நீளமூக்கு நெடுமாறன்/பாடும் கடலும், ஆடும் மாம்பழமும், பேசும் பறவையும்


கதை : ஐந்து



பாடும் கடலும்

ஆடும் மாம்பழமும்
பேசும் பறவையும்

சிவந்திபுர மன்னருக்கு தேவப்பிரியன் என்னும் ஒரு குமாரனைப் பெற்றுத் தந்துவிட்டு மகாராணி மாண்டுபோனாள். அவளை இழந்த துக்கம் ஆறிய சிறிது காலத்திற்குப் பிறகு சிவந்திபுர மன்னர் மற்றொரு ராணியை மணம் புரிந்து கொண்டார். பானுமதி என்னும் அந்தப் புதிய ராணி வயதில் இளையவள்; இறுமாப்பு மிகுந்தவள்; அதிகாரம்

செய்வதற்கு ஆணவ ஆசை அதிகம் படைத்தவள். யாருக்கும் தன்னைப் பிடிக்கவில்லை என்றாலும் எல்லோரும் தனக்குக் கீழ்ப்படிந்து அடங்கி நடக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவள் வயதான சிவந்திபுர மன்னருக்கு இளைய ராணியாய் வந்து சேர்ந்ததும் அவள் விரும்பியதெல்லாம் நடந்தது.

ராஜகுமாரன் தேவப்பிரியனுக்கு இருபது வயது நடக்கும் போது சிவந்திபுர மன்னர் காலமாகிவிட்டார். ராஜகுமாரன் தேவப்பிரியன் அரியணை ஏறி சிவந்திபுரத்திற்குப் புதிய மன்னனாக முடிசூடிக் கொண்டான் . இளம் வயதினனாக இருந்த தேவப்பிரியனும், அவனுடைய சிற்றன்னை பானுமதியும் ஒருவருடன் ஒருவர் சண்டையடித்துக் கொள்ளவில்லை. ஏனெனில், பானுமதிக்குச் சொந்தப் பிள்ளையொன்றும் கிடையாது. ஆகவே அவள்தன் மூத்தாள் மகனாகிய தேவப்பிரியனை வெறுத்து ஒதுக்கவில்லை. தேவப்பிரியனுக்கோ சின்ன வயதிலேயே அன்னை இறந்து விட்டாள். ஆகவே, சிற்றன்னையையே தன் அன்னையாக எண்ணி அவளிடம் அன்பு பாராட்டி வந்தான்.

தேவப்பிரியன் பல ஆண்டுகள் தன் ஆட்சியை நன்றாக நடத்தி வந்தான். ஒருநாள் அவன் வேட்டைக்குப் போகும் போது, வழியில் ஒரு குடியானவனுடைய குடிசையின் முன்னால் மூன்று பெண்கள் பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது. குடியானவனின் மூன்று பெண்களும் முதல் நாள் இரவு தாங்கள் கண்ட கனவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

'நான் ஒரு சோற்றுக் கடைக்காரனைத் திருமணம் செய்து கொண்டதாக கனவு கண்டேன்” என்றாள் மூத்த பெண்.

82

"நான் ஒரு வேட்டைக்காரனைத் திருமணம் செய்து கொண்டதாகக் கனவு கண்டேன்” என்றாள் இரண்டாவது பெண். ՝

ஆனால் கடைசிப் பெண்ணான கோமளா ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

'தங்கையே; நேற்றிரவு, நீ என்ன கனவு கண்டாய்?" என்று அக்காமார் இருவரும் அவளைக் கேட்டார்கள்.

"என்னை அழகான ஒர் அரசர் மணம் புரிந்து கொண்டதாகக் கனவு கண்டேன். நான் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகவும், அக்குழந்தைகளில் ஒன்று இளவரசனாகவும் மற்றொன்று இளவரசியாகவும் இருப்பதாகக் கனவு கண்டேன். என் இரண்டு குழந்தைகளும் இரண்டு பூக்களைப் போல் அவ்வளவு அழகாக இருந்தன!” என்றாள் கோமளா.

இவ்வாசகங்களை மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மன்னன் தேவப்பிரியன் உடனே 

மூன்று பெண்களும் இருக்குமிடத்திற்குத் தன் குதிரையைச் செலுத்தினான். அவர்கள் எதிரில் வந்ததும், கடைசிப் பெண்ணான கோமளாவை நீண்ட நேரம் உற்றுக் கவனித்தான். பிறகு அவன், "உன் கனவின்படியே நீ ராணியாவாய்!" என்று கூறினான்.

