நீதிதேவன் மயக்கம்/நீதிதேவன் மயக்கம்: காட்சி-4

[காட்சி முடிவு]

காட்சி - 4



['பூலோகத்திலே புதுக்கருத்துக்கள் பரவிவிட்டனவாம்!' பழைய நிகழ்ச்சிகளுக்கு நாம் கூறின முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பிவிட்டது. ஆகவே, இனிப் பழைய தீர்ப்புகள் செல்லுபடியாகா என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது. இதை உத்தேசித்து, புனர் விசாரணைக் கோர்ட் நியமித்திருக்கிறேன்' என்று ஆண்டவன் அறிவித்தார். நீதிதேவன் வழக்கு மன்றத்தைக் கூட்டினார். முதல் புனர்விசாரணையாக, இராவணன் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கம்பர், 'பழைய கோர்ட் தீர்ப்பின்படி இராவணன் குற்றவாளிதான். இலங்கை அழிந்தது நியாயமே.
இராவணன் இரக்கமற்ற அரக்கன்' என்று நீதிதேவனிடம் சமர்ப்பிக்கிறார். இராவணன் தன் வழக்கைத் தானே நடத்த இசைகிறான். கோர்ட்டிலே, நீதிதேவன் தலைமை தாங்குகிறார், கம்பர், ஓலைச் சுவடிகளுடன் தயாராக இருக்கிறார். சாட்சிகளாகச் சூர்ப்பனகையும், கைகேயியும் ஆஜராகியுள்ளனர். இராவணன், எப்போதும் போலவே கெம்பீரமாக வருகிறான். வழக்கு ஆரம்பமாகிறது.]

நீதி : இலங்காதிபனே! உன் கட்சியை எடுத்துக் கூற யாரை
      நியமித்திருக்கிறீர்?

இரா : என்னையே நம்பி ஏற்றேன் இப்பணியையும்! கம்பரே!
      உமது கவிதையிலே கொஞ்சம் எடுத்துக் கொள்ள
      அனுமதியுங்கள்.

[கம்பர் புன்னகை புரிகிறார்.]



நீதி : உமது கட்சியை நீரே எடுத்துப் பேசப் போகிறீரா?

இரா : ஆமாம்... நான் போதும் அதற்கு என்று நம்புகிறேன்.

நீதி : வணங்கா முடியான் என்றோர் பெயர் உமக்குண்டா?

கம்: 'பெயர்' என்று கூறுவதை விட, 'வசைமொழி' என்பது
      பொருந்தும்.

இரா : பொருத்தம் பார்ப்பதானால், வணங்காமுடியான் என்று
      ஓர் பழிச்சொல் உண்டு என்று கூறலாம்.

நீதி : சொல் விளக்கத்துக்குள் நுழைய வேண்டாம். அவ்விதம்
      அழைக்கப்பட்டதுண்டா?

இரா : ஆமாம்...

நீதி : ஏன்?

இரா : நான் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா அது!

கம் : எவருக்கும் வணங்கினதில்லை; மதிப்பதில்லை.
      அவ்வளவு மண்டைக் கர்வம் என்று பொருள்படும்.


இரா:பொருள்படும் என்று இழுப்பானேன் கம்பரே! நீரேதான்
          சொல்லிவிடுமே, எனக்கு மண்டைக் கர்வம் என்று

நீதி : எவரையும் வணங்காத காரணம்?

இரா : அவசியம் ஏற்படாததால்!

நீதி : தக்க சமாதானமா இது?

இரா : நான் மட்டுமா? எத்தனையோ மண்டலாதிபதிகள் வெற்றி
           வீரர்களாக. இருக்கும் வரையிலே, வணங்காமுடி
           மன்னர்களாகத்தான் இருந்தனர்.

கம் : அவர்கள் கூட, தமது இன்பவல்லிகளின் தாளிலே
          வீழ்ந்ததுண்டு. மஞ்சத்திலே...

இரா : நமது கம்பருக்கு அந்த ரசவர்ணனையிலே அபாரத்
            திறமை!

நீதி: மாலை நேரப் பேச்சு, காலை வேலைக்கு உதவாது.

இரா : பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள்,
            வீராதி வீரர்கள் மற்றொருவருக்கு வணங்காமல்
            வாழ்ந்தனர். அதுபோலத்தான் நானும் வணங்கா
            முடியனாக வாழ்ந்து வந்தேன். அது என் வீரத்தின்
            இலட்சணம் வீனார்கள் அதையே என்னைப் பழிக்கவும்
            பயன்படுத்திக் கொண்டனர்.

கம் : அந்த வாசகத்தைப் பற்றிய விவாதத்தை விட்டு விடலாம்
          என்று எண்ணுகிறேன். ஏனெனில் வணங்கா முடியன்
          என்ற பெயர் துரியோதனனுக்கும் உண்டு. ஆகவே,
          இந்தச் சில்லறைக்குச் சிந்தனையைச் செலவிட
          வேண்டாம். முக்கியமான விஷயத்தைக் கவனிப்போம்.
          ஐம்புலன்களை அடக்கி, ஒடுக்கி, பரமனை வேண்டித்
          தவம் செய்து வந்த முனிபுங்கவர்களின் யாகயோகாதி
          காரியங்களை இலங்காதிபன் கெடுத்து நாசமாக்கி
          வந்தான். இப்பெருங் குற்றத்துக்கு என்ன பதில்
          கூறுவான்?


இரா : தவம், ஆரிய முறை. அதை என் இனக் கலாச்சார
      முறைப்படி நான் ஆதரிக்க முடியாது. 'யாகம்' என்பது
      ஜீவன்களை வதைத்து, பொருளைப் பாழாக்கி, மக்களை
      ஏய்க்கும் ஆரிய தந்திரம் என்பது, என் இனத்தின்
      சித்தாந்தம். ஆகவே, என் ஆட்சிக்குட்பட்ட இடங்களிலே,
      ஆரியர்பிரவேசித்து, என் கலாச்சாரத்துக்கு
      விரோதமான காரியத்தைச் செய்து, அதன் மூலம் என்
      கட்டளையை மீறினதால் நான் யாகங்களை அழித்தேன்.

கம் : அதைத்தான் குற்றமென்று கூறுகிறோம்.

