நூறாசிரியம்/ஒன்றிறை

நூறாசிரியம்
1 ஒன்றிறை

ஒன்றிறை; உலகம் உண்டதன் வழியே.
நன்றிதன் வாழ்க்கை; நாமதன் மக்கள்.
காட்சியுங் கேள்வியுங் கருதலும் புரிதலும்
ஆட்சியுட் பட்ட அளவினானே!
மீட்சியின் றொழுகியவைதிறங் கடவார் 5
மாட்சிமைப் பட்ட பொருளறி யாரே!
மன்னி யுலகெலா மலர்த்தவிப் பானை
முன்னி யுணர்ந்த வுணர்வினார்க் கல்லதை
வகுத்த அறிவொடும் வழக்கொடுங் கூடிப்
பகுத்தாய் வார்க்குத் தொகுத்தவை விளங்கா. 10
உள்ளதன் நாளே, உன்னி யுணர்மின்!
தெள்ள வுணர்ந்தவன் தேர்ந்து தெளிமின்!
கொள்ளுமின் ஆங்கவன் கொடையே; கொண்டு
கொடுமின் அவன்றன் குற்றுயிர்க் கெல்லாம்;
எள்ளுமின் உள்ளம் இகழ்வன;இகந்து 15
தள்ளுமின்; தள்ளித் தனித்தவன் திறலொடு
பொருந்துமின், வாழ்க்கை பொன்றா தாரே!

பொழிப்பு :

ஒன்றே இறை, இவ்வுருள் நிலம் அதன் வழி உண்டாமாறு நின்று இயல்வது. வாழ்நிலை உயிர்கள் யாவினுக்கும் அஃது ஒட்டி நின்று இயங்குநிலை நன்று. அத்தகை வானிலை உயிர்களுள், பொறியும் புலனும்

ஆகிய ஐயறிவால் நிறையப்பெற்று மெய்யறிவால் விளங்கப் பெற்ற நாமாகிய மேனிலை உயிர்கள் அதன் தலைப்பிறவிகள். அவற்றிற்குக் காணுதலாகிய காட்சியும், கேட்டலாகிய கேள்வியும் இவ்விரண்டின்வழி விரியப்பெற்று இவ்வியக்கத்திற்குக் கருவாகிய கருத்தும், அதன் வழித்தோன்றி அவை வழிப் படுக்கும் வினைகளும்,ஓர் எல்லையுட்பட்ட ஆளுகைக்குரிய, அவ்வெல்லை யாவற்றினுக்கும் பொதுவினது.

அப்பொதுவினதாகிய எல்லைக்கண் நின்று இயங்கும் இயக்கத்து மீளாது நின்று ஒழுகி, அவ்வளவும், ஆட்சியும், வினையும், கருத்தும் கேள்வியும் காட்சியும் மக்களும் இயக்கமும் உண்மையும் உலகும் ஆகிய நிலைகளுள் ஒன்று நிலை கடந்து பிறிதுநிலை காணும் பெற்றியோர் அன்றிப் பிறர், பெருநிலைப்பட்ட ஒன்றாகிய மெய்ப்பொருளை அறிய மாட்டுவரல்லர் நிலைப்பெற்று நாம் இயங்கும் இவ்வுருள்நிலம் போன்ற எல்லாவற்றையும் மலர்த்தி அவிக்கும் தன்மையின் ஆகிய அம் மெய்ப்பொருளை நோக்கி உள்நின்ற வல்லுணர்வு அத்தகையினார்க்கன்றி, அவ்வெல்லைக்குள்ளும் வரையறைப்பட்ட ஐயறிவொடும், அவை அடித்தாய உலகின் புறத்து நிலையொடும், அத்தகையராகிய பிறரொடும் ஒன்று இருந்து, வேதியியல் விளங்கியல் முதலிய பொருள் பாகுபாட்டையும், உடலியல், உயிரியல் முதலிய மெய்ப்பாகுபாட்டையும், உளவியல், அளவியல் முதலிய உயிர்ப்பாகுபாட்டையும், மண்ணியல் விண்ணியல் முதலிய புடவிப் பாகுபாட்டையும், இணைப்பின் நீக்கித் தனித்தனி ஆய்ந்து பார்ப்பார்க்கு அவை முற்றும் ஒன்றுபட்டு, அவ்வொன்றுபட்ட வழி, ஒரு புது நிலை தோன்றி வெளிப்படுமாறு தொகுப்பாக நிற்கும் அவையும் அதுவும் விளக்கமுறத் தோன்றாவாம்.