கோமளா உண்மையில் நல்ல அழகி, மன்னன் தேவப்பிரியன் அவள் அழகில் மயங்கினானோ அல்லது அன்று காலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த அவன் மேலும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினானோ அல்லது தன் சிற்றன்னையே ஏவலாட்களுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போய்விட்டானோ, என்னவோ தெரியவில்லை. அவன் அந்தக் குடியானப் பெண் கோமளாவைத் தன் குதிரையில் ஏற்றி வைத்துக் கொண்டு கடற்கரையோரமாக இருந்த தன் கோட்டைக்குப் போய் யாருடைய யோசனையையும் கேட்காமல் அவளை அங்கேயே அப்பொழுதே திருமணம் செய்து கொண்டு விட்டான்.

இதைக் கேள்விப்பட்ட அவனுடைய சிற்றன்னை பானுமதி எவ்வளவு கோபப்பட்டிருப்பாள் என்று எளிதாக யூகித்து கொள்ளலாம். ராஜாவின் மனைவியாக புதிய ராணியொருத்தி வந்து விட்டபடியால், இனிமேல் அவள் அரண்மனையில் முழுக்க முழுக்க அதிகாரம் செலுத்த முடியாது. அரண்மனைக்கு வருகின்ற விருந்தாளிகளை ஆடம்பரத்தோடு அவள் முன்னின்று வரவேற்க முடியாது. ராஜாவோடு அவன் மனைவியான ராணிதான் நின்று வரவேற்க வேண்டும். ராணி என்ற முறையில் நாட்டினர் கொடுக்கும் மரியாதை முழுவதும் புதியவளுக்கே கிடைக்கும். இவற்றையெல்லாம் காட்டிலும் மோசமாக பானுமதிக்குத் தோன்றியது என்னவென்றால், தன்னைக் காட்டிலும் உயர்ந்த நிலைக்கு வந்திருப்பவள் ஒர் அரசகுமாரியாகவோ அல்லது பிரபு மகளாகவோ இல்லாமல் ஒரு சாதாரணக குடியானவன் மகளாக இருந்ததுதான்! ஆனால், பானுமதி தன் கோபத்தையெல்லாம் மூடி மறைத்துக் கொண்டு, புதிய ராணியான கோமளாவை அன்போடு வரவேற்றாள். தன் மூத்தாள் மகனாகிய தேவப்பிரியன் ஓர் அழகான பெண்ணைத் தேர்ந்தெடுத்திருப்பதாகப் பாராட்டினாள். அவள் எவ்வளவுக் கெவ்வளவு வெளியில் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாளோ அவ்வளவுக் கவ்வளவு அவள் மனத்துள்ளே பொறாமையும் குரோதமும் வேதனையும் உறுத்திக் கொண்டிருந்தது. அவள் மனத்திற்குள்ளேயே சதித் திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். -

திருமணமாகி ஒரு வருடமான பிறகு மன்னன் தேவப்பிரியன் பகை நாட்டின் மீது படையெடுத்துப் போக நேர்ந்தது. அவன் போருக்குப் புறப்படுவதற்கு முன்னால் தன் பட்டத்து ராணியிடம் விடை பெற்றுக் கொள்ள வந்தபோது, “அரசே! தாங்கள் திரும்பி வரும்போது, நான் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பேன். தோட்டத்துப் பூக்களைப் போன்ற அழகான ஓர் இளவரசனுக்கும் ஓர் இளவரசிக்கும் நான் தாயாக இருப்பேன்' என்று கோமளா பெருமையோடும் மகிழ்ச்சியோடும் கூறினாள்.

தேவப் பிரியன் அவளுடைய கன்னத்தில் அன்போடு முத்தமிட்டு, 'நமக்குக் குழந்தைகள் பிறந்தவுடன் எனக்கு ஒரு தூததன் மூலம் செய்தியனுப்பு” என்று சொன்னான்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, ராணி கோமளாவுக்கு பூக்களைப் போன்ற அழகான ஓர் இளவரசனும், ஒர் இளவரசியும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள். “அம்மா! என் கணவருக்கு இந்தச் செய்தியை ஒரு தூதன் மூலம் அனுப்பி வையுங்கள்!" என்று ராஜாவின் சிற்றன்னையான பானுமதியிடம் கோமளா கூறினாள்.

