நீளமூக்கு நெடுமாறன்/இளவரசி சந்திரிகா

கதை : இரண்டு


இளவரசி சந்திரிகா

ழைப்பாளிகள் நிறைந்த ஆரவார நாட்டில் அசமந்தன் என்னும் மகாராஜாவும் அகங்காரவல்லபி. என்னும் மகாராணியும் அரியணை ஏறினார்கள். அவர்கள் தங்கள் அரசாங்கத்தைச் சரிவர நடத்தாததால் நாட்டிலிருந்து பொதுமக்களால் அவர்கள் விரட்டப்பட்டார்கள்.

அதனால் அவர்கள் அயல் நாட்டுக்குச் சென்று தங்கள் முடியையும், ஆடை ஆபரணங்களையும் விற்றுச் சாப்பிட்டு வரலானார்கள். கடைசியில் எல்லாம் தீர்ந்துவிட்டது. அப்போது அசமந்த மகாராஜா அகங்காரவல்லபியைப் பார்த்து, "நாம் நாடு கடத்தப்பட்டு எவ்விதமான ஆதரவுமின்றி வாழ்ந்து வருகிறோம். நாமும் நம் குழந்தைகளும் பசியின்றி வாழ ஏதாவது வழி செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்வது என யோசிக்க வேண்டும். எனக்கோ அரசனாக இருப்பதைத் தவிர வேறு எவ்விதமான தொழிலும் வேலையும் தெரியாது. அரசனாக இருப்பது தான் எளிதான வேலை!" என்று சொன்னார்.

அகங்காரவல்லபி சுயநலக்காரி, குயுக்தியுள்ளம் படைத்தவள். அவள் இதைப் பற்றி ஒருவாரம் வரை யோசனை செய்துவிட்டு தன் கணவரான அசமந்த ராஜரிடம், "நாம் கவலைப்பட் வேண்டியதில்லை. ஏனென்றால் எனக்கு வலை பின்னத் தெரியும். வலையைக் கொண்டு நாம் மீன்களையும் பறவைகளையும் பிடித்துவிடலாம். உங்கள் முதல் தாரத்துப் பெண்களோ சோம்பேறிகளாக இருக்கிறார்கள். இன்னும் அவர்களிடமிருந்து தாங்கள் அரச வமிசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அகங்காரம் போகவில்லை. நம்மிடம் திரும்பி வராதபடி வெகு தூரத்திற்கு அவர்களை நாம் அனுப்பிவிட வேண்டும்." என்றாள்.

இந்த யோசனை அசமந்த ராஜரை மனம் குழம்பச் செய்தது. அவருக்கோ தம் புதல்விகளிடம் பாசம் அதிகம். அவர்களைப் பிரிய அவர் மனம் இடங்கொடுக்கவில்லை. ஆனால் மனைவியோ பேசிப் பேசி அவரைத் தன் யோசனைக்கு இணங்க வைத்துவிட்டாள். அதன்படி பெண்கள் இரண்டு பேரையும் அகங்காரவல்லபி மறுநாளே அழைத்துக் கொண்டு சென்று தான் போதுமென்று நினைக்கின்ற அளவு துரத்தில் விட்டு விடுவதென்று முடிவு செய்தார்கள். கடைசி மகளான இளவரசி சந்திரிகா தன் பெற்றோர்கள் பேசிக் கொண்டிருந்ததை மறைந்திருந்து கேட்டுவிட்டாள். ஆகவே அவள், பாலும் சோறும் எடுத்துக் கொண்டு தன் காவல் தெய்வமாகிய தேவதை அருளுடையாளைத் தேடிப் புறப்பட்டாள்.

வழி நடந்து செல்லும்போது அவளுக்குக் களை ப்பு அதிகமாகிவி ட்டது. அவள் பாதை யோரத்தில் இருந்து கொண்டு அழத் தொடங்கினாள். அப்போது ஒரு பெரிய குதிரை தாவியோடி வந்தது. அது சேனமிட்டுக் கடிவாளம் பூட்டப்பட்டிருந்தது. அதன் முதுகில் போர்த்தியிருந்த பட்டாடையில் வைரம் பதித்திருந்தது. அது ஜகஜோதியாய் மின்னியது. அது சந்திரிகாவைக் கண்டவுடன் நின்று அவளருகில் மேய ஆரம்பித்தது. பார்ப்பதற்கு அவளைத் தன் முதுகில் ஏறிக் கொள்ளும்படி அது செய்வது போலிருந்தது.

சந்திரிகா அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, “குதிரை குதிரை! என்னை என் காவல் தெய்வம் இருக்குமிடத்திற்குக் கொண்டு செல்கிறாயா? உனக்குக் கொள்ளும் புல்லும் தருகிறேன்!” என்று கேட்டாள்.

அதைக் கேட்டதும் அந்தக் குதிரை சந்திரிகாவின் முன் குன்ரிந்து கொடுத்தது. அதன் மீது சந்திரிகா ஏறிக்கொண்டாள். உடனே குதிரை பாய்ந்தெழும்பி ஒரு பறவையைப் போலப் பறந்து சென்றது. தேவதை அருளுடையாளின் குகைக்கு சந்திரிகாவைக் கொண்டு வந்து சேர்த்தது.

தேவதை அருளுடையாளின் முன்னால் சந்திரிகா மூன்று முறை வீழ்ந்து வணங்கின்ாள். "அன்னையே! உ1களுக்குப் படைக்கப் பாலும் சோறும் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக்கொண்டு எனக்கு ஆசி தரவேண்டும்" என்றாள்.

"வா, வா, சந்திரிகா என் அருகில் வா! நான் உனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும்!” என்றாள் தேவதை அருளுடையாள்.

பிறகு அவள் ஒரு தந்தச் சிப்பைக் கொடுத்துத் தன் கூந்தலை வாரும்படி கூறினாள்.

"சந்திரிகா! நீ ஏன் வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். உன் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டதை நீ ஒட்டுக் கேட்டுவிட்டாய். அவர்கள் உன்னையும், உன் அக்காமாரையும் திரும்பி வர முடியாத தொலை து ரத்தில் கொண்டு போய்விடப் போகிறார்கள். இதோ இந்த நூற்கண்டை எடுத்துக்கொள். இந்த நூல் எப்போதும் அறுந்து போகாது. உன் சிற்ற்ன்னை உங்களை வீட்டிலிருந்து அழைத்துச் செல்லும்போது இந்த நூலின் ஒரு நுனியை உன் வீட்டு வாசல் கதவில் முடிந்து விை. போகும் வழியில் நூலை விட்டுக்கொண்டே போ திரும்பவும் எளிதாக வழி கண்டுபிடித்து விடலாம்” என்று அந்த தேவதை சொன்னாள்.

