நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/9. புது மழை
தீர்த்த யாத்திரை முடித்துத் திரும்பியதுமே, மகளையும் மனைவியையும் திருமோகூரில் கொண்டு வந்து விட்ட பின், உடனே பெரியவரைச் சந்திப்பதற்காகத் திருமால் குன்றத்திற்கு விரைந்தார் பெரிய காராளர். அப்படிச் சென்றவர் அதன் பின் பல நாட்கள் ஊர் திரும்பவில்லை. பெரியவருடனேயே, திருமால் குன்றத்தில் தங்கி விட்டார் அவர். பெரியவருடன் சேர்ந்து செய்யப் பல பணிகள் அவருக்கு இருந்தன.
நீண்ட யாத்திரையை முள்ளின் மேற் கழிப்பது போல், கழித்துவிட்டுத் திரும்பியிருந்த செல்வப்பூங்கோதைக்கு இளைய நம்பியைப் பற்றி யாரிடமுமே பேச முடியாமல் ஒரே தவிப்பாயிருந்தது. கொல்லன் ஊரில் இல்லை என்று தெரிந்தது. ஊரிலும், சுற்றுப்புறங்களிலும் புதுமை தெரிந்தது. ஏதோ மிகப் பெரிய மாறுதல்களை எதிர்பார்க்கும் அமைதி தென்பட்டது. எங்கும் பூத பயங்கரப் படைவீரர்களே காணப் படவில்லை. மக்கள் அங்கங்கே கூடுமிடங்களில் எல்லாம், வெளிப்படையாகவே களப்பிரர்களை எதிர்த்தும், தூற்றியும் பாண்டியர்களை ஆதரித்தும், வாழ்த்தியும் நிர்ப்பயமாக உரையாடத் தொடங்கினர். வடக்கேயும், தென்மேற்கேயும் போர்கள் நடப்பதால், உள்நாட்டில் களப்பிரர்கள், இருதலைக் கொள்ளி எறும்பு போல் இடையே அகப்பட்டு விட்ட நிலையில் நலிந்திருப்பதை, எங்கும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டார்கள். நாட்டு நிலைமை தெளிவாகப் புரியும்படி இருந்தது.
இந்நிலையில் ஒரு பிற்பகலில் வெளியே மழை பெய்து கொண்டிருந்த போது தாயும் செல்வப் பூங்கோதையும் மாளிகைக் கூடத்தில் அம்மானை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அம்மானை ஆடும் வேளையில் மகளின் மனப் போக்கை அறிந்த தாய், விளையாட்டின் போது பாடும் பாடலில் தானே சுயமாக இரண்டு மூன்று அடிகளை இட்டுக்கட்டி இயற்றி,
‘கலிகொண்ட களப்பிரனைக் கொன்ற புகழ்
மலிகொண்டு திருக்கானம் மகிழ்நம்பி
வலிகொண்டு வென்றானென் றம்மானை’
என்பது போலப் பாடிவிட்டு மகள் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். தாய் எண்ணியது போலவே, அந்தப் பாடல் பகுதி மகளின் கவனத்தைக் கவர்ந்தது. அவள் உடனே அம்மானை ஆடுவதை நிறுத்தி விட்டு, "இப்போது நீ பாடியதை எனக்காக இன்னொரு முறை பாடு அம்மா!" என்று குழைந்த குரலில் ஆவலோடு தாயைக் கேட்டாள். மகளின் வேண்டுகோளுக்காகத் தாய் மீண்டும் அந்த அடிகளைப் பாடினாள். உடனே மகள் குறுக்கிட்டுக் கேட்கலானாள்:-
“உன் பாடலில் பொருட்பிழை, இலக்கணப் பிழை, காலவழு எல்லாமே குறைவின்றி நிறைந்திருக்கின்றன அம்மா! இந்தக் கணம் வரை நாம் களப்பிரர்களின் ஆட்சியில்தான் இருக்கிறோம். நீ பாடலில் பாடியிருப்பது போல் திருக்கானப் பேர் நம்பி இன்னும் களப்பிரர்களை வெல்லவும் இல்லை. கொல்லவும் இல்லை.”
“இப்படிப் பாடுவதுதான் அம்மானையில் வழக்கம் மகளே! மிகைப்படுத்திப் பாடுவதும், விரைவில் நிகழ இருப்பதை, இப்போதே நிகழ்ந்து விட்டது போல் பாடுவதும் எல்லாம் அம்மானை விளையாடும் போது இயல்பாக நடப்பதுதான்...”
“நீ ஆசைப்படுவது எல்லாம், நீ ஆசைப்படுகிறாய் என்பதற்காகவே நடந்து விடுமா அம்மா?”
