நித்திலவல்லி/முதல் பாகம்/25. பாதங்களில் வந்த பதில்

25. பாதங்களில் வந்த பதில்

கணிகை இரத்தினமாலை மறுமொழியோடு திரும்பியிருப்பதாகக் கூறினாலும் அவளுடைய உள்ளங்கைகள் செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பெறாமல் பளிங்குபோல் வெறுமையாய் வெண்மையாயிருப்பதைக் கண்டு இளைய நம்பியும் அழகன் பெருமாளும் மருண்டனர்.

அவர்கள் இருவரையும் சிறிது நேரம் அப்படித் திகைக்க வைப்பதையே விரும்பியவள்போல் முத்துப் பல்லக்கிலிருந்து இறங்கி வந்து எதிரே நின்று இரத்தினமாலை சிரித்துக் கொண்டிருந்தாள். பின்தொடர்ந்து வந்த பணிப் பெண்ணும் அவளருகே நின்று கொண்டிருந்தாள். அழகன்பெருமாள் அவளைக் கேட்டான்:

“இரத்தினமாலை! நேற்று நீ இங்கிருந்து புறப்பட்ட போது இருந்ததைவிட இப்போது நம்மைச் சுற்றிலும் சோதனைகள் அதிகமாகி இருக்கின்றன. நீ திரும்பி வந்து தெரிவிக்கும் மறுமொழிகளாவது அந்தச் சோதனைகளை அகற்றும் என்று எதிர்பார்த்திருந்தோம். நீயும் இப்படி எங்களைச் சோதனை செய்தால் என்ன செய்வது?" “அங்கே கோட்டைக்குள்ளும் அரண்மனையிலும் கூடச் சோதனைகள் அதிகமாக இருக்கின்றன. நான் நேற்று இரவிலேயே திரும்ப முடியாமற் போனதற்குக் காரணமே அரண்மனைச் சூழ்நிலைதான். நேற்றுப் பகலில் நான் அரண்மனைக்குப் புறப்பட்ட போதே நகரில் பரபரப்பான நிலைமை உருவாகி விட்டது. என்ன நேருமோ என்ற பயத்தின் காரணமாகக் களப்பிரர்கள் கோட்டைக் கதவுகளை உடனே அடைக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள். அரண்மனைக்குள் போகிறவர்கள், வருகிறவர்கள் கடுமையான கண்காணிப்பிற்கு ஆளாகிக் கொண்டிருந்த போதுதான் அங்கே நானும் போய்ச் சேர்ந்திருந்தேன்.”

“அப்புறம்...? என்ன நடந்தது?”

“என்ன நடக்கும்? இந்த இரத்தினமாலை சென்ற பின்பும், திறக்காத அரண்மனைக் கதவுகள் ஏது? இந்த விழிகளைச் சுழற்றியும், இந்தப் புன்சிரிப்பைக் காண்பித்தும் நான் எங்கும் எதற்கும் தோற்க நேர்ந்ததே இல்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே?”

“ஆனால், இப்போது தோற்றுவிட்டு வந்திருக்கிறாய் என்றல்லவா தோன்றுகிறது?”

“அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள்! நான் இப்போது முழு வெற்றியில் காலூன்றி நிற்கிறேன்” என்று கூறியபடியே அழகியதொரு கூத்துக்கு அபிநயம் செய்வது போல், அவள் தனது வலது பாதத்தை மேலே தூக்கினாள், என்ன ஆச்சரியம்? கைகளில் இல்லாததை அவள் உள்ளங் காலில் காண முடிந்தது அப்போது! செந்தாமரைப் பூவின் அகஇதழ் போல் வெண் சிவப்பு நிறத்தில் விளங்கிய அந்த உள்ளங்காலில் அவர்களுக்கு வேண்டிய விடை இருந்தது. சித்திரம் போல் கரந்தெழுத்துக்கள் அங்கே இருந்தன. “மூன்று ஆண் மக்களுக்கு முன் வெட்கமில்லாமல் இப்படிக் காலைத் தூக்குகிறாளே இவள்"- என்று சிறிதே சினம் அடையத் தொடங்கியிருந்த இளையநம்பியின் கண்களும் கூட இப்போது வியப்பினாலும் மகிழ்ச்சியினாலும் மலர்ந்தன. முதலில் தூக்கிய வலது பாதத்தை ஊன்றிக் கொண்டு, இடது பாதத்தைத் தூக்கி அதிலிருந்த செம்பஞ்சுக் குழம்பு எழுத்துக்களையும் அவர்களுக்குக் காண்பித்தாள் அவள். ‘நான் இப்போது முழு வெற்றியில் கால் ஊன்றி நிற்கிறேன்’ என்று இரத்தினமாலை புன்னகையோடு கூறிய சொற்களின் முழுப்பொருளும் இப்போது அவர்களுக்குத் தெளிவாக விளங்கியது.