பிறகு அத்தேவதை ஒரு நூல் கண்டுடன், பொன்னும் வெள்ளியும் இழைத்து நெய்த ஆடைகளைப் பரிசாகக் கொடுத்து முத்தமிட்டு சந்திரிகாவை மறுபடியும் குதிரையில் ஏற்றிவிட்டாள் குதிரை சில நிமிடங்களில் அவளை அவர்கள் தங்கியிருந்த குடிசைக்கு அருகில் கொண்டுவந்து விட்டுவிட்டது. அன்று இரவு சந்திரிகா தனக்கு தேவதை கொடுத்த வெகுமதிகளைத் தலையணையின் கிழே வைத்துக் கொண்டு படுத்து உறங்கினாள். என்ன நடந்த தென்று அவள் யாருக்கும் சொல்லவில்லை.

மறு நாள் பொழுது விடிந்தவுடன் அகங்கார வல்லபி தன் ஆடைகளை அணிந்து கொண்டு, பெண்களைக் கூப்பிட்டாள்.

முதலில் அசமந்த மகாராஜாவி ன் மூத்த மகளான காந்தாரி வந்தாள். அடுத்தாற்போல் அடுத்த மகளான மங்கள நாயகி வந்தாள். பிறகு கடைசி மகளான சந்திரிகா வந்தாள்.

“அடி பெண்களே! நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். அதன்படி என் அக்காள் வீட்டிற்கு நாம் போகவேண்டும். அவள் நம்மை வரவேற்றுபசரித்து நமக்கு நல்ல விருந்து வைப்பாள்!" என்று சொன்னாள் அகங்காரவல்லபி.

இரண்டு பெரிய பெண்களும், தன்னந் தனியாக அந்தக் குடிசையில் ஆடம்பரமின்றி வாழ்ந்து வர நேரிட்டதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்கள். இப்போது அரண்மனைக்குப் போகப் போகிறோம் என்ற வுடன் மிகவும் ஆனந்தமடைந்தார்கள். சந்திரிகாவும் ஆனந்தப்படுவதாகக் காட்டிக் கொண்டாள்.

அந்த மூன்று பெண்களும் மறுநாள் காலையில் தங்கள் சிற்றன்னையுடன் புறப்பட்டார்கள். அவர்களில் எல்லோருக்கும் பின்னால் கடைசியாகச் சென்றவள் சந்திரிகாதான். அவள் நூல் கண்டிலிருந்த நூலின் ஒரு ಶ್ಗ வீட்டுக் கதவில் க்ட்டிவிட்டு, வழி நெடுகிலும் நூலை விட்டுக்கொண்டே போனாள்! வெகு துாரம் காட்டுக்குள் சென்ற பின், அகங்காரவல்லபி இவ்வளவு தூரத்திலிருந்து தன் பெண்கள் திரும்பி வரமுடியாதென்று நினைத்தாள். ஆகவே, அவள் அவர்களைச் சிறிது நேரம் உறங்கிக் களைப்பாறச் சொன்னாள். அவர்களும் நடந்து வந்த அலுப்பால் நன்றாகத் துTங்கிவிட்டார்கள். ஆனால் சந்திரிகா மட்டும் துTங்கவில்லை; தூங்குவதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள். அகங்கார வல்லபி அவர்களை நடுக்காட்டில் அனாதரவாக விட்டுவிட்டு ஒசைப்படாமல் நழுவி தன் வீட்டிற்குத் திரும்பிவிட்டாள்.

பிறகு சந்திரிகா தன் அக்காள்மார்களை எழுப்பி, எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னாள். அவர்கள் அதைக் கேட்டு அழ ஆரம்பித்தார்கள். தங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் சென்றால் அவளுக்குத் தங்கள் பொம்மைகளையும் விளையாட்டுச் சாமான்களையும் கொடுப்பதாக வாக்களித்தார்கள். அவர்கள் சொன்னபடி நடக்கமாட்டார்கள் என்று தெரிந்திருந்தும், சந்திரிகா அன்புள்ளம் கொண்டவள் ஆகையால் அவர்களையும் அழைத்துக் கொண்டு திரும்பினாள். நூல் வந்த பாதையைப் பார்த்துக் கொண்டே அவர்கள் தங்கள் தந்தையும் சிற்றன்னையும் இருந்த குடிசைக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் குடிசையருகில் வந்து சேர்ந்த சமயம், அசமந்த ராஜா தம் மனைவியிடம் 'நீ என் சின்னமகள் சந்திரிகாவை மட்டுமாவது திரும்பக் கூட்டிக்கொண்டு வந்திருக்கவேண்டும். மற்றவர்கள் தங்களைத் தவிர வேறு யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. ஆனால் சந்திரிகா..." என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது கதவு தடதடவென்று தட்டப்பட்டது. "யார் அது?” என்று கேட்டார் அசமந்தராஜர்.

"உங்கள் பெண்கள்”

இதைக் கேட்டதும் அகங்கார வல்லபி நடுங்கிப்போனாள் "கதவைத் திறக்காதீர்கள். இது அவர்களுடைய ஆவிகளாக இருக்கலாம்" என்றாள் அவள்.

அசமந்தராஜரும் அவளைப் போலவே ஒரு பெரிய கோழை. இல்லாவிட்டால் அவர் ஏன் நாட்டைவிட்டு ஓடி வரவேண்டும் "நீங்கள் என் பெண்கள் அல்ல” என்று அவர் சொன்னார்.

"அப்பா கதவு இடுக்கு வழியாகப் பாருங்கள்; என்னை நீங்கள் அடையாளம் தெரிந்து கொள்ளாவிட்டால் நன்றாக எங்களை அடித்து உதையுங்கள்” என்றாள் சந்திரிகா.

அகங்கார வல்லபி அவர்களைத் திரும்பிப் பார்த்து ஆனந்தப்படுவதுபோல் நடித்தாள். எதையோ மறந்துவிட்டதால் அதை எடுத்துக்கொண்டு போகத் தான்மட்டும் திரும்பி வந்ததாகச் சொன்னாள். மூன்று பெண்களும் அவள் சொன்னதை நம்புவது போல் காட்டிக்கொண்டு படுக்கச் சென்றார்கள். சந்திரிகா தன் அக்காள் இருவரையும் அவர்கள் சொன்னபடி பொம்மைகளும் விளையாட்டுச் சாமான்களும் கொடுக்கும்படி கேட்டாள். உடனே அவர்கள் கோபங் கொண்டு அவளை அடித்தார்கள். அடிவலி தாங்கமுடியாமல் சந்திரிகா அழுது கொண்டேயிருந்தாள். அன்று இரவு அவள் சரியாகத் துரங்கவில்லை. மறுநாள் காலையில் வேறொரு பாதையில் மூன்று பெண்களையும், அழைத்துச் சென்று நிச்சயம் திரும்பி வர முடியாத இடத்தில் விட்டுவிட்டு வருவதாக அசமந்தராஜரிடம் அகங்கார வல்லபி சொல்லிக் கொண்டிருந்தாள். அது சந்திரிகாவின் காதில் விழுந்துவிட்டது.