“நான் ஆசைப்படுவது மட்டுமில்லையடீ, பெண்ணே! நீ உன் அந்தரங்கம் நிறைய ஆசைப்படுவது எதுவோ, அதைப் புரிந்து கொண்டு உன் திருப்திக்காகவே இப்படிப் பாடினேன்! நீயோ, என்னிடம் ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறாய்...”
நேருக்கு நேர் தாய் இவ்வாறு கூறியதும், செல்வப் பூங்கோதை கையும் களவுமாகப் பிடிப்பட்டுவிட்ட உணர்வோடு நாணித் தலை கவிழ்ந்தாள். தன் அந்தரங்கத்தை மிக மிகத் தந்திரமாகத் தாய் கண்டு பிடித்து விட்டாளே என்று கூசினாள் அவள்.
நீண்ட நேரமாகப் பெண் குனிந்த தலை நிமிராமல் இருக்கவே, “விளையாட்டைத் தொடரலாம் வா” என்று அவள் மோவாயைத் தொட்டு முகத்தை நிமிர்த்திய தாய் திகைத்தாள். மகளின் நீண்ட அழகிய மீன்விழிகளில் நீர் மல்கியிருந்தது. அது ஆனந்தக் கண்ணீரா, துயரக் கண்ணீரா என்று புரிந்து கொள்ள முடியாமல் மலைத்தாள் தாய். மகளைத் தழுவியபடி, “எதற்காகக் கண்ணீர் சிந்துகிறாய் மகளே! நீ மகிழ வேண்டும் என்பதற்காக நான் இட்டுக் கட்டி இயற்றிய பாடலைக் கேட்டு, நீயே அழுதால் என்ன செய்வது? கவலையை விட்டு விடு! முகமலர்ந்து சிரித்தபடி என்னைப் பார். உன் அந்தரங்கம் எனக்குத் தெரியும். அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்” என்று ஆறுதலாகச் சொன்னாள் தாய்.
“உனக்குத் தெரியாதம்மா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மறதி அதிகம். அவர்கள் தங்களை நினைத்துத் தவிக்கும் பேதைகளை எளிதாக மறந்து விடுவார்கள். இதிகாச காலத்தில் இருந்து அப்படித்தான் நடந்திருக்கிறது. சகுந்தலையின் கதை என்ன? தன்னை மறந்து போய்விட்ட ஓர் அரசனை மறக்க முடியாமல் அவள் எவ்வளவு தவித்தாள்?”
“நீ அப்படித் தவிப்பதற்கு அவசியம் நேராது மகளே! உன் தந்தை உன்னை அழ விட மாட்டார்.”
தாய் இப்படிக் கூறிய போது, அவளை நேருக்கு நேர் ஏறிட்டுப் பார்க்கக் கூசியவளாக மகள், முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு கேட்டாள்:
“அம்மா! நாம் நிலங்களை ஆளும் வேளாளர் குடியினர். மாபெரும் பாண்டியப் பேரரசை, நம் விருப்பப்படி இசைய வைக்கச் சக்தி இல்லாதவர்கள் என்பதை எல்லாம் மறந்து விட்டுப் பேசாதே. ஏதோ சிரம தசையில் இருந்த போது ஒர் அரச குடும்பத்து வாலிபருக்கு, நாம் வழி காட்டி உதவினோம். நம் மாளிகையில் விருந்திட்டோம். நமது சித்திர வண்டியில் ஆயிரம் தாமரைப் பூக்களால் மூடி மறைத்து அகநகரில் கொண்டு போய் விட்டோம். இந்த உதவிகளுக்கு இவற்றை விடப் பெரிய மாற்று உதவியை அவர்களிடமிருந்து நீ எதிர்பார்க்க முடியுமா அம்மா?”
“முடியும்! நீ நினைப்பது போல் நாம் அரச குடும்பத்தோடு தொடர்பற்றவர்கள் இல்லை. பல தலைமுறைகளுக்கு முன் களப்பிரர் ஆட்சி வராத நற்காலத்தில் இந்தக் குடும்பத்தில் பாண்டிய இளவரசர்கள் பெண் எடுத்திருக்கிறார்கள், மணந்திருக்கிறார்கள் என்றெல்லாம் வரலாறு உண்டு. தவிர, உன் தந்தைக்கு இந்தப் பாண்டியப் பேரரசும், பெரியவர் மதுராபதி வித்தகரும் மிக மிகக் கடமைப்பட்டிருக்கிறார்கள். உன் தந்தை அறக் கோட்டங்கள் என்றும், ஊட்டுப்பிறை என்றும் பெயர் சூட்டிப் பல இடங்களில், முனை எதிர் மோகர் படையினரையும், ஆபத்துதவிகளையும் நெடுங் காலமாகப் பேணி வளர்த்தவர். அவர் இட்ட செஞ்சோற்று உதவியால்தான், நாளைக்குப் பாண்டிப் பேரரசே களப்பிரர்களிடம் இருந்து மீளப் போகிறது. அந்தச் செஞ்சோற்றுக் கடனைத் திருக்கானப்பேர் நம்பி மறந்து விடவோ மறுத்து விடவோ முடியாது.”