இளையநம்பி நன்றி தொனிக்கும் குரலில் அவளை நோக்கிக் கூறினான்: “கைகளில் சுமந்து சென்ற கேள்விகளுக்குக் கால்களில் விடைகள் கிடைத்திருக்கின்றன.”

“ஆம்! இந்த மாறுதலுக்குக் காரணம் இருக்கிறது. நேற்றிரவு நான் அரண்மனையில் தங்கி, என்னுடைய கைகளில் இங்கிருந்து சுமந்து சென்ற எழுத்துக்களைக் காட்ட வேண்டியவர்களிடம் காட்டி அவர்கள் அறிந்து கொண்டதும், மறுமொழியை எழுதுவதற்காகக் கைகளைக் கழுவிவிட்டு மீண்டும் நீட்டினேன். அப்போது அங்கே எதிர்பாராத விதமாக அந்தப்புரத்தைச் சேர்ந்த களப்பிர நங்கை ஒருத்தி வந்து சேர்ந்து விட்டாள். வந்ததோடு மட்டுமல்லாமல் அவள் என்னருகே நெருங்கி-

“நள்ளிரவுக்கு மேல் ஏற்கெனவே அலங்கரித்துக் கொண்டிருந்த அலங்காரங்களை அழித்து விட்டுப் புதிதாகச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிக் கொள்ள என்ன அவசரம் இரத்தினமாலை?" என்று வினாவி விட்டாள். வினாவிய பின்பு, அந்தக் களப்பிரப் பெண் உடனே எங்களை விட்டு அகலவில்லை. ஏதோ எங்களைச் சந்தேகப்படுகிறவள் போல், நெடுநேரம் எங்களோடு தொடர்பாகவும், தொடர்பின்றியும் எதை எதையோ உரையாடிக் கொண்டிருந்தாள். அந்த உரையாடலின் நடுவே, ‘அடி இரத்தினமாலை! இந்த அரண்மனையில் உன்னால் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட தமிழ்ப் பணிப் பெண்கள் அனைவரும் உன் மேல் நிறைய விசுவாசம் வைத்திருக்கிறார்கள். உனக்கு அலங்கரிக்கும் போதும் உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசும் போதும் இவர்கள் அளவற்ற சிரத்தையோடு தோன்றுகிறார்கள். உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு எழுதும் போது மட்டும் உன் மேல் தங்களுக்குள்ள பக்தி விசுவாசத்தையே இவர்கள் எழுத்தாக எழுதுகிறார்களோ என்றுகூட நான் நினைப்பதுண்டு’ என்பதாகக் கண்களைச் சுழற்றி என்னைப் பார்த்தபடியே சொன்னாள் அந்தக் களப்பிரப் பெண். நேற்றிரவு மட்டும் அவள் என்னிடம் பழகிய விதம், பேசிய சொற்கள் எல்லாமே சந்தேகப்படத் தக்கதாய் இருப்பது போல் தோன்றியது; அவள் என்னை ஆழம் பார்க்கிறாளோ என்று தயக்கத்தோடு நினைத்துச் சிந்தித்தேன் நான்.”

“அப்படியும் சிந்திக்க வேண்டியதுதான் இரத்தினமாலை! எதிரிகளைப் பற்றி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கணத்திலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்” என்றான் அழகன்பெருமாள். இரத்தினமாலை, மேலும் தொடர்ந்து கூறலானாள்:-

“அந்தக் களப்பிரப் பெண்ணைப் பற்றிச் சந்தேகம் வந்த பின், அவள் கவனத்தை மாற்றுவதற்காக நான் என்ன செய்தேன் தெரியுமா? அவள் கண்காணவே என் கைகளில் எழுதியிருந்த அலங்காரங்களை அழித்தேன். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அந்தக் களப்பிரப் பெண் போய்ச் சேர்ந்தாள். அவள் போய்ச் சேர்ந்த பின் நான் அரண்மனையில் தங்கியிருந்த பகுதியின் கதவுகளை நன்றாக உட்புறம் தாழிட்டுக் கொண்டு, ஊரடங்கிப் போன அந்த இரவு வேளையில் என் முழு நம்பிக்கைக்குரியவர்களும் என்னாலேயே அந்த அரண்மனையில் தொண்டூழியும் புரிவதற்குச் சேர்க்கப்பட்டவர்களும் ஆகிய பணிப் பெண்களைக் கொண்டு என் உள்ளங்கால்களில் எழுதச் செய்தேன். உள்ளங் கால்கள் ஈரம் புலர்கிறவரை காற்றாட நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்படி உட்கார்ந்து ஆடாமல் அசையாமல் இந்த எழுத்துக்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். உறக்கத்தை இழந்ததனாலும் நீண்ட நேரம் கால்களை ஒரே பக்கமாக நீட்டி அமர்ந்திருந்ததனாலும் கண்கள் எரிகின்றன. முழங்கால் எலும்புப் பூட்டுகளில் வலி தாங்க முடியவில்லை.”