உடனே சந்திரிகா மெல்லத் தன் படுக்கையில் இருந்து எழுந்தாள். ஒசைப்படாமல் வீட்டைவிட்டு வெளியில் வந்தாள். காட்டுமரங்களில் சில பழங்களைப் பறித்துக் கொண்டாள். தன் காவல் தெய்வத்தைப் பார்க்கப் புறப்பட்டாள். முதலில் அவளை ஏற்றிச்சென்ற அதே அருமையான குதிரை இப்பொழுதும் அவளைச் சுமந்து சென்றது. சில நிமிடங்களில் அவள் தேவதை அருளுடையாள் முன்வந்து நின்றாள். தான் கொண்டு வந்திருந்த பழங்களைத் தேவதைக்குப் படைத்தாள். தேவதை அதற்காக நன்றி கூறித் தானும் சில வெகுமதிகளைச் சந்திரிகாவுக்குக் கொடுத்தாள். பிறகு அவள் சந்திரிகாவைப் பார்த்து, "பெண்ணே, இப்பொழுது உனக்கு ஒரு பை நிறையச் சாம்பல் தருகிறேன். உன் சிற்றன்னை உங்களை நடுக்காட்டில் விட்டுவிட்டு வருவதற்காக உங்கள் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லும்போது சாம்பலை வழி நெடுகத் தூவிக்கொண்டே போ. அதில் உன் காலடித் தடங்கள் பதிந்திருக்கும். அந்த அடையாளத்தைக் கொண்டு நீ வீட்டுக்குத் திரும்பி விடலாம். ஆனால், உன். அக்காள்மார்களை உன் கூடக் கூட்டிக்கொண்டு வராதே அவர்கள் பொல்லாதவர்கள். அவர்களை வீட்டுக்கு கூட்டிவந்தால், மறுபடி நான் உன்னைப் பார்க்கவேமாட்டேன்!” என்றாள்.

ஒரு பை சாம்பலையும், ஒரு பெட்டி வைரத்தையும் தேவதையிடமிருந்து சந்திரிகா வாங்கிக் கொண்டு குதிரையேறித் தன் குடிசைக்கு வந்து சேர்ந்தாள். 

மறுநாள் காலையில் அகங்காரவல்லபி தன் பெண்களை அழைத்து, "அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவருக்கு மருந்து கொடுக்கக் காட்டில் இருந்து சில மூலிகைகள் பறித்துக் கொண்டு வரவேண்டும். வாருங்கள். நாம் போய் அந்த மூலிகைகளைத் தேடிப் பறித்துக்கொண்டு வருவோம்" என்று கூறினாள்.

அவ்வாறு சிற்றன்னையோடு போகும்போது, காவல் தெய்வம் சொல்லியபடி சந்திரிகா வழி நெடுகிலும் சாம்பலைத் தெளித்துக் கொண்டு போனாள்.

மறுபடியும் அவர்கள் நடுக்காட்டில் தூங்குகிற சமயம் பார்த்து, அகங்காரவல்லபி அவர்களை அனாதரவாக விட்டுவிட்டு வந்துவிட்டாள். அக்காள் இரண்டு பேரும் அழுத அழுகையைப் பார்க்கப் பொறுக்காமல், சந்திரிகா அவர்களையும் கூட்டிக்கொண்டு தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அசமந்தராஜரும், அகங்காரவல்லபியும் அவர்களைத் திரும்பக் கண்டு பெரிதும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் இருவரும் அன்று இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்து, தங்கள் பெண்களை விரட்டியடிப்பதற்கு வேறொரு திட்டம் வகுத்தார்கள்.

சந்திரிகா, தன் அக்காள்மார்களிடம் தான் தேவதையின் சொல்லை மீறி அவர்களையும் கூடக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டபடியால், இனிமேல் அந்தக் காவல் தெய்வம் உதவி செய்வாள் என்று எதிர்பார்க்க முடியாது என்றாள்.

"பூ! அந்தக் கிழட்டுத் தேவதை அருளுடையாளுக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறதா? நம் சிற்றன்னை மறுபடியும் நம்மை நடுக்காட்டில் விட்டு வருவதற்காக நம்மை அழைத்துச் செல்லும்போது நாம் பயறுகளை எடுத்துக்கொண்டு செல்வோம். நெடுக அவற்றைப் போட்டுக் கொண்டே போனால், திரும்பவும் நாம் வழியைக் கண்டு பிடித்துவிடலாம்" என்று இளைய அக்காள் மங்கள நாயகி சொன்னாள். அது பிரமாதமான யோசனையென்று மூத்தவள் காந்தாரி எண்ணினாள். இரண்டு பேரும் பயறுகளைக் கட்டி வைத்துக் கொண்டார்கள். ஆனால், சந்திரிகா தன்னிடமிருந்த துணிமணிகளையும் வைரப் பெட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

அம் மூன்று பெண்களுக்காக மூன்று இளவரசர்கள் ஒரு துார தேசத்தில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர்களிடம் அழைத்துச் செல்வதாகவும் சிற்றன்னை அகங்காரவல்லபி பொய் சொன்னாள்.

காட்டுக்குள் வெகு துாரம் சென்ற பின் களைத்துப்போய் மூன்று பெண்களும் தூங்கும்போது அகங்கார வல்லபி அவர்களை அனாதைகளாக விட்டுவிட்டு ஓடி விட்டாள். அவர்கள் விழித்து எழுந்தபோது அவர்களைக் காட்டிலும் தன் காவல் தெய்வத்திடமே அதிக நம்பிக்கை வைத்திருந்த சந்திரிகா அழலானாள்.

"மூடப் பெண்ணே வாயை மூடு நாங்கள் வீடு செல்லும் வழியைக் கண்டு பிடிக்கிறோம். நாங்கள் கேட்கும்வரை நீ எதுவும் யோசனை சொல்ல வேண்டாம்” என்று அவளை காந்தாரி கோபித்துக் கொண்டாள்.

ஆனால் வழியில் போட்டு வந்த பயறுகளைக் காட்டுப் புறாக்கள் கொத்தித் தின்று விட்டபடியால், அவர்களால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. பெண்களும் துயரத்தோடு அழத் தாடங்கிவிட்டார்கள். அப்போது அவர்களுக்கு சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. ஆனால், ஒரு கொட்டையைக் கண்டார்கள் . அந்தக் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பை யார் சாப்பிடுவது என்று அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது! 

கடைசியில் சந்திரிகா, "இதில் இருக்கும் பருப்பு நம்மில் ஒருவருக்குக்கூட ஒருவேளைப் பசியைக்கூட அடக்க முடியாது. ஆகவே இதைத் தரையில் ஊன்றித் தண்ணிர் ஊற்றிவருவோம். இது வளர்ந்த பிறகு நமக்கு நிறையப் பழங்கள் கிடைக்கும்” என்று சொன்னாள்.

