நூறாசிரியம்/பின்னிணைப்புப் பாடல்கள்

பின்னிணைப்பு


1

அளியல் யாமே புளிப்பிரை குற்றி
முளியற் றயிரென முறித்த வாப்பயன்
மாற்றி நெல்பெறு மாய்ச்சியர் மகனே
காற்றிற் கரந்து கவினறக் காயுந்
தகையவ ளவளே நீயே 5
முகைவிரிந் திதழை மோப்பிலா தோயே!

தினை - மருதம்
துறை - வரைவு நீட்டித்தவிடத்துத் தோழி தலைவற்குச் சொல்லியது.

2

ஆலங் கொழுவிலை அடுக்கத்துப் பெய்த
பால்கெழு வடிசில் மாலுற மிசைந்து
கொள்குறி யணங்கின் கூடல் விதும்ப
எள்குவேர்ர்ப் பெருகினர் பெரிதே ஈங்கிருள்
அறற்படு பூங்குழல் வறற்படப் பறல 5
நிரல்வினை மாறிய நீருகு நனைவிழி
பொலங்கிளர் வாழை நுனிமடல் அவிழ்த்து
நலந்தரு ஆநெய்க் கலந்துவை கொழுவும்
படையல் முன்னம் புடையெய ராது
முன்றில் நோக்குநள் தென்றல் கிழித்த 10
விரியிலை துன்ன ஈர்க்கொடு விரையும்
இதுகொல் புலம்பறு நெஞ்சம்
முதிர்தரு பிரிவின் முயங்கிய துயரே!

3

உளப்போங் கல்லை ஊன்றிய விளக்கங்
கொளுப்போ லாயினு மொளிமிகு மெல்லி
உச்சி யூர்ங்கால் வெளிச்சுட ருகல்போல்
மிச்சை நிரப்பின் மிதந்தோ ரன்றி
வைப்புக் கையர் வழங்கல் 5
துய்ப்புந வரலது தூற்றுவர் ஞான்றே!

திணை - பொதுவியல்
துறை - முதுமொழிக்காஞ்சி

4

உள்ளுவன் கொல்லோ உருகுவன் கொல்லோ
கள்ளம் ஊறிய கடுஞ்சொல் வயினெம்
எள்ளறு கேண்மை இகழுங் கொல்லோ!
கோடா நட்பொடு தலைநாட் கொண்டு
வாடா நினைவின் எம்முழை வந்து 5
பூத்த யாப்பின் புதுக்கள் மாந்தி
உயிருவப் புண்ட மயர்வறு காட்சி
மீட்டும் மனங்கொள மகிழுங் கொல்லோ!
எவன்கொல் அறிகுவம்; அவனுளக் கிடக்கை!
தமிழ்க்குடி புகுந்த நெஞ்சென் றேமே! 10
அதுபுரந் தரூஉங் கையென் றேமே!
பொருட்குவை மிகுந்த விறலோன் மருங்கில்
அருட்கொடை எதிர்ந்தி ராண்டையின் றேமே!
தமியே மன்றித் தமிழ்க்குயிர் செகுக்கும்
எமையோர் சிலரும் முகம்புகுந் தனரே! 15
துவ்வாச் செல்வ மீமிசைத் துஞ்சும்
கெளவை கேள்வன்; கடுநெஞ் சினனே!
எளிதவன் வினையே! அளிதவன் நினைவே!
உண்ணும் புற்கையு மீத்த வெண்ணிப்

பொன்றிய சிதடன் போல்கை யானே! 20
யாண்டுகொண் டொளிக்கு மவன்பெறு வைப்பே;
பொல்லாக் கேண்மையின் புல்லுரை மகிழ்ந்து
நல்லார்க் கழன்ற நெஞ்சன்
எல்லார்க்கு முறுகரி இழந்த ஞான்றே!