இரா : அது எப்படி குற்றமாகும்?. என் ஆட்சிக்குட்பட்ட
      இடத்திலே. என் மக்களுக்கு எது சரி என்று
      தீர்மானிக்கவும், அதற்கு மாறாக நடப்பவர்களைத்
      தண்டிக்கவும் எனக்கு அரச உரிமை உண்டு.
      அயோத்தியிலே தசரதன் செய்த அஸ்வமேத
      யாகத்தையா அழித்தேன்? என் ஆளுகையில் இருந்த
      தண்டகாரண்யத்திலே, தவசி வேடத்தில் புகுந்து, என்
      தடை உத்தரவை மீறினவர்களை, யாக காரியங்கள்
      செய்யலாகாது என்று தடுத்தேன். மீறிச் செய்தனர்.
      அழித்தேன். உங்கள் இராமன், அதே தவத்தை ஒரு
      சூத்திரன் செய்ததற்காக அவனுடைய இராஜ்ஜியத்தில்,
      அவன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி தவம் செய்தது
      குலமுறைக்குத் தகாது என்று கூறிக் கொல்லவில்லையா?
      ஆரிய ராமன், ஆரிய பூமியில் ஆரிய தர்மத்தைக்
      காப்பாற்ற அநாரியத் தவசியைக் கொன்றான் அவன்
      அது என் உரிமை என்றான். என் நாட்டிலே என்
      உரிமையை நான் நிறைவேற்றுவது தவறாகுமா?

கம் : அதுகூடக் கிடக்கட்டும்... நீ இரக்கமெனும் ஒரு
      பொருளிலா அரக்கன். ஆகவேதான் உன்னை இராமர்
      கொன்று இலங்கையை அழித்தார். இரக்கம், உயர்ந்த
      பண்பு, அதை இழந்தவர்களைத் தண்டிப்பது, தேவப்
      பிரீதியான காரியம். நியாயம்; தர்மம்.


நீதி : (கம்பரைப் பார்த்து) இரக்கமின்றி இராவணன் நடந்து
       கொண்டவைகளை விவரமாகக் கூறும்.

கம் : ஆகா! தடையின்றி... இராவணன் மகாபண்டிதன்;
      வல்லமை மிக்கவன், தவசியும் கூட. சாமவேதம்
      பாடியவன். சௌந்தர்யத்தில் நிகரற்றவன், எல்லாம்
      இருந்தது அவனிடத்தில். ஆனால் இரக்கம் என்ற ஒரு
      பொருள்தான் இல்லை. இரக்கமின்றி இராவணன்
      செய்த பல கொடுஞ் செயல்களை நான் விவரமாகக்
      கூறுகிறேன். கேளுங்கள்...

இரா : கம்பரே! சிரமம் ஏன் தங்களுக்கு? இரக்கம் என்ற ஒரு
       பொருள் இல்லாத அரக்கன் என்பது தங்கள்
       குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் கூறி ஏன் அலுத்துப்
       போக வேண்டும்? நானே கூறுகிறேன். கேளும்...
       பூங்கொடி துவள்வது போலானாள், அந்தப் பொன்
       அவிர்மேனியாள் சீதாவை நான் சிறையெடுத்தபோது
       நான் இரக்கம் காட்டவில்லை.

       அலறினாள்—நான் அரக்கன் என்று அறிந்ததும்! நான்
       இரக்கங்காட்டவில்லை. 'சபித்து விடுவேன்' என்றாள்;
       புன்னகை புரிந்தேன். அழுதாள், சிரித்தேன்.
       பிராணபதே என்று கூவினாள்; எதற்கும் நான். இரக்கங்
       காட்டவில்லை.

       'அடே, துஷ்டா! அரிபரந்தாமனின் அவதாரமடா
       இராமன். அவனுடைய தர்ம பத்தினியையா இந்தக்
       கோலம் செய்கிறாய்?' என்று வயோதிக சடாயு
       வாய்விட்டு அலறினான்—சீதை உயிர் சோர, உடல்
       சோர, விழியில் நீர் வழிய, கூந்தல் சரிய ஆடை நெகிழ
       அலங்கோலமாக இருக்கக்கண்டு! 'போடா போ'
       என்றேன். போரிடத் துணிந்தான். போக்கினேன்
       அந்தப் புள்ளின் உயிரை! இரக்கம் காட்டினேனா?
       இல்லை...

      
      அரசிளங்குமரி சீதையை அசோக வனத்திலே சிறை
      வைத்தேன். ராஜபோகத்தில் இருக்க வேண்டிய அந்த
      ரமணியைக் காவலில் வைத்தேன். சேடியர் புடைசூழ
      நந்தவனத்திலே ஆடிப்பாடி இருக்க வேண்டிய
     அழகியை, அரக்க மாதர் உருட்டி மிரட்ட, அவள்
     அஞ்சும்படியான நிலையிலே வைத்தேன். அந்த
     அழகியின் கண்கள் குளமாயின. நான் இரக்கம்
     காட்டினேனா? இல்லை... இரக்கம் காட்டவில்லை.
     'தேகம் துரும்பாக இளைத்துவிடுகிறது, தேவகாலனே!'
     என்று என்னிடம் கூறினர்; 'கோதாக்கூந்தல் – பேசா
     வாய் – வற்றாத ஊற்றெனக் கண்கள்; வைதேகி,
     விசாரமே உருவெடுத்தது போலிருக்கிறாள்' என்று
     சொன்னார்கள்.

      'பழம், பால், மது, மாமிசம், மலர் – எதனையும் ஏற்றுக்
      கொள்ள மறுத்துவிட்டாள் ஜானகி' என்று
      தெரிவித்தார்கள். சரி, புத்தி கூறு; மிரட்டு; கொன்று
      போடுவேன் என்று சொல்; பிடிவாதம் கூடாது என்று
      தெரிவி; தேவர்க்கும் மூவர்க்கும் அஞ்சாத இலங்காதிபதி,
      ஒரு தையலின் கண்ணீருக்கு அஞ்சமாட்டான் என்று
      சொல்' என்றுதான், என்னிடம் சேதி சொன்னவர்
      களுக்குச் சொல்லி அனுப்பினேன். இரக்கம்
      காட்டவில்லை?

      கொலுமண்டபத்திலே கொட்டி அளந்தான்
      விபீஷணன்! 'தம்பீ! உனக்குத் தாசர் புத்தி தலைக்கேறி
      விட்டதடா!' என்று கூறி உட்கார வைத்தேன். இரக்கம்
      காட்டவில்லை.

      போதுமா?... இன்னமும் ஏதாகிலும் கூறட்டுமா! ஈரமற்ற
      நெஞ்சினன்நான் என்பதற்கான ஆதாரங்கள்! இதேது,
      அரக்கன் முரடன் மட்டுமில்லை, முட்டாளாகவுமன்றோ
      இருக்கிறான்! எதிர்க்கட்சிக்காரன் கூறுவதை விட
      ஆணித்தரமாகக் குற்றப் பட்டியலைத் திட்டமாகக்
      கூறுகிறானே என்று யோசிக்கிறீர்களா?

      இன்னமும் கொஞ்சம் செந்தேன் ஊற்றுகிறேன், உங்கள்
      சிந்தனைக்கு.

