நூறாசிரியம்/ஆவியும் மெய்யும்
வானினு முயர்க நெஞ்சே வானத்து
மீனினும் படர்கதன் நினைவே, மின்னினும்
ஆன்றொளி சுடர்கநல் அறிவே, அறிவதும்
வாரியின் மிகுகவன் வலியே; வளியினும்
தான்றிற முறுக; தணலினுந் தெறுக;
5
தண்ணினுந் தண்ணுக மண்ணினுந் திண்ணுக;
நுண்ணிய அணுவினும் நுண்ணிய தாகுக;
ஆவியும் மெய்யு மாகி
மாவினும் புள்ளினும் மயங்கியோர் பாலே!
பொழிப்பு:
சேய்த்தோர்க்கு அணிமையும் அணிந்தோர்க்குச் சேய்மையுமாய்ப் புலப்படும் வானைவிட உயர்ந்து செல்க, நெஞ்சமே. அவ் வானத்துள்ள மீன் கூட்டத்தை விடப் படர்ந்துபட்டு விளங்குவதாகுக, அதினின் றெழும் நினைவுகள்! மின்னலை விட மிகுந்து சுடர் விடுவதாகுக அறிவு. அவ் வறிவின் வலிமை மழை முகிலை விட மிகுவதாகட்டும், காற்றை விடத் திறம் பெறுவதாகட்டும்! தீயை விடச் சூடு மிகுவதாகட்டும்; குளிர்ந்த நீரை விடக் குளிர்வதாகட்டும்; நிலத்தைவிட இறுகலுறட்டும்; நுண்மையெய்திய அணுவை விட நுண்மை உடையதாகட்டும்; உயிரும் உடலு மட்டுமே ஆகியிருந்து உள்ளம் விளக்க முறாமல் விலங்கு போலும் பறவை போலும் பிறர் மயக்கமுற நிற்பவரிடத்தே!
விரிப்பு :
இப்பாடல் புறத் துறையைச் சார்ந்ததாகும்.
உயிரும் உடலும் பொதிந்த உருவெளித் தோற்றத்தால் மக்களைப் போலும் உள்ளத்தால் விலங்கைப் போலும் பறவையைப் போலும் பிறர் தோற்றங்கண்டு ஒத்தஇனம் என்று விரும்பவும், உள்ளங் கண்டு வேறினமோ என ஐயறவும் மயங்கவும் இடனாக வுள்ளவரிடத்து நம் நெஞ்சம் எவ் வகையில் திறமுறல் வேண்டும் என்பதாகக் கூறியதாகு மிப்பாட்டு.
இவ்வுலகத்துள்ள மாந்தர் யாவரும் ஒருரு ஒரு நிறையாகத் தோற்றமுற்றிருப்பினும் அவர் தம்மை வேறுபடுத்திக் கூறுதல் குற்றமன்றோ எனில் கூறுதும். மாந்தர் யாவரும் நிலத்து விழுந்த நீர் போல் முந்தை
தூய்மையுற்றுப் பின்றை இடத்தானும் வினையானும் வேறுபடப்பட மனம் திரிதலும், மனந் திரியத் திரியப் பின்னையும் இயக்கத்தான் வேறுபடுதலும் உலக வியற்கை. இவ்விளங்கல் வேறுபாடு அறிவான் சமநிலைப்பட்டுப் பொருந்தத் தோன்றுதலும், அது கூடாவிடத்தே திரிந்து மாறுதலும் எவராலும் மாற்றவியலாத இயற்கைக் கூறுபாடுகளாம்.