(தமிழ் நிறீஇச் சான்றோர்ப் புரக்கவென்று அறங்கூறி அமைய, இசைந்து மாறிய புதுவைச் செல்வன் ஒருவனை, அவனுழை யிருந்து தணந்த காலை, முன்னிலைக் கேங்கிப் பின்னிலைக் கிரங்கிப் பாடியது)

5

ஊன்றிய வித்தே உள்ளி டயின்று
தோன்றித் துலங்கிய பயனின் றொழியின்
மீட்டும் அதுபோல் நாட்டுவ திலரே!
தந்திறம் பிறர்க்கு நல்கா தாரை
எந்திரப் பாவையின் இயக்கம் என்னா 5
மயங்குவ ரன்றி மனப்பொறி மாண்டு
வயங்குபுலன் பெற்றார் என்னலும் வழுவே!
வித்தின் விரிந்த தத்துயிர்ப் பொருளே!
தத்துயிர்த் தோன்றிய எத்துவ வெளியே!
அவையிற் றெழுந்தன் றலைவுறு மாவே! 10
ஒவ்வொரு திரிபிற் கொவ்வொரு பொறியே!
செவ்விதின் இயல்நிலை எனவிரு திணையும்
தந்திறம் வழங்கித் தம்பிறப் பறிப்ப!
முந்தை விரிவின் முடிவிற் றோன்றிய
மாந்தர் பலரே மன்றிறம் பேணா 15
துயிர்த்தலு முண்ணலு முடுத்தலு மாகிப்
பயிர்ப்பறப் பிறப்பின் பயன்காட் டாரே!
வித்துக் குறையோ விளைநிலக் குறையோ
எத்திற மருங்குந் தோன்றப்
பத்துத் துலக்கமும் பழுநிய நிலைக்கே! 20

6

ஏவலன் மகனே! ஏவலன் மகனே!
சேவலங் கொண்டை சிலிர்ப்ப வடர்சிறை
எற்றிப் புடைத்தே இருள்கிழித் திசைக்குங்
கூவல் மடுத்துக் குற்ந்துயில் கலைந்து
யாறு நடந்து நறுநீர் கொணர்ந்து 5
கன்று காட்டி ஆமடி கறந்து
நாளங் காடி நண்ணி மீளுற்று
மிச்சில் அயின்றே உச்சி யகன்று
சாய்க்திர் கண்டு மேய்புலம் நிரையொடு
சென்று மீண்டு சிறார்யா மகிழச் 10
சொல்லாடித் துயில்போக்கும் நுந்தை போல
எல்லிருங் கொண்டிரோ ஏவலன் மகனே!

7

ஒருபுடை அவலம் இம்மை உள்ளிப்
பெரும்படை தாக்கிய சிறுவூர் போலச்
சிதைவுறும் உளமும் உயிரொடும் உடலே!
புதைவுறும் உயிரும் உளத்தோ டுடலும்
ஒருபுடை மகிழ்ச்சி பெறுநிலை யுற்றன 5
இதுகாண் தோழி கவடி வாழ்க்கை
எய்யவும் இலாது பொய்யவும் இலாது
கவ்வலும் விடலும் உயிரொடு காலனே!

(இம்மையில் தலைவனின் முந்தியிறப்பதும்,அவனின் பிந்தியிறப்பதும் மாறி மாறி எண்ணி வருந்தித் தலைவி தன் நெஞ்ச அவலத்தைத் தோழிக்குச் சொல்லியது)

8

கேளே வேண்டெம் வரைவே யெந்தையுட்
கோளே தகவோர்க்குக் கொடையே கூர்ங்கண்

வாளே நெஞ்சை நாளும் போழ்வன
தோளே சூம்புவ வரைவெதிர்ந் தவன்வாய்ச்
சூளே பூச்சுழல் மிஞிறா 5
நீள விசைத்துயிர் நிறுத்துமுள வயினே!