தாய் கூறிய ஒரு வரலாறு, செல்வப் பூங்கோதையின் வயிற்றில் பால் வார்த்தது. ‘பல தலைமுறைகளுக்கு முன் பாண்டிய அரச மரபினர், இந்தக் குடும்பத்தின் முன்னோர்களிடம் பெண் எடுத்து மணந்திருக்கிறார்கள்’ என்று அவள் கூறிய சமயத்தில், செல்வப் பூங்கோதை மகிழச்சியால் மனம் பூரித்தாள். திருக்கானப்பேர் நம்பிக்கும் தனக்கும் நடுவே முறைகள், வரம்புகள் என்ற பெயரில் எதுவும் குறுக்கே நிற்க முடியாதென்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டது. செஞ்சோற்றுக் கடனையும், காதலையும் தொடர்புபடுத்தி வாக்குறுதி கேட்கும் காரியத்தைத் தன் தந்தை ஒரு போதும் செய்ய மாட்டார் என்பதை அவள் அறிவாள். தந்தையை வற்புறுத்தித் தன் தாயே பிடிவாதம் செய்தாலும், பெரியவரையோ, இளைய நம்பியையோ வற்புறுத்துவதற்குத் தந்தையின் பெருந்தன்மை நிறைந்த உள்ளம் இசையாது என்பதும் அவளுக்குத் தெரிந்ததுதான். ஆனால் தாய் என்னவோ, “கவலைப்படாதே மகளே, நானாயிற்று!” -என்பது போல் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாள். தாய் கூறியதை, அவளால் நிறைவேற்ற முடியுமா, முடியாதா என்பதில் ஐயப்பாடு இருந்தாலும், தாய் ஒருத்தியாவது தன் இதயத்தை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறாளே என்பது ஆறுதலாக இருந்தது. மனத்தின் அந்தரங்கமான சுமையினை, நம்பிக்கையான மற்றொரு தலைக்கு மாற்றிய நிம்மதி இப்போது செல்வப் பூங்கோதைக்குக் கிடைத்திருந்தது. நம்பிக்கையை இழக்க முடியாமல் தாய் உறுதிப்படுத்தியிருந்தாள் என்றாலும் என்ன ஆகுமோ? என்ற அச்சமும் கூடவே இருந்தது. திருமோகூர்க் கொற்றவைக் கோயிலின் அருகே இருள் மங்கும் அந்தி வேளையில் முதன் முதலாக இளையநம்பியாரைச் சந்தித்த அநுபவம் தொடங்கி ஒவ்வொன்றாக மீண்டும் எண்ணிப் பார்த்தாள் அவள். பசித்த போது பழங் கணக்குப் பார்ப்பது போலிருந்தது அவள் நிலை. இளையநம்பி திருமோகூருக்கு வந்தது, அங்கிருந்து தாமரைப் பூங்குவியலில் மறைந்து அகநகருக்குள் சென்றது, எல்லாம் நேற்றும், அதற்கு முன்தினமும்தான் நடந்திருந்தவை போல அவ்வளவு பசுமையாக அவள் உள்ளத்தில் நினைவிருந்தன.
‘பெண்ணே! உனக்கு எவ்வாறு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் இப்போது சொல்ல முடியும். இந்த உதவியைச் செய்ததற்காகக் காலம் உள்ளளவும் நீ பெருமைப்படலாம்’ என்று அன்றைக்கு முதன் முதலாகச் சந்தித்த போது, திருமோகூர்க் கொற்றவைக் கோவிலுக்குப் போகிற வழியில், தன்னிடம் இளையநம்பி கூறியிருந்த சொற்கள், அவளுக்கு இந்தக் கணத்திலும் ஞாபகம் வந்து ஆறுதலளித்தன. அந்தப் பழைய நினைவுகள் இப்போது அவள் செல்வமாயிருந்தன. அந்தச் செல்வத்தைக் குறைவின்றி, இன்றும் அவள் ஆண்டு கொண்டிருந்தாள்.