நீர் என்பது பொது வெனினும், சிறப்புக் கருதுமிடத்து, அது ஊற்று நீர் என்றும், ஆற்றுநீர் என்றும், இன்னும் பலவாறும் இடத்தாலும், உப்பு நீரென்றும், வெப்பு நீரென்றும், இன்னும் பலவாறும் வினையானும், இன்னும் உள்வினை கருதுகையில் அதனதன் உட்கூறு பலவாயும் வேறுபட்டு விளங்குதல் காண்கின்றோமா அல்லமா? ஐம்பூதப் பொருளில் ஒன்றாய அந்நீரே இவ்வாறு பல்வேறு திறத்ததாக விளங்குகையில், ஐம் பூதங்களும் தத்தம்முள் அளவினும் திறத்தினும் பல்லாயிரங்கோடி வகையான கூறுபாடுகளில் ஒன்றியும் ஒன்றாமலும், இன்னும் அவ்வவற்றின் திறங்களுக்கேற்பக் கோள்களாலும் உடுக்களாலும் மனம் அறிவு வெளிகளினாலும் திரிக்கப்பெற்றும் ஆளப்பெற்றும் விளங்கித் தோன்றும் இவ்வுயிரினங்களும், அவற்றினும் தேறி. விளங்கிய இம் மாந்த வினமும் எத்துணை எத்துணை வகையால் வேறுபட்டன என்பதைப் பூத நூலும், வேதியல் நூலும், கோனுாலும், மனநூலும், அறிவு நூலும், உயிர் நூலும் விளங்கக் கற்றவர்கள் தெள்ளிதின் உணர்வர். உணரவே அவர் பொருட்டாக எழுந்ததிப்பாட்டு என்க.
இனி, மாந்தப் போலியர் உளரெனினும் அவர் மாவினும் புள்ளினும் மயங்கித் தோன்றுதல் எங்ஙனமெனின், கூறுதும்.
உயிர் விளக்கக் கூறுபட்டான் உலகின்கண் காணப் பெறும் இவ்வுயிர்கள் கூர்தலற ஒழுங்கின் ஒன்றினின்று ஒன்று தேறியும் திரிந்தும், பெருகியும் விளங்குதல் வெள்ளிடைமலை, அவ்வாறு தேறித் திரிதலுறுங் காலத்து முதற்கண் உடல் திரிதலும் அத் திரிபுநிலைக் கேற்ப உள்ளந் திரிதலும் உயிர் நூல் கூறும் உண்மையாகும். இனி, உள்ளத் திரிபுக் கேற்ப உடல் மேன் மேலும் திரிதலுறும். அதன் மேல் உள்ளமும் மேன் மேலும் விளங்கித் தோன்றும். இவ்வாறு உடலும் உள்ளமும் முன்னது தோன்றப் பின்னது விளங்கியும், பின்னது விளங்க முன்னது தோன்றியும் ஒத்த நடையிட்டு மீமிசைக் கூறுபாடுகள் எய்தும் என்க. விலங்கினின்றும் புள்ளினின்றும் திரிந்து தோன்றிய மாந்தன் மேற்கொண்டு உள்ள விளக்கத்திற் குரியயவனாகின்றான். அவ்வுள்ள விளக்கம் முற்றும் நடைபெறாவிடத்து மாந்தவுடலும் விலங்குள்ளமும் பெற்றோனாக விளங்குகின்றான். அவன் அவ்விலங்குள்ளத்தை முற்றும் விட்டு வெளியேறும் வரை, அவ் விலங்குக்கும் பறவைக்கும் ஒப்பவே நடந்து வினை மேவுகின்றான்.
பெண்டிர் யாவருமே ஆடவர் மருவுதற் கேற்றவராக விருப்பினும், அப் பெண்டிருள் ஒருத்தியையே தான் மருவுதற்கேற்றாளாகக் கொள்வது உள்ள வளர்ச்சியின் கூறுபாடே விலங்கின நிலையினின்று முற்றும் மாறுபடா உள்ளங் கொண்டோனுக்கோ, எல்லாப் பெண்டிரும் மருவுதற் கேற்றவர் என்ற எண்ணமே கால் கொள்ளும். உள்ளம் மேலுரர்ந்து சிறந்தோனுக்கோ, தான் மருவுதற்குரிய பெண் தவிரப் பிறரெல்லாம் தாயும் தமக்கையும் தங்கையுமாகவே தோன்றுவர். ஒழுக்க நிலையான் காணப்பெறும் இவ்வேறுபாடும். உண்ணுதல், உறங்குதல், காத்தல், இணைதல் முதலிய வினை நிலையான் கருதப் பெறும் பிற வேறுபாடுகளும் கருதியே மாவினும் புள்ளினும் மயங்கியோர் என்று கூறப்பெற்றது.
