நித்திலவல்லி/முதல் பாகம்/14. கண்களே பேசும்

14. கண்களே பேசும்

மீண்டும் நிலவறை இருளில் புகுந்து அவர்கள் மூவரும் புறப்பட்டனர். மூன்று குழிகள் உள்ள இடம் வந்ததும், வழியில் திரும்பிக் கணிகையர் மாளிகை வாயில் உள்ள பக்கமாக அழைத்துச் சென்றான் அழகன் பெருமாள். கணிகை மாளிகை வழி அருகில் வந்ததும் பத்துப் பன்னிரண்டு படிகள் செங்குத்தாக மேல் ஏறிப்போக வேண்டியிருந்தது! முதலில் அழகன்பெருமாள் தான் படியேறினான். தொடர்ந்து குறளனும் பின் இளையநம்பியும் சென்றனர். அழகன் பெருமாளிடம் பலவற்றைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்க நினைத்தும் அந்தக் கணிகை மாளிகை பற்றித் தான் எது கேட்டாலும் அழகன் பெருமாள் அதை ஏளனமாக எடுத்துக் கொண்டு வருந்தவும், உள்ளூரச் சினமடையவும் நேருவதை உணர்ந்து மெளனமாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்தான் இளையநம்பி.

படியேறியதும் அந்த இடத்தில் எங்கிருந்தோ கம்மென்று பொதியமலைச் சந்தனம் மணந்தது. அழகன் பெருமாள் மாளிகைக்குள் செல்லும் வழியைத் திறந்த பின்பே சந்தன நறுமணத்தின் காரணம் புரிந்தது. ஏறிப் பார்த்த போது, மிகப் பெரிய வட்டமான சந்தனக் கல்லை இட்டு அந்த வழியை அடைத்திருந்தார்கள். மாளிகையின் சந்தனம் அரைக்கும் இடத்திற்கு அவர்கள் வந்திருந்தார்கள். வழி மறையும் படி கல்லை மறுபடி பொருத்திய பின், மேலே நின்று பார்த்த போது அந்த வட்ட வடிவச் சந்தனக் கல்லுக்குக் கீழே ஒர் இரகசிய வழி இருக்க முடியும் என்று நம்பவே முடியாமலிருந்தது. கல்லின் மேல் அரைத்த சந்தனமும் சிறிது இருந்தது. பக்கத்தில் ஒரு கலத்தில் நீரும், சந்தனக் கட்டைகளும் கிடந்தன. அங்கு சந்தனம் அரைப்பவர் அமர்ந்து அரைத்துக் கொண்டிருக்கும் போது, புதியவர்கள் வந்து பார்த்தால், அதற்குக் கீழே ஒரு வழி இருக்குமோ என்ற நினைவே எழ முடியாதபடி அதைச் செய்திருந்தார்கள். சுற்றிலும் குடலைகளில் பூக்களும் இருந்தன.

சந்தனம் அரைக்கும் பகுதியிலிருந்து, அவர்கள் மாளிகையின் அலங்காரப் பகுதிகளைக் கடந்து, நடுக்கூடத்திற்கு வந்த போது அங்கே நாலைந்து அழகிய பெண்களுக்கு நடுவே இளமையும் அழகும் ஒன்றை ஒன்று வெல்லும் பேரழகியாக வீற்றிருந்த ஒருத்தி, கை வளைகளும் காற்சிலம்புகளும் ஒலிக்க அவர்களை நோக்கி எழுந்து வந்தாள். அந்தப் பெண்களுக்கு நடுவே அவள் அமர்ந்திருந்த காட்சி, விண்மீன்களுக்கு நடுவே முழுமதி கொலு இருந்தது போல் கம்பீரமாயிருந்தது. செழுமையான உடற்கட்டும், பெண்களுக்கு அழகான அளவான உயரமும் முனிவர்களைக் கூட வசப்படுத்தி மயக்கி விட முடிந்த கண் பார்வையும், சிரிப்புமாக, ஒவ்வோர் அடி பெயர்த்து வைத்து நடக்கும் போதும் ‘இந்த மண்ணில் கால் ஊன்றி நிற்கும் இணையற்ற வசீகரம் நானே’ என்று நிரூபிப்பது போன்ற நடையுடன் அவர்களை எதிர்கொண்டாள் அவள். அந்த அழகு விரிக்கும் மோகவலையில் சாய்ந்து விடாமல் அவன் தன் மனத்தை அரிதின் முயன்று அடக்கினான்.

“இரத்தினமாலை! இவர் திருக்கானப்பேரிலிருந்து வருகிற வழியில் மோகூரில் நம் பெரியவரைச் சந்தித்து விட்டு அவர் ஆசியோடு இங்கு வந்திருக்கிறார்"- என்று அழகன் பெருமாள் கூறியதும்,

“வரவேண்டும்! வரவேண்டும்"- என அவள் வரவேற்ற அந்தக் குரலை அது தேனிற் செய்து படைக்கப் பட்டதோ என ஐயுற்று வியந்தான் இளையநம்பி.

அழகிய விழிகள் பார்க்கும் என்று தான் இதுவரை அவன் அறிந்திருந்தான். ஆனால் இந்த விழிகளோ நயமாகப் பேசவும் செய்தன. ஆண் பிள்ளைகளைத் தாபத்தால் கொல்ல இந்த வனப்பு வாய்ந்த விழிகளே போதுமானவை என்று தோன்றியது அவனுக்கு. அழகன் பெருமாள் இங்கே எதற்காகத் தன்னை அழைத்துவந்தான் என்று இளைய நம்பிக்கு அவன் மேல் ஆத்திரமே மூண்டது. சில கணங்கள் எதிரே வந்து நிற்கும் அவளிடம் பேச வார்த்தைகள் இன்றி வியந்து நின்றான் அவன். அதே வேளையில் அவளுடைய கண்களின் பார்வை அவனுடைய திரண்டு செழித்த தோள்களிலும் பரந்த மார்பிலும் இலயித்திருந்தது. மீண்டும் அவளே பேசினாள்.

“தாங்கள் இந்த மாளிகையை அந்நியமாக நினைக்கக் கூடாது. பெரியவருடைய குற்றேவலுக்கு என்றும் கட்டுப் பட்டவர்கள் நாங்கள்."

அவளுக்கு என்ன மறுமொழி கூறுவது என்று இப்போதும் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அழகன் பெருமாள் முந்திக் கொண்டு அவளுக்கு மறுமொழி கூறினான்.

“அப்படி ஒரு குற்றேவ்லோடுதான் இப்போதும் வந்திருக்கிறேன் இரத்தினமாலை! இதோ நம் குறளன் செம்பஞ்சுக் குழம்புகொண்டு வந்திருக்கிறான், இனி நீ தான் ஆயத்தமாக வேண்டும்."