நித்திலவல்லி/முதல் பாகம்/12. வையைக்கரை உபவனம்
நிலவறைப் பாதை முற்றிலும் நடந்து வையைக்கரை உபவனத்தின் புதரடர்ந்த பகுதி ஒன்றிலிருந்து வெளிப்படும் வாயில் வழியே இளையநம்பியும் அழகன் பெருமாளும் வெளியேறிய போது கிழக்கே சூரியோதயம் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.
அந்த மாபெரும் உபவனத்தின் சூழ்நிலை திடீரென்று திருக்கானப்பேர்க் காட்டிற்கே மறுபடி திரும்பி வந்து விட்டது. போன்ற பிரமையை இளைய நம்பிக்கு உண்டாக்கியது. வனத்தை ஒட்டி வையை என்னும் பொய்யாக் குலக்கொடி புண்ணிய நறும்புனல் பெருக்கிக் கொண்டிருந்தாள். கதிரவன் உதிக்கும் கீழ்வானத்து ஒளிக்கதிர்கள் பட்டு மின்னும் வையை நீரின் பிரவாகத்தை மரம் செடி கொடிகளும் பன்னிற மலர்கள் பூத்துக் குலுங்கும் பூவகைகளும் நிறைந்த அந்த உபவனத்தில் இருந்து காண்பது பேரின்பம் தருவதாயிருந்தது. சிறுசிறு ஓடங்களில் அக்கரையில் செல்லூருக்கும், பிற பகுதிகளுக்கும் செல்வோர் சென்று கொண்டிருந்தனர்.
கரையோரங்களில் இருந்த புன்னை, பாதிரி, நாகலிங்க மரங்களின் பூக்கள் உதிர்ந்து உதிர்ந்து, வையையின் கரையை ஒட்டிய நீர்ப்பரப்புச் சிறிது தொலைவுக்குப் பூக்களாலேயே மூடப்பட்டுப் பூம்பரப்பாகத் தோன்றியது. நெடுநேரம் வெளவால் நாற்றமும் நிலவறையின் புழுக்கமும் படர இருளில் நடந்து வந்திருந்த இளையநம்பிக்கு, உப வனத்தின் பசுமை மணமும், பல்வேறு மலர்களின் கதம்பமான வாசனைகளும், சில்லென்று மேனியையும், கண்களையும் வந்து தழுவும் குளிர்ச்சியும், சொல்லால் சொல்லி விளக்க முடியாத சுகத்தை அளித்தன.
உப வனத்தின் புல்வெளியில் இளம் புள்ளி மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. பூமியில் வந்து நெருக்கமாகச் சிதறிய நட்சத்திரங்களைப் போல் வெகு தொலைவு பசும் பரப்பாகப் பரந்திருந்த மல்லிகைச் செடிகளில் பூக்கள் அடர்த்தியாகப் பூத்திருந்தன. மனோரஞ்சிதப் புதர்களில் எங்கெங்கோ இடம் தெரியாமல் பூத்திருந்த பூ மடல்களின் நறுமணம், தேவலோகத்தின் படிகளில் நடந்து போவது போல், அவனுடைய நடையையே கம்பீரமாகவும், உல்லாசமாகவும் மேலே ஊக்கியது. பூக்களின் மிக, மிக நுண்ணிய நறுமணத்திற்கும், இசையின் பேரினிமைக்கும், மனிதனின் நரம்புகளில் முறுக்கேற்றி, அவன் எங்கோ பெயர் புரியாத மண்டலங்களின் வீதிகளில் மிதப்பது போன்ற களிப்பை அளிக்கும் ஆற்றல் இருப்பதை, இளையநம்பி பலமுறை உணர்ந்திருக்கிறான். இன்று, இப்போதும் அதே உணர்வை இங்கே அடைந்தான் அவன்.