      களத்திலே என் தம்பி மாண்டான்; கதறினர் மக்கள். என்
      மகன் மாண்டான்; மண்டோதரி மாரடித்து அழுதாள்.
      என் மக்களின் பிணம் மலையாகக் குவிந்தன. எங்கும்
      ரத்தம்! எங்கும் பிணம் நாசம் நர்த்தனமாடிற்று.
      அயோத்தியான் ஏவிய அழிவு, ஆழிசூழ் இலங்கையில்
      இடம் பிடித்துக் கொண்டது. கானமும் கட்டளையும்,
      ஏவலரின் பணிவான பேச்சும், காவலரின்
      கெம்பீரமான முழக்கமும், எந்த இலங்கையிலே நித்ய
      நாதமாக இருந்ததோ, அங்கு குடலறுந்தோர் கூக்குரல்,
      கரமிழந்தோர் கதறல்; பெண்டிரின் பெருங்குரல்;
      பிணங்களைக் கொத்த வந்த பெரும் பறவைகளின்
      சிறகொலி இவை நிரம்பின. நான் இரக்கம்
      காட்டினேனா? அதுதான் இல்லை....

       [இராவணன்,படபடவென்று பேசியவன், கொஞ்சம்
       களைத்து உட்கார்ந்தான். கோர்ட்டாரின் உத்தரவின்
       பேரில் அவனுக்கு ஒரு கோப்பையிலே சோமரசம்
       தருகிறார்கள். இராவணன் புன்னகையுடன்
       மறுத்துவிடுகிறான்.]

       "என் அரசு உலர்ந்தது, அது தெரிந்து என் உற்சாகம்
        உலர்ந்தபோது, இதுபோல் 'ரசம்' நான் பருகிடவில்லை.
        'பழிவாங்குதல்' எனும் பானத்தையே விரும்பினேன்.
        இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லா அரக்கன்! கம்பரே!
        இதுதானே உமது கவிதா நடையிலே உள்ள வாசகம்?
        என் மீதுள்ள குற்றச்சாட்டு! இராவணன் ஏன்
        அழிக்கப்பட்டான். அவன், இரக்கம் என்ற ஒரு பொருள்
        இல்லா அரக்கனானபடியால்! - மிகச் சுருக்கமாக
        முடித்து விடுகிறீர், கவியே!

         நான், என் மீது குற்றம் சாட்டுபவருக்குச் சிரமம் அதிகம்
        இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், எந்தெந்த

        சமயத்திலே நான் இரக்கமின்றி நடந்து கொண்டேன்
        என்ற விஷயங்களைக் கூறினேன்.
      
கம் : எங்களால் கூட முடியாது – அவ்வளவு தெளிவாகக்
      கூற!

இரா : இதைவிடத் தெளிவாக இருக்கும்... இனி என்னுடைய
       பதில்!

நீதி : பல சமயங்களில் இரக்கமின்றி நடந்து கொண்டதை
      விவரமாக எடுத்துக் கூறிய பிறகு பதில் என்ன
      இருக்கிறது தெரிவிக்க?

இரா : பதில், ஏராளமாக இருக்கிறது. அநீதியுடன் நடந்தாக
       வேண்டும் என்று தீர்மானிக்கும் வழக்கு மன்றங்களைக்
       கூட, நீதியின் பக்கம் இழுக்கக் கூடிய அளவுக்குப் பதில்
       உண்டு – கேளுங்கள்! இரக்கம் இரக்கம் காட்டவில்லை.
       நான் ... யாரிடம்? ஒரு பெண்பாலிடம்! அபலையிடம்!
       ஏன்? அரக்கனல்லவா நான்! இரக்கம் என்ற ஒரு
       பொருள்தானே கிடையாது, கம்பர் கூறியதுபோல்!
       கம்பர் கூறுவதானாலும் சரியே– தாங்கள் கூறினாலும்
       சரியே! இரக்கம் என்றால் என்ன? இலட்சணம் கூற
       முடியுமா? இன்னவிதமான நிலைமைக்குத்தான் இரக்கம்
       என்று பெயர் என்று திட்டவட்டமாகக் கூறமுடியுமா?

கம் : இலங்காதிபதி வழக்கு மன்றத்திலே நிற்கிறார்;
      பள்ளிக்கூடத்திலே அல்ல!

இரா : நீதியின் கூட்டத்திலே நிறுத்தப்பட்டிருக்கிறேன். ஆகவே
       தான் என் மீது சாட்டப்பட்ட குற்றத்தின் தன்மையை,
       குற்றம் சாட்டுபவர்கள் முதலில் அளக்க வேண்டும்
       என்று கேட்கிறேன். உங்களுக்குத் தண்டிக்க மட்டும்
       தான் தெரியும்? விளக்கவும் தெரிய வேண்டுமே!
       கூறுங்கள்... இரக்கம் என்றால் என்ன? எது இரக்கம்?
       உங்களைக் கேட்கிறேன், உங்களை! ஏன் ஊமையாகி
       விட்டீர்கள்? இரக்கம் என்றால் என்ன பொருள்?


நீதி : இரக்கம் என்றால் பிறருடைய நிலைமை கண்டு,
      வேதனையைக் கண்டு பரிதாபப்படுவது, மனம்
      இளகுவது,இளகி அவர்களுக்கு இதம் செய்வது...

கம் : இதம் செய்யாவிட்டாலும் போகிறது; இன்னல்
      செய்யாமலாவது இருப்பது...

இரா: அதாவது–தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய
      முடியும் என்ற ஆதிக்கம் இருக்க வேண்டும். அந்த
      ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சுபவன் ஒருவன் இருக்கிறான்.
      அவனால் ஆதிக்கக்காரனை எதிர்க்கவோ தடுக்கவோ
      முடியாது. அந்த நிலையிலே அவன் இருக்கும் பரிதாபகரமான,
      உதவியற்ற நிலைமையைக் கண்டு மனம்
      உருகுவது, அவனுக்குக் கேடு ஏதும் செய்யாதிருப்பது,
      கூடுமானால் அவனுக்குள்ள கஷ்டத்தைப் போக்குவது
      – இது தானே இரக்கம்?

கம் : மகா பண்டிதனல்லவா! அருமையான வியாக்யானம்
      செய்துவிட்டாய், இரக்கம் என்ற தத்துவத்திற்கு.