"அப்படியே செய்கிறேன்!” என்று பானுமதி உறுதி கூறினாள்.

பிறகு அவள் ஒரு தூதனை அழைத்து அவளிடம், "நீ ராஜாவிடம் சென்று ராணிக்கு ஒரு சிங்கக் குட்டியும் முதலையும் பிறந்திருப்பதாகச் சொல்லிவிட்டு வா. அவருடைய பதிலை என்னிடம் கொண்டு வந்து கொடு" என்று சொல்லியனுப்பினாள்.

தூதன் அவள் சொன்னபடியே செய்தான். ராஜா தேவப்பிரியன் போராடிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று, இந்தச் செய்தியைக் கூறினான். தன் மனைவியிடமிருந்து தான், அவன் செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்று எண்ணிய தேவப்பிரியன் ஆறாத் துயரமடைந்தான். அவன் முகம் துயரத்தால் வெளுத்தது.

'இது ஏதோ மாயாஜாலமாய் இருக்கிறது! இல்லாவி ட்டால் எனக்குக் குழந்தைகளாகச் சிங்கக்குட்டியும் முதலையும் ஏன் பிறக்க வேண்டும்?" என்று நினைத்துக் கொண்டான். பிறகு அவன் தூதன்னைப் பார்த்து "நீ திரும்பிப் போய், ரர்ணியிடம் நான் வரும் வரை இது சம்பந்தமாக எதுவும் செய்ய வேண்டாமென்று சொல்” என்று சொல்லி அனுப்பினான்.

தூதன் அரண்மனைக்குத் திரும்பி வந்து ராஜாவின் சிற்றன்னையிடம் இந்தச் செய்தியைக் கூறினான். அதைக் கேட்டு, பானுமதி அகமகிழ்ந்து அத்துTதனுக்கு பொன் முடிப்பு ஒன்றைப் பரிசாகக் கொடுத்து "செத்தாலும் இந்த ராஜ்யத்திற்குள் திரும்பி வராதே. வேறு எந்த நாட்டிற்காவது போய்விடு” என்று சொல்லியனுப்பி விட்டாள். பிறகு அவள் ராணி கோமளாவிடம் சென்றாள். கோமளா அப்போது தன் இரு குழந்தைகளையும் மடியில் வைத்து இன்பமாகக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

"ஐயோ! இந்த அநியாயத்தை என்னென்று சொல்வேன்!" என்று கூவிக் கொண்டே , பானுமதி ஒரு சூழ்ச்சித் திட்டத்துடன் அங்கே வந்தாள். "ஐயோ பாவம் பெண்ணே, உன் செய்தியைக் கேட்ட அரசர் என்ன பதில் அனுப்பியிருக்கிறார் தெரியுமா, ஐயோ! அதை எப்படிச் சொல்வேன். பூப்போல் அழகான இளவரசனையும் இளவரசியையும் நான் திரும்பி வருவதற்கு முன்னால் கடலில் மூழ்கடித்துக் கொன்று விடுங்கள் என்று சொல்லியனுப்பியிருக்கிறார். பாவிப்பெண்ணே! நீ இப்போது என்ன செய்யப் போகிறாய்?" என்று பானுமதி பாசாங்காகக் கூவிக் கூவி அழுதாள்.

கோமளா தன் இரண்டு குழந்தைகளையும் கட்டியணைத்துக் கொண்டு அழுதாள். கடைசியில் அவள் ஒருவாறு தெளிந்து "அவர் ராஜா அவருடைய கட்டளையை மீறக் கூடாது!” என்று சொன்னாள். பிறகு அவள் எழுந்திருந்து பூக்களைப் போல் அழகாக இருந்த இளவரசனை யும் இளவரசியையும் பொன்னாலாகிய பட்டுத் துணியொன்றில் சுற்றி ஒரு கூடையில் வைத்தாள். கடைசியாக ஒருதடவை இரண்டு குழந்தைகளுக்கும் முத்தமிட்டு விட்டுக் கண்ணில் நீர் வழிய வழிய ஒரு வேலைக்காரனைக் கூப்பிட்டு, அந்தக் கூடையைக் கொண்டு போய்க் கடலில் எறிந்து விட்டு வரும்படிக் கட்டளையிட்டாள். வேலைக்காரன் அந்தக் கூடையைக் கொண்டு போய்க் கடலில் எறிந்து விட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் வந்து விட்டான்.

