தப் பகை வெளிப்படையாகத் தெரிவதைக் கண்டுதான் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. உட்படு கருமத் தலைவர்களில் ஒருவர் மற்றவர் காதருகே மெல்லக் கேட்டார்:-
“இந்தக் கூட்டத்தில் பாலி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் மட்டும்தான் இருக்கலாம் என்று கடிந்து கொண்டு, ஒரு பாவமும் அறியாத பணிப் பெண்களைக் கூட அரசர் இங்கிருந்து துரத்தினாரே; அதே அடிப்படையில் பார்த்தால் மாவலி முத்தரையர் அல்லவா இங்கிருந்து முதலில் துரத்தப்பட வேண்டும்?”
“அது எப்படி முடியும்? மாவலி முத்தரையர் பாலியில்தான் பேசுகிறார். அரசரின் வலது கரம் போல் அவருக்கு நெருக்கமாக உதவுகிறார். இந்த ஆட்சியில் அவர் தமிழரா, களப்பிரரா என்று நாம் சந்தேகப்படுவது கூடக் குற்றமாகி விடும்.”
“இருக்கலாம்! ஆனால், உண்மையைப் பொய்யாக்குவதற்குச் செல்வாக்கு மட்டுமே போதாது.”--
“நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஆனால், செல்வாக்கும், அதிகாரமும் உண்மைகளைப் பொய்யாக்கியிருப்பதை இந்த மாவலி முத்தரையரைப் பொறுத்த மட்டும் கண்கூடாகக் காண்கிறோம்.”
இவ்வளவில் இந்த இரு உட்படு கருமத் தலைவர்களும் தங்களுக்குள் காதும் காதும் வைத்தாற் போல் தனியே இரகசியமாகப் பேசிக் கொள்வதை அரசனே பார்த்து விடவே, “என்ன அங்கே நீங்கள் மட்டும் தனியாகப் பேசிக் கொள்கிறீர்கள்? நாம் அனைவரும் கலந்து பேசவே இந்த மந்திராலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனித் தனியாக அவரவருக்குத் தோன்றுவதைப் பேசிக் கொள்வதானால் இங்கே எல்லோரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய அவசியமே இல்லையே?” என்று இரைந்தான். உட்படு கருமத் தலைவர்களின் பேச்சு உடனே அடங்கி விட்டது. கலிய மன்னன் அரச குரு மாவலி முத்தரையரைப் பார்த்து வினவினான்:-
“யார் இந்தத் தென்பாண்டி மதுராபதி வித்தகர்? அவனால் எப்படி மீண்டும் பாண்டிய குலத்தைத் தழைக்கச் செய்து விட முடியும்? அவன் உயிரோடு மறைந்திருக்கிற வரை பாண்டிய குலம் அழியாது என்பது ஏன்?”
“கலியா? உன்னுடைய வினாவுக்கு ஓரளவு குறிப்பாகவே நான் மறுமொழி கூற முடியும். இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் பலவற்றை நான் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூற முடியாமலிருப்பதற்காக நீ என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் எப்போதும் என் எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. அந்த மதுராபதி வித்தகனை, வாளினால் வெல்ல முடியாது! ஓர் இணையற்ற அறிவாளியைக் கொல்லுவதற்கு, இணையற்ற பலசாலியால் முடியாது என்பதை நம்புகிறவன் நான். அவனைவிடப் பெரிய புத்தி சாதுரியமுள்ளவனையோ, அவனை விடப் பெரிய அரச தந்திரியையோ எதிரே கண்டாலே அவன் அழிந்து விடுவான். ஆனால் அந்த நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகனை விடச் சிறந்த புத்தி சாதுரியமோ, அரச தந்திரமோ உள்ளவர்கள் இன்று இங்கு யாரும் இல்லை." “நீங்களே அவனைப் பழி வாங்கவும் துடிக்கிறீர்கள்! வியந்து போற்றவும் செய்கிறீர்கள்! மதுராபதி வித்தகனைப் புரிந்து கொள்வது அப்புறம் இருக்கட்டும். இப்போது உங்களையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை அடிகளே!”