ஆகவே அவர்கள், கிடைத்த இலை தழைகளைத் தின்று கொண்டு அந்தக் கொட்டையை ஊன்றித் தினந்தோறும் தண்ணிர் ஊற்றி வந்தார்கள். மரம் வளர்ந்த பிறகு காந்தாரி அதில் ஏற முயன்றாள். ஆனால் கனம் தாங்காமல் அது வளைந்து கொடுத்தது. அதில் சந்திரிகா மட்டும்தான் ஏறமுடிந்தது. ஆனால், அவள் மேலே ஏறிப் பார்த்தும் எதுவும் தென்படவில்லை. அவர்கள் தொடர்ந்து அதற்குத் தண்ணிர் ஊற்றி வந்தார்கள்! மரமும் தினமும் உயரமாக வளர்ந்தது. ஒரு நாள் சந்திரிகா அந்த மரத்தின் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தபோது, மங்கள நாயகி, காந்தாரியிடம் வந்து, சந்திரிகா வைத்திருந்த அழகான ஆடைகளையும் வைரப் பெட்டியையும் தான் கண்டுபிடித்ததாகக் கூறினாள். அவர்கள் உடனே அந்த வைரப் பெட்டியில் இருந்த வைரங்களை எடுத்துக் கொண்டு அதில் கரிகளை நிரப்பி வைத்து விட்டார்கள். கீழே இறங்கி வந்த சந்திரிகா அவர்கள் மீது சிறிதும் சந்தேகப்படவில்ல்ை. அந்த மரம் எவ்வளவு உயரம்வரை வளரும் என்பதிலேயே அவள் நினைவும் கவனமும் சென்று கொண்டிருந்தன.

ஒருநாள் மரத்தின் உச்சிக்கு ஏறிய சந்திரிகா, 'அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய மாளிகை தெரிகிறது என்றும், அதன் சுவர்கள் நீலமணிக் கற்களாலும் மரகதக் கற்களாலும் ஆனவை என்றும் அதன் கூரை முழுதும் வைரமாயிருக்கிறதென்றும் அதன் கோபுரங்களில் தங்கமணிகள் இருக்கின்றன என்றும் காற்றாடிகள் காற்றடிக்கும் திசையில் திரும்பி நிற்கின்றன” என்றும் கூறினாள். அவளுடைய அக்காள் இருவரும், தாங்களே மரத்தின் உச்சியில் ஏறிப் பார்க்கும்வரை அதை நம்ப மறுத்து விட்டார்கள்.

அந்த மாளிகையில் செல்வ மிகுந்த இளவரசர்கள் யாரும் இருக்கலாமென்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே, சந்திரிகா துரங்கும்போது, அவளுடைய விலையுயர்ந்த ஆடைகளை அவர்கள் இருவரும் அணிந்து கொண்டு, வைரங்களையும் எடுத்து வைத்துக் கொண்டார்கள். தூங்கி எழுந்த சந்திரிகா அவர்களுடைய அலங்காரங்களைக் கண்டு, தனக்கும் ஏதாவது நல்ல ஆடைகள் கொடுக்க வேண்டுமென்றும், தான் ஒரு பிச்சைக்காரியைப் போல் அவ்வளவு பெரிய மாளிகைக்கு வருவது நன்றாக இருக்காது என்றும் கேட்டாள். ஆனால் அக்காள்கள் இருவரும் சிரித்து விட்டு, அவள் மேற்கொண்டு எதுவும் பேசினால், அடிப்பதாக மிரட்டினார்கள். ஆகவே சந்திரிகா ஒரு வேலைக்காரியைப் போல, எவ்விதமான நல்ல ஆடைகளுமின்றி அவர்கள் பின்னால் சென்றாள். அந்த மாளிகைக்குப் போனதும் தாங்கள் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்றும், சந்திரிகாவைச் சமையல் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும், காந்தாரியும் மங்களநாயகியும் வழியில் பேசிக் கொண்டு சென்றார்கள். சந்திரிகா தங்கள் தங்கை என்று யாரும் தெரிந்து கொள்ளாதபடி மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் திர்மானித்துக் கொண்டார்கள்.

அவர்கள் அந்த மாளிகையை நெருங்க நெருங்க அது மிகவும் பெரிதாகத் தோன்றியது. அவர்கள் அதன் முன் வாசற் கதவைத் தட்டியபோது ஒரு பயங்கரமான கோர உருவமுடைய கிழவியொருத்தி வந்து கதவைத் திறந்தாள். அவளுடைய அவலட்சணமான முகத்தில், நெற்றியின் நடுவில் ஒரே ஒரு பெரிய கண் இருந்தது. அவள் பதினைந்து அடி உயரமும் முப்பதடி அகலமும் இருந்தாள். 

"பாவிப் பெண்களே! இது இராட்சதனுடைய கோட்டை என்பது உங்களுக்குத் தெரியாதா? அவனுக்கு ஒருவேளை பசியடங்குவதற்கு நீங்கள் மூன்று பேரும் சேர்ந்தாலுங்கூட போதாதே! ஆனால் என் கணவனைவிட நான் நல்லவள். உங்கள் மூன்று பேரையும் ஒரே தடவையில் தின்று விடமாட்டேன். ஆகவே நீங்கள் இன்னும் மூன்று நான்கு நாட்களுக்கு உயிரோடு இருக்கலாம்” என்று அந்த ஒற்றைக்கண் இராட்சசி கூறினாள்.

அதைக் கேட்ட இளவரசிகள் அங்கிருந்து ஒடலானார்கள். ஆனால் இராட்சசியின் கைகள் அவர்களுடையதைப் போல ஐம்பது மடங்கு நீளமாக இருந்தபடியால், அப்படியே மூன்று பெண்களையும் வளைத்துப் பிடித்து மூவரையும் ஒரு நிலவறைக்குக் கொண்டு சென்றாள். பசுமையான சந்திரிகாவை அப்போதே கிரை பொறித்துச் சாப்பிடுவதுபோல் சாப்பிட்டு விட வேண்டுமென்று அந்த அரக்கிக்குத் தோன்றியது. அதற்காக எண்ணெய் எடுத்து வரப்போனாள். அப்போது இராட்சதன் வருகிற சப்தம் கேட்டது. மூன்று பெண்களையும் அவனுக்குத் தெரியாமல் தானே சாப்பிட எண்ணிய இராட்சசி அவர்களை ஒரு தொட்டியில் போட்டு மூடிவைத்தாள். அந்தத் தொட்டியின் பக்கவாட்டில் இருந்த துவாரத்தின் வழியாகப் பார்த்த போது அந்த இராட்சசியைப் போல் ஆறு மடங்கு உயரமுள்ள ஒரு பெரிய இராட்சதனை மூன்று பெண்களும் கண்டார்கள். அவனுடைய பேச்சுக்குரலின் ஒசையில் அந்த மாளிகை ழுவதும் அதிர்ந்தது. அவனுக்கும் நெற்றியின் நடுவில் ஒரே ஒரு பெரிய கண்தான் இருந்தது. அவன் ஒரு நீண்ட தடிக் கம்பை ஊன்று கோலாகப் பிடித்திருந்தான். காற்றை மூக்கினால் இழுத்துப் பார்த்த அந்த இராட்சதன் தன் மனைவி தனக்குத் தெரியாமல் சில குழந்தைகளை மறைத்து வைத்திருப்பதைக் குறிப்பிட்டுக் கோபித்துக் கொண்டான்.