ஒரு மாதம் கழித்த பிறகு போர் முடிந்து ராஜா தேவப்பிரியன் தன் நாட்டிற்குத் திரும்பி வந்தான். கோட்டை வாசலில் அவனுடைய சிற்றன்னை பானுமதி நின்று அவனை வரவேற்றாள்.

"அம்மா என் மனைவி எங்கே? அவளுக்குப் பிறந்த சிங்கக் குட்டியும் முதலையும் எப்படி இருக்கின்றன?" என்று கேட்டான் தேவப்பிரியன்.

"ஐயோ! மகனே! இது என்ன புதுமை! உனக்கு யார் இப்படிச் சொன்னார்கள்? அவளுக்குச் சிங்கக் குட்டியும் பிறக்கவில்லை; முதலையும் பிறக்கவில்லை. பூக்களைப் போன்ற அழகான ஓர் இளவரசனும், ஒர் இளவரசியும் தான் பிறந்தார்கள். ஆனால், அவர்களைப் பெற்ற பொல்லாதவள் அப்பச்சைக் குழந்தைகள் இரண்டையும் ஒரு கூடையில் வைத்துக் கடலிலே விட்டெறிந்து விட்டுவரச் சொல்லிவிட்டாள்” என்று மிகவும் துயரப்படுபவள் போலச் சொன்னாள் சிற்றன்னை பானுமதி.

அதைக் கேட்டு ராஜா தேவப்பிரியன் மிகவும் கலக்கமடைந்து, "என் மனைவி எங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விட்டாள். நான் மறுபடியும் அவள் முகத்தில் விழிக்கப் போவதில்லை” என்று வெறுப்போடு கூறினான். பிறகு அவன் தன் மனைவி கோமளாவை ஒர் அறையில் போட்டுப் பூட்டி வைக்கச் சொன்னான். என்ன இருந்தாலும் அவளைக் கொல்ல மனம் வராததனால் தான் அவன் அப்படிச் செய்தான். "அவள் பேச்சை மறுபடி என்னிடம் பேச வேண்டாம்!" என்று தன் சிற்றன்னையிடம் முழங்கினான்.

சிற்றன்னை பானுமதி தானடைந்த வெற்றியை நினைத்துச் சிரித்துக் கொண்டாள். மறுபடியும் அரண்மனைப் பொறுப்பை யெல்லாம் ஏற்று நடத்துகின்ற தலைவியாகவும் நாட்டிலே மிக உயர்ந்த நிலையில் உள்ள ராஜமாதாவாகவும் உயர்ந்து விட்டாள்.

கடலில் எறியப்பட்ட சிறு குழந்தைகளான இளவரசனும், இளவரசியும் மூழ்கி விடவில்லை. அவர்கள் இருந்த கூடை கடல்லைகளின் மீது மிதந்து மிதந்து கரையோரமாகவே வெகுதூரம் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு செம்படவக் கிழவனின் கண்ணில் பட்டது.

அவன் அக்குழந்தைகளைத் தன் வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு போனான். அவன் தன் மனைவியை நோக்கி, "அடியே! இவ்வளவு நாளும் ஆண்டவன் நமக்கு ஒரு குழந்தையைக் கூடத்தரவில்லை. ஆனால் இப்போது நம் வயது முதிர்ந்த காலத்தில் இரட்டைக் குழந்தைகளை அனுப்பியிருக்கிறார். இதோ பார்! தோட்டத்துப் பூக்களைப் போன்ற அழகுடைய ஒரு சின்னப் பையனும், ஒரு சின்னப் பெண்ணும் கிடைத்திருக்கிறார்கள்!” என்றான்.

அந்தச் செம்படவனும் அவன் மனைவியும் இரட்டைக் குழந்தைகளைத் தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போல் பாவித்து, அன்பு பாராட்டி வளர்த்து வந்தார்கள். இவ்வாறு ஏழு வருடங்கள் சென்றன. செம்படவனுக்கு வயது முதிர முதிர உடல் தளர்ந்து கொண்டு வந்தது. முன்னைப் போல் அவனால் அதிகமாக மீன்க்ள் பிடிக்க முடியவில்லை. அவன் மீன் பிடிப்பது குறைந்து விடவே மீன்களை விற்றுக் கிடைக்கும் வரும்படியும் குறைந்து விட்டது. அதனால் நான்கு பேர்களைக் காப்பாற்றப் போதுமான வருமானம் இல்லாமல் அவன் கஷ்டப்பட்டான்.

