நூறாசிரியம்/நகை யாகின்றே

20 நகையாகின்றே!


இதுகொல் விழவே; நகையா கின்றே!
புதுமடிக் கலிங்கங் கதுமத் தாங்கி
உழுந்தின் கொழுமாப் புழலை முக்கிப்
பயறு தலைப்பெய்த பாஅல் மிதவை
வயிறு முகந்தெரிய மாந்தி உயிர்ப்பறும் 5
அரம்ப மாக்கள் ஆடும்
உரந்தவிர் நாளின் ஒழுகிலா நிகழ்வே!


பொழிப்பு:

இதுவோ விழா எனப் பெறுவது: நகை விளைகின்றது. புதிய மடியுடைய மெல்லுடையைப் பெருமையுடன் உடுத்து, உழுந்தினது கொழுவிய மாவினால் செய்த புழையுடைய பண்ணியத்தை மூச்சு முட்ட உண்டு, பயறு பெரும்பான்மையுங் கலந்த பால் சேர்ந்த கும்மாயத்தை, வயிற்றின் முக முழுதும் எழுந்து தோன்றும்படி ஆர வுண்டு, செயலற்றுத் திரிதரும் விலங்கு போல்வார் ஆடிக் களிக்கும், அறிவு விலக்கப் பெற்ற முறையிலாத செயலே!

விரிப்பு;

இப்பாடல் புறம்.

புதிய உடையைப் பெருமையுடன் உடுப்பதுவும், பல பண்ணியங்களை வயிறு நிறையும்படி மாந்திச் செயலிலாது விலங்கு போல் ஆரவாரத்தோடு ஆடிக் களிப்பதுவும் ஆகிய அறிவு தவிர்க்கப் பெற்ற முறையிலாத இச்செயல் நகைப்பிற் குரியதாகுமன்றி விழா எனப்படுவதாகாது என வலியுறுத்திப் பேசுவதாகும் இப் பாட்டு

விழா என்று பொதுவிற் குறித்தமையான் குல சமய விலக்கின்றி நடைபெறும் எல்லா விழாக்களுக்கும் பொருந்துவதாகும் இக்கருத்து.

விழவு; விழு எனும் பகுதியடியாகப் பிறந்த சொல். விழு-சிறப்பு, உயர்வு.

விழா உயர்ந்த நோக்கமும் பொதுமைப் பண்பும் மக்களிடத்துப் பரவ வேண்டி அமையப் பெறுவதாகும். அவையன்றி உடுப்பதும் உண்பதும் ஆரவாரித்தலும் செயலற்றுத் திரிதலும் ஆகிய தாழ்வும் தந் நலமும் மிக்க நோக்கம் கொண்டு விளங்கும் விழாக்கள், முறையிலாத விலங்குச் செயல்களேயாம் என்று தெருட்டிக் கூறுவதாகும் இப்பாட்டு.

புதுமடிக் கலிங்கம் புதிய மடி யுடைய கலிங்கம்.

கலிங்கம் ஆடை கலிங்க நாட்டினின்று நெய்யப் பெற்று வந்த தாகவின் கலிங்கம் எனப் பெற்றது. பெரும்பாலும் மெல்லியதாக இவ்வாடை இருந்தமையான் மெல்லிய ஆடை என்று பொருளுரைக்கப் பெற்றது.

கதுமை பெருமை, கதும - பெருமையுற, புழலை புழல் உடைய பண்ணியம், புழல் தொளை. புழன்லவடை

முக்கி வயிறு முட்ட உண்டு; முக்குதல்-மூச்சு முட்ட உண்ணுதல்.

தலைப்பெய்த தலையாகக் கலந்த, மிகுதியாகக் கலந்த,

மிதவை கும்மாயம், கண்ணல் வகையினொன்று.

பயறு அரிசி முதலியவற்றைப் பாலொடும் சருக்கரையொடும் கலந்து அட்டிய நீர்மப் பண்டம் (பாயசம்). குமைதலால் கும்மாயம் என்றும், மிதத்தலால் மிதவை என்றும், கண் போல் உருண்டு திரளலால் கண்ணல் என்றும் பெயர்கள் பெறும் குமைதல்-குழைந்து வேதல்.

வயிறு முகம் நிரம்ப உண்ணுதல்.

மாந்துதல் - நிரம்ப உண்ணுதல்

உயிர்ப்பு அறுதல் வினை யறுதல், வேலையற்றுத் திரிதல்.

அரம்ப மாக்கள் குறும்பர்-ஒழுங்கிலா முரட்டு மாந்தர்.

அரம்பன்Rogue -எனும் ஆங்கிலச் சொல்லுக்கான பொருள் பொதிந்த தமிழ்ச் சொல்.

உரந்தவிர்நாள் அறிவு தவிர்த்த நாள்.

பெரும்பாலான விழாக்கள் அறிவுக்கு பொருந்துவனவாக அமையாதிருப்பது உன்னத் தக்கது.

ஒழுகிலா நிகழ்வு முறையற்ற நிகழ்ச்சிகள்.

மூடப் பழக்கங்களே பெரும்பாலும் திருவிழாக்கள் எனும் பெயரால் பெரிதும் கொண்டாடப்பெற்று வருகின்றன. இவ்விழாக்களில் உண்பதும் உடுப்பதும் ஆரவாரிப்பதும் தவிர வேறு பயன்கள் இல்லை. அறிவுக்குப் பொருந்தாத இவ்விழாவெனும் முறையற்ற நிகழ்ச்சிகள் விழாவாகா. நகைப்பிற்குரியவாம் இவை எனும் மெய்க் கருத்து தோன்றக் கூறியதாகும் இப் பாடல்.

இது புறத் திணையும் பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாகும்.