நெஞ்சே! அத்திறத்தோரிடத்து வானினும் உயர்ந்து போதல் முதலாய திறமைகளை வருவித்துக் கொண்டு அவரிடத்தினின்று தப்பி உய்க என்பது பாட்டு.
வானினும் உயர்க : சேய்த்தோர்க்கு அணிமையும், அணித்தோர்க்குச் சேய்மையுமாய்ப் புலப்படும் வானை விட உயர்ந்து செல்.
தொலைவினின்று காண்போர்க்கு மிகவும் நெருக்கமுற்றது போல் தோன்றினும், நெருங்கினார்க்குத் தொலைவிலுள்ளதாகத் தெரிவது வானம். அது போல், தொலைவினின்று மாந்தற்றன்மை குன்றியோர்க்கு நாம் நெருக்கமுற்றவர் போல் தோன்றினாலும், நெருங்கிப் பார்க்குமிடத்து அவர் நிலைக்கு எட்டாதவாறு நம் நெஞ்சமும் வினையும் சேய்மையனவாகப் புலப்படுதல் வேண்டும் என்றவாறு. இனி வான் போலும் உயர்க என்னாது, வானை விட உயர்க என்று மேலும் உயர்ச்சி காட்டியது, மாவினும் புள்ளினும் மயங்கியோரை இன்னுங் கீழ்மையினால் தாழ்த்துதல் வேண்டி என்க.
நெஞ்சின் விளக்கம் முன்னொரு பாட்டில் கூறப்பெற்றது.
வானத்து மீனினும் படர்கதன் நினைவே: வானத்தே மீனினம் பகலிற் கரந்திருந்து இரவிற் படர்வது போல், அவர்க்கு ஆரவாரத்தே புலப்படா நின்று, அமைதியிற் புலப்படுத்துதல் வேண்டும் என்க. பகல் ஆரவாரக் காலமும் இரவு அமைதியின் காலமுமாம் என்றறிக. இனி, வெற்று வானம் போல் தோன்றுமிடத்து உற்று நோக்கிய வழி மீனினம் படர்ந்திருத்தல் புலப்படுதல் போல், துணுகி நோக்கினார்க்கன்றி நுண்ணோக்கற்ற மாவினும் புள்ளினும் மயங்கியோர்க்கு நம் திறம் புலப்படுதல் தேவையன்று என்பதறிக.
வேண்டாவிடத்து நம் நுட்டம் வெளிப்படுத்தப் பெறுவதொன்றன்று என்க.
'நினைவு' என்னும் சொற்பொருள் 'நெஞ்சு நிலனாக' நினைவு வித்தாக என்ற பாட்டில் விளக்கப் பெற்றது. நினைவு மீன் படர்தலுக்கு வான் நெஞ்சம் புலப்படக் கூறியது காண்க!
மின்னினும் ஆன்றொளி சுடர்கநல் அறிவே: மின்னித் தோன்றும் ஒளிப்போலும், ஆனால் விளங்கியும் சுடர்தல் வேண்டும் என்பது மின்னித்
தோன்றுதலால் மின்ன லென்றும் மீன் என்றும் பெயர் பெற்றன. ஒளித் திறன் அவை போன்றதாம் என்னினும் ஆன்று சுடர்தல் வேண்டும் என்று வேண்டப் பெற்றது. சடுத்தப் பாய்ச்சலும், ஒளி மண்டிச் சுடர்தலும் பெற்ற அறிவு, மாவினும் புள்ளினும் மயங்கி யோர்க்கு ஒளி கொளுத்தலும், பயன் தருதலும் ஆகிய வினைகள் மேற்கொள்ளுதல் வேண்டுமன்றோ? எனவே சுடர்க அறிவு எனலாயிற்று பயன் நல்குதலால் நல் அறிவு எனப் பெற்றது.
அறிவதும் வாரியின் மிகுகவன் வலி:அவ்வறிவும் கடல் போலும் மழை முகிற்போலும் வன்வலி மிகுவதாகும் என்றவாறு.
நீரை வாரலால் கடலும் முகிலும் வாரி எனப்பட்டன.