“நான் அவனைப் பழி வாங்கத் துடிப்பதற்குக் காரணமே அவனுடைய அறிவுதான். அதை நான் குறைவாக மதிப்பிட்டிருந்தால், இந்தப் பழி வாங்கும் எண்ணமும், குரோதமும் எனக்கு ஏற்பட்டிருக்காது. அறிவின் எல்லையைத் தொட்டு விட்டவனைப் பார்த்து, அதில் பின் தங்கி விட்டவனுக்கு ஏற்படுகின்ற கோபம்தான் இது.”
“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை அடிகளே!”
“அறிவால் போரிட்டுக் கொண்டிருப்பவர்களின் பகையை, ஆயுதங்களால் போரிடுகிறவர்கள் புரிந்து கொள்வது கடினம்தான்.”
“நிதானமாகவும், காரண காரியங்களோடும் நடை பெறுகிற எந்தப் போரையும் அரசர்கள் விரும்ப முடியாது. ஒரு போரில் எதிர்ப்பவர், எதிர்க்கப்படுகிறவர் இருவரில் யாராவது ஒருவர் அழிந்தாக வேண்டும். இருவருமே நீடிக்கிற போர் எங்களைப் போன்றவர்களுக்குப் பிடிப்பதில்லை.”
“அப்படியானால் நீயும், உன்னைப் போன்றவர்களும் என்னையொத்த அறிவாளியின் குரோதத்தையோ, பகையையோ புரிந்து கொள்வது மிகவும் சிரமமானது.”
“எதிரியின் உடலை அழிப்பதால், நாம் வென்று விடுவதுதான் வெற்றி. அதுவே போரின் இலட்சியத்தை முடிவு செய்து விடுகிறது என்பது என்னுடைய கருத்தாகும்.”
“அறிவாளிகளின் போரில் உடல் அழிக்கப்படுவதோ, அங்கங்கள் சிதைக்கப்பட்டு அவமானப் படுத்தப்படுவதோ வெற்றியை நிர்ணயிப்பதில்லை கலியா! வாதம் பலவீனப் படும் போதுதான் வாதிப்பவனுக்குக் கோபம் வரும். விவாதம் புரியும் இருவரில் யாருக்கு முதலில் கோபம் வருகிறதோ, அவன் தோல்வியடையத் தொடங்குகிறான் என்பதுதான் பொருள்.”
“உங்களுக்கே மதுராபதி வித்தகன் மேல் கோபம் வருகிறதே?”
“அதனால்தான் நான் அவனை இன்னும் வெல்ல முடியவில்லை. என் கோபம் பல முறை தோற்றவனுக்கு வரும் கோபம். என் எதிரே, இந்தக் கோபம் என்று அந்த மதுராபதி வித்தகனுக்கு வந்து, அவன் முதலில் ஆத்திரத்தால் நிலை தடுமாறுகிறானோ அன்று நான் வென்றவனாக இருப்பேன்.”
“ஆகவே, நாம் முதலில் அந்த மூல விருட்சத்தை அழிக்க வேண்டும் என்கிறீர்கள்...”
“ஆம்! ஆனால் எப்படி அழிப்பது என்பதில்தான் நாம் இருவரும் வேறுபடுகிறோம்.”
“நம்மால் எப்படியும் அழிக்க முடியும்!”
“நீங்கள் எப்படி அழிப்பீர்கள் என்பது வாதமில்லை. அவன் எப்படி அழிவான் என்பதே நம் வாதமாக இருக்க வேண்டும்.”
“ஒவ்வொருவரும் முடிவதற்கு ஏதாவது ஒரு தலைவிதி இருக்கும் அடிகளே!”