இரா : தாகவிடாயால் தவித்துக் கொண்டிருக்கிறது ஒரு
      புள்ளிமான். அடவியிலே நீர் தேடி அலைகிறது... அந்த
      நேரத்திலே சிறுத்தை ஒன்று மானைக் கண்டுவிடுகிறது.
      மான் மிரள்கிறது; சிறுத்தை அதன் நிலை கண்டு மனம்
      இளகி, 'பாவம்! இந்த மானைக் கொல்லலாகாது' என்று
      தீர்மானித்து, இரக்கப்பட்டு, மானை அருகாமையிலுள்ள
      நீர் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அது நீர் பருகும்
      போது வேறு துஷ்ட மிருகத்தால் ஒரு தீங்கும் நேரிடாதபடி
      காத்துக் கொண்டிருக்கிறது. அதுதானே இரக்கம்.?

கம் : சிலாக்கியமான இரக்கம்! ஆனால் சாத்தியமா என்பது
      வேறு விஷயம்.

இரா : மானை அம்பு எய்திக் கொல்ல வருகிறான் வேடன்...
      வேடனுக்கு இரக்கத்தின் மேன்மையை எடுத்துக் கூறி
      தவசி தடுக்கப் பார்க்கிறார். வேடன் என்ன செய்வான்?


கம்: வேடனா? அவன் தவசியின் பேச்சைத் தள்ளி விடுவான்.
      முரடனல்லவா அவன்?

இரா: முரடனாக மட்டுமா இருக்கிறான்? ஞானக் கண்ணிலாக்
      குருடன்....

கம்: வாஸ்தவம், வாஸ்தவம்...

இரா : அந்த முரடன், குருடன், ஊமையல்ல அவன் என்ன
       செய்வான் தெரியுமா; தவசியைப் பார்த்து?
       'முனிபுங்கவரே! என் தொழில் காட்டிலே வேட்டையாடுவது.
       இந்த மானை நான் கொன்றால்தான்
       இன்றைய வாழ்வு எனக்கு! 'இரக்கமில்லையா...' என்று
       கேட்கிறீர். 'தவசியே! பரமனையே நோக்கித் தவம்
       புரியும் உமது கூட்டத்தவர் யாகங்களிலே, ஆடுகளைப்
       பலியாக்குகிறீர்களே, அந்தச் சமயம் இரக்கம் என்று
       ஒரு பொருள் உம்மை விட்டுப் போய்விடும் காரணம்
       என்ன' என்று கேட்பான். கேட்டான் என்று
       கருதுவோம். முனிவர் என்ன சொல்வார்?

கம் : முட்டாளே! யாகம் பகவத் ப்ரீதிக்கான காரியம் என்று
      கூறுவார்.

இரா : 'இறைவன் வழிபாட்டுக்கான காரியத்துக்கும் இரக்கம்
       என்ற பண்புக்கும் பகையா... ஸ்வாமி! என்று வேடன்
       கேட்பானே!"

நீதி : கற்பனைக் காட்சிகள் ஏன்? உன் கட்சியைக் கூறு.
      இரக்கம் என்றால் பிறர் கஷ்டப்படுவது கண்டு மனம்
      இளகுவது. அந்த உயரிய பண்பு உன்னிடம் இல்லை...
      இருந்ததா?

இரா : இல்லை! நானே கூறினேனே, எந்தெந்தச்
      சமயங்களிலே இரக்கம் கொள்ளவில்லை என்பதை.
      நான் இரக்கப்பட்டேன் என்று புளுகு பேசித் தப்பித்துக்
      கொள்ள விரும்பவில்லை. என் வாதம் வேறு...


நீதி : அது என்ன வாதம்? கூறும்... கேட்போம்!

இரா : இரக்கம் – எனக்கு இல்லை என்று கூறி, அந்த ஒரு
       பொருள் இல்லாத நான், அரக்கன் என்று கூறி,
       அரக்கனான நான் அழிக்கப்பட்டது; இரக்கம் எனக்கு
       இல்லாததால்தான் என்று பேசுகிறார்களே, அது வீண்
       அபவாதம்! ஏனெனில், ஒருவனுடைய சிந்தனையும்,
       செயலும் அவனவனுடைய தொழில், வாழ்க்கை முறை,
       இலட்சியம் என்பனவற்றைப் பொறுத்திருக்கிறது... அந்த
       நிலையிலே, 'கருணாகரன்' என்று புகழப்படுபவர்களும்
       கூட பல சமயங்களிலே இரக்கமற்று இருந்திருக்கிறார்கள்.
       இரக்கம் இல்லாதார் அரக்கர் என்றால் அனைவரும்.
       ஆண்டவன் உட்பட அனைவரும் அரக்கர்தான்...

நீதி : விசித்திரமான வாதமாக இருக்கிறது.

இரா : வேடன், இரக்கத்தைக் கொள்ள முடியாததற்குக் காரணம்
       அவனுடைய வாழ்க்கை முறை, தொழில்! வேதமோதி
       வேள்வி நடாத்தும் முனிவர்கள், யாகப் பசுக்களைச்
       சித்திரவதை செய்யும்போது இரக்கம் காட்டாதது,
       அவர்கள், இரக்கம் என்பதைவிட, பக்தி என்ற வேறோர்
       இலட்சியத்துக்கு அதிக மதிப்பு தருவதே காரணம்.
       வேடனின் வாழ்வும், வேதமோதியின் உயர்வும்
       அவரவர்க்கு இரக்கத்தைவிட அதிக அவசியமுள்ளதாகத்
       தெரிகிறது. ஆஸ்ரமங்களிலே உள்ள மான்தோல்
       ஆசனங்கள், இரக்கத்தின் அடையாளச் சீட்டுகளா?
       விதவிதமான யாகங்கள், இரக்க லட்சியவாதிகளின்
       செயலா? எங்கே இரக்கம்? ஏன் இல்லை? அவர்கள்
       அரக்கரல்லவா? நான் மட்டுமா அரக்கன்?

கம் : தபோதனர்களை அரக்கராக்கிவிட்டார் இலங்கேசன்!
      இனி, தயாபரனையும் குற்றம் சாட்டுவார் போலும்!

இரா : தாய் பிடிக்க, தந்தை அறுக்க, சீராளனைக்
       கறியாக்கும்படி தயாபரன் சோதித்தது, இரக்கமென்ற ஒரு
       பொருள் இல்லாதவர் அரக்கர் என்ற உமது-

       இலக்கணத்தைப் பொய்யாக்கத்தான்! சிறுத்தொண்டன்
       உமது சிறுமதிக் கோட்பாட்டைப் பெருநெறியெனக்
       கொண்டிருந்தால், சிவனாரை நோக்கி, 'ஐயனே!
       பாலகனைக் கொன்று கறி சமைக்கச் சொல்கிறீரே,
       எப்படி மனம் வரும்? இரக்கம் குறுக்கிடுமே!' என்று
       கூறியிருந்திருப்பார். உமது தொண்டர் புராணமும்
       வேறு உருவாகி இருக்கும் அல்லவா?