“இங்கே குழந்தைகள் யாரும் இல்லை! இரண்டொரு வினாடிகளுக்கு முன் நான் உரித்துத் தின்ற ஒரு மந்தை ஆடுகளின் கரிவாசம்தான் வீசுகிறது” என்றாள் அவன் மனைவியான இராட்சசி.

ஆனால், அவள் சில குழந்தைகளை ஒளித்து வைத்திருக்கிறாள் என்று இராட்சதன் நிச்சயமாகத் தெரிந்து கொண்டான். அதைத் தெரிந்து கொண்ட இராட்சசி பயந்து போய்க் கடைசியில் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டாள். ஆனால், “இந்தப் பெண்களை நாம் வீட்டு வேலை பார்ப்பதற்கு வைத்துக் கொள்ளலாம். அவர்கள் நமக்குச் சமைத்துப் போடவும் குற்றேவல் வேலை செய்யவும் பயன்படுவார்கள். அவர்களைச் சாப்பிடவேண்டாம்” என்று வேண்டிக் கொண்டாள்.

சிறிது நேரம் இராட்சதனும் இராட்சசியும் சண்டை போட்டுப் பேசிக் கொண்டார்கள். முதலில் இராட்சதன் மூன்று பெண்களையும் உடனே சாப்பிட்டுவிட வேண்டும் என்றான். பிறகு இரண்டு பேராவது வேண்டும் என்றான். பிறகு ஒரே ஒரு பெண்ணையாவது தின்று சுவைக்க வேண்டும் என்றான். ஆனால் அவன் மனைவி பேசிப் பேசிக் கடைசியாக ஒருவரையும் சாப்பிடாமல் இருக்கும்படி ஒப்புக் கொள்ள வைத்தாள்.

அதன் பிறகு அப் பெண்களைப் பார்க்க வேண்டும் என்று இராட்சதன் சொன்னான். பெண்கள் மூவரும் தொட்டியைவிட்டு வெளியில் நகர்ந்து வந்து அவன் எதிரில் நடுநடுங்கிக் கொண்டே நின்றார்கள். அவர்களுக்குச் சமைக்கவும், வீட்டைச் "சுத்தமாக வைத்துக் கொள்ளவும் தெரியுமா என்று இராட்சதன் கேட்டான். அவர்கள் எல்லா வேலைகளும் செய்யத் தெரியும் என்றும் பிரமாதமாகச் சமைக்கத் தெரியும் என்றும் கூறினார்கள். உடனே சமைக்கும்படி சந்திரிகாவிடம் இராட்சதன் சொல்லிவிட்டு சட்டி காய்ந்து விட்டது என்பதை அவள் எப்படி தெரிந்து கொள்ளுவாள் என்று கேட்டான்.

"மகா பிரபோ! எனக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும் சட்டியில் கொஞ்சம் வெண்ணெயைப் போட்டு அதை நாவிலிட்டுச் சுவைத்துப் பார்த்து அதன் சூட்டைக் கண்டு பிடிப்பேன்’ என்றாள் இளவரசி சந்திரிகா.

"சரி நெருப்பை மூட்டி, உடனே சமைக்கத் தொடங்கு!” என்று இராட்சதன் கட்டளையிட்டான்.

காந்தாரியும் மங்களநாயகியும் பூரி சுடுவதற்காக மாப்பிசைந்து கொண்டிருந்தார்க்ள். சந்திரிகா இருப்புச் சட்டியைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அதற்குள் இராட்சதன் நூறு ஆடுகளையும், நூறு பன்றிக் குட்டிகளையும் உரித்துச் சாப்பிட்டு விட்டான். இருந்தும் அவன் பசியடங்காமல், சந்திரிகாவைப் பார்த்து, 'இன்னுமா சட்டி காயவில்லை?” என்று கத்தினான்.

சந்திரிகா ஆயிரம் ராத்தல் வெண்ணெயைச் சட்டியில் போட்டு விட்டு, 'மகாபி ரபோ! வழக்கம்போல் நான் இந்த வெண்ணெயைத் தொட்டு தொட்டு நாவி லிட்டுப் பார்த்தால் சொல்லிவிடுவேன். ஆனால், சட்டி எனக்கு எட்ட வில்லையே! வெண்ணெய் எனக்கு எட்டாத ஆழத்தில் அல்லவா உருகிக் கொண்டிருக்கிறது?’ என்று பதிலளித்தாள்.

'எனக்கு வெண்ணெய் எட்டும்! நானே பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே நாக்கை நீட்டிக் கொண்டு சட்டியினுள் குனிந்தான் இராட்சதன். அவன் குனிந்த வேகத்தில் ஒரேயடியாக அவன் முகம் சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த நெய்க்குள் அமுங்கி விட்டபடியால் அப்படியே முகம் வெந்து கருகிச் சாம்பலாகி விட்டான். எதற்காகவோ நிலவறைக்குச் சென்று திரும்பி வந்த இராட்சசி தன் கணவன் முண்டமாய் போனதைக் கண்டு நெஞ்சு உருகி வருத்தப்பட்டாள். ஆனால், மூன்று இளவரசிகளும் சேர்ந்து அவளுக்கு ஆறுதல் கூறினார்கள். அவள் உடுத்தியிருக்கிற கரடித்தோல் சேலையை அவிழ்த்து எறிந்துவிட்டு அழகான பட்டுச்சேலையுடுத்திக் கொண்டால் இன்னும் நல்ல இராட்சதன் ஒருவனைக் கணவனாகப் பெறலாம் என்று யோசனை கூறினார்கள். அதைக்கேட்டு ஒற்றைக் கண் இராட்சசி களிப்படைந்தாள். பிறகு மூன்று பெண்களும் அவளுக்கு சிவிச் சிங்காரித்து அழகு படுத்துவதாகச் சொன்னார்கள். அவள் கிழே உட்கார்ந்தாள். மூன்று இளவரசிகளும் சீப்புகளை எடுத்துக் கொண்டு அவள் முதுகுப் பக்கம் போனார்கள். மற்ற இரு சகோதரிகளும் இராட்சசிக்குச் சிவிக் கொண்டிருக்கும்போது சிந்திரிகா ஓசைப் படாமல் ஒரு கோடாரியை எடுத்து வந்து அந்த இராட்சசியின் முதுகில் ஓங்கிப் போட்டு அவளை இரண்டாக பிளந்து விட்டாள்.