இவை இங்ஙனமாக, இவ்வுலகத் தலைநிலை உயிர்களாகிய நீவிர் துங்கட்கு எல்லைத்தாய நாளைக்குள்ளேயே நும்நிலை ஊன்றி நல்லுணர்வில் நும்மைப்பொருத்துவீராக! அது வழித் தெளிவின் உணர்ந்து அம்மெய்ப்பொருள் நிலையினை இறுதி எனத் தேர்ந்து மயக்க மறுவீராக! நுமக்கு இவ்வுலகின்கண் வந்து வாயத்தவெல்லாம் அப்பொருள் நுமக்கு இரவாமலே கொடுத்த ஈகை எனக் கருதுவீராக; ஆங்குப் பெற்ற அவ்வீகப் பொருளை நும் ஆட்சிக்குட்பட்டவாகிய குறுகிய காட்சியும் உயிரும் மெய்யும் பொருந்திய உயிர்க்கெல்லாம் நீவிரும் இரவாமுன் ஈகுவீராக! ஒருவழிப்படா நிலையில் தும்வழித்தாகி, ஒருவழிப்பட்ட நிலையில் அம்மெய்ப்பொருள் வழிநிற்கும், நும் உயிர் மெய்யுட் பொருந்தியதாகிய உள்ளம் ஒதுக்குவனவற்றைப் பற்றுக்கோடாது இகழ்ந்து, தொடர்பற நுமக்குத் தொடர்பேற்படாதவழிப்புறத்தே தவிர்ப்பீராக; தவிர்த்த நிலையில் தொடர்பற்று நும்போலவே ஆற்றலொடு முன்னமே நிற்கும் அம் மெய்ப்பொருளோடு நீவிரும் நும்மைப் பொருத்திக் கொள்வீராக; இவ்வுலகம் போலும் ஒன்றின் சுழற்சி யியக்கத்துட்பட்டு உயிர் தேய்ந்து போகாத நல்லறிவினோரே!

விரிப்பு :

ஒன்றே - என்றதால் முதலும் முடிவும் அற்றது; தலையாயது; இரண்டு மூன்று என்ற எண்ணுப் பொருளற்றது; தனிநிலையானது; ஒன்றின் விரிவே பலவும் என்றாகி, பலவின் முடிவே ஒன்று என்றாகும் சுழற்சியின் இயல்வது என்க. இஃது இன்மைக் கொள்கையையும் பன்மைக் கொள்கையையும் மறுத்தது.

இறை - என்றது இறுத்த நிலையது’ எனற்கு இறுத்த நிலை இறுதிநிலை. இறு ஐ-முடிவும் தலைமையும் வாய்ந்தது. தலைமை முதல்நிலை ஒன்று காரண நிலை; இறை கருமநிலை,

உலகம் - உருள் நிலை கொண்ட ஓர் அகம், உல -+ அகம். அகம்-அகப்படுத்தி நிற்பது. உலத்தல் - சுழற்சியுடைமை. உருளல் தன்மை.

உண்டு - இல்லையென்பார்க்கு மறுப்பு தேற்றம் கருது பொருளாகிய ஒன்றுக்குக் காட்சிப் பொருளாய் நின்று உலகம் உண்டு என்று காட்டியது.

அதன் வழி - என்றது அவ்வொன்று வழியாய் நிற்றலை, நிலையும் இயக்கமும் அதன் வழியாம் என்றவாறு,