கம் : பேசினால் மிருகத்தின் கதை; இல்லாவிட்டால் மகேசன்
      கதை! இவ்வளவுதானா? இவை இரண்டும் வாதத்துக்குத்
      தக்கவையாகா. ஒன்று பகுத்தறிவு இல்லாத பிராணிக்
      கதை; மற்றொன்று மனித நீதிக்குக் கட்டுப்பட
      வேண்டிய அவசியமில்லாத மகேஸ்வரன் விஷயம்.
      பிரஸ்தாப வழக்குக்கு இரண்டும் பொருந்தா.

நீதி : கம்பர் கூறினது முற்றிலும் உண்மை. காட்டில் புலியும்,
      கைலையில் உலவும் ஈசனும் கோர்ட் விவகாரத்திலே
      உனக்கு உதவி செய்ய முடியாது.

இரா : வேள்வி செய்யும் முனிவர்கள், இரக்கம்
      கொள்ளவில்லை என்பதைக் கூறினேனே...

நீதி : ஆமாம்... கம்பரே! குறித்துக் கொள்ளும்.....சரி,
      இராவணரே! வேறு உண்டோ!

இரா : ஏராளமாக! ஆமாம்– தாங்கள் எதற்குக்
      கட்டுப்பட்டவர்?

நீதி : நீதிக்கு!

இரா : மண்டோதரி; இது சமயம் இங்கு நின்று கதறினால்.

நீதி : நீதி நெறியினின்று நான் அப்போதும் தவற முடியாது.

இரா : அவளுடைய கண்ணீரைக் கண்டும்.

நீதி : கண்ணீருக்காகக் கடமையினின்றும் தவற மாட்டேன்.

இரா : அப்படியானால் கடமை பெரிதா? இரக்கம் பெரிதா?

நீதி : சிக்கல் நிறைந்த கேள்வி...


இரா : சிக்கல் நிறைந்ததுதான்! ஆனால் பவருக்கும் இந்தப்
       பிரச்னை வந்தே தீரும். கடமையின் படிதானே நீர்
       நடந்தாக வேண்டும்?

நீதி : ஆமாம்!

இரா : கடமையை நிறைவேற்றுகையில் அச்சம், தயை,
       தாட்சண்யம், எதுவும் குறுக்கிடக் கூடாது. ஆக
       அறமன்றத்திலே நீர் வீற்றிருக்கும்போதெல்லாம் அரக்கர்
       தானே?

நீதி : கம்பரே! குறித்துக் கொள்ளும்!

கம் : உயர்ந்த இலட்சியத்துக்காக உழைக்கிறீர்கள்; இரக்கம்
      என்பதை இலட்சியப்படுத்தாதது குற்றமல்ல.

இரா : ஆம்! ஆனால் எது உயர்ந்த லட்சியம் – எது குறைந்தது
       என்பது அவரவர்களின் சொந்த அபிப்பிராயம். அந்த
       அபிப்பிராயத்தை உருவாக்குவது அவரவர்களின்
       தொழில், வாழ்க்கை முறை, ஜீவியத்திலே அவர்களுக்
       கென்று ஏற்பட்டுவிடும் குறிக்கோள் இவற்றைப்
       பொறுத்தது.

நீதி : சரி! வேறு உண்டோ?

இரா : ஏன் இல்லை! தபோதனரும் நீதிபதியும் மட்டுந்தானா?
       என்னைப் போன்றவர்கள் இன்னும் ஏராளம்!
       சாட்சிகளை அழையுங்கள். இனி...

       [சாட்சிகள் பட்டியைப் பார்க்கிறார் நீதிதேவன்...
       சூர்ப்பனகை வருகிறாள்.]

இரா : தங்கையே! உன் கதையைக் கூறு...

நீதி : எழுதிக் கொடுத்து விடட்டுமா?

இரா : ஆமாம்! ஆயிரமாயிரம் வீரர்களுக்கு அதிகாரியாக
       வீரமொழி பேசி வந்த என் தங்கை, இப்போது, நாலு
       பேர் நடுவே நின்று பேச முடியாதபடி தான்
       ஆக்கப்பட்டுவிட்டாள்...


[சூர்ப்பனகை ஓர் ஓலையைக் கொடுக்கிறாள்...
கோர்ட்டிலே ஒருவர் அதை வாசிக்கிறார்.]

'இராம இலட்சுமணரைக் காட்டிலே கண்டேன்.
மூத்தவரிடம் மோகம் கொண்டேன். எவ்வளவோ
எடுத்துக் கூறினேன். காதல் கனலாகி என்னைத்

தகித்தது. மன்றாடினேன்..!!'


இரா : கொஞ்சம் நிறுத்து! நீதிதேவா! ஒரு பெண்; அரச
       குடும்பத்தவள், அதிலும் வணங்காது வாழ்ந்து வந்த என்
       தங்கை வலிய சென்று, தன் காதலை வாய் விட்டுக்
       கூறினாள். இராமன் மறுத்தான்... ஏன்?

கம் : இது தெரியாதா? ஸ்ரீராமச்சந்திரர் ஏகபத்தினி விரதர்.

இரா : ஏகபத்தினி விரதம் என்ற இலட்சியத்திலே அவருக்குப்
       பற்றுதல்.

கம்: ஆமாம்!

இரா : அந்த இலட்சியத்தை அவர் பெரிதென மதித்தார்.

கம் : பெரிதென மட்டுமல்ல, உயிரென மதித்தார்.

இரா : தாம் உயிரென மதித்த இலட்சியத்தின்படி நடந்து
       கொள்ள வேண்டுமென்று, ஒரு மங்கையின்
       கண்ணீரைக் கண்டால் இயற்கையாக வரும்
       இரக்கத்தை இரவிகுல சோமன் தள்ளிவிட்டார்.

கம் : இரக்கம் காட்டுவதா இந்தத் தூர்த்தையிடம்?

இரா : காதலைத் தெரிவிப்பவர் தூர்த்தையா?

கம் : இஷ்டமில்லை என்று கூறினபிறகு, வலிய சென்று
      மேலே விழுவது, உயர்குல மங்கையின் பண்போ?

இரா : கம்பரே! என் தங்கை சூர்ப்பனகை கண்ட ஆடவர்
       மீது காமுற்றுக் கருத்தழிந்தவளா? இராமனைக்
       காணுமுன்பு, அன்று நடந்து கொண்டது போல என்

       தங்கை வேறு எந்தச் சமயத்திலேனும் நடந்து
       கொண்டாளா?

கம் : இல்லை! ஒரு முறை செய்தால் மட்டும் குற்றம் குறைந்து
      விடுமா, என்ன?

இரா : அதற்கல்ல நான் கேட்பது? ஒருநாளும் இன்றி, அன்று
       இராமனைக் கண்டதும் காதல் கொண்டாள்.
       அவளுடைய குணமே கெட்டது என்றா அதற்குப்
       பொருள்? அன்று மட்டும் அவ்விதமான எண்ணம்
       ஏற்பட்டது ஏன்?

