நூறாசிரியம்/குறிப் பறியாளே
செவிக்கின் னாத விசையிசை யிலையே
குவிமுகிழ் மூக்கே லாதன கொடிதே
யானவை கொண்டாற் றான்விழைந் தென்னுதல்
மான நீவியள் தோழி
கோணா நெஞ்சக் குறிப்பறி யாளே!
பொழிப்பு:
செவிக்குத் துன்பந்தரும் இசை இசையாகாது. குவிந்த மொக்குப் போலும் மூக்கு ஏற்றுக் கொள்ளாத வாகிய நாற்றமெல்லாம் துன்புறுத்தும் தகையவே. யான் அத்தகைய துன்பந்தரும் இசையைச் செவிமடுக்கவோ, நாற்றத்தை முகரவோ நேரின் அவற்றைப் பொறாது வருந்தும் என் தமக்குத்தலை நீக்குதல் பொருட்டு தானே விரும்பி என் நெற்றியைத் தக்கவாறு நீவிவிட்டவளாகிய என் தோழி என் கோணுதலுற்ற உள்ளக் குறிப்பை அறியாத வளாயினளே!
விரிப்பு:
இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.
தலைமகன் ஒருவனிடத்துக் காதல் கொண்ட தலைமகள், அயலார் சிலர் மணம் பேச வந்தவிடத்து தனக்கு அஃது உடன்பாடு இல்லை யென்பதைத் தோழி உணரும்படி குறிப்பாகப் புலப்படுத்துமாறு அமைந்தது இப்பாட்டு.
செவிக்கு இன்னாத இசை இசை இலையே - செவிக்குத் துன்பந் தரும் இசை, இசையே அன்று,
செவிக்கு இன்பம் பயப்பதே இசை எனப்படுதலின் அதற்கு மறுதலையாக இன்னாமை பயப்பது இசையன்றாம் என்றவாறு.
குவிமுகிழ் மூக்கு ஏலாதன கொடிதே - குவிந்த மொக்குப் போலும் மூக்கு ஏற்றுக் கொள்ளாதனவாகிய நாற்றமெல்லாம் துன்பந்தருவது.
யான் அவை கொண்டால் - யான் அத்தகைய துன்பந்தரும் இசையைச் செவிமடுக்கவோ, நாற்றத்தை முகரவோ நேர்ந்தால்,
கொண்டால் என்றது கொள்ள நேரின் என்னும் பொருட்டு.
தான் விழைந்து என்துதல் மான நீவியன் தோழி - குறிப்பறிந்து தானே விரும்பி என்னுடைய நெற்றியைத் தக்கவாறு நீவியவள் என் தோழி.
தான் விழைந்து - யான் கூறாதவழியும் குறிப்பறிந்து தானே விரும்பி என்றவாறு.
பொருந்தாத புலனுகர்ச்சியால் வருந்துதலின் முதனிலையாவது தலைவலியே யாதலின் அதைத் தணித்தற்குத் தக்கவாறு நெற்றியை நீவிவிட்டவள் என் தோழி என்றாள். நுதல்-நெற்றி.
கோனா நெஞ்சக் குறிப்பு அறியாளே - கோணுதல் இல்லாத உள்ளத்தின் குறிப்பை அறியாதவளாயினளே!
கோணா நெஞ்சம்-கற்புநெறி திறம்பாத நெஞ்சம். அறியாளே அறியாதவளே என்னுமாறு ஏகாரம் வினாப் பொருள் பயந்தது எனக் கொள்ளினுமாம்.
செவிக்கு இன்னாத இசையும் மூக்கு ஏலாத மோப்பும் துன்பந்த தருதலைக் குறிப்பாலுணர்ந்து அதனைப் போக்கத் தானே விரும்பி நெற்றியை நீவிவிட்டவள். ஆதலின் உள்ளத்துக்கு ஏலாத இம் மணவினையைத் தவிர்ப்பாள் என்றவாறு.
கற்புநெறி திறம்பாத உள்ளத்துக்கு இஃது ஏலாதது என்னுங் குறிப்பால் அவள் தலைமகன்பால் காதல் கொண்டமையைத் தெரிவித்தாள்.
இப் பாடல் குறிஞ்சியாகிய அகத்திணையும் அறத்தொடு நிற்றல் என்னும் துறையுமாம்.