நன்று - தொடக்கமும் முடிவும் நன்மைக்கென்றவாறு என்னை? துன்புந் துயரும் நன்மைக்கோ என்பார்க்கு துன்பந்துயரும்.அதன் வழித்தாய அல்ல என்றும், உயிர் போங்கு நிலையின் ஏற்றத்தும் இறக்கத்தும் நின்றும் சுழன்றும் செல்லல் தோற்றமே என்க. துன்பும் துயரும் மனக் கோட்டமே! துன்பம் சூழலால் வந்துற்ற தாக்குநிலை, துயர் உயிர்ச் சூழற்கு உட்பட்ட தாங்கு நிலை. துன்பு புறப்பாடு, துயர் அகப்பாடு. இவ்விரண்டும் கோட்ட நிலையால் உயிர்க்கு அசைவு நிலைதரினும், அவ் வசைவு நிலையும் முடிவுகருதி இன்பமே ஆகும் என்னை? துன்பம் உயிர் தன்னை உணரு நிலை; இன்பம் உயிர் தன்னை மறக்கு நிலை! இவையே உயிர் மயங்கு நிலையும் உயிர் மயங்கு நிலையுமாம்.

இதன் வாழ்க்கை - அதன் வழித்தாய வாழ்க்கை. ஒன்று வழி உலகும் உலகு வழி வாழ்வும் அமைவதாம் என்க.

நாம் - அறிந்து உணரத்தக்கவராகிய நம்மை உட்படுத்தியது.

அதன் மக்கள் - அவ்வொன்றின் வழித்தாய மேனிலை உயிர்கள்.

காட்சியும் கேள்வியும் கருதலும் புரிதலும் - உயிர்த்தோற்றத்து முதல் விளக்கம் காட்சியறிவே! என்னை; உயிர்த்த உயிர் காட்சியின் பாற்பட்டே அறிவை வழிப்படுத்தும். கண்ணிற்பட்ட காட்சி அவ்வுயிர்க்கு அறிவின் முதல் படிவு. அதன் பின் கேள்விவழிச் செயல்படுகின்றது. இவ்விருவழியறிவும் விரிந்த பின்னரே மகவு கருதுதல் செய்யும். கருதுதலின் விளைவாய்ப் பிறந்த கருத்து வெளிப்படுதலே மொழி. ஈண்டு மொழியைக் குறிக்காதது அதன் அடிநிலையாகிய கருதுதல் குறித்தமையால் என்க. ‘புரிதல் காட்சிக்கும் கேள்விக்கும் கருத்துக்கும் உடலுறுப்புகளைப் பயன் படுத்துதல். உயிரின் மெய்யியக்கம் முன் மூவகை அறிவின் பின்னரே தோன்றுகின்றது. அதுவரை மகவு இயங்கும் இயக்கம் மெய் உயிரை இயக்கும் இயக்கம் என்னை? மெய்ப்பசி தோற்றத்து மகவு அழுங்கலும், மெய்ப்பசி யடக்கத்து மகவு நகை விளங்கலும் உயிரையியக்கிய மெய்யியக்கம் என்க.

ஆட்சியுட்பட்ட அளவினானே - ஆட்சி - ஆளுகை, ஆட்சியுட்பட்டது - ஆளுகைக்கு உட்பட்டது. அளவினானே - அளவினால் தோன்றுவது. முற்கூறப்பட்ட செயல்கள் யாவும் உயிர்கட்கு இயற்கையாந் தன்மையினால் வரையறுக்கப்பட்ட அளவினது. என்னை? காட்சிக்கும் கேள்விக்கும் காலமும் இடமும் எல்லை என்க, கருதுதலுக்கு ஐயறிவியக்கத்தாற்பட்ட அறிவு எல்லை என்க, புரிதல் அவ்வறிவால் இயக்கப்பெற்ற மெய்யின் வினை. அதற்கு மெய்யின் வலிவும் அளவும் எல்லை என்க. இவ்வளவின் உட்பட்ட அறிவு செயல்படற்கும் மனமே எல்லை என்க. என்னை? மனம், வட்டாடும் பலகை போல்வது. அறிவு வட்டுப் போன்றது. அறிவுக்கரணமாகிய ஒத்த ஐம்புலன்களும் ஆடுநர் போன்றன. வாழ்க்கை ஆட்டம் போன்றது என்க. இதில் வேறலும் தோல்வியும் ஆட்டத்தின் பயன் போன்றன. அதில் வரும் இன்பும் துன்பும் நிலையற்றன. என்னை? அவ்வின்பாலும் துன்பாலும் மெய்ப்பயன் ஒன்றும் விளையாமையால், மெய்யே பயனுறாக் காலத்து உயிர்க்கு ஒரு பயனும் இல்லை என்றவாறு.