இவ்வாறு இராட்சதனிடமிருந்தும் அவனுடைய கொடிய மனைவியிடமிருந்தும் தப்பிய மூன்று பெண்களும் ஆடிப் பாடிக் கொண்டே அந்த மாளிகையைச் சுற்றி சுற்றி வந்தார்கள். அன்று இரவு பட்டு மெத்தைகளில் ஏறிப்படுத்துத் துங்கினார்கள். காந்தாரியும், மங்களநாயகியும், "அப்பா அம்மாவுடன் இருந்ததைவிட நாம் இப்போது பணக்காரிகளாகி விட்டோம். நாம் இனி அழகாக உடுத்திக் கொண்டு அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று நம் செல்வத்தையும் சிங்காரத்தையும் வெளிக்காட்டி அருமையான கணவர்களைத் தேடித் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் சந்திரிகா மட்டும் அந்த மாளிகையிலேயே இருந்து வேலைகளைப் பார்த்துவர வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.

ஒவ்வொரு நாளும் சந்திரிகா, மாளிகையைக் கூட்டிப் பெருக்கி மெழுகித் துடைத்து, சோறாக்கிச் சமைத்து பாத்திரங்களை விளக்கிக் கழுவி வைப்பாள். அவள் அக்காள்மார்களோ, தாங்கள் புதிது புதிதாகப் போய்ப் பார்த்து வந்த நகரங்களைப் பற்றியும், அங்கு கண்ட மக்களைப் பற்றியும், கதையளப்பார்கள். பெரிய பணக்காரர்கள் வீட்டுக்கு அவர்கள் விருந்துக்குப் போய் வந்ததைப் பற்றியும் அங்கு வந்திருந்த இளவரசன் ஒருவன் தங்களைக் கவனித்ததைப் பற்றியும் பெருமையாகச் சொல்லுவார்கள். அதையெல்லாம் கேட்டுப் பாவம் சந்திரிகா பெருமூச்செறிவாள். அவளை ஒரு வேலைக்காரியைப் போல் நடத்தியதோடு அவளை முன்னைக் காட்டிலும் மோசமாகவும் வெறுப்பாகவும் அக்காள்கள் இருவரும் நடத்தலானார்கள்.

ஒரு நாள் மாலை சந்திரிகா அடுப்பருகில் உள்ள கரிக்குவியலின் மேல் உட்கார்ந்திருந்தபோது கரித்துண்டுகளின் நடுவில் ஒரு சிறு சாவியைக் கண்டாள். அது கரிப்பிடித்துப் பழையதாய் இருந்தது. ஆனால், தேய்த்துக் கழுவிப் பார்த்த்போது சுத்தமான தங்கத்தினால் செய்யப்பட்ட சாவியாகத் தோன்றியது. உடனே சந்திரிகா அம்மாளிகை முழுவதும் ஒடியோடி அது சேரக் கூடிய பூட்டு எங்க்ேயிருக்கிறதென்று தேடினாள்.

கடைசியில் அவள் ஒரு பெட்டகத்தை கண்டுபிடித்து அதைத் திறந்து பார்த்தபோது அதற்குள், நகைகளும், வைரங்களும், பலவகையான உடுப்புகளும், சேலைகளும் இருப்பதைக் கண்டாள். தான் கண்டு பிடித்ததை அவள் தன் சகோதரிகளுக்குச் சொல்லவில்லை. மறுநாள் அவர்கள் மாளிகையை விட்டு வெளியேறும்வரை சந்திரிகா காத்திருந்தாள். பிறகு அவள் அந்தப் பெட்டகத்திலிருந்து மிகவும் அழகான டைகளையும், நகைகளையும் எடுத்து அணிந்து கொண்டாள். அப்போது அவளிடம் ஏற்பட்ட ஒரு மினு மினுப்பு, சூரியனும், சந்திரனும் சேர்ந்துவந்தால் ஏற்படக்கூடிய ஒளியைக் காட்டிலும் மிகப் பிரகாசமாக இருந்தது. பிறகு அவளும் அடுத்த நகரத்திலுள்ள கலைமாளிகையின் விருந்துக்குச் சென்றாள். அவள் அணிந்திருந்த ஆடைகள் அவளை மிகவும் அழகுடையவளாக்கி விட்டபடியால் அந்த விருந்திற்கு வந்திருந்த அவளுடைய சகோதரிகள் அவளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. விருந்துக்கு வந்திருந்த எல்லோருடைய கண்களும் சந்திரிகாவின் மேலேயே பதிந்திருந்தன. விருந்து நடத்திய வீட்டுக்காரி அவளை வரவேற்று உபசரித்து, அவள் பெயரைக் கூறும்படி கெஞ்சிக்கேட்டுக் கொண்டாள். அதற்கு சந்திரிகா, தன் பெயர் சுந்தரியென்று மாற்றிச் சொன்னாள். அவளுடைய சகோதரிகளுங்கூட அவள் மீது பொறாமை கொண்ட போதிலும் மற்றவர்கள் போலவே அவளைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினார்கள். அவள் யார் என்று அவர்கள் தெரிந்து கொள்ளவேயில்லை.

விருந்து ஆ அவர்களுக்கு முன்னாலேயே சந்திரிகா தன் வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டாள். அக்காள்கள் இருவரும் விட்டுக்குத் திரும்பி வந்தவுடன், சந்திரிகாவிடமே "அடியே சந்திரிகா, இன்று நாங்கள் ஓர் அழகான இளவரசியைப் பார்த்தோம். அவள் பெயர் சுந்தரியாம்! அவளது உடல் பணிபோல் வெண்மையாயிருந்தது. அவள் கன்னங்கள் ரோஜாப் பூப்போல் சிவந்திருந்தன உன்னைப் போல் ஒர் அவலட்சண மனிதக் குரங்காக அவள் இல்லை. அவள் எவ்வளவு அழகாக இருந்தாள்! அவள் அணிந்திருந்த பொன்னும் வைரமும்தான் அவள் உடம்புக்கு எவ்வளவு அழகாக இருந்தன!” என்று புகழ்ந்து சொன்னார்கள்.

"நான் அப்படித்தான் இருந்தேன்!” என்று தன் வாய்க்குள் சொல்லிக் கொண்டாள் சந்திரிகா.

"என்ன முணு முணுக்கிறாய்?" என்று அவர்கள் கேட்டதற்கு சந்திரிகா, "ஒன்றுமில்லை" என்று சொல்லி விட்டாள். ஒவ்வொ நாளும் அவள் புதுப்புது ஆடைகளையும் அணிகளையும் எடுத்து அணிந்து கொண்டு தன் சகோதரிகள் அறியாமலேயே விருந்துக்குப் போய் வந்தாள். ஒருநாள் அவள் தன் சகோதரிக்ளுக்கு முன்னால் வீட்டுக்கு வந்துவிட வேண்டுமென்று வெகு அவசரமாகத் திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் அவளுடைய காற்செருப்பு ஒன்று நழுவி விழுந்துவிட்டது. அது பவழத்தால் பூவேலை செய்து செம்பட்டினால் உருவாக்கப்பட்ட செருப்பு.