9

சேண்கொணர்ந் தன்பின் சிமிழ்த்த செவ்வாய்
ஊண்பெய்து புரந்து பூஞ்சிறை பயிற்றி
வளிவான் போக்கிய கிளிமகட் போலக்
களிமணம் புகுத்திய மனைக்கிழாய் நீகேள்!
ஊசிவாய்ச் சேர்த்த ஊர்ஞ்சிதர்த் தேட்டையின் 5
மாசறு பாட்டின் மணிக்குவை மீதுகாண்!
கொட்புல னொருகாற் குறையிறந்து மாற்றிய
ஒட்புறுஞ் செல்வத் துட்கை யீதுகாண்!
ஆங்கது மாறி யறங்கொள விசையுநிற்
பூங்கை பற்றித் துரங்குகிடை பீதால்! 10
என்றிவை யாங்கன் என்ற குறுநகை
குன்றி வித்தக் குன்று விளைக்கு
முந்தையர் திருத்திய மொய்ம்புல னிதுகாண்!
கழுத்துமணி யசைய விராமுழு தயின்றே
உழத்த துயரறு மெருத்த மிவைகாண்! 15
வாய்த்த முதற்கொடு வித்தி வருபயன்
றோய்த்த லெங்கட னாகுக் தொடர் கொடி
வரல்நனி காத்துக் குரவர்ப் பேணி
இரவோர்க் கருளி எனையுற் காக்கிச்
சான்றோர் துரநெஞ் சுவப்ப 20
ஊன்றுபுகழ் தேக்குதல் உறுங்கட னினக்கே!

10

தீதலர் தெரித்த தெள்ளுரை பல்கால்
ஒதலி னன்றே உயிருவந் தொன்றிப்

போதா யலராய் புடையவிழ்ந்து மலராய
காதலு முண்டு சாதலுங் கண்டது
கூதளங் கண்ணியின் விழிகள் 5
காதள வோடிக் கவ்விய போழ்தே!

11

தேமாங் கொழுந்தைத் துவர்வாய்க் கிளிகள்
ஏமத் தருந்திக் காமுற் றிணையும்
புறவூர்த் தோப்பின் புல்பொதி தொப்பை
மறக்குங் கொல்லோ தோழி
இறந்துநகர் நண்ணிக் கலைபயில் வோற்கே!

12

தொக்கின் தொகாது மிக்கின் மிகாது
நெக்குநெக் குருகு மையன் கேண்மை
எக்கால் தாழ்ப்பினு மிகவாக்
கொக்குப் போல்வது யானவற் குறியே!

13

நெகிழ்ந்த கைதொழச் செருத்தலை தாழக்
கனிந்த கிளவியோ டுள்ளங் கசிய
நினையார்க்கு மருளும் நெஞ்சோன்
எனையார்க்கு மிரங்குக இணைகவன் றாளே!

14

நெஞ்சுநல மழுகிய நஞ்சினார் தோற்றம்
பஞ்சுப் பொதியாப் பருமைத் தாயினும்

மணலுள் ஊன்றிய மரம்போல
கணத்துட் சாவது காவலை வீழ்த்தே!

15

நெடுங்கல் அடுக்கத்துக் கொடுங்கற் பிளவுற
முகம்படர்ந் தெழுந்த சேண்துங்கு பலவின்
பருங்கனி வாங்கிய கருவிரற் கடுவன்
அயலுறை இளமான் அருந்தக் கொடுக்கும்
முதுபுகழ்ப் பறம்பின் நெருக்கத் தீரே! 5
ஒக்கல் நெடும்பசி களைதல் வேண்டித்
தக்கார் குறிப்பின் புக்கார் பலரே!
யானறி கிலனவ் ஆன்வளர் வாழ்வே!
தானுங் கிளையும் ஆர்தல் நினையாது
குடியும் மொழியும் புரத்தல் வேண்டி 10
ஆறுயல், முனைந்தே ஊறுபல உழன்றும்
மாறுகொள மன்னென் மனனே..மயர்வறத்
தேர்வுறு திறனதன் திறனே! ஒள்ளியர்
பழுதறு கொள்கை பற்றெலென் றுணையே!
அறம்பாய் செய்யுள் நெறிபல வித்துந் 15
திறந்தெரிந்து உய்த்தலும் ஆறே!
மறந்திலா நன்றி மதித்தலென் கடனே!