ஒருநாள் சின்ன இளவரசனும் இளவரசியும் செம்படவத் தம்பதிகளை நோக்கி, "அன்புள்ள அம்மா! நீங்கள் இந்த வயதான காலத்தில் எங்களுக்காகக் கஷ்டப்பட வேண்டாம். நாங்கள் எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்கிறோம்" என்று சொன்னார்கள்.

"குழந்தைகளே! உங்களுக்குப் போதுமான வயது வரவில்லை. நீங்கள் இப்போது போக வேண்டாம்" என்று செம்படவனும் அவன் மனைவியும் சொன்னார்கள்.

ஆனால் இளவரசனும் இளவரசியும் பிடிவாதமாகப் போக வேண்டுமென்று சொன்னதால் கடைசியில் முதியவர்கள் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இரட்டைக் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னால் செம்படவன் அவர்களை நோக்கி "குழந்தைகளே! இப்போது நீங்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். நாங்கள் இருவரும் உங்கள் பெற்றோர்கள் அல்ல. ஏழாண்டுகளுக்கு முன்னால் கடலில் மிதந்து வந்த ஒரு கூடையில் பச்சைக் குழந்தைகளாக நீங்கள் படுத்திருந்திர்கள். பொன்னால் இழைத்த பட்டுத் துணியால் சுற்றி மூடப்பட்டிருந்த உங்களை நான் கண்டெடுத்தேன். அதன் பின் உங்களை என் சொந்தக் குழந்தைகளைப் போல் வளர்த்து வந்தேன். ஆனால் இன்று வறுமையின் கொடுமையினால் தான் உங்களைப் பிரிய ஒப்புக் கொள்ளுகிறேன்” என்று சொல்லிக் கண்ணிர் விட்டான்.

மறுநாள் காலையில் செம்படவனிடமும், அவன் மனைவியிடமும் சொல்லிக் கொண்டு இரட்டைக் குழந்தைகள் வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள். அவர்கள் இருவரும் கை கோர்த்துக் கொண்டு கடற்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். திடீரென்று சின்ன இளவரசி, "அண்ணா, கவனி என் காதில் ஒரு குரல் கேட்கிறது” என்று சொன்னாள்.

உடனே அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே நின்று கவனித்தார்கள். கடல் தான் அவர்களை நோக்கி பாடிக் கொண்டிருந்தது. "இளவரசே, இளவரசே, சின்ன இளவரசே! இளவரசி, இளவரசி, சின்ன இளவரசி! பூக்களைப் போல் அழகான பொன்னான குழந்தைகளே! செல்லுங்கள், செல்லுங்கள் நடந்து கொண்டே செல்லுங்கள்! ஆடுகின்ற மாம்பழமும், உண்மை அறிந்துரைக்கும் பறவை ஒன்றும் தெரிகின்ற வரை நீங்கள் சென்று கொண்டே இருப்பீரே!" என்று அந்தக் கடல் பாடியது.

அதன்படியே அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். மூன்று பகலும் மூன்று இரவுகளும் அவர்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். பிறகு களைப்பாறுவதற்காகக் கடற்கரை யோரத்திலிருந்த ஒரு மரத்தடியில் அவர்கள் தங்கினார்கள். கிழே படுத்திருந்த இளவரசி மேலேயிருந்த மரக்கிளைகளை நோக்கினாள். "அண்ணா அதோ பார்! இந்த மரத்தின் உச்சிக்கிளையில் ஒரு மாம்பழம் இருக்கிறது!. இரத்தம் போல் செக்கச் செவேலென்று பழுத்து அது எவ்வளவு அழகாகத் தொங்குகிறது பார்!” என்று அவள் சொன்னாள்.