“எங்களுக்கு உதவுவதற்காக உன் நளினப் பொன்னுடல் மிகவும் நலிவடைய நேர்ந்திருக்கிறது பெண்ணே! இந்த உதவிக்காக நானும், அழகன் பெருமாளும், இன்னும் அழியாமல் எஞ்சியிருக்கும் பாண்டியர் மரபும் உனக்கு எவ்வளவோ நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் இரத்தினமாலை!” இளையநம்பி குறுக்கிட்டுப் பேசியபோது, இந்தப் பேச்சில் ஒன்றிற்காக மகிழ்ச்சியும், வேறொன்றிற்காகச் சினமும் கொள்ள வேண்டும் போலிருந்தது இரத்தின மாலைக்கு. ‘நளினப் பொன்னுடல்’ என்று அந்தக் கம்பீரமான கட்டிளங்காளையின் வார்த்தைகளால் தன் அழகு புகழப்பட்டிருப்பதை அவள் எண்ணிப் பூரித்தாள். அதே சமயத்தில் பாண்டியர் மரபுக்கு ஆதரவான இந்த இயக்கத்தில், நினைவு தெரிந்த நாளிலிருந்து பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆசியோடு ஈடுபட்டிருக்கும் தன்னை அந்நியராக வந்த யாரோ ஒரு புதியவருக்கு நன்றி சொல்லி ஒதுக்குவது போல் அவன் ஒதுக்கியது அவளுக்குச் சினம் ஊட்டியது. அந்த நன்றியின் மூலம் இளையநம்பி தன்னை அவமானப் படுத்திவிட்டது போல் உணர்ந்தாள் அவள். அழகிய பொன் நிறக் கைகளும், பரந்த மார்பும் கட்டிளமையும், ஆண்மையின் காம்பீர்யம் நிறைந்த முகமுமாக எதிரே நின்று கொண்டிருந்த இளையநம்பியைக் கோபித்துக் கொள்ள அவள் பெண்மை தயங்கினாலும் தன்மானம் வென்றது. இவள் அவனை நோக்கிக் கேட்டாள்:

“நன்றியை எதிர்பாராமல் செயல்படும் கடமைகளை நன்றி கூறி விடுவதன் மூலமாகவும் கூட அவமானப்படுத்த முடியும் என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள் ஐயா!”

“நீ இப்படிச் சொல்லக் கூடாது பெண்ணே! ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று நம் தமிழ்மறையே கூறுகிறது.”

இளையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு என்று அதே தமிழ்மறை வேறோர் இடத்தில் கூறியிருப்பது தங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரே காரியத்தில் ஈடுபட்டுப் பழகுகிறவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் புனைவதும் புகழ்வதும் சிறுமையாகிவிடும் அல்லவா?”

இரத்தினமாலை இப்படி வினவியதும் இளையநம்பி அதிர்ச்சி அடைந்தான். இதுவரை அவளுடைய மயக்க மூட்டும் உடலழகை மட்டும் கண்டு கொண்டிருந்தவனுக்கு அதையெல்லாம்விட அழகாகவும் நாகரிகமாகவும் அவளுக்கு ஓர் இதயம் இருப்பது இப்போது புரிந்தது. பழகுகிற இருவருக்கு நடுவே கடைப்பிடிக்க வேண்டிய மிக உயர்ந்த நாகரிக நிலையைச் சுட்டிக் காட்டும் ஒரு குறளைக் கூறியதன் மூலம் தன் உள்ளத்தின் பேரழகையும் இப்போது அவனுக்குக்காண்பித்து விட்டாள் இரத்தினமாலை. அவன் இந்த மறுமொழியில் அயர்ந்து போனான். குறளனும், அழகன் பெருமாளும் அவள் பாதங்கள் மூலமாக வந்திருந்த பதிலை எழுத்துக் கூட்டிக் கண்டு பிடித்துத் தன்னிடம் சொல்வதற்கு முன்வந்த பின்பு தான் இளையநம்பி அவளைப் பற்றிய வியப்புக்களில் இருந்து விட்டுபட்டுத் தன் நினைவடைந்து இந்த உலகிற்கு மீண்டுவர முடிந்தது.