16

பசுந்தழை பொடிந்து விசும்ப ளாவி
நிலவொளி நிழலா விலவி மைர்ந்தே
அக்கூ வென்றிய அழற்கண் ஆந்தை
உட்கோ ளுரைக்குவென் கேண்மோ ஈண்டே
உண்ணுவன் கொல்லோ உறங்குவன் கொல்லோ 5
திண்ணெதிர் நினைவின் எம்மொடு வதியும்
மனையொடு மகிழ்வேன் கொல்லோ தினைத்தனை
வாழ்வென் காலமும் வீழ்ந்துபடா தாழ்ந்து

சுற்றச் சூழ்ந்தெம் மக்கள் துயர்க்கு

முற்றத் தந்து மூச்சுஞ் செயலும் 10 ஒழுக்கத் துணர்த்து மன்னோ அடுக்கத் தலறுநின் அகல்வாய்க் குறிப்பே!

17

பொறிமயங்கி அறிவயர நெறிமறந்து நினைவகல விரிவானில் விழிசெலுத்தி அகல்நிலத்தே அடியூர்ந்து குதிகடலிற் குடைந்தெழுந்தே 5 எப்புடையும் எம்மருங்கும் முப்பொழுதும் நினைத்தேடி அலைந்தலைந்துங் காணாமே நிலைமடிந்து நெஞ்சொடிந்து அருந்துயிலின் அணைப்புண்டு 10 வருந்துகையில் எமைவந்தே பொருந்திப் புணர்ந்தஎம் ஐய மருந்துந் தந்தனை நீபயந்த மயற்கே!

18

மஞ்சள் மசித்துக் குங்கும மளவிச் சந்தனத் தேய்வின் பன்னீர் குழைத்துப் பூவுடல் பூசிப் புதுப்புன லாடிய தேமற் பொலிந்த தெரிவையே எனினும் ஒப்பிலா நெஞ்சின் உடலொடு முயக்கம் 5 உப்பிலா நரந்தம் போல எவ்வதும் புளிக்குமென் இயம்புதி யோயே!

திணை - குறிஞ்சி

துறை - தன்னை மணம் பேச வந்தான் தவிர்க்கத் தன் காதலை உள்ளடக்கித் தோழியிடம் தலைவி குறிப்புணர்த்தியது.
19

மனையறம் புரந்த மாண்தகு புலவோர்
புனையெழிற் பெண்டிர்ப் போற்றா தியல்பின்
சமைவுறு ஏற்றத் தமைந்தன காட்டக்
கயற்கண் பிறைநுதல் கனியிதழ் பல்முகை
அறற்குழல் துடிதுசுப் படிமரை மலரென 5
ஆரா வியற்கையொடு உய்த்தனர் புகன்றே!
யாங்குகொல் நின்னைப் பொய்ப்புகல் வதுவே
நின்னின் உயர்ந்தன்று பொன்னின் பாவை!
கண்ணின் மேய்ந்தன்று கயலே! கழுத்தே
சங்கின் எதிராது பல்நாணு முகைக்கே! 10
எச்சிற் றுவரிதழ் இன்கனிக் கிளைப்ப;
சேவற் குடுமிச் செம்முது கலவன்
மேயுமை யறல்முன் குழலற வுதிரும்!
துடியினது ஒடுக்கின் நின்னிடை யொடுங்கும்!
அரசுப் பூவடி அடையுநின் னடியே! 15
அணுவின் அண்ணிய பேரா விறையால்
மண்ணுள் விளைந்து மன்னிய வெல்லாம்
தாந்தனி யெழிலொடு தாமிலங் குவபோல்
நின்னிடை மாழ்கிய எழில்நின் னஃதே!
என்றிறத் தானும் இலையிவ ணொப்பே’ 20
அவையவை வயினே அவையவை உயர்வே!
நின்னெழில் நின்வயின் உயர்வே! நீயே
என்னொடு பொருந்தி யிணைத்தனை உயிரே!
ஒன்றிய இரண்டுள் உண்டொன்று சிறப்பே?
புதுமுறை மரபின் போற்றுவ தொழிந்த 25
இதுவோ பூண்டநங் காதல்
அதுவே யாகின் அணைகநம் முயிரே!