தன் தங்கை பசியோடு இருந்தபடியால், சின்ன இளவரசன் மரத்தின் மேல் ஏறி அந்த மாம்பழத்தைப் பறித்துக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான். ஆனால், அதை அவள் கடிக்கப் போகும் போது, ஒரு பறவை பறந்து வந்து இளவரசனுடைய தோளிலே உட்கார்ந்தது. “சின்ன இளவரசியே! அதுதான் ஆடுகின்ற மாம்பழம். அதைத் தின்னாதே, உங்களை கடலில் துக்கியெறிந்த கொடியவளை அந்த மாம்பழம் தான் காட்டிக் கொடுக்கப் போகிறது. அப்போது நான் உண்மையைச் சொல்லுவேன். அதுவரை நடந்து கொண்டேயிருங்கள். கடைசியில் நீங்கள் ஒரு கோட்டை சூழ்ந்த அரண்மனைக்குப் போய்ச் சேருவீர்கள். அங்கே போனவுடன் பிச்சை கேளுங்கள்!” என்று சொன்னது பறவை. அது தான் உண்மை அறிந்துரைக்கும் பறவை.

இளவரசனும், இளவரசியும் ஆடுகின்ற மாம்பழத்தையும் உண்மை அறிந்துரைக்கும் பறவையையும் எடுத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். கடைசியில் அவர்கள் கடற்கரையோரத்திலிருந்த ராஜா தேவப்பிரியனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள். அரண்மனை கோட்டை வாசலில் வந்து நின்று அவர்கள் பிச்சை கேட்டார்கள்.

"இரண்டு சிறு குழந்தைகள் வாசலில் பிச்சை கேட்கிறார்கள்" என்று சேவகர்கள் ஓடிவந்து ராஜாவிடம் கூறினார்கள்.

"அவர்களுக்கு வேண்டிய உணவு எல்லாவற்றையும் கொடுங்கள்” என்று ராஜா தேவப்பிரியன் கட்டளையிட்டான்.

ராஜாவின் கட்டளைப்படி குழந்தைகள் இருவரும் சாப்பிட்டு முடிந்தவுடன், தாங்கள் ராஜாவை நேரில் பார்த்து நன்றி சொல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்கள். ராஜா அதற்கு அனுமதி கொடுத்ததும் அவர்கள் தர்பார் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கே ராஜா தன் சிற்றன்னையுடன் சிங்காதனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் அக்குழந்தைகளை இரக்கத்துடன் நோக்கினான். "சின்னக் குழந்தைகளே! இவ்வளவு சின்ன வயதில் நீங்கள் தன்னந்தனியாக உலகத்தில் அலைந்து கொண்டிருக்கிறீர்க்ளே!” என்று ராஜர் தேவப்பிரியன் பரிதாபத்தோடு கூறினான்.

"மேன்மை தாங்கிய மகாராஜா! எங்களுடைய வளர்ப்புத் தாய் தந்தையர் வயது முதிர்ந்த காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகச் செல்வம் தேடிப் புறப்பட்டோம். ஏழு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் இருவரும் பொன்னாலிழைத்த பட்டுத் துணியில் சுற்றப்பட்டு ஒரு கூடையில் படுத்துக் கொண்டு கடலில் மிதந்தபோது எங்களைக் கண்டெடுத்தார்கள். அன்று முதல் அவர்கள் எங்களை அன்பாக வளர்த்தார்கள். இப்போது எங்களுடன் ஆடுகின்ற மாம்பழம் ஒன்றும் உண்மை அறிந்துரைக்கும் பறவை ஒன்றும் கொண்டு வந்திருக்கிறோம். எங்களைக் கடலில் தூக்கி எறிந்தவனை நாங்கள் காணும்போது இந்த மாம்பழம் அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்தப் பறவை உண்மையைச் சொல்லிவிடும்!” என்றார்கள்.

இதைக் கேட்ட ராஜாவின் உள்ளம் இளகியது; ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், பூக்களைப் போல் அழகான என் குழந்தைகள், ஒரு சின்ன இளவரசனும், ஒரு சின்ன இளவரசியும் அவர்களுடைய கொடிய தாயினால் கடலிலே துாக்கி எறியப்பட்டார்கள். அக்குழந்தைகள் தாம் நீங்கள் என்றால், உங்களிடம் இருக்கும் ஆடுகின்ற மாம்பழமும் உண்மை அறிந்துரைக்கும் பறவையும் உங்களைக் கொலைசெய்ய முயன்ற என் மனைவியைத் தெரிந்து கொண்டு விடும்.” என்று ராஜா தேவப்பிரியன் சொல்லி விட்டுத் தன் மனைவி கோமளாவைச் சிறைச் சாலையிலிருந்து அழைத்து வரச் செய்தான். கந்தலாடைகளுடன் முகம் வெளுத்துப் போய் ராணி கோமளா குடியானப் பெண்ணிலும் கேவலமாக நின்றாள்.