கம் : என் இராமனுடைய செளந்தர்யத்தைக் கண்டு!

இரா : குற்றம் அவளுடையதா?

கம் : ஏன் இல்லை? சீதையிருக்க, இவள் எப்படி..

இரா : மன்னர்கள் பல மனைவியரை மணம் செய்வது
       முறைதானே?

கம் : ஆமாம்! ஆனால் இராமன் ஏக பத்தினி விரதனாயிற்றே!

இரா : அவள் அறியமாட்டாளே! ஆகவேதான், தன்
       ஆசையைத் தெரிவித்தாள். அன்றுவரை அவள் எந்த
       ஆடவரிடமும் வலிய சென்று காதலை வெளியிடும்
       வழுக்கி விழுந்தவளல்ல! அன்று ஓர் வடிவழகனைக்
       கண்டாள்; மன்றாடி நின்றாள். இரக்கம் இருந்தால்
       ஏற்றுக் கொண்டிருக்கலாமே! விரதத்துக்குப் பங்கம்
       வரக்கூடாதென்பதிலே விசேஷ அக்கறை கொண்டு,
       அவளை நிராகரிப்பதானாலும்; இப்படி அலங்கோலப்
       படுத்தாது இருந்திருக்கலாமே! அவளுடைய நாசியைத்
       துண்டித்தபோது இராம – இலட்சுமணர்கள் இரக்கத்தை
       எத்தனை யோசனை தூரத்திலே விரட்டினார்கள்?
       அவர்கள் அரக்கரல்லவா?

கம் : காமப்பித்தம் பிடித்து அலைந்தவளைத் தண்டிக்காமல்
      விடுவரோ?


இரா : கம்பரே! நான் இருக்கிறேன், தண்டனை தர! என்
       தங்கையின் துர்நடத்தையை எனக்குத் தெரிவித்
       திருக்கலாமே! ஏதாவது தந்திரம் பேசி, அவளை
       அனுப்பி விடுவது; மறுபடி அவள் வருவதற்குள்
       எனக்குச் செய்தி அனுப்பினால், நான் இருக்கிறேன்,
       அவளுக்குப் புத்தி புகட்ட! இரக்கமும் இல்லை; யூகமும்
       இல்லை. இதோ, இங்கே நிற்கிறாள், நாசியற்ற நங்கை!
       இரக்கத்தை மறந்த அரக்கரால் அலங்கோலப்
       படுத்தப்பட்டவள்!

       தங்காய் போ! தயையே உருவெடுத்தவர்களின் தீர்ப்பு;
       நான் இரக்கமென்ற ஒரு பொருள் இலா அரக்கன்
       என்பது! ஒரு நாள் சிக்கின சூர்ப்பனகை, எந்த நாளும்
       எவர் முன்பும் வரமுடியாத நிலையைப் பெற்றாள். என்
       கைதியாகப் பலநாள் இருந்த சீதை, சௌந்தர்யவதியாய்,
       சகல செளபாக்கியங்களையும் அயோத்தியிலே பிறகு
       அனுபவித்தாள். ஆனால் நான் அரக்கன்.

       [சூர்ப்பனகை போய் விடுகிறாள். நீதிதேவன்
        மறுபடியும் சாட்சிப் பட்டியைப் பார்க்கிறார்.]

இரா : நீதிதேவா! சாட்சிப் பட்டியிலே தாடகை, சுபாகு,
       மாரீசன், கரன் முதலிய வதைபட்ட என் மக்களின்
       பெயர் இருக்கும். அவர்களெல்லாம் துஷ்டர்கள்.
       ஆகவே, தண்டித்தார் என்று கம்பர், பல்லவி
       பாடுவார். ஆகவே, அவர்களை விட்டுவிடும்.
       கூப்பிடும் கைகேயி அம்மையை!

[கைகேயி வருகிறாள்]


இரா : கேகயன் மகளே! மந்தரையின் சொல்லைக் கேட்ட
      பிறகு, இராமனைப் பட்டத்துக்கு வரவிடாமல் தடுக்க நீ
      திட்டம் போட்டாயல்லவா?

கை : ஆமாம்!


இரா : சக்கரவர்த்தியின் மூத்த குமாரன் என்ற முறையிலே
       இராமனுக்கு அயோத்தியிலே ஆனந்தமாக வாழ்வு
       இருந்ததல்லவா?

கை : ஆமாம்!

இரா : அதிலும் கண்ணோடு கண் கலந்த காதல் வாழ்க்கை
        நடத்தி வந்தக் காலம்..

கை : ஆமாம்...

இரா : அப்படிப்பட்ட ஆனந்த வாழ்விலே இருந்த இராமனைக்
        காடு போகச் சொன்னபோது, அடவியிலே உள்ள
        கஷ்டம், ஆபத்து இவைகளுக்கு இராமன் உள்ளாகி,
        மிகவும் கஷ்டப்படுவானே என்று உமக்குத்
        தோன்றவில்லையா?

கை : தோன்றிற்று ஆனால் பரதன் நாடாள்வதாக இருந்தால்
       இராமன் காடேகத்தான் வேண்டும் என்று
       தீர்மானித்தேன். வேறு வழியில்லை.

இரா : பஞ்சணையில் துயிலும் இராமன் பசும் புல்தரையிலே
       படுப்பான், கனகமணி அணிந்தவன் மரஉரிதரிப்பான்;
       ராஜபோஜனம் உண்டவன் காய்கனி தின்பான்;
       வசிட்டரைக் கண்டு களித்த கண்களால், துஷ்ட
       மிருகங்களைக் கண்டு கலங்குவான்; அரசாள
       வேண்டியவன் விசாரத்திலே – வேதனையிலே
       மூழ்குவான் என்று தெரிந்திருந்தும்.

கை : காடு ஏகத்தான் வேண்டும் என்று கூறினேன்.

இரா : இராமன் காடு ஏகுவான் என்ற நிலை வந்ததும்,
       அயோத்தியிவே இருந்தவர்கள் எப்படியானார்கள்?

கை : சொல்ல முடியாத அளவிற்குக் கஷ்டப்பட்டார்கள்.

[கம்பரைப் பார்க்கிறாள்.]

இரா : கம்பர், அதுபற்றி விவரமாகப் பாடி இருக்கிறாரே,
       என்கிறீரா? நான் அவருடைய கவிதை சிலவற்றிலிருந்து
       குறிப்பு வாசிக்கிறேன். அவை உண்மையா என்று
       பாரும்; முடியுமானால் கூறும்...