இருட்டில் அதைத் தேடிக் கொண்டிருந்தால் நேரமாகி விடுமென்று சந்திரிகா ஒற்றைச் செருப்புடனேயே தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

மறுநாள் அந்த ஊர் அரசரின் மகனான இளவரசன் சுந்தராங்கதன் வழியில் கிடந்த சந்திரிகாவின் ஒற்றைச் செருப்பைக் க்ண்டெடுத்தான். அதன் அழகு அவனைக் கவர்ந்தது. அந்த வினாடியிலிருந்து அவன் அந்தச் செருப்பைத் தன் கையிலேயே வைத்துக்கொண்டான். அன்று முதல் இளவரசன் சுந்தராங்கதன் எதுவும் சரியாகச் சாப்பிடாமல் நாளுக்கு நாள் மெலிந்து வந்தான். அரசனும், அரசியும் தங்கள் மகன் மீது மிக அன்புடையவர்கள். அவர்கள் மருத்துவர்களைக் கூட்டிவந்து காண்பித்தார்கள். ஆனால் அவர்கள் தங்களால் வைத்தியம் செய்யக்கூடிய நோயல்ல இது என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே, இளவரசன் யாரோ ஒர் அழகி மீது ஆசை கொண்டு விட்டான் என்று திர்மானித்தார்கள்.

மிக மிக அழகான அரச குடும்பத்துப் பெண்களை யெல்லாம் அரசி வரவழைத்து சுந்தராங்கதனுக்குக் காட்டி அவன் விரும்புகிற பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுப்பதாகச் சொன்னாள். ஆனால் இளவரசன் எந்த அரசகுலப் பெண்ணையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

"மகனே! உன் மனத்தில் இருப்பதைச் சொல். அவள் ஒர் ஆட்டிடைச்சியாக இருந்தாலும் உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்" என்றாள் அரசி. அதன் பிறகுதான் இளவரசன் சுந்தராங்கதன் தான் எடுத்து வைத்திருந்த அழகான செருப்பைத் தன் தாயிடம் எடுத்துக் காட்டினான்.


"அம்மா என் நோய்க்குக் காரணம் இதுதான். வேட்டைக்குப் போகும்போது ஒருநாள் இதைக் கண்டெடுத்தேன்! எந்தப் பெண்ணுடைய காலுக்கு இது சரியாக இருக்கிறதோ அவளைத்தான் நான் திருமணம் செய்துக் கொள்வேன்!” என்றான்.

'மகனே! அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்கச் செய்கிறேன்” என்றாள் அரசி.

அன்றே நாடெங்கும் நகரெங்கும் அரசக் கட்டளை பறைசாற்றப்பட்டது. அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அரண்மனைக்கு வந்து, இளவரசன் கையில் உள்ள செருப்பைத் தங்கள் காலில் போட்டுப் பார்க்க வேண்டுமென்று முரசறையப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக வந்து பெண்கள் பலர் அந்தச் செருப்பைக் காலில் போட்டுப் பார்த்தார்கள். ஆனால் அந்தப் பவழப்பூ பின்னிய பட்டுச் செருப்பு யாருடைய காலுக்கும் சரியாக இல்லை. 

ஒருநாள் காந்தாரியும் மங்களநாயகியும் எப்போதையும் காட்டிலும் அதிக அழகாகத் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள்.

"நீங்கள் எங்கே போகிறீர்கள்?’ என்று சந்திரிகா கேட்டாள்.

"இளவரசர் கண்டெடுத்த ஒரு செருப்பைக் காலில் மாட்டிப் பார்க்கப் போகிறோம். அது எந்தப் பெண்ணின் காலுக்கு பொருந்துகிறதோ அந்தப் பெண்ணையே இளவரசர் திருமணம் செய்துக் கொள்ளுவாராம்!” என்று அவர்கள் சொன்னார்கள்.

"அப்படியானால் நானும் வரட்டுமா?" என்று கேட்டாள் சின்னவள் சந்திரிகா.

"நீயா? அற்பக் கழுதையே! பேசாமல் போய் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு இங்கேயே கிட!” என்று மூத்த பெண்கள் இருவரும் அவளை அதட்டி அடக்கினார்கள்.

அவர்கள் சென்ற பிறகு சந்திரிகா தானும் அழகாக ஆடையணிந்து கொண்டு_ இளவரசனின் அர்ண்மனைக்குப் போவதென்று திர்மானித்தாள். ஆனால், அவள் சேலையுடுத்திச் சீவி சிங்காரித்துப் பொட்டிட்டுக் கொண்டு புறப்படத் தயாரான போதுதான், எந்த இடத்தில் இந்தச் செருப்புப் போட்டுப் பார்க்கிறார்கள் என்று தனக்குத் தெரியாதே என்று யோசித்தாள். அப்போது முன்பு இருமுறை தேவதை அருளுடையாளிடம் அவளை ஏற்றிக் கொண்டு சென்ற அதே மாயக்குதிரை அவள் முன்னே வந்து நின்றது.

"நீ என் காவல் தெய்வத்திடமிருந்து வருகிறாய் என்பது எனக்குத் தெரியும். என்னை எங்கு கொண்டு செல்லவேண்டும் என்பது உனக்குத் தெரியும்!” என்று சந்திரிகா சொல்லியவாறு அந்தக் குதிரையின் மேல் ஏறிக் கொண்டாள். குதிரை உடனே தாவிக் குதித்துப் புறப்பட்டது.

வழியில் சென்று கொண்டிருந்த காந்தாரியும், மங்களநாயகியும் குதிரைச் சத்தத்தையும் அது ஒடும் போது ஒலித்த மணியோசையையும் கேட்டு, யார் அப்படி வருவது என்று பார்ப்பதற்காகத் திரும்பினார்கள். அது தங்கள் தங்கையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்!

"பார்த்தாயா? அவள் சந்திரிகாதான்!” என்று வியப்புடன் கூறினாள் காந்தாரி. ஆனால் சந்திரிகா சிரித்துக்கொண்டே குதிரை மீது சென்றாள். பாதையில் ஒரு பள்ளத்தில் கிடந்த சேறு கலந்த நீரைக் குதிரை தன் பின்னங்காலால் பொறாமைக்காரிகள் இருவரின் மீதும் வாரியடித்துவிட்டுப் பறந்து சென்றது.

அவர்களால் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. தங்கள் தங்கை சந்திரிகாவின் அற்புதமான அலங்காரத்தைப் பற்றியும், அவளுக்கு கிடைத்த கம்பீரமான குதிரையைப் பற்றியும் அவர்கள ஆசசரியப்பட்டுப் பேசிக் போதே சந்திரிகா அரண்மனக்குப்சேர்ந்து விட்டாள்.