"மாம்பழம் ஆடட்டும்! பறவை உண்மையைச் சொல்லட்டும்!” என்றான் ராஜா தேவப்பிரியன்.

இரத்தம் போல் செக்கச் சிவந்த மாம்பழத்தைச் சின்ன இளவரசன், தன் எதிரில் இருந்த மேஜையின் மீது வைத்தான். அந்த மாம்பழம் மேஜையின் மேல் குறுக்கும் நெடுக்குமாகக் குதித்துக் குதித்து நடனமாடியது. அப்படியே ராஜாவின் சிற்றன்னையான பானுமதியின் தலைக்குத் தாவி அத்தலையின் மீது சிறிது நேரம் குதித்துக் குதித்து நடனமாடியது. பிறகு அது கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போய்விட்டது.

இதைக் கண்டு சிற்றன்னை பானுமதி பயந்து அலறினாள். "இது உண்மையல்ல. உன் குழந்தைகளைக் கொலை செய்தவள் அதோ நிற்கிறாள்!" என்று சொல்லிக் கந்தலாடையுடன் நின்று கொண்டிருந்த கோமளாவைச் சுட்டிக் காட்டினாள்.

ஆனால் உண்மையுணர்ந்துரைக்கும் பறவை தெள்ளத் தெளிய உண்மையை விளக்கிச் சொல்லியது. "மகாராஜா! இதோ உட்கார்ந்திருக்கும் உங்கள் சிற்றன்னை தான் உங்கள் அருமை மனைவியின் மீது பொறாமை கொண்டு வெறுத்தாள். அவள்தான் இக்குழந்தைகளைக் கடலில் துக்கி எறியும்படி செய்தாள்” என்று சொல்லி, சிற்றன்னை பானுமதி செய்த சூழ்ச்சிகளையெல்லாம் முதலிலிருந்து கடைசிவரை விவரமாகத் தெரிவித்தது. அதன் பின் அது மறைந்து போய் விட்டது. உடனே சிற்றன்னை பானுமதி பயத்தினால் உடலெல்லாம் நடுநடுங்கி வியர்த்துக் கொட்ட, எழுந்து நின்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். மன்னிக்க வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாள்.

"உனக்கு எப்படி மன்னிப்புக் கொடுக்க முடியும்?" என்று கேட்டான் ராஜா தேவப்பிரியன்.

தன் சிற்றன்னையைப் பார்க்க பிடிக்காமல் முகத்தைத் திருப்பிய ராஜா, அங்கே தன் அன்பு மனைவி கோமளா நிற்பதைக் கண்டான். உடனே சிங்காதனத்தை விட்டு எழுந்து ஓடி அவளை அன்போடு பற்றிக் கொண்டான். பிறகு இருவரும் தங்கள் இரண்டு குழந்தைகளையும் தூக்கித் தோள் மேல் வைத்துக் கொண்டு முத்தமிட்டுக் கொஞ்சிக் கொஞ்சி மகிழ்ந்தார்கள். அவர்கள் நான்கு ப்ேரும் அட்ைந்த இன் பத்திற்கிடான இன்பத்தை இந்த உலகத்தில் வேறுயாரும் அடைந்திருக்கவே முடியாது.

ராஜா தேவப்பிரியன் தன் சிற்றன்னையைத் "திரும்பி வராதே" என்று சொல்லிக் கோட்டையை விட்டு விரட்டி விட்டான். அவளுடைய அதிகாரமும் ஆடம்பரமும் அடியோடு அழிந்து போயிற்று!

தன் குழந்தைகளை அன்போடு ஏழு ஆண்டுகள் ஆதரித்து வளர்த்த செம்படவக் கிழவனையும், அவன் மனைவியையும் அரண்மனைக்குக் கூட்டிக் கொண்டு வந்து அவர்கள் காலம் முழுவதும் அங்கேயே வசதியாக வாழ்ந்து வரும்படிச் செய்தான் ராஜா.

பூக்களைப் போன்ற அழகுடைய சின்ன இளவரசனும் சின்ன இளவரசியும் தங்கள் பெற்றோர்க்ளுடனும் வளர்ப்புத் தாய் தந்தையருடனும் ஆனந்தமாக வாழ்ந்தார்கள்.

முற்றிற்று.