நித்திலவல்லி/முதல் பாகம்/31. கனவும் நினைவும்



31. கனவும் நினைவும்

இரத்தினமாலையின் அந்த அன்பையும், விநயத்தையும் உடனே விரைந்து எதிர் கொண்டு உபசரிக்கும் பொருத்தமான பதங்களும், உரையாடலும் கிடைக்காத காரணத்தால் உள்ளம் மலர்வதன் உவகையை முகத்திற் காட்டும் மிகச் சிறந்த மொழியாகிய முறுவலை அவளுக்குப் பதிலாக அளித்து விடை கொடுத்தான் இளையநம்பி. மனத்தின் களிப்பை வெளியிடும் ஆயிரம் பதங்கள் மொழியில் இருக்கலாம். ஆனால் அவை ஓர் அழகிய முகத்தின் முறுவலை இன்னோர் அழகிய முகத்தின் முறுவலால் சந்திக்கும் சுகத்துக்கு ஈடாவதில்லை என்று தோன்றியது. மனம் நெகிழ்ந்து கனிந்து பிறக்கும் ஒரு சிரிப்பை அதே நெகிழ்ச்சியும், கனிவும் உள்ள இன்னொரு சிரிப்பால் தான் உபசரிக்க முடியும் என்பதை அப்போது இளையநம்பி மிக நன்றாக உணர்ந்திருந்தான். தேர்ந்த கவியின் சொற்கள் ஒவ்வொருமுறை நினைக்கும் போதும் ஆராயும் போதும் ஒரு புது நயத்தையும், பொருளையும் தருவது போல் இரத்தின மாலையின் புன்னகை அவன் சிந்தனையில் புதுப்புது அணி நயங்களை அளித்துக்கொண்டிருந்தது. அவளை இருந்த வளமுடையார் கோவிலுக்கு[1] வழியனுப்பி விட்டு இளையநம்பியும், அழகன் பெருமாளும், குறளனும் பணிப் பெண்களும் மாளிகைக்குள்ளே திரும்பினர். பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு உடனே அந்த மாளிகையின் கதவுகள் உட்புறமாகத் தாழிட்டு அடைக்கப்பட்டன. உள்ளே திரும்பியதும் உடனே இளையநம்பியும் அழகன் பெருமாளும் தேனூர் மாந்திரீகன் படுத்த படுக்கையாகக் கிடந்த கட்டிலருகே சென்று அமர்ந்தனர். குறளன் நிலவறை முனையைக் காவல் புரிவதற்காகச் சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றான். முதல் நாளிரவு உறக்கம் இல்லாமற் கழித்திருந்த காரணத்தால் இளைய நம்பிக்கு மிகவும் களைப்பாக இருந்தது. மாந்திரீகன் செங்கணானோடு ஆறுதலாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் அங்கேயே அருகிலிருந்த மஞ்சம் ஒன்றில் போய்ச் சாய்ந்தான் இளையநம்பி. அவன் உடல் மிகவும் அயர்ந்து போயிருந்தது. படுத்த சில கணங்களிலேயே அவன் விழிகளும் நினைவும் சோர்ந்து உறங்கி விட்டான். அழகன் பெருமாளும், தேனூர் மாந்திரீகனும் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த சொற்கள் அவன் செவிகளில் மயங்கி ஒலித்தன. தன்னை மறந்து உறக்கத்தில் இளைய நம்பி ஒரு கனவு கண்டான்.

ஒளிவீசும் முத்துக்களாலும், மணிகளாலும் அலங்கரிக்கப் பட்டதும், மகாமேரு மலையைப் போல பொன்மயமாக உயர்ந்ததுமான ஒரு பெரிய மாளிகையின் படிகளில் ஏறி உள்ளே நுழைவதற்காக வாயிலருகே நின்றுகொண்டிருந்தான் இளையநம்பி. ஏதோ ஞாபகத்தில் வாயிற் கதவுகளைக் கடந்து அந்த மாளிகைக்குள் நுழையுமுன் அவன் திரும்பிக் கீழ் முகமாகத் தான் ஏறிவந்த படிகளைப் பார்க்கிறான். பார்த்ததும் அவன் கண்களும் கால்களும் தயங்கின. கீழே கடைசிப் படியில் கணிகை இரத்தினமாலை தலைவிரி கோலமாக நிற்கிறாள். காடாய் அவிழ்ந்து தொங்கும் கருங்கூந்தலின் நடுவே அவளுடைய எழில்முகம் மேகங்களின் நடுவே நிலவு பூத்தாற்போல் வனப்பு மிகுந்து காட்சியளித்தது.