“மதுராபதி வித்தகன் யாரோ ஏற்படுத்திய விதிகளுக்குத் தான் கட்டுப்படுவதில்லை. விதிகளையே ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தவும் வல்ல அறிவு அவனுக்கு இருந்து தொலைக்கிறது.”
“அவன் இப்போது எங்கிருக்கிறான் என்று சொல்ல முடிந்தால் போதும்! மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.”
“எந்த இடத்தில் அவன் இருப்பதாக நமக்குத் தெரிந்தாலும், நாம் தெரிந்து கொண்டு செயல் படுவதற்குள் அவன் வேறு இடம் மாறிவிடுவான். அவ்வளவு சுலபமாக அகப்பட்டு விடுகிறவனில்லை அவன்." இந்தச் சமயத்தில் பூத பயங்கரப் படைத் தலைவன் மெல்ல எழுந்திருந்தான். அரச குரு மாவலி முத்தரையர் ஏளனமாக அவனைப் பார்த்தார். கலிய மன்னனோ பூத பயங்கரப் படைத் தலைவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவன் பக்கம் ஆவலோடு திரும்பினான்.
“மாமன்னர் கட்டளையை மேற்கொண்டு பூதபயங்கரப் படையினர் திருமோகூரை முற்றுகையிட்டுச் சோதனை செய்தோம். அங்கும் அந்தப் பாண்டியர் குலத் தலைவன் கிடைக்கவில்லை. அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லுதவி செய்யும் பெரிய காராளர் மாளிகைக்குக் கட்டுக்காவல் வைத்துக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறோம்.”
“காராளர் பெரிய உபகாரி! அவர் இந்தக் களப்பிரர் ஆட்சிக்கு மிகவும் உதவி வருகிறவர். அவரைப் போன்றவர்களை நீங்கள் மிகவும் கொடுமைப் படுத்தி விடக் கூடாது.”
“இது பற்றிய தங்களுடைய திருவுள்ளக் குறிப்பை ஏற்கெனவே நன்கு அறிவேன் அரசே!” என்றான் பூத பயங்கரப் படைத் தலைவன்.
“அவிட்ட நாள் விழாவின் போது, இங்கும் திருமோகூரிலும் சிறைப்பட்டவர்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தினால், அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்” என்றார் அரச குரு.
“அதுதான், அவர்களைச் சித்திரவதை செய்து பார்த்தும் கூட எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லையாமே? நீங்கள் மட்டும் எப்படி அந்த உண்மையை வரவழைக்க முடியும்?” என்று அரச குருவைப் பார்த்துக் கேட்டான் கலிய மன்னன்.
“என்னால் ஒரு வேளை அது முடியுமானால் உனக்கும் நல்லதுதானே கலியா? சாம தான பேத தண்ட முறைகளில் கடைசி முறையாகிய தண்ட முறையில் தொடங்கியதால்தான் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்களோ என்னவோ? மற்ற உபாயங்களைக் கடைப் பிடித்து நான் முயன்று பார்க்கிறேன். என்னால் இப்போது அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள முடிந்தால் களப்பிரர்களுக்கு எதிரான பகை வேரோடியிருக்கும் மூல விருட்சம் எது என்றும், எங்கே என்றும் நானே காண்பேன்” என்று சூளுரைத்தார் மாவலி முத்தரையர். சிறைப்பட்டவர்களை உடன் அங்கே கொண்டு வருமாறு பூத பயங்கரப் படைத் தலைவனுக்குக் கட்டளையிட்டான் கலிய மன்னன். உடனே பூத பயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்துக்கு விரைந்தான். அவன் புறப்பட்டுச் சென்றதும் படை நிலைமைகள் பற்றி அங்கே அமர்ந்திருந்த நால்வகைத் தானைத் தலைவர்களையும் கேட்டறிய முற்பட்டான் களப்பிரக் கலிய மன்னன்.