எதிரே தரையை ஒட்டித் தாழ்வாகச் சாய்ந்திருந்த ஒரு சுரபுன்னை மரத்தின் கிளைகளில், நாலைந்து மயில்கள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒரு மயில் குதூகலமாகத் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது. மாமரங்களில் குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்தன. கிளிகளும், குயில்களும் கூவிக் கொண்டிருந்தன. தோட்டப் பரப்பில் இடையிடையே இருந்த சிறு சிறு வாவிகளிலும், பொய்கைகளிலும் வட்ட வட்ட இலைகளின் நடுவே வெண்மையும், சிவப்புமாகப் பனி புலராத பூக்கள் சிலிர்த்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தன. அந்த உல்லாச மனநிலையில், உடன் வந்து கொண்டிருந்த அழகன் பெருமாள் மாறனை மீண்டும் வம்புக்கு இழுத்து, அவன் வாயைக் கிளறிப் பார்க்க வேண்டும் போலிருந்தது இளையநம்பிக்கு. அவனுக்கும் தனக்கும் பிணக்கு ஏற்படக் காரணமாக இருந்த உரையாடலையே மீண்டும் இரு பொருள்பட, இரட்டுற மொழிதலாகக் கேட்டான்.
“மான்களையும், மயில்களையும், கிளிகளையும், குயில்களையும் இந்தச் சோலையில் நிறையக் காண முடிகிறது.”
“அவற்றைப் பேணி வளர்ப்பதில் எனக்கு மிகவும் பிரியம் உண்டு ஐயா! அவை யாருக்கும் துயரம் புரியாதவை. யாரையும் புண்படுத்தாதவை. எல்லாரையும் மகிழ்விப்பவை”
“நான் இங்குள்ள மான்களையும், மயில்களையும் பற்றி மட்டும்தான் குறிப்பிடுகிறேன். நிலவறை வழியின் மூன்று குழிப் பாதையாகச் சென்றால், சந்திக்க முடிந்த மான்களையும், மயில்களையும் அல்ல.”
“உரை நடையில் கூடத் திருக்கானப்பேரில் ஆகுபெயராகவும், அன்மொழித் தொகையாகவும் கடுநடையிற் பேசுவார்கள் போலிருக்கிறது. திருக்கானப்பேர்த் தமிழ் நடை மட்டுமின்றி மனிதர்களும் கூடச் சிறிது கடுமையாகத்தான் இருக்கிறார்கள்...”
“இந்த அனுமானம் எதிலிருந்து உனக்குக் கிடைத்தது அழகன் பெருமாள்?”
“எல்லா அனுமானங்களுக்குமே பிரமாணங்களைக் கேட்பதிலிருந்தே திருக்கானப்பேர் மனிதர்களின் மன இறுக்கம் தெரியவில்லையா?"
“நிதானமாக நினைத்துப் பார்த்தால், காரண காரியங்களின் நீங்கிய பிரமாணங்கள் இருக்க முடியாது என்பதை நீயும் புரிந்துகொள்ள வேண்டும்.”
“போதும் ஐயா! நமக்குள் வீண் வாக்குவாதம் வேண்டியதில்லை. நிலவறை வழியில் நடந்து வரும் போது, எந்த விஷயமாக உங்களுக்கும் எனக்கும் பிணக்கு நேர்ந்ததோ, அதில் என் நிலையில் எவ்வளவு நியாயமும், தெளிவும் உறுதியும் இருக்கிறது என்பதை நீங்களே ஒரு நாள் தெரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள்.”
இதைக் கேட்டு இளையநம்பி புன்முறுவல் பூத்தான். அழகன் பெருமாள் மாறன் தன் நிலையில் உறுதியோடும், பிடிவாதமாகவும் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அதோடு இன்னோர் உண்மையையும் அழகன் பெருமாளைப் பற்றி இளையநம்பி புதிதாக இப்போது அறிய முடிந்திருந்தது. அவன் உப வனக் காப்பாளனாக இருப்பது மதுராபதி வித்தகரின் வாக்குக்குக் கட்டுப்பட்டே அன்றி உண்மையில் அவன் ஓரளவு விஷய ஞானமுள்ளவனாகத் தோன்றினான். மான்கள், மயில்கள் என்ற வார்த்தைகளைப் பொருள் வேறுபட்ட அர்த்தத்தில் தான் பயன்படுத்திப் பேசிய மறுகணமே, ‘திருக்கானப்பேரில் பேச்சு வழக்கில் கூட ஆகுபெயரையும், அன்மொழித் தொகையையும் பயன்படுத்துவார்கள் போலிருக்கிறது’ என்று தயங்காமல் அவன் மறுமொழி கூறியது இளையநம்பிக்கு வியப்பூட்டியது.