அவன் பார்த்தபின்பும் அவள் அந்த முதற்படியிலேயே தயங்கி நின்று கொண்டிருந்தாள். மைதீட்டிய அவள் விழிகளில் ஏக்கம் உலவிக் கொண்டிருப்பதை அவன் காண முடிந்தது. அவளுடைய சிறிய அழகிய இதழ்கள் அவனிடம் ஏதோ பேசுவதற்குத் துடித்துக் கொண்டிருந்தன. கோவைக் கனிகளைப் போன்ற அந்தச் செவ்விதழ்கள் அவள் முகத்தில் துடிப்பது, மிக மிகத் தனியானதொரு கவர்ச்சியை உடையதாயிருந்தது. அப்படியே கீழே இறங்கி ஓடிப் போய் அந்த முகத்தைத் தன் முகத்தோடு அணைத்துக் கொண்டு அதன் மென்மையையும், வெம்மையையும் அளந்தறிய வேண்டும் போல அவ்வளவு ஆவலிருந்தும், தான் ஏறி வந்து விட்ட படிகளின் உயரத்திலிருந்து மீண்டும் திரும்பிக் கீழே இறங்கிப் போக முடியாமல், ஏதோ தன்னைத் தடுப்பதையும் அவன் உணர்ந்தான். அப்படித் தன்னைத் தடுப்பது எது என்பதையும் அவனால் உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வேளையில் கீழேயிருந்து சோகம் கன்றிய குரலில் கதறுவது போல் உரத்த குரலில் அவள் அவனைக் கேட்கிறாள்:

“ஐயா! நான் இன்னும் கீழே தரையில்தான் இருக்கிறேன், நீங்களோ முத்துகளும் நவரத்தினங்களும் நிறைந்திருக்கிற எட்ட முடியாத உயரத்துக்குச் சென்று விட்டீர்கள்...”

“இல்லை! இல்லை! என்னுடைய விலை மதிப்பற்ற முத்து இன்னும் தரையில்தான் இருக்கிறது. நான் ஒளி நிறைந்ததாகக் கருதும் இரத்தினம் இன்னும் பூமியில்தான் இருக்கிறது பெண்ணே"-- என்று உரத்த குரலில் தன் உயரத்திலிருந்து அவளுக்குக் கேட்கும்படிக் கதறினான் அவன். அந்தக் குரல் அவளுக்குக் கேட்டதோ இல்லையோ?

இவ்வளவில் யாரோ அவன் தோளைத் தீண்டி எழுப்பவே அவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். உடல் முழுவதும் குப்பென்று வேர்த்திருந்தது.

“வாய் அரற்றுகிற அளவு ஆழ்ந்த உறக்கம் போலிருக்கிறதே!” என்று வினாவியபடியே அழகன் பெருமாள், அவனது மஞ்சத்தின் அருகில் நின்று கொண்டிருந்தான். எதிர்ப்புறம் கட்டிலில் படுத்தபடியே முகத்தைத் திருப்பி இளையநம்பியை நோக்கிப் புன்னகை பூத்தான், தேனூர் மாந்திரீகன். ‘அவர்கள் இருவரும் கேட்க நேரும்படி கனவில் அரற்றி விட்டோமே’ என்பதை எண்ணி நாணினான். அவன் மீண்டும் விழித்த நிலையில் நினைவு கூட்ட முயன்ற போது, அந்தக் கனவும் காட்சிகளும், வார்த்தைகளும் தொடர்பின்றி இருந்தன.

இளையநம்பி உறக்கத்தில் வாய் அரற்றியதும், அழகன் பெருமாள் அவனை எழுப்பி விட்டாலும், மஞ்சத்திலிருந்து உடனே எழவில்லை அவன். கண்களை மூடியபடியே உடற் சோர்வு நீங்கி மஞ்சத்திற் சாய்ந்திருந்தான் அவன். இதைக் கண்டு அவன் மீண்டும் உறங்கிவிட்டதாக எண்ணிக் கொண்ட அழகன் பெருமாள்,

“செங்கணான்! யார் எழுப்பினாலும் எழுந்திருக்க முடியாதபடி திருக்கானப்பேர் நம்பிக்கு ஆழ்ந்த உறக்கம் போலிருக்கிறது”, என்று கூறியபடியே தேனூர் மாந்திரீகனிடம் மீண்டும் உரையாடப் போய் அமர்ந்தான். இதைக் கேட்டு மஞ்சத்தில் விழிகளை மூடியவாறு படுத்திருந்த இளைய நம்பி உள்ளூற நகைத்துக் கொண்டான். தான் உறங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதைக் கேட்க ஆவலாக இருந்தது இளையநம்பிக்கு. உறங்குகிற பாவனையிலேயே தொடர்ந்து கண்களை மூடியபடி மஞ்சத்தில் கிடந்தான் அவன்.

அங்கே அழகன்பெருமாளுக்கும், செங்கணானுக்கும் உரையாடல் தொடங்கியது. முதலில் அழகன்பெருமாள்தான் செங்கணானிடம் வினாவினான்:-

“செங்கணான்! காரியம் காயா, பழமா?”