மீட்சியின்றொழுகல் - அவ்வளவு நிலைகளைக் கடந்து ஒழுக இயலாத தன்மையின் நிற்றல்,

அவைதிறம் கடவார் - அவைப்பட்ட எல்லை நிலைகளைக் கடக்கப் புனையற்றவர். புனை மெய்யறிவு, ‘ஐயுணர் வெய்தியக்கண்ணும் பயமின்றே, மெய்யுணர்வில்லாதவர்க்கு எனும் திருக்குறளை ஒர்க.

மாட்சிமைப்பட்ட பொருள்-மாண் - பெருநிலை பெருமை, மா பெரியது, அண்-சாரியை, அண்ணித்து நிற்றலாகிய தன்மை, அண்ணித்தல்-ஒன்றல்பொருந்தல் வேறற்றநிலை. ஒன்றிய நிலையில் இயங்கும் பெரும் பொருள்.

அறியார் - அறிவினான் அறியவியலார், பன்னுதல் - நிலைத்தல், ஒன்றிநிற்றல் உலகெலாம். இவ்வுருள் நிலம்போன்ற உலகங்கள் எல்லாம். என்னை? கோளுங் கதிரும் உடுவும் புடவியும் என்றபடி

மலர்த்து - விளங்கச் செய்து விளங்கல் - தோன்றல்

அவிப்பான் - அவித்தல் செய்வான், மலர்த்துத் தொழிற்கு இறுதி.

முன்னுதல் - மூண்டு நிற்றல் முன் பகுதி. முள்ளல் - முண்ணுதல் முன்னுதல்.

உணர்தல் - உள்ளறிதல், அறிதல் புறமும், உணர்தல் அகமும் என்று உணர்க.

அறிதல் - மூளையின்பாற்படுவது. உணர்தல் - உள்ளத்தின் பாற்படுவது.

உணர்வினார்க்கல்லதை - உள்நின்று அறியும் தகவினார்க்கன்றி:

வகுத்த அறிவும் வழக்கும் - வகுக்கப்பெற்ற அறிவுத் துறைகளால் பெற்ற ஈட்டமும், அவை ஒன்றுக்கு ஒன்று பொருந்துவதாகிய வழக்கும். என்னை? பூதநிலை பற்றி ஆயும் வேதியலும் பொருள்நிலைபற்றி ஆயும் விளங்கியலும் மாறுபடாவழி மண்ணியலொடும், விண்ணியலொடும் பொருத்திப் பார்க்கும் ஏரண வழக்கு.

கூடி - அவ்வத்துறையோகிய அறிவினார் பலருங்கூடி ஒன்றுபட்டு.

பகுத்தாய்தல் - பூதநிலைகளையும் பொருள் நிலைகளையும் பாகுபாடு செய்து இயக்க இருப்பை அறிதல்.

தொகுத்தவை - அப்பகுப்பில் விளங்காது. தொகுப்பில் விளங்கா நிற்கும் கருப்பொருள் உண்மைகள்.

விளங்கா - விளக்கமுறத்தோன்றா. அறியப்படமாட்டா.

உள்ளதன்நாள் - உயிர் மெய்யொடு பொருந்தி உளவாகிய இயக்க எல்லை. வாணாள்.

உன்னி - அழுந்தி.

உணர்மின் - உள்ளறிமின்.

தெள்ள - கசடு அடித்தங்கி அறிவு தேங்கி நிற்குமாறு.

உணர்ந்து அவன் தேர்ந்து - உள்நின்று நோக்கி அறிந்து அவனாகிய மெய்ப்பொருளே மூலகாரணன் என உட்கொண்டு.