மாற்றான் தொடுக்கும் அம்புகளுக்குப் பதிலாக அதை விட வேகமான அம்புகளை ஆயத்தமாக வைத்திருந்து, உடனே காலப் பிரமாணம் தவறாமல். தொடுக்கும் போர் வல்லாளர்களைப் போல் உரையாடலில் விடை தருபவர்களிடம் உடனே பதில் தரும் விஷய ஞானம் இருக்கத்தான் செய்யும். அழகன் பெருமாளிடம் அந்த விஷய ஞானத் தெளிவு இருந்தது. மதுராபதி வித்தகர் பயிற்சி அளித்து உருவாக்கிய ஒவ்வோர் ஆளும் ஒரு சீரான வினைத் திறமை உடையவர்களாக இருப்பதையும் அவன் கண்டான். திருமோகூர்ப் பெரிய காராளர், யானைப்பாகன் அந்துவன், இப்போது இந்த வையைக் கரை உப வனத்து அழகன் பெருமாள் எல்லாருமே அப்படி இருப்பதைப் பெரியவரின் கை வண்ணச் சிறப்பாகக் கருதி மதித்தான் அவன்.
உப வனத்தின் உள்ளே நடந்து சென்ற அவர்கள், வனத்தின் அடர்ந்த பகுதி ஒன்றில், பின்புறம் வையையில் இறங்குவதற்குப் படிக்கட்டு இருக்குமளவிற்கு நதியை ஒட்டி வாயிற்புறம் தெற்கு திசையைப் பார்த்தும், புறங்கடை வடக்கே வையை நதியை நோக்கியும் அமைந்திருந்த ஒரு மண்டபத்திற்கு முன்பாக வந்திருந்தனர். களப்பிரார்கள் போன்றே நடையுடை பாவனைகளும் தலை முடியும் வைத்திருந்த ஐவர் முரட்டு மல்லர்களைப் போன்ற தோற்றத்தோடு அங்கே இருந்தனர்.
அழகன் பெருமாள் இளையநம்பியை அந்த மண்டபத்தின் முன்புறத் தாழ்வாரத்தில் கொண்டு போய் நிறுத்திய போது, அங்கிருந்த ஐவருமே ஐந்து விதமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் செய்து கொண்டிருந்த காரியம், தத்தம் குணச்சித்திரத்தின் ஓர் அடையாளமாய் இருக்குமோ என்றுகூட இளையநம்பி எண்ணினான். பொதுவாக, எல்லாருமே ஒரு விநாடி புதிய மனிதர் ஒருவரோடு அழகன் பெருமாள் உள்ளே நுழைந்த போது, தாம் தாம் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து கவனம் கலைந்து, வந்தவர்கள் பக்கமாகத் திரும்பினர். நிமிர்ந்து பார்த்தனர் ஐவரும்.
அரும்பு மீசையும் மலர்ந்த கண்களும் சிவந்த இதழ்களுமாக ஓரளவு எடுப்பான முகத்துடனிருந்த ஒருவன் யாழைக் கையில் வைத்து, அறுந்திருந்த நரம்புகளைச் செம்மை செய்வதற்காகப் புதிய நரம்பு பின்னிக் கொண்டிருந்தான்.
சிவந்து உருண்ட கண்களும், முகத்திலும், தோள்களிலும் நன்றாகத் தெரியும் பல வெட்டுக்காயத் தழும்புகளும் உடைய ஒருவன், மின்னலாக ஒளிரும் புதிய வாளின் நுனியை அடித்துக் கூர்மைப் படுத்திக் கொண்டிருந்தான். கட்டை குட்டையான ஒருவன் செம்பஞ்சுக் குழம்பு குழைத்துக் கொண்டிருந்தான். வாழ்க்கையின் தளர்ச்சி தெரியும் சற்றே சோர்ந்த கண் பார்வையும், மூப்பும் உடைய ஒருவன் எதிரே நிறையப் பூக்களைக் குவித்து மாலை தொடுத்துக் கொண்டிருந்தான்.
