நூறாசிரியம்/எம் மண் மகனே
இவனியா ரென்குவீ ராயி னிவனே
தாறலை பாகர் தந்துயர் பொறாஅது
ஊறுதக நினைக்கும் உயவல் யானை
கையுகத் தறைந்து கால்தலை நெறிக்கு
மெய்யே போலும் பொய்சேர் கொற்றம் 5
வழங்குமொழி உவப்ப இலங்கில் வறுமொழி
பாரிப் புடன்று நூறப் புக்க
கொலைகோற் காவலர் குறிகொள் எஃகம்
அதிரப் படர்ந்தா ராக
எதிர்தலைப் பட்ட எம்மாண் மகனே! 10
பொழிப்பு:
இவன் யார் என வினவுவீராயின், இவனே, தம் கைகளில் உள்ள கோட்டியினால், தன்னைத் துன்புறுத்தும் யானைப்பாகரின் துயரத்தைப் பொறுத்துக் கொள்ளாமல் தன்னைத் துன்புறுத்தியவர்க்குத் தானும் துன்பம் செய்ய மிகுதியும் கருதுகின்ற மதங் கொண்ட யானை, தன் தும்பிக்கையை நீட்டி அவரை எடுத்துக் கீழே அறைந்து, தன் காலில் அவர் தலையை நசுக்கிச் சிதைக்கின்ற உண்மையைப் போல, பொய்யே நிறைந்த அரசு, முன் வழக்கில் உள்ள தமிழ்மொழியைக் குழப்புகின்ற நிலையில் சிறப்பில்லாத எளிய மொழியாகிய இந்தி மொழியை வளர்த்துப் பரப்புவதை எதிர்த்துப் போராடி அழித்திட மாணவர்கள்) முயல, (அவர்களைத் தடுக்குறும் நோக்கத்துடன்) கொலையுறச் செய்யும் கோலைக் கொண்ட காவலர்கள், குறிவைத்தவாறு வேட்டெஃகம் தாங்கி, அஃது அதிரும்படி கட்டுக்கொண்டே பரந்து வந்தாராக, அவர்கள் முன் எதிர்ந்துபோய் இறந்துபட்ட மாட்சிமை பொருந்திய எம் ஆண்மகனே!
விரிப்பு:
இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகமாணவன் இளங்கோ மருந்தகத்துத் துஞ்சினானாக, அவனை யாரென விளித்த அயலார்க்கு அவன் நற்றாய் சொல்லியது.'இவனியார் என்குவீராயினிவனே..கொலைகோற் காவலர் குறிகொள் எஃகும் அதிரப் படர்ந்தாராக, எதிர்தலைப்பட்ட எம் மாண் மகனே’- என்றும்.
‘தாறலைப் பாகர் தந்துயர் பொறாஅது ஊறுதக நினைக்கும் உயவல் யானை, கையுகத் தறைந்து கால்தலை நெறிக்கும் மெய்யே போலும்-நூறப் புக்க’ என்றும்
கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுக.
இப்பாடல் முன்னைய பாடலின் தொடர்ச்சி.
காலமும் சூழலும் முந்தைய பாடல்களுள் கண்டுகொள்க.
இவனியார் என்குவீர் ஆயின் (இதோ இங்கு இறந்த கிடக்கும்) இவன் யார் என்று வினவுவீர் ஆயின்.
தாறு அலை பாகர் தம் துயர் பொறாது- தாறு (கோட்டி - அங்குசம்) கொண்டு, குத்தித் துன்புறுத்தும் யானைப் பாகரின் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளாமல்.
ஊறுதக நினைக்கும் உயவல் யானை - தம்மைத் துன்புறுத்தியவர்க்குத் தானும் துன்பம் செய்ய மிகுதியும் நினைக்கின்ற மதங்கொண்ட யானை.
கை உகத்து அறைந்து - தன் தும்பிக்கையை உயரத்து தூக்கித் (தன் மேலே ஏறியிருந்த பாகனைப் பற்றியெடுத்துத் தரையில் வீசி) அறைந்து.
கால் தலை தெறிக்கும் - காலால் தலையை நசுக்கிச் சிதைக்கும்.
மெய்யே போலும் - உண்மையான நடைமுறை போல.
பொய்சேர் கொற்றம் - பொய்யைக் கூறும் பொய்யர்களையே சேர்ந்திருக்கும் இவ் வரசு
பொய்யைக் கூறுவது, இந்தி படித்தால் நன்மை வரும், ஒருமை வளரும், வேலை கிடைக்கும் ‘ என்றவாறு என்க.
வழங்குமொழி உவப்ப - வழக்கில் உள்ள தமிழ் மொழியைக் குழப்பிச் சீரழிக்க
இலங்கில் வறு மொழி பாரிப்பு - சிறப்பில்லாத விளக்கமில்லாத வறிய எளிய மொழியாகிய இந்திய மொழியை வளர்த்துப் பரப்புவதை
உடன்று- (மாறுபட்டு) எதிர்த்துப் போராடி
நூறப்புக்க- அழித்தற்கு (மாணவர்கள்) முயற்சி செய்ய,
கொலை கோல் காவலர்- கொலைகளைச் செய்யும் கோல்களை உடைய காவலர்கள்.
குறிகோள் எஃகம் அதிர- (மாணவர்கள் முயற்சியைத் தடுக்கும் நோக்கத்துடன்) குறி வைத்தவாறு வேட்டெஃகத்தைத் தாங்கி, அஃது அதிரும்படி, சுட்டுக் கொண்டே
படர்ந்தாராக - பரந்துபட்டு வந்தாரக.
எதிர் தலைப் பட்ட எம் மாண் மகனே - (அவ்வாறு வந்த காவலர்கள் முன்னம்) எதிர்ந்து போய் இறந்து பட்ட மாட்சிமை பொருந்திய எம் ஆண் மகனே, இவன்!
எம் என்றதால் தந்தையும் உடனிருந்தது பெறப்பட்டது.
பாகன் தன்னைக் கோட்டியால் துன்புறுத்தியதால், யானை மிக்க சினம் கொண்டது. எனவே மதங் கொண்டது. உடனே தன் முதுகில் ஏறியிருந்த பாகனைத் தன் தும்பிக்கையை நீட்டி, வாரித் தரையில் அறைந்து கொன்று, தலையை மிதித்துத் துவைத்தது.
அதுபோல் இந்திமொழி என்னும் கோட்டியால் அடிக்கடி துன்புறுத்திய பொய்யர் சூழ்ந்த அரசைச், சினங்கொண்ட மாணவர் துவைத்தெடுக்கப் போர்க்கோலம் பூண்டனர் - என்று உவமையை ஒருபுடைப் பொருத்திப் பொருள் கொள்க.
‘அடர்ந்தெழுந்த சினங்கொண்ட மாணவர் எழுச்சியைத் தடுத்து நிறுத்தும் பொருட்டுக் காவலர்கள், குறிவைத்தவாறு வேட்டெஃகம் தாங்கிப் படர்ந்து வந்தனராக, அவர் முன்னம், அஞ்சாமல் எதிர்ந்துபோய், அக் குண்டடிபட்டு இறந்து பட்ட மாட்சிமை பொருந்திய எம் மகன், இவன்’ என்று அவனைப் பெற்ற நற்றாய், அவன் யார், ஏன் இறந்தான் என்று கேட்ட அயலார்க்கு இஃது உரைத்தனள் என்க.
இப்பாடல் முன்னது திணையும் மாண்மகன் துஞ்சல் என்துறையும் என்க. திணையும் துறையும் புதியன.