அவளயும் அவள் அழகையும் பார்த்தவர்கள் அவள் ஒரு பெரிய நாட்டை ஆளும் பேரரசி என்றே நினைத்தார்கள். வழியில் நின்ற படைவீரர்கள் அவளைக் கண்டவுடன், அணிவகுப்பு மரியாதை செய்தார்கள்; காவலர்கள், கைதூக்கிச் சலாம் செய்தார்கள். வீரர்கள் முரசு கொட்டினார்கள். கோட்டை வாசற் கதவுகள் அவளைக் கண்டவுடன் எவ்விதமான கேள்வியுமில்லாமல் உடனடியாகத் திறந்தன.

சந்திரிகா நேராகச் சென்று இளவரசன் நோயாகப் படுத்திருக்கும் அறையினுள் நுழைந்தாள். அங்கேயிருந்த செருப்பைத் தன் ஒற்றைக் காலில் போட்டுக் காண்பித்து, தன் வசமிருந்த அதன் ஜோடியையும் மற்றொரு காலில் போட்டுக் கொண்டு, அதற்குரியவள் தான்தான் என்பதை மெய்ப்பித்துக் காட்டினாள்.

"இளவரசர் சுந்தராங்கதர் நீடுழி வாழ்க அவரை மணந்து எங்கள் அரசியாகப் போகும் இளவரசி நீடுழி வாழ்க!” என்று அங்கிருந்தவர்கள் கூவினார்கள்.

அவளைக் கண்ட இளவரசன் சுந்தராங்கதன் அப்படியே மயங்கிப் போய் விட்டான். அவன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சந்திரிகா அழகாக இருந்தாள். சுந்தராங்கதன் எழுந்து வந்து சந்திரிகாவின் கையை அன்போடு பற்றிக் கொண்டான். அப்போதே அவனுடைய நோய் முழுவதும் பறந்து போய்விட்டது. சந்திரிகாவை அரசி தன் மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டாள். “என் மகனைக் காப்பாற்றிய நீயும் எனக்கொரு மகள்தான். ஆனால் மருமகள்!” என்று ஆனந்தத்தோடு கூறினாள். அதிசயமான வெகுமதிகளையும் பரிசுகளையும் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்தார் அந்த நாட்டின் அரசர். இந்த இன்ப நிகழ்ச்சியை நாடெங்கும் அறிவிக்கப் பீரங்கிகள் வெடி முழக்கமிட்டன. எங்கும் சங்கீத இன்ப நாதம் எழும்பியது. அந்த நாட்டில் இருந்த ஆடவர் பெண்டீர் அனைவரும் ஆனந்தக் கூத்தாடினார்கள்.




இளவரசன் சுந்தராங்கதனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அவளிடம் எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள்.

"முதலில் என் கதையைக் கேளுங்கள்” என்று சந்திரிகா தன் வரலாற்றைச் சொன்னாள். அவள் அரச குலத்தில் பிறந்த ஒர் இளவரசி என்பதையறிந்ததும், இளவரசனின் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவளுடைய தந்தையின் நாட்டை அந்த அரசர்தான் ஆண்டு வந்தார். அந்த நாட்டை தன் தந்தைக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று சந்திரிகா கேட்டுக் கொண்டாள். அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்ட பிறகு அவளும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாள்.

அந்தச் சமயத்தில் சந்திரிகாவின் சகோதரிகளான காந்தாரியும் மங்கள நாயகியும் அங்கு வந்து சேர்ந்தார்கள். சந்திரிகாவின் காலுக்கு அந்தச் செருப்பு சரியாக இருந்தது என்பதையும் அவள் இளவரசனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்பதையும் கேட்டவுடனே அவர்கள் அங்கிருந்து நழுவத் தொடங்கினார்கள். ஆனால், அவர்களைத் தன் முன் அழைத்து வரும்படி சந்திரிகா கட்டளையிட்டாள். வீரர்கள் அப்பெண்கள் இருவரையும் பிடித்து வந்து அவள் முன் நிறுத்தினார்கள். அவர்களை சந்திரிகா கண்டிக்கவுமில்லை; தண்டிக்கவுமில்லை; கட்டித் தழுவிக் கொண்டாள் அரசியிடம் அவர்களை அறிமுகப்படுத்தி, 'இவர்கள் என் அருமை அக்காமார்கள்! இவர்கள் நல்லவர்கள் என்னை நேசிப்பது போலவே இவர்களையும் நீங்கள் அன்பாக நேசிக்க வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டாள்.

தங்கை சந்திரிகாவுக்கு தாங்கள் எவ்வளவோ கெடுதல் செய்திருந்தும் இவ்வளவு நல்ல குணத்தோடு தங்களை சந்திரிகா நடத்துவதைக் கண்டு இரு சகோதரிகளும் திகைத்தார்கள். அவர்கள் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாமல் பிரமித்தபடியே நின்றார்கள். தங்கள் தாய் தந்தையருக்கு நாடு திரும்பி கிடைக்கப் போகிறதென்றும், அவர்கள் திரும்பிச் சென்று அவர்களோடு இருக்கலாமென்றும் சந்திரிகா தெரிவித்த போது அவர்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள்.

இளவரசி சந்திரிகாவுக்கு நடந்த திருமணம் போல் வேறு எந்தத் திருமணமும் அவ்வளவு சிறப்பாக நடந்தது கிடையாது. அதன் சிறப்பை விளக்கிச் சந்திரிகா தன் காவல் தெய்வமாகிய தேவதை அருளுடையாளுக்கு ஒரு கடிதம் எழுதினாள். அந்தக் கடிதத்துடன் தன் அன்புக் காணிக்கையாகப் பல அரிய பொருட்களையும் அதே மாயக் குதிரை மூலமாகத் தேவதை அருளுடையாளுக்கு அனுப்பி வைத்தாள். அதோடு தன் பெற்றோரைக் கண்டு அவர்களைத் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும்படி சொல்ல வேண்டுமென்று அவள் அந்தத் தேவதையை வேண்டிக் கொண்டாள்.

தேவதை அருளுடையாள் இளவரசி சந்திரிகா விரும்பியதையெல்லாம் செய்து முடித்தாள். அவளுடைய பெற்றோர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பி அதை ஒழுங்காகவும் சிறப்பாகவும் குடிமக்கள் மகிழ்ச்சியடையும் படியாகவும், பகைவர்கள் அதிர்ச்சியடையும் படியாகவும் ஆண்டு வரத் தொடங்கினார்கள். இளவரசி சந்திரிகா இளவரசன் சுந்தராங்கதனுடன் இன்பமாக இல்லறம் நடத்தினாள். அவளுடைய சகோதரிகளுக்கும் தகுந்த இளவரசர்களைப் பார்த்து அவர்களுடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். எல்லோரும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள்.