       [ஓலையைப் புரட்டிக் கொண்டே] அயோத்தியா
       காண்டம்; நகர் நீங்கு படலத்திலே, ஊரார் துயரைக்
       கம்பர் உள்ளம் உருகும் முறையிலே இருபது
       பாடல்களுக்கு மேல் வர்ணித்திருக்கிறார்.

       'இராமன் காடு செல்வான்' என்ற சொல் காதிலே
       வீழ்ந்ததோ, இல்லையோ – அரசரும் அந்தணரும், மற்ற
       மாந்தரும் தசரதனைப் போலவே துயருற்றுக் கீழே
       சாய்ந்தார்களாம்... புண்ணிலே நெருப்பு பட்டது
       போலிருந்ததாம் அந்தச் செய்தி. மாதர்கள், கூந்தல்
       அவிழப் புரண்டு அழுதனராம்! அடியற்ற மரமெனக்
       கீழே வீழ்ந்தனராம்! அம்மே, கைகேயி' என்று கம்பர்
       பாடுகிறார்.

      "கிள்ளையோடு பூவையழுத கிளர்மாடத்
       துள்ளுறையும் பூசையழுத வுருவறியாப்
       பிள்ளையழுத பெரியோரை யென்சொல்ல
       வள்ளல் வனம்புகுவா னென்றுரைத்த மாற்றத்தால்"


       வள்ளலாம் இராமன் வனம் புகுவான் என்ற
       வார்த்தையைக் கேட்ட அளவிலே, கிளியும்
       நாகணவாய்ப் பட்சியும், வீடுகளிலே வசிக்கும்
       பூனைகளும், உருவத்தை அறியாத சிறு குழந்தைகளும்
       அழுதன என்றால், பெரியவர்கள் அழுதது பற்றி
       என்னவென்று சொல்வது என்று கம்பர்
       பாடியிருக்கிறார். கம்பரே! தங்கள் பாட்டுக்கு நான்
       கூறிய பொருள் சரிதானே?

கம் : உண்மையே! இராகவன் காடு செல்கிறான் என்று
      கேள்விப் பட்டவுடன் பட்சிகளும் பூனைகளும்

      குழந்தைகளும் கூட அழுதன என்று பாடினதுண்டு. ஏன்,
      இன்னொரு பாடலும் உண்டே...

       "ஆவுமழுதவன் கன்றழுதவன் றலர்ந்த
        பூவுமழுத புனற்புள்ளழுத கள்ளொழுகுங்
        காவுமழுத களிறழுத கால்வயப்போர்
        மாவுமழுதன வம்மன்னவனை மானவே"

என்றும் பாடியிருக்கிறேன்.

நீதி : இராவணன் கூறினதை விட, இந்தப் பாடல் கொஞ்சம்
      கடினம்!

இரா : எளிதாக்கி விடலாம் நீதிதேவனே!

       'ஆவும் அழுத அதன் கன்று அழுத, அன்று அலர்ந்த
        பூவும் அழுத, புனல் புள் அழுத கள் ஒழுகும் காவும்
        அழுத, களிறு அழுத, கால்வயப்போர் மாவும் அழுத,
        அம்மன்னவனை மானவே" -இதுதான் கவிதை ஆவும்,
        காவும்,மாவும், களிறும், இப்படிப் பலவற்றைக் கவி
        சந்திக்கச் செய்ததாலே கொஞ்சம் சிரமமாக ஆகி விட்டது
        கவிதை! அழுத என்பது இடையிடையே அடிக்கடி
        வருகிறது, ஒரே பொருள் உணர்த்த கவிதையின் பொருள்
        இதுதான் – அந்தத் தசரத மன்னவனைப் போலவே
        பசு, அதன் கன்று, அன்று மலர்ந்த புஷ்பம், நீரிலே
        வாழும் பறவைகள், தேன் பொழியும் சோலை, தேரில்
        பூட்டப்படும் வலிவுள்ள குதிரைகள் இவை யாவும்
        அழுதன என்கிறார் கவி!

நீதி : ஏது, இராவணனே! கம்பரின் கவிதைகளை நுட்பமாக
      ஆராய்ந்திருக்கிறீரே!

இரா : எதிர்க்கட்சி வக்கீலாயிற்றே கம்பர்! அவருடைய
       வாய்மொழியிலுள்ளவைகளைக் கவனித்து தானே என்
       குற்றமற்ற தன்மையை நிரூபிக்க வேண்டும்?

நீதி : சரி! இராமன் வனம் புகுவது வேட்டு அயோத்தி ஒரே
      அழுகுரல் மயமாகி விட்டது. அதனால்...


இரா : (கைகேயியைப் பார்த்து) ஏனம்மா கைகேயி!
        இராமன் காடு போகிறான் என்பதைக் கேட்டு
        பூனையும், யானையும், குதிரையும், குழந்தையும்,
        பூவும்,காவும்,கிளியும், நாகணவாய்ப் பட்சியும்
        மனம் உருகி அழுதனவாமே அந்த நேரத்திலும்
        தங்கள் மனம் இளகவில்லையோ?
      
கை : இல்லை....

இரா : ஊரார் ஏசினர் நீதிதேவா! ஒரு மன்னரின்
      மனைவியைச் சொல்லத்தகாத மொழியினால் கூட
      ஏசினர். கொடியவளே! கொலைகாரி!' என்று தசரதன்
      ஏசினார்.ஊரார் என்ன சொன்னார்களாம்
      தெரியுமோ? கம்பரே கூறலாமோ?

கம் : எந்தப் பாடலைச் சொல்லப் போகிறீர்?

இரா : நீர் பாடியதைத்தான்! நான் என்ன கவியா,
       சொந்தமாக பாட! 'கணிகை காண் கைகேசி' என்று
       ஊரார் பேசினராம்! [கைகேயி கோபமாகப் பார்க்க]
       அம்மே! அரக்கனாம் என் மொழி அல்ல இது.
       அயோத்யா காண்டம்,நகர் நீங்கு படலம் 109ம்
       பாடல்...

கம் : கணிகை காண் கைகேசி என்றால் விலைமகள் என்று
      பொருள். நான் அப்படிப் பாடவில்லை. கொஞ்சம்
      இடைச் செருகல் புகுந்து விட்டது. நான் பாடினது
      'கணிகை நாண் கைகேசி' என்றுதான்...

இரா : பாட்டு பழுது பார்க்கப்பட்ட பிறகு பொருள் முன்பு
       இருந்ததை விட மோசமாகி விட்டது கம்பரே!...
       முன்பாவது கைகேயியை வேசி என்று கூறினீர்!
       இப்போது வேசையரும் கண்டு வெட்கப்படுவர்,
       கைகேயியின் கெட்ட குணத்தைக் கண்டால்
       என்றல்லவோ பொருள்?