20

மின்னகம் புலந்தர மேனி மேயுநின்
கண்கய லசைவைக் கண்டுயர் வென்னா

ஒளியுமிழ் பிறைநுதல் ஊர்ந்தெழி லசைக்கு
நெளிகுழ லடர்த்த நிழலினி தென்னா
அகங்களி முகிழ்த்த கவின்குழிக் கன்னம் 5
வகுமாங் கதுப்பெயின் வாய்ந்தென உரையா
மதர்த்துப் பொங்குபு மாமைக் கோட்டகம்
விதிர்ப்புறத் தாங்கிடை வியத்தெனா நின்று
ஊன்கசிந் துயிர்நலம் உறிஞ்சக் குழைதருந்
தேன்கசி ஈரிதழ் தினல்வாழ் வென்று 10
செஞ்சீ ரடிதரச் சிலம்பு முனகலுந்
துஞ்சு வளக்கை துளும்பு கொஞ்சலும்
அழகீ தென்னோன் பழகிய ஞான்றை
எக்குடி மகளிர் என்றறிந் தக்குடி
ஒக்குமோ மேட்டிமை மகனையா னுார்கொள 15
மணந்தில னாயிற் றணந்திழி வாய்ப்பட
ஒவ்விலை நெஞ்ச மென்றோன் உகுவிழி
செவ்விதின் ஆளன் எனயான் றேர்கிலன்
பெட்பெதிர் வந்தெனின் கட்புலன் மீளான்
ஒட்புளங் கேட்டினோ சான்றவ ருரைக்குக் 20
கொள்பொரு ளாகுவை குவையோ டுனைக்கொள
நினைத்தெனின் இழிமடி ஆணெனு நெறியோர்
தாமே மெய்நலிந் தீட்டுதல் தவிர்த்தே
ஏமம் மனைவழி யாம்பெறு மென்னார் .
ஏயிவை மேவா தீண்டிவன் வந்தென் 25
ஆயுநர் இல்லா அறந்தவிர் மாக்கள்
வித்திய வேற்றுமை வீழ்ந்திழிந் திரியுங்
கல்லாப் பெண்ணேய்ங் கண்ணிலாப் பேதையின்
அல்லற் படுத்து மல்லற் கியாமே
பிறந்தே மல்லேம் பீடிலான் றன்னை 30
மறந்தும் நினைகொளா வினியே மாணொடு
காதல் கசியுங் கற்புளத் தடக்கித்
தீதறு நாணத் திரைநனி போர்த்து
வருந்துயர் வாளர்க்கு வாள்விழி காட்டிப்
பொருந்து லாளர் பொன்றுநாட் பொருந்தித் 35

தண்டோட் டழுவ லல்லதைக் கண்டோர் மயங்கல் காட்சியிற் கழன்றே!

திணை - குறிஞ்சி துறை-தலைமகனைத் தோழி ஐயுற்றுத் தலைவியைத் தெருட்டியது

21

முகில்தொடு தெங்கின் மூரலம் பாளை
உகிர்க்குறை யன்ன ஒள்வாட் சீவல்
தண்கட் சிதர்வொடு தளிர்தோள் தடவ
மொய்ம்புடற் சிலிர்க்குந் தொய்குழன் மடவீர்,

நெளிவிர லடுக்கு மிழிபடு கீற்றின்

5


ஒலியிணைந் துயிர்க்குங் களிதுள் மெல்லிசை
வலிவுறு நெஞ்சம் பின்ன நலிவுறு மிவரடி வினைகெடல் நினைமே!