திரண்டு கொழுத்த தோள்களையும், பாயும் வேங்கை போல் ஒளி உமிழும் கூர்மையான விழிகளையும், நீண்ட நாசியையும் உடைய ஒருவன் இழுத்து நிறுத்தி வில்லில் நாண் இணைத்துக் கட்டிக் கொண்டிருந்தான்.
கிளிகளும் பிற பறவைகளும் எழுப்பும் ஒலிகளோடு மண்டபத்தின் பின்புறம் வையை பாயும் ஒலியும், தொலைவிலே திருமருத முன் துறையின் ஆரவாரங்களும் அப்போது அங்கே கேட்டுக் கொண்டிருந்தன.
சந்தித்த சில கணங்கள் இரு தரப்பிலும் மெளனமே நீடித்தது. முதலில் அழகன் பெருமாள்தான் அந்த மெளனத்தைக் கலைத்து இளையநம்பியை அவர்களுக்கு இன்னாரென்று சொல்லி விளக்கினான்.
“பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆசி பெற்று இங்கே புறப்பட்டு வந்திருக்கிறார் இவர்! திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் செல்வப் பேரர் இளைய நம்பியை இப்போது நாம் நம்மிடையே காண்கிறோம்” என்று அழகன் பெருமாள் மாறன் கூறி விளக்கியதும் அங்கிருந்த ஐவரும் மெல்ல ஒவ்வொருவராக எழுந்து நின்று வணங்கினர். , அந்த ஐவரும் அழகன் பெருமாளின் வாயிலிருந்து ‘பெரியவர் மதுராபதி வித்தகர்’ என்ற சொற்கள் தொடங்கியதுமே, அமர்ந்திருந்த இடத்திலிருந்து மெல்ல எழத் தொடங்கி விட்டதை, இளைய நம்பி கவனித்திருந்தான். சிறிது நேரத்திலேயே இளையநம்பி அவர்களோடு நெருக்கமாக உறவாடத் தொடங்கி விட்டான். யாழுக்கு நரம்பு கட்டிக் கொண்டிருந்தவனுக்கும் உதவி செய்து அதை விரைவாகச் செம்மைப்படுத்தித் தானே இசைத்தும் காண்பித்தான். வில்லுக்கு நாண் கட்டிக் கொண்டிருந்தவனுடைய கையிலிருந்து அதை வாங்கி வலது காலின் ஒரு நுனியைக் கொடுத்து மேற்புறம் பலங்கொண்ட மட்டும் அழுத்தி வளைத்துக் கொண்டு, “கழற்சிங்கா! இப்போது கட்டு உன் நாணை” என்று அப்போதுதான் தெரிந்துகொண்டிருந்த அவன் பெயரை அன்போடு கூவியழைத்து அவனை நாண் ஏற்றி இருக்குமாறு செய்தான் இளையநம்பி. கழற்சிங்கன் கட்டி முடித்த பின்பும் நாண் தொய்வாகவே இருப்பதை இழுத்துப் பார்த்துவிட்டு, “நாண் இவ்வளவு தொய்வாக இருந்தால் உன் வில்லிலிருந்து அம்பே புறப்படாது” என்றான் இளையநம்பி.
“மெய்தான்! நண்பர்களுக்கு முன் என் வில்லிலிருந்து அம்புகள் புறப்படாது. அதன் நாண் ஏற்றப்படாமல் தளர்ந்தே இருக்கும். அதை நான் இறுக்கிக் கட்டி அம்பு மழை பொழிய இன்னும் வாய்ப்பே வரவில்லை. நீங்கள் வந்த பின்பு, இனியாவது உங்கள் தலைமையின் கீழ் எனக்கும் நண்பர்களுக்கும் அந்த வாய்ப்புக் கிட்ட வேண்டும்” என்று கழற்சிங்கன் மறுமொழி கூறியபோது நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தான் இளையநம்பி.