கம் : வேறு விதமாகத்தான் இருக்க வேண்டும். நிதானமாக
      யோசித்தால்தான் முடியும். கைகேயியை நான்
      கணிகை என்று கூற முடியுமா?


இரா : கூறினீர்! வேறோர் சமயம் திருத்திக் கொள்ளும். சரி
       ஊரார் கண்டபடி ஏசினர். ஆனால் கேகயகுமாரியின்
       மனம் மாறவில்லை.

நீதி : ஆமாம்! கொஞ்சமும் இரக்கமில்லை....

இரா : அரக்கமாதல்ல, நீதிதேவா! கைகேயி அம்மை! தசரதன்
       சோகமுற்று 'மானே! மடமயிலே! கேகயன் மகளே!
       கேளடி என் மொழியை! பேயும் இரங்குமே
       பெண்கட்கரசே! நீ இரங்காயோ?” என்று எவ்வளவோ
       கெஞ்சினான். கைகேயி மன்னனின் புலம்பலைக்
       கேட்டும் மனம் இளகவில்லை. மன்னன் மூர்ச்சித்துக்
       கீழே விழுந்தான். அம்மையின் மனதிலே இரக்கம்
       எழவில்லை. கம்பர் கூறினார். மன்னர் பலர், எந்தத்
       தசரதனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்களோ,
       அப்படிப்பட்ட மன்னர் மன்னன் கைகேகியின் காலிலே
       விழுந்தான். கைகேசி சூழ்வினைப் படலம் 25வது
       செய்யுள். தன் மணாளன், மன்னர் மன்னன் தன் காலில்
       விழுந்து அழுது, கெஞ்சி, 'எனக்கு உயிர்ப்பிச்சை தர
       வேண்டும். என் மகன் இராமன் நாடாளாவிட்டால்
       போகிறது; காடு போகச் செய்யாதே! அவன் போனால்
       என் உயிர் நில்லாதே!' என்று உள்ளம் உருகிக்
       கதறுகிறான். கேகயகுமாரி அப்போதாவது இரக்கம்
       காட்டினதுண்டா? இல்லை! கோசலை அழுதபோது?
       இல்லை! சீதை மரவுரி தரித்தபோது? இல்லை! ஊரே
       புரண்டு அழுதபோது? இல்லை! துளியும் இரக்கம்
       காட்டியதில்லை. வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன்
       அன்றிரவு துயிலில் நிம்மதியாக ஈடுபட்டார்களாம்!
       கம்பர் கூறியுள்ளார். உண்மைதானே கம்பரே?

கம் : உண்மைதான்!
      
இரா : இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாதோர் அரக்கர்!
       உமது இலக்கணமல்லவா அது? கைகேயி அம்மையிடம்
       அந்த இரக்கம் ஒரு துளியும் இல்லையே! என், அரக்கர்

       குலமாக்கவில்லையே அம்மையை இரக்கமென்ற ஒரு
       பொருள் இல்லாத காரணத்தாலே நானிருந்த இலங்கை
       அழிந்தது என்றீரே, இரக்கத்தை எள்ளளவும் கொள்ளாத
       இந்த அம்மையார் இருந்தும் அயோத்திக்கு அழிவு வராத
       காரணம் என்ன? என் தங்கைக்குப் பங்கம்
       செய்தவர்களைப் பழிவாங்க வேண்டுமென்ற
       எண்ணம். என் கண்முன் சீதை கதறிய போதிலும்
       இரக்கப்படக் கூடாது — இரக்கத்துக்காக வேண்டி
       அரக்கர் குல அரச மங்கையின் அங்கத்தைத் துண்டித்த
       ஆரியர்களை வதைக்காது விட்டோமானால் அரக்கர்
       குலத்தையே ஆரிய குலத்தின் அடிமையாக்கி வைக்கும்
       இழிசெயல் புரிந்தவனாவோம் என்று எண்ணினேன்.
       அந்த எண்ணத்தின் முன் இரக்கம் தலை காட்டவில்லை.
       இரக்கம் காட்டாததற்காக நான் அழிந்துபடுவது!
       இரக்கமின்றி என் தங்கையைப் பங்கப்படுத்தி, வாலியை
       மறைந்திருந்து கொன்ற இராமன், தெய்வமென்று
       கொண்டாடப்படுவது தேன் தமிழிலே இந்தக்
       கம்பனுக்குப் பாட்டு கட்ட தெரிந்ததால் நீதிதேவா! இது
       சரியா? சீதையை நான் களவாடிச் சிறை வைத்தேன்.
       மூவர்கள் இதுபோல் பலமுறை செய்திருக்கிறார்களே!
       நான் சீதையின் சம்மதம் கிடைக்கட்டும் என்று
       சிந்தையில் மூண்ட காமத்தைக் கூட அடக்கினேன்.
       மூவர்கள் அழகிகளைக் கண்ட நேரத்தில், அடக்க
       முடியாத காமத்தால் ஆபாசங்கள் செய்திருக்
       கின்றனரே! எந்தத் தேவன் கற்பை மதித்தான்? எத்தனை
       ஆஸ்ரமங்கள் விபச்சார விடுதிகளாக இருந்ததற்குச்
       சான்று வேண்டும்? மானைக் காட்டி மயக்கினேன்
       என்று கூறினார்; முருகன் யானையைக் காட்டி
       மிரட்டினானே வள்ளியை! இங்கே உள்ள தேவரும்
       மூவரும் செய்யாததை நான் செய்ததாக ருஜுப்படுத்தும்
       பார்ப்போம்! சீதை போன்ற ஜெகன்மோகினி என்
       கரத்திலே சிக்கியும் சீரழிக்காது நான் விட்டதுபோல

       எந்தச் சிங்காரியையாவது தேவரும் மூவரும்
       விட்டிருப்பாரா? கூறுங்கள்! இரக்கம் இல்லை என்று
       குற்றம் சாற்றினது அக்ரமம்! அதற்காக இலங்கையை
       அழித்தது அநீதி என் வேலை தீர்ந்தது. இனி நீதியின்
       வேலை நடக்கட்டும்...

        [நீதிதேவன் திடீரென்று மயங்கிக் கீழே சாய்கிறான்.
        ஜூரிகள் எழுந்து நிற்கிறார்கள். நீதிதேவனுக்கு மயக்கம்
        தெளிந்த பிறகு தீர்ப்பு என்று கோர்ட் சேவகர்
        தெரிவிக்கிறார். 'அது நெடுநாளைக்குப் பிறகுதானே
        சாத்தியம்' என்று கூறிக் கொண்டே இராவணன்
        போய்விட கோர்ட் கலைகிறது. கம்பர் அவசரத்திலே
        கால் இடறிக் கீழே வீழ்கிறார்.]