நீர் நிலத்தளவில் வலி மிக்க பொருள். ஆக்கலும் அழித்தலும் அதனிடத்து உளவாகலின், தேக்கமும் படர்வும் அதன் வலித்திறன்களாகும். தேக்கமுற்றது கடலும், படர்வுற்றது முகிலும் ஆகலான் இருபொரு ளொருசொல் பெய்யப் பெற்றது; வாங்கலும் வழங்குதலும் அவ்விரண்டின் வினைகள். இவ்விரண்டானும் வலி மிகுதல், தம் நிலை தப்புதற்கும் மாவினும் புள்ளினும் மயங்கியோர் நிலை வெல்வதற்கும் வேண்டி என்க. அறிவற்றன வாங்கி, அறிவாயின வழங்குதலும் உய்த்துணர்க.
வளியினும் தான்திற முறுக- காற்றினும் திறமுற்று விளங்குக. கால்வதால் காற்றும் , வலிதலால் வளியும் என்க. கால் நீளுதல். வலிவளி அடர்த்துப் பெருகுதல், வளைதல், சுழலுதல், வாருதல் ஆய வலிந்த வினைபற்றி யிருத்தலான் வளி என்றாயிற்று. இத் திறன்கள் முற்றும் பகை வெல்லுந் திறமாயின. பற்றி அவை மிகுதல் வேண்டும் எனலானது.
தனலினும் தெறுக- தீயினும் பற்றி யழிக்க தழல்தணல் பற்றல், படர்தல், பெருகுதல், ஆட் கொள்ளுதல் ஆயவினைகள் தீயினுக்கு உரி யவாகலின் தீ, தழல் எனப் பெற்றது.
தள்-தழ்-தழதழல்; தள்-தழ்-தழ-தழை தீ, தள தள வென்று எரிந்தது. தள தள எனும் அடுக்கு தண தண வென்றும் வரும்.
தண்ணினும் தண்ணுக குளிர்ச்சியினும் குளிர்ச்சியுறுக அறிவு கனன்று எழுந்த விடத்து விளங்கியும் தண்ணியவிடத்து அடங்கியும் தோன்றும் கனன்றது அறிவென்றும், தணந்தது அன்பென்றும் பெயர் பெறும் அறிவு வெப்பமும், அன்பு தட்பமும் வாய்ந்தது. அறிவுஅடங்கி அன்பாகி ஆக்கமும், அன்பு எழுச்சியுற்று அழிவும் சேர்க்கும்.
அறிவான் தெறலும். அன்பான் பொறலும் செய்து மாவினும் புள்ளினும் மயங்கியோரிடத்து விறல் பெற வேண்டும் என்பதாம் என்க.
மண்ணினும் திண்ணுக: நிலம் போலும் திண்மை யுடையதாகுக. மண் பொருந்துதல், முன்பொரு பாட்டான் விளக்கப்பெற்றது. பூதப்பொருள்கள் நான்கு மேவிய ஐந்தாம் பூதம் மண் மண் மேலும் மேலும் இறுகலுறுவ தொன்றாகலின் மண் போலும் அதனினும் மிகவும் திண்ணுக வென்றது.
மாவினும் புள்ளினும் மயங்கியோர் நம்மை அசைப்பவும் செய்வர் ஆகையால் அவர்வழித் தப்புவான் வேண்டி மண்ணினும் திண்ணுக என வேண்டியதாயிற்று.
நுண்ணிய அணுவினும் துண்ணிய தாகுக : கரந்துறைதலும் கருவா யுறைதலும் அணு நுண்மை எய்திய விடத்துப் பருமை பற்றாதாம். எனவே நுண்ணியதாகுக எனப் பெற்றது.
வான் போலும் உயர் நெஞ்சும், மீன் போலும் படர் நினைவும், மின் போலும் சுடர் அறிவும், வாரி போலும் வன் வலியும், வளி போலும் வெல் திறலும், தணல் போலும் கொல் திறலும், தண் போலும் குளிர் ஒடுக்கும், மண்போலும் திண்பாடும், அணுப் போலும் துண் கரப்பும் கொண்டு, ஆவியும் மெய்யுமாய் ஆகி நின்ற மாந்தர் எனும் மாவினும் புள்ளினும் மயங்குற நிற்பாரிடத்து விளங்குக என்றவாறு.
இப் பாட்டும் புறத் தினையும் பொருண் மொழிக் காஞ்சியென் துறையுமாகும்.