“பழமாகும் என்றுதான் நினைத்தோம். ஆனால் காலம் மாறிப் போய்ச் சூழ்நிலையும் ஒத்து வராததால் அது கனியவில்லை! வெறும் காய்தான்.” “அப்படியானால் யாத்திரீகர்கள் என்ன ஆனார்கள்?”

“சூழ்நிலையை உணர்ந்து, பெரும்பாலோர் கோட்டைக் கதவுகள் மூடப்படுவதற்கு முன்பாகவே, அகநகரிலிருந்து வெளியேறி விட்டார்கள்...”

“நீ ஏன் தேனூருக்குத் திரும்பினாய்? உனக்குத் தேனூரில் என்ன வேலை இப்போது?”

“கோட்டையை விட்டு வெளியேறிய நம்மவர்களைப் பிரித்துத் தனித் தனியே செல்ல விடும் பொறுப்பு எனக்கு இருந்தது. திட்டமிட்டபடி அகநகரில் எதுவும் செய்ய முடியவில்லை என்றாகிய பின்பும், வெளியேறிவிட்ட யாத்திரீகர்களுக்குக் குறிப்பாக மேலே என்ன என்ன செய்யவேண்டுமென்று நெறி கூறவும், செயல் காட்டவும் வேண்டாமா?”

“திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்பது மோகூருக்குத் தெரியுமா செங்கணான்?”

“ஒற்றர்கள் இருவர் அகப்பட்டுக் கொண்டதனால், கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டதையும், யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்டதையும் அந்துவன் மோகூருக்கு கூறியனுப்பியிருக்க வேண்டும். ‘நினைத்தபடி எதுவும் நடக்க முடியாது’ என்பதைப் பெரியவரும், காராளரும் இதிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்தானே?”

இந்தச் சமயத்தில் மஞ்சத்தில் படுத்திருந்த இளைய நம்பிக்கு அடக்கிக்கொள்ள இயலாத பெருந்தும்மல் ஒன்று வந்தது. அவன் தும்மினான். உடனே அவர்களுடைய உரையாடல் நின்றது. தொடர்ந்து சில கணங்கள் அவர்களுடைய மெளனம் நீடிக்கவே, இனி மேல் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தவனாக இளையநம்பி மஞ்சத்தில் எழுந்து அமர்ந்தான்.

அவன் மனம் அப்போது மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்து போயிருந்தது. நினைவிழந்து உறங்கிய உறக்கத்தின் போது கண்ட ஒரு கனவையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. உறக்கம் கலைந்தபின் தன் நினைவோடு செவி மடுத்த ஓர் உரையாடலையும் அவனால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘யாத்திரீகர்கள் பத்திரமாக வெளியேறித் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் பிரிந்து சென்றார்களா இல்லையா என்பதில் தேனூர் மாந்திரீகனுக்கும் இந்த அழகன் பெருமாளுக்கும் ஏன் இவ்வளவு கவலை? இவர்கள் இந்த அவிட்ட நாள் திருவிழாவின் போது நகருக்குள் என்ன காரியத்தைச் சாதிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்? அதற்கு யாத்திரீகர்கள் எப்படி உதவி செய்ய இருந்தார்கள்?’ என்றெல்லாம் அவன் மனத்தில் நினைவுகள் ஐயமாக எழுந்தன.

“நல்ல உறக்கம் போலிருக்கிறது! களைப்பு மிகுதியினால் முன்னிரவிலேயே உறங்கி எழுந்து விட்டீர்கள். உறக்கத்தில் ஏதோ முத்து, இரத்தினம் என்றெல்லாம் அரற்றினீர்கள்? வந்து எழுப்பினேன். மீண்டும் உறங்கி விட்டீர்கள். இரத்தினமாலை இருந்த வளத்திலிருந்து திரும்பும் நேரம்கூட ஆயிற்று” என்றான் அழகன் பெருமாள். இந்தச் சொற்களுக்கு மறுமொழி கூறாமல் மெளனமாக அவனைப் பார்த்துச் சிரித்தான் இளையநம்பி. தன்னுடைய வார்த்தைகளுக்கு வார்த்தைகளால் எந்த மறுமொழியும் கூறாமல் ஒரு மெளனமான புன்னகையை மட்டும் புரிந்த இளையநம்பியைக் கண்டு தங்கள் உணர்ச்சிகளுக்கு நடுவே ஏதோ ஒரு மெல்லிய பிணக்கு இடறுவதை அழகன் பெருமாளும் புரிந்து கொண்டான்.

  1. இப்போதுள்ள கூடலழகர் கோவில் இந்தக்கதை நிகழும் காலத்து மதுரையில் இருந்த வளமுடையார் கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. ஆதாரம் :- சிலம்பு அரும்பதவுரை.