தினை :குறிஞ்சி

22

முப்புடை முந்நீர் முழக்கிடைப் படுத்த
தெப்பத் தன்ன திகழ்ஞா லத்து மாந்தர் மாந்தர் என்மனார் மாந்தர்
முற்றிய உணர்வின் நெடும்பின் னெதிர்வை

ஒற்றி யுணர்வார் உறுவன சிறுகால்

5


முற்படத் தெளிவார், மூளுங் காலை
உட்பட நினைவார், உழன்றறி வமைவார்,
பல்காற் பட்டும் உள்கா ரிவரோ டொன்றும் ஒருமையும் உணராராகி

என்றும் பிறரோ டயங்குறு மாக்க்ளென்

10

டறுவகைத் தோரோ அதர்வகை நான்கே!
ஒன்றே,

இறப்பினும் அறவழி இகவாத் தலையே!
இரண்டே,
பிறர்க்கெனக் கவலாத் தனக்கெனும் பிழைப்பே! 15
மூன்றே,
முயற்சிக் குறைவின் பிறர்தலைச் சூழ்வே!
நான்கே,
முற்றும் முயல்வற முன்னோர் ஈட்டமும்
கற்றப் பாடும் சூழ்ந்துணும் இழிவே! 20
ஈங்கிவை பயின்ற புகழும் ஆறே:
தம்மாற் பிறந்து தம்மொடு மாய்தலும்,
தம்மின் பின்றைத் தம்நாள் எஞ்சலும்,
தங்குடி நாள்வரை தம்பெயர் நிற்றலும்
தங்குலம் வாழ்தலை தஞ்சீர் பிறங்கலும் 25
தம்விளை வுறுந்தலை தம்புகழ் பரத்தலும்
உலகம் உள்ளுழி ஒளிர்தலும் அவையே!
என்றிவை துணுகிய சான்றோர், ஈண்டே
வாழ்நாள் வடுப்படும் வழியே ணலரே!
சூழ்வறிந் துய்யலின் தாழ்வறி கிலரே! 30
வாழ்வெனற் றம்புகழ் வாழ்வும்
வீர்வெணற் பொதியுடல் வீழ்வுமென் பாரே!

23

மெய்யறி நெஞ்சே உய்யுமா றிவணே!
கைபுனைந் தியற்றாக் கரணிய கருமமாய்
ஐயுறை பூதத் தாகலும் பரிதலும்
உய்யுயிர் உணர்தலும் உளம்விரித் தொளிர்தலும்
கற்பான் வந்த கவினுறு வாழ்க்கை 5
உவகையும் அவிகையும் உறழ்தலால் ஒடுங்கிக்
கவிழ்கன் னத்துக் கையிரண் டூன்றிச்
சூழ்பல காட்சிக்கு உள்ளம் சுண்டி
வீழ்நிலை தவிர்த்து விளங்குக இனனே!
காரிரு னின்றிக் கதிரொளி யிலைபோல் 10

ஆரவ லின்றி அயன்மிசை யிலைபோல்
அழுகை யின்றி அருமகிழ் விலைபோல்
விழுகை யின்றி எழுகையும் இலைபோல்
எள்ளும் இழிவும் இகந்த ஒழுக்கமும்

கள்ளுங் களியுங் கயமையு நிறைந்தே

15


அடுவதும் அழிவதும் ஆகிப் புதுவதாய்க்
கெடுவ தின்றே உலகம் கீழ்மையுங்
கொலையுங் களவுங் கூடிய புனைவும்
புலையும் பொய்யும் உலகத் தியல்பே’

24

யாக்கைக் குளிரிகு நாக்கனல் வெக்கை
ஆக்கியோ ரொருவ ராயினுந் தெருமரப்
பெறுவோ ரிளலரின் வெறுவா மாக
உறுவோர்க் கீக வுற்ற ஞான்றே!