இன்று தாயுடன் அம்மானை ஆடிய போது, செல்வப் பூங்கோதை தன் மனத்துக்கு ஆறுதலும், மகிழ்ச்சியும் தர வல்ல வேறொரு குறிப்பையும் புரிந்து கொண்டிருந்தாள். தன் ஆருயிர்த் தாயினால், தான் நன்றாகவும், அதுதாபத்துடனும் புரிந்து கொள்ளப் பட்டிருப்பது அவளுக்கு ஆறுதலளித்தது. இந்தப் பிரியமும், அன்பும் இப்படித் தன் கருத்துக்கு இசைவாக இருக்கும் என்பதைத் தான் முன்பே நன்றாக விளங்கிக் கொள்ள முடியாமற் போனதற்காக, இப்போது வருந்தினாள் அவள் தீர்த்த யாத்திரை செல்லும் முன் தாயின் நல்லுள்ளம் புரியாமல் 'தாய் தன்மேல் சந்தேகப்படுவதாக' இளையநம்பிக்குக் கொல்லன் மூலம் எழுதியனுப்பிய ஒலையில், தானே தவறாகக் குறிப்பிட்டு விட்டதை எண்ணி அவள் மனம் கூசியது. மகள் என்ற முறையோடும், அன்பு உரிமையோடும் தாய் தன்னை இடை விடாமல் பேணிக் கவனிப்பதையே, அவள் தன் மேல் சந்தேகப்பட்டுக் கண்காணிக்கிறாளோ என்பதாகத் தான் கருதி அஞ்சியது எவ்வளவு பெரிய பேதைமை என்று இப்போது உணர்ந்தாள் செல்வப்பூங்கோதை, தாயின் அன்பும், ஆதரவும், ‘மகளே உன் தந்தையும் நானும் உன்னைத் தவிக்க விட மாட்டோம்’ என்ற உறுதிமொழியும் வெளிப்படையாகக் கிடைத்த பின், அன்று செல்வப் பூங்கோதை மிக மிக உற்சாகமாயிருந்தாள். நீண்ட காலத்துக்குப் பின் அவள் இதழ்கள் தெரிந்தவையும், அறிந்தவையும் ஆகிய பாடல்களை முறித்தும், முறியாமலும் மகிழ்ச்சியோடு இசைத்தன. புறங்கடையில், தோட்டத்தில் போய்க் காரணமின்றி மழையில் நனைந்தபடியே உலாவினாள் அவள். மாளிகைக்குள் திரும்பி ஆடி[1]யில் முகம் பார்த்து மகிழ்ந்தாள். தாயைக் கூப்பிட்டுக் குழல் நீவி, எண்ணெய் பூசி, வாரிப் பூ முடித்து விடச் சொன்னாள். நெற்றியில் திலகமிட்டு அழகு பார்த்துக் கொண்டாள். புதுக் கூறையுடுத்திப் புனைந்து கொண்டாள். இடையிடையே தீர்த்த யாத்திரைக்கு முந்திய நாளன்று, ‘சாம்ராஜ்யாதிபதிகளுக்கு வழி காட்டும் பேதைகளுக்கு அவர்கள் அன்பைக் கூடவா பிரதியுபகாரமாகத் தரக் கூடாது?’ என்று திருமோகூர்க் கொல்லனிடம், தான் கொடுத்தனுப்பியிருந்த ஒலையில் இளையநம்பியைக் கேட்டிருந்த கேள்வியும் நினைவுக்கு வந்தது. தன்னுடைய அந்தக் கேள்வியைக் கண்டு அவர் என்ன நினைப்பார்?-என்றும் இப்போது அவள் சிந்தித்தாள்.
“பெண்ணே அம்மானை விளையாடி முடித்ததிலிருந்தே, இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறாய். நெடுநாளைக்குப் பின்பு இன்றுதான் உன் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேன். ஊரில் பெய்யும் புது மழையைப் போல் உன் இதயத்திலும் ஏதோ புது மழை பெய்து கொண்டிருக்கிறதடி பெண்னே! இனி என்றும் இப்படியே இரு” என்று அந்த வேளையில் அவளருகே வந்த தாய் அவளை வாழ்த்தினாள். முகத்தில் பரவும் நாணத்தைத் தவிர்க்க முடியாமலும், அந்தரங்கமான உணர்வுகளைத் தாய்க்குத் தெரிய விடாமலும் வேறு புறம் திரும்பித் தலை குனிந்தாள் மகள். தாய் கூறியது போலவே தன் இதயமாகிய நிலத்தில் ஏதோ புது மழை பெய்து குளிர்விப்பதை அவளும் அப்போது புரிந்து கொண்டுதான் இருந்தாள்.
- ↑ கண்ணாடிக்கு அக்காலப் பெயர்.