தெளிமின் - தெளிதற்கு முனைமின்,

கொள்ளுமின் ஆங்கவன் கொடை - அன்றே நம்மையும் நமக்காக ஐம்புலக் கருவிகளையும், அவை மேயும் உடலையும், அஃது ஊர்ந்த உயிரையும்.அஃது உலவ உலகங்களையும் நாம் விழையாக்காலத்தே நமக்கு ஈகமாகத் தரப்பெற்ற அருளை,

கொண்டு கொடுமின் - கொள்ளுதற்போலும் கொடுமின்கள். அளவிடப்பெறாத செல்வங்களையும் அவற்றைத்துய்க்க அளவிடப்பெறாத அறிவுணர்வையும் கேளாமலே கொடுத்த கொடையைப் பெற்றதுபோல் பிறர்க்கும் கொடுமின்கள் என்றவாறு என்னை? நம் போலும் எல்லவர்க்கும் ஈத்த கொடைக்கு மேலும் நாம் ஈதற்கு நமக்கு என்ன ஆற்றலுள்ளது என்று அடக்கவுரை செய்யும் சான்றோரும், என்ன பொருளுள்ளது என மடப்பவுரை செய்யும் மடவோரும் வினாவெழுப்ப இது கூறியதென்னை எனின் கூறுதும். நிலையாலும் நினைவாலும், வினையாலும் வாய்ப்பக்கிடந்த எல்லாப் பொருளும் இவ்வுலகத்து எல்லார்க்கும் ஒப்பக் கிடைப்பதும், அவ்வாறு கிடைத்துழி அவ்வெல்லவரும் அவற்றை நுகர்தல் இயல்வதும் அரியவாகையால், ஒருபால் தொட்ட ஊற்றுநீர் பிறர்க்கும் மடுப்ப உரிமைபோல் அவன்பாற் கொடையாகப் பெற்ற இவ்வுலக உடைமை இங்குள்ளார் யாவர்க்கும் ஒப்பக் கொடுக்கும் உரிமை உடையது. என்னை? வலக்கை பெற்றது இடக்கையும் எடுத்து உண்ண உரிமை உடையது போல் ஒருடற் பல்லுறுப்பாய் இயங்கும் இவ்வுலக உயிர்கள் யாவையினுக்கும் ஈண்டொருவற் பெற்ற ஈட்டம் என்க.

அவன் குற்றுயிர்க்கு எல்லாம் - அம்மெய்ப்பொருள் வழி முகிழ்த்தலர்ந்த குற்றுடலும், குறையுறுப்பும், குற்றறிவும் குறுவிளைவும் குறுவாழ்வும் வாய்ந்த உயிர்கள் தொகை யாவினுக்கும்.

எள்ளுமின் உள்ளம் இகழ்வன - இவ்வுடற்கண் நின்று நிலவும் உறுப்புகளுக்கெல்லாம் உள்ளுறுப்பாய் நின்று, மெய்ப்பொருளின் தேக்கிடமாய் இயங்கும் உள்ளம் சிறுமை கருதியும், வெறுமை கருதியும் இகழ்ந்து ஒதுக்குவனவற்றை நீவிரும் இகழ்ந்து விடுமின்கள் என்றவாறு.

இகந்துதள்ளுமின் பழித்து, தும் பற்றினின்றும் விடுவியுமின்கள். இகத்தல்- பழித்தல்-கடந்து மேற்செல்லல்- விட்டுப் புறம் போதல்வெறுத்துத் துறத்தல்,

தனித்தவன் - தன்வயம் நின்றவன் - பிறர் அசைவு நிலைக்கு வயப்படாதவன் - ஒன்றன் ஒருபெருந் தனிப்பொருள்.

திறல் - வலிமை - மெய்யறிவு - மேன்மை, பொருந்துமின்-இரண்டன்மை நிலையில் இணையுமின்கள் அவனாக நின்று நடத்த நம்மை ஒப்புவிப்பது - நம் செயல் கழலுதல்,

வாழ்க்கை பொன்றாதார் வாழ்வாம் எனப்பட்ட இயங்குநிலை சிதையாத எண்ணமுடையவர்கள்.

இப்பாட்டு, இறையுண்மையினையும், அதையுணரும் வழியையும், அதன்ை அறிந்த நன்மையையும் அந்நன்மையால் விளையும் மலர்ச்சியையும் கூறாதிற்கும், நிலைமண்டில ஆசிரியப்பாவாம்

இது பொதுவியல் என் திணையும், இறைநிலை வாழ்த்தென் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நூறாசிரியம்/ஒன்றிறை&oldid=1251202" இலிருந்து மீள